அனும்மா

னுராதா ரமணன் மறைந்துவிட்டார் என்று கேள்விப் பட்டபோது நம்பவே முடியவில்லை. மலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களுக்கும் மேலாக இருந்திருக்கிறார். வேறு யாராவதாக இருந்தால், 'அடடா! இறந்துவிட்டாரா... பாவம், நல்ல மனிதர்!' என்று மாளாத வருத்தத்தோடு, அவரது மரணத்தை அங்கீகரித்திருப்போம். ஆனால், மருத்துவமனைக்குப் போய் வருவதையே ஏதோ உல்லாசப் பயணம் சென்று வருவதைப்போல உற்சாகமும் மகிழ்ச்சியுமாகப் பகிர்ந்துகொள்கிறவர் ஆயிற்றே அனுராதா ரமணன்!

எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் எழுதிப் புகழ்பெற்று இருந்தாலும், தன்னை மிகப் பரவலான அளவில் வெளிச்சமிட்டுக் காட்டியது, ஆனந்த விகடனில் வெளியான 'சிறை' சிறுகதைதான் என்று நன்றியோடு நினைவுகூர்வார் அனுராதா ரமணன். அது பின்னர் திரைப்படமாகவும் வெளியாகி, வெற்றிகரமாக ஓடியது.

கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு; இரு வாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் என ஏராளமான நாவல்களை எழுதியுள்ளவர் அனுராதா ரமணன். இவற்றில் பல திரைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன. பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் என இவரது கதைகள் மெகா சீரியல்களாகவும் வெளியாகியுள்ளன. 'ஒக பார்ய கதா' என்கிற இவரது தெலுங்குத் திரைப்படம், ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றது. 'நாவல்களின் ராணி' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருந்தபோதிலும், தான் பெரிய எழுத்தாளர் என்கிற கர்வமோ, பந்தாவோ அவரின் பேச்சில் துளியும் தொனிக்காது. நட்பு வட்டாரத்துக்கு அவர் எப்போதும் 'அனும்மா'.

ஓவியத்தில் நாட்டமும், நல்ல தேர்ச்சியும் உள்ளவர் அனுராதா ரமணன். சமீபத்தில் அவர் வரைந்த பெருமாள் படம், அவர் வீட்டுச் சுவரில் தரிசனம் தருகிறது. சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்து திறம்பட நடத்தியுள்ளார். சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. டிசம்பர் சீஸனின்போது, காமேஸ்வரி அய்யர் என்கிற பெயரில், விகடனில் சங்கீத விமர்சனக் கட்டுரைகள் எழுதியதும் இவர்தான்.

மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் பலர் இவரைத் தேடி வந்து, தங்கள் மனக் குறைகளைச் சொல்லி அழுவார்கள். அவர்களைத் தேற்றி, தைரியம் கொடுத்து, உற்சாகப்படுத்தி அனுப்பும் பணியையும் செய்துவந்தார். பலரின் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வழிகாட்டி உதவிய அனுராதா ரமணனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. அதில் பல வேதனைகளைச் சந்தித்தார். உடல் உபாதைகளும் ஏராளம். இதய நோய், சிறுநீரக நோய், ரத்த அழுத்தம், டயாபடீஸ், பக்கவாதம் என இவரைத் தாக்காத நோய்களே இல்லை. ஆனால், அத்தனைக்கும் ஈடுகொடுத்து, எழுத்துப் பணியையும் தொடர்ந்துகொண்டு, கடைசி வரையில் கலகலவென்று சிரித்துப் பேசிக்கொண்டு, நர்ஸ்களிடம் ஜோக் அடித்துச் சிரித்துக்கொண்டு இருந்த பெண்மணி. கலங்கிய தன் மூத்த மகளைத் தட்டிக்கொடுத்துப் புன்னகைத்தபடியே அனுராதா ரமணன் பேசிய கடைசி வார்த்தைகள்... ''தைரியமா இரு! பி பாஸிட்டிவ்!''

தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வந்த அவர், இறந்த பிறகும் தன் கண்களைத் தானமாக வழங்கி, இருவருக்கு ஒளியூட்டியிருக்கிறார். தன் மருத்துவமனை அனுபவத்தைச் சிரிக்கச் சிரிக்க எழுதிய அனும்மாவின் ஆன்மா, இந்தக் கடைசி அனுபவத்தையும் எப்படி நகைச்சுவையோடு எழுதலாம் என்றுதான் இப்போது யோசித்துக்கொண்டு இருக்கும்!

(ஆனந்த விகடன் 26.5.10 இதழில் வெளியான கட்டுரை.)

அனும்மாவிடம் ஒரு கேள்வி!

ன் பெரியப்பாவின் மரணத்துக்காக பெங்களூர் சென்றுவிட்டுச் சென்னை திரும்புவதற்காக பெங்களூர் கன்டோன்மென்ட் ஸ்டேஷனில் காத்திருந்த சமயத்தில், நண்பர் ராஜாவிடமிருந்து வந்த தொலைபேசிச் செய்தி என்னைத் தூக்கிவாரிப் போடச் செய்தது.

“அனுராதா ரமணன் இறந்துவிட்டார்..!”

என்னால் நம்ப முடியவில்லை. அவர் மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று தெரியும். ஆனால், மருத்துவமனைகளுக்குப் போய் வருவது அவருக்கு ஊட்டி, கொடைக்கானல் போய் வருவது மாதிரிதானே! எனவே, அதை ஒரு பெரிய விஷயமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒவ்வொரு முறையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குணமாகி வீடு திரும்பியதும் எனக்குப் போன் செய்வார். தமது உடல் உபாதைகளையும், எடுத்துக்கொண்ட சிகிச்சைகளையும், மருத்துவமனை அனுபவங்களையும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்வார். கேட்கும்போதே பகீர் என்றிருக்கும். அதே சமயம், அதைப் பற்றிய அனுராதா ரமணனின் வர்ணிப்பு என்னைச் சிரிக்கத் தூண்டும். சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில், “என்னங்க... கேட்கவே பயங்கரமா இருக்கே! இதை இப்படித் தமாஷா சொல்றீங்களே?” என்றால், அதற்கும் கலகலவென்று சிரிப்பார் அனுராதா ரமணன். “அவ்ளோதான் ரவி, வாழ்க்கை! பயந்து உட்கார்ந்துட்டிருந்தா மட்டும் சனியன் நம்மை விட்டுப் போயிடுமா சொல்லுங்க?” என்பார்.

தான் பெரிய எழுத்தாளர் என்கிற பந்தாவோ, கர்வமோ சிறிதும் இல்லாதவர் அனு. திடீரென்று போன் செய்வார். “பிஸியா இருக்கீங்களா ரவி? ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்லை. சும்மா பண்ணணும்னு தோணித்து. வேணா அப்புறமா போன் பண்றேன்” என்பார். “ஒரு பிஸியும் இல்லை. சொல்லுங்க” என்பேன். அதற்கடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல், தன் மகள்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தது பற்றியோ, தன் பேரக் குழந்தைகளின் சுட்டித்தனங்களைப் பற்றியோ, தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்ற அனுபவம் பற்றியோ, ஜெயேந்திரர் பற்றியோ, வீட்டில் அடை செய்தது பற்றியோ, தஞ்சாவூரில் ரங்கோலிக் கோலப் போட்டியைப் பார்வையிடச் சென்றிருந்தது பற்றியோ, ஷாப்பிங் போய் புடவைகள் வாங்கிய அனுபவம் பற்றியோ, சுற்றுலாப் பொருட்காட்சிக்குப் போய் வந்தது பற்றியோ, ஒரே நாளில் நாலைந்து கச்சேரிகளை அட்டெண்ட் செய்த சாமர்த்தியம் பற்றியோ, கவுன்சலிங்குக்கு வந்த ஒரு பெண் சொன்ன உருக்கமான கதை பற்றியோ, தன் தாத்தா பற்றியோ, (அனுராதா ரமணனின் தாத்தா ஆர்.பாலசுப்பிரமணியன் அந்தக் காலத் திரைப் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். பெரிய மீசையும், ஆகிருதியான உடம்புமாக பீமசேனன் போல இருப்பார் என்று அனுராதா அவரைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்), வீட்டில் மணித்தக்காளி வத்தக் குழம்பு செய்தது பற்றியோ, தனது சின்ன வயது அனுபவங்கள் பற்றியோ... சகலமான விஷயங்களைப் பற்றியும் கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். ரொம்ப வெகுளியான மனுஷி. இன்னாரிடம் இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்பதே தெரியாமல் சகலத்தையும் ஓட்டை வாயாக இப்படிக் கொட்டிவிடுகிறாரே என்று நான் நினைப்பதுண்டு. ஒருவேளை, தன் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் மட்டும் அவர் பேசும் விதமே இப்படித்தானோ என்னவோ!

என் தந்தையாரும், தாயாரும் அனுராதா ரமணனின் எழுத்துக்குப் பரம ரசிகர்கள். இதை அனுராதாவிடம் ஒரு முறை பேச்சுவாக்கில் சொன்னபோது, மற்ற பெரிய எழுத்தாளர்கள் போன்று கெத்தாக, ‘அப்படியா! நைஸ்!’ என்றெல்லாம் பந்தாவாகச் சொல்லாமல், தன் மகிழ்ச்சியை வெள்ளந்தியாக வெளிப்படுத்தினார். அவரது சிறுகதைகள் அனைத்தும் மூன்று கனமான தொகுதிகளாக வந்திருந்தன. அந்த மூன்று புத்தகங்களையும் என் பெற்றோருக்குப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். அவை வந்த ஓரிரு மாதங்களுக்குள், அவற்றில் இருந்த மொத்தச் சிறுகதைகளையும் படித்துவிட்டார்கள் என் பெற்றோர்.

போன வருட நவம்பரில், ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருந்த ’நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு’ வரிசையில் வெளியிடுவதற்காக இவரிடம் ஒரு கதை கேட்டேன். அப்போது, இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகச் சிறந்த எழுத்தாளர், ‘நாவல்களின் ராணி’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்தவர், (இவரது பல நாவல்கள் திரைப்படமாகியுள்ளன; பல கதைகள் தொலைக்காட்சி மெகா சீரியல்கள் ஆகியுள்ளன). ஆனாலும், அந்தக் கர்வம் சிறிதும் தலைக்கு ஏறாமல், இப்போதுதான் அறிமுகமான புதிய எழுத்தாளர் போல மகிழ்ந்து, “அப்படியா! என் சிறுகதையா! நீங்க கேட்டதே எனக்குச் சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா எழுதித் தரேன், ரவி” என்றார். அடுத்த மூன்றே நாட்களில் அற்புதமான ஒரு சிறுகதையை எழுதித் தந்தார். அது ’இரவல் தொட்டில்’ என்னும் தலைப்பில், 18.11.09 தேதியிட்ட விகடன் இதழில் வெளியாயிற்று.

நேற்று எழுதத் தொடங்கிய புது எழுத்தாளருக்கும், தன் கதையைப் பத்திரிகையாளர்கள் சுருக்கினால், மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். சிலர், “எவ்வளவு குறைக்கணும்னு சொல்லுங்க. நானே குறைச்சுத் தரேன்” என்பார்கள். அது எழுத்தாளரின் உரிமை என்கின்ற போதிலும், ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்கு இது கடுப்பாக இருக்கும். “இங்கே வேலை செய்யறவங்க எல்லாம் என்ன சும்பனா? எங்கே எடிட் பண்ணிக் குறைக்கணும்னு கூடத் தெரியாமயா வந்து வேலை செய்துட்டிருக்கோம்?” என்று மனசில் வெறுப்பு மூளும். அனுராதா ரமணனைப் பொறுத்தமட்டில், அவரது கதையை எத்தனைச் சுருக்கினாலும் கோபப்படவே மாட்டார். சொல்லப்போனால், “நானே புதுசா ஒரு வாசகியா படிக்கிறப்போ, க்ரிஸ்ப்பா இருந்துது ரவி! எனக்கு வாய் மட்டுமில்லே, கையும் கொஞ்சம் நீளம். வளவளன்னு எழுதிக்கிட்டே போயிடுவேன். எழுத்துக்கு லகான் போடத் தெரியாது. நீங்க கரெக்டா எடிட் பண்ணி, வேண்டாத குப்பையெல்லாம் தூக்கியிருந்தீங்க. தேங்க்ஸ்!” என்று பாராட்டவும் செய்வார். “நானே ஒரு சில பத்திரிகைகளுக்கு ஆசிரியரா இருந்திருக்கேன்கிறதால, ஒரு பத்திரிகை ஆசிரியருடைய பொறுப்பு பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” என்பார்.

என் வலைப்பூக்களைத் தொடர்ந்து படித்துத் தன் அபிப்ராயங்களைச் சொல்வார். சில மாதங்களுக்கு முன் சில நல்ல வலைப்பூக்களைத் தனக்கு அறிமுகப் படுத்தும்படி கேட்டிருந்தார். நான் அதிகம் படிக்கும் ஏழெட்டு வலைப்பூக்களின் லின்க்கை அவருக்கு இ-மெயிலில் அனுப்பியிருந்தேன். கூடவே, “நீங்களே ஒரு பிளாக் தொடங்கி எழுதலாமே?” என்றேன். உடனே, பிளாக் ஆரம்பிப்பது எப்படி, அதற்கு ஏதாவது பணம் கட்ட வேண்டுமா என்று எல்லாவற்றையும் விசாரித்தார். “உங்க பிளாக் டிஸைன் நல்லாருக்கு ரவி” என்றார். “எனக்கு எதுவும் தெரியாது மேடம்! எல்லாம் என் பசங்க பண்ற வேலை. நான் வெறுமனே கம்போஸ் பண்ணி, போஸ்ட் பண்றதோட சரி! என் பையனையும் பெண்ணையும் உங்க வீட்டுக்கு ஒரு நாள் அழைச்சுட்டு வரேன். உங்க விருப்பப்படியே ஒரு பிளாக் ஆரம்பிச்சுக் கொடுக்கச் சொல்றேன்” என்றேன். “முதல்ல எழுத்துக்களைக் கம்போஸ் பண்ணி, எப்படி ஸேவ் பண்றதுன்னு கத்துக்கறேன். அப்புறம் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க” என்றார்.

சென்ற ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, என் மாமியார் இறந்த சில மணி நேரத்துக்குள், அனுராதா ரமணன் வழக்கம்போல் எனக்கு போன் செய்திருந்தார். கலகலப்பாக ஏதோ பேசத் தொடங்கிய அவர் பேச்சில் குறுக்கிட விரும்பாமல், மாமியார் இறந்த செய்தியைக் கடைசியில் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போல் பேசியிருப்பார். முடிக்கப்போகிற நேரத்தில் என் செல்போனில் சார்ஜ் தீர்ந்துபோய் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதை அத்தோடு மறந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து, மீண்டும் அனுராதா ரமணனிடமிருந்து போன். “என்ன ரவி, உங்க மாமியார் இறந்துட்டாங்களா? உங்க பிளாகைப் படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் அன்னிக்குப் பார்த்து வளவளன்னு என் சுய புராணத்தை அத்தனை நேரம் சொல்லிட்டிருந்தேனே... நீங்களாவது குறுக்கிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கக்கூடாதா? எனக்கு ரொம்ப கில்ட்டியா இருந்துது” என்று ஆதங்கப்பட்டார். “இல்லை மேடம்! நீங்க பேசும்போது எனக்குக் குறுக்கிடத் தோணலை. முடிக்கும்போது சொல்லிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள கட்டாயிடுச்சு!” என்றேன். அதன்பிறகு அவர் என் மனைவியிடம் செல்போனைக் கொடுக்கச் சொல்லி, ஒரு தாய் போன்று அத்தனைக் கரிசனமாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக்கொண்டு இருந்தார்.

சமையல் செய்வதில் அனுராதா ரமணன் எக்ஸ்பர்ட்! தனக்கு நெருக்கமான நண்பர்களையெல்லாம் ஒரு கெட்-டு-கெதர் போல அடிக்கடி தன் வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்குத் தன் கையால் சமைத்து, உணவு பரிமாறி மகிழ்வதில் அத்தனை ஆனந்தம் அவருக்கு. நவராத்திரி, புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் என்னைக் குடும்பத்தோடு தன் வீட்டுக்கு விருந்துண்ண வரும்படி அன்போடு அழைப்பார். “ஒருநாள் கண்டிப்பாக வருகிறேன், மேடம்!” என்று நானும் சொல்லிக்கொண்டு இருந்தேன். போன மாதமும் அவர் அப்படி அழைத்தார்.

