'இறை'யும் 'ஆண்மை'யும்!

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்.

செய்தியைக் கேட்டதும் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. அவர் நல்லவரா, கெட்டவரா, அவர் எடுத்த முடிவுகள் சரிதானா, சக தமிழ்ப் போராளிகளை அவர் கொன்றது சரியா, நமது பிரதமர் ராஜீவை அவர் கொன்றது சரியா என்கிற கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், அவர் முடிவு ஒரு பரிதாபமான முடிவுதான். எப்படி சதாம் உசேனை தாடி மீசையோடு பதுங்கு குழியிலிருந்து அமெரிக்க இராணுவம் இழுத்துப் போவதைப் பார்த்து ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியதோ, அவர் தூக்கிலிடப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் எப்படி ஒரு வருத்தம் எழுந்ததோ அதே போன்ற வருத்தம்தான் பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டபோதும் எழுந்தது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம். பிரபாகரன் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி.

பிரபாகரனையும் அவரது விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் காரணமாக வைத்து ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை இராணுவம். 'இல்லை இல்லை, விடுதலைப் புலிகள் இயக்கம்தான் அப்பாவித் தமிழர்களைப் பிணைக் கைதியாக வைத்திருந்தது' என்று சாதித்தது இலங்கை இராணுவம். ஆனால், உண்மையில் அங்கே என்னதான் நடக்கிறதென்று அறிந்துகொள்ள யாரையும் அனுமதிக்கவில்லை இலங்கை அரசு. அது சொன்னதுதான் வேத வாக்கு என்று எடுத்துக் கொள்ள நமக்கெல்லாம் காது நிறையப் பூ.

பிரபாகரன் போராளியா, தீவிரவாதியா?

யார் ஆட்சி, எந்தக் காலம் என்பதைப் பொறுத்துதான் ஒருவர் போராளியா, தீவிரவாதியா என்பது முடிவாகிறது. விடுதலைக்கு முன் ஒரு நூறு ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தது. அப்போது அந்த அரசுக்கு எதிராகப் பேசியவர்களையும், எழுதியவர்களையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியது பிரிட்டிஷ் அரசு. அதன் அகராதிப்படி பகத்சிங்கும் வீரவாஞ்சியும் தீவிரவாதிகள்தான். பின்னர் சுயராஜ்யம் கிடைத்து, இப்போது அவர்கள் போராளிகள்; தியாகிகள்.

கட்டபொம்மனையும் நேதாஜியையும் இன்று மாவீரர்கள் என்றும், சுதந்திரத் தியாகிகள் என்றும் போற்றுகிறோம். ஆனால் அன்றைய பிரிட்டிஷ் அரசால் மட்டுமின்றி, அன்றைய இந்திய மக்கள் பலராலும் தீவிரவாதி என்றுதான் தூற்றப்பட்டார் கட்டபொம்மன். அவருக்கு ஆதரவாகப் பேச ஒரு சிறு குழுதானே இருந்தது? இன்றைக்குக் காட்டி கொடுத்த கயவனாகச் சித்திரிக்கப்படும் எட்டப்பன்தான் அன்றைக்கு இறையாண்மையைக் கட்டிக் காத்தவன்.

ஆக, காலம் மாற மாற கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் நிலைப்பாடுகளும் மாறும்.

இன்றைக்கு பிரபாகரன் தீவிரவாதி; இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து, நூறு வருடங்கள் கழித்து எப்படியோ?

அது போகட்டும்... இத்தனை நாள் பிரபாகரன் பேரைச் சொல்லித் தமிழர்களைக் கொன்று குவித்தது ராஜ பக்ஷே அரசு. இனி என்ன செய்யப் போகிறது அது? அப்பாவித் தமிழர்களிடமிருந்து பறித்த உடைமைகளை, சொத்துக்களை கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, அவர்களை வசதியாக, சிங்களர்களுக்குச் சமமாக வைக்கப் போகிறதா? போர்ச் சூழல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அகதிகளாகக் குடியிருப்பவர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உரிய அந்தஸ்தையும் வாழ்க்கையையும் அளிக்கப் போகிறதா? கடவுளுக்கும் இது வெளிச்சமில்லை.

'இறை' அந்தப் பரிதாபத்துக்குரிய அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றவில்லை. இனியேனும் இந்தியாவின் 'ஆண்மை' அவர்களைக் காப்பற்ற நடவடிக்கை எடுக்குமா?

*****
அடுத்தவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். ஏனென்றால், அத்தனைத் தவறுகளையும் செய்து முடிக்க நமக்கு ஆயுசு போதாது!

0 comments: