சிவாஜியின் நிழல் மனைவி!

லம், பலவீனம் இரண்டுமே மனிதர்களுக்கு உண்டு. குணம் மட்டுமல்ல, குறைகளும் எல்லோருக்கும் பொதுவானது. அவன் சாதாரணனாக இருந்தாலும் சரி, சாதனையாளனாக இருந்தாலும் சரி! குற்றமே இல்லாத பரிபூரணன் என்று எவரையும் சொல்லிவிட முடியாது. நற்குணங்களில் அப்பழுக்கு சொல்ல முடியாத தூயோனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே, வானர ராஜன் வாலியை மறைந்திருந்து கொன்றதில் குற்றம் சாட்டப்படுகிறார். வாலியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல ராமனுக்கு வாய் எழவில்லை. பதில் சொல்ல வாயற்றுப் போன நிலையில், அவரின் தம்பி லக்ஷ்மணன்தான் அண்ணனின் சார்பாக வாலிக்குப் பதில் சொல்கிறான். அவன் அண்ணனின் செயலை நியாயப்படுத்த ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும், ராமன் செய்தது குற்றம் குற்றம்தான்! அதற்குத் தண்டனையாகத்தான் அடுத்த யுகத்தில் ராமன் கண்ணனாகவும், வாலி ஒரு வேடுவனாகவும் அவதரித்து, கண்ணனை அந்த வேடுவன் மறைந்திருந்து அம்பெய்து கொன்றான்.

ராமர் தனது வாழ்க்கையில் 18 முறை தவறு செய்திருக்கிறார் என்கிறது வால்மீகி ராமாயணம். வால்மீகி ராமாயணத்தைப் பொறுத்தவரை ராமர் கடவுள் அல்ல; மனிதன். தவறு எதுவுமே செய்யாதவனாக ஒருவன் இருப்பானேயானால், அவன் கடவுளாகிறான். எந்தவொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தபட்சம் 18 முறை தவறு இழைப்பான் என்பது புராண ஐதிகம். ஆகவேதான் வால்மீகி தன் கதாநாயகனான ராமனை, கதைப்படி சரியாக 18 முறை தவறு செய்திருப்பவனாகக் காட்டியுள்ளார்.

மனிதர்களிடத்தில் உள்ள குணத்தையும் குறைகளையும் அலசி ஆராய்ந்து, இரண்டில் எது அதிகமோ அதன்படி அவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்று வகைப்படுத்துங்கள் என்கிறார் வள்ளுவர். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் திலகம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். இது அவரின் சாதனைக்கும் பெருமைக்கும் எந்தவிதக் குறைவையும் ஏற்படுத்திவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும், இதுவரை சிவாஜி பற்றி நான் கேள்விப்படாத ஒரு விஷயத்தை முதன்முதலாகக் கேள்விப்பட்டபோது என் மனசு சற்றுத் துணுக்குற்றது என்பது உண்மை!

சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? எனக்கு இத்தனை நாள் தெரியவில்லை.

அந்தப் பெண்மணியின் பெயர் ரத்னமாலா. சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி என்று அறிகிறேன். அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது. அந்த கணேசன் ஜெமினிகணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை; அது சிவாஜிகணேசனைக் குறிப்பதுதான்.

ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ.வி.சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான். “என் தங்கை நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார்” என்று எம்.ஜி.ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப் படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.

‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான். அதே போல ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக, ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ்.வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’. ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.

ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல; நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட, அவரா!’ என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப் பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா. ‘அன்னை’ என்றொரு படம்; பி.பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதே போல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, “வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை” என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா. சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள். சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள்.

சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.

கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா சமீபத்தில்தான், அதாவது 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76. அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதே போல், எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.

(திரையுலகைச் சேர்ந்த, வயதில் மூத்த சில நண்பர்களுடன் பேசியதில் கேள்விப்பட்ட விஷயங்களைத்தான் இங்கே கொடுத்துள்ளேன். இதில் இடம்பெற்றுள்ள தகவல்களில் பிழையான விவரங்கள் இருப்பின், அவற்றைப் பின்னூட்டத்தில் அவசியம் சுட்டிக் காட்டுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)

*****
நாலு பேர் மத்தியில் நீங்கள் முக்கியமானவராக இருப்பது இனிமையானதுதான்; ஆனால், இனிமையானவராக இருப்பது முக்கியமானது!

ஒரு நூறு கொலை!

நேத்து ராத்திரி யம்மா... தூக்கம் போச்சுடி யம்மா..!

ஏதோ ஜாலியாகப் பாடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நிஜமாகவே நேற்று இரவு முழுக்கவே எனக்குத் தூக்கமில்லை. மூட்டைக்கடியில் படுத்திருந்தால் எப்படித் தூக்கம் வரும்?

மூட்டைக்கு அடியில் என்று பிரித்துப் படிக்காதீர்கள். மூட்டைக்கு அடியில் படுத்தால் மூச்சு முட்டியிருக்குமே என்று யோசிக்காதீர்கள். மூட்டைப் பூச்சிக் கடியில் படுத்திருந்தேன் என்று சொல்கிறேன். இங்கே கடி, அங்கே கடி என்று கை, கால், தோள்பட்டை என சகல பாகங்களிலும் மூட்டையார் கடித்துக் குதறினார். சொறிந்து சொறிந்து கால்களிலும் தோள்களிலும் சிராய்ப்பு விழுந்து ரணமானதுதான் மிச்சம். காலை 5 மணிக்கு மேல்தான் தூங்கவே செய்தேன்.

சில வாரங்களுக்கு முன்னால், பள்ளியிலிருந்து வந்த என் மகன், ஹாலில் புத்தக மூட்டையை இறக்கி வைத்தான். அதிலிருந்து ஒரு பூச்சி இறங்கி சுறுசுறுப்பாக ஓடியதை ஆச்சரியத்துடன் பார்த்து, ‘என்னப்பா பூச்சி இது, புதுசா இருக்கே?’ என்றான். பார்த்தேன். ‘அடப்பாவி! மூட்டைப் பூச்சிடா!’ என்று அலறினேன்.

கடந்த பத்தாண்டுகளாக இந்த வீட்டில் குடியிருக்கிறோம். கரப்பு இருக்கிறது; பல்லி இருக்கிறது; எலிகள் துள்ளி விளையாடுகின்றன. ஆனால், மூட்டை என்பது இல்லை. அரிசியைக் கூட மூட்டையாக வாங்குவதில்லை நாங்கள். அப்படியிருக்க மூட்டையைத் தன் பள்ளியிலிருந்து இறக்குமதி செய்துவிட்டான் என் மகன்.

ஒரு மூட்டையைக் கொன்றால் அதன் ரத்தத்திலிருந்து ஆயிரம் மூட்டைப் பூச்சிகள் உருவாகும் என்று சொல்வார்கள். தெரிந்தே, ஓடிய மூட்டைப் பூச்சியைக் கால் கட்டை விரலால் அழுத்திக் கொன்றேன். பீட்ரூட் சாறு நிறத்தில் ரத்தம் தரையில் தீற்றியது. அப்புறம் மறந்து போனேன்.

நடுநடுவே ராத்திரிகளில் ஏதோ கடிக்கத்தான் செய்யும். மூட்டைப்பூச்சி ஞாபகத்துக்கு வரவில்லை. பழியைக் கொசு மீது போட்டு, குட்நைட் மேட் வாங்கி வைத்தேன்; ரெப்பெல்லர் வாங்கி வைத்தேன். நாளுக்கு நாள் கடி அதிகமாகி, நேற்றைக்கு உச்சகட்டம்.

காலையில் எழுந்து நடுநிலைமையோடு ஆராய்ந்து பார்த்தபோதுதான், கொசு அப்பிராணி என்பதும், குற்றவாளி மூட்டையார் என்பதும் தெரிய வந்தது. உடனடியாகக் கடைக்குப் போய் மூட்டைப்பூச்சிக்கு ஹிட் உண்டா என்று கேட்டேன். மூட்டைப் பூச்சிக்கென பிரத்யேகமாக எதுவும் வருவதில்லை என எல்லாக் கடைக்காரர்களும் ஒன்றுபோல் கையை விரித்தார்கள். ஒரு கடைக்காரர், ‘என்ன, மூட்டைப் பூச்சியா?’ என்றார் ஆச்சரியத்தோடு. அவர் ஆச்சரியம்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்றொரு கடைக்காரர், ‘இப்பல்லாம் ஏதுங்க மூட்டைப் பூச்சி. முந்தியெல்லாம் அதுக்குன்னு ஸ்பெஷலா ஹிட் போட்டுக்கிட்டிருந்தாங்க. இப்ப வர்றதில்லை. பேகான் ஸ்ப்ரே வாங்கிட்டுப் போய் அடிங்க. இது கொசு, கரப்பான் உள்பட எல்லாத்துக்கும் பொதுவானது’ என்று பரிந்துரைத்தார். வாங்கி வந்து வீடு முழுக்க இண்டு, இடுக்கு எல்லாவற்றிலும் அடித்தேன். தலையணைகளையும் பாய்களையும் கொண்டு போய் மொட்டை மாடியில் வெயிலில் காய வைத்தேன்.

என் சின்ன வயதில், கிராமத்தில் வசிக்கும்போது வீடு முழுக்க சுவர் இடுக்குகளில் மூட்டைப் பூச்சிகள் இருக்கும். சுவர்கள் எல்லாம் மண் சுவர். நாங்கள் எல்லாம் ஆளுக்கொரு கிண்ணத்தில் மண்ணெண்ணெய் சிறிது ஊற்றிக்கொண்டு, சுவர் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மூட்டைப் பூச்சிகளை ஒரு துடைப்பக் குச்சியால் கெரஸின் கிண்ணத்தில் தள்ளுவோம். யார் நிறைய மூட்டைப் பூச்சி சேகரிக்கிறார்கள் என்று ஒரு போட்டியே நடக்கும்.

அப்போதெல்லாம் டிக்-20 என்று மூட்டைப்பூச்சிக்கென பிரத்யேகமாக ஒரு மருந்து வந்ததாக ஞாபகம். அந்த ஆங்கில ‘டிக்’ வார்த்தையின் ‘கே’ எழுத்தின் கீழ் முனை நீண்டு வந்து ஒரு மூட்டைப் பூச்சியைக் குத்திச் சாகடித்திருப்பதாக அந்த மருந்தின் மீது படம் வரையப்பட்டிருக்கும். இந்த மருந்து நிச்சயம் மூட்டையைச் சாக அடித்துவிடும் என்று ஒரு நம்பிக்கையை அந்தப் படம் எனக்கு அப்போது தந்தது. அது ரொம்ப வீர்யமுள்ள மருந்து. அதை ஸ்ப்ரே செய்வதற்கென எங்கள் வீட்டில் ஒரு பிரத்யேக பம்ப் உண்டு. டார்ச் லைட் மாதிரியான ஒரு சிலிண்டரோடு இணைந்த ஒரு சின்ன கேனில் அந்த மருந்தைக் கொஞ்சம் ஊற்றிக்கொண்டு, வீடு முழுக்க ஸ்ப்ரே செய்துவிட்டு, கதவை மூடிக் கொண்டு எல்லோரும் வெளியே போய்விடுவோம். ஒரு மணி நேரம் கழித்துக் கதவைத் திறந்து பார்த்தால் பல்லி, கரப்பு, சிலந்தி, மூட்டைப் பூச்சிகள், வண்டுகள் எனச் சகலமானதும் செத்துக் கிடக்கும். அம்மா பெருக்கித் தள்ளி, முறத்தில் கொண்டு போய்க் கொட்டுவார். அதிக வீர்யமுள்ள மருந்தாக இருந்ததால் பின்னர் அது தடை செய்யப்பட்டுவிட்டதாக ஞாபகம்.

பின்னர் விழுப்புரத்தில் இருந்தபோது, அங்கே அதிகம் மூட்டை இல்லை. ஆனால், ஆண்டுக்கொரு முறை பம்பாயிலிருந்து என் தாய் வழித் தாத்தா வருவார். வந்ததும் முதல் காரியமாக அவர் ஹோல்டாலைப் பிரித்துப் போர்வை, தலையணைகளைக் கொண்டு போய் மொட்டை மாடியில் போடுவோம். நூற்றுக்கணக்கில் மூட்டைப் பூச்சிகள் இறங்கி மொட்டை மாடி பூராவும் ஓடும்.

அந்நாளில் ரயில் பிரயாணிகள் மூலமாகத்தான் மூட்டைப் பூச்சிகள் பரவும் என்று சொல்வார்கள். ‘ஜெயில்களில் மூட்டைக்கடியில் படுத்து உறங்கியவன் நான்’ என்று அந்நாளைய அரசியல்வாதிகள் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். ராஜாஜி திருச்சி ஜெயிலில் இருந்தபோது, மூதறிஞராச்சே என்று பாரபட்சம் பார்க்காமல் அவரையும் மூட்டைப்பூச்சிகள் பிடுங்கித் தள்ளியிருக்கின்றன. அதற்கு மருந்து கேட்டு ராஜாஜி மனு கொடுத்தும், அன்றைய பிரிட்டிஷ் சர்க்கார் அதற்கு செவி சாய்க்கவில்லை.

சென்னைக்கு வந்து செட்டிலான புதிதில், சினிமா தியேட்டர்களில் மட்டும் மூட்டைக் கடி வாங்கியிருக்கிறேன் நான். படம் பார்க்கிற ஜோரில் அவை கடிப்பது தெரியாது. அநிச்சையாக நம் கைகள், கடிக்கும் மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக் கொண்டு இருக்கும். படம் முடிந்து வெளியே வந்து பார்த்தால்தான் உடையிலும் தொடையிலும் ரத்தக்கறைகள் இருப்பது தெரியும்.

‘மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தின மாதிரி’ என்று பழமொழி இருக்கிறது. சமீபத்தில் நிஜமாகவே அப்படி யாரோ மூட்டைப்பூச்சிக்கு பயந்து எதையோ கொளுத்திப் போடப்போக, வீடு பற்றி எரிந்து போனதாக ஒரு செய்தி படித்தேன். இந்தப் பழமொழியை ஆரம்ப வரியாகக் கொண்டுதான் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இப்படி மூட்டைப்பூச்சிக்கு ஒரு பிளாக் எழுதப் போகிறேன் என்று முன்பே தெரிந்திருந்தால், அந்தச் செய்தியை உன்னிப்பாகப் படித்திருப்பேன்.

விக்கிரமாதித்தன் கதை ஒன்றில் மூட்டைப்பூச்சி வருகிறது. தாத்தா சொல்லியிருக்கிறார். கதை ஞாபகம் இல்லை. பழைய இலக்கியங்களிலும் மூட்டைப் பூச்சி இடம்பிடித்திருக்கிறது. கோபாலகிருஷ்ணன் என்ற புலவரை மூட்டைப்பூச்சிகள் நேற்று என்னை இம்சித்ததைப் போலக் கடித்து இம்சித்திருக்கின்றன. நான் பிளாக் எழுதுகிறேன். அந்தக் காலத்தில் இதெல்லாம் இல்லையல்லவா... அதனால், அவர் மூட்டைப் பூச்சி கடி பற்றி ஒரு பாட்டு எழுதிவிட்டார்.

கண்ணுதலான் கயிலையையும் கார்வண்ணன் பாற்கடலையும்
எண்ணும் பிரமன் எழில் மலரையும் நண்ணியதேன்
வஞ்சகமூட் டுப்பூச்சி வன்கொடுமைக் காற்றாதே
அஞ்சியவர் சென்றார் அறி!

என்ன ஒரு கற்பனை பாருங்கள்! சிவனும் விஷ்ணுவும் பிரமனும் மலையிலும் பாற்கடலிலும், மலரிலும் ஏறிக்கொண்டது மூட்டைப்பூச்சிக் கடி தாங்காமல்தானோ என்கிறார் இந்தக் குறும்புக்காரப் புலவர்.

பார்க்கலாம், பரிதாபமாகச் செத்துப்போன நூற்றுக்கணக்கான மூட்டைப்பூச்சிகளின் நினைவையும் மீறி, இன்றைக்கு ராத்திரி எனக்கு உறக்கம் வருகிறதா என்று?

*****
ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும். முட்டையை உடைத்தால்தான் ஆம்லெட்!

நோபல் வெங்கியும் நோணாவட்டம் துக்ளக்கும்!

http://beta.thehindu.com/multimedia/dynamic/00007/AP_Venki2_7167f.jpg
மீபத்தில் நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ண வெங்கட்ராமனைப் பற்றி துக்ளக் 28-10-2009 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் எஸ்.குருமூர்த்தி. வெங்கட்ராமனின் அருமை பெருமைகளை விளக்கி, பரிசு குறித்த அவரின் கருத்துக்கள் எப்படி பகவத் கீதை வரிகளோடு ஒத்துப் போகின்றன என்பதை விவரித்து, ‘நோபல் பரிசைவிட உயர்ந்தவர் அவர்’ என்று முடித்திருக்கிறார். எல்லாம் சரி!

ஆனால், அதில் வெங்கி (எஸ்.குருசாமி போலவே நானும் செல்லமாகக் குறிப்பிட்டுள்ளேன்.) சொன்னதாகக் குருசாமி சொல்லியிருக்கும் ஒரு கருத்திலும், கட்டம் கட்டி வெளியிட்டுள்ள ஒரு பெட்டிச் செய்தியிலும்தான் எனக்கு உடன்பாடு இல்லை.

பி.பி.சி நிறுவனம் வெங்கியைப் பேட்டி கண்டபோது, அவர் ‘நோபல் பரிசு தனக்குக் கிடைத்தது பெரிய கௌரவம்’ என்று பணிவாகக் கூறிவிட்டு, ‘ஆனால், பரிசுகளால் மட்டும் ஒரு படைப்பைக் காணக் கூடாது. அதாவது, பரிசு பெற்றுவிட்டால் மட்டுமே அது பெரியதாகி விடாது. பரிசு பெறாததால் அதன் மகிமை குறைந்து விடாது. பரிசுகளால் ஒரு படைப்பின் மதிப்பைக் காண்பது தவறு’ என்று சொன்னாராம். இதுவரைக்கும் சரி. அடுத்த வரிகளைப் பார்ப்போம்.

‘பத்திரிகைகளும் சரி, பொதுமக்களும் சரி, இந்தத் தவற்றையே செய்கிறார்கள். ஏன்... இரண்டு நாட்களுக்கு முன் கூட எந்தப் பத்திரிகையும் என்னுடைய ஆய்வைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையே?’ என்று நிருபரையே கேட்டாராம் வெங்கி.

அப்படி அவர் கேட்டிருந்தால், அது ரொம்ப அசட்டுத்தனமான கேள்வியாகவே எனக்குப் படுகிறது. பலப்பல விஞ்ஞானிகள் ஏதேதோ ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பார்கள். அது என்றைக்குப் பூர்த்தியாகும் என்று அவர்களுக்கே தெரியாது. அப்போது பேட்டி கண்டால், அவர்களுக்கும் தெளிவாகச் சொல்லத் தெரியாது; நேரமும் இருக்காது. இந்நிலையில் இப்படி ஓர் ஆராய்ச்சி நடக்கிறது என்று பொதுவாகத்தான் பத்திரிகைகளில் எழுத முடியும். அப்படிப் பத்திரிகைகள், ஆராய்ச்சியில் இருக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பலமுறை எழுதியுள்ளன. டி.என்.ஏ. ஏணி, குளோபல் வார்மிங், ஓஸோன் படலம், க்ளோனிங் என எதுவும் தெளிவில்லாத காலத்திலேயே பத்திரிகைகள் வெளியிட்ட விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எத்தனை எத்தனை?

திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது அது பற்றிய ஒரு சின்ன அவுட்லைன்தான் தரமுடியும். கதையையும் விமர்சனங்களையும் படம் ரிலீசான பிறகுதான் கொடுக்க முடியும். நோபல் பரிசு பெறாத எத்தனையோ விஞ்ஞான ஆராய்ச்சிகள் பற்றியெல்லாம் பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. நோபல் பரிசு கிடைத்ததும், பரவலான அளவில் மக்களின் பார்வை அங்கே விழுகிறது. அதைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப் பத்திரிகைகள் முனைகின்றன. இதை ஏன் இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே கேட்கவில்லை என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது?

அதே கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் பெட்டிச் செய்தி, ‘பிரிட்டனில் வாழும் தமிழரான வெங்கட்ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைத்தது; எல்லோரும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தியருக்குக் கிடைத்த பரிசு, தமிழருக்குக் கிடைத்த பரிசு என்று ஆள் ஆளுக்குத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள்’ என்று தொடங்குகிறது. பின்னே என்னதான் செய்ய வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் என்று புரியவில்லை. கண்டுகொள்ளாமல் விடவேண்டும் என்கிறாரா? அப்படி விட்டிருந்தால், அதே கட்டுரையை ‘பிரிட்டனில் வாழும் தமிழரான வெங்கட்ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஆனால், அந்தச் செய்தி இங்கேயுள்ள ஊடகங்களுக்குப் பெருமையாக இல்லை போலிருக்கிறது. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் கவர்ச்சியான பின்-அப் படங்களும், எந்த நடிகை எந்த நடிகரின் வாழ்வில் குறுக்கிடுகிறார் போன்ற செய்திகளும்தான்’
என்று தொடங்கியிருப்பார்.

‘தினசரி வந்து குவிகிற இ-மெயில்களைச் சுத்தம் செய்வதற்கே ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் ஆகிறது. என் மீது இரக்கம் இல்லையா? நேற்று வரை இவர்களை யாரென்றே தெரியாதே’ என்று எரிச்சல்பட்டிருக்கிறார் வெங்கட்ராமன் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்டுரையின் இறுதியில் வெங்கிக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கிறார் கட்டுரையாளர். அவர் தமிழகம் பக்கமே தலை வைத்துப் படுத்துவிடக் கூடாதாம். இங்கே அவர் வருகிறார் என்கிற விஷயம் வெளியே தெரிந்தால், விருதுகள் வழங்கவும், பொன்னாடைகள் போர்த்தவும் ஒரு பெரும் கும்பல் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்துக் கிடக்கிறதாம். ‘ஜாக்கிரதை வெங்கட்ராமன்’ என்று எச்சரிக்கை வேறு விடுக்கிறார்.

அரசியல்வாதிகள் தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா எடுத்துக் கொள்வதைப் பார்த்துப் பார்த்துச் சலித்து வெறுத்து, மனம் மயங்கி, குழம்பிப் போய், எல்லாப் பாராட்டு விழாக்களையுமே அந்த லிஸ்ட்டில் சேர்த்து, பாவம், வெங்கட்ராமனுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பாராட்டுக்களையும் தடுக்க நினைக்கிறாரே என்றுதான் தோன்றுகிறது எனக்கு. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கினபோது நாம் கொண்டாடாத கொண்டாட்டமா? நடத்தாத பாராட்டு விழாக்களா? அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார் இவர் என்று தெரியவில்லை.

ஒருவரின் சாதனையைப் பாராட்டுவதற்கு அவரை முன்னே பின்னே தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அவருக்குக் கிடைத்த புகழைத் தனக்குக் கிடைத்ததாய் எண்ணி மகிழ்கிற, பெருமிதம் கொள்கிற மனசு இருந்தால் போதும். ‘தினசரி வந்து குவிகிற பாராட்டு இ-மெயில்களைச் சுத்தம் செய்வதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது. என் மேல் இரக்கமே இல்லையா?’ என்று உண்மையில் வெங்கி வருத்தப்பட்டிருப்பாரேயானால், அதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஒரு விஞ்ஞானிக்குப் பொறுமை வேண்டும்; அலசி ஆராயும் திறன் வேண்டும்; எந்த விளைவையும் சகித்துக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். இ-மெயில்களைச் சுத்தம் செய்வதைக்கூடச் சலித்துக்கொள்கிற பேர்வழியால் எப்படி உண்மையான விஞ்ஞானியாகத் திகழ முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே, வெங்கி கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல் அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

இது இருக்கட்டும்... ‘சில நாட்களுக்கு முன்னால் வெங்கட்ராமன் என்று சொன்னால், அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போயிருப்பார்கள். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுமே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒரே க்ஷணத்தில் புகழின் உச்சாணிக் கொம்புக்குப் போய்விட்டார்’ என்று கேலியாக எழுதுகிற துக்ளக் பத்திரிகையும் இப்போதுதானே குருசாமியை விட்டு வெங்கட்ராமனின் அருமை பெருமைகளைக் கட்டுரையாக எழுதச் சொல்லி வெளியிட்டிருக்கிறது.

ஊருக்குத்தான் உபதேசம்!

*****
நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று யாரும் கவனிக்கப் போவது இல்லை - எதையாவது நீங்கள் செய்து முடிக்காதவரை!

வாழ்க வள்ளல் சிவாஜி!

ருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார்.

“சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால், நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார்.

“அதென்ன செய்திங்க?” என்றேன்.

“சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார்.

தொடர்ந்து, “விகடன் பொக்கிஷம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும், அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பே, அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம்.

உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.

சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜி, நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார்.

சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போது, “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால், அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை.

“இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது.

(மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடு, மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.)

நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

வாழ்க வள்ளல் சிவாஜி!

*****
திறமை உங்களை உயரே கொண்டு செல்லும்; ஆனால், நற்குணம்தான் உங்களை அங்கே உட்கார்த்தி வைக்கும்!

எங்கே போகிறது இளைய தலைமுறை?

ன்றைய இளைய தலைமுறையை நினைத்தால் எனக்குச் சமயங்களில் கவலையாக இருக்கிறது.

ஒவ்வொரு தலைமுறையுமே கல்வி அறிவிலும் இதர திறமைகளிலும் முந்தின தலைமுறையைவிட மேம்பட்டுத்தான் வந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதுவரை முந்தின தலைமுறைகளைவிட கடந்த தலைமுறைகள் மேம்பட்டு வந்திருப்பதற்கும், சென்ற தலைமுறையைவிட இன்றைய தலைமுறை மேம்பட்டிருப்பதற்கும் உள்ள விகிதாசாரம் மிக அதிகமாகத் தோன்றுகிறது. தகவல் தொழில்நுட்பம் மிக அதிக அளவில் வளர்ந்திருப்பதும், அறிவியல் வளர்ச்சிகள் உடனுக்குடன் நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துவிடுவதும்தான் இதற்குக் காரணம்.

இன்றைய குழந்தைகளின் புத்திசாலித்தனத்தைக் கண்டு எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; மிரட்சியாகவும் இருக்கிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும் இன்றைய குழந்தையோடு என் மூன்றாம் வகுப்புப் பருவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நான் எங்கோ படு பாதாளத்தில் இருந்திருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது.

டார்ச் லைட்டில் ஒரு பொத்தானை அழுத்தினால், பல்ப் எரியும்; விட்டால் அணையும். அந்த பொத்தானை அழுத்தியபடியே சற்று முன்னே தள்ளினால், லாக் ஆகி, கையை பொத்தானிலிருந்து எடுத்தாலும் விளக்கு அணையாமல் தொடர்ந்து எரியும். எனக்கு எட்டு வயதாக இருக்கும்போது இரவில் எடுத்துப்போன டார்ச் லைட்டில் என் விரல் யதேச்சையாக அழுத்தி ஸ்விட்சை லாக் செய்துவிட, டார்ச் லைட் தொடர்ந்து எரிந்தது. அந்த சூட்சுமம் தெரியாமல், நான்தான் டார்ச் லைட்டை ரிப்பேராக்கிவிட்டேன் என்று எண்ணி, அப்பாவுக்குத் தெரிந்தால் அடிப்பாரே என்று பயந்துகொண்டு, வெளிச்சம் வெளியே கசியாமல் அதன் மீது ஒரு துணியைச் சுற்றிக் கொண்டு போய் வீட்டின் ஒரு மூலையில் வைத்துவிட்டு நைஸாகக் கம்பி நீட்டியதை இப்போது நினைத்தால் சிரிப்பாகவும் இருக்கிறது; வெட்கமாகவும் இருக்கிறது.

இன்றைய குழந்தைகள் நம் காலத்தைவிடப் பல மடங்கு திறமைசாலிகள்; பல மடங்கு புத்திசாலிகள்; பல மடங்கு சிந்தனைத் திறன் உள்ளவர்கள். ஆனால் பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், பெரியவர்களை மதித்தல் போன்றவற்றில் நம் தலைமுறையைவிட ரொம்பவே மோசமாகிவிட்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

என் அப்பா, தன் அப்பா (என் தாத்தா) முன் நாற்காலியிலோ, கட்டிலிலோ உட்காரக்கூட மாட்டார். உட்கார்ந்திருந்தாலும், தாத்தா வந்தால் எழுந்து நின்றுவிடுவார். என் பாட்டியும் அப்படித்தான். ஆனால் நான் அப்படியில்லை; என் அப்பா தரையில் உட்கார்ந்திருக்கும்போது நான் நாற்காலியில் உட்காருகிறேன். என் மனைவியும் அப்படித்தான்; நான் அருகில் நின்றிருக்கும்போது, நாற்காலியில் அமர்ந்திருப்பாள். இதை ஒரு பெரிய தவறாக என்னால் சொல்ல முடியவில்லை. என்றாலும், சென்ற தலைமுறையின் பணிவோடு ஒப்பிடும்போது இந்தச் செயல்கள் சற்று மரியாதைக் குறைவைத்தானே காட்டுகின்றன! கல்வியிலும் இதர திறமைகளிலும் பன்மடங்கு மேம்பட்ட இன்றைய தலைமுறை, ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விஷயத்திலும் நம் தலைமுறையைவிடப் பன்மடங்கு மோசமடைவது இயல்புதானே?

அப்பாவுக்கு வயது 80. அம்மாவுக்கு 72. இருவரும் தினமும் மாலையில் பக்கத்துத் தெருக்களில் வாக் போய் வருவார்கள். அங்கே ஒரு தெருவில், அமைதியான ஓரிடத்தில் ஓரமாக உள்ள சிமெண்ட் திண்ணையில் சற்று நேரம் அமர்ந்துவிட்டு வருவார்கள். அப்படி அமர்ந்திருக்கும்போது, அநேகமாக அது பள்ளிகள் விடும் நேரமாக இருக்கும். யூனிஃபார்ம் அணிந்த ஏராளமான மாணவிகளும் மாணவர்களும் அந்த வழியாகக் கடந்து போவார்கள். அவர்கள் பேசுகிற பேச்சும், மாணவிகளும் மாணவர்களும் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்கிற விதமும் மிக ஆபாசமாக இருப்பதாகச் சொல்லி வருத்தப்படுவார் அப்பா. அப்படி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை இங்கே எழுத முடியாது. அத்தனை ஆபாசம்!

இந்தப் பேச்சுக்கள் எதுவும் ஒளிவு மறைவாக இருக்காது; தெருவில் போகிற, வருகிற அத்தனை பேருக்கும் கேட்கிற மாதிரி சத்தமாகவேதான் இருக்கும் - யார் எங்களைக் கேட்பது என்கிற திமிரோடு!

அந்தக் காலத்தில், தெருவில் ஒரு பையன் ஏதாவது தவறு செய்தால், அதைத் தெருவோடு போகிற எந்தப் பெரியவரும் கூப்பிட்டு உரிமையோடு கண்டிப்பார்கள். அதை அந்தப் பையனின் பெற்றோரும் வரவேற்பார்கள். சண்டைக்குப் போக மாட்டார்கள். இன்றைக்கு அப்படியா! மாணவனை ஆசிரியரே அடிக்கக் கூடாது என்று சட்டமே வந்துவிட்டது. சரி, இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோர் சென்ற தலைமுறை ஆசிரியர்களிடம் இருந்த ஒழுக்கம், தகுதியோடு இல்லை என்பதும் உண்மைதான்.

நேற்று என் அப்பாவும் அம்மாவும் வழக்கமான அந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்திருக்கும்போது ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் இரண்டு மூன்று பேர் அருகில் வந்து ஏதோ பழிப்புப் காட்டிக் கேலி செய்தார்களாம். விரட்டியும் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப வந்து எரிச்சல் மூட்டுவது போல கேலி செய்தார்களாம். அப்பா கோபமுற்று அவர்களை ஏதோ திட்டிவிட, அவர்கள் சற்றுத் தொலைவுக்குப் போய் கீழே கிடந்த கற்களைப் பொறுக்கி இவர்கள் மீது எறிந்துவிட்டு, “யோவ் பெரிசு! மண்டை உடைஞ்சு போவும், ஜாக்கிரதை!” என்று கத்திவிட்டு ஓடிவிட்டார்களாம். இதைக் கவனித்தபடியே போன ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்தப் பிள்ளைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, “சின்னப் பசங்க கிட்ட ஏன்யா வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக்கிறீங்க?” என்று கேட்டுவிட்டுப் போனாராம். வருத்தப்பட்டுச் சொன்ன அப்பாவும் அம்மாவும் இன்றைக்கு வாக் போகவே விரும்பாமல் வீட்டிலேயே இருந்துவிட்டார்கள்.

ஒழுக்கம், பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை இவற்றை எனக்கு என் அப்பா போதித்த விதம் குறித்து இரண்டு நிகழ்வுகள் உடனடியாக என் ஞாபகத்துக்கு வருகின்றன. நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட புதுசு. அதுவும் குரங்குப் பெடல் செய்வதிலிருந்து பாருக்கு மேல் காலைத் தூக்கிப் போட்டு சைக்கிள் ஓட்டத் தொடங்கிய புதிது. சட்டென்று பிரேக் பிடித்து இறங்கத் தெரியாது. கால் தரையில் எட்டாது. அப்படி ஒருமுறை சைக்கிள் பழகிக்கொண்டு இருந்த சமயம், குறுக்கே ஆசிரியர் ஒருவர் வந்துவிட்டார். ஆசிரியர் என்றால் எனக்கு ஆசிரியர் அல்ல; அப்பாவுடன் எலிமென்ட்டரி ஸ்கூலில் ஒன்றாகப் பணியாற்றும் ஆசிரியர். அவர் மீது மோதிவிடப் போகிறேனே என்கிற பதற்றத்தில், சைக்கிள் மணியை அடித்தேன் - நகரட்டுமே என்று. அவர் நகர்ந்ததும் கொஞ்சம் சுதாரித்து, சைக்கிளை மெதுவாகச் செலுத்தி, பிரேக் பிடித்து இறங்கிவிட்டேன். இது நடந்தது எங்கள் வீட்டு வாசலில்.

பார்த்துக்கொண்டே இருந்த அப்பா, விறுவிறுவென்று அருகில் வந்து என் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். “ராஸ்கல்! வாத்தியாருக்கே மணி அடிச்சு நகரச் சொல்றியா நீ? அவ்வளவு திமிர் ஏறிப்போச்சா உன் உடம்புல?” என்றார். “அப்... அப்பா... பிரேக் பிடிக்கத் தெரியலே! அதான்...” என்றேன் பொங்கி வரும் அழுகையோடு. “விழு! பிரேக் பிடிச்சு இறங்கத் தெரியலேன்னா கீழே விழு! பரவாயில்லே. அதுக்காக, பெல் அடிச்சு வாத்தியாரை நகரச் சொல்றதுதான் மரியாதையா?” என்றார்.

இன்னொரு முறை, எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் எதற்கோ என்னை அழைத்தார். ஏதோ கேட்டார். நான் அதற்கு ஏதோ பதில் சொன்னேன். அவர் உடனே, “அறிவிருக்காடா உனக்கு! முட்டாள், முட்டாள்!” என்று திட்டினார். அவர் ஏன் திட்டினார் என்று புரியாமல், நான் என் வீட்டுக்குப் போனபோது, வாசலில் அப்பா நின்றிருந்தார். முன்பு போலவே பளாரென்று என் கன்னத்தில் அறைந்தார். பிறகு, “அவர் எதுக்குடா உன்னைத் திட்டினாரு?” என்று கேட்டார். “தெரியலை” என்றேன். மீண்டும் ஓர் அறை! “ராஸ்கல்! ஒரு பெரியவர் உன்னைத் திட்டறாருன்னா, நீ ஏதாவது தப்பு பண்ணியிருக்கணும். என்ன பண்ணே சொல்லு?” என்றார். “நான் ஒண்ணுமே பண்ணலையே!” என்றேன். “வா!” என்று என்னை இழுத்துக் கொண்டு எதிர் வீட்டுக்குப் போனார். அந்தப் பெரியவரிடம் ஏதோ விசாரிக்கத் தொடங்கினார்.

அதற்குள் அந்த வீட்டுக்குள்ளிருந்து வந்த ஒரு அம்மாள், அந்தப் பெரியவருக்குத் தெரியாத விதத்தில் மெதுவாக, “ஐயோ! அவர் கிட்டே எதுவும் கேட்காதீங்க. அவருக்குக் கொஞ்சம் மூளை சரியில்லை. ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசுவாரு. யாரு என்னன்னு பார்க்காம ஏதாச்சும் கன்னா பின்னானு திட்டிடுவாரு!” என்று சொன்னார்.

அவருக்காக என்னை அறைந்தது பற்றி அப்பா பின்னர் வருத்தப்பட்டாலும், அதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்: பெரியவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையில் எந்த விதத்திலும் அணுவளவுகூடக் குறையக்கூடாது!

இன்றைய இளைய தலைமுறை இந்த அளவுக்குப் பணிவு காட்ட வேண்டாம்; இதில் பத்தில் ஒரு பங்காவது மரியாதையோடு நடந்துகொள்கிறதா என்பதே என் கேள்வி; கவலை!

சில நாட்களுக்கு முன்னால், ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு போன கல்லூரிப் பெண் ஒருத்தி தேவையே இல்லாமல் தன்னைப் பார்த்து, “ஏய் கிழவா!’ என்று கத்திச் சிரித்துக்கொண்டே போனதாகச் சொன்னார் அப்பா. நானும் ஒரு முறை பஸ்ஸில் வந்துகொண்டு இருந்தபோது, ஸ்கூல் யூனிஃபார்ம் அணிந்த, ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும் சிறுவன் ஒருவன் தன் சக நண்பர்களிடம், “எங்கப்பனுக்குச் சுத்தமா அறிவே இல்லடா! ‘நோட்டு வாங்கணும், பத்து ரூபா கொடுப்பா’ன்னா, ‘எதுக்கு, ஸ்கூல்லயே தரமாட்டாங்களா? அதான் ஃபீஸ்லயே சேர்த்துக் கட்டியாச்சே’ங்கிறான். சே... ஆஃப்ட்ரால் ஒரு பத்து ரூபாய்க்கு இவன்கிட்டே கையேந்தி நிக்க வேண்டியிருக்கு” என்று சொல்லிக்கொண்டு இருந்ததைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

எங்கே போகிறது இளைய தலைமுறை?

