கூவம் நதி தீரத்திலே...


'தேம்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்று எதற்குப் பெயர் தெரியுமா? சொன்னால் சிரிக்கக் கூடாது. கூவத்துக்குதான் அந்தப் பெயர். லண்டன் நகரின் மத்தியில் தேம்ஸ் நதி ஓடுவது போல சென்னை நகரின் மத்தியில் ஓடும் கூவம் நதியின் அழகில் மயங்கி, அந்தக் காலத்தில் பிரிட்டிஷார் அதைச் செல்லமாக அப்படித்தான் அழைத்தார்கள்.

'கெட்டும் பட்டணம் சேர்' என்பார்கள். ஆனால், பட்டணம் சேர்ந்த பின் கெட்டவர்கள்தான் அதிகம். அதில் முதலாவது இடம் கூவத்துக்குதான்.

கூவத்தைச் சுத்தப்படுத்தி, அதை அழகிய நதியாக்கி, அதில் படகுப் போக்குவரத்து, கரையோரங்களில் பூங்காக்கள் அமைத்து, பழையபடி அதற்கு 'தேம்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்கிற அடைமொழியைப் பெற்றுத் தரப் போவதாக ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்கள் மாறும்போது சூளுரைப்பார்கள்.

காமராஜ் காலத்தில் கூவம் சீரமைப்புத் திட்டம் உருவாகி, பக்தவசலம் காலத்தில் அதற்கான ஸ்கீம் போடப்பட்டு, அண்ணா காலத்தில் திட்டம் முடுக்கி விடப்பட்டு, கலைஞர் ஆட்சிக் காலத்தில் வேகமாக வளர்ந்து... அப்புறம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என பல ஆட்சிக் காலங்களைப் பார்த்து, இப்போது கலைஞர் மகன் மு.க.ஸ்டாலின் வரை அதற்கான பேச்சு பலமாக 'அடிபட்டுக்'கொண்டே இருக்கிறது. 'மாறுவேனா, நாறுவேனா' என்று இன்றைக்கும் கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டு இருக்கிறது கூவம்.

எங்கள் அலுவலகத்தில் மாடியில் உள்ள காண்டீனிலிருந்து பார்த்தால், கீழே பக்கத்தில் கூவம் ஓடுவது தெரியும். பார்க்கக்கூட வேண்டாம்... அருகில் கூவம் இருப்பதை மூக்காலேயே கண்டுபிடித்துவிடலாம். அவ்வளவு கப்பு!

இன்றைக்கும் அப்படித்தான்... மூக்கை மூடிக்கொண்டு, கூவத்தின் இயற்கையழகை என் இரு கண்களாலும் அள்ளிப் பருகியவாறு சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.

கரேலென்று இருந்தது கூவம். ஓடவில்லை; தேங்கிக் கிடந்தது. கரையோரம் குடிசைகள். இத்தனை நாற்றத்தில் எப்படித்தான் வசிக்கிறார்களோ அவர்கள் என்று வியப்பாகவும், பரிதாபமாகவும் இருந்தது. அந்தச் சாக்கடையிலே சில பெண்மணிகள் துணி துவைத்துக்கொண்டு இருந்தார்கள். கரையோரம் சில பிள்ளைகள் கோலி விளையாடிக்கொண்டு இருந்தன. சில வாலிபர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

பார்த்துக்கொண்டு இருந்தபோதே கிரிக்கெட் ஆட்டம் நின்றது. வாலிபர்கள் கூடி, என்னவோ பேசினார்கள். சில நொடிகளில் இரு இளைஞர்கள் தங்கள் சட்டை, லுங்கிகளை அவிழ்த்துவிட்டு நிக்கருடன் நின்றார்கள். மற்ற இளைஞர்கள் உற்சாகமாகக் கத்துவது தெரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இரு இளைஞர்களும் கூவத்தை நெருங்கி, தடாலென்று அதில் தாவினார்கள். ஏதோ ஸ்டார் ஓட்டலின் சொகுசு நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற பாவனையில், அவர்கள் இருவரும் கூவத்தில் மல்லாக்க நீந்தினார்கள்; உள் நீச்சல் அடித்தார்கள்; இங்கே மூழ்கி சற்றுத் தொலைவில் எழுந்தார்கள். 'பொன்னொன்று கண்டேன், பெண் அங்கு இல்லை...' என்று சிவாஜியும் பாலாஜியும் பாடி ஆடும் சினிமா காட்சி போல இருந்தது அவர்கள் நீந்திய விதம்.

பின், அவர்கள் இருவருக்குள்ளும் யார் வேகமாக நீந்தி அக்கரையை அடைவது என்ற போட்டி வந்திருக்கும்போல. சர்... சர்ரென்று நீந்தினார்கள். ஜெட் விமானம் பறந்தால், ஆகாயத்தில் வெள்ளையாகக் கோடு போட்டுக்கொண்டே போகுமே, அது போல இவர்கள் நீந்திய தடம் கூவத்தின் கறுப்பையும் மீறி அட்டைக் கரியாகக் கோடு போட்டுக்கொண்டே போயிற்று.

பார்க்கப் பார்க்க எனக்குப் பக்கென்றிருந்தது. 'என்ன இவர்கள், இதில் போய் நீந்துகிறார்கள்! இது எத்தனை அசுத்தம்... இதில் எத்தனைக் கழிவுகள்... எத்தனை கெமிக்கல்கள்..!

இரண்டாம் மாடியில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த எனக்குச் சோறு இறங்கவில்லை!

*****

முந்தா நாள் 'அனகிராம்' பற்றி எழுதியிருந்தேனே, படித்தீர்களா?
ரொம்ப நாளைக்கு முன்னால், மாவீரன் நெப்போலியன் பற்றி ஒரு அனகிராம் படித்தது நினைவுக்கு வந்தது.

நெப்போலியன் சரித்திரம் எல்லோருக்குமே தெரியும். அவன் கடைசி காலத்தில் 'எல்பா' என்ற தீவுக்கு விரட்டப்பட்டு, பின்னர் அங்கே அவன் ஒரு படை அமைத்து தன் ஆட்சியைக் கைப்பற்றப் போராடி... அது பெரிய கதை. நாம் இங்கே அனகிராமை மட்டும் பார்ப்போம்.

Napoleon Bonaparte - No, appear not on Elba.

முடிப்பதற்கு முன், என் பெயரின் அனகிராமை இங்கே நான் சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும்.

Raviprakash - A ravish park. (பரவசப்படுத்தும் ஒரு பூங்கா. எப்பூடி?!)

*****
கட்டுகளை அவிழ்த்துக் கொள்ளத் தெரியாமல் இருப்பது பரிதாபமானது. கட்டுண்டு இருக்கிறோம் என்பதையே அறியாமல் இருப்பது அதைவிடப்பரிதாபமானது!

0 comments: