ஹைய்யா... பேர் வெச்சாச்சு!

‘ஒரு பேர் வைங்களேன், ப்ளீஸ்!’ என்கிற என்னுடைய பதிவைப் படித்துவிட்டு, தங்களுக்குத் தோன்றிய தலைப்புகளை உடனடியாக பின்னூட்டத்தில் பதிந்த என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த மன நெகிழ்ச்சியினூடே எனக்குத் தோன்றிய ஒரு வாக்கியத்தை இந்தப் பதிவின் இறுதியில் எழுதுகிறேன்.

‘பெயர் வைத்தல்’ என்பது அத்தனை முக்கியமானது. புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்குப் பெயர் வைக்கும்போது எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறோம்! ஆங்கில எழுத்தான ‘A’-யில் தொடங்குகிற மாதிரி பெயர் வைப்பார்கள் சிலர். அப்போதுதான், பட்டியலில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் முன்னணியில் வர முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை!

நட்சத்திரம், ராசியெல்லாம் பார்த்து அதற்குப் பொருத்தமாக எந்த எழுத்தில் பெயர் வைத்தால் குழந்தை பிற்காலத்தில் ஆஹா, ஓஹோவென இருக்கும் என்று ஜோசியர்களைக் கேட்டுக் கொண்டு, அதன்படி பெயர் வைப்பவர்கள் பலருண்டு. நியூமராலஜி பார்த்து அதற்கேற்ப, பெயரில் இயல்பாக இருக்க வேண்டிய (ஆங்கில) எழுத்துக்களுக்கு மாறாக வேறு எழுத்துக்களைச் சேர்த்தோ, கூடுதல் எழுத்துக்களைப் போட்டோ அல்லது சிதைத்தோ பெயர் வைப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

என் பெயர் RAVIPRAKASH என்பதில் உள்ள K-வுக்குப் பதிலாக C போட்டு எழுதினால், எனக்குப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று நட்பு ரீதியில் ஆலோசனை தந்தார் எனக்குத் தெரிந்த பிரபல நியூமராலஜிஸ்ட் ஒருவர். என் பெயரைச் சிதைத்துத் தள்ளிவிட்டு வருகிற பணம் எனக்குத் தேவையே இல்லை என்று அவரிடம் சிரித்துக்கொண்டே சொன்னேன். கடைசிவரை நான் என் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் சொன்னதுபோல் என் பெயரை மாற்றிக்கொண்டு இருந்தால், ஒருவேளை நான் கோடீசுவரனாக ஆகியிருப்பேனோ என்று இப்போது வலிந்து யோசித்தாலும், அது எனக்குச் சிரிப்பாகத்தான் இருக்கிறதே தவிர, கவலையாக இல்லை.

அதே நியூமராலஜிஸ்ட் அப்போது என் தம்பி ராஜ்திலக்குக்கும் ஒரு யோசனை சொன்னார். அவன் பெயர் RAJATHILAK என்பதை RAJTHILUCK என மாற்றி எழுதிக் கொண்டால், அவன் மிகுந்த அதிர்ஷ்டக்காரனாக விளங்குவான்; அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்றார். அது ஆயிற்று பல வருஷங்கள்! அவனுக்கு அப்படியொன்றும் எந்த அதிர்ஷ்டமும் அடிக்கவில்லை. மாறாக, அதிர்ஷ்டக்கட்டையாகத்தான் ஆனான். அவன் சுமார் ரூ.20,000 வரை பணம் கட்டிச் சேர்ந்த கம்ப்யூட்டர் படிப்பு, அந்தக் கல்வி நிறுவனமே காணாமல் போனதால், முழுமை பெறவில்லை. கட்டிய பணமும் கோவிந்தா! அவன் சொந்தமாகத் தொடங்கிய இரண்டு தொழில்கள் நஷ்டத்தில் முடிந்து, ஏகப்பட்ட பண இழப்பு! இத்தனைக்கும் அவன் என்னைவிடத் திறமைசாலி; எதையும் சட்டென்று பற்றிக் கொள்ளும் கற்பூர புத்தி. கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறையில் கில்லாடி!

சரி, பெயர் வைக்கும் விஷயத்துக்கு வருகிறேன். சிலர் புதுமையாக இருக்க வேண்டும் என்று தங்கள் குழந்தைக்குக் காமா சோமா என்று பெயர் வைத்துவிடுவது உண்டு. கிராமங்களில் எம்.ஜி.ஆர்., டாக்டர், வாத்தியார் என்றெல்லாம் பெயர்கள் இருந்ததை, நான் என் அப்பாவுக்கு உதவியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குச் சென்றபோது பார்த்து வியந்திருக்கிறேன். சிதம்பரம், பழனி என்று ஊர் பெயர்களை வைப்பவர்களும் உண்டு. பெரியார் ஒரு முறை இதைக் கேலி செய்து, ஒரு பெண்ணுக்கு ‘ரஷ்யா’ என்று பெயர் வைத்தார். அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாரிசுகளுக்கு DOT, DASH என்று செல்லப் பெயர்கள் வைத்திருந்தார்.

ஓர் அம்மாள் தனக்குப் பிறந்த மூன்று ஆண் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை யோசித்து வைத்தார். சோழன்புத்திசாலி, சேரன்பலசாலி, பாண்டியன்அறிவாளி என்பவையே அந்தப் பெயர்கள். மூவரில், பாண்டியன்அறிவாளி என்பவர் தன் சொந்தப் பெயரில் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கிராமங்களில் தன் குழந்தைக்கு திருஷ்டி படக் கூடாது என்பதற்காக ‘மண்ணாங்கட்டி’ என்றெல்லாம் பெயர் வைப்பதுண்டு. வரிசையாகப் பெண்ணாகவே பெற்றுக்கொண்டவர்கள், இனிமேல் பெண் குழந்தையே வேண்டாம் என்பதற்காக ‘போதும்பொண்ணு’ என்றும் பெயர் வைப்பார்கள். ‘பசங்க’ படத்தில் இது ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும். மேலும் அருக்காணி, பொக்கலை, பொச்சிலை போன்ற பெயர்களையெல்லாம் பார்த்து வியந்திருக்கிறேன். படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் அழகுராணி என்பது அருக்காணியாகவும், பொற்கலை என்பது பொக்கலையாகவும், பொற்சிலை என்பது பொச்சிலையாகவும் திரிந்துவிட்டிருக்கிறது. இப்படிப் பல பெயர்கள்.

ஆக, பெயர் வைத்தல் என்பது எத்தனை முக்கியமானது என்பதற்காக எழுதத் தொடங்கி, அது எங்கெங்கேயோ திசை மாறிப் போய்விட்டது.

பழமொழியும் அல்லாத, பொன்மொழியும் அல்லாத ஒரு வரிச் செய்திகளை ஆங்கிலத்தில் ‘ஒன்லைனர்’ என்பார்கள். தமிழிலும் அப்படி முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதியதுதான் ஆரம்பத்தில் ஆனந்த விகடனில் ‘டிக்... டிக்... டிக்...’ என்னும் தலைப்பில் தொடர்ந்து ஒரு வருட காலம் வெளியானது. அதை என் பெயரில் பிரசுரிக்க எனக்கு விருப்பமில்லை. ‘நீங்களே ஏதாவது ஒரு புனைபெயர் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று விகடன் இணை ஆசிரியர் திரு.கண்ணனிடம் சொன்னேன். அவரும் யோசித்து, ‘மிஸஸ். டக்ளஸ்’ என்ற புனைபெயரில் பிரசுரித்தார் (அப்போது வெளியாகியிருந்த ‘பருத்தி வீரன்’ படத்தில் கஞ்சா கருப்பின் பெயர் டக்ளஸ்).

ஆனந்த விகடனில் இந்தப் பகுதிக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து, பின்னர் ‘அவள் விகடன்’ பத்திரிகையிலும் இந்தப் பொன்மொழிகளை எழுதினேன். ஓர் இதழுக்கு பத்து பொன்மொழிகள் இடம்பெற்றதால், அந்தப் பகுதிக்கு ‘பத்துவம்’ என்று தலைப்பு வைத்துவிட்டார் ‘அவள் விகட’னின் அன்றைய பொறுப்பாசிரியர் தயாமலர். மீண்டும் எனக்கான புனைபெயரை அவர் விருப்பத்துக்கே விட்டேன். ‘ஷெல்லி ராணி’ என்ற பெயரில் பிரசுரித்தார்.

ஆனந்த விகடன், அவள் விகடன் இரண்டிலுமாக வெளி வந்த - பழமொழியும் அல்லாத, பொன்மொழியும் அல்லாத - என் புதுமொழிகள் மொத்தம் 510. இவை எதுவுமே என் சொந்தக் கற்பனை அல்ல. சொந்தமாகப் பொன்மொழிகள் உதிர்க்கிற அளவுக்கு நான் ஒன்றும் இலக்கிய மேதையோ, பெர்னாட்ஷா போன்ற தத்துவ ஞானியோ கிடையாது. அன்னை தெரசா, மகாத்மா காந்தி, புத்தர், ஆர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர் எனப் பலதரப்பட்டவர்கள் உதிர்த்த கருத்துக்களைத்தான் இன்றைய இளம் தலைமுறையினர் படித்து ரசிக்கும்படியாக, எளிமையும் ஜாலியுமான வாக்கியங்களில் பொன்மொழியாகச் சுருக்கினேன். ‘எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு...’

பத்து தத்துவம் என்பதைச் சுருக்கி வைத்த பெயர்தான் ‘பத்துவம்’. டிக்... டிக்... டிக்... என்பது சம்பந்தமேயில்லாமல் நானாக வைத்த பெயர். இரண்டுமே புத்தகத்துக்குப் பொருந்தாது என்றுதான் வேறு பெயர் யோசித்து, மண்டையை உடைத்துக்கொண்டு, சரியாக ஒன்றும் கிடைக்காமல் ‘என் டயரி’ வலைப்பூ வாசகர்களிடம் சரணடைந்தேன். சுமார் 50 தலைப்புகள் கிடைத்தன.

அவற்றிலிருந்து முதல் கட்டமாக விழிகள் திறக்கும் மொழிகள், என் மொழியில் பொன்மொழிகள், புதுமொழி நானூறு, எனர்ஜி டானிக் ஆகிய நான்கு தலைப்புகளை விகடன் பிரசுர ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். எனக்கும் அந்த நான்கு தலைப்புகளும் மிகவும் பிடித்திருந்தன. விகடன் பிரசுர ஆசிரியர் திரு.வீயெஸ்வி இறுதியாகத் தேர்ந்தெடுத்தது ‘புதுமொழி நானூறு’ என்கிற தலைப்பு. புத்தகத்தில் 500 பொன்மொழிகள் இடம்பெற உள்ளதால், அந்தத் தலைப்பு ‘புதுமொழி 500’ என மாற்றியமைக்கப்பட்டது.

மேற்படி தலைப்பைத் தந்தவர் ‘கிருபாநந்தினி’. ‘படித்துறை’ (padithurai.blogspot.com) என்கிற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘புதுமொழி 500’ புத்தகத்திலும் ‘என்னுரை’யில் அவருக்கு என் நன்றியைக் குறிப்பிட்டுள்ளேன். விரைவில் புத்தகம் தயாராகிவிடும். ஏற்கெனவே சொன்னதுபோல், புத்தகம் தயாராகி எனக்கான பிரதிகள் கிடைத்ததுமே கிருபாநந்தினிக்கு என் கையெழுத்திட்ட புத்தகம் ஒன்றை என் அன்பளிப்பாக அனுப்பிவைக்கிறேன். இதைப் படிக்கும் கிருபாநந்தினி உடனடியாக என் இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) தனது அஞ்சல் முகவரியை (பின்கோடு உள்பட) தெளிவாக எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தத் தலைப்பு அளவுக்கு மற்ற மூன்று தலைப்புகளையும் நான் வெகுவாக ரசித்தேன். ‘விழிகள் திறக்கும் மொழிகள்’, ‘என் மொழியில் பொன்மொழிகள்’ ஆகிய தலைப்புகள் ‘ரோஸ்விக்’ தந்த தலைப்புகளிலிருந்து உருவானவை. அதே போல், ‘எனர்ஜி டானிக்’ என்பது ‘பின்னோக்கி’ கொடுத்திருந்த தலைப்பின் திரிபு. ரோஸ்விக், பின்னோக்கி இருவரும் உடனடியாக தங்கள் அஞ்சல் முகவரிகளை மேலே கொடுத்திருக்கும் என் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அவர்களுக்கும் தலா ஒரு பிரதியை என் அன்பளிப்பாக நன்றியோடு அனுப்பி வைக்க விரும்புகிறேன்.

இந்தப் பதிவைப் படித்தவர்களுக்கும், தலைப்பு அனுப்பியவர்களுக்கும், தலைப்பு அனுப்ப நினைத்தவர்களுக்கும், புத்தகப் பரிசு பெற்றவர்களுக்கும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றி!

நெகிழ்ச்சியில் தோன்றிய ஒரு வாக்கியத்தை இறுதியில் சொல்வதாக ஆரம்பத்தில் சொல்லியிருந்தேனே, ஞாபகம் இருக்கிறதா? அது வேறொன்றுமில்லை...

எனது ‘உங்கள் ரசிகன்’ மற்றும் ‘என் டயரி’ வலைப்பூக்களைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு இந்த ஆண்டு முடிய அவ்வப்போது இது போல் போட்டிகள் அறிவித்துப் புத்தகப் பரிசுகள் தர எண்ணியுள்ளேன். குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒன்று என்ற அளவிலாவது பதினைந்து புத்தகங்கள் வரை அன்பளிக்க ஆசை. பார்க்கலாம்!

***
சந்தோஷத்தை வாங்க முயற்சி செய்யாதீர்கள்; அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள். அது சுலபம்!

டி.எம்.எஸ். வீட்டில்...

டி.எம்.எஸ். தம்பதியுடன் ரேவதி, நான், இயக்குநர் விஜய்ராஜ்
க்தி விகடன் ஆன்மிக இதழில் வி.ஐ.பி. வீட்டு பூஜையறைகளைப் பற்றிய ஒரு தொடர் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் என் அபிமான பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் வீட்டு பூஜையறையைப் பற்றியும் ஒரு கட்டுரை வெளியிட வேண்டும் என்பது சக்தி விகடன் ஆசிரியர் குழுவின் விருப்பம். அதற்காகத் தொடர்பு கொண்டபோது, டி.எம்.எஸ். மறுத்துவிட்டிருக்கிறார். காரணம், பூஜையறையைப் படமெடுத்தால் அதன் சக்தியும் மகத்துவமும் போய்விடும் என்கிற அவருடைய நம்பிக்கைதான்!

டி.எம்.எஸ்ஸிடம் எனக்குள்ள மரியாதையையும், அவருக்கு என் மீதுள்ள அபிமானத்தையும் அறிந்த ‘அவள் விகடன்’ தலைமை உதவி ஆசிரியரான ரேவதி என்னிடம் வந்து, டி.எம்.எஸ்ஸிடம் ஒரு பேட்டிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். ஏற்கெனவே முயன்று டி.எம்.எஸ். மறுத்துவிட்ட தகவலையும் சொன்னார்.

நான் உடனே நண்பரும் இயக்குநருமான விஜய்யைத் தொடர்பு கொண்டேன். விஷயத்தைச் சொன்னேன். “ஐயா ஒரு விஷயத்துல நம்பிக்கை வெச்சார்னா முரட்டுப் பிடிவாதமா இருப்பார். பேசிப் பார்க்கிறேன். நீங்கன்னா ஒத்துக்குவார்னு நினைக்கிறேன்” என்றார். மூன்று மணி நேரம் கழித்து, “ஐயா சம்மதிச்சிட்டாருங்க. உங்க பேரைத்தான் சொன்னேன். நீங்க வருவீங்களான்னு கேட்டார். வருவாருங்கன்னேன். நாளைக்கு மாலை 5 மணிக்கு வந்தீங்கன்னா, போட்டோக்கள் எடுத்துக்கிட்டு, பேட்டியையும் வாங்கிக்கலாம்” என்றார் விஜய்.

