ஞாநி தந்த ஞானம்!

ஞாநி என் மதிப்புக்குரிய நண்பர். அவருடைய கட்டுரைகளை நான் விரும்பிப் படிப்பேன். தனது வாதத்தை எதிர்க் கருத்து கொண்டவர்களும் ஏற்கும்படி எடுத்து வைப்பதில் அவர் வல்லவர். அவரது சில கருத்துக்களோடு நான் உடன்படவில்லை என்றாலும், அதை அவர் விவரிக்கிற அழகுக்காகவே படிப்பேன்; ரசிப்பேன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறாமல், தன் மனத்துக்குப் பட்டதைப் பளிச்சென்று சொல்லக்கூடியவர் ஞாநி என்பதில் எனக்குச் சற்றும் மாறுபாடான கருத்து இல்லை.

ஆனால், இந்தக் கட்டுரை அவரைப் பற்றியது அல்ல. இன்றைக்கு அவர் அனுப்பியதாகச் சொல்லி ஒரு நண்பர் என்னைச் சந்திக்க வந்தார். கொஞ்சம் பொறுங்கள்... இது அந்த நண்பரைப் பற்றியதும் அல்ல.

ஞாநியைப் பற்றிய சிந்தனைகள் எழுவதற்கு அந்த நண்பரின் வருகை ஒரு காரணமாக இன்று அமைந்தது. பின்னே, ஞாநியைப் பற்றிய கட்டுரையும் இல்லை என்று சொன்னேனே என்று பார்க்கிறீர்களா? நேரடியாக விஷயத்துக்கே வருகிறேன்.

அலுவலகம் விட்டு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, ஒரு ஆக்சிடென்ட் நிகழ இருந்தது. முன்னே சென்றுகொண்டு இருந்த ஒரு பைக்காரர் ஸ்லிப் ஆகி, சாலையின் மையத்தில் பைக்கோடு விழுந்தார். நான் சென்ற பஸ் டிரைவர் மிக சாமர்த்தியமாக வளைத்து சடன் பிரேக் அடித்தார். உள்ளே நாங்கள் தடுமாறினாலும், அவர் அப்படிச் சுதாரித்துச் செயல்பட்டிருக்கவில்லை என்றால், அந்த பைக்காரர் சட்னி ஆகியிருப்பார்.

அது மட்டுமல்ல, பனகல் பார்க் நெரிசலில் அவர் பஸ்சைச் செலுத்திய விதம், கூட்டத்தின் நடுவிலும் எந்தச் சிரமும் இல்லாமல் பூ மாதிரி நுழைந்து முன்னேறிய விதம், ஸ்டாப்பிங் ஓரமாக பஸ்சை அணைத்து நிறுத்திய பாங்கு, எதிரே கத்துக்குட்டி காரோட்டி அங்கேயும் நகராமல், இங்கேயும் நகராமல் படுத்தியபோதும் சற்றும் கோபம் கொள்ளாமல் இதமாகக் கடந்து சென்ற பாணி, பயணிகளிடம் கடுப்படிக்காமல் கலகலவென்று பேசிய தன்மை இதெல்லாம் எனக்கு அந்த டிரைவர் மீது ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

இங்கேதான் ஞாநி வருகிறார். அவரும் நானும் முன்பு ஒரு திருமணத்தில் கலந்துகொண்டோம். மெல்லிசைக் கச்சேரி நடந்துகொண்டு இருந்தது. ஒரு பாட்டு முடிந்ததும் ஞாநி எழுந்து அவர்களிடம் போனார். தன் விருப்பமாக ஏதாவது ஒரு பாடலைச் சொல்லிப் பாடும்படி கேட்கப் போகிறாரோ என்று நினைத்தேன். இல்லை.

அவர்கள் பாடிய விதமும், அதற்குப் பக்கத் துணையாக இருந்த பக்கவாத்தியக்காரர்களின் ஒத்துழைப்பும் அருமையாக இருந்ததாக மனம் விட்டுப் பாராட்டினார். நாமும் எத்தனையோ கல்யாணத்தில் கலந்துகொண்டு இருக்கிறோம். பந்தி ரெடி என்று தகவல் வந்தவுடன் கச்சேரியாவது கத்திரிக்காயாவது என்று ஓடிப் போய்விடுகிறோம். சிலருக்கு பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமே என்ற பதற்றம். யார் போய் வேலை மெனக்கிட்டுப் பாராட்டுவது!

ஆனால், ஞாநி பாராட்டினார். பஸ்சில் சென்றுகொண்டு இருந்த எனக்கு உடனே ஞாநி ஞாபகம்தான் வந்தது. நான் இறங்குமிடம் வந்ததும், டிரைவரின் அருகில் போய் 'சார், உங்க டிரைவிங் திறமை அபாரம். பார்த்தா சின்னவரா தெரியறீங்க. ஆனா, சீனியர் டிரைவர் கூட இந்த அளவுக்கு பஸ்சை நறுவிசா ஓட்டி நான் இதுவரை பார்த்ததில்லே. பாராட்டுக்கள்!' என்றேன்.

அவர் என்னை நிதானமாகத் திரும்பிப் பார்த்தார். நான் புன்சிரிப்பை முகத்தில் தேக்கிக்கொண்டு, அவரது நன்றி வார்த்தைக்காகக் காத்திருந்தேன்.

அவர் சொன்னார்... 'என்ன, கிண்டலா? அவனவன் ஆயிரம் ...கடிக்கு மத்தியிலே வண்டி ஓட்டிட்டு வரான். டெப்போவிலேயும் பிடுங்கல்; தெருவிலேயும் பிடுங்கல். யாரா வேணாலும் பிறக்கலாம், டிரைவரா மட்டும் பிறந்துடக்கூடாதுன்னு இருக்கு எங்க பொழைப்பு. இதுல நீங்க நக்கல் பண்ண வந்துட்டீங்க. போங்க சார், உங்க பாராட்டை நீங்களே வெச்சுக்குங்க. நான் கொண்டு போயி எந்த பேங்க்ல போட்டுக்கப் போறேன்!'

எனக்கு அந்த டிரைவரின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. வழி நெடுக ஒவ்வொரு விதத்திலும் என்னைக் கவர்ந்தவர் என்னிடம் மட்டும் என் அப்படி நடந்து கொண்டார்? அவருக்கு வேறு ஏதாவது மனக் கஷ்டமோ? அப்படியிருந்தால் பயணிகளிடம் கலகலவென்று பேசினாரே... அதெப்படி? ஒருவேளை, என் மனமார்ந்த பாராட்டில்கூட என்னையுமறியாமல் கேலித் தொனி ஒட்டியிருந்ததோ? அப்படி இருக்கவும் வாய்ப்பில்லையே? அடங்கிய குரலில் மிகவும் தன்மையாகத்தானே பேசினேன்!

மறுமுறை கண்டிப்பாக அவரைச் சந்திப்பேன். அப்போது இது பற்றி நிதானமாக அவரிடம் விசாரிப்பேன்.

அது இருக்கட்டும்... இன்றைக்கு எனக்குத் தூக்கம் வருமா என்று தெரியவில்லையே?

*****
என்ன தெரிந்துகொண்டாய் என்பது முக்கியமல்ல; அதிலிருந்து என்னஅறிந்துகொண்டாய் என்பதே முக்கியம்!

1 comments:

Anonymous said...

அன்புள்ள ரவிபிரகாஷ்,

வாழ்க்கை அனுபவங்கள் செய்தி விமர்சனங்களை விட சுவாரஸ்யமானவை. ஏனோ நம் ஊரில் சிரித்த முகத்துடன் எதிர் கொள்வதற்கும், பாராட்டுவதற்கும், நன்றி சொல்வதற்கும் மக்களை பழக்கப்படுத்துவதில்லை. இங்கே மனதார செய்கிறார்களோ இல்லையோ, யாரை எதிர்கொண்டாலும் இலவசமாய் புன்னகையையும், "நலமா?" என்ற விசாரிப்பையும் அனிச்சையாய் அளிக்கிறார்கள். விமானி அலுங்காமல் குலுங்காமல் தரை இறக்கினால் ஒட்டு மொத்த பயணிகளும் கை தட்டி பாராட்டு தெரிவிக்கிறார்கள். உங்கள் கட்டுரையை படித்ததும் இதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

இது ஓர் புறமிருக்க, ஏன் அந்த ஓட்டுனர் அப்படி பதில் சொன்னார் என்று யோசித்ததில் ஒரு சின்ன ஒரு பக்கக் கதை பிறந்தது. நீங்கள் விவரித்த அதே போல் சம்பவம் நடக்கிறது. ஓட்டுனரிடம் நடத்துனர் திகைப்புடன் கேட்கிறார். "ஏண்ணே அவர் கிட்டே வழக்கத்துக்கு மாறா எரிஞ்சு விழறிங்க?"

"உங்க கடமையை ஒழுங்கா செஞ்சதுக்காக யாராவது பாராட்டினா ஏத்துக்காதிங்க. அப்புறம் அதுவே கர்வமாயிடும். கர்வம் நாளடைவில் கடமையை சறுக்கி விடும். அப்படின்னு நேத்திக்கு ஞானி (யாரோ ஒரு ஞானி!) டிவில சொன்னார்!"

:-)

[sathyarajkumar]