ஆங்கில விளையாட்டு!


என் மகன் ரஜ்னீஷ், இரண்டு வருடங்களுக்கு முன் அவனது பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு வாங்கிய பரிசு, ஓர் ஆங்கிலப் புத்தகம்.

Literary Humour என்கிற புத்தகம் அது. இரண்டு வருடங்களாக என் லைப்ரரியில் தூங்கிக்கொண்டு இருந்த அந்தப் புத்தகத்தை இன்றுதான் யதேச்சையாக தூசு தட்டி எடுத்துப் புரட்டிக்கொண்டு இருந்தேன். 'அடடா... இத்தனை நாள் இதைப் படிக்காமல் போய்விட்டேனே' என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை அற்புதமாக இருந்தது அது.

ஆங்கில மொழியில் உள்ள வேடிக்கைகளை எல்லாம் தொகுத்து அந்தப் புத்தகத்தில் தலைப்பு வாரியாகப் போட்டிருந்தது.

Anagram, panagram, palindrome, alliteration, tongue-twister, spoonerism, limerick என ஏகப்பட்ட தலைப்புகளில் மிக சுவாரசியமாக இருந்தது அந்தப் புத்தகம்.

அவற்றை அப்படியே தமிழில் முயன்று பார்த்தேன். மிகவும் கடினமாக இருந்தது. ஆங்கிலத்தில் மொத்தம் இருபத்தாறே எழுத்துக்கள் இருப்பதால் என்ன வேடிக்கைகளையும் சுலபமாகச் செய்து பார்க்க முடிகிறது போலும்!

பழங்காலக் கவிஞர்கள் இந்த மாதிரி மொழி விளையாட்டில் கைதேர்ந்தவர்கள். காளமேகம் போன்ற புலவர்கள் தமிழில் விளையாடி இருக்கிறார்கள்.

தாதி தூதோ தீது தத்தை தூதோ தாது
தூதி தூதொத்திதத் தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத் தேத்தொத்தீது
தித்தித்ததோ தித்திதி

இது காளமேகப் புலவருடைய பாடல்களில் ஒன்று. வெறும் தத்தகாரத்திலேயே அமைந்த இது போன்று இப்போது எழுத முடியுமா என்பது சந்தேகமே!

இது ஒன்றும் அர்த்தம் இல்லாமல் அவர் எழுதிவிடவில்லை.

தாதி - தோழி; தூது - செய்தி கொண்டு செல்வோர்; தீது - கெடுதியானது; தத்தை - கிளி; தூதொத்திதத் தூததே - தூது + ஒத்து + இதத் + தூததே = உன் தூதானது (என் மனதுடன்) பொருந்திய தூதாகும்...

இப்படி ஒவ்வொரு வார்த்தையையும் பதவுரை பிரித்துப் படித்தால்,
'தாதியைத் தூது அனுப்பினால் கெடுதியாக முடியும். கிளி தூது போகாது. எனவே, (வழக்கமாக) தூது கொண்டு செல்பவரே, என் உடம்பில் பொன் போன்ற தேமல் படராவண்ணம் என் தலைவனிடத்திலே நீர் சென்று என் மனம் இனிக்குமாறு சொல்லி என்னைக் காப்பாற்று'
என்று தலைவி சொல்வதாகப் பொருள் கிடைக்கும்.

இப்படி எத்தனையோ சங்க காலப் புலவர்கள் நிறைய எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் யாராவது தொகுத்துப் புத்தகமாகப் போட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நிற்க. ஆங்கிலப் புத்தகத்துக்கு வருவோம். ஏராளமான தலைப்புகளில் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது என்று சொன்னேன் அல்லவா... அதில் முதல் தலைப்பில் உள்ளதை மட்டும் இங்கே ஒரு சாம்பிள் பார்க்கலாம்.

Anagram என்பதற்கு நேரடித் தமிழ் வார்த்தை என்னவென்று தெரியவில்லை. ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை மாற்றிப் போட்டு வேறு ஒரு வார்த்தை உருவாக்கும் வேடிக்கை அது. அப்படிச் சில வார்த்தைகளைக் கீழே தந்திருக்கிறேன்.

Telegraph - Great help
Clint Eastwood - Old west action
Eleven plus two - Twelve plus one
Indira Gandhi - Hi, Grand India
Adolf Hitler - Hated for ill
President George Bush - He, biggest rude person
Nelson Mandela - Lean and solemn
Saddam Hussein - Human's sad side

இதை விடத் தமாஷ் மாமியார் பற்றிய அனகிராம்தான்.

Mother in law - Woman Hitler

சரி, நம்ம கோத்தபய மகிந்த ராஜபக்சேவுக்கு யாராவது ஒரு சூப்பர் அனகிராம் கண்டுபிடியுங்களேன்.

*****
நமது கல்வி முறையில் உள்ள பெரிய குறை - அது வாழ்க்கையைக் கற்றுத்தருகிறது; வாழக் கற்றுத் தருவதில்லை!

0 comments: