இடைவெளி - சிறுகதை

கதை: உஷா சுப்ரமணியன்

கார்த்திக், நீனாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். இருவர் கண்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து மலர்ந்தன. குறும்பு, சிரிப்பு, காதல். "ஏய், என்னை அப்படிப் பார்க்காதே" - கார்த்திக் நெளிந்தான். "இந்த வெட்கம்லாம் நான் படணும்டா... நீ ஏன் இப்படி வழியறே?" - இருவரும் மேஜை மேல் கைகோத்துச் சிரித்தனர்.

"என்ன சாப்பிடறே?"

"சாப்பாடு. அப்புறம்... தாகமா இருக்கு. ரெண்டு பியர் சொல்லுடா."

உயரமான கண்ணாடிக் கோப்பையில் வெயிட்டர் ஊற்றிய நுரை பொங்கும் பியரை 'சியர்ஸ்' சொல்லி உறிஞ்சினார்கள்.

"அப்பாடா! இப்பதான் உசிரே வந்தது. இன்னிக்குக் காலையிலேர்ந்து ஒரே வேலை. யு.எஸ். க்ளையன்ட் ஒருத்தன் வந்து எங்க டீம் செய்ற அத்தனை வேலையிலும் குற்றம் கண்டுபிடிச்சு, கழுத்தை அறுத்துட்டான். அவனை கன்வின்ஸ் பண்றதுக்குள்ள எவ்ளோ ஸ்ட்ரெயின். அவனை ஹோட்டலில் இறக்கிவிட்டுட்டு, இப்பதான் வெளியே வர முடிஞ்சது. சொல்லு கார்த்திக்... யு வான்ட் டு டாக் டு மி."


"நீ ரொம்ப டயர்டா இருந்தா இன்னிக்கு வேணாம். வேற ஒரு நாள் பேசலாம்."

"சோர்வெல்லாம் உன்னைப் பார்த்துக்கிட்டே பியர் குடிச்சதில் பறந்துபோச்சு..."

"உனக்குச் சோர்வு போச்சு... எனக்குப் புதுத் தெம்பு, சந்தோஷம் எல்லாம் வந்துடுச்சு."

நீனா உதட்டைக் குவித்து மெள்ள விசிலடித்தாள். "நீ ஏன் சாஃப்ட்வேர் துறைக்கு வந்தே? பேசாம பைஜாமா, முழங்கால் வரைக்கும் குர்தா மாட்டிட்டு கவிதை எழுதிட்டு இருக்கலாமே."

"அவசியமே இல்லை. கவிதையே என் எதிர்ல உட்கார்ந்திருக்கே."

"எந்த சினிமா டயலாக் இது"- நீனா அவன் மூக்கைத் திருகினாள்.

"நான் இன்னிக்கு உன்னோட கொஞ்சம் சீரியஸாப் பேசணும்."

"பேசு. இரு, அம்மாவுக்கு ஒரு போன் அடிச்சுடறேன்"- நீனா கைப்பையில் இருந்த போனை எடுத்து அம்மாவை அழைத்தாள். "ஹாய் மம், ஹோட்டல்ல ஃப்ரெண்டோடு இருக்கேன். வீட்டுக்கு வர 11 மணிக்கு மேல ஆகும். டின்னர் வேண்டாம். எனக்காக கொட்டக் கொட்ட முழிச் சுட்டு இருக்காதே. படுத்துத் தூங்கு. என்கிட்ட வீட்டுச் சாவி இருக்கு. ஓ டாட்! ஜாக்கிரதையா கார் கண்ணாடியை ஏத்திவிட்டுத்தான் வருவேன். உங்க பொண்ணை யாரும் தூக்கிட்டு ஓடிட மாட்டான். நிம்மதியாத் தூங்குங்க. குட் நைட்"- நீனா உதட்டைப் பிதுக்கினாள். "25 வயசான, சுயமாச் சம்பாதிச்சு, புராஜெக்ட்சுக்கு வெளி ஊருக்கும் வெளிநாட்டுக்கும் போயிட்டு வர்ற பொண்ணு, வீட்டுக்கு லேட்டா வர்றேன்னு சொன்னா மட்டும் பேரன்ட்ஸ் ஏன் இப்படிப் பதர்றாங்கன்னு தெரியலை."

"எங்கப்பாவும் அம்மாவும் இந்த 28 வயசுப் பையனையே எல்.கே.ஜி. பாப்பா மாதிரிதான் நடத்துறாங்க. அது பேரன்ட்ஸ்ஸோட ட்ரெய்ட்."

"ம்... ஏதோ சீரியஸா பேசணும்னியே..."

"இப்போ ராகு காலம் இல்லையே..."

"ராகு காலம் எல்லாம் ராத்திரி வருது... கன்டினியூ..."

"ஓ.கே." கார்த்திக் தலை குனிந்து தயங்கினான்... "நீனா ஐ லவ் யூ. ஐ வான்ட் டு மேரி யூ!" உணர்ச்சிப் பெருக்கில் அழுதுவிடுவான்போல் இருந்தது.

நீனா குறும்பாகச் சிரித்தாள்... "நீ என்னிக்கு இதைச் சொல்வேன்னு காத்துட்டு இருந்தேன். பேசாம உன்னைக் கடத்திட்டுப் போய் நானே தாலி கட்டிடலாமான்னுகூட யோசிச்சிட்டு இருந்தேன்."

கார்த்திக் வெட்கத்தில் நெளிந்தான். "நீ செய்தாலும் செய்வே..." நீனாவின் கண்களை உற்று நோக்கினான். "எனக்கு உன்னை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா, உன் புத்திசாலித்தனம், குறும்பு, சென்ஸ் ஆஃப் ஹ்யூமர், வெளிப்படையான பேச்சு."

"போச்சுடாப்பா... ஒரு பெண்ணைக் காதலிக்கணும், கல்யாணம் கட்டிக்கணும்னா, அவ அழகா இருக்கணும். அடக்கமா இருக்கணும் அப்படி எல்லாம் எதிர்பார்ப்பாங்க... அதெல்லாம் இல்லாத தால இந்தச் சப்பைக்கட்டா?"

"டியர், உன் அழகே உன் பர்சனாலிட்டிதான்."

"ஓ.கே. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லு?"

"ஏய், இதென்ன, அடுத்த 10 நிமிஷத்துல நடக்கிற விஷயமா? நீ உங்க அப்பா, அம்மாகிட்ட பேசு. நானும் பேசறேன். எல்லோருக்கும் சூட்டபிளா ஒரு தேதி பார்ப்போம்."

"சரி... ஆனால், கல்யாணத்தை எளிமையா வெச்சுக்கலாம். மெஹந்தி, சங்கீத்னு நம்ம சமூகத்துக்குச் சம்பந்தம் இல்லாத பழக்கம் எல்லாம் வேணாம்."

"நான் மெஹந்தி இட்டுக்கப் போறதில்லை. இதெல்லாம் நீதான் முடிவெடுக்கணும். என்னைப் பொறுத்தவரை காலையிலே நெருங்கிய சொந்தம் 50 பேரை அழைச்சு ஒரு ரிலிஜியஸ் செரிமனி. அதுகூட நம்மளைப் பெத்தவங்களுக்காகத்தான். மதியம் ரெஜிஸ்ட்ரேஷன். ஒருநாள் நம்ம கலிக்சுக்கு பார்ட்டி... அவ்வளவுதான்."

"நானும் அதுதான் நினைச்சேன் கார்த்திக். படாடோபக் கல்யாணங்கள் ரொம்ப ஆபாசமா இருக்கு. அதுவும் இந்த ரிசெஷன் டைம்ல..."

"நீனா, கல்யாணத்தை எப்படி நடத்துறதுன்னு அப்புறம் பேசுவோம். நீ என்னை உண்மையாக் காதலிக்கிறாயா... என்னை மாதிரியே த்ரில்லிங்கா உணர்கிறாயா?"

"என் அசட்டுக் கண்ணா, உன் பார்வையிலேயே என் உடல் புல்லரிக்கிறது. இதயம் துடிக்கிறது. இன்னும் என்னவெல்லாம் சொல்லணும் சொல்லு. இந்த மாதிரி ஃபீலிங்ஸ் இல்லேன்னா, 25 ஆண்டு கட்டிக்காத்த என்னை உன்னிடம் இழந்திருப்பேனா?. உனக்கு நான் பேசறதுல நம்பிக்கை இல்லைன்னா வா, வெளியே போவோம். அழகான நிலவு இருக்கு... மரம் இருக்கு... சுத்தி வந்து ஒரு டூயட் பாடுவோம்" -இருவரும் சிரித்தார்கள்.

"கார்த்திக், திருமணம்கிற அமைப்புபத்தி எனக்குச் சில எதிர்பார்ப்புகள் இருக்கு. அதேபோல உனக்கும் இருக்கும். அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிடணும்."

"என்னைப் பொறுத்தவரை தனியான எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. நீ நீயாக இருந்தாலே போதும்."

"அது போதாது கார்த்திக். நம் வேலை, பணம், பகிர்வு, நம் பெற்றோர், உறவுகள், இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு பேச."

"பேசலாம்... இப்பவே பேசலாம்."

"நம்ம ரெண்டு பேர் வேலையும் டிமாண்டிங். ஒன்பது மணிக்குப் போய் ஐந்து மணிக்கு வீடு திரும்ப முடியாது. உள்ளூரில் இருந்தால்கூட, ஒரே வீட்டில் வசித்தால்கூட நாம ஓரிரண்டு நாள் சந்திக்கவே முடியாமல் போகலாம். எதற்குச் சொல்றேன்னா, காலையில உனக்கு பெட் காபி, பிரேக்ஃபாஸ்ட் எல்லாம் என்னால் தர முடியாது. அவங்கவங்க தேவையை அவங்கவங்கதான் பார்த்துக்கணும். யாருக்கு நேரம் இருக்கோ, அவங்க அன்னிக்குச் சமைக்கலாம். நீ என்னதான் வெளிநாட்டிலே படிச்சவனா இருந்தாலும், 'எங்கம்மா செய்ற வத்தக் குழம்பு'ங்கிற மாதிரி சமையலறை எதிர்பார்ப்புகள் இருக் கக் கூடாது."

"நீனா, நீ சமைக்கணும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அமெரிக்காவில் எம்.எஸ். படிக்கும்போது ரெண்டு வருஷம் நான் சமைச்சுச் சாப்பிட்டு இருக்கேன். சமையல், பெண்களுடைய பிறப்புரிமைன்னு நான் நினைக்கலை. சுய கௌரவத்துடன் வாழ விரும்பற எந்த ஆணுக்கும் அடிப்படைச் சமையலாவது தெரிஞ்சிருக்கணும்னு நினைக்கிறவன் நான். சமையல் மட்டும் இல்லை, வீட்டு வேலை எல்லாவற்றையும் நாம பகிர்ந்துக் கலாம்."

"அடுத்த விஷயம்... நீ உங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே பையன். நான் ஒரே பெண். இதனால நம்மைப் பெத்தவங்க நம் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைப்பாங்க. நாம குழந்தைகள் இல்லை. நம்மால் நம் முடிவுகளை யோசிச்சு எடுக்க முடியும். அதோடு, நாம நம் பெற்றோர்களோட கார்பன் காப்பியும் கிடையாது."

"இந்த விஷயத்தை நான் ஏற்கெனவே என் பெற்றோர்கிட்ட பேசிட்டேன். ஓ.எம்.ஆர்-ல நான் புக் பண்ணியிருக்கிற அபார்ட்மென்ட் ரெடி. நீ வந்து அழகுபடுத்தத்தான் காத்திருக்கு. நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம். ஒரே ஊர்ல வசிக்கிற தாலயும், அவங்க நம்மைவிட வயசானவங்கறதாலயும் ஏதாவது உதவி தேவைப்பட்டா செய்வோம்."

"வெரிகுட் டா... உனக்கு ரொம்ப க்ளியர் திங்கிங் இருக்கு. அப்புறம் இந்தப் பண விஷயம்... நாம ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம். ஆனா, பண விஷயத்தில் ஒருத்தரை ஒருத்தர் கன்ட்ரோல் பண்ணக் கூடாது. குடும்பச் செலவுக்குன்னு ஒரு காமன் அக்கவுன்ட்ல ஒவ்வொரு மாசமும் சம அளவு போட்டு அதை உபயோகிப்போம். மற்றதைச் செலவழிப்பது, சேர்ப்பது எல்லாமே நம்ம பிரைவேட் விஷயம். ஒருவர் மற்றவர் விஷயத்துல தலையிடக் கூடாது."

"ஆமா நீனா, ஆபீஸிலே இத்தனை பேரை மேனேஜ் செய்கிற நம்மால, நாம சம்பாதிக்கற பணத்தைத் தனியா மேனேஜ் செய்ய முடியாதா என்ன?"

"கார்த்திக், உனக்குக் குழந்தைகள் பிடிக்குமா?"

"பிடிக்கும் என்கிறதைவிட, பயம்னு சொல்லலாம். அவங்க விஷமம், அழுகை இதுக்கெல்லாம் பொறுமை தேவை. நான் ஒரே குழந்தையா இருந்ததாலோ என்னமோ, எனக்கு குழந்தைப் பாசம் எல்லாம் அதிகம் இல்லை. வாட் அபௌட் யூ?"

"எனக்குக் குழந்தைகளை ரொம்பப் பிடிக்கும். அவங்க இன்னொசன்ஸ், குறும்பு ரொம்ப அழகு. நமக்கு ரெண்டு குழந்தைகளாவது வேணும்."

"எப்ப தயாரிக்க ஆரம்பிக்கலாம் நீனா... டின்னர் முடிஞ்சதுமேவா?"

"லூசு... எனக்குக் குழந்தை பிடிக்குமே தவிர, இப்போ வேணாம்னு சொல்ல வந்தேன். இன்னும் நாலு வருஷம் கழிச்சு, நம் திருமண வாழ்வு, வேலை எல்லாம் ஸ்டெபிலைஸ் ஆன பிறகு, குழந்தை பெத்துக்கலாம். குழந்தை பிறந்த பிறகு வேலையைத் தொடர வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவை நான்தான் எடுப்பேன். ஏன்னா, குழந்தையை எங்கம்மா, உங்கம்மாவிடம் எல்லாம் ஏலம்போட எனக்கு விருப்பம் இல்லை. நல்ல ஆயா கிடைச்சா சரி... இல்லாட்டி, நான் வேலையை விட்டுடுவேன். அப்போ குடும்பச் செலவு முழுவதும் நீதான் செய்ய வேண்டி இருக்கும்."

"முழுச் சம்மதம்... அடுத்தது என்ன?"

"கார்த்திக், இந்த கல்யாணங்கற விஷயத்தைப்பத்தி நான் நிறைய சிந்தித்து வெச்சிருக்கேன். எங்கப்பா, அம்மாவையே எடுத்துக்கிட்டா வெளியில ரொம்ப ஆதர்ச தம்பதியாத் தெரிவாங்க. அப்பா சொல்ற எல்லா விஷயத்துக்கும் அம்மா, 'ஆமாம் சாமி' போடுவா. அப்பா, ஞாயிறு தவறாம என்னையும் அம்மாவையும், பாட்டி வீட்டுக்கும், ரிலேட்டிவ்ஸ் வீட்டுக்கும் அழைச்சுட்டுப் போவார். சனிக்கிழமை கட்டாயம் ஹோட்டல், அவருக்குப் பிடிச்ச சினிமா எல்லாம் உண்டு. ஆனால், அம்மாவுக்குன்னு தனியா ஒரு ஆசை, நட்பு, எதிர்பார்ப்பு உண்டுன்னு அவர் உணர்ந்ததே இல்லை. ஹோட்டலுக்குப் போனாக்கூட தனக்கும் அம்மாவுக்கும் சேர்த்து அவரே ஆர்டர் பண்ணுவார். அம்மாவுக்குத் தன் தாய் வீட்டுல தான் சின்னப் பெண்ணா இருந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாவற்றையும் தன் பெற்றோர், உடன்பிறந்தவர் களோடு பேசி மகிழணும்னு தோணாதா? காலேஜ்ல கூடப் படிச்சவங்களைச் சந்திக்கணும். அவங்ககூட சினிமாவுக்குப் போணும்னு ஆசை இருக்காதா... அப்பா ஆர்டர் செய்யறதைத் தவிர, தனக்கு விருப்பமானதைக் கேட்டு வாங்கிச் சாப்பிட உரிமை கிடையாதா? அப்பா அதற்கெல்லாம் வாய்ப்பே தந்தது இல்லை.

திருமணத்துல நெருக்கம் மட்டும் போதாது. இடைவெளியும் ரொம்பத் தேவை. தனக்கு விருப்பமானதைச் செய்வதற்கான ஸ்பேஸ். நம் விருப்பு, வெறுப்புகள் தனித்தனியானவை. நான் என் நட்பு, பழக்கவழக்கங்கள் எல்லாம் கல்யாணமான பிறகு தொடரணும்னு விரும்புறேன். உனக்கு எங்க கேர்ள்ஸ் கேங்பற்றித் தெரியும். நாங்க எப்பவும் இருப்பதுபோல மாசம் ரெண்டு முறை டின்னர், டிஸ்கோன்னு போவோம். அதேபோல நீ கல்யாணம் ஆனதுக்காக உன் நண்பர்களையோ, உங்க பியர் பார்ட்டிகளையோ விட வேண்டாம். எல்லா உறவு களையும் பழக்கங்களையும் துறப்பதற்கான சாதனம் இல்லை கல்யாணம்."

"நீ சொல்வது சரிதான். வேறு ஏதாவது கண்டிஷன்?"

"ஒண்ணே ஒண்ணு... தைரியம் இருந்தால் இப்ப எனக்கு ஒரு முத்தம் தா!"

கார்த்திக் சடாரென எழுந்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். "நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கப் போறோம்" என்று உரத்த குரலில் கத்தினான். ஒரு நிமிடம் திகைத்த கூட்டத்தினர், மறு விநாடி இருவரையும் கைதட்டி வாழ்த்தினர். முகம் அறியாத ஒருவர் கேக் அனுப்பினார். பலர் கை குலுக்கினார்கள். அந்த ஹோட்டலின் சாப்பாட்டு அறையில் பியர் மயக்கத்தில் கார்த்திக், நீனா திருமண நிச்சயதார்த்தம் வெயிட்டர்கள் ஆசியுடன் நடந்தது.

புது வீடு, புதிய அலங்காரங்கள், அழகானதிட்ட மிட்ட வாழ்வு என கார்த்திக் - நீனா வாழ்க்கை அற்புதமாகவே அமைந்தது. திருமணத்துக்கு முன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இருவரும் சமையல், வீட்டு வேலை எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டார் கள். அவரவர் காரில் வேலைக்குச் சென்று திரும்பினார்கள். விரும்பியபோது சேர்ந்து வெளியே சென்று வந்தார்கள். பண விஷயத்திலும் அழகாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

"கார்த்திக், நான் எங்க கேர்ள்ஸ் கேங்கோட வெளியே போறேன். நான்தான் இன்னிக்கு அசைன்டு டிரைவர் (மது அருந்தாமல் அனைவரையும் வீடு சேர்ப்பவர்) அதனால வர ஒரு மணிக்கு மேல ஆகலாம். உன் பிளான் என்ன?"

"நவீனுக்கு போன் பண்றேன். அவன் ஃப்ரீயா இருந்தா கிளப்புக்குப் போவேன். இந்த முக்கால் பேன்ட்டும், டைட் டீயும் உனக்கு ரொம்ப அழகா இருக்கு"- கார்த்திக் மனைவியின் திறந்த தோளில் உதடு பதித்தான்.

நீனா கிளம்பிய பிறகு நவீனுக்கு போன் செய்தான். "நவீன், கிளப்புக்கு வர்றியா?"

"ஏன், நீனா இல்லையா?"

"இல்லை. அவ ஃப்ரெண்ட்ஸோடு வெளியே போயிருக்கா."

"ஸாரி கார்த்திக், நான் என் கேர்ள் ஃப்ரெண்டை டின்னருக்குக் கூட்டிட்டுப் போகணும்"- ஸ்ரீநிவாசனின் ஐந்து மாதக் குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம். ராகேசுக்கு ஊரில் இருந்து உறவினர்கள் வந்திருக்காங்களாம். ராஜனும் நளினாவும் வீட்டில் தனியே படம் பார்க்கப் போகிறார்களாம்.

சட்டென கார்த்திக்குக்கு நினைவு வந்தது. அம்மா நேற்று போன் செய்திருந்தாளே அத்தை வந்திருப்பதாக, பார்த்துவிட்டு வந்துவிடலாம். சின்ன வயதில் இரண்டு வருடம் அவன் அத்தை யுடன்தான் வசித்தான். 20 வயதிலேயே விதவையான அத்தை அவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். அவனுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவாள். அவனுக்கு ஹோம் வொர்க் எழுதிக் கொடுப்பாள். அவசரமாக உடை உடுத்திக்கொண்டு திருவான்மி யூருக்குக் கிளம்பினான்.

"அட, என் செல்லமே!' என்று அத்தை கார்த்திக்கை அணைத்துக்கொண்டாள். அவள் 70 வயது மூப்பே அவனைக் கண்டதும் பறந்துவிட்டது. "அப்பாவோடு பேசிட்டு இரு... இதோ நொடியில வந்துடறேன்" என்று உள்ளே ஓடினாள். அப்பா வழக்கம்போல மகனுடன் சீரியஸாக உலக அரசியல் பேசினார். அம்மா, "ஏன்டா, நீனாவையும்கூட்டிண்டு வர மாட்டியா?" என்றாள்.

"உனக்குப் பிடிக்குமேன்னு உப்புமாக் கொழுக்கட்டையும், வெங்காய கொத்சும் செய்தேன்" என்று அத்தை உபசரித்தாள். 20 வருடங்களுக்கு முன் அனுபவித்த ருசி. ருசித்துச் சாப்பிட்டான். அப்பா ஒன்பதரை மணிக்கு விளக்கணைத்துவிடுவார். எனவே, கார்த்திக் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தான். மன நிறைவுடன் படுக்கையில் விழுந்தான்.

காலையில் நீனா தன் தோழிகளைப்பற்றி சிரிக்கச் சிரிக்கக் கதை சொன்னாள். "ஆமா... நீ என்ன பண்ணினே?"

"என்ன பண்றது... திருவான்மியூர் போய் அத்தை யைப் பார்த்துட்டு வந்தேன்."

"ஃப்பூ... ஹெள அனெக்சைட்டிங்!"

"வேற வழி? உப்புமாக் கொழுக்கட்டை சாப்பிட்டுட்டு 10 மணிக்குத் தூங்கிட்டேன்."

அடுத்த வீக் எண்ட் இருவருமாக பாண்டிச்சேரிக்கு ட்ரைவ் போனார்கள். அசோகாவின் நீச்சல் குளத்தில் நீந்தி, கடற்கரையில் வெறுங் காலில் நடந்து, தெருவோரம் வெளிநாட்டு உடைகளைத் தேடி வாங்கி, மறுநாள் வீடு திரும்பிக் கட்டிஅணைத்து... வாழ்க்கை வாழ்வதற்கே எனக் கிறுகிறுத்தார்கள்.

இன்று மறுபடியும் நீனாவின் டே அவுட்.' "கார்த்திக்... அசடாட்டம் உப்புமா சாப்பிட்டுட்டுத் தூங்காதே. வாழ்க்கையை அனுபவி. உன் பேச்சுலர் நண்பர்கள் எல்லோருக்கும் பார்ட்டி வை."

கார்த்திக் தலையாட்டினான். ஆனால், வழக்கம்போல பேச்சுலர் நண்பர்கள் அனைவருக்கும் அவரவர் பெண் தோழிகளுடன் அல்லது பேச்சுலர் நண்பர்களுடன் வேலை இருந்தது. திருமணமானவர்களுக்கோ பொறுப்பு இருந்தது. "ஓ! நீனா வீட்டில் இல்லையா. அப்போ ஸ்வாதிக்குப் போரடிக்கும். இன்னொரு நாள் வர்றோம்" என்று தவிர்த்தார்கள்.

கார்த்திக் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். பேசாமல் காமெடி சேனல் பார்த்தபடியே தூங்கலாம் என முடிவு செய்தான். போன் அடித்தது... அம்மாதான். "சும்மாதான் கூப்பிட்டேன்" என்றவர் "முடிஞ்சா, நாளைக்கு ரெண்டு பேரும் ஒரு நடை வந்துட்டுப் போங்களேன். அப்பாவுக்கு ரெண்டு நாளா பி.பி. கொஞ்சம் அதிகமா இருக்கு. டாக்டர் கிட்ட போக மாட்டேங்கறார். நீங்க சொன்னாக் கேட்பார்" என்றாள்.

"இப்பவே வர்றேம்மா" என்று கிளம்பினான் கார்த்திக். அப்பா மிகவும் சோர்வாக இருந்தார். அவரைக் கட்டாயப்படுத்தி டாக்டரிடம் அழைத்துச் சென்றான். வீடு திரும்பும்போது அத்தை ரெடியாக ஆலு பரோட்டாவும் கொத்துமல்லிச் சட்னியும் செய்துவைத்திருந்தாள். "நான் படுத்துக்கிறேன் நீங்க பேசிட்டு இருங்க" என்று அப்பா படுத்துக் கொள்ள... அம்மாவுடனும் அத்தையுடனும் தாயக் கட்டம் ஆடினான். 11 மணி வாக்கில் வீடு திரும்பினான். இரவு நீனா எப்போது வீடு திரும்பினாள் என்று தெரியாதவாறு உறக்கத்தில் ஆழ்ந்தான்.

"குட்மார்னிங் நீனா, யூ லுக் ஸோ க்யூட். நேத்திக்கு எஞ்சாய் பண்ணினாயா?"

"ஓ! கிரேட்பா... மாலினி செம பூஸ்... அவளை கார் பார்க்கிங்குக்குத் தள்ளிட்டு வந்தா, ஹோட்டல் ஸ்டூவர்ட் தொப்பியைக் கழட்டிட்டா. 'வாரும் மன்னரே!'ன்னு டயலாக் வேற. அப்புறம் உனக்குத் தெரியுமா, கல்பனாவும் ரிதேசும் பிரியறதா முடிவு பண்ணிட்டாங்களாம். அந்த ப்ளடி ஃபெலோ கல்யாணத்துக்கு ஆயிரம் கண்டிஷன் போடறானாம். விட்டுத் தொலைன்னு சொன்னா கேட்காம ஒப்பாரிவெச்சா. அப்புறம் டிஸ்கோல உன் ஃப்ரெண்ட் ராமனைப் பார்த்தேன். உன்னை ரொம்ப விசாரிச்சான். ஆமா, நீ என்ன செய்தே?"

"ஒண்ணும் இல்லை... ஒரு பயலும் ஃப்ரீ இல்லை. என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனு அம்மா போன் பண்ணினா. அவரை டாக்டரிடம் அழைச்சுட்டுப் போனேன்."

"என்ன ஆச்சு?"

"ஹை பி.பி!"

"அவ்வளவுதானே... வழக்கமான விஷயம்தான்."

"ஆனாலும், அம்மா பயந்துட்டா. அதோட அவர் ரொம்ப டயர்டா இருந்தார். ஒன்பதரை மணிக்கு வாசற் கதவை தான்தான் சாத்தணும்னு கண்டிப்பா இருக்கிறவர், எட்டரை மணிக்கே படுத் துட்டார். அத்தை ஆலு பரோட்டா செய்தா. சாப்பிட்டு அம்மா, அத்தையோட தாயக்கட்டம் ஆடிட்டு வந்தேன்."

நீனா சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். விறைப்புடன் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். திடீரென்று உரத்த குரலில் கத்தினாள், "யூ ப்ளடி சீட்... நான் ஒண்ணும் தெரியாத பாப்பான்னு நெனைச்சுண்டு ஏமாத்தறியா?"

"நான் யாரை ஏமாத்தினேன்?" கார்த்திக் வியப் புடன் கேட்டான்.

"என்னை வெளியே அனுப்பிட்டு, உங்க அப்பா - அம்மா வீட்டுக்குப் போய் கொஞ்சறியா? நீ சராசரி இந்திய ஆண்தானே. இப்படியெல்லாம் செய்வேன்னு தெரிஞ்சுதானே நான் கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் தெளிவாப் பேசினேன். நீ ஒரு ஏமாற்றுக்காரன்... உன்னை மாதிரி அம்மாக் கோண்டு, அத்தைக் கோண்டுகூட என்னால வாழ முடியாது."

"அம்மா நாளைக்கு வாங்கோன்னுதான் சொன்னா... நான்தான் வேற வேலை இல்லையேன்னு இன்னிக்கே போனேன்."

"ஏய், பொய் பேசாதே! உங்கம்மா சாமர்த்தியம் எனக்குத் தெரியாதா? நான் வீட்டில் இல்லேன்னு தெரிஞ்சுக்கிட்டு பிள்ளைக்குப் போன் போடுவாங்க. நீயும் ரகசியமா ஓடுவே."

"இதிலென்ன ரகசியம் இருக்கு... நான் என்ன கள்ளக் காதலியையா பார்க்கப் போனேன்?"

"அப்படிப் போனாக்கூட உன்னை மன்னிப்பேன். இப்போ, உன்னை என்னால மன்னிக்க முடியாது." தேர்ந்த ஆங்கிலத்தில் நீனா உயர்ந்த குரலெடுத்துக் கத்தக் கத்த... கார்த்திக்குக்கு ஒன்று மட்டும் தெளி வாகப் புரிந்தது...

இடைவெளி என்பது இருவருக்கும் பொதுவான வார்த்தை அல்ல என்று. சில உறவுகள் இடைவெளிக்கும் அப்பாற்பட்டவை!


ஒரு கதை; இரு பிரமுகர்கள்!

நேற்று மாலை, தினமணி நாளிதழில் இருந்து ‘ராணி’ என்பவர் கைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.

“சார், ஒரு தகவல் வேணும். உங்க ஆனந்த விகடன்ல ரெண்டு வாரத்துக்கு முன்னே ‘இடைவெளி’ன்னு ஒரு சிறுகதை வந்ததே, அதை எழுதிய ‘உஷா சுப்ரமணியன்’, பழைய ரைட்டர் உஷா சுப்ரமணியன்தானா?” என்று கேட்டார்.

“அவரேதான்!” என்றேன். “தேங்க்ஸ் சார்! ஒரு சின்ன சந்தேகம் இருந்துது. அதைக் கிளியர் பண்ணிக்கிறதுக்காகத்தான் கேட்டேன்” என்று சொல்லி, மொபைலை அணைத்து விட்டார்.

அவரது சந்தேகத்துக்கான காரணம் எனக்கு உடனே விளங்கிவிட்டது.

உஷா சுப்ரமணியன் முப்பது வருடங்களுக்கு மேலாகச் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். அவருக்கு வயது இப்போது 60-க்கு மேலிருக்கலாம் என்று யூகிக்கிறேன். அடிக்கடி அவரோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.

“இ-மெயிலில் ஒரு கதையை அனுப்புகிறேன். படித்துவிட்டு உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள்” என்பார். ஆனால், இ-மெயிலில் கதை வராது. சில மாத இடைவெளிக்குப் பின்பு, மீண்டும் போனில் விசாரிப்பார், கதை எப்படி இருந்தது என்று. அதற்குள் அது எனக்கு மறந்தே போயிருக்கும். “கதை எதுவும் வரவில்லையே மேடம்” என்பேன். இப்படியே இரண்டு மூன்று தடவை நடந்தது.

சென்ற மாதம் மீண்டும் அதுபோல் என்னை மொபைலில் தொடர்புகொண்டு, “இடைவெளின்னு ஒரு கதை அனுப்பியிருக்கிறேன். ஆனந்த விகடன்ல பிரசுரிக்கிறீங்களோ இல்லையோ, படிச்சுட்டு உங்க அபிப்ராயத்தைச் சொல்லுங்க” என்றார். எனது ஜி-மெயில் முகவரிக்கு வந்த அந்தக் கதையை உடனே படித்தேன்.

கதையின் கருவும், நடையும் அத்தனை இளமையாக இருந்தன. டயலாக்குகள் இன்றைய இளைஞர்களை அப்படியே கண் முன் நிறுத்தின. இதை எழுதிய உஷா சுப்ரமணியன் அந்தப் பழைய எழுத்தாளர் உஷா சுப்ரமணியன்தானா, அல்லது அதே பெயரில் இன்றைய இளம் எழுத்தாளர் யாரேனும் எழுதுகிறாரா என்று ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது. காலத்தால் தேங்கிப் போய்விடாமல், தன்னைப் புதுப்பித்துக்கொண்டு எழுதியவர் சுஜாதா அவர்கள். அதே போல் தன்னையும் நிரூபித்திருந்தார் உஷா, இந்த ‘இடைவெளி’ கதையில்.

உடனே, உஷா சுப்ரமணியனுக்கு போன் செய்து, கதையை வெகுவாகப் பாராட்டி, அதில் வரிக்கு வரி மிளிர்ந்த இளமையை ரசித்து, என் வியப்பையும் வெளிப்படுத்தி, விரைவிலேயே இந்தக் கதை விகடனில் வெளியாகும் என்று சொன்னேன்.

மேற்படி கதை, 7.4.10 விகடன் இதழில் வெளியாயிற்று. அதைப் படித்து ரசித்த தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன், அது பற்றி இன்றைய தினமணியில் ‘தமிழ்மணி’ பகுதியில், ‘இந்த வாரம்’ பகுதியில் சிலாகித்து எழுதியிருக்கிறார்.

‘கடந்த 20 ஆண்டுகளாக உஷா சுப்ரமணியன் எழுதும் சிறுகதைகளையும் தொடர் கதைகளையும் படித்து வருபவன் நான். எந்த ஒரு படைப்பாளிக்கும் எழுத்தில் வேகமும் ஆழமும் குறைவது இயல்பு. ஆனால், இவர் இன்றைய தலைமுறையினரின் மன ஓட்டத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கிறது’ என்றெல்லாம் பாராட்டியவர் இறுதி வரியில் முத்தாய்ப்பாக,

‘தலைமுறை இடைவெளி தனி மனிதர்களுக்குத்தான். கற்பனைக் குதிரையில் சவாரி செய்யும் எழுத்தாளருக்குக் கிடையாது. இதை நிரூபிக்கிறது உஷா சுப்ரமணியனின் ‘இடைவெளி’ சிறுகதை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சரியான விமர்சனம்!

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் என் நண்பர். சாவி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், அங்கே அவர் எனக்கு சீனியர். அரண்மனை ரகசியம், அரசல் புரசல் போன்ற தலைப்புகளில் அரசியல் கிசுகிசுக்கள் எழுதி வந்தார். மேனகா காந்தி நடத்தி வந்த ‘சூர்யா’ பத்திரிகையிலும் பணியாற்றியிருக்கிறார். சஞ்சய் காந்தியோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டிருக்கிறார். சாவியிலிருந்து விலகிய பின்னர், நியூஸ்கிரைப் வைத்தியநாதனாக பல பத்திரிகைகளில், குறிப்பாக துக்ளக்கில் பல அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறை நான் சாவியிடம் கோபித்துக் கொண்டு விலக முனைந்தபோதெல்லாம், ‘ரவி! அவசரப்படாதே! சாவி எவ்ளோ பெரியவர்! அவருக்கு முன்னாடி நாமெல்லாம் தூசி. அவர் கிட்டே திட்டு வாங்குறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்! இங்கேயே இரு. இவர் கிட்டே சேர்ந்தவங்க யாரும் சோடை போனதில்லே. நீயும் பெரிய ஆளா வருவே!’ என்று என்னைச் சமாதானப்படுத்தி, என் குழப்பங்களைப் போக்கி, மீண்டும் பணி செய்ய வைப்பார்.

அவர் சில சினிமாக்களிலும் தலைகாட்டியிருக்கிறார். ‘மாங்குடி மைனர்’ என்ற படத்தில் ரஜினியுடன் மோதும் அடியாட்களில் அவரும் ஒருவர். நடிகை ஸ்ரீதேவி சிறு குழந்தையாக இருந்தபோது, ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவரை தனது பைக்கிலேயே பல மைல் தூரம் அழைத்துப் போயிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன் சின்ன பிள்ளையாக இருந்த காலத்திலிருந்தே அவரது நண்பனாக இருந்தவர். அந்நாளில், அண்ணா நகரில் தான் குடியிருந்த வீட்டில் ஓர் அறை முழுக்க ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களாக அடைத்து வைத்திருந்தார். ஒரு நாள், அவற்றையெல்லாம் பழைய பேப்பர் கடைக்குப் போட்டு, வந்த பணத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

உண்மையில், அதே உஷா சுப்ரமணியன்தானா இவர் என்ற சந்தேகம் வைத்தியநாதனுக்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அச்சுக்குப் போவதற்கு முன்பு தெளிவுபடுத்திக் கொள்ளச் சொல்லித் தன் உதவியாளர்களுக்கு அவர் சொல்லியிருக்க வேண்டும்.

நேற்று மாலையில், சில மணி நேரம் கழித்து மீண்டும் போன் செய்தார் தினமணி ராணி. “அவர் உஷா சுப்ரமணியனா, உஷா சுப்ரமணியமா?” என்று கேட்டார். “உஷா சுப்ரமணியன்தான்” என்று தெளிவுபடுத்தினேன். “ஆமாம், எதற்குக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டதும், மறுநாள் தினமணியில் வெளியாகவிருக்கும் வைத்தியாநாதனின் விமர்சனக் கட்டுரை பற்றிச் சொன்னார். உஷா சுப்ரமணியனின் போட்டோ கிடைக்குமா என்று கேட்டார். உஷாவுக்கே போன் செய்து அனுப்பச் சொல்கிறேன் என்றேன்.

உஷா சுப்ரமணியனுக்கு போன் செய்தேன். விவரத்தைச் சொல்லி, தினமணி நம்பரையும் கொடுத்தேன்.

விகடனில் ‘இடைவெளி’ சிறுகதையைப் படிக்காதவர்களுக்காக அதை எனது அடுத்த பதிவில் தருகிறேன்.

***
முகஸ்துதி செய்; நம்ப மாட்டான். விமர்சனம் செய்; விரும்ப மாட்டான். உற்சாகப்படுத்து; மறக்க மாட்டான்!

விகடன் குடும்பத்தோடு ஒரு சுற்றுலா!

சின்ன வயதில் எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயங்கள் இரண்டு. புதுசு புதுசாக உடைகள் வாங்கி அணிய வேண்டும்; புதுசு புதுசான ஊர்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும்.

அந்த வயதில் இரண்டுமே எனக்கு அளவாகத்தான் கிடைத்தன. என் பேராவலைத் தீர்க்கும் விதமாக இல்லை.

ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும்போது (காணை என்னும் கிராமத்திலிருந்து) பள்ளிச் சுற்றுலாவில் கலந்துகொண்டு சாத்தனூர் டேம் போய் வந்த சுற்றுலாப் பயணம் இன்னமும் எனக்குத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. அதன்பின், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது (விழுப்புரம் மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளி) மீண்டும் பள்ளிச் சுற்றுலாவில் அதே சாத்தனூர் டேம் பயணம். வகுப்பில் பிளெய்ன் கலர் உடையணிந்து, கெடுபிடியாக இருக்கும் எங்கள் கணித ஆசிரியர் திரு.பி.ராஜாப்பிள்ளை, அந்தச் சுற்றுலாவில் ஒரு சினிமா ஹீரோ போல பளீர் பேன்ட்டும், வண்ண மயமான டி-ஷர்ட்டும் அணிந்து, எங்களோடு ரொம்ப ஜாலியாகப் பழகியதை மறக்க முடியாது. விரல்களை மடக்கி வாயில் வைத்து அவர் விசிலடித்ததை முதன்முறையாகப் பார்த்து வியந்தேன்; ரசித்தேன்!

என் இளமை வயதுச் சுற்றுலாப் பயணங்கள் அத்தோடு சரி! பின்னர் நான் சாவியில் வேலைக்குச் சேரும்வரை எந்தச் சுற்றுலாப் பயணமும் எனக்கு வாய்க்கவில்லை.

சாவியிலும் 1991 முதல் 1995 வரையிலான காலங்களில், சாவி சாருடன் இரண்டு முறை பெங்களூர், இரண்டு முறை ஊட்டி, இரண்டு முறை வெலிங்டன் (ஊட்டி) என ஆறேழு தடவை சாவி ஆசிரியர் குழுவோடு சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். கடைசி முறை மட்டும் இன்பச் சுற்றுலா, சாவி பத்திரிகையையே மூடும்படியான துன்பச் சுற்றுலாவாக மாறிவிட்டது.

சுற்றுலா செல்லும் பெருவிருப்பம் என்னுள் அமிழ்ந்து கிடந்ததன் விளைவாகவோ என்னவோ, எனக்குத் திருமணம் ஆன பின்பு, 1994-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். முதல்முறை என் மனைவியை நான் அழைத்துச் சென்றது ஊட்டிக்கு. அப்போது என் மகளுக்கு வயது 8 மாதம்.

அடுத்தது, 1997-ல் என் நான்கு வயது மகளுடனும், இரண்டு வயது மகனுடனும் மீண்டும் அதே ஊட்டிக்கு இரண்டாம் முறையாக மனைவியை அழைத்துச் சென்றேன். அதன்பின், இந்த 12 ஆண்டுகளில் குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளும், சில சூழ்நிலைகள் காரணமாக எனக்கு ரூ.15,000 வரை பண நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு ஆண்டும், ஆக மூன்று ஆண்டுகள் மட்டும் சுற்றுலா போகவில்லை. மீதி 9 முறையும் குடும்பத்தோடு சுற்றுலா சென்று வந்துள்ளேன். ஊட்டிக்கு மூன்று முறையும் (மொத்தமாக 5 முறை), கேரளாவில் திருவனந்தபுரம் (கன்னியாகுமரி), பாலக்காடு, திருச்சூர் என ஒரு முறையும், அதே கேரளாவுக்கு தேனி, கம்பம், குமுளி வழியாக மூணாறுக்கு ஒரு முறையும், பெங்களூர் மற்றும் மைசூர், ஹைதராபாத், கொடைக்கானல், திருவண்ணாமலை மற்றும் சாத்தனூர் எனச் சுற்றுலா போய் வந்திருக்கிறேன்.

இந்த ஆண்டு, மனைவிக்கு ஹெர்னியா ஆபரேஷன் முடிந்து பெட் ரெஸ்ட்டில் இருப்பதால், எங்கும் போக முடியவில்லையே என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில், திடுமென விகடன் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும் திட்டம் உருவாகி, அதில் நானும் கலந்துகொண்டேன்.

விகடன் குழும ஆசிரியர் குழுவினர் மொத்தம் சுமார் 120 பேர், மூன்று சொகுசுப் பேருந்துகளில் மூணாறு சென்று, பத்திரிகை வேலைகளை அறவே மறந்து, இரண்டு நாட்கள் ஜாலியாகக் கழித்துவிட்டு வந்தோம்.

சென்ற 15.4.2010 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் கிளம்பி, விடியற்காலை 6 மணியளவில் உடுமலைப்பேட்டை போய்ச் சேர்ந்தோம். அங்கே ஒரு திருமண மண்டபத்தில் சிறிது நேரம் தங்கி, குளித்து, வேறு உடைக்கு மாறி, டிபன் காபி சாப்பிட்டு, மீண்டும் கிளம்பி, மூணாறு போய்ச் சேர்ந்தபோது மாலை மணி 4. மினர்வா என்கிறஅருமையான ஒரு ஹோட்டலில் அறைகள் எடுத்துத் தங்கினோம்.

அன்று மாலை 5 மணியளவில், அருகில் உள்ள ஒரு பூங்காவுக்குப் போனோம். இரவு 7 மணியளவில் ‘கேம்ப் ஃபயர்’ கொளுத்தி, சுற்றிச் சுற்றி வந்து குத்தாட்டம் போட்டோம். பின்னணியில், லேட்டஸ்ட் தமிழ்ப் பாடல்கள் ஸ்பீக்கர்களில் முழங்கின. 9 மணி வரை, கால்கள் சலித்துப் போகும் வரைக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.பின்னர், ‘சில்வர் டிப்ஸ்’ என்கிற ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு உணவு உண்ணச் சென்றோம். அங்கே ஒவ்வொரு அறைக்கும் ஒரு பிரபல சினிமாப் படத்தின் தலைப்பையே அறையின் பெயராக எழுதி வைத்திருந்தார்கள். மொகல் இ ஆஸம், அசோகா, ஜோதா அக்பர், லகான் போன்ற இந்திப் படங்களின் பெயர்களும், ப்ரீடேட்டர், டெர்மினேட்டர், சிட்டி லைட்ஸ், பைசைக்கிள் தீவ்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களின் பெயர்களும் கண்ணில் பட்டன. தவிர, அந்தந்தப் படங்களின் ஸ்டில்லை அந்தந்த அறைக் கதவுகளில் அழகாகப் பதித்திருந்தார்கள்.

தவிர, ஒவ்வொரு தளத்திலும் காரிடார்களில் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, முகம்மது ரஃபி, கிஷோர் குமார், அசோக் குமார், திலிப் குமார், சுனில் தத், நர்கிஸ் போன்றோரின் பிரமாண்ட படங்கள் சுவர்களில் பதிக்கப்பட்டு, கீழே கறுப்புச் சலவைக் கல்லில் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்பட்டன. ரசனையோடு பார்த்துக்கொண்டே நாலாவது மாடிக்குச் சென்றதும், இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிவிட்டேன்.

என் அபிமான பாடகர் திரு. டி.எம்.சௌந்தர்ராஜனின் பிரமாண்ட படம் வைக்கப்பட்டு, அதன் கீழே அவரைப் பற்றிய குறிப்பு காணப்பட்டது. அங்கே காணப்பட்ட ஒரே தமிழ்ப் பாடகரின் படம் டி.எம்.எஸ்ஸின் படம்தான். சிலிர்த்துப்போன நான் அப்போதே, அந்த நிமிஷமே டி.எம்.எஸ்ஸுடன் செல்போனில் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைத் தெரிவித்தேன். “அப்படியா! சந்தோஷம்... சந்தோஷம்...” என்றவர், கேரளாவில் தனக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாகவும், கேரள தினசரிப் பத்திரிகை ஒன்றில் (அவருக்குப் பெயர் தெரியவில்லை) சில மாதங்களுக்கு முன் ஒரு முழுப்பக்க அளவில் தன்னைப் பற்றிய கட்டுரை வெளிவந்ததாகவும் சொன்னார்.மறுநாள், லக்காம் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தோம்; மாட்டுப்பட்டி டேம் பார்த்தோம்; அதன் அருகில் உள்ள படகுத் துறையில் மோட்டார் தோணிகளோட்டி விளையாடி மகிழ்ந்தோம்.

மாலை 5 மணியளவில் மூணாறை விட்டுக் கிளம்பினோம். உடுமலைப் பேட்டைக்குச் சில கிலோ மீட்டர்கள் முன்னால் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில், இரவு 9 மணியளவில் பஃபே விருந்துண்டோம். பின்பு, அங்கிருந்து கிளம்பி, ஞாயிறு காலை 8 மணியளவில் தகிக்கும் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

மூணாறுக்கு ஏற்கெனவே குடும்பத்தோடு போய் இரண்டு மூன்று நாள் தங்கி, அந்தச் சுகத்தை அனுபவித்துள்ளேன். ஆனால், இந்த முறை அலுவலக நண்பர்களுடன், அதுவும் சுமார் 120 பேருடன் ஆட்டமும் பாட்டமும் கும்மாளமும் கொண்டாட்டமுமாகப் போய் வந்தது வேறு விதமான சுகம்.

இந்த நாட்கள் இனிய நாட்களாக என்றென்றும் என் மனதில் நிலைத்திருக்கும்.

***
வாழ்க்கையின் நோக்கம் அதை அனுபவிப்பதுதான் என்பது, உலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் தெரிந்திருக்கிறது - மனிதனைத் தவிர!

.

புத்தகப் பரிசு ஏன்?

“எதுக்காகப் புத்தகப் பரிசு கொடுக்குறீங்க? உங்களுக்கு இதனால என்ன லாபம்?” என்று என் வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள் சிலர் கேட்டார்கள். “அதில் எனக்கு என்னவோ ஒரு மகிழ்ச்சி” என்பதற்கு மேலே இதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு.

எனக்கு இந்த ஆர்வம் எப்படி வந்திருக்கும் என்று யோசிக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, வகுப்பில் முதல் ரேங்க் வந்தாலோ அல்லது ஒரு பெரிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்து, மனனம் செய்து தப்பில்லாமல் எழுதிக் காண்பித்தாலோ, என்னைப் பாராட்டும் விதமாக அப்பா பரிசு தருவார். அந்தப் பரிசு ஒன்றும் காசு போட்டு வாங்கிக் கொடுக்கும் பொருளாக இருக்காது. ஆனால், மிக சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். அதாவது, அவரே கைப்பட கிருஷ்ணன் படம் அல்லது ஏதேனும் இயற்கைக் காட்சிப் படம், பூக்கள் படம் என வரைந்து, அதற்கு வாட்டர் கலர் கொடுத்து, அழுத்தமான நிறத்தில் பார்டர் வைத்து, ஒழுங்காகக் கத்தரித்து, கொஞ்சம்கூடக் கசங்காமல், மடிக்காமல், மொடமொடவென்று தருவார். அதைப் பார்க்கவே அத்தனை ஆசையாக இருக்கும். அதைப் பரிசாகப் பெற்றதில் ரொம்பப் பெருமையாக இருக்கும்.

அப்பா ஓவியர் அல்ல. அவர் வரைந்து தரும் படம் அப்படியொன்றும் பிரமாதமாக இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், அந்நாளில் அந்தப் பரிசு என்னை ரொம்பவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று கவனத்தோடு படித்தது ஞாபகத்தில் இருக்கிறது.

நான் ஐந்தாவது, ஆறாவது வகுப்பு படிக்கும்போது, அப்பாதான் என் வகுப்பு ஆசிரியர். இந்த ஓவியப் பரிசு எனக்கு மட்டுமல்ல; வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவருக்குமே உண்டு. வகுப்பில் முதலாவதாக வந்த மாணவன், கணிதத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவன், அழகான கையெழுத்தில் வீட்டுப் பாடங்களை எழுதி வந்த மாணவன், புத்தகம் நோட்டுகளைக் கண்டபடி கிழிக்காமல் சுத்தமாக அட்டை போட்டு ஒழுங்காக வைத்திருக்கும் மாணவன்... இப்படிப் பல மாணவர்களுக்கும் அப்பா தன் கைப்பட ஏதேனும் படம் வரைந்து, கலர் செய்து, பரிசாகத் தருவார். அதை ஏதோ ரவிவர்மா ஓவியம் போன்று பொக்கிஷமாக ரொம்ப நாளைக்கு எங்கள் புத்தகத்துக்குள் வைத்திருப்போம்.

பின்னர், நான் விழுப்புரம் மகாத்மாகாந்தி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தபோது, அங்கே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, தனி நாடகப் போட்டி எனச் சேர்ந்து, எல்லாவற்றிலும் பரிசு பெற்றிருக்கிறேன். பெரும்பாலும் புத்தகப் பரிசுகள்தான்.

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாடல் போட்டி என மூன்று போட்டிகளுக்கும் முதல் பரிசு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு முறை என் பெயர் மைக்கில் அறிவிக்கப்படும்போதும் ஓடிப்போய் மேடை ஏறி, பெருந்தலைவர் கையால் பரிசு பெற்றுக்கொண்டு என் இடத்துக்கு வந்து அமர்ந்து கொள்வேன். இரண்டு முறை அடுத்தடுத்து நான் அழைக்கப்படவும், “தம்பி! இருந்து மொத்தமா எல்லாத்தையும் வாங்கிட்டுப் போயிடுண்ணேன்!” என்று காமராஜ் அவர்கள் புன்சிரிப்போடு கூறியது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவர் என் தோளில் கை போட்ட அந்த ஸ்பரிச உணர்வை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

அன்றைக்குக் காமராஜ் பற்றிப் பெருமைகொள்ளும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது. ஒரு பெரிய மனிதர் கையால் பரிசு வாங்குகிறோம் என்கிற பெருமித உணர்வு மட்டுமே! இப்போது போல் போட்டோ வசதிகள் அதிகம் இல்லாத காலம் அது. எனவே, என் நினைவுகளில் மட்டுமே அந்தக் காட்சிகள் புகைப்படமாகப் பதிந்துள்ளன.

காமராஜ் கையால் நான் பரிசாகப் பெற்றவை அனைத்தும் பாரதியார் கவிதைகள், திருக்குறள், குழந்தைப் பாடல்கள், காந்தியின் வாழ்வில் போன்ற புத்தகங்கள்தான். எப்படிக் காமராஜரின் மதிப்பு எனக்கு அன்றைக்குத் தெரியவில்லையோ, அப்படிப் புத்தகங்களின் மதிப்பும் தெரியாதிருந்த வயது. மறுபடி மறுபடி புத்தகம்தான் பரிசா, வேற எதுவும் டிபன் பாக்ஸ், ஜாமெண்ட்ரி பாக்ஸ்னு கொடுக்கக் கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அந்தப் பரிசுப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் தங்க நிறத்தில் பார்டர் இட்ட ஒரு சதுரச் சீட்டு ஒட்டப்பட்டிருக்கும். தலைப்பில், மகாத்மாகாந்தி மேல்நிலைப் பள்ளி என்று கொட்டை எழுத்தில் போட்டு, இன்ன மாணவன், இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட முதல் பரிசு என்று அச்சடித்திருக்கும். கீழே பரிசு வழங்கியவர் திரு. கு.காமராஜ், விழாத் தலைவர் என்று போட்டு, காமராஜரின் கையொப்பம் இருக்கும். அந்தப் புத்தகங்களை நான் ரொம்பக் காலம் பத்திரமாக வைத்திருந்தேன். சமீபத்தில் 2000-வது ஆண்டில், சாலிகிராமத்தில் புது ஃப்ளாட் வாங்கிக் குடியேறியபோது, அங்கே அலமாரியில் என்னிடமிருந்த புத்தகங்களையெல்லாம் லைப்ரரி போன்று அடுக்கி வைத்தேன். எறும்பு மருந்து, நாப்தலின் உருண்டைகள் என பாதுகாப்பாக வைத்திருந்தபோதிலும், எப்படியோ அலமாரி மொத்தமும் கரையான் குடியேறி, அத்தனைப் புத்தகங்களையும் (கிட்டத்தட்ட 200 புத்தகங்கள்) சில்லுச் சில்லாக அரித்துத் தள்ளிவிட்டது. அவற்றில், காமராஜ் கையால் பரிசாகப் பெற்ற மூன்று புத்தகங்களும் அடக்கம். காமராஜ் கையெழுத்திட்டிருந்த அந்த சதுரச் சீட்டுகூடத் தேறவில்லை. துக்கம் தாளாமல் அனைத்தையும் அள்ளிக்கொண்டு போய், தெருமுக்குக் குப்பைத் தொட்டியை நிரப்பிவிட்டு வந்தேன்.

1984, 85-ல் நான் விழுப்புரத்துக்கு அருகில் உள்ள காணை என்கிற கிராமத்தில், டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி வந்தேன். அங்கே என்னிடம் தட்டச்சு பயின்ற மாணவர்களுக்குப் போட்டி வைத்துப் பரிசுகள் வழங்கியிருக்கிறேன். டைப்ரைட்டர் ரிப்பேர் சம்பந்தமாக நான் சென்னை வந்த சமயத்தில், சென்னைக் கடற்கரை ஸ்டேஷனுக்கு வெளியே இருக்கும் பர்மா பஜாரில் டிஜிட்டல் வாட்ச்கள் விற்றுக்கொண்டு இருந்ததைக் கண்டேன். ஒவ்வொன்றும் தங்க நிறத்தில் பளபளவென்று மின்னின. நான் டிஜிட்டல் வாட்சைப் பார்ப்பது அதுதான் முதல் முறை. ஆசையாக இருந்தது. சும்மா விலை விசாரித்துப் பார்ப்போமே என்று கேட்டதில், நான் எதிர்பார்த்ததற்கும் மலிவாக 90 ரூபாய் என்றார்கள். ஆனால், அன்றைக்கு எனக்கு அந்தத் தொகையே மிக அதிகம். எனவே, வேண்டாம் என்று நான் நகர முற்பட, தடுத்து நிறுத்தி, “என்ன விலைதான் கேக்கறே?” என்றார்கள். தப்பித்தால் போதும் என்று, “30 ரூபாய்” என்றேன். “சரி, எத்தினி வோணும்?” என்றார்கள். நிஜமாகவே தலா 30 ரூபாய் வீதம், ஐந்து வாட்ச்களை வாங்கிக்கொண்டு போனேன்.

என் இன்ஸ்டிடியூட்டின் அறிவிப்புப் பலகையில், இங்கே தட்டச்சு சிறப்பாகப் பயின்று, தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு தலா ஒரு வாட்ச் பரிசு அளிக்கப்போவதாக எழுதி வைத்திருந்தேன். அத்தனை மாணவர்களுக்கும் ஆச்சரியம்! என்னிடம் படித்ததே மொத்தம் 20 மாணவ, மாணவிகள்தான்! அவர்களில் ஐந்து பேர் மட்டும் சிறப்பாகப் பயின்று, தேர்வுக்குத் தயாரானார்கள். அவர்கள் ஐவருக்கும் தலா ஒரு வாட்ச் பரிசளித்தேன். டிஜிட்டல் வாட்ச் அவர்களுக்கும் அப்போது புதுசு! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டார்கள். அந்த ஐந்து பேருமே தட்டச்சுத் தேர்விலும் வெற்றி பெற்றார்கள். அதோடு இன்ஸ்டிடியூட்டை இழுத்து மூடிவிட்டுச் சென்னை வந்துவிட்டேன்.

அங்கே இங்கே பல இடங்களில் சின்னச் சின்ன வேலைகள் செய்து, பின்பு சாவி வார இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். சாவி சார் அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுகள் தந்து ஊக்குவிப்பார். ஒவ்வொரு ஆயுத பூஜையன்றும் தன்னிடம் பணிபுரிபவர்கள் பெயர்களையெல்லாம் எழுதிக் குலுக்கிப்போட்டு எடுத்து, தலா 100 ரூபாய் தருவார். எனக்கும் ஒருமுறை அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

ஒருமுறை, சாவி வார இதழில் ‘மண் வளம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ என ஒன்று நடத்தினோம். அதற்கு வந்த சிறுகதைகளையெல்லாம் தேர்வு செய்து, வாரம் ஒன்றாக, மொத்தம் 60 கதைகளை வெளியிட்டேன். பின்பு, அவற்றிலிருந்து 15 கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து (60 கதைகளையும் படிக்க அவகாசம் இருக்காது என்பதால்) நடுவர்களிடம் தந்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தரச் சொன்னேன். நடுவர்கள்: சுஜாதா, சிவசங்கரி, வைரமுத்து, இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர் கி.வெங்கடசுப்பிரமணியன்.

பரிசுகளை ஸ்பான்சர் செய்தது பாலு ஜுவல்லர்ஸ் நிறுவனம். நாரத கான சபாவில் நடந்த இந்த விழாவில் நான் என் மனைவியோடு போய் பார்வையாளர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தேன். திடுமென்று என் பெயரை மைக்கில் அறிவித்தார் வைரமுத்து. எழுந்து ஓடினேன். சர்ப்ரைஸாக சாவி சார் அங்கே மேடையில், இந்தச் சிறுகதைப் போட்டி சிறப்புற நடப்பதற்கு மூல காரணம் நான்தான் என்பதாகப் பாராட்டிப் பேசி, பாலு ஜுவல்லர்ஸ் அதிபர் கையால் வெள்ளிக் குத்துவிளக்கு பரிசளித்தார். இனிய ஆச்சரியம் அது!