“அடடா! நான் வருவதாக ஏன் சொன்னீங்க? எனக்கு ஃபாரம் முடிக்கிற வேலை இருக்குமே! இந்த பேட்டி சக்தி விகடன் பத்திரிகைக்கு. அதை எடுக்கப் போறவங்க அவள் விகடன் டீம்ல வொர்க் பண்ற உதவி ஆசிரியர். எனக்கு அங்கே வேலையே இல்லையே!” என்றேன்.

“இல்லீங்க! நீங்கன்றதாலதான் ஐயா ஒத்துக்கிட்டாரு. ரெண்டு நாளைக்கு முன்னே வேற ஒரு பத்திரிகைலேர்ந்தும் வந்து கேட்டிருக்காங்க. ஐயா தீர்மானமா முடியாதுன்னுட்டாரு. பேட்டியை அவங்க எடுக்கிறபடி எடுக்கட்டும். நீங்களும் சும்மா ஒரு மணி நேரம் அவங்களோட வந்து தலை காமிச்சுட்டுப் போயிடுங்க” என்றார் விஜய்.

அதன்படி, நேற்றைய வெள்ளிக்கிழமை மாலை நானும் ரேவதியும் ஒரு ஆட்டோவில் டி.எம்.எஸ். வீட்டுக்குச் சென்றோம். உள்ளிருந்து வரும்போதே “ரவிபிரகாஷ் வந்திருக்காரா?” என்று கேட்டுக்கொண்டேதான் வெளியே ஹாலுக்கு வந்தார் டி.எம்.எஸ். முன்னே சென்று அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, நெகிழ்ச்சியோடு அவரின் கால்களைத் தொட்டு வணங்கினேன். தலையில் கை வைத்து ஆசீர்வதித்து, அவரது சுபாவப்படி சரளமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

தான் பயின்று வரும் ஆல்ஃபா மெடிட்டேஷன் தியான வகுப்புகள் பற்றியும், சமீபமாக யோகா, ஆசனங்கள் செய்து வருவது பற்றியும் விளக்கினார் டி.எம்.எஸ். மல்லாக்கப் படுத்து, கால்களை உயர்த்தி, இடுப்பையும் தரையில் படாதவாறு உயர்த்தியவாறு, கால்களைச் செங்குத்தாக ஐந்து நிமிட நேரத்துக்கு இந்த வயதிலும் தன்னால் ஆசனம் செய்ய முடிகிறது என்று சொன்னார். அப்படிச் செய்கிறபோது கால், வயிறு பகுதிகளிலிருந்து ரத்தம் முழுவதும் மூளைக்குள் பாய்வதையும், தனது உடம்பும் மூளையும் புத்துணர்வு பெறுவதையும் தன்னால் உணர முடிகிறது என்று டி.எம்.எஸ். அந்த அனுபவத்தை விவரிக்கும்போது அவர் முகத்தில் அத்தனைப் பரவசம்!

டி.எம்.எஸ். குடும்பம். இடப்புறம் நிற்பவர்கள் டி.எம்.எஸ்.செல்வகுமார் தம்பதி, நடுவில் டி.எம்.எஸ்ஸின் மகள் மல்லிகா, அடுத்து நிற்பவர் டி.எம்.எஸ்.பால்ராஜ், வலது ஓரம் டி.எம்.எஸ்ஸின் பேரனும் (மூத்த மகளின் மகன்) அவர் மனைவியும்.
டி.எம்.எஸ்-ஸுக்கு மொத்தம் ஒன்பது வாரிசுகள். ஐந்து பெண்கள்; நான்கு பையன்கள். ஐந்து பெண்களில் நால்வர் இப்போது உயிரோடு இல்லை. மல்லிகா என்கிற மகள் மட்டுமே! பிள்ளைகளில் டி.எம்.எஸ். பால்ராஜ் மற்றும் டி.எம்.எஸ். செல்வகுமார் ஆகிய இருவர் மட்டுமே. ஒரு பிள்ளை, பிறந்து பதினைந்தாவது மாதத்திலும், மற்றொரு பிள்ளையான பாலசுப்பிரமணியன் பதினைந்து வயதில் மஞ்சள்காமாலை நோய் வந்து, மரணப்படுக்கையில் முருகா, முருகா என்று அனத்தியபடியே தன் கண்ணெதிரே உயிர் துறந்ததையும் டி.எம்.எஸ். உருக்கத்துடன் விவரித்தபோது அவர் கண்களில் நீர்.

டி.எம்.எஸ். பால்ராஜ் விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் கதாநாயகனுக்கு ஒரு பாட்டுப் பாடியிருப்பதாகச் சொன்னார். டி.எம்.எஸ். செல்வகுமாருடன் எனக்கு அதிகம் பழக்கமில்லை.

ரேவதி டி.எம்.எஸ்ஸிடம் சக்தி விகடனுக்காக பேட்டி எடுக்கத் தொடங்கினார். அவர் வழக்கம்போல் டிராக் மாறி, அடிக்கடி தன்னுடைய பழைய நினைவுகளுக்குப் போய் உலவத் தொடங்கிவிட்டார். அவரை அவர் போக்கில் பேசவிட்டு, பூஜையறை பக்கம் திசை திருப்பிக் கொண்டு வர வேண்டியிருந்தது. புட்டபர்த்தி சாயிபாபா, காஞ்சிப் பெரியவர் ஆகிய ஞானிகளின் ஆசிகள் கிடைத்த விதங்கள் பற்றியெல்லாம் பகிர்ந்துகொண்டார் டி.எம்.எஸ். கடந்த ஆண்டு பிறந்த நாளின்போது கவிப்பேரரசு வைரமுத்து தனக்கு அன்பளிப்பாக அளித்த முருகர் சிலையைப் பற்றியும் சொன்னார்.
வைரமுத்து அளித்த முருகர் சிலை

மு.க.அழகிரி அளித்த விருது
சில மாதங்களுக்கு முன், மு.க. அழகிரி டி.எம்.எஸ்ஸுக்கு மதுரையில் பாராட்டு விழா நடத்திக் கொடுத்த விருது, ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. மு.க.அழகிரி அவர்கள் டி.எம்.எஸ். மீது எத்தனை அபிமானம் உள்ளவர் என்பதைக் காட்டுவது போன்று அத்தனை பிரமாண்டமாக இருந்தது அந்த விருது.

ஒரு ஆல்பத்துக்காக, வாலி எழுதித் தந்த இரண்டு பாடல்களை டி.எம்.எஸ். தன் பாணியில் இசையமைத்துப் பாடிக் கொடுக்கும்படியும், அதை வைத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமாக தான் இசைக் கோப்பு செய்துகொள்வதாகவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியிருக்கிறாராம். அதற்கான வேலை நடந்துகொண்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் டி.எம்.எஸ்.

ஒவ்வொரு முறை டி.எம்.எஸ்ஸைச் சந்திக்கும்போதும் ஓரிரு வயது குறைவாக ஆனவர் போன்று சுறுசுறுப்பாக, இளமையாகக் காட்சியளிக்கிறார். வருகிற மார்ச் மாதம் 24-ம் தேதியோடு அவருக்கு 86 வயது பூர்த்தியாகி, 87 தொடங்குகிறது. அவர் நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமென்று, அவரின் தீவிர ரசிகன் என்கிற முறையில் மகாஸ்ரீ அன்னையை வேண்டுகிறேன்.

***
வயது என்பது மனதைப் பொறுத்த விஷயம். மனதாலும் நினைக்கவில்லை எனில், வயது ஒரு விஷயமே அல்ல!

ஒரு பேர் வைங்களேன், ப்ளீஸ்!

‘பேர் வைத்தல்’ என்பதை இங்கே ‘தலைப்புக் கொடுத்தல்’ என்கிற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் சிறுகதையை எழுதி முடித்துவிட்டு (இப்ப இல்லீங்க. ரொம்ப காலத்துக்கு முன்னே!) அதற்கு ஒரு நல்ல தலைப்பை வைக்க நான் பட்ட பாடு... அப்பப்பா! ஒரு பெண் எத்தனை அழகா மேக்கப் பண்ணிக்கிட்டு ஜொலிச்சாலும், அவ நெத்தியில இருக்கிற பொட்டுதான் அவளோட மொத்த அழகையும் தூக்கி நிறுத்துறதா எனக்குத் தோணும்! அது போல, ஒரு சிறுகதைக்குச் சரியான தலைப்புக் கிடைக்கலேன்னா, உப்பு இல்லாத சமையல் போல கொஞ்சம் சொதப்பின மாதிரிதான்!

ஒரு முறை, நான் சாவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து ஒரு சிறுகதையை வாங்கிப் பிரசுரித்தேன். விஷயம் என்னவென்றால், சுஜாதா அந்தக் கதைக்குத் தலைப்பே வைத்திருக்கவில்லை. அவரைத் தொடர்புகொண்டு் கேட்கவும் அப்போது எனக்கு அவகாசமோ, தொலைத்தொடர்பு வசதிகளோ இல்லை. எனவே, நானே ஒரு முடிவெடுத்து, ‘தலைப்பில்லாத கதை’ என்ற தலைப்பில் அந்தக் கதையைப் பிரசுரித்து, “இந்தக் கதைக்குச் சரியான தலைப்பை வாசகர்கள் எழுதியனுப்பலாம். .... தேதிக்குள் வந்து சேரும் தலைப்புகளிலிருந்து எழுத்தாளர் சுஜாதாவே ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துப் பரிசு தருவார்” என்று அறிவிப்பு போட்டுவிட்டேன்.

விடியற்காலை 3 மணி... ஆசிரியர் சாவியை தூக்கத்திலிருந்து எழுப்பி, முடித்து வைத்த ஃபாரங்களைக் காட்டியபோது, புரட்டிக்கொண்டே வந்தவர், அந்த அறிவிப்பில் சிறிது நேரம் தாமதித்தார். பின்பு, “சுஜாதா கிட்ட இது பத்திப் பேசிட்டியா? செலக்ட் பண்ணித் தரேன்னு சொன்னாரா?” என்று கேட்டார். “இல்லை சார்! பேச முடிஞ்சிருந்துதுன்னா கதைக்கான தலைப்பையே அவர் கிட்டே கேட்டிருப்பேனே! அவரைப் பிடிக்க முடியலை. அதான், நானே துணிஞ்சு அவரைக் கேக்காமலே இப்படி ஒரு அறிவிப்பு போட்டுட்டேன்” என்றேன். (‘துணிஞ்சு’ என்பது, ஆசிரியர் சாவி மீது சுஜாதா வைத்திருக்கும் பெருமதிப்பில் என்பது அண்டர்ஸ்டுட்!)

சிரித்தார். “நல்லது! கடைசி நிமிஷத்துல தலைப்புக்கு என்ன பண்றதுன்னு முழிக்காம, நீயா ஏதோ ஒரு தலைப்புக் கொடுக்காம, கிரியேட்டிவ்வா யோசிச்சுப் பண்ணினே பாரு! கெட்டிக்காரன்தான்” என்றார். (அவரைப் பற்றி எப்போது எழுத நேர்ந்தாலும், மேற்கொண்டு எழுத வராமல், நெஞ்சம் நெகிழ்ச்சியில் உறைந்து போகிறது.)

அதன்படியே, வாசகர்களிடமிருந்து வந்த நூற்றுக்கணக்கான தலைப்புகளிலிருந்து சிறப்பான பத்து தலைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து சுஜாதாவுக்கு அனுப்பி வைத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததோடு, ஒரு சிறுகதைக்குரிய நல்ல தலைப்பை வைப்பது எப்படி என்பதற்கான சில டிப்ஸ்களையும் எழுதி அனுப்பியிருந்தார். அவற்றில், ‘தலைப்பு சிக்கனமாக ஓரிரு வார்த்தைகளில் இருந்தால் நல்லது; நீண்ட தலைப்பாக இருந்தால், அந்தத் தலைப்பிலேயே ஏதாவது சுவாரஸ்யம் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பொன்மொழியையோ வேறு ஒரு சொற்றொடரையோ சற்றே திரித்து, புதுமை சேர்க்கலாம்; (வாய்மையே/சில சமயம்/வெல்லும் என்பது போல.) தலைப்பு கதையின் சஸ்பென்ஸைக் கெடுத்துவிடும்படி கட்டாயம் இருக்கக்கூடாது’ ஆகியவை சட்டென்று நினைவுக்கு வரும் டிப்ஸ்கள்.

சுஜாதா தேர்ந்தெடுத்துக் கொடுத்த தலைப்பை (இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை) வெளியிட்டு, அதை எழுதி அனுப்பிய வாசகருக்கு பரிசுத்தொகையை (50 ரூபாய் என்று ஞாபகம்) மணியார்டர் செய்தோம்.

தலைப்பு வைப்பதில் சாவி கெட்டிக்காரர். கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்கிற தலைப்பு சாவி தந்ததுதான். அதே போல், கலைஞரின் ‘குறளோவியம்’ என்கிற தலைப்பும் சாவி சார் கொடுத்த தலைப்புதான். புஷ்பாதங்கதுரையின் அற்புதமான நாவல் ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’. இது பின்னர் திரைப்படமாகவும் வந்தது. இந்தத் தலைப்பும் சாவி கொடுத்த தலைப்புதான். சாவி எழுதிய ஒரு நாவலின் தலைப்பு ‘ஆப்பிள் பசி’. என்னவொரு வித்தியாசமான தலைப்பு! இந்தத் தலைப்பால் வசீகரிக்கப்பட்ட எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ‘விஸ்கி தாகம்’ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதினார்.

சாவி சாரிடம் பயின்றதில், தலைப்பு வைக்கும் சூட்சுமம் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் பிடிபட்டது. கிரிக்கெட் ஜோக்குகளுக்கு ‘சிரிக்கெட்’ என்றும், கொலு ஜோக்குகளுக்கு ‘கொலுன்னு சிரிங்க’ என்றும் எண்பதுகளிலேயே வார்த்தைகளில் விளையாடித் தலைப்பு வைக்கத் தொடங்கியது (தற்பெருமை இல்லாமல் சொல்கிறேன்) நான்தான். பின்னர் நான் ஆனந்த விகடனில் சேர்ந்த பிறகு, நான் வைக்கும் தலைப்புகளை வீயெஸ்வி சார் ரசித்துப் பாராட்டி, அவரது கட்டுரைகளுக்கேகூட என்னைத் தலைப்பு வைக்கச் சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

சாவியில் ஒருமுறை கீல்வாதம், மூட்டுவாதம், பக்கவாதம் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் அரைப்பக்க விளம்பரம் ஒன்று பிரசுரத்துக்கு வந்தது. தலைப்பு எதுவும் இல்லாமல் இருந்த அந்த விளம்பரத்துக்கு நானாக, ‘எதிர்வாதம், பிடிவாதம், குதர்க்கவாதம் நீங்கலாக...’ என்று தலைப்புக் கொடுத்து வெளியிட்டேன். ஆச்சரியம்... பின்னர் அந்த விளம்பரம் அதே தலைப்புடன் மற்ற பத்திரிகைகளிலும் வெளியாகியது. (அதற்கு முன்னர் அது தலைப்பில்லாமல்தான் வெளியாகிக்கொண்டு இருந்தது.) தவிர, சம்பந்தப்பட்ட டாக்டர் தன் மருத்துவமனை போர்டிலேயே இப்படி எழுதிக்கொண்டு இருந்ததை ஒரு வாசகர் போட்டோ பிடித்து அனுப்பி வைத்திருந்தார்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். இப்போது எனக்கு ஒரு தலைப்பு தேவை.

சமீபத்தில், புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது அங்கே விகடன் ஸ்டாலில், “அவள் விகடனில் வெளியான ‘பத்துவம்’ புத்தகமாக வந்திருக்கிறதா?” என்று பெண்களும், “விகடனில் டிக்... டிக்... டிக்... என்ற தலைப்பில் வெளியான பொன்மொழிகள் புத்தகமாக வந்திருக்கிறதா?” என்று மோகன்சம்பத் (பெயர் மோகன்சம்பத்தா, மோகன்ராமா என்று இப்போது சரியாக ஞாபகமில்லை. அவர் ஜெயா டி.வி-யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருப்பதாகச் சொன்னார்.) என்பவரும் விசாரித்துக்கொண்டு இருந்ததைக் கேட்டேன். இன்னும் பலரும் இப்படி விசாரித்துப் போனதாகச் சொன்னார்கள் விகடன் பிரசுரத்தார்.

எனவே, டிக்... டிக்... டிக்... மற்றும் பத்துவம் இரண்டையும் தொகுத்து (கிட்டத்தட்ட 400 பொன்மொழிகள் தேறும் என்று நினைக்கிறேன்.) ஒரு புத்தகமாகக் கொண்டு வர விகடன் பிரசுரம் தீர்மானித்திருக்கிறது. ஆனால், புத்தக வடிவில் வரும்போது இந்த இரண்டு தலைப்புகளுமே அத்தனைப் பொருத்தமாக இருக்காது என்பது என் எண்ணம். பொன்மொழிகள் போல ‘மின்மொழிகள்’ என்று ஒரு தலைப்பை யோசித்தேன். ஆனால், மின்சார சிக்கனம் தொடர்பான ஸ்லோகன்களோ என்று வாசகர்கள் குழம்பிவிடப் போகிறார்களே என்று தோன்றியது.

இதைப் படிக்கும் உங்களுக்கு ஏதாவது தலைப்பு தோன்றினால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். உங்கள் தலைப்புகளை ஒரு வார காலத்துக்குள் சொன்னால் உதவியாக இருக்கும். உங்களுடைய தலைப்புகளை விகடன் பிரசுரத்தாரிடம் கொடுக்கிறேன். அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தலைப்பைப் பின்னூட்டமாக இட்ட ‘என் டயரி’ வாசகருக்கு என்னுடைய சிறிய அன்பளிப்பாக, மேற்படி புத்தகம் தயாரானதும் ஒரு பிரதியை இலவசமாக அனுப்பி வைக்கிறேன். தவிர, புத்தகத்திலும் அவர் பெயரை நன்றியோடு குறிப்பிட முயல்கிறேன். (முயல்கிறேன் என்று பட்டும் படாமல் சொல்வதற்குக் காரணம், இதில் முடிவு எடுக்க வேண்டியது விகடன் பிரசுரத்தார்தான்.)

குறிப்புகள்:

1. தலைப்பு தேர்வான பிறகே இதற்கான பின்னூட்டங்கள் இங்கே பதிவிடப்படும்.
2. டிக்... டிக்... டிக்... மற்றும் பத்துவம் போன்ற தலைப்புகளில் என்ன மாதிரியான பொன்மொழிகளை எழுதி வந்தேன் என்று தெரியாதவர்கள், ‘என் டயரி’ பகுதியில் ஒவ்வொரு பதிவின் கீழும் நான் பதிவிடும் பொன்மொழிகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

***
பழமொழி ஒரு சின்ன வாக்கியம்தான். ஆனால், நீண்ட அனுபவத்தை உள்ளடக்கியது!

நலமா ஞாநி?

திங்கள்கிழமை காலையில், தோழர் ஞாநிக்கு ஹார்ட் அட்டாக் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் தோழர் பாலமுருகன். உடனே ஞாநியின் செல்லுக்குத் தொடர்பு கொண்டேன். ‘ஸ்விட்ச்டு ஆஃப்’ என்று வந்தது. அடுத்து நண்பர் பாஸ்கர் சக்தியின் செல்லுக்குத் தொடர்பு கொண்டேன். “உண்மைதான்! மைல்டாக இருந்திருக்கிறது. மலர் ஹாஸ்பிட்டலில் சேர்ந்திருக்கிறார். பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. இப்போது நான் அங்கேதான் போய்க்கொண்டு இருக்கிறேன்” என்றார்.

தொலைக்காட்சியில் அவரின் ‘கண்ணாடிக் கதைகள்’ தொடரைப் பார்த்ததிலிருந்து அவர் மீது எனக்கு நல்ல அபிமானம் உண்டு. ஏற்கெனவே விகடன் குழுமத்திலிருந்து வெளியான ‘ஜூனியர் போஸ்ட்’ இதழை அவர்தான் பொறுப்பேற்றுப் பார்த்துக்கொண்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில் நான் விகடனில் சேரவில்லை. பின்னர் அவர் மீண்டும் விகடனில் எழுதத் தொடங்கியதிலிருந்து நண்பர் பாஸ்கர் சக்தியின் மூலமாக (இவரும் விகடனில் பணியாற்றியபோதுதான் பழக்கம்.) அறிமுகமாகி, ஞாநியுடனான நட்பை வளர்த்துக் கொண்டேன்.

அவர் விகடனில் எழுதிய ‘தவிப்பு’ தொடர்கதை - புனைகதையா, நிஜ சம்பவத் தொகுப்பா என மயக்கம் தரும் அளவுக்குக் கற்பனையும் உண்மைச் சம்பவங்களும் பின்னிப் பிணைந்திருக்கும். ஒரு கைம்பெண்ணின் தனிமையை மையமாக வைத்து ஆனந்த விகடனில் அற்புதமான ஒரு சிறுகதை எழுதியிருந்தார் திருப்பூர் கிருஷ்ணன். ஒரு மடாதிபதியிடம் சென்று தனக்கு ஒரு ஆண் துணை வேண்டுமென்று கேட்பார். அதற்கு அந்த மடாதிபதி, மடத்துக்கு வந்து சேர்ந்த ஓர் அநாதைக் குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து, ‘இவனை வளர்த்து ஆளாக்கு. இவன் உனக்குத் துணையாக இருப்பான்’ என்று சொல்லி அனுப்புகிறார். அந்தக் கைம்பெண் சிந்தை தெளிவடைந்து செல்கிறாள் என்பது கதை. அதன் சாராம்சத்தை மறுதலித்து, கதைக்கு வேறு ஒரு புதிய முடிவைக் கொடுத்து, அடுத்த வாரமே ஞாநி ஒரு புதிய கதை எழுதித் தந்தார். அதுவும் அற்புதமாக இருந்தது. அவள் தேடி வந்தது உடம்பின் வேட்கையைப் போக்கக்கூடிய ஓர் ஆண் துணையை. மடத்தில் இருந்த ஒரு சீடருக்கும் உடலின் தேவை இருந்தது. தன்னால் மடத்தில் நீடிக்க முடியாது என்று சொல்லி, தன்னை அவளுக்குத் துணையாக்குங்கள் என்று குருவிடம் கேட்டுக்கொண்டு அவளோடு போகிறார் என்பது ஞாநி தந்த முடிவு. அதுவும் விகடனில் பிரசுரமாயிற்று. ஞாநியின் எழுத்தாற்றலுக்கும், வாதத் திறமைக்கும், கூர்மையான கவனிப்புக்கும் அந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம்.

கட்டுரைகளில் அவர் வைக்கும் வாதங்கள் பிரமிக்க வைக்கும். எங்கெங்கிருந்தோ நடைமுறை உதாரணங்களைத் தேடியெடுத்துச் சேர்ப்பார். கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், குறும்பட இயக்குநர், விமர்சகர், நாடகாசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் ஞாநி.

ஒருமுறை, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடில்லாமல் காசு வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோது, விகடனில் ஞாநி அது சம்பந்தமாக எழுதிய கட்டுரையில், ‘இது ஒன்றும் புதிதல்ல; ஏற்கெனவே தீரர் சத்தியமூர்த்தியே இப்படி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் காசு வாங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்...’ என்கிற ரீதியில், பழைய ‘பாரத தேவி’ இதழிலிருந்து ஆதாரம் காட்டி எழுதியிருந்தார். அசந்து போனேன்!

என்னைவிட இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவராக இருப்பார் ஞாநி. ஆனால், அனுபவத்திலும் அறிவிலும் என்னைவிட இருபது, முப்பது மடங்கு மூத்தவர். அவருடைய பெரும்பாலான கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகிறேன். என்றாலும், அவருடைய ஒரு சில கருத்துக்களை என்னால் ஏற்க முடியவில்லை. வேண்டுமென்றே குற்றஞ்சாட்டுகிற மாதிரி, குதர்க்க வாதம் செய்கிற மாதிரிதான் அவை எனக்குத் தோன்றுகின்றன. விகடனில் ‘ஓ பக்கங்கள்’ எழுதி வந்த ஞாநி அதை நிறுத்திக்கொண்டு வெளியேற ஒருவகையில் நானும் ஒரு காரணம்!

இலக்கியக் கூட்டங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி! என்றாலும், ஞாநி நடத்துகிற கூட்டம் என்பதால்தான் ‘கேணிக் கூட்ட’ங்களில் கலந்து கொண்டேன். (சென்ற மாதக் கூட்டத்துக்குச் செல்லவில்லை.) அடுத்த கூட்டத்துக்கு அவரை நலம் விசாரிக்கவாவது அவசியம் செல்வேன்.

புத்தகச் சந்தைக்குப் போயிருந்தபோது, அங்கே பிரமாண்டமான ஃப்ளெக்ஸ் பேனரில் விஸ்வரூப ஞாநி சப்பணமிட்டு கம்பீரமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது, ‘இவருடைய நண்பன் நான்’ என்று மனசுக்குள் ஒரு சந்தோஷம் வந்து உட்கார்ந்துகொண்டது உண்மை. உடனேயே அவரை நேரில் சென்று சந்திக்கும் ஆவல் எழுந்தது.

ஞாநி மலர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என்று கேள்விப்பட்டு, அவருடைய செல்லுக்குத் தொடர்பு கொண்டேன். குழு உறுப்பினர் என்று சொல்லி, வேறு ஒரு நண்பர்தான் பேசினார். அறிமுகப்படுத்திக்கொண்டு, ஞாநியின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். “நலமாக இருக்கிறார்” என்றார். “அவரோடு பேச முடியுமா?” என்றேன். “இல்லை. அவருக்கு ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் பத்மா எண்ணுக்கு வேண்டுமானால் போய் செய்து பேசுங்கள்” என்றார்.

எனக்கு ஞாநியுடன்தான் பேச வேண்டும்; அவரின் நலனை அவரின் கரகரத்த குரலில் கேட்க வேண்டும். எனவே, பத்மாவுக்கு போன் செய்யவில்லை.

நலமா ஞாநி? நாளைய ஞாயிறு கேணிக் கூட்டத்தில் சந்திப்போம்!

அன்புடன்,

உங்கள் நண்பன்,

ரவிபிரகாஷ்.

***
எதிரி ஒப்புக் கொள்வான்; நண்பனே வாதிடுவான்!