*****
அனுமதிக்கவில்லையெனில் உங்கள் குழந்தைகள் தவறான காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; அனுமதிக்காதவரை சரியான காரியங்களையும் செய்ய மாட்டார்கள்!

சட்டைப் பையில் இசைக் கடல்!

ம்.பி-3 என்று ஒரு சமாசாரம் இப்போது இளைஞர்களிடையே பரவலாக உபயோகத்தில் உள்ளது. ஒரு சிடி-யில் எம்.பி-3 ஃபார்மேட்டில் இருநூறு பாட்டுக்களைப் பதிவு செய்வார்களே, அது அல்ல நான் சொல்வது. ஒரு சின்ன சதுர வடிவ ரப்பர் சைஸில் இருக்கும் இதை யு.எஸ்.பி எம்.பி-3 என்கிறார்கள். இந்தச் சின்னூண்டு சமாசாரத்துக்குள் நமக்குப் பிடித்தமான 200 பாட்டுக்களைப் பதிந்து வைத்துக்கொண்டு, சின்ன வேர்க்கடலை கேக் மாதிரி இருக்கும் அதைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு, காதில் இயர் போன் சொருகிக்கொண்டு, காலை வாக் போய்க்கொண்டே, ஓடிக்கொண்டே, பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டே, படுத்துக்கொண்டே, சாப்பிட்டுக்கொண்டே, ஒன் பாத்ரூம் போய்க்கொண்டே என எப்பொழுதும், எல்லா நேரமும் சுகானுபவமாகக் கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

ரொம்ப நாள் நான் மற்றவர்கள் இயர் போன் சொருகியிருப்பதைப் பார்த்து, செல்போனில்தான் பாட்டு கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். என் பையன்தான் யு.எஸ்.பி. எம்.பி-3 பற்றிச் சொல்லி, “விலை ஒண்ணும் அதிகம் இல்லைப்பா. 300 ரூபாய் 400 ரூபாய்க்குள்தான் இருக்கும். எனக்கு ஒண்ணு வாங்கிக் கொடுப்பா” என்றான். “இந்தக் குவார்ட்டர்லியில நீ ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தேன்னா வாங்கித் தரேன்” என்று கண்டிஷன் போடுகிற அப்பா இல்லை நான். எனக்கே “அட, இது புதுசா இருக்கே!” என்று தோன்ற, பையனுக்கு ஒன்று, மகளுக்கு ஒன்று, மனைவிக்கு ஒன்று, என் அப்பாவுக்கு ஒன்று, எனக்கு ஒன்று என ஐந்து எம்.பி.3-க்களை ‘அப்படியே ஒரு கூறு என்ன விலைங்க?’ என்று பேரம் பேசி ரிச்சி ஸ்ட்ரீட்டில் ஒன்று 300 ரூபாய் மேனிக்கு 1,500 ரூபாய் கொடுத்து மறுநாளே வாங்கி வந்துவிட்டேன்.

மகன் மற்றும் மகளின் எம்.பி.3-யில் முழுக்க முழுக்க நிரம்பியிருப்பது லேட்டஸ்ட் பாடல்கள். ‘ஹசிலி பிசிலி’, ‘அட ரோஸு ரோஸு ரோஸு’, ‘கோடானுகோடி’, ‘மியாவ் மியாவ் பூனே’ இப்படி. மனைவியின் எம்.பி.3-யில் எல்லாமே எஸ்.பி.பி. பாடல்கள். ‘மங்கையரில் மகராணி’, ‘பொன்னாரம் பூவாரம்’ இப்படி. அப்பாவின் எம்.பி.3-யில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.கே.டி.பாகவதர், டி.எம்.சௌந்தர்ராஜனின் முருகன் பாடல்கள் இப்படியாக இருக்கின்றன.

என் எம்.பி-3 எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது. ‘டாடி மம்மி வீட்டில் இல்லே...’ என்று பாடி முடித்த கையோடு, ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ என்று ஆரம்பிப்பார் டி.எம்.எஸ். அது முடிந்ததும், ‘தூ சீஸு படீஹே மஸ்து மஸ்து’ என்று மொஹ்ரா ஹிந்திப் பாட்டு ஓடும். அடுத்து ‘ஷீ ஈஸ் ஸோ லக்கி...’ என்று குரலைக் குழைப்பார் பிரிட்னி ஸ்பியர்ஸ். சட்டென்று, ‘சூ சூ மாரி...’ ஒலிக்கும். அடுத்து ‘பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்க’ என்பார் டி.எம்.எஸ். தடக்கென்று ‘அற்புதத் தீவு’ படத்தின் ‘சக்கரக் கட்டிக்கும்... வா... வா...’ பாட்டு ஓடும். ஆர்ப்பாட்டமான இந்தப் பாட்டு முடிந்த கையோடு, இதமும் பதமுமான குரலில் ‘மொஹப்பத்கி சாஹர்’ என்று கஸல் அமிர்தம் வழங்குவார் பீனாஸ் மஸானி. கேட்கக் கேட்கத் தமாஷாக இருக்கிறது.

எம்.பி.3-யால் பாட்டுக் கேட்டு ஆனந்திப்பது மட்டும்தான் உபயோகம் என்று நினைத்திருந்தேன். இல்லை. இன்னும் பல உபயோகங்களும் இருக்கின்றன என்பது நடைமுறையில் தெரிய வந்தது.

வீட்டில் இருக்கும்போது இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டு எம்.பி.3-ஐ ஓடவிட்டால், உருப்படாத சீரியல்களிலிருந்து தப்பிக்கலாம். ‘உறவுகளாலே, உறவுகளாலே... உலகம் தொடர்கின்றது...’ என்று அலறும் நித்யஸ்ரீயின் ஹிஸ்டீரியா குரலையும், ‘யம்மா... ராஜேஸ்வரீ...’ என்கிற கதறலையும் காதுக்குள் நுழையாதவாறு தடுக்கலாம். தவிர, லபோ லபோ ஒப்பாரிகள்... உன்னைக் கொன்னுடுவேன், ஒழிச்சுடுவேன் போன்ற சவால்கள், அழுகைகள் ஒரு கண்றாவியும் காதில் ஏறாமல், நாம் நமக்குப் பிடித்தமான பாடலோடு ஐக்கியமாகலாம்.

வீட்டிலிருந்து பஸ் ஸ்டேண்ட் அவ்வளவு தூரமாயிற்றே என்று முன்பெல்லாம் சலிப்பாக இருக்கும் நடப்பதற்கு. எம்.பி-3 வந்ததிலிருந்து சலிப்பு போயே போச்சு! காதில் மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கிவிட்டால், பத்து மைல் கூட நடந்துவிடலாம் போன்ற உற்சாகம்!

பஸ்ஸில் கூட்டம், நெரிசல், உட்கார இடம் இல்லை; டிராஃபிக்கில் பஸ் மணிக்கணக்காக நிற்கிறது. முன்னெல்லாம் கடுப்பாக இருக்கும். எம்.பி-3 அந்தக் கடுப்பைப் போக்கிவிட்டது. ஒரு கம்பியைப் பிடித்துக்கொண்டு வாகாக நின்றுகொண்டுவிட்டால், பஸ் எப்போது வேண்டுமானாலும் கிளம்பட்டும் என்று கவலையே இல்லாமல், நாம்பாட்டுக்குச் சுகமாகப் பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கலாம்.

கூட்ட நெரிசலில், ‘நீ என்ன இடித்துவிட்டாய்... என் காலை மிதித்துவிட்டாய்... பையைத் தள்ளி வை... உன் பாட்டன் வூட்டு பஸ்ஸுன்னு நெனைப்பா... அவ்வளவு சொகுசா இருந்தா பிளஷர் கார் வெச்சுட்டுப் போக வேண்டியதுதானே... தா, பொம்பளைங்க நிக்குறாங்கன்னு அறிவிருக்குதா உனக்கு, சாயுறியே...’ என்பது மாதிரியான நாசூக்கான மற்றும் நாசூக்கில்லாத வசவுகளைக் காதிலேயே வாங்காமல் நாம் உண்டு, நம் எம்.பி-3 உண்டு என்று மோனத்தில் ஆழ்ந்திருக்கலாம்.

உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்தாலும், பல நேரங்களில் பக்கத்து ஸீட்காரரின் தொணதொணப்பைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும். “சார், அரசியல் இப்போ ரொம்பக் கெட்டுக் கூவம் மாதிரியாயிடுச்சு சார்! வர்றவன் அத்தனை பேரும், தான் எவ்வளவு கொள்ளையடிக்கலாம்னுதானே யோசனை பண்ணிக்கிட்டு வர்றான். பின்னே, ஒரு ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு செலவழிக்கிறவன் பதவிக்கு வந்ததும் அதை வட்டியும் முதலுமா எடுக்கணும்னு நினைப்பானா, மாட்டானா? பாலிடிக்ஸ் பிகேம் ப்யூர்லி பிசினஸ் நௌ எ டேய்ஸ்! காமராஜ், கக்கன் மாதிரி இன்னிக்கு இருக்கிறவங்கள்ல ஒருத்தனைச் சொல்லுங்க பார்ப்போம். இல்லியே சார்! எவனுமே இல்லியே?” ஒரு எம்.பி-3 இருந்தால் இவர் தொல்லை இல்லை. நாம் இயர்போனை எடுத்துக் காதில் மாட்டிக்கொண்டுவிட்டால், பக்கத்து ஸீட்காரர் பேச மாட்டார். அப்படியே ஏதாவது பேசினாலும், அது நம் காதில் விழாத மாதிரி ஒரு தியான பார்வையோடு அவரை ஏறிட்டால், அமைதியாகிவிடுவார். அப்படியும் விடாது அவர் தொணதொணத்தாலும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்று, நம் சிந்தனையை வேறு இடத்தில் வலுவாக ஊன்றிக்கொள்ள ஒரு பிடிமானமாக நமது யு.எஸ்.பி. எம்.பி-3 பாடல்கள் நமக்குத் துணை நிற்கும்.

ஆபீஸிலும் சரி, வீட்டிலும் சரி... எம்.பி.3-யில் பாட்டுக் கேட்டபடியேதான் வேலை செய்கிறேன். இதனால் தேவையில்லாத போன்கால்களை அட்டெண்ட் செய்கிற தொல்லையும் ஒழிகிறது. அவசியம் பேச வேண்டிய நபர்கள் என்றால், மிஸ்டு கால் பார்த்துக் கூப்பிட்டுப் பேசிவிடலாம். மற்றபடி வேலை நேரத்தில் பிளேடு போடுகிற பேர்வழிகளிடமிருந்து தப்பிக்க எம்.பி-3 ரொம்பவே உதவியாக இருக்கிறது. ‘சரி, ரிங் அடித்தும் எடுக்காமல் சைலண்ட் மோடுக்கு மாற்றிவிட்டால் போகிறது’ என்று நினைக்கலாம். ஆனால், அப்புறம் ஒரு சமயம் மடக்கி, ‘என்ன சார், ரெண்டு மூணு தடவை ட்ரை பண்ணேன். எடுக்கவேயில்லையே?’ என்று கேட்பவர்களை எப்படிச் சமாளிப்பது? “அடடா! எம்.பி.3-யில பாட்டுக் கேட்டுட்டேயிருந்தேனா, ரிங் அடிச்சது காதுல விழலை!” என்று சொல்லிவிடலாம் அல்லவா?

மொத்தத்தில், ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்கிற வசனம் இந்த யு.எஸ்.பி. எம்.பி.3-க்குதான் கச்சிதமாகப் பொருந்தும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி யாராயிருந்தாலும், எங்கேயிருந்தாலும் வாழ்க, வளர்க!

*****
ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு ஏற்ற மிக நல்ல நாள் நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் இருக்கிறது.

பணக்காரப் பிச்சைக்காரர்கள்!


ந்தப் பிச்சைக்காரருக்கும் மனசறிந்து நான் பத்து பைசா தர்மம் செய்தது இல்லை. இதற்குப் பல காரணங்கள். அவர்கள் உழைக்காத சோம்பேறிகள் என்கிற எண்ணம் மனதில் விழுந்திருப்பது முதல் காரணம். வெளியேதான் அவர்கள் பிச்சைக்காரர்கள்; நிஜத்தில் ஒவ்வொருத்தரும் மாசத்துக்கு 8,000 ரூபாய், 10,000 ரூபாய் கல்லா கட்டுகிறார்கள் என்று சினிமாக்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் அறிந்தது மற்றொரு காரணம். நானே அப்படியான பணக்காரப் பிச்சைக்காரர் ஒருவரை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அவருக்கு இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்குகூட இருந்தது. பிச்சை போடாமல் நகர்பவர்களை சில பிச்சைக்காரர்கள் கேலி செய்தும், சபித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் இருப்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இதனாலேயே எந்தப் பிச்சைக்காரர் மீதும் எனக்குச் சற்றும் இரக்கம் உண்டானதே இல்லை. எனவே, யாருக்கும் நான் தருமம் செய்தது இல்லை. அது ஊனமுற்றவராக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி!

பஸ்களில் குழந்தைகள் பிச்சை கேட்டுக் கையேந்தி நிற்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும்தான். ஆனாலும், தருமம் செய்தது இல்லை. அவர்களைப் பிச்சையெடுக்கக் கருவிகளாகப் பயன்படுத்துபவர்கள் மீதுள்ள கோபம்தான் காரணம். அதுவே, கைக்குட்டை போன்ற மஞ்சள் நிறத் துணி விற்கும் குழந்தைகளிடம், சுதந்திரக் கொடி விற்கும் குழந்தைகளிடம், அவை எனக்குத் தேவைப்படாவிட்டாலும் வாங்கிக் கொள்வதுண்டு.

ஏதோ ஒரு பதிவில் நான் லாட்டரிச் சீட்டே வாங்கியது கிடையாது என்று எழுதியிருந்தேன். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது; ஒரே ஒரு முறை வாங்கியிருக்கிறேன். 1982-ல் நான் பாண்டிச்சேரியில் ஒரு பழைய பேப்பர் கடையில் வேலை செய்தபோது, கந்தலும் அழுக்குமாய் உடையணிந்த ஓர் ஏழைச் சிறுவன் வந்தான். தன்னிடமுள்ள லாட்டரிச் சீட்டுகளைக் காட்டி, என்னை வாங்கிக் கொள்ளச் சொன்னான். வேண்டாம் என்று மறுத்தேன். “ஒரு சீட்டாவது வாங்கிக்குங்க அண்ணே!” என்று கெஞ்சினான். “இல்ல தம்பி! எனக்கு வேணாம்” என்றேன். “நீங்க சீட்டு வாங்கினீங்கன்னா எனக்கு ஒரு சீட்டுக்கு பத்து காசு கமிஷன் கிடைக்கும்ணே! வாங்கிக்குங்கண்ணே!” என்றான் மீண்டும். நான் அவனிடம் ஒரு ரூபாய் நீட்டி, “இந்தா! வெச்சுக்க. எனக்கு சீட்டு வேண்டாம். ஆளை விடு!” என்றேன். நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை, அந்த ஏழைச் சிறுவனுக்கு அத்தனைக் கோபம் வருமென்று!

“என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சுட்டீங்களா! எனக்கு வேண்டாண்ணே உங்க காசு. ஓசியில வாங்கித் தின்னா உடம்புல ஒட்டாதுண்ணே! நீங்க சீட்டு வாங்கினா வாங்குங்க, வாங்காட்டிப் போங்க” என்று ரோஷமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. “டேய் தம்பி, கொஞ்சம் நில்லுடா! ஒரு சீட்டு வாங்கினா உனக்கு பத்து காசு கமிஷன் கிடைக்குமா? சரி, அப்ப எனக்குப் பத்து சீட்டு கொடு!” என்றேன். “தமிழ்நாடா, பூட்டானா?” என்றான். “உன் இஷ்டம். ஏதோ ஒண்ணு கொடு!” என்றேன். ஆக, பத்து ரூபாய்க்குப் பத்து லாட்டரிச் சீட்டுகள் வாங்கினேன். அன்றைக்கு என் ஒரு நாள் சம்பளமே அதில் பாதிதான்!

அந்தப் பையனுக்கு மகா குஷி! “அண்ணே! எங்கிட்டே சீட்டு வாங்கின ரெண்டு பேருக்கு 500 ரூபா பிரைஸ் அடிச்சிருக்குதுண்ணே! பாருங்க, உங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். சிரித்துக்கொண்டே அவனை வழியனுப்பிவிட்டு, அவன் தலை மறைந்ததும் அத்தனைச் சீட்டுக்களையும் கிழித்துப் போட்டுவிட்டேன்.

சரி, எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய்விட்டேன்.

பிச்சைக்காரர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன் அல்லவா? அந்த நாளில், நாங்கள் கிராமத்தில் வசித்தபோது, ராப்பிச்சைக்காரர்கள் என்று ஒரு கோஷ்டி உண்டு. முறை போட்டுக்கொண்டு வருவார்கள். திங்கள் கிழமை ராத்திரி வருகிற பிச்சைக்காரர் மற்ற கிழமைகளில் வர மாட்டார். வெள்ளிக் கிழமை ராத்திரி வருகிற பிச்சைக்காரி இதர நாட்களில் வர மாட்டாள். தவிர, பகல் பொழுதுகளில் எந்தப் பிச்சைக்காரரையும் பார்க்க முடியாது. எல்லாரும் ராத்திரி எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள்தான் வருவார்கள். அவர்களுக்கென தயாராகக் கொஞ்சம் சாதம், குழம்பு, மோர் எல்லாம் வைத்திருப்பார் எங்கள் அம்மா. ஒரு நாள் யாராவது ஒரு பிச்சைக்காரர் வரவில்லை என்றால், மறு வாரம் அதே கிழமையில் அவர் வரும்போது, “என்னப்பா, போன வாரம் உன்னைக் காணோமே?” என்று கேட்பார். சிலருக்கு வாசல் திண்ணையில் இலை போட்டுப் பரிமாறியும் இருக்கிறார்.

ஒரு முறை (இது வேறு ஒரு ஊரில்), இரவு நாங்கள் அனைவரும் சாப்பிட உட்கார்ந்திருந்தோம். மொத்தமாக ஒரு பெரிய கிண்ணத்தில் சாதம் போட்டுக் குழம்பு விட்டுப் பிசைந்து, எங்கள் எல்லார் தட்டிலும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுக்கொண்டே வந்தார். அப்போது வாசலில் ராப்பிச்சைக்காரர் ஒருவர் குரல். வெள்ளைச் சோறு மீதி இல்லை. சரியென்று, பிசைந்த குழம்பு சாதத்திலேயே, ஒருவர் வயிறு நிறையும் அளவுக்குக் கிண்ணத்தில் போட்டுக்கொண்டு எழுந்தார் அம்மா, அந்தப் பிச்சைக்காரருக்கு அளிக்க. அப்பா தடுத்தார். ‘பிசைந்த சாதமாக இருப்பதைப் பார்த்து அவன் ஏதாவது தப்பாக நினைக்கப் போகிறான்’ என்றார்.

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டான். பசிக்குச் சோறு கிடைச்சா போதாதா?” என்றபடி போனவர், அந்தப் பிச்சைக்காரர் நீட்டிய அலுமினியத் தட்டில், கொண்டு போன குழம்புச் சோற்றைப் போட்டார். அவன் அடுத்த கணம், “என்னங்க எச்சி சோத்தைப் போடுறீங்க?” என்றான் கடுப்பாக. “இல்லேப்பா! எச்சில் சோறைப் போடுவோமா உனக்கு. இது...” என்று அம்மா சொல்ல வந்ததையும் கேட்காமல், “உங்க எச்சி சோத்தை நீங்களே கொட்டிக்குங்க” என்று அங்கேயே தரையில் கொட்டிவிட்டு அவன் விடுவிடுவென்று கிளம்பிப் போய்விட்டான்.

அப்பாவிடம் அம்மாவுக்கு செம டோஸ் - ‘நான்தான் அப்போதே சொன்னேனே, கேட்டியா?’ என்று. பிச்சைக்காரர்களுக்குச் சோறிட்டது எனக்குத் தெரிந்து அதுதான் கடைசி. என்னைத் தருமம் செய்யவிடாமல் தடுத்ததில், அந்தப் பிச்சைக்காரரின் தெனாவெட்டுப் பேச்சு கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

வழக்கமாகப் பேருந்து நிலையத்துக்கு நான் நடந்து செல்லும் வழியில், நாள் தவறாமல் ஒரு பிச்சைக்காரர் உட்கார்ந்திருப்பார். இளம் வயதினர்தான். மிஞ்சிப் போனால் 40 வயது இருக்கலாம். போலியோவால் பாதிக்கப்பட்ட கால்கள். சற்றுத் தள்ளி அவரின் சக்கர நாற்காலி இருக்கும். ஆரம்ப நாட்களில் எல்லாம் ஒவ்வொரு முறை அவரைக் கடந்து போகும்போதும், என் முகத்தை ஆவலோடு ஏறிட்டுப் பார்ப்பார். நான் கண்டுகொள்ளாமல் போய்விடுவேன். தொடர்ந்து பல மாதங்கள் இப்படியே கழிந்ததற்குப் பிறகு, அவருக்கு என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ‘நீயெல்லாம் எங்கே தர்மம் பண்ணப் போறே?’ என்பது போல் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொள்வார்.

அவருக்கு இன்று நான் முழுதாக பத்து ரூபாய்த் தாள் ஒன்றைத் தருமம் செய்தேன். அவர் முகத்தில் ஆச்சரியம் தெரிந்ததைக் கவனித்தேன். அவர் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்வதைக் காண விரும்பாமல் சட்டென்று விலகிப் போய்விட்டேன். காரணம், தருமம் செய்த அந்தப் பத்து ரூபாய் என்னுடையதல்ல. நடந்து வருகிற வழியில் சற்று முன்னதாக அப்போதுதான் கீழே கண்டெடுத்தது.

ஆக, தருமம் செய்தது நானல்ல. பணத்தைத் தவறவிட்ட, யாரோ ஒரு முகம் தெரியாத பேர்வழி. போகட்டும் புண்ணியம் அவருக்கே!

*****
எதை நீ இழந்தாலும், உடனே அதன் மதிப்பு இரண்டு மடங்காகிவிடுகிறது!

பஸ்ஸுக்குள் ஓர் தனி உலகம்!

தினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மாநகர பேருந்தில் பயணம் செய்கிறவன் என்கிற முறையில், பஸ் பயணிகளிடையே நிலவும் பொதுவான சில குணாதிசயங்களைக் கவனித்திருக்கிறேன்.

அடுத்த ஸ்டாப்பிங்கிலோ, அதற்கடுத்ததிலோ இறங்கப் போகிறவர் போன்று நுனி ஸீட்டில் அமர்ந்திருப்பார். ஜன்னல் வழியே வெளியே எட்டி எட்டிப் பார்ப்பார். அருகே நிற்கிற நாமும் அவர் எழுந்துகொண்டவுடன், அந்த ஸீட்டைக் கைப்பற்றும் உத்தேசத்துடன் தயாராகக் காத்திருப்போம். ஆனால் பாவி மனுஷன், கடைசி வரை எழுந்திருக்கவே மாட்டார். அவர் தவியாய்த் தவிக்கிற தவிப்பைப் பார்த்து, “எங்கே சார் இறங்கணும் நீங்க?” என்று கேட்டால், இவன் எதற்கு அடி போடுகிறான் என்பதைப் புரிந்துகொண்டவர் போல் அவர் உடனே சுதாரித்து, வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, ‘லாஸ்ட்... டெர்மினஸ்...’ என்பார் நமக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகமே வரக்கூடாது என்று நினைப்பவர் போல்!

இதற்கு நேர்மாறானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கட்டக் கடைசியாய் பஸ் ஸ்டாண்டில்தான் இறங்கப் போகிறவர்கள் போல ஜன்னலில் சாய்ந்து, கண் மூடிச் சயனித்திருப்பார்கள். அல்லது, சரிந்து தளர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். இறங்குகிற உத்தேசமே அவர்கள் முகத்தில் துளியும் தென்படாது. ஸ்டாப்பிங் வந்ததும் எல்லோரும் இறங்கி, ஏறுகிறவர்கள் ஏறிக்கொண்டு இருக்கும்போது, இவர் திடுதிப்பென்று எழுந்து, கூட்டத்தைப் பரபரவென்று விலக்கிக்கொண்டு தடக்கென்று இறங்குவார்.

அடிக்கடி வயதான ஒரு பெரியவரை நான் பஸ்ஸில் சந்திக்கிறேன். ஆர்ப்பாட்டமாகக் கூச்சலிட்டுக்கொண்டு, ‘நகருங்க... அட, நகருங்கய்யா... பெரியவன் வரானேங்கிற மரியாதையில்லாம... சே! உலகம் கெட்டுப் போச்சு! காலம் கெட்டுப் போச்சு! எவனுக்கும் மரியாதை தெரியுறதில்லே! அட, நகருப்பான்னா!’ என்று பலவிதமாக அதட்டிக்கொண்டு பஸ் ஏறுவார். எண்பதைக் கடந்தவர் என்பதால் யாரும் அவரை ஒன்றும் சொல்வதில்லை. அவர் பஸ் ஏறினதும், நேர் ஸீட்டில் உட்கார்ந்திருப்பவரை, “எழுந்திரப்பா! தனியா உனக்குச் சொல்லணுமா? பெரியவன் வந்தா எழுந்து இடம் விடணும்கிற பண்பாடு எப்பத்தான் நம்ம நாட்டு ஜனங்களுக்கு வரப் போகுதோ!” என்று அதட்டி, எழுந்திருக்க வைப்பார். “முன்னே முதியோர் ஸீட்டு இருக்குது. அங்கே போய் அவங்களை எழுந்திருக்கச் சொல்லுங்க!” என்று ஒரு சமயம் ஓர் இளைஞன் சொன்னான். அதற்கு, “யாரைப் போகச் சொல்றே? அறிவிருந்துதான் பேசறியா நீ? இந்தக் கூட்டத்துல வயசானவன் எப்படிடா போவான்? முன்னே முதியோருக்கு ஒரு ஸீட் போட்ட பன்னாடைங்க பின்னாடியும் ஒரு ஸீட் போட்டிருந்தா உன்னை ஏண்டா எழுப்பப் போறேன்? ம்... எழுந்திரு!” என்றார்.

அவரிடம் ஒருமுறை கண்டக்டர் டிக்கெட் தருவதற்காக, “எங்கே போகணும்?” என்று கேட்டுவிட்டார். “கேட்டுட்டேல்ல போறபோதே எங்கே போறேன்னு? ம்ஹ்ம்... போன காரியம் உருப்புட்டாப்புலதான்! எங்கே போவான் வியாதியஸ்தன்? எல்லாம் அந்த ஜி.ஹெச்சுக்குதான். டெய்லிதான் போறேனே, அப்புறம் என்ன கேள்வி, எங்கே போறேன்னு!” என்று சலித்துக்கொண்டே டிக்கெட் வாங்கினார் அந்தப் பெரியவர்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எழுந்து இடம் கொடுக்கும் விதமே பிரமிப்பாக இருக்கும். அதாவது, ஒரு ஸீட் காலியானதும் முதலில் பாய்ந்து அந்த இடத்தைப் பிடிப்பது அவர்கள்தான். இடம் பிடிக்கும் போட்டியில் நம்மைத் தோற்கடித்து விடுவார்கள். பின்னர், நமது முகத்தைப் பார்த்து, “நீங்க வேணா உட்கார்றீங்களா சார்?” என்பார்கள். பெரும்பாலும் ‘வேண்டாம்’ என்று மறுத்து விடுவோம் என்கிற நம்பிக்கைதான். அப்படியே, “சரி! எழுந்திருங்கள். நான் உட்காருகிறேன்!” என்று விடாக்கொண்டனாக நாம் சொன்னால், அவர்கள் எழுந்து இடம் கொடுப்பார்கள்தான். ஆனால், இதில் அவர்களுக்கு இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று... ஸீட் பிடிக்கும் போட்டியில் வென்றது தான்தான் என்கிற பெருமை. இரண்டு... ‘அடடா! என்ன பெருந்தன்மையாக அடுத்தவருக்கு எழுந்து இடம் விடுகிறான்!’ என்று மற்றவர்கள் மனதில் தன்னைப் பற்றிய மதிப்பு உயரும் என்கிற எண்ணம். ஸீட்டுக்குப் போட்டியிடாமலே அடுத்தவருக்கு விட்டுவிட்டால், தான் இளித்தவாயன் ஆவோமே தவிர, இப்படியான பெருமையும் மதிப்பும் கிடைக்குமா?

வேறு வகையினரும் இருக்கிறார்கள். அவர்களும் இடமளிக்கும் பரோபகாரிகள்தான். “பெரியவரே, நீங்க எங்கே போகணும்?” என்று, அருகில் நின்றுகொண்டு இருக்கும் தள்ளாத வயதுப் பெரியவரை உட்கார்ந்த வாக்கில் விசாரிப்பார்கள். “சென்ட்ரல்” என்று அவர் சொன்னால், “அப்படியா! இங்கேயே இருங்க. நான் அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கிடுவேன். நீங்க உட்கார்ந்துக்குங்க!” என்பார்கள். அடுத்த ஸ்டாப்பிங் என்பது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும். எழுந்து இடம் கொடுக்கிற மகானுபாவன் உடனேயே எழுந்து இடம் கொடுக்கலாம். ஆனால், மாட்டார். பஸ் மெதுவாக அடுத்த ஸ்டாப்பிங்கை அடைந்து, ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கியதும், இவர் மெதுவாக எழுந்து, ‘ம்.. உட்கார்ந்துக்குங்க!’ என்று கரிசனமாகச் சொல்லிவிட்டு இறங்குவார். அப்போதுதான் தான் செய்த பரோபகாரத்துக்கான புண்ணியம் தன் கணக்கில் சேருமென்று நினைக்கிறாரோ, என்னவோ! பின்னே, பெரியவர் வந்து தன் அருகில் நின்றதுமே எழுந்து இடம் கொடுத்துவிட்டால், அது உபகாரக் கணக்கில் சேருமோ, சேராதோ?!

இன்னும் சில காமெடிகள்கூட நடக்கும். பஸ் வந்து நின்றதும் கூட்டம் திபுதிபு என்று ஏறும். காலியாகக் கிடக்கும் ஸீட்டுகளை ஆக்கிரமிக்கத் தொடங்குவார்கள். ஒரு பெரியவருக்கும் நடுத்தர வயதுக்காரருக்கும் இடம் பிடிக்கும் போட்டி. நடுத்தர வயதுக்காரரே வெல்வார். பிறகு, பரிதாபமாக நிற்கும் பெரியவர் மீது கரிசனம் வந்து, “அதோ பாருங்க... அங்கே ஒரு இடம் இருக்கு” என்று சுட்டிக்காட்டிவிட்டு, அங்கே உட்கார முனையும் நபரை, “சார்! கொஞ்சம் இருங்க. பெரியவர் வராரு!” என்று உஷார்படுத்துவார். ஆக, தன் இடமும் பறிபோகக் கூடாது; பெரியவருக்கும் இடம் பிடித்துக் கொடுத்துவிட்ட திருப்தி! அப்படி இவர் பேச்சை மீறி அந்த நபர் வம்படியாக உட்கார்ந்துவிட்டால், இவர் எழுந்து தன் இடத்தை அந்தப் பெரியவருக்குக் கொடுப்பாரா என்றால், மாட்டார். “ஹூம்... என்ன ஜனங்களோ! இடத்தையா சுமந்துகிட்டுப் போகப்போறோம்! என்ன, மிஞ்சிப் போனா ஒரு அரை மணி நேரம்... அவ்வளவுதான் இந்த பஸ்ஸோட நம்ம உறவு. அதுக்குள்ள என்னா போட்டி! பாவம், அந்தப் பெரியவரு வராருன்னு சொல்லிட்டேயிருக்கேன், அடமா உட்கார்றாரு பாரு! இவங்களையெல்லாம் எந்த லிஸ்ட்டுல கொண்டு போயிச் சேர்க்குறது?” என்று உட்கார்ந்த நபரை, தான் இருக்கும் இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட அசையாமல் சபித்துத் தள்ளுவார்.

வேறு சில விசித்திரங்களும் நடக்கும். இரண்டு ஸீட் இருக்கையில், விளிம்பில் ஒருவர் உட்கார்ந்திருப்பார். புதிதாக உட்கார வருகிறவர், அவரை ஜன்னலோரம் தள்ளி உட்காரச் சொன்னால், இவர் வெளிப்புறமாகத் தன் கால்களை நகர்த்தி உட்கார்ந்துகொண்டு, புதியவரை ஜன்னலோரத்துக்கு அனுப்புவார். ஜன்னலில் வெயிலடிக்கும் அல்லது சாரலடிக்கும் என்பதுதான் காரணம் என்றால், அதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், அவர் சொல்லும் காரணமே வேறு. “நான் உங்களுக்கு முன்னாடியே இறங்கிடுவேன்!” அதாவது, இன்னும் ஏழு ஸ்டாப்பிங்குகள் போனதும் அவர் இறங்குவாராயிருக்கும். எட்டாவது ஸ்டாப்பிங்கில் அந்தப் புதியவர் இறங்குவார். ஒருத்தரைக் கடந்து வந்து இறங்குவது அத்துணைக் கடினமா என்ன? அவ்வளவு முன்ஜாக்கிரதைப் பேர்வழியாம்!

டிரைவர் அமைதியாக பஸ்ஸை ஓட்டிக்கொண்டு இருப்பார். பின்னால் பல ஸீட்டுகள் தள்ளி எங்கோ நடுவில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் நபர் செய்கிற அலம்பல்கள் தாங்க முடியாது. பக்கத்தில் ஓவர்டேக் செய்யும் மோட்டார் பைக்காரரை, “ஏய்யா... என்னா உனக்கு அவதி? மெதுவாத்தான் போவறது! சந்துல தலையைக் கொடுத்து சாவப் பாக்குறியே?” என்று கடுப்படிப்பார். “ஆகா... வண்ட்டான்யா ஆட்டோக்காரன். ஒரு சின்ன சந்து கிடைச்சாப் போதுமே இவுங்களுக்கு, உள்ள பூந்துடுவாங்க! அப்புறம் டிராபிக் ஜாம் ஆகாம என்ன பண்ணும்? போய்யா போ! முன்னக்க போய் நின்னுக்க. நீயும் போக வேண்டாம்; நாங்களும் போகல! நெட்டுக்க போத்தீஸையே வேடிக்க பார்த்துக்கிட்டு இங்கனயே கெடப்போம்!” என்பார்.

பஸ் வலது புறம் திரும்பினால், இவர் ரொம்ப அக்கறையாக தன் கை முழுசையும் வெளியே நீட்டி சிக்னல் காட்டுவார். “யோவ், யாருய்யா அது! கையை உள்ள வை!” என்று டிரைவர் அதட்டல் போட்டால், மெதுவாகக் கையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, “ரைட் ரைட்... போ, போ! உனுக்கு இவனுங்கதான் சரி!” என்று முணுமுணுப்பார்.

“நாங்கள்ளாம் ஸ்டெடியா நிப்பம்ல?” என்று வடிவேலு ரேஞ்சுக்கு, இடம் இருந்தாலும் உட்காராமல், மேலே கைப்பிடியையும் பிடிக்காமல், ஒரு கம்பியில் சாய்ந்து நின்றவாறே பயணம் செய்யும் பேர்வழிகளும் இருக்கிறார்கள்.

இப்படியான விசித்திர பஸ் பிரயாணிகளை நான் நாள்தோறும் புதிது புதிதாகச் சந்தித்து வருகிறேன். எனவே, இந்தப் பதிவு இப்போதைக்கு முடியாது. ஆகவே, இத்துடன் பஸ்... பஸ்..!

*****
எப்போதும் கையில் ஒரு சுத்தியுடனேயே திரிந்துகொண்டு இருந்தால், சுற்றி இருப்பதெல்லாம் ஆணிகளாகத்தான் தெரியும்!

ஐயோ பாவம், ஆண்கள்!

‘கல்யாண மாலை’ என்று ஒரு நிகழ்ச்சியை யதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. அதில், தனக்கு வரப்போகிற மனைவி அழகான பெண்ணாக, குடும்பத்துக்கு அடங்கிய மருமகளாக, ஓரளவு படித்தவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மணமகன்கள். மணமகள்களோ தனக்கு வரும் வரன்கள் நல்ல வேலையில் இருப்பவராக, கை நிறையச் சம்பளம் வாங்குபவராக, தன்னைக் கண்ணில் வைத்துக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும் என்கிறார்கள். செய்தித்தாள்களில் ‘மேட்ரிமோனியல்’ பகுதியில் பார்த்தாலும் இப்படித்தான் குறிப்புகள் இருக்கின்றன.

ஆக, பெரும்பாலான ஆண்களுக்கு பெண்கள் அழகாக, குறிப்பாக சிவப்பாக இருக்க வேண்டும்; அடங்கியவளாக, எதிர்க் கருத்து சொல்லாதவளாக இருக்க வேண்டும். மற்றபடி, அவள் பெரிய படிப்பு படித்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில்லை. படித்திருந்தால் எதிர்த்துப் பேசுவாளே! இது உள்ளூரப் படிந்து கிடக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. பெரும்பாலான பெண்கள் ஆண்களின் அழகைப் பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை. கை நிறையச் சம்பாதிக்க வேண்டும்; தன்னை வசதியாக வைத்துக் காப்பாற்ற வேண்டும்.

பெண்ணை எப்படியாவது ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் போதும் என்கிற பதைபதைப்பு மனோபாவம் இன்னமும் நம் சமூகத்தில் பெற்றோர்களிடையே நிலவுவது அவர்களின் பேச்சிலிருந்து புலப்பட்டது. இந்த ‘எப்படியாவது ஒருத்தன் கையில்’ என்கிற துடிப்புதான் வரதட்சணை என்கிற திருமண லஞ்சத்துக்கான ஊற்றுக் கண்.

சாஸ்திரங்களில் எங்கும் வரதட்சணை பற்றிச் சொல்லப்படவே இல்லை. சொல்லப்போனால், தங்கத் தாலி கட்டுவது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. தாலி கட்டுவது என்பது பின்னாளில் தோன்றிய ஓர் அடையாளச் சின்னம்தான். சாஸ்திரங்களில் தாலி கட்டுதல் இல்லை. சப்தபதி என்கிற சடங்குதான் திருமண ஒப்பந்தத்தைக் குறிக்கும் நிகழ்வு. மணமகளின் கால் மெட்டி விரலைப் பிடித்துக் கொண்டு ஏழு எட்டு எடுத்து வைக்கும் நிகழ்வு அது.

என்னுடைய திருமணத்தில் நான் எந்த நிபந்தனையும் போடவில்லை; கல்யாணத்தை ஒரு கோயிலில் மிக எளிமையாக நடத்த வேண்டும் என்பதைத் தவிர! ஆனால், அது நடக்கவில்லை. மேலும், பெண் பார்க்கும் படலம் என்று வரிசையாக ஒரு சுற்றுக் கிளம்பி, ஏழெட்டுப் பெண்களைப் பார்த்து, மார்க்கெட்டில் கத்தரிக்காய் பொறுக்குவது மாதிரி பொறுக்க எனக்கு விருப்பமில்லை. ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்த்தேன். பெண் பார்க்கக் கிளம்பும்போதே என் பெற்றோரிடம், “இப்போது பார்க்கப் போகிற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன். ஒரு பைசா வரதட்சணை கூடாது என்று சொல்லி விடுங்கள். மற்றபடி, அந்தப் பெண்ணுக்கு இந்தத் திருமணத்தில் முழுச் சம்மதமா என்று கேட்டு விடுங்கள்” என்று சொல்லி விட்டேன்.

நான் ஒன்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவனல்ல; கை நிறையச் சம்பளம் வாங்குபவனும் அல்ல (அப்போது!); நம்பிக்கையான அரசு உத்தியோகஸ்தனும் அல்ல. இருந்தாலும், பெண்ணுக்கும் இதில் சம்மதம் இருந்ததால், எங்கள் திருமணம் 1992-ல் நடந்தது.

‘கல்யாணத்துக்கு எனக்கு மணமகள் வீட்டில் பைக் வாங்கிக் கொடுத்தார்கள்’, ‘பெண்ணுக்கு நூறு பவுன் நகை போட்டு அனுப்பினார்கள்’ என்று பெருமையோடு என்னிடம் வந்து சொல்லிக் கொள்ளும் நண்பர்கள் இன்றைக்கும் உண்டு. அவர்கள் பேரில் எனக்கு மரியாதையே ஏற்பட்டதில்லை. கொஞ்சம் அருவருப்புகூட உண்டாகியிருக்கிறது. பெண் வீட்டார் வசதியாக இருந்து, தங்கள் பெண்ணுக்கு அதிகம் சீர் வரிசை செய்து திருமணம் செய்து தருவதே தங்களுக்குக் கௌரவமாக இருக்கும் என்று நினைத்துச் செய்திருக்கலாம். இந்த நண்பர்கள் எந்த டிமாண்டும் வைத்திருக்காமலும் இருக்கலாம். இருந்தாலும், உழைக்காமல் ஓசியில் கிடைத்த ஒரு பொருள் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதேகூட அநாகரிகமாக, அற்பத்தனமாகத்தான் எனக்குப் படுகிறது. நான் இதுவரை ஒரு லாட்டரிச் சீட்டு கூட வாங்கியது கிடையாது.

வரதட்சணைக்கு ஆண்கள்தான் காரணம் என்று மகளிர் கோஷ்டி ஒன்று கூக்குரல் போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால், யதார்த்தம் வேறு. நான் பார்த்த பல திருமணங்களில் பெண் வீட்டார்தான் வலியச் சென்று வரதட்சணை லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். மணமகன்கள், கல்யாண மார்க்கெட்டில் தங்களுக்கு நல்ல விலை இருப்பது தெரிந்து, தங்களுக்கான விலையை முடிந்தவரை ஏற்றியிருக்கிறார்கள் - கிடைத்தவரை லாபம்தானே என்று! பணக்கார மாப்பிள்ளையாக, வெளிநாட்டில் வேலை செய்பவனாக, கை நிறையச் சம்பாதிப்பவனாக இருந்தால் தங்கள் பெண்ணை நல்லபடி வைத்துக் காப்பாற்றுவான் என்று, அந்த மணமகன்கள் கேட்டதைக் கடனோ உடனோ வாங்கிக் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கின்றனர் பெண்ணின் பெற்றோர். மணமகன் ஏழையாக, கை நிறையச் சம்பாதிக்காதவனாக இருந்து, ‘ஆனாலும், நான் ரொம்ப நல்லவன்க. மூட்டை தூக்கியாவது உங்க பெண்ணைக் கண் கலங்காம வெச்சுக் காப்பாத்துவேன்’ என்று சத்தியம் செய்தாலும், யாரும் அவனுக்குப் பெண் தர மாட்டார்கள்.

என்னைத் தேடி வந்த ஒரு பெண் வீட்டாரில் மணமகனின் சகோதரன், எனக்கு பி.எஃப், கிராஜுவிட்டி எல்லாம் எவ்வளவு வரும் என்று கேட்டான். கும்பிடு போட்டு அனுப்பி வைத்து விட்டேன்.

என் பெரியப்பாவுக்கு மூன்று மகள்கள். என் அத்தைக்கு மூன்று மகன்கள். பெரியப்பா தன் இரண்டாவது மகளை என் அத்தையின் மூத்த மகனுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்பினார். என் அத்தையும், அத்தையின் கணவரும் இதற்கு ஒப்புக் கொண்டனர். என் அத்தை மகனுக்கும் சம்மதம்தான். வரதட்சணை ஒரு பைசா வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கிட்டத்தட்ட நிச்சயதார்த்தம் வரை வந்த அந்தத் திருமணம் திடீரென்று கிணற்றில் போட்ட கல் மாதிரி ஆகிவிட்டது. பெரியப்பாவிடமிருந்து இது பற்றி ஏதாவது பதில் வரும், வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது என் அத்தை குடும்பம். ஆனால், வந்தது பெரியப்பா மகளின் திருமணப் பத்திரிகைதான்.

சொல்லாமல் கொள்ளாமல் ஒரு டெல்லி வரனுக்குத் தன் பெண்ணைப் பேசி நிச்சயித்துக் கல்யாணத்தையும் முடித்துவிட்டார் பெரியப்பா. ஏகப்பட்ட லட்சங்கள் (சுமார் 30 வருடங்களுக்கு முன்) வரதட்சணையாகக் கொடுத்தார். அத்தை பையனை நிராகரித்ததற்கு ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். ‘பையன் ரொம்பப் பலவீனமாக இருக்கிறான்’ என்றார்கள்; ‘பையனை விட பெண் அதிகம் படித்திருக்கிறாள்’ என்றார்கள்.

ஆனால், பெரியப்பா மகளின் திருமண வாழ்க்கை சுமுகமாக இல்லை. பெண்ணைக் கொடுமைப்படுத்துகிறார் மாப்பிள்ளை என்று குமுறிக்கொண்டு இருந்தார் பெரியப்பா. ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத என் மகளைக் குடம் குடமாய்த் தண்ணீர் இரைக்கும்படி வேலை வாங்குகிறார் மாமியார் என்று பொருமினார். அப்புறம், ‘என் பெண்ணுக்கு டிவோர்ஸ் வாங்கப் போகிறேன்’ என்று குதித்தார். ஆனால், அப்படி எந்த வில்லங்கமும் நிகழாமல் திருமண ஒப்பந்தம் நீடித்தது. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்னர் அந்த ‘ஆரோக்கிய மாப்பிள்ளை’ ஹார்ட் அட்டாக் வந்து, 50 வயது நிறைவதற்குள்ளாகவே இறந்து போனார். ‘பலவீனமான’ என் அத்தை மகனோ வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இரண்டு செல்வங்களைப் பெற்றார். பெரியவளுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். அவள் அமெரிக்காவில் மாப்பிள்ளையோடு செட்டிலாகிவிட்டாள். பையனும் அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறான். அவரும் இப்போது ஒரு குறைவும் இன்றி, தன் ஓய்வுக் காலத்தை மனைவியுடன் நிம்மதியாகக் கழித்து வருகிறார்.

இதனால் இது ஆனது என்று எதையும் இணைத்துப் பேச நான் வரவில்லை. ஆனால், நமது கணக்கு ஒன்றாக இருக்கிறது; இறைவன் போடும் கணக்கு வேறாக இருக்கிறது. இதில் பெண்களுக்கு எதிரான, வரதட்சணை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு ஆண்களை மட்டுமே சாடுவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. எப்படி ஔவையார் ஒரு பெண்பாற் கவிஞராக இருந்தபோதிலும், பெண்களையே மட்டம் தட்டிக் கவிதைகள் எழுதினாரோ, அது போல ஆண்களிலேயே பலர் பெண்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழியென்று, அப்போதுதான் தன்னை ஆணாதிக்கச் சிந்தனை இல்லாதவனாக, முற்போக்குவாதியாக உலகம் கொண்டாடும் என்று ஆண்களை மட்டுமே குற்றம் சாட்டிப் பேசுகிறார்கள்.

‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!’ என்கிற வாக்கியம் என்னைப் பொறுத்தவரைக்கும் சரியாகத்தான் படுகிறது. பெண்கள் மூன்று வகையாக இருக்கிறார்கள். ஒரு வகையினர், தங்களைத் தாங்களே அடிமைப்படுத்திக் கொண்டு, தன் கணவன் தன்னை விட மேலானவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தாங்களே முடிவு கட்டி, அவனது முட்டாள்தனங்களையும் வன்முறைகளையும் சகித்துக் கொண்டு காலம் தள்ளுபவர்கள்; இன்னொரு வகையினர், தாங்கள் ஆண்களுக்கு எந்த வகையிலும் அடிமைப்பட்டவர்கள் அல்ல; தாழ்ந்தவர்கள் அல்ல. அதனால், எப்படி வேண்டுமானாலும் தறிகெட்டுத் திரியலாம். ஆண்கள் செய்யும் அத்தனைத் தப்புகளையும் தாங்களும் செய்வதற்கு உரிமை உள்ளவர்கள். அதனால், கணவன் சொல்வது நியாயமாகவே இருந்தாலும் அதைக் கேட்டு நடக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்கிற மனோபாவம் உள்ளவர்கள்.

இந்த இரண்டு வகையினரிலும் சேராத, நடு நிலைமையான, மனதில் எந்தக் குழப்பத்துக்கும் இடம் கொடுக்காத பெண்கள் சதவிகிதம் மிகச் சொற்பமே! இவர்களால்தான் உலகம் இன்னமும் சீராக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

*****
பெண்களிடம் வாதாட மூன்று வழிமுறைகள் உண்டு; ஆனால், மூன்றுமே பயனற்றவை!

எங்க ஊர் ராஜா!

நேற்றைய பதிவில் சிம்மக்குரலோன் சிவாஜி பற்றி எழுதியிருந்ததை உடனடியாகப் படித்துப் பின்னூட்டம் இட்டிருந்த எழுத்தாளர் ரேகா ராகவன், ‘நீங்கள் படித்து வளர்ந்த ஊரான விழுப்புரத்தில் பிறந்தவர் சிவாஜி. அது பற்றி உங்கள் பதிவில் ஏதேனும் குறிப்பிட்டிருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை என்றதும் வருத்தமாக இருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சிவாஜி ‘எங்க ஊர் ராஜா’ என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு இருக்கும் பெருமை அளவற்றது.

சிவாஜி கணேசன் என்று அவர் பரவலாக அழைக்கப்பட்டாலும், அவர் தம் பெயரை எல்லா இடத்திலும் வி.சி.கணேசன் என்றுதான் குறிப்பிடுவார். அதாவது விழுப்புரத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயரின் மகன் கணேசன்! 1928-ஆம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதியன்று விழுப்புரத்தில் சிவாஜி பிறந்தபோது, அவர் குடும்பத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. சிவாஜி பிறந்த அரை மணி நேரத்துக்குள் அவரின் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் கைதாகி, நெல்லிக்குப்பம் சிறைக்குச் சென்றுவிட்டார். சிவாஜியின் தாத்தா சின்னசாமி காளிங்கராயர் ரெயில்வே இன்ஜினீயராக இருந்தவர். அவரும் அப்போதுதான் ரிடையரானார். குடும்பம் தனித்தனியாகச் சிதற வேண்டிய நிர்பந்தம். சிவாஜி திருச்சிக்குப் போனார். விழுப்புரத்தில் சிவாஜி வாழ்ந்தது சிறிது காலம்தான்.

சிவாஜி முதலில் நாடகங்களில் நடித்தார். திருச்சி வானொலி நிலைய நாடங்களில் நடிக்க விரும்பிப் பெயர் கொடுத்து, அவர்கள் நடத்திய குரல் தேர்விலும் கலந்து கொண்டார். ஆனால், தேர்வாகவில்லை. அதற்கு அவருக்குச் சொல்லப்பட்ட காரணம்: ‘உங்கள் குரல் சரியில்லை!’

பின்னர் சென்னை சென்று, சினிமாவில் வாய்ப்பு தேடினார். அச்சமயம் ‘ஜெமினி’ அதிபர் எஸ்.எஸ்.வாசனையும்கூட அணுகியிருக்கிறார். அப்போது அந்தப் பட நிறுவனத்தில் மேனேஜராக இருந்தவர் ஜெமினி கணேசன். அவரின் சிபாரிசின் பேரில், அப்போது எடுக்கப்பட்டுக்கொண்டு இருந்த படத்திற்கான ஒரு காட்சியில், பணியாள் போன்ற ஒரு சிறு வேஷத்தைக் கொடுத்து சிவாஜியை நடிக்கச் சொன்னார்கள். ஆனால், அதைச் சிவாஜி சரியாகச் செய்யவில்லை என்று அவரை நிராகரித்துவிட்டார்கள்.

அப்புறம் பல ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்தார் சிவாஜி. பின்னர்தான் ‘பராசக்தி’ பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தப் படத்தில் கதாநாயகனாகப் போட கே.ஆர்.ராமசாமி உள்பட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. குழம்பிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் அறிஞர் அண்ணாவிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அண்ணாவின் பலமான சிபாரிசு சிவாஜிக்குதான் இருந்தது. எனவே, ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிவாஜி.

பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராகிப் புகழ்பெற்ற பின்பு, பலமுறை விழுப்புரம் வந்திருக்கிறார். நான் அங்கே பள்ளியிலும், கல்லூரியிலும் படித்துக்கொண்டு இருந்த காலங்களில் கூட வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அங்கே அவர் பேசும்போது, “நான் பிறந்த பொன்னாடான விழுப்புரம் நகரத்துப் பெருமக்களே!” என்றுதான் நெகிழ்ச்சியாகத் தன் பேச்சைத் தொடங்குவார்.

ஒருமுறை, விழுப்புரம் நகரசபையில் சிவாஜிக்குப் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். அப்போது அங்கே சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள். அது ஒன்றும் விலை உயர்ந்த பரிசு அல்ல. ஆனாலும், அதை வாங்கிக் கொண்டபோது சிலிர்த்துப் போய்விட்டார் சிவாஜி. அதைப் பரிசாகக் கொடுத்த நகர சபையினருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வார்த்தை வராமல் நெகிழ்ந்துவிட்டார்.

அப்படி என்ன பரிசு அது? வேறொன்றுமில்லை. சிவாஜி விழுப்புரத்தில் பிறந்த சமயத்தில், அது சம்பந்தமாக நகரசபை அலுவலகத்தில் எழுதப்பட்ட ஜனனக் குறிப்புதான் அது. அந்த விவரங்கள் அடங்கிய ஜனனக் குறிப்பை அப்படியே எடுத்து ஃபிரேம் செய்து கொடுத்திருந்தார்கள்.

விழுப்புரத்தில் சிவாஜி பிறந்தது எந்தத் தெருவில் தெரியுமா? பெருமாள் கோயில் தெருவில்!

*****
உங்கள் இலக்கும் லட்சியமும் பெரிதாக இருந்தால், சின்னச் சின்ன தோல்விகள் உங்களைச் சோர்வடையச் செய்யாது!

சிம்மக்குரலோன் சிவாஜி!

க்டோபர் 1 என்றதும், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சட்டென்று நினைவில் எழும் பெயர் ‘சிவாஜி கணேசன்’.

எனக்கு நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் ‘சரஸ்வதி சபதம்’. என் அப்பா சிவாஜி ரசிகர் என்பதால், நாங்கள் ரொம்பக் காலம் வேறு எந்த நடிகருடைய படங்களையும் பார்த்ததே இல்லை. பார்த்தால் சிவாஜி படம்; இல்லாவிட்டால் இல்லை. இதனால், இயல்பிலேயே நான் சிவாஜி ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அதாவது, சிவாஜியின் நடிப்புத் திறமை என்ன, பெருமைகள் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியாமலேயே சிவாஜி ரசிகனாக ஆகிவிட்டேன். அதில் சொல்லத் தெரியாத ஒரு பெருமையும் கர்வமும்கூட இருந்தது அப்போது.

பிறகு, விழுப்புரத்தில் என் மாமா வீட்டில் தனியே தங்கிப் படிக்கும்போதுதான், அதாவது நான் பத்தாம் வகுப்பு படிக்கையில்தான் தனியாக சினிமாவுக்குச் செல்லத் தொடங்கினேன். அப்போதும் சிவாஜி படங்கள்தான். ஆனால், கூடவே ஜெய்சங்கர் படங்களும் பார்க்க ஆரம்பித்தேன். சி.ஐ.டி. சங்கர், கங்கா, எங்க பாட்டன் சொத்து, துணிவே துணை போன்ற படங்களையெல்லாம் பார்த்தது அப்போதுதான்.

‘தங்கைக்காக’, ‘தங்கப் பதக்கம்’, ‘மனிதரில் மாணிக்கம்’, ‘என் தம்பி’, ‘அன்னை இல்லம்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘ரோஜாவின் ராஜா’, ‘பாரத விலாஸ்’, ‘உத்தமன்’, ‘எங்கள் தங்க ராஜா’, ‘ராஜா’, ‘பாபு’, ‘வியட்நாம் வீடு’, ‘ஞான ஒளி’, ‘வசந்தமாளிகை’, ‘சிவகாமியின் செல்வன்’ என நான் தனியாகப் பார்த்து ரசித்த சிவாஜி படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்போதெல்லாம் சிவாஜியின் நடிப்புத் திறமை எனக்குப் புரிபடத் தொடங்கிவிட்டது. நான் அதிகம் ரசித்தது ‘ராஜபார்ட் ரங்கதுரை’, மற்றும் ‘கௌரவம்’ ஆகிய இரண்டு படங்களை.

எந்தப் படத்தையுமே நான் இரண்டாவது தடவை பார்த்தது கிடையாது. சிவாஜியின் மிக நல்ல படங்களைக்கூட இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே - அதுவும், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு - பார்த்திருக்கிறேன். ஆனால், ராஜபார்ட் ரங்கதுரை மற்றும் கௌரவம் ஆகிய இரண்டு படங்களையும் 25 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். கால இடைவெளியிலும், அடுத்தடுத்த நாளிலுமேகூட! (இந்த இரண்டு படங்களுக்கு அடுத்தபடியாக நான் அதிகம் முறை பார்த்து ரசித்தது ‘ரத்தக் கண்ணீர்’. சுமார் 15 தடவை!)

அப்போதெல்லாம் சிவாஜி ரசிகர்களுக்கும், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் தனித்தனியாகப் பத்திரிகைகள் இருந்தன. சிவாஜி பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரைக் கேலி செய்து எழுதியிருப்பார்கள்; எம்.ஜி.ஆர். பத்திரிகையில் சிவாஜியைக் கேலி செய்து எழுதியிருப்பார்கள். படிக்கப் படிக்க ஆத்திரமாக வரும். சிவாஜியைக் கஞ்சன் என்றும், எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டார் என்றும் என்னென்னவோ எழுதியிருப்பார்கள். அதைப் படிக்கும்போது வேதனையாக இருக்கும். அடுத்து வெளியாகும் சிவாஜி பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரை மோசமாகத் திட்டி எழுதியிருப்பார்கள். ‘அப்படிப் போடு’ என்று பழி தீர்த்துக் கொண்ட சந்தோஷம் கிடைக்கும்.

மன முதிர்ச்சி இல்லாத வயது அது. உண்மையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் எத்தனை நட்பாகவும் பாசத்துடனும் இருந்தார்கள் என்பது வளர வளரத்தான் புரிந்தது. ரசிகர்களை உசுப்பேற்றிப் பத்திரிகைகளை விற்றுக் காசு பார்க்கும் உத்தி அது என்பது பின்னாளில்தான் தெரிந்தது.

சிவாஜி கஞ்சன் என்பதற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஓர் உதாரணம் சொல்வதுண்டு. சிவாஜியின் கார் டிரைவரோ யாரோ, தன் மகள் கல்யாணத்தை நிச்சயம் செய்துவிட்டுப் பத்திரிகையை சிவாஜியிடம் கொடுத்தபோது, அவர் நூறு ரூபாய் அன்பளிப்பு கொடுத்தாராம். அந்த டிரைவர் நொந்து போய், “என்னங்கய்யா! உங்க மகன் பிரபுவே ஆயிரம் ரூபாய் கொடுத்துச்சுங்களே!” என்று சொல்லவும், “அவனுக்கென்னப்பா! கொடுப்பான். அவங்கப்பன் பணக்காரன்; எங்கப்பன் ஏழையாச்சே!” என்றாராம் சிவாஜி. இப்படியாக, உண்மையோ பொய்யோ, பல கதைகளைக் கேட்டுக் கேட்டு, நிஜமாகவே சிவாஜி கஞ்சன்தானோ என்று உள்ளூர எனக்கே ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால், சமீபத்தில் விகடனின் பொக்கிஷம் பகுதிக்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி!

1959-ம் ஆண்டு, அன்றைய கால கட்டத்திலேயே, வேறு எந்த நடிகருமே கொடுக்காத அளவில், மிக அதிகமான தொகையாக ஒரு லட்சம் ரூபாயை ஏழைப் பள்ளி மாணவர்களின் இலவச உதவித் திட்டத்துக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார் சிவாஜி. அதை ஆனந்த விகடன் அன்றைக்கே மிகவும் சிலாகித்துத் தலையங்கமே தீட்டியிருக்கிறது.

12.4.1959 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான அந்தத் தலையங்கத்தை சமீபத்தில் ஜூலையில் சிவாஜி நினைவு நாளின்போது விகடன் பொக்கிஷம் பகுதியில் மறுபிரசுரம் செய்திருந்தோம்.

அந்தத் தலையங்கத்தை அப்போது படிக்காதவர்களுக்காக இங்கே...

நடிகர் திலகத்தின் நன்கொடை!

ண்டைத் தமிழ்நாட்டிலே அரசர்களும் பிரபுக்களும் கலைஞர்களுக்கு வாரி வழங்குவதுதான் வழக்கமாக இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. மக்கள் மன்னர்களாக மாறிவிட்டனர்! அதனால், கலைஞர்கள் வள்ளல்களாக மாற முடிந்திருக்கிறது.

சென்ற வாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நகரத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவளிக்கும் திட்டத்துக்கு இதுவரை யாருமே கொடுத்தறியாத பெருந்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்துள்ளார். கட்டபொம்மன் நாடகத்தின் நூறாவது தின விழாக் கொண்டாட்டத்தை ஒட்டி, இந்த நூறாயிரம் ரூபாய் இப் பெரும் பணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய செயலைக் கண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆன்மா ஆனந்தமடைகிறது.

தமிழ்நாட்டில் இத்தகைய ஈகையுள்ளம் படைத்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது நமது பாரதப் பிரதமருக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது முதன்மந்திரி, சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்யவிருக்கும் பிரதம மந்திரி நேருஜி கையாலேயே அதை நகரசபைக்கு அளிக்கவேண்டும் என்று யோசனை கூறினார்.

நல்ல காரியங்களுக்கு உதவி புரிவதில் எப்போதுமே முன்னணியில் நின்று வருகிறார்கள் நம் தமிழ்நாட்டு நட்சத்திரங்கள். புயலடித்தாலும், வெள்ளம் வந்தாலும் அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்துவிடும். ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் அரிய லட்சியத்துக்கு லட்சம் ரூபாய் கொடுத்த சிவாஜி கணேசன் அவர்களைக் குழந்தைகள் கொண்டாடும்; தெய்வம் வாழ்த்தும்; தமிழ்த் தாய் பெருமைப்படுவாள்!

***

சிம்மக்குரலோன் பிறந்த ஊரில் (விழுப்புரம்) வளர்ந்தவன்; அவர் வளர்ந்த ஊரில் (சென்னை) பிறந்தவன் என்கிற முறையில் பெருமிதத்தோடு இந்தப் பதிவை முடிக்கிறேன்.

*****
திறமை குறைந்தவன் பிறரை மிஞ்ச நினைப்பான்; திறமை மிகுந்தவன் தன்னையே மிஞ்ச நினைப்பான்!