விகடனிலும், சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்கள், அங்கே பணிபுரிபவர்களுக்கு அவ்வப்போது இவ்வித சர்ப்ரைஸ் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவது வழக்கம். ஒருமுறை, திரு.டி.என்.சேஷன் எழுதும் கட்டுரைத் தொடர் விரைவில் ஆரம்பிக்கவிருப்பது குறித்து, விகடனின் கடைசி பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம். என்ன எழுதப் போகிறார் என்பதைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்காமல், ‘நான் ரெடி... நீங்க ரெடியா?’ என்கிற வார்த்தைகளை மட்டும் போட்டு, கட்டை விரலை உயர்த்திக் காட்டிப் புன்சிரிக்கும் சேஷன் படத்தைப் பெரிதாக வெளியிட்டிருந்தோம்.

அது அச்சுக்குப் போகும் முன் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்த அறிவிப்பு கடைசி பக்கத்தில் இடம்பெறும் என்றால், அதற்கு எதிர்ப்பக்கத்தில், அதாவது பின் அட்டையின் உள்புறத்தில் என்ன விளம்பரம் இடம் பெறப்போகிறது என்று அறிய விரும்பினேன். ஏதேனும் விவகாரமான விளம்பரம் வந்துவிட்டால், வாசகர்கள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துச் சிரிப்புக்கிடமாகிவிடப் போகிறதே என்பது என் கவலை.

நான் பயந்தபடியேதான் ஆனது. உள் அட்டை விளம்பரம் ஒரு காண்டம் விளம்பரம். அதில் கவர்ச்சியாக ஒரு பெண்ணின் படம் இருந்தது. ‘என்ன, நீங்கள் தயாராகிவிட்டீர்களா?’ என்பது போன்று, சேஷன் அறிவிப்போடு பொருந்திப் போகும்படியான ஒரு வாசகமும் அதில் இருந்தது.

கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தி, சேஷன் அறிவிப்பை முதல் பக்கத்துக்கு இடம் மாற்றினோம்.

இது நடந்து பல நாட்களுக்குப் பின்பு, மேற்படி சம்பவத்தை நான் மறந்தே போயிருந்த ஒரு தினத்தில், அப்போது விகடன் இணை ஆசிரியராக இருந்த மதன் சார் என்னை அழைத்தார். போனேன். அவர் கையில் ஒரு கவர். அதை என்னிடம் கொடுத்தார். “என்ன சார்?” என்றேன். “வாங்கிப் பிரிச்சுத்தான் பாருங்களேன்!” என்று புன்னகைத்தார். பிரித்துப் பார்த்தேன். 500 ரூபாய்க்கு ஒரு செக்கும், சேர்மன் (அப்போது விகடன் ஆசிரியர்) பாலு சார் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதமும் இருந்தது.

“தக்க சமயத்தில் தங்களின் சமயோசித புத்தியால், விகடனுக்கு நேரவிருந்த ஒரு தர்மசங்கடத்தைத் தவிர்த்ததற்கு நன்றி! அதற்கு என்னுடைய சிறு அன்பளிப்பாக இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பிரிண்ட் செய்து, அடியில் கையெழுத்திட்டிருந்தார் ஆசிரியர் பாலு சார். 500 ரூபாய் என்பது அப்போது கணிசமான தொகை. என் சம்பளமே அப்போது 2,500 ரூபாய்தான்! குபீரென்று உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி பிறந்தது. என்றாலும், அதை மதன் சாரிடமே திருப்பிக் கொடுத்து, “நன்றி சார்! ஆனால், இது என்னுடைய டியூட்டிதான். இதுக்குத் தனியா பணம் வாங்கிக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கலை” என்றேன்.

அவர் வாங்க மறுத்துவிட்டார். பின்பு, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களிடமே அதை எடுத்துப் போய்த் திருப்பிக் கொடுத்தேன். “செய்யும் வேலையை முடிந்தவரையில் சிறப்பாகச் செய்ய வேண்டியது
என் கடமை. அதற்கு இதுபோல் தனியாக அன்பளிப்பு வாங்க விரும்பவில்லை” என்றேன். அதற்கு ஆசிரியர், “வேலையில் பிரத்யேக ஈடுபாடு காட்டிச் செயல்படுகிறவர்களுக்கு என் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்கும் விதமாக இப்படி அன்பளிப்பு கொடுப்பது வழக்கம்தான். என்னுடைய மகிழ்ச்சிக்காக இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வற்புறுத்திக் கொடுத்தார்.

மொத்தத்தில், பரிசு கொடுப்பதும் பெறுவதும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. அந்த மகிழ்ச்சி, பரிசுப் பொருள் என்ன விலை என்பதில் இல்லை. அதைக் கொடுப்பவரும் பெறுபவரும் எத்தகைய மன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

***

சந்தோஷத்தை வாங்க முயற்சி செய்யாதீர்கள். அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள். அது சுலபம்!

தேர்ந்தெடுங்கள் ஐவரை! - ஒரு போட்டி

கைச்சுவை எழுத்துலகின் ஜாம்பவான் திரு.பாக்கியம் ராமசாமி அவர்களோடு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகப் பழகி வரும் பாக்கியம் பெற்றவன் நான். பள்ளிக்கூடத்தில் நான் ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே அவரது எழுத்துத் திறமை பற்றியும், அவருடைய ஜீவிய கதாபாத்திரங்களான அப்புசாமி-சீதாப்பாட்டி பற்றியும் என் தந்தையார் மூலமாக அறிந்திருக்கிறேன். என் அப்பா, பாக்கியம் ராமசாமியின் பரம ரசிகர்.

‘அப்புசாமி டாட் காம்’ என்று ஓர் இணைய தளத்தைத் தொடங்கி, அதில் அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் உள்பட பல்வேறு சுவையான கட்டுரைகளையும், செய்திகளையும், தகவல்களையும் பதிவிட்டு வருகிறார் பாக்கியம் ராமசாமி.

தவிர, அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட் என்ற ஒன்றையும் ஏற்படுத்தி, வருடந்தோறும் மே மாதத்தில், நகைச்சுவையில் சாதனை படைத்தவராகத் தாம் கருதும் பிரபலம் ஒருவருக்குப் பாராட்டுப் பத்திரமும், விருதும் அளித்துக் கௌரவித்து வருகிறார். ஓவியர் கோபுலு, எழுத்தாளர் கோமதி ஸ்வாமிநாதன், காத்தாடி ராமமூர்த்தி என கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக இந்த டிரஸ்ட் மூலம் விருது பெற்றவர்கள் பலர்.

இந்த வருடமும் அதே போல், வரும் மே மாதத்தில் நகைச்சுவைப் பிரபலம் ஒருவருக்குப் பாராட்டுப் பத்திரமும், விருதும் அளித்துக் கௌரவிக்க இருக்கிறார் பாக்கியம் ராமசாமி. (இன்னும் அடுத்து வரும் ஆண்டுகளிலும், பல நகைச்சுவை மன்னர்களுக்கும் சக்கரவர்த்திகளுக்கும் இவர் விருது அளித்துக் கௌரவிக்கலாம். ஆனால், ஒரே ஒரு நகைச்சுவைத் திலகத்துக்கு மட்டும் இவரால் விருது கொடுத்துக் கௌரவிக்க முடியாது. அந்த ‘பாக்கியம்’ இவருக்கு இல்லை; ‘அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட்’ மூலம் விருது பெறும் ‘பாக்கியம்’ அந்த நகைச்சுவைத் திலகத்துக்கும் இல்லை!)

இதற்கான விழா, கடந்த வருடங்களில் நடந்தது போலவே, அநேகமாக இந்த முறையும் நாரத சபா மினி ஹாலில் நடக்கக்கூடும். பிரபலம் ஒருவருக்கு விருது கொடுப்பதோடு கூடவே, இந்த முறை நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர்கள் ஐந்து பேருக்குத் தலா ரூ.250/- வழங்குவதென்றும் முடிவு செய்துள்ளார் பாக்கியம் ராமசாமி.

இதற்காக அவர் என்னைத் தொடர்பு கொண்டு, சிறந்த ஜோக் எழுத்தாளர்கள் ஐந்து பேரை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டபோதுதான், இந்தப் புத்தகப் போட்டிக்கான யோசனை எனக்கு உதயமாயிற்று.

யாரோ ஐந்து பேரை நானே சிறந்த ஜோக் எழுத்தாளர்கள் என்று தீர்மானித்து, அவர்கள் பெயரைப் பரிந்துரைப்பதைவிட, ஒரு ஜோக் போட்டி நடத்தி, சிறந்த ஜோக்குகளைத் தேர்ந்தெடுக்கலாமே என்று முதலில் யோசனை செய்தோம். சில காரணங்களால் அது நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பின்பு, வெவ்வேறு யோசனைகளுக்குப் பிறகு, இந்தப் புத்தகப் போட்டி யோசனையைச் சொன்னேன். அவருக்கும் அது பிடித்திருந்தது.

அதன்படி, நேற்றைய பதிவில் 30 ஜோக்குகளைப் பிரசுரித்துள்ளேன். பழைய ஆனந்த விகடன் இதழ்களில் வெளியான ஆயிரக்கணக்கான ஜோக்குகளைப் படித்துப் பரிசீலித்து, மிக மிகச் சிறந்த ஜோக்குகளாக நான் கருதிய முப்பதை மட்டும் தேர்ந்தெடுத்துப் போட்டிருந்தேன்.

இனி, போட்டி!

அந்த முப்பது ஜோக்குகளையும் படித்திருப்பீர்கள். அவற்றில் உங்களுக்கு மிக மிகப் பிடித்த முதல் ஐந்து ஜோக்குகள் எவை?

உங்கள் நகைச்சுவை ரசனைக்கேற்ப ஐந்தே ஐந்து ஜோக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றை எழுதிய ஐந்து பேரின் பெயர்களை மட்டும் எனக்குப் பின்னூட்டமாக அனுப்பிட வேண்டுகிறேன்.

அவசரமில்லை; இந்த மாத இறுதி வரை உங்கள் தீர்ப்புகளை எனக்கு அனுப்பிக்கொண்டு இருக்கலாம். அதாவது, ஏப்ரல் 30 தேதி முடிய வரும் உங்கள் பின்னூட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மே முதல் வாரத்தில் உங்கள் பின்னூட்டங்களைப் பரிசீலித்து, எந்தெந்த ஜோக் எழுத்தாளருடைய பெயர்களை அதிக அளவு நீங்கள் பரிந்துரைத்திருக்கிறீர்கள் என்று பார்த்து, அதன் அடிப்படையில், உங்களிடம் அதிக வோட் வாங்கியிருக்கும் முதல் ஐந்து ஜோக் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.250-ஐ ‘அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட்’டின் அன்புப் பரிசாக அனுப்பி வைப்பார் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி. பரிசு பெறும் அந்த ஜோக் எழுத்தாளர்கள் தங்களால் இயன்றால், சென்னையில் நடைபெறும் அந்த நகைச்சுவை விழாவில் கலந்துகொண்டு, நேரிலேயே அந்தப் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், அவர்களின் முகவரிக்கு அந்தத் தொகை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் பாக்கியம் ராமசாமி.

சரி, தங்கள் பின்னூட்டங்களின் மூலம் பரிசுக்குரிய ஐந்து ஜோக் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த ‘என் டயரி’ வாசகர்களுக்கு என்ன பரிசு?

சென்ற பதிவிலேயே சொன்னதுபோல், ரூ.175 விலையுள்ள ‘முயற்சி திருவினையாக்கும்’ என்கிற புத்தகம்தான்!

இங்கே, இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சில விவரங்கள்:

இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு மளமளவென்று முழுவதும் விற்றுத் தீர்ந்து, இரண்டாவது பதிப்பும் வெளியாகி சுறுசுறுப்பான விற்பனையில் இருக்கிறது.

ஐ.ஐ.டி. படித்து சொந்தத் தொழில் தொடங்கி, வெற்றி பெற்றவர்களைப் பற்றிய தகவல்களும் பேட்டிக் கட்டுரைகளுமாக உள்ள இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்குத் தாங்களும் சொந்தமாகத் தொழில் தொடங்கி, சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற உத்வேகம் வருவது நிச்சயம். இதை ஆங்கிலத்தில் எழுதிய ‘ராஷ்மி பன்சால்’ அதே வேகத்தோடு 'கனெக்ட் தி டாட்ஸ்’ என்னும் தலைப்பில் மற்றொரு புத்தகத்தையும் சுறுசுறுப்பாக எழுதி, வெளியிட்டுவிட்டார். ஐ.ஐ.டி. படிக்காமலே, சொந்தத் திறமையை மட்டுமே முதலீடாகக் கொண்டு தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்களைப் பற்றிய புத்தகம் இது. (இதன் பின் அட்டையில் ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ மொழியாக்கப் புத்தக அட்டைகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன - விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்ட ‘முயற்சி திருவினையாக்கும்’ உள்பட!)

‘ஸ்டே ஹங்ரி...’ புத்தகம் தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்கிற மகிழ்ச்சியோடு, ராஷ்மி பன்சாலின் ‘கனெக்ட் தி டாட்ஸ்’ புத்தகத்தையும் தமிழில் வெளியிட விகடன் பிரசுரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. அநேகமாக அதையும் மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டலாம் என்று நம்புகிறேன்.

சரி, போட்டி விஷயத்துக்கு வருகிறேன். பின்னூட்டங்களின் மூலம் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் ஜோக் எழுத்தாளர்கள் ஐவர் பெயரையும் யார் மிகச் சரியாகத் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளாரோ, அவருக்கு ‘முயற்சி திருவினையாக்கும்’ புத்தகத்தை என் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

இந்தப் போட்டிக்கான சில விளக்கங்களும், விதிமுறைகளும்:

1. ஒருவர் ஒரே ஒரு பின்னூட்டம் மூலமாகத்தான் தனது தீர்ப்பைத் தெரியப்படுத்த வேண்டும். வெவ்வேறு பர்முடேஷன் காம்பினேஷனில் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் மூலம் வோட் அளித்தால், அவை அனைத்துமே நிராகரிக்கப்படும்.

2. உங்கள் பின்னூட்டத்தில் ஐந்தே ஐந்து ஜோக் எழுத்தாளர்கள் பெயரை மட்டுமே நீங்கள் குறிப்பிட வேண்டும். எண்ணிக்கையில் ஒன்று குறைந்தாலோ, ஒன்று அதிகமானாலோ, அது போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

3. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஐந்து ஜோக் எழுத்தாளர்களின் பெயர்களையும், முந்தைய ஜோக் பதிவில் குறிப்பிட்டுள்ளது போலவே முழுதாகக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

4. நீங்கள் வலைப்பதிவராக இருந்தால், பின்னூட்டத்தில் அதன் யு.ஆர்.எல்-ஐக் கொடுங்கள்; அல்லது, உங்கள் இ-மெயில் முகவரியைக் கொடுங்கள். மற்றபடி, எக்காரணம் கொண்டும் உங்கள் அஞ்சலக முகவரியைக் குறிப்பிட வேண்டாம்.

5. நீங்கள் வலைப்பதிவராகவோ, இ-மெயில் முகவரி இல்லாதவராகவோ இருந்தாலும், பின்னூட்டத்தின் மூலம் ஐந்து ஜோக் எழுத்தாளர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், உங்கள் முழுப் பெயரோடு, உங்கள் ஊர்ப் பெயரையும் குறிப்பிட வேண்டியது அவசியம். பெயர், ஊர் இல்லாத அனானிமஸ் பின்னூட்டங்கள் ஏற்கப்படமாட்டாது.

6. இம்மாத இறுதிக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 30 தேதிக்குப் பிறகு வரும் இதற்கான பின்னூட்டங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

7. நான் அறிவித்துள்ள இந்தப் போட்டிக்கும் ஆனந்த விகடன் நிறுவனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதே போல், இந்தப் போட்டிக்கும் ‘அப்புசாமி டாட் காம்’ மற்றும் ‘அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட்’ இவற்றுக்கும்கூட எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க என் சந்தோஷத்துக்காக, எந்த வித லாப நோக்கமும் இன்றி, நான் என் வலைப்பூ நேயர்களுக்காக அறிவிக்கிற போட்டியாகும்!

8. உங்கள் வோட்டுக்கள் மூலம் முதல் ஐந்து ஜோக் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து ‘அப்புசாமி டிரஸ்ட்’டுக்கு அளிப்பதோடு ‘என் டயரி’யின் பணி முடிகிறது. மற்றபடி, அந்த ஐந்து ஜோக் எழுத்தாளர்களுக்கும் ‘என் டயரி’ வலைப்பூவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

9. உங்கள் வோட்டுக்களின் அடிப்படையில்தான், அதிக வாக்குகள் பெற்ற ஜோக் எழுத்தாளர்களின் ‘டாப் 5’ பட்டியல் உருவாகும். ஆனால், மிகச் சரியாக அந்த ஐந்து பேரை தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளவருக்கு மட்டுமே ‘முயற்சி திருவினையாக்கும்’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

10. ஒருவருக்கு மேல் ‘டாப் 5’ பட்டியலைச் சரியாக எழுதியிருந்தாலும், அனைவருக்கும் மேற்படி புத்தகப் பரிசு உண்டு.

11. ஒருவருமே சரியாக அந்த ஐந்து ஜோக் எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கவில்லை என்றால், அதிக எண்ணிக்கையில் சரியாகக் குறிப்பிட்டுள்ளவருக்குப் புத்தகப் பரிசு உண்டு. ஆனால், ஒரு நிபந்தனை. இப்படித் தேர்ந்தெடுக்கப்படும்போது, முதலில் பின்னூட்டம் இட்டவருக்கு மட்டுமே புத்தகப் பரிசு கிடைக்கும். உதாரணமாக, ஜோக் எழுத்தாளர்கள் நால்வரின் பெயர்களைச் சரியாக எழுதி, ஒரு பெயரை மட்டும் தவறாகக் குறிப்பிட்டிருக்கும் பின்னூட்டங்கள் பத்துப் பன்னிரண்டு வருமானால், அவற்றில் முதலாவதாக வந்த பின்னூட்டத்துக்கே புத்தகப் பரிசு.

12. மே முதல் வாரத்தில், அந்த முதல் ஐந்து நகைச்சுவையாளர்கள் யார் யார் என்கிற பட்டியல் எழுத்தாளர் திரு. பாக்கியம் ராமசாமி அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னரே உங்களின் பின்னூட்டங்கள் வலைப்பூவில் பதியப்படும்.

13. இதற்கான பின்னூட்டங்கள் பதியப்பட்ட பின்னர், புத்தகப் பரிசு பெறும் வலைப்பூ நேயர் பெயரை அறிவிக்கிறேன். பிறகு அவர் தனது முழு அஞ்சல் முகவரியை என் இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) அனுப்பி வைத்தால், உடனடியாக ‘முயற்சி திருவினையாக்கும்’ புத்தகத்தை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். பரிசு பெற்ற நேயர் பெயரை அறிவித்த 15 நாட்களுக்குள் முகவரி கிடைத்தால் மட்டுமே புத்தகம் அனுப்பி வைக்க இயலும்.

14. வெளிநாட்டிலிருந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் நேயராக இருந்தால், தயவுசெய்து உங்களின் இந்திய முகவரியைத் தர வேண்டுகிறேன். இந்திய முகவரிக்கு மட்டுமே புத்தகப் பரிசு அனுப்பி வைக்கப்படும்.

15. சில சமயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சிலர் அனுப்பிய பின்னூட்டங்கள் எனக்கு வந்து சேரவில்லை என்பதைப் பிற்பாடு அவர்கள் அனுப்பிய இரண்டாவது பின்னூட்டம் மூலமும் இ-மெயில் மூலமும் அறிய நேர்ந்திருக்கிறது. ஆகவே, இப்படியான எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு நான் பொறுப்பாளியாக முடியாது. எனவே, இந்த விஷயத்தில் என் மனச்சாட்சியின் தீர்ப்பே இறுதியானது.

முயற்சி திருவினையாக்கும்!

ALL THE BEST!

***

முயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும். முயலாமை வெல்லாது!

படிங்க; சிரிங்க; பரிசை வெல்லுங்க!

ங்கே மொத்தம் 30 ஜோக்குகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இவையெல்லாம் கடந்த காலங்களில் ஆனந்தவிகடனில் வெளியான ஜோக்குகள். படியுங்கள்; ரசியுங்கள்.

ரூ.175 விலையுள்ள புத்தகம் ஒன்றைப் பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களுக்குக் காத்திருக்கிறது.

முதலில் ஜோக்ஸ்...
“புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் மந்திரியாரே! நானும் அப்படித்தான்!”
“அதற்காகத் தங்களின் 70-வது வயது வரை இப்படிப் பதுங்கியே இருப்பது வீரத்துக்கு அழகில்லை, மன்னா!”
- எஸ்.ஏ.கருணாநிதி

“அந்த ரெண்டு பாடகர்களும் சகோதரர்களாம்..!”
“சரி, அதுக்காக ஒருத்தருக்கு ‘சங்கீத கலாநிதி’, இன்னொருத்தருக்கு ‘சங்கீத தயாநிதி’ன்னு பட்டம் கொடுக்கணுமா, என்ன!”
தஞ்சை தாமு

“கொடுத்த டாக்டர் பட்டத்தை தலைவர் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டார்?”
“அவர் மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கிறதாலே, அவருக்கு வக்கீல் பட்டம்தான் வேணுமாம்!”
- வி.சாரதிடேச்சு

“சோடியம்குளோரைடு தின்னவன் ஹெச்2 ஓ குடிச்சே ஆகணும்!”
“என்ன மாஸ்டர் சொல்றீங்க?”
“டான்ஸ் ஆடும்போது உங்க ரெண்டு பேருக்கும் இடையில கெமிஸ்ட்ரியே இல்லைன்னு சொல்றேன்!”
- க.கலைவாணன்

“நம்ம தலைவர் என்ன இவ்வளவு அசட்டுத்தனமா இருக்கார்?”
“என்ன விஷயம்?”
“எனக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; அட்லீஸ்ட் தமிழ்நாடு ரத்னா விருதாவது கொடுக்கக்கூடாதா?’ன்னு கேக்கறாரே!”
- வைகை ஆறுமுகம்

“ஆனாலும் என் லவ்வருக்கு பொசஸிவ்னெஸ் அதிகம்!”
“ஏன் அப்படிச் சொல்றே?”
“பின்னே... அவரை மட்டும்தான் நான் லவ் பண்ணணும்கிறாரே!”
- ஜெ.மாணிக்கவாசகம்

“யோவ், என்னய்யா இது... என்னை வரவேற்கும் போஸ்டர்ல ‘தன்மான டைனோசரே வருக!’ன்னு போட்டிருக்கீங்க?”
“தன்மானச் சிங்கமே வருக-ன்னு போட்டுப் போட்டு போரடிச்சுருச்சு தலைவா!”
- வீ.விஷ்ணுகுமார்

“உங்களுக்குதான் ஓட்டு கிடையாதுன்னு சொன்னோமே... அப்புறமும் எதுக்கு நின்னுக்கிட்டே இருக்கீங்க?”
“கை நீட்டிப் பணம் வாங்கிட்டேன். அதுக்கு ஒரு கள்ள ஓட்டாவது போட்டுட்டுப் போயிடுறேனே..!”
- ஓரியூர் கே.சேகர்

“டான்ஸ் போட்டிக்கு வந்தவர் எதுவுமே ஆடாம ‘நானும் நயன்தாராவை லவ் பண்றேன்’னு சொல்றாரே..?”
“உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?-ங்கிற போட்டியைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு!”
- சி.பி.செந்தில்குமார்

“இன்னொரு பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தீங்கன்னா...”
“என்ன... பேஷண்ட்டைக் காப்பாத்தியிருக்க முடியாதா?”
“இல்ல... காப்பாத்தியிருக்கலாம்!”
“என்ன சொல்றீங்க?”
“டாக்டர் வீட்டுக்குக் கிளம்பிப் போயிருப்பார்னு சொல்றேன்!”
- அ.அப்துல்காதர்

“உடம்பு பலவீனமா இருக்குதுன்னு வந்தீங்களே; டானிக் எழுதித் தந்தேனே! இப்போ எப்படி இருக்கு?”
“டானிக் பாட்டிலோட மூடியைத் திறக்கவே முடியலை டாக்டர்!”
- எம்.அசோக்ராஜா

“நம்ம ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனாலும் ரொம்ப மோசம்!”
“ஏன் அப்படிச் சொல்றே?”
“பின்னே... என் மனைவியைக் காணோம்னு ஒரு சம்பிரதாயத்துக்குப் புகார் கொடுத்தேன். அடுத்த நாளே கண்டுபிடிச்சு வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டாரே!”
- வி.சகிதாமுருகன்

“சல்மான்கானும் ஸ்ரீதேவியும் சேர்ந்து ஒரு படத்துல நடிச்சா, அதுக்கு என்ன பேர் வைப்பாங்க?”
“மானாட, மயிலாட!”
- நாமக்கல் பாலு

“நீ செய்த இந்தக் கொடூரமான கொலைக்கு என்ன தண்டனை தெரியுமா?”
“என்னைப் போய்க் கேக்கறீங்களே ஐயா! நான் உங்க அளவுக்கெல்லாம் படிக்கலீங்களே!”
- லீலாஜி

“ஃபீஸ்தான் கொடுத்துட்டேனே டாக்டர், அப்புறம் என்ன?”
“தெர்மாமீட்டருக்கு மேல ஏதாவது போட்டுக் கொடுப்பா!”
- ஜி.லட்சுமிபதி

“நம்ம தலைவர் ‘2041-லும் நாங்கதான் ஆட்சி அமைப்போம்’னு சொல்றாரே, ஏன்?”
“தலைவருக்குப் பேரன் பொறந்திருக்கானாம்!”
- கு.வைரச்சந்திரன்

“ஹீரோ ஆடு மேய்க்கிறார்...”
“அட, ஏதாவது வெயிட்டான சப்ஜெக்டா சொல்லுப்பா..!”
“சரி, ஹீரோ யானை மேய்க்கிறார். ஓகேவா சார்?”
- ப.திருமுருகன்

“பாட்டைக் காப்பி அடிக்கிறதுக்கு ரீ-மிக்ஸுக்கும் என்ன வித்தியாசம்?”
“டியூனை மட்டும் திருடினா அது காப்பி! முழுப் பாட்டையும் திருடினா அது ரீ-மிக்ஸ்!”
- சித்தார்த்

“நான் சீக்கிரமா போகணும். டாக்டரைப் பார்க்க முடியுமா?”
“டாக்டரைப் பார்க்கிறதுக்கு முந்தியே சீக்கிரமா போகணும்னு அவசரப்பட்டா எப்படி சார்?”
- வெ.சீதாராமன்

“மன்னா! போருக்குக் கிளம்பலாமா?”
“ம... ம... மந்திரியாரே...! போரா... என்ன சொல்கிறீர்?”
“ஐயையோ! அழாதீர்கள் மன்னா! இன்றைக்கு ஏப்ரல் 1. அதான், சும்மா ஏமாற்றித் தமாஷ் பண்ணினேன்!”
- சிவம்

“உங்க ஒய்ஃப் எப்படி இருக்காங்க?”
“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க!”
“அடடா! அப்ப உங்க ஒய்ஃபும் கல்யாணம் ஆகாம இன்னும் தனியாதான் இருக்காங்கன்னு சொல்லுங்க!”
- தமிழ்

“தாத்தா! என் டீச்சர் வராங்க. சட்டுனு ஓடிப்போய் ஒளிஞ்சுக்க. சீக்கிரம்!”
“என்னம்மா குழந்தே! உன்னோட டீச்சர் வரதுக்கு, நான் ஏம்மா ஒளியணும்!”
“இல்ல தாத்தா! அவங்க கிட்டே நீங்க செத்துப் போயிட்டதா சொல்லிதான் நான் நேத்து லீவு போட்டேன்!”
- சாதிக்

“எதிர்க்கட்சிக்காரங்க இந்த அளவுக்கு ஏட்டிக்குப் போட்டியா பண்ணக்கூடாது தலைவரே!”
”என்னய்யா ஆச்சு?”
“நீங்க இலவச திருமணம் செஞ்சு வெச்ச ஜோடிக்கெல்லாம் அவங்க இலவச விவாகரத்து வாங்கிக் கொடுக்கப் போறாங்களாம்!”
- தஞ்சை அனார்கலி

“அடுத்த வாரம்தானே போர்..! அதுக்கு ஏன் இப்பவே கவலைப்படறீங்க மன்னா?”
“சாகுற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்னு ரஜினி சொன்ன பன்ச் டயலாக் உங்களுக்குத் தெரியாதா தளபதியாரே?”
- அறந்தாங்கி என்.ராஜேந்திரன்

“தலைவர் தினம் தினம் ஒரு பொதுக்கூட்டத்துல பேசிக்கிட்டிருக்காரே, ஏன்?”
“கேக்குறதுக்கு யாருமில்லேங்கிற தைரியம்தான்!”
- பா.ஜெயக்குமார்

“அந்த நடிகர் தன் உடம்புல தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்குன்னு பல மொழிகள்ல பச்சை குத்திட்டிருக்காரே, ஏன்?”
“பாடி லாங்வேஜ் முக்கியம்னு டைரக்டர் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டார்!”
- எஸ்.முகம்மது யூசுப்

“பிசினஸ் எனக்கு இன்னொரு மனைவி மாதிரி..!”
“தொழில் மேல உங்களுக்கு அவ்வளவு ஆர்வமா?”
“ஊஹூம்..! பிசினஸ்ல நான் அந்த அளவுக்கு நிறைய அடி வாங்கிட்டேன்!”
- கே.ஆனந்தன்

“ஐசியு-ல அட்மிட் ஆகியிருந்த உங்க மாமியார் இப்ப எப்படி இருக்காங்க?”
“சிகிச்சை பலனின்றி... உயிர் பிழைச்சுட்டாங்க!”
- பர்வதவர்த்தினி

“இவங்களை டெஸ்ட் பண்ணிப் பார்த்ததுல...”
“எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க, டாக்டர்! இவங்க என் மாமியார்தான்!”
- அ.ரியாஸ்

“கேடி கந்தன் ரொம்பப் பயந்த சுபாவம் உள்ளவனோ?”
“ஏன் கேக்கறே?”
“ரிட்டையர்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்குக்கூட மாமூல் தர்றானே?”
- அதிரை புகாரி

ன்ன, முப்பது ஜோக்குகளையும் படித்துவிட்டீர்களா? நன்றி!

போட்டியைச் சற்று விளக்கமாக, விரிவாக அறிவிக்க வேண்டியுள்ளது. இந்தப் பதிவில் இடம் இல்லை; இப்போது எனக்கு நேரமும் இல்லை (இரவு மணி
11:30) என்பதால், பரிசுப் போட்டியை இப்போதே அறிவிக்க இயலாததற்கு வருந்துகிறேன். எனவே, இதே வலைப்பூவுக்கு நாளை இதே நேரத்துக்கு மேல் வருகை தருமாறு உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

போட்டி அறிவிப்பு ஒரு நாள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்!


***

அனுமதி வாங்குவதைவிட மன்னிப்பு பெறுவது எளிது - பல சமயங்களில்!

மனித நேயத்துக்கு ஒரு ‘பாலம்’!

‘பாலம்’ கல்யாணசுந்தரம் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர். நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர். அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர். பின்னர் ஒரு ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இவர் விகடன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். பல்வேறு அலுவல்கள் காரணமாக இவர் விகடன் அலுவலகத்துக்கு ஏற்கெனவே பலமுறை வந்து போயிருக்கிறார். என்றாலும், எனக்கு இவரோடு பேசிப் பழகும் பாக்கியம் கிடைத்தது, சமீபத்திய இவரது வருகையின்போதுதான்!

இவரைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன்பே, எங்கள் சேர்மன் திரு. எஸ்.பாலசுப்ரமணியன் வாராந்திர ஆசிரியர் குழுக் கூட்டத்தில் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கல்யாணசுந்தரம் செய்து வரும் சேவைகள் பற்றிச் செய்தி வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்துமாறு விகடன் சேர்மனிடம் ஒருவர் வந்து பரிந்துரை செய்தாராம். “இப்படி சிபாரிசோடு வரும் யாரைப் பற்றியும் விகடன் எழுதாது. ஆனால், நீங்கள் சொல்கிற நபர் உண்மையிலேயே சிறந்த சமூக சேவகராக இருந்து, பல நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறவராக இருந்தால், விகடனே தேடிப் போய் அவரைப் பற்றிய விஷயங்களைச் சேகரித்து, நிச்சயம் அவரைப் பெருமைப்படுத்தி எழுதும். விகடனுக்கு யார், எவர் என்கிற பேதம் எதுவும் இல்லை” என்று சொல்லி, வந்தவரைத் திருப்பி அனுப்பிவிட்டாராம்.

அதன்பின் பல ஆண்டுகள் கழிந்தன. இந்தச் சம்பவம் முற்றாக மறந்துபோன நிலை.

கல்யாணசுந்தரம் செய்து வரும் சேவைகள் பற்றிக் கேள்விப்பட்டு, விகடன் ஒரு நிருபரை அனுப்பி, அவரைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, அருமையான கட்டுரையை வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்தியது. அதன்பின் சில நாட்கள் கழித்து, மெலிந்த தேகமுடைய ஒருவர் விகடன் அலுவலகத்துக்கு வந்து, சேர்மனைச் சந்தித்து, கட்டுரை வெளியிட்டது குறித்துத் தன் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டாராம். “இப்போது எந்தச் சிபாரிசும் இல்லாமல்தானே அவரைப் பெருமைப்படுத்தினீர்கள்? அவருடைய சேவையில் தங்களுக்கு முழுத் திருப்திதானே?” என்று கேட்டுப் புன்னகைத்தாராம்.

அவர்தான் கல்யாணசுந்தரம். விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் முதன்முறையாக அப்போதுதான் கல்யாணசுந்தரத்தை நேரில் பார்க்கிறார்.

“என் மீதுள்ள அபிமானத்தால் என்னைப் பற்றி எழுதும்படி வேண்டுகோள் விடுத்து உங்களிடம் வந்து கேட்டுவிட்டார் என் சிநேகிதர். நீங்கள் சொல்லியனுப்பிய பதிலையும் சொன்னார். உங்கள் பதில்தான் என்னை இன்னும் தீவிரமாக சமூக சேவையில் ஈடுபடச் செய்தது. அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகவே வந்தேன்” என்று கல்யாணசுந்தரம் சொன்ன பிறகுதான், சேர்மனுக்குப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்ததாம்.

விகடன் சேர்மன் பாலசுப்ரமணியனும், ‘பாலம்’ கல்யாணசுந்தரமும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் கொஞ்ச நஞ்சமல்ல.

சமீபத்தில் கல்யாண சுந்தரத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?” என்று கேட்டேன்.

புன்னகைத்தார். “ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!” என்றார்.

“உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்” என்றேன் நான். சிரித்தார்.

பின்பு பேச்சினூடே, “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?” என்று கேட்டார். “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்” என்றேன். “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது” என்று சிரித்தார். “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!” என்றேன். “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே” என்றவர், “நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!” என்றார்.

வேட்டி 100 ரூபாயும், சட்டை 150 ரூபாயும் இருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும், நான் கொஞ்சம் உஷாராகக் குறைத்தே சொல்லுவோம் என்று, “வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்” என்றேன். “தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்” என்றார்.

“என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்றேன் வியப்போடு.

“உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!” என்று கிழிசல்களைக் காண்பித்தார் கல்யாணசுந்தரம்.

என் கண்களில் நீர் தளும்புவதைக் கட்டுப்படுத்திக்கொள்ள ரொம்பப் பிரயாசைப்பட வேண்டியிருந்தது.

‘பாலம்’ கல்யாணசுந்தரத்தைப் பற்றிய டாகுமெண்ட்டரி படம் ஒன்று தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதைவிடப் பெரிய விஷயம், இவரைப் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியாகவிருக்கிறதாம். அந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவதற்கான முழுச் செலவும் யாருடையது என்று நினைக்கிறீர்கள்?

இந்தப் பதிவு எழுதும் நாள் அசந்தர்ப்பமாக ஏப்ரல் முதல் தேதியாக இருப்பதால், நான் சொல்லப்போவது உண்மை, உண்மை என்று நூறு தரம் சத்தியம் செய்து சொல்ல வேண்டியிருக்கிறது.

அவர் வேறு யாருமல்ல, பில்கேட்ஸ்!

***
நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு; நாம் தருவதைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்வது வாழ்வு!
.