சாவி சாரும் இப்படித்தான் எங்களை விருந்துக்கு அழைத்துக்கொண்டே இருந்தார். நானும் வரேன் சார், வரேன் சார் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது சார், “ஒரு நாள் போகலாம், ஒரு நாள் போகலாம்னு நினைச்சுக்கிட்டிருந்தா ஒருநாளும் போக முடியாது ரவி. என்னிக்குன்னு ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அப்பத்தான் உனக்குப் போகணும்னு தோணும்” என்று சொல்லி, சாவி சாரே ஒரு தேதியைக் குறிப்பிட்டு, ”அன்னிக்கு வரியா?” என்று கேட்டார். “சரி சார்” என்று ஒப்புக்கொண்டு, அன்றைக்குக் குடும்பத்தோடு அவர் வீட்டுக்குப் போனேன். எங்களை அழைத்துக்கொண்டு ஒரு ஸ்டார் ஓட்டலுக்குச் சென்றார். பலமான விருந்து அளித்தார். பின்னர் அவர் காரிலேயே அவர் வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர் என் குழந்தைகளுக்கு நிறைய ஃபாரின் சாக்லெட்டுகளையும், விளையாட்டுப் பொருள்களையும் பரிசளித்தார். தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைக் கழற்றி “என் ஞாபகார்த்தமா வெச்சுக்கோ” என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். நாங்கள் பேசிக்கொண்டு இருக்க, என் குழந்தைகள் அவர் வீட்டு கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தன. மாலை 3 மணியளவில் அவர் காரிலேயே பீச்சுக்குப் போனோம். ஒரு மணி நேரம் போல் அங்கிருந்துவிட்டுப் பின்னர் அவர் வீட்டுக்கு வந்தோம். பின்பு எங்களைத் தன் காரிலேயே எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதை அனுராதா ரமணனிடம் சொல்லி, “அது போல் நாம ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணிப்போம் மேடம்! அப்பத்தான் எனக்கும் வரத் தோணும்” என்றேன். அதற்குள் என் மனைவிக்கு அறுவைச் சிகிச்சை அது இது என்று நாட்கள் ஓடிவிட்டன. கடைசி வரைக்கும் அனுராதா ரமணன் கையால் அன்போடு பரிமாறி, சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை எங்களுக்கு.

எப்போதும் முழு மேக்கப்பில் காணப்படுவார் அனுராதா ரமணன். நாம் உற்சாகமாக இருக்கிறோம் என்பதைப் பிறருக்கு வெளிப்படுத்துவது மட்டுமின்றி, எதிராளியையும் உற்சாகப்படுத்துகிற மந்திரம் இந்த மேக்கப்தான் என்பது அவரது நம்பிக்கை. இறந்த பின்னரும் அதே போல அழுத்தமான உதட்டுச் சாயம், கண் மை, நெற்றித் திலகம், வகிட்டுக் குங்குமம் என முழுமையான மேக்கப்பில், கண்ணாடிப் பெட்டிக்குள் அனுராதா ரமணன் படுத்திருந்ததைப் பார்த்தபோது, சும்மா கண் மூடிப் படுத்து ஓய்வு எடுக்கிறவர் போன்றுதான் இருந்ததே தவிர, அவர் இப்போது நம்மிடையே இல்லை என்றே நம்ப முடியவில்லை.

தன் உடலைக் கண்டு யாரும் முகம் சுளிக்கக்கூடாது என்பதற்காகவே அனுராதா ரமணன், தான் இறந்த பின்பு தன் முகத்துக்கு மேக்கப் போடவேண்டும் என்பதைத் தனது கடைசி விருப்பமாகச் சொல்லியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

மறைந்த அனுராதா ரமணன் பற்றி விகடனுக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தார் இணையாசிரியர் திரு.கண்ணன். கனத்த நெஞ்சோடு எழுதித் தந்துள்ளேன். மேலே சொன்ன பர்சனல் சம்பவங்கள் எதுவும் அற்ற, நினைவாஞ்சலி அது!

மேற்படி விகடன் இதழ் வெளியான பிறகு, ‘அனும்மா’ என்ற தலைப்பில் நான் எழுதித் தந்த அந்த நினைவுக் கட்டுரையை இதே வலைப்பூவில் பதிவிடுகிறேன்.

அதிருக்கட்டும்... அனும்மாவிடம் ஒரு கேள்வி!

அனும்மா! போனை எடுத்தா சளைக்காம எல்லாத்தையும் வெளிப்படையா, நேரம் போறது தெரியாம கலகலப்பா பேசிட்டே இருப்பீங்களே அனும்மா! நீங்க பிரியா விடை பெறப் போறீங்கன்றதை மட்டும் சஸ்பென்ஸா வெச்சிருந்து, ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலே போயிட்டீங்களே, ஏன் அனும்மா? சாப்பிட வரேன், சாப்பிட வரேன்னு சொல்லிக் கடைசி வரைக்கும் உங்க வீட்டுக்கு வராமலே இருந்துட்டேனே, அந்தக் கோபமா அனும்மா?

***

உங்கள் வார்த்தை, உங்கள் வேலை, உங்கள் நண்பர் - மூவரிடமும் உண்மையாக இருங்கள்!

எம்மதமும் சம்மதம்!

ன்றைப் பற்றியே தீவிரமாக நினைத்துக்கொண்டு இருந்தால், அடுத்தடுத்து அதே போன்ற விஷயங்களே நம் கண்ணில் படும் என்பது பலமுறை எனக்கு நிகழ்ந்திருக்கிறது. அதே போல், என் வீட்டு உரிமையாளர் பெரியவர் முகம்மது இஸ்மாயீலின் கருணை உள்ளத்தை நினைவுகூர்ந்து இரண்டு பதிவுகள் எழுதிய பின்னர், விகடன் அலுவலகத்தில் அமர்ந்து, ‘பொக்கிஷம்’ பகுதிக்காக 1970-ம் ஆண்டு விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, ‘எம்மதமும் சம்மதம்’ என்கிற ஒரு பக்க மேட்டர் கண்ணில் பட்டது.

அதைக் கீழே தந்திருக்கிறேன்.
எம்மதமும் சம்மதம்

நாகப்பட்டினம் நகரின் எல்லையில் ஓர் அழகான உயர்ந்த வளைவு நம்மை வரவேற்கிறது. அவ்வளைவில் மசூதி, கோபுரம், மாதா கோயில் இவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்ற்ன. நம் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. ஆம், தஞ்சை மாவட்டத்தில் நிலவும் மத வேறுபாடின்மைக்குக் கட்டியம் கூறி நிற்கிறது அவ்வளைவு.

உயர்ந்து கம்பீரமாக நிற்கும் கோபுரக் கூண்டு. விசிறிப் பறக்கும் புறாக் கூட்டம். பளபளவென மின்னும் பளிங்குத் தரை. எங்கும் சுகந்தமாய் பரவி நிற்கும் சாம்பிராணிப் புகை. நாகூர் தர்காவின் அமைதியான சூழ்நிலை. பக்திப் பரவசத்துடன் நுழைகிறோம். ஓர் அறிவிப்பு நம் கண்ணில் படுகிறது: ‘ இந்தச் சலவைக்கல் மஹால் ஸ்ரீபழனியாண்டிப் பிள்ளை உபயம்’.

முஸ்லிம் கோயில் என்று சொல்லப்படும் தர்காவில், இந்து என்று பிரிக்கப்படும் ஒருவர் தர்ம கைங்கர்யம் செய்திருக்கிறார்! நாள்தோறும் தர்கா வாசலில் கூடும் மக்களைக் கண்டு நாம் அதிசயப்படுகிறோம். இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம் அனைவருமே வந்து தொழுகிறார்கள்.

சாதாரணமாக இந்துக் கோயில்களில் பழக்கத்தில் இருக்கும் ‘முடி இறக்கும் பிரார்த்தனை’ நாகூர் தர்காவில் இருக்கிறது.
வேளாங்கண்ணி மாதாவும் சர்வ மதத்தினரின் வழிபாட்டுக்குரிய தெய்வமாக நின்று, அருள்மழை பொழிந்துகொண்டு இருக்கிறாள். அங்கு கூடும் இந்து, முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இந்துக் கோயில்களில் பக்தர்கள் நேர்ச்சை செய்வதுபோல் உலோக உருவங்கள் வேளாங்கண்ணி மாதாவுக்குக் காணிக்கையாகத் தரப்படுகின்றன.

தஞ்சை மாரியம்மன் கோயில் பிராகாரத்தில் போய் நிற்கிறோம். நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் நாம் சந்தித்த பக்தர்களில் அநேகர் முஸ்லிம், கிறிஸ்துவ சகோதரர்கள் இங்கு மாரியம்மனைத் தொழுது நிற்கிறார்கள். விசேஷ காலங்களில் எல்லா மதத்தினருமே தேவிக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். முடி இறக்குகிறார்கள்.

மதத் துவேஷம், மதத் துவேஷம் என்று எல்லோரும் பேசுகிறார்களே, அதைக் கோயில்களிலும் காண முடியவில்லை; அங்கு வரும் மக்கள் மனத்திலும் அது இல்லை.

பின்பு, எங்கேதான் இருக்கிறது அது?!

(19-4-1970 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.)

***
நீங்கள் கடவுளின் பரிசு. நீங்கள் எப்படி உருவெடுக்கப் போகிறீர்கள் என்பது கடவுளுக்கு நீங்கள் தரப்போகும் பரிசு!

பல கால பந்தம் இது..!

குறுகிய காலத்தில் மிக அதிக வீடுகளில் குடியேறிய சாதனைக்கு கின்னஸ் ரெக்கார்டில் இடம் இருக்குமானால், தாராளமாக நான் அதற்குத் தகுதி உள்ளவன். ஆறு ஆண்டுகளுக்குள் பன்னிரண்டு வீடுகள் மாறிய கதையை வலைப்பூவில் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் திடீரென்று தற்போது குடியிருக்கும் வீட்டைப் பற்றியும், இதன் உரிமையாளர் முகம்மது இஸ்மாயீல் பற்றியும் எழுத நேர்ந்தது.

நான் அடிக்கடி வீடுகள் மாறியபோது என் சிநேகிதியும், மங்கையர் மலர் பொறுப்பாசிரியருமான திருமதி அனுராதா சேகர் சிரித்துக் கொண்டே, “நீங்க ஒண்ணு ரெண்டு வீடுகள் மாறியிருந்தா, வீட்டுக்காரங்க சரியில்லைன்னு சொல்லலாம். இப்படிப் பத்துப் பன்னிரண்டு வீடுகள் மாறுறீங்கன்னா, நீங்கதான் ரவி, சரியில்லை!” என்றார் கேலியாக.

நான் ஆண்டுக்கொரு வீடு... ஏன், இரண்டு மூன்று முறை ஆறு மாதத்துக்குள்ளாகவே கூட வேறு வீடு மாறியிருக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரத்யேக காரணம் உண்டு. அவற்றை நான் அனுராதா சேகருக்குச் சொல்லவில்லை. அவர் நட்பு ரீதியில் உரிமையோடு கேலி செய்தபோது, அதை ஆமோதிப்பது போல் சிரித்துக்கொண்டே பேசாமல் இருந்துவிட்டேன். ஆனாலும், எப்போதாவது அவற்றை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். விரைவில் எழுதுவேன்.

ஆண்டுக்கொரு முறை வீடு மாறிய நான், இங்கே பெரியவர் முகம்மது இஸ்மாயீல் வீட்டுக்குக் குடி வந்ததிலிருந்து, இடையில் ஒரு மூன்று மாத காலம் நீங்கலாக, தொடர்ந்து இவர் வீட்டிலேயேதான் பன்னிரண்டு ஆண்டுகளாகக் குடியிருக்கிறேன்.

1998-ன் ஆரம்பத்தில் நான் நெசப்பாக்கத்தில் குடியிருந்தேன். அதற்கும் முன்பு அசோக் நகர் CPWD குவார்ட்டர்ஸில் குடியிருந்தேன். அச்சமயம்தான் எங்களுக்குப் பெரியவர் முகம்மது இஸ்மாயீல் குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது மளிகைக் கடையில்தான் மளிகைச் சாமான்கள் வாங்குவோம்.

கடையில் பல சமயம் பெரியவர் இருப்பார்; அவரது மகன்கள் இருவரும் மாறி மாறிக் கவனித்துக் கொள்வார்கள். அவர்களின் அம்மாவும் சில சமயம் உட்கார்ந்திருப்பார். மருமகள்களும் சில வேளைகளில் இருப்பதுண்டு. பெரியவரின் மருமகப் பிள்ளையும் சில சமயம் அங்கே இருப்பார். இப்படி, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் எங்களுக்குப் பழக்கம் உண்டானது.

தொடர்ந்து அவரது கடையிலேயே மளிகைச் சாமான்கள் வாங்கி வந்தோம். திடீரென்று குவார்ட்டர்ஸை உடனடியாகக் காலி செய்துவிட்டு வேறு வீடு குடி போக வேண்டிய கட்டாயம். நெசப்பாக்கத்தில் வீடு பார்த்துக் குடி போய்விட்டோம்.

அங்கேயும் சரி, அருகில் உள்ள கே.கே.நகரிலும் சரி... நிறைய கடைகள் உண்டு. பெரிய பெரிய மளிகைக் கடைகள் உண்டு. ஆனாலும் நாங்கள், பெரியவர் முகம்மது இஸ்மாயீல் கடையில் தொடர்ந்து பொருள்கள் வாங்கிய பழக்கத்தாலும், அவர் குடும்பத்தினரோடு நன்கு பழகிவிட்ட காரணத்தாலும், நெசப்பாக்கம் போன பின்பும் அங்கிருந்து அசோக் நகர் வந்து, அவர் கடையிலேயே தொடர்ந்து மளிகைப் பொருட்கள் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தோம்.

அருகில் இருந்தபோது, மாதக் கணக்கு வைத்துக்கொண்டு மளிகை வாங்கி, முதல் தேதியன்று செட்டில் செய்வது வழக்கம். அவ்வளவு தள்ளிக் குடி போன பிறகு அப்படிக் கணக்கு வைத்துக் கொள்வது சரியாக இருக்காது என்று, வாங்கிய பொருள்களுக்கான தொகையை எடுத்துக் கொடுத்தபோது, “என்ன இது புதுசா... மொத்தமா ஒண்ணாந்தேதி கொடுங்க” என்றார் பெரியவர். “இப்ப நாங்க இங்க இல்லீங்க. நெசப்பாக்கம் போயிட்டோம்” என்றேன். “இருக்கட்டுமே! ஜப்பானுக்கே கூடத்தான் போங்க. அவ்ளோ தூரம் போயும் மறக்காம நம்ம கடையில வந்து சாமான் வாங்கிட்டிருக்கீங்க இல்லே... அப்புறம் என்ன? பணத்தைப் பேசாம எடுத்து உள்ள வைங்க. மொத்தமா சம்பளம் வந்தவுடனே கொடுங்க” என்றார்.

அப்போது நான் டூ-வீலர் வைத்திருந்தேன். அசோக் நகர் வந்து போவது சிரமமாக இல்லை. ஆனால், பின்பு அதை விற்றுவிட்டேன். அசோக் நகர் வரவேண்டுமானால் பஸ் பிடித்துதான் வரவேண்டும். என்றாலும், நானும் என் மனைவியுமாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அசோக் நகர் வந்து, வீட்டுக்கு வேண்டிய சாமான்களை மொத்தமாக வாங்கிச் செல்வோம்.

இதைக் கவனித்துவிட்டுப் பெரியவர் ஒரு நாள், “ஏன் தம்பி, வாராவாரம் இவ்ளோ தூரம் வந்து சிரமப்படணுமா? இதை நீங்க அங்கேயே வாங்கிக்கலாமே? எதுக்கு உங்களுக்கு வீண் அலைச்சல்?” என்றார். “இல்லீங்க... என் பொண்ணு இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் முதல் வகுப்பு படிக்கிறா. பையனையும் எப்படியும் இந்த வருஷம் எல்.கே.ஜி. சேர்க்கணும். இங்கேயே இடம் பார்த்துக் குடி வந்துடலாம்னு இருக்கோம். அப்புறம் எப்படியும் உங்க கடையிலதான் சாமான் வாங்குவோம். இடையில சில மாசங்கள் மட்டும் வேற கடையில வாங்க மனசு ஒப்பலை. அதான்...” என்றேன். அவராகவே, “சரி, நானும் இங்கே அசோக் நகர்ல இடம் ஏதாவது காலியானா சொல்றேன்” என்றார்.

அதன்பின், நாங்கள் அவர் கடைக்கு வரும்போதெல்லாம், “என்ன தம்பி, இடம் ஏதாவது கிடைச்சுதா?” என்று அவர் விசாரிப்பதும், “இடம் ஏதாவது காலியானா சொல்றேன்னீங்களே, ஏதாவது தெரிஞ்சுதுங்களா?” என்று நான் கேட்பதும் வழக்கமாயின.

அடுத்த ஆறு மாதத்தில் நாங்களாகவே ஒரு இடம் பார்த்து, இங்கே அசோக் நகருக்குக் குடி வந்துவிட்டோம். வந்த பின்புதான் விபரீதம் புரிந்தது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போனால் போதும் என்று ஆகிவிட்டது. தீவிரமாக இடம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

சரஸ்வதி பூஜையின்போது, என் மகனை இங்குள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. சேர்த்தேன். வீடும் சரியில்லை; குழந்தைகளின் உடல்நிலையும் கெட்டுப் போனது. இருவருக்கும் தினம் தினம் முகம் முழுக்கக் கட்டிகள் வந்து, உடைந்து, முகம் பூராவும் ரத்தமாகிவிடும். சட்டையில் ஒரு கர்ச்சீப்பைச் சொருகி அனுப்புவோம், பள்ளியில் கட்டி உடைந்து ரத்தம் வழிந்தால் துடைத்துக் கொள்ள! இருவரும் வீடு திரும்பும்போது, கர்ச்சீப் மொத்தமும் ரத்தக் கறையாக இருக்கும்.

இந்த மாதிரிச் சூழ்நிலையில், ஒரு நாள் வழக்கம்போல் பெரியவர் இஸ்மாயீலின் கடைக்கு வந்து சாமான்கள் வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, பெரியவரின் மனைவி எங்களை அழைத்தார். “வீடு பார்த்துட்டீங்களா?” என்றார். “இல்லீங்கம்மா! தேடிக்கிட்டிருக்கோம்” என்றோம். “ஒரு இடம் இருக்கு. உங்களுக்கு சௌகரியப்படுமான்னு தெரியலை” என்றார். “அட்ரஸ் கொடுங்க. போய்ப் பார்க்கிறோம்” என்றோம். “வாங்க” என்று எழுந்தார். பக்கத்தில்தான் எங்காவது இருக்கும்;அவரே எங்களோடு வந்து காண்பிக்கப் போகிறார் என்று கிளம்பினோம். கடைக்குப் பக்கத்திலேயே இருந்த நீண்ட நடையில் நுழைந்து சென்றார் அவர். அவர்களின் வீடு அங்கேதான் இருக்கிறது. செருப்பு மாட்டி வரப் போகிறாரோ என்று நினைத்து நாங்கள் தெருவிலேயே நின்றிருந்தோம். கொஞ்ச தூரம் உள்ளே சென்றவர், திரும்பி எங்களைப் பார்த்து, “உள்ளே வாங்க” என்றார்.

போனோம். கடைக்கு நேர் பின்னால் இருந்த போர்ஷன் அது. ஒரு ஹாலும், சமையலறையுமாக தாராளமான இரண்டு அறைகள். “இதான் அந்த இடம். இங்கே குடியிருக்கிறவங்க, வர ஒண்ணாந்தேதி காலி பண்றாங்க. நாங்க வேற யாருக்கும் இந்த இடத்தை வாடகைக்கு விடறதா இல்லை. மாடியில நாங்க எல்லாருமே ஒண்ணாத்தான் குடியிருக்கோம். இடம் போதலை. அதனால, எங்க சின்ன மகன் குடும்பத்தை இங்கே குடி வைக்கலாம்னு இருந்தோம். நீங்க ரொம்ப நாளா வீடு பார்த்துட்டிருக்கிறது எங்களுக்குத் தெரியும். அய்யாதான் இந்த இடம் உங்களுக்குப் போதுமான்னு கேக்கச் சொன்னாரு” என்றார் அந்த அம்மா.

“தாராளமா போதும். ஆனா...” என்று தயங்கினேன். எனக்கு ஏகப்பட்ட வீடு மாறின அனுபவம் ஒரு பக்கம்; இவர்களோ இடத்தை வாடகைக்கு விடப்போவதில்லை என்ற முடிவிலிருந்து மாறி, எங்களுக்குத் தர முன் வந்திருக்கிற நிலை; இன்னும் ஆறு மாதங்களிலோ ஒரு வருடத்திலோ அவர்களுக்கு மாடியில் இடப் பற்றாக்குறையாகி எங்களை காலி செய்யச் சொல்லிவிட்டால் மறுபடி வீடு தேடி அலைய வேண்டி இருக்குமோ என்கிற கவலை என எல்லாமாகச் சேர்ந்து கொண்டது.

“சொல்லுங்க தம்பி! என்ன தயங்கறீங்க? நீங்க அய்யரு. நாங்க முஸ்லிம். கறி சாப்புடுவோம். இங்கே எப்படி இருக்க முடியும்னு யோசிக்கிறீங்களா?” என்றார் அந்த அம்மா புன்னகையோடு.

“ஐயையோ... அதெல்லாம் இல்லீங்கம்மா! நாங்க வருஷா வருஷம் வீடு மாறி மாறி ஓய்ஞ்சு போயிட்டோம். இனிமே எங்கேயும் இடம் மாறாம, எங்க பசங்க இங்கே ப்ளஸ் டூ படிச்சு முடிக்கிற வரைக்கும் ஒரே இடத்துல குடியிருக்கணும்னு பார்க்கிறோம். நாளைப்பின்ன உங்களுக்கு இடம் தேவைப்பட்டு, காலி பண்ணச் சொல்லிட்டீங்கன்னா என்ன பண்றதுன்னுதான் யோசிச்சேன்...” என்றேன்.

“அதெல்லாம் சொல்ல மாட்டோம். அப்படியே இடம் தேவைப்பட்டாலும், நாங்க வேற ஏற்பாடு பண்ணிக்கிறோம். உங்களுக்கு சௌகரியமானா ஒண்ணாந்தேதி இங்க குடி வரலாம்” என்றார்.

அப்படியே 1998 நவம்பர் முதல் தேதியன்று பெரியவர் முகம்மது இஸ்மாயீல் வீட்டுக்குக் குடி வந்துவிட்டோம். ரூ.1,500 வாடகை; ரூ.15,000 அட்வான்ஸ்.

இத்துடன் முடியவில்லை; இனிமேல்தான் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதையும் சொல்லி முடித்து விடுகிறேன்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், பாங்க் லோன் போட்டு, 2000-வது ஆண்டில் சாலிகிராமத்தில் நான் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். புது ஃப்ளாட் வாங்கின மகிழ்ச்சியை பெரியவர் முகம்மது இஸ்மாயீல் குடும்பத்துக்கு ஸ்வீட் கொடுத்துச் சந்தோஷமாகத் தெரிவித்துவிட்டு, 2000 ஜனவரி முதல் தேதியிலிருந்து எங்கள் சொந்த ஃப்ளாட்டுக்குக் குடி போகிறோம் என்று சொல்லி விடைபெற்றோம்.

அப்போதும் அங்கிருந்து அசோக் நகர் வந்து, பெரியவர் கடையில்தான் சாமான் வாங்கிச் சென்றோம். எங்கள் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட வேன் ஏற்பாடு செய்தேன். வீட்டை அடையாளம் காண்பிப்பதற்காக ஒரு நாள் நானும் அவர்களோடு வேனில் வந்தேன். மாலை நான்கு மணிக்குக் கிளம்பிய வேன் அடுத்ட பத்து நிமிட நேரத்தில் சாலிகிராமம் வீட்டை அடைவதற்குப் பதிலாக, நேர் எதிர்த் திசையில் கிளம்பி, மாம்பலம், ரங்கராஜபுரம், யுனைட்டெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், ட்ரஸ்ட்புரம், நூறடி ரோடு, எம்.எம்.டி.ஏ காலனி என்று சுற்றி வளைத்துக்கொண்டு (காரணம், அங்கங்கே மாணவர்களை வேன் இறக்கிவிட வேண்டியிருந்தது) சாலிகிராமத்தை அடைந்தபோது மணி 6. வேன் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டதில், உடம்பெல்லாம் விண்டு போகிற மாதிரி வலி!

இது சரிப்படாது என்று மறுநாளே வேனை கேன்சல் செய்துவிட்டேன். ரெகுலர் ஆட்டோவுக்கு ஏற்பாடு செய்வதென்று முடிவெடுத்தேன். அதுவரை நானே தினமும் ஒரு ஆட்டோ பிடித்துக் குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு வந்து விட்டு ஆபீஸ் போனேன். மாலையில் சீக்கிரமே கிளம்பி ஏழு மணி போல் அசோக் நகர் வந்து, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேறு ஆட்டோவில் வீடு திரும்பினேன். நான் வரும் வரையில் என் குழந்தைகள் பெரியவர் முகம்மது இஸ்மாயீலின் வீட்டில், அவரின் பேரக் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அவர்களும் அதே பள்ளியில்தான் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். (நடிகர் விவேக்குடன் இருப்பவர்கள் என் இரு குழந்தைகளும், பெரியவர் முகம்மது இஸ்மாயீலின் பேரக் குழந்தைகளும்தான்!)

சீக்கிரமே ரெகுலர் ஆட்டோவுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டேன். காலையில் ஏழு மணிக்கு வந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய்ப் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் ஆட்டோக்காரரே கொண்டு வந்து வீட்டில் விட்டுவிடுவார். இப்படி இரண்டு மாதம் ஓடியிருக்கும். அதற்குள், வடபழனி பஸ் நிலையம் அருகில், குழந்தைகள் சென்ற ஆட்டோ மூன்று முறை விபத்துக்குள்ளாகிவிட்டது. நல்லவேளையாக, எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

‘இனியும் ரிஸ்க் எடுக்கக் கூடாது’ என்று தீர்மானித்து, பெரியவர் இஸ்மாயீலிடம் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டேன். “மறுபடி உங்களைத் தொந்தரவு பண்றேன்னு நினைக்க வேண்டாம். சொந்த ஃப்ளாட்டுக்குக் குடி போனதிலேர்ந்து மனசே சரியில்லீங்க. அதுக்கேத்தாப்ல ஆக்ஸிடெண்ட் வேற ஆயிடுச்சு. இங்கே எங்கேயாவது இடம் இருந்தா சொல்லுங்க. உடனே குடி வந்துடறேன்” என்றேன்.

அப்போது கடையில் பெரியவரோடு அவரது மூத்த மாப்பிள்ளையும் இருந்தார். அவர் உடனே, “வேற எங்கே போகப் போறீங்க? பேசாம இங்கேயே வந்துடுங்க. நீங்க முன்னே குடியிருந்த போர்ஷனுக்கே குடி வந்துடுங்க” என்றார். பெரியவர் இஸ்மாயீல் லேசான தயக்கத்தோடு, “அங்கே இப்போ என் சின்ன மகன் குடும்பம் இருக்குதேப்பா!” என்றார். மாப்பிள்ளை உடனே, “அதனால என்ன... காலி பண்ணிட்டு மாடிக்கே போகச் சொல்லுங்க. ஏற்கெனவே எல்லாரும் ஒண்ணாதானே இருந்தீங்க” என்று தடாலடியாகச் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, “சார்! இன்னும் இருபதே நாள் பொறுத்துக்குங்க. பக்ரீத் வருது. அதுக்கு எல்லாரும் இங்கே கூடுவோம். இடம் தேவைப்படும். அது முடிஞ்சவுடனே, உங்க இடத்தை உங்களுக்கே காலி பண்ணிக் கொடுக்கச் சொல்றேன். நீங்க இங்கேயே வந்துடலாம்” என்றார். ‘உங்க இடத்தை உங்களுக்கே...’ என்னவொரு உரிமை!

என் மனசு நெகிழ்ந்து, கரைந்து போனது. அவருக்குப் பதில் சொல்லக்கூட என்னால் முடியவில்லை. வாயைத் திறந்தால் பேச்சே வரவில்லை. வார்த்தைகள் சிக்கிக் குரல் கரகரத்தது. தலையை மட்டும் அசைத்து, நன்றி கூடச் சொல்லத் தோன்றாமல் கிளம்பி வந்துவிட்டேன். நாளேடுகளில் ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ என்று கூசாமல் குறிப்பிடுவது எத்தனை பெரிய அபவாதம்! இனம், மதங்களைக் கடந்த மாமனிதராக விளங்கும் பெரியவர் இஸ்மாயீல் முன்பு நிற்கையில், அப்படியான அடைமொழிகள் ஓர் இந்துவாக என்னைக் கூசச் செய்கின்றன.

பக்ரீத் முடிந்ததும் (அப்போது 20 தேதி வாக்கில் வந்ததென்று ஞாபகம்), முதல் தேதி வரைக்கும் காத்திருக்காமல் மீண்டும் இங்கேயே குடி வந்துவிட்டோம்.

தாய் மடியைத் தஞ்சம் புகுந்த குழந்தைக்கு இருக்கும் உணர்வே எனக்கு அப்போது உண்டாயிற்று.

அதன்பின் மூன்று மாதங்களில், பக்கத்தில் அவர்களுக்கே சொந்தமான இன்னொரு பெரிய போர்ஷன் காலியாக, அதை எங்களுக்கு ஒதுக்கித் தந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை இங்கேதான் குடியிருக்கிறோம்.

என் குழந்தைகள் இருவரும் காலேஜ் சேரும் வரை இங்கே குடியிருப்போம் என்று பெரியவரிடத்தில் சொன்னேன். ஆனால்... சொல்லமுடியாது, அதற்குப் பிறகும்கூட நாங்கள் தொடர்ந்து இங்கே குடியிருப்போமோ, என்னவோ!

இவர்களை விட்டுப் போக எங்களுக்கும் மனசில்லை; எங்களை காலி செய்யும்படி சொல்ல அவர்களுக்கும் விருப்பம் இல்லை!

***
உன் இதயம் ரோஜா மலராக இருந்தால், உன் பேச்சிலேயே அதன் வாசம் அடிக்கும்!

என் இனிய இஸ்லாமியர்!

னது ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவில், சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி அதிபர் திரு.வரதராஜன், எங்கள் விகடன் குழும ஊழியர்களிடையே உரையாற்றியதை ஐந்து பதிவுகளாகப் பிரித்துப் போட்டிருந்தேன். அதில் கடைசியாகப் போட்ட ‘நெகிழ வைத்த வழக்கு’, இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றி விவரிக்கிறது. அந்த வழக்கு பற்றி விவரிப்பதற்கு முன்பாக திரு.வரதராஜன், “ஒரு முஸ்லிம் பெரியவரைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி ஒரு கோரிக்கை, இந்துவான என்னிடம் வந்திருக்கிறது. இதை எப்படியாவது சாதித்துக் காட்ட வேண்டும்; அந்தப் பெரியவர் இன்னமும் உயிரோடு இருக்க வேண்டும்; அவரைக் கண்டுபிடித்து, தந்தையும் மகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். இதற்கான சக்தியை எனக்கு அந்த அல்லாதான் வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டுதான் இந்த வழக்கை நான் எடுத்துக் கொண்டேன்” என்று நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.

உண்மையில், அத்தனை மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள உருவானவையே மதங்கள். பள்ளி என்கிற சொல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிற இடத்தை மட்டும் குறிப்பதல்ல; நமக்குக் கல்வி அறிவை போதிக்கிற இடமும்கூட!

பள்ளிக்கூடத்தில் சேர்ந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். அதை விடுத்து, நான் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தேன்; நீ அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தாய்; என் பள்ளிதான் உயர்ந்தது; உன் பள்ளி மோசமானது என்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? நிச்சயமாக எந்த மதமும் இந்தத் துன்மார்க்க போதனையைக் கற்றுத் தரவில்லை.

பள்ளி வயதிலிருந்து இன்று வரை, என்னுடைய நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள். நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் வீடு முகம்மது இஸ்மாயீல் என்கிற ஓர் இஸ்லாமியருடையது. ஹஜ் யாத்திரை சென்று வந்த பெரியவர் அவர். எங்கள் மீது பெரிதும் அன்பு கொண்டவர். அவர் மட்டுமல்ல; அவரின் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள் என அவரது குடும்பமே எங்களிடம் பிரியமாக உள்ளது.

சமீபத்தில், என் மனைவியின் அறுவைச் சிகிச்சையை முன்னிட்டு, இடம் சற்றுப் பெரியதாகவும், கூடவே வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டும் இருக்கிற மாதிரியான வீடு வாடகைக்குத் தேடினேன். வெஸ்டர்ன் டைப் டாய்லெட், மனைவிக்கு மட்டுமின்றி, வயதான என் பெற்றோர்களுக்கும் வசதியாக இருக்கும் என்பதாலேயே மும்முரமாக இடம் தேடினேன்.

பெரியவர் முகம்மது இஸ்மாயீலுக்கு நான் வீடு தேடும் விஷயம் தெரியும். அவரிடம் மாத வாடகையைக் கொடுக்கச் சென்றபோது, அவர் மிகவும் ஆதங்கத்தோடு என்னிடம், “நீங்க வேற வீடு பார்த்துக் குடி போகப் போறீங்கன்றதை நினைக்கிறப்போ வருத்தமா இருக்கு தம்பி! வெஸ்டர்ன் டைப் டாய்லெட் மட்டும்தான் பிரச்னைன்னா, கவலைப்படாதீங்க... நானே இப்ப இருக்கிற டாய்லெட்டை மாத்தி வெஸ்டர்ன் டைப் வெச்சுத் தரேன். இடம் போறலைன்னாலும் சொல்லுங்க. என் வீட்டுலேயே மாடியில ஒரு போர்ஷன் கட்டிக்கிட்டிருக்கேன். அது முடிஞ்சதும் உங்களுக்கே தரேன். அப்புறம் உங்க சௌகரியம்!” என்றார். என் நெஞ்சம் அவரின் அன்புப் பேச்சால் நெகிழ்ந்துவிட்டது.

“ஐயா! உங்க கிட்ட வாடகைக்கு இடம் கேட்டு இந்த வீட்டுக்குக் குடி வரும்போது நான் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்; என் பசங்க வளர்ந்து பெரிசாகி காலேஜ் போகிற வரைக்கும் உங்க வீட்டுலதான் குடியிருப்பேன்னேன். எனக்கு இங்கே ஒரு கஷ்டமும் இல்லே. இடம்கூட பிரச்னை இல்லீங்க ஐயா! வெஸ்டர்ன் டைப் டாய்லெட் மட்டும்தான். ஆனா, உங்களுக்கே ஏகப்பட்ட செலவுகள் இருக்கு. இதுல நான் எப்படித் தொல்லை பண்றதுன்னுதான் உங்களைக் கேக்கலை” என்றேன்.

என் மனைவி அறுவைச் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு அவரது மருமகள்கள் உடனே வந்து பார்த்து, விசாரித்துவிட்டுப் போனார்கள். பிறகு, பெரியவரும் வந்து விசாரித்தார். அதற்குப் பதினைந்தாவது நாள், பெரியவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். எனக்குத் தகவல் தெரியவில்லை. பின்னர், அவரது கடைக்குப் போனபோதுதான் விஷயம் தெரிந்தது. “அப்பாவுக்குக் கிட்னி பிராப்ளம். ஆபரேஷன் முடிஞ்சிருச்சு. நாளன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகி விட்டுக்கு வந்துடுவாரு!” என்று அவரது பெரிய மகன் சொன்னார்.

பெரியவர் வீட்டுக்கு வந்ததும், அவரைப் போய்ப் பார்த்து உடல்நிலை பற்றி விசாரித்தேன். “தம்பி! வெஸ்டர்ன் டாய்லெட் வெச்சுத் தரேன்னு சொன்னேன். அதுக்குள்ளே திடீர்னு நான் ஆஸ்பத்திரியில சேரும்படி ஆயிருச்சு. ஒண்ணரை லட்ச ரூபா செலவழிஞ்சிருச்சு. கவலைப்படாதீங்க. சீக்கிரம் உங்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் வெச்சுக் கொடுக்க ஏற்பாடு பண்றேன்” என்றார்.

“ஐயா! முதல்ல உங்க உடம்பைப் பார்த்துக்குங்க. வெஸ்டர்ன் டாய்லெட் பிரச்னையை அப்புறம் பார்த்துக்கலாம்” என்றேன். “அதுக்கென்னங்க தம்பி பெரிசா செலவழிஞ்சுடப் போகுது! ஏழாயிரமோ எட்டாயிரமோ ஆகும். பரவாயில்லை. இங்கே மாடிப் போர்ஷன்லகூட அதான் வைக்கலாம்னு இருக்கேன்” என்றார்.

அப்போது என் மனசில் ஓர் எண்ணம் தோன்றியது. “ஐயா! பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னே இங்கே குடி வந்தேன். அப்போ ரூ.3,000 மாத வாடகை. ஆனா, ரூ.25,000-ம்தான் அட்வான்ஸ் கொடுத்தேன். இத்தனை வருஷத்துல, இப்போ நான் ரூ.5,000 மாத வாடகை தரேன். (இந்தப் பகுதியில் நான் இருக்கும் இடத்துக்கு அது நிச்சயம் குறைவான வாடகைதான்!). நியாயமா பத்து மாச அட்வான்ஸ் தரணும் நான். நீங்களும் கேட்கலை; நானும் தரலை. இப்போ வெஸ்டர்ன் டாய்லெட் வேற வெச்சுத் தரேன்றீங்க. உங்களுக்கும் ஏகப்பட்ட செலவு இருக்கு. அதனால, நான் இன்னொரு 25,000 ரூபாய் புரட்டிக் கொடுக்கறேன். அட்வான்ஸ் ரூ.50,000-மா கணக்கு இருக்கட்டும்” என்றேன்.

“அட, என்னங்க தம்பி! பணம் கிடக்கட்டும். உங்களுக்கும் எவ்வளவு செலவு இருக்குதுன்னு எனக்குத் தெரியும். அதனால, அட்வான்ஸுக்காகச் சிரமப்படாதீங்க. கொடுக்கலேன்னாலும் பரவாயில்லே. நானே என் செலவுல வெஸ்டர்ன் டாய்லெட் வெச்சுத் தரேன். உங்களால முடிஞ்சுதுன்னா கொடுங்க. அதுக்காக கடன்கிடன் வாங்கியாவது எனக்குத் தரணும்னு இல்லே. கையில கிடைக்கிறப்போ கொடுங்க. சிரமப்படாதீங்க!” என்றார்.

“என்னங்க ஐயா, ஒரு வீட்டு ஓனர் மாதிரியே பேச மாட்டேங்கிறீங்களே?” என்றேன் குரல் நெகிழ. “நீங்க மட்டும் குடியிருக்கிறவர் மாதிரியா நடந்துக்கிறீங்க?” என்று சொல்லிச் சிரித்தார். “புரியலீங்களே!” என்றேன். “நீங்க அந்த இடத்துக்குக் குடி வர்றதுக்கு முன்னாடி ஐந்தாறு குடும்பங்கள் குடியிருந்துட்டு காலி பண்ணிட்டுப் போனாங்க. அவங்கள்ல யாரும் உங்களை மாதிரி டாண்ணு ஒண்ணாந்தேதியன்னிக்கு வாடகையைக் கொடுத்தது இல்லே. நாங்க பல தடவை கேட்டுக் கேட்டு, பத்தாம் தேதி, பதினொண்ணாம் தேதின்னு தருவாங்க. சில பேர் ரெண்டு மாசம், மூணு மாசம் சேர்த்து வெச்சுக்கூட கொடுத்திருக்காங்க. வாடகை என்னாச்சுன்னு அதிகாரமா கேட்க எனக்கு நீங்க வாய்ப்பே கொடுக்கலீங்களே? அப்புறம் நான் எப்படி வீட்டு ஓனர் மாதிரி பேசுறது?” என்று சொல்லி மறுபடி சிரித்தார். “நீங்க ஒவ்வொரு தடவை வாடகை கொடுக்க வரும்போதுதான் எனக்கே ஞாபகம் வரும், ஆஹா, ஒண்ணாந் தேதி ஆயிருச்சா, மாசம் பிறந்திருச்சான்னு!” என்றும் சொன்னார்.

அடுத்த ஒரு வாரத்தில் பணம் புரட்டி, அவரிடம் ரூ.10,000 கொடுத்தேன். “இப்போதைக்குக் கிடைச்சது இவ்ளோதாங்க. நான் சொன்னபடி இன்னும் 15,000 தரவேண்டியிருக்கு. மாசா மாசம் 5,000 வீதம் மூணு மாசத்துல கொடுத்து, அட்வான்ஸை 50,000-மா ரவுண்ட் பண்ணிடறேன்” என்றேன். “அட என்னங்க தம்பி நீங்க! என்னை கந்து வட்டிக்காரன் மாதிரி ஆக்கிட்டீங்களே! நான்தான் அட்வான்ஸே வேணாம்னு சொல்றேனில்லே. சரி, ரூ.35,000 அட்வான்ஸ்னே இருந்துட்டுப் போகட்டும். சிரமப்படாதீங்க” என்றார்.

அவர் சொன்னபடி, வெஸ்டர்ன் டாய்லெட் வைத்துக் கொடுத்துவிட்டார். நான்தான் அவருக்கு இன்னும் ரூ.15,000 தரவேண்டியுள்ளது. இந்த மாதம் வாடகை தரும்போது, “ஐயா! என் மகளைக் கல்லூரியில் சேர்க்க எப்படியும் நான் இந்த மாசம் லோன் போடப்போறேன். அதுல மிச்சம் 15,000 ரூபாயை உங்களுக்குக் கொடுத்துடறேன்” என்றேன், சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்கிற குறுகுறுப்பில் உண்டான குரல் கம்மலோடு.

“அட, அதை இன்னும் நீங்க மறக்கலீங்களா தம்பி? உங்க சௌகரியப்படி கொடுங்க. முடியலேன்னாலும் வருத்தப்படாதீங்க” என்றார் பெரியவர் முகம்மது இஸ்மாயீல்.

ஒவ்வொரு முஸ்லிம் பண்டிகைக்கும் அவர்கள் வீட்டிலிருந்து கேக் வந்துவிடும். ஒவ்வொரு தீபாவளிக்கும் நாங்கள் செய்கிற ஸ்வீட்டை அவர்களுக்குத் தருவோம். ஒருமுறை, மாடியில் குடியிருக்கும் அவரது மகன் வீட்டிலிருந்து சமையல் வாசனை ‘கமகம’வென்று அடித்தது. என் மனைவி விளையாட்டாக அந்த மருமகளிடம், “என்னங்க, வாசனை தூக்குதே! நாக்குல எச்சில் ஊறுது” என்று சிரித்துக்கொண்டே சொல்லப் போக, கொஞ்ச நேரத்தில் சமையல் முடிந்து, ஒரு கிண்ணம் நிறைய கமகம சாம்பார், பொரியல் என வந்துவிட்டது. “அடடா! விளையாட்டுக்குச் சொன்னா, ஏங்க சிரமப்படறீங்க?” என்று சொன்னாலும், அவர்கள் அன்போடு கொடுத்ததை மகிழ்ச்சியோடு உண்டோம். ஆனால், இது மட்டுமல்ல இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம்! பண்ட மாற்றம் ஒரு குறியீடு மட்டுமே! மனசுகளைப் பரிமாறிக் கொள்வதுதான் உண்மையான ஒற்றுமை.

அடுத்த பதிவும், பெரியவர் முகம்மது இஸ்மாயீல் பற்றியும், அவர் வீட்டுக்கு நாங்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் குடி வந்த நிகழ்வைப் பற்றியும்தான்!

***
இனிமையான உறவுகள் அமைவது, மற்றவர்களை நாம் சரியாகப் புரிந்து கொள்கிறோமா என்பதில் இல்லை; தவறாகப் புரிந்து கொள்வதை எப்படித் தவிர்க்கிறோம் என்பதில் இருக்கிறது.

முயற்சி திருவினை ஆக்கியது!

ஜோக் எழுத்தாளர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எழுதியதில் எனக்கு ரொம்பப் பிடித்தமான 30 ஜோக்குகளை வெளியிட்டு, அவற்றிலிருந்து ஐந்து பேரை தேர்ந்தெடுக்கச் சொல்லி என் வலைப்பூ நேயர்களுக்கு ஒரு போட்டி வைத்திருந்தேன். பின்னூட்டம் மூலம் தங்களுக்குப் பிடித்த ஐந்து ஜோக்காளர்களுக்கு ஓட்டளித்து, இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டிக்கான பின்னூட்டங்களை எந்தப் பதிவில் இட வேண்டும் என்று நான் குறிப்பு எதுவும் கொடுக்காததால், ‘படிங்க, சிரிங்க, பரிசை வெல்லுங்க’ என்கிற பதிவிலும், ‘தேர்ந்தெடுங்கள் ஐவரை! - ஒரு போட்டி’ என்கிற பதிவிலுமாகக் கலந்து தங்கள் பின்னூட்டங்களை இட்டிருக்கிறார்கள். இரண்டையுமே கணக்கில் எடுத்துக்கொண்டேன்.

ஓரியூர் கே.சேகர் பெயருக்கு ஓட்டளித்திருப்பவர்கள் மொத்தம் 12 பேர்; அவருக்கு அடுத்தபடியாக தஞ்சை தாமு பெற்றிருக்கும் ஓட்டுக்கள் மொத்தம் 11; அவருக்கு அடுத்து வி.சாரதிடேச்சு, சி.பி.செந்தில்குமார் இருவரும் தலா 10 ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார்கள். கடைசியாக, சாதிக் 9 ஓட்டுக்கள் வாங்கி இந்த டாப்-5 பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆக, திரு.பாக்கியம் ராமசாமி அவர்கள் இந்த மே மாதம் நடத்தவிருக்கும் விழாவில், தமது அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை மூலம் ரூ.250 அன்பளிப்பு அளித்துக் கௌரவிக்க இருக்கும் ஐந்து நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர்கள், நமது ‘என் டயரி’ வலைப்பூ வாசகர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த ஓரியூர் கே.சேகர், தஞ்சை தாமு, வி.சாரதிடேச்சு, சி.பி.செந்தில்குமார் மற்றும் சாதிக் ஆகிய ஐந்து பேர்தான்!

இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை நடத்தவிருக்கும் விழா எப்போது, எங்கே போன்ற விவரங்களைப் பிறகு திரு.பாக்கியம் ராமசாமி அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஜோக்காளர்கள் ஐந்து பேருக்கும் பரிசு அறிவிப்பு பற்றி மேற்படி அறக்கட்டளை மூலமே தகவல் வரும்.

இனி, அந்த ஐந்து பேரையும் மிகச் சரியாகக் குறிப்பிட்டு, புத்தகப் பரிசு பெறும் ‘என் டயரி’ வாசகர் யாரென்று பார்ப்போம்.

முதல் ஐந்து இடங்களைப் பிடித்த ஐந்து ஜோக்காளர்களையும் மிகச் சரியாகக் குறிப்பிட்டவர்கள் எவரும் இல்லை.

நான்கு பேரை மட்டும் சரியாகக் குறிப்பிட்டு, மீதி ஒருவர் பெயரை மாற்றிக் குறிப்பிட்டவர்கள் மொத்தம் 6 பேர்.

அவர்கள்... வி.ராஜசேகரன், விழுப்புரம்; கே.பரணீதரன் (பரணீ); புலவர் இரா.முத்தையா, கடலூர்; கிருபாநந்தினி; கே.ராஜலட்சுமி, பெங்களூரு; கணேஷ்ராஜா.

இவர்கள் ஆறு பேரில், ‘தேர்ந்தெடுங்கள் ஐவரை!’ பதிவில், நிபந்தனை எண் 11-ன்படி புத்தகப் பரிசு பெறுபவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வி.ராஜசேகரன். காரணம், அவர்தான் அதிகபட்ச சரியான விடைகளை அனுப்பிய ஆறு பேரில் அனைவருக்கும் மிக முன்னதாக, ஏப்ரல் 15-ம் தேதியே அனுப்பியவர்.

புத்தகப் பரிசு பெறுபவர் யார் என்று முடிவு செய்வதற்குள்ளாக, இவர் அளித்திருந்த விடையை அவசரப்பட்டுப் பதிவிட்டுவிட்டேன். பின்னர் சுதாரித்துக்கொண்டு, அதை நீக்கியிருக்கிறேன். அதற்குக் காரணம் இருக்கிறது.

ன்புள்ள திரு. வி.ராஜசேகரன் அவர்களுக்கு,

வணக்கம். போட்டியில் கலந்துகொண்டு, அதிகபட்ச சரியான விடைகளை முதலாவதாக அனுப்பிப் புத்தகப் பரிசு வென்ற தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

தாங்கள் எந்த ஐந்து ஜோக்காளர்களுக்கு ஓட்டளித்தீர்களோ, அவர்கள் ஐந்து பேர் பெயரையும் மீண்டும் ஒருமுறை எழுதி, தங்கள் முழுமையான அஞ்சலக முகவரியையும் எழுதி, nraviprakash@gmail.com என்கிற எனது இ-மெயில் முகவரிக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.


தாங்கள் முன்பு பின்னூட்டத்தில் ஓட்டளித்து அனுப்பிய அந்த ஐந்து பேர் பெயரையும் மீண்டும் ஒருமுறை எழுதச் சொல்வதற்குக் காரணம், அதை பழைய உங்கள் ரசனையோடு ஒப்பிட்டுப் பார்த்து ‘கிராஸ் செக்’ செய்து கொள்வதற்காகவே! சரியான முகவரிக்கு, சரியான நபருக்குப் புத்தகம் அனுப்பி வைக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே!


தங்களுக்கான பரிசுப் புத்தகம், ரூ.175 விலையுள்ள ‘முயற்சி திருவினையாக்கும்’ தயாராக இருக்கிறது. தங்கள் கடிதம் கிடைத்த அன்றைய தினமே அது கூரியரில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்தப் பதிவைப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக தங்கள் முகவரியை எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். ‘தேர்ந்தெடுங்கள் ஐவரை’ பதிவில், நிபந்தனை எண் 13-ஐப் பார்க்கவும்.

மிக்க அன்புடன்,

ரவிபிரகாஷ்.
***

தோல்வி கசக்காது - அதை நீங்கள் விழுங்காத வரை!