ஈன்றபொழுதின்...

ன் முதல் குழந்தை ஷைலஜா பிறந்தபோதும், அடுத்ததாக மகன் ரஜ்னீஷ் பிறந்தபோதும் எனக்கு உண்டான சந்தோஷத்துக்கு ஈடான சந்தோஷம் வேறில்லை என்றுதான் நான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன், அதே அளவிலான சந்தோஷ மனநிலை எனக்கு வாய்த்தது.

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாயி’ன் மன நிலை அது.

எத்திராஜ் கல்லூரியில், விஸ்காம் படிப்பில் மகளைச் சேர்த்த தினம் அது.

ஒரு வாரத்துக்கு முன் நுழைவுத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டாள் என் மகள். மறுநாள் நோட்டீஸ் போர்டில், தேர்வானவர்கள் பட்டியலில் அவள் பெயரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் கல்லூரிக்குச் சென்று பணம் கட்டிவிட்டு வந்தபோது, மிக மிகச் சந்தோஷமாக இருந்தது.

நேற்றுத்தான் பிறந்த மாதிரி இருக்கிறது; அதற்குள் கல்லூரியைத் தொட்டுவிட்டாள் என் மகள்.

அவள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு முன்பாக, ஆனந்தவிகடனில் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக 1973-ம் வருடத்திய இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, எத்திராஜ் கல்லூரி பற்றிய குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது. ‘எத்திராஜ் கல்லூரி பற்றி உனக்கு என்ன தெரியும்?’ என்று ஒருக்கால் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டால், இந்தக் குறிப்பைச் சொல்லி அவர்களை அசர வைக்கும்படி என் மகளிடம் சொல்லியிருந்தேன். அப்படி எதுவும் கேள்வி வரவில்லை என்றாள்.

சரி, அப்படி என்ன குறிப்பு அது?

1973-ம் ஆண்டுதான் எத்திராஜ் கல்லூரி வெள்ளிவிழா கொண்டாடியது. அதாவது, 1948-ல் தொடங்கப்பட்ட கல்லூரி அது. வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டவர் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி.

அந்த விழா மேடையில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு கவரை இந்திரா காந்தியிடம் தந்திருக்கிறார். இந்திரா அதை வாங்கி, எதிரே இருந்த டீபாய் மீது வைக்க, ஃபேன் காற்றில் அது அங்கிருந்து பறந்துபோய் எங்கோ விழுந்துவிட்டது. பதறிப்போன இந்திரா, அது எங்கே என்று சுற்றுமுற்றும் தேட, அது கண்ணிலேயே படவில்லை. யாராவது அதை எடுத்துத் தருவார்களா என்று இந்திராவின் கண்கள் அலைபாய்ந்திருக்கின்றன. ஆனால், இந்த நிகழ்வை வேறு யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை. முன் வரிசையில் இருந்த புகைப்படக்காரர்களும் மும்முரமாகப் படம் பிடிப்பதில் ஈடுபட்டிருந்தார்களே தவிர, கவர் பறந்து போனதை ஒருவருமே பார்க்கவில்லை. ‘சரி, போகட்டும். என்ன கவரோ...’ என்று விட்டுவிட்டார் இந்திரா.

அடுத்துப் பேச எழுந்த அருட்செல்வர் மகாலிங்கம், “... இப்போது ரூ.10,000 நன்கொடையை நமது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வழங்குவார்...” என்று பேச்சினூடே மைக்கில் அறிவித்தபோதுதான், அவர் தன்னிடம் கொடுத்தது அந்த 10,000 ரூபாய்க்கான செக்தான் என்று புரிந்தது இந்திராவுக்கு.

பிறகு, பரபரப்பாக மேடையில் தேடி, அந்த கவரைக் கண்டுபிடித்து எடுத்து வந்து இந்திராவிடம் கொடுக்க, அவர் வாங்கி எத்திராஜ் கல்லூரிக்கு வழங்கினார்.

இந்த விஷயம்தான் சிறு குறிப்பாக விகடனில் வெளியாகியிருந்தது.

தவிர, எத்திராஜ் கல்லூரி தொடர்பாக வேறு ஒரு சுவாரஸ்ய தகவலையும் கேள்விப்பட்டேன்.

ந்தக் கால சூப்பர்ஸ்டார் ஏழிசை வேந்தன் எம்.கே.டி. பாகவதரைப் பற்றியும், மக்களிடம் அவருக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்கு பற்றியும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அவர் கைதானது பற்றியும், அவரோடு சேர்த்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைதானது பற்றியும், பின்னர் இருவரும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றது பற்றியும் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

இருவரும் சிறைத் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே அந்த வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களுக்காக வாதாடினார் ஒரு வழக்கறிஞர். தம்முடைய சாதுர்யமான வாதத் திறமையால், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்தார். இரண்டு ஆண்டு சிறைவாசம் முடிந்த நிலையில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தமக்காகத் திறமையாக வாதாடி விடுதலை வாங்கித் தந்த நன்றிக் கடனுக்காக, அந்த வழக்கறிஞரின் வீடு தேடிச் சென்று, ஒரு தங்கத் தட்டு நிறைய தங்கக் காசுகளை வைத்து, அவரிடம் நீட்டி, அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார் எம்.கே.டி. பாகவதர். ஆனால், வாங்க மறுத்துவிட்டார் அந்த வழக்கறிஞர். “உங்கள்மீது உள்ள அபிமானத்தால்தான் வாதாடினேனே தவிர, பொற்காசுகளுக்காக இல்லை” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அந்த வழக்கறிஞர்தான், எத்திராஜ் கல்லூரியை நிறுவிய எத்திராஜ முதலியார்.

சென்னையில் பல கல்லூரிகள் விஸ்காம் படிப்பு சொல்லித் தருகின்றன. டாப்-10 கல்லூரிகள் பற்றிய செய்திக் குறிப்பை ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ வெளியிட்டிருந்தது. அதில், விஸ்காம் படிப்பைப் போதிப்பதில் முதல் இடம் பிடித்திருந்த கல்லூரியாக எத்திராஜ் கல்லூரியைத்தான் சிறந்த கல்லூரியாக அது குறிப்பிட்டிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது.

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை
நற்கல்லூரியில் சேர்த்த தந்தை’யானேன்!

***
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் மட்டும் சிறந்த பெற்றோர் ஆகிவிட முடியாது. வீட்டில் பியானோ இருந்தால், பியானோ கலைஞராகிவிட முடியுமா?