என்றும் பசித்திரு... என்றும் விழித்திரு..!


நான் தற்போது விகடன் பிரசுரத்துக்காகத் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டு இருக்கும் புத்தகம் ‘STAY HUNGRY STAY FOOLISH'.

வெளியான ஒரு சில மாதங்களிலேயே ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கும் புத்தகம் இது.

அப்படி என்ன சிறப்பு இந்தப் புத்தகத்தில்?

ஐஐஎம் -மில் படித்துப் பட்டம் பெற்று, ஒரு சில ஆண்டுகள் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, பின்பு அதிலிருந்து விலகி, சுயமாக, புதிதாக ஒரு தொழிலை ஆரம்பித்து, அதில் வெற்றி கண்ட, மேலும் மேலும் உயரத்திற்குச் சென்றுகொண்டு இருக்கக்கூடிய இருபத்தைந்து தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நாடி நரம்புகள் முறுக்கேறி, உடனே தாங்களும் சுய தொழிலில் இறங்கிச் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் பிறக்கும் என்பது உறுதி. அதற்கு மிகச் சரியாக வழிகாட்டக்கூடிய ஒரு கைடு மாதிரி, அந்த இருபத்தைந்து பேரின் அனுபவக் கதைகளோடும், ஆலோசனைகளோடும் சுவாரசியமாக இருக்கிறது இது.

இருபத்தைந்து பேரையும் பேட்டி கண்டு, இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியிருப்பவர் ‘ராஷ்மி பன்சால்’. இவர் ஓர் எழுத்தாளர். இவரே ஒரு தொழிலதிபர்.

‘ஜாம்’ (JAM - Just Another Magazine) என்கிற, இந்தியாவின் முன்னணி இளைஞர் பத்திரிகையின் இணை நிறுவனரும் ஆசிரியருமாக இருப்பவர் ராஷ்மி பன்சால். அந்தப் பத்திரிகை அச்சிலும் வருகிறது; ஆன்லைனிலும் கிடைக்கிறது. இளைஞர்களின் எண்ணங்கள், எதிர்கால வாழ்க்கை, தொழில்கள் பற்றியே அதிகம் எழுதுகிறார் ராஷ்மி. பிரசித்தி பெற்ற இவரது பிளாக்: 'Youthcurry'.

'STAY HUNGRY STAY FOOLISH' என்கிற தலைப்பே கவித்துவமானது. பசி, தாகம் இதெல்லாமே எதையும் சாதிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வார்த்தைகள். முட்டாள்தனமாக இருப்பது என்பது வேறில்லை... எதையும் அறிந்துகொள்ளும் வேட்கையோடு, அதற்கான தகுதியோடு இருப்பது. காலிப் பானையில்தானே எதையாவது போட்டு நிரப்ப முடியும்? அது போல!

இதற்குத் தமிழில் தலைப்புக் கொடுக்க நான் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கவில்லை. திருவருட்பிரகாச வள்ளலார் கைகொடுத்தார்.

அவரது தாரக மந்திரம் ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்பதாகும்.

பசித்திருப்பது என்றால், பட்டினி கிடப்பது என்று பொருளல்ல. பசித்துப் புசித்தால்தான் எதுவும் ஜீரணமாகும். தனித்திருப்பது என்றால், கூட்டத்திலிருந்து விலகித் தனித்திருப்பது அல்ல; மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவது; தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொள்வது. விழித்திருப்பது என்றால், தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு கண் விழித்திருப்பது அல்ல; விழிப்புடன் இருப்பது. எச்சரிக்கையாக இருப்பது.

ஒவ்வொரு மனிதனுக்கும், முக்கியமாக ஒரு தொழிலதிபருக்கு வேண்டிய குணாம்சங்கள் இம்மூன்றும். ஒன்றைச் செய்யவேண்டும் என்கிற வேட்கை, பசி... அதுதான் அடிப்படை. எதையும் புதுமையாகச் செய்வது முக்கியம்; அதுதான் தனித்திருப்பது. எந்த நேரமும் விழிப்பு உணர்வோடு, எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.

ஆக, ஆங்கிலத் தலைப்புக்குப் பொருத்தமாக ‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ என்று தமிழ்த் தலைப்பு கொடுத்துவிட்டேன்.

“மொத்தத் தமிழாக்கத்தையும் நாங்கள் பார்த்துத் திருப்தி அடைந்து சம்மதம் தெரிவித்த பின்னர்தான் மேற்கொண்டு நீங்கள் இதில் இறங்க வேண்டும்” என்று மூலப் பிரதி வெளியீட்டாளர்கள் சொல்லியிருந்தார்கள். ஒரு சாம்பிளுக்கு பத்து பேரைப் பற்றிய தமிழாக்கத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார் விகடன் பிரசுர ஆசிரியர் திரு.வீயெஸ்வி அவர்கள்.

அங்கிருந்து சமீபத்தில் பதில் வந்துவிட்டதாம். “ஆங்கில மூலத்தின் அடிப்படை ஜீவனைக் கொஞ்சமும் பிசகாமல் தமிழில் அப்படியே கொண்டு வந்திருக்கிறீர்கள். மிக அருமையான, சரளமான தமிழாக்கம். மேற்கொண்டு எதுவும் எங்கள் பார்வைக்கு அனுப்ப வேண்டியதில்லை. கோ அஹெட்!” என்று உற்சாகமான பதில் வந்திருக்கிறது என்று சொல்லி, அதற்காக என்னைப் பாராட்டினார் வீயெஸ்வி.

மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குக் கிடைத்த பாராட்டுக்களில் பாதி அவருக்கே சேரும். ஆங்கில மொழி ஏற்படுத்திய மயக்கத்தில், ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான் சறுக்கியிருந்த ஒரு சில இடங்களை எல்லாம் கவனமாகக் கண்டுபிடித்துத் தவற்றைக் களைந்தவர் அவர்தான்.

நான் பசித்திருந்தேன்; அவர் விழித்திருந்தார்!

*****
குறிக்கோள், நீ என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது. ஆர்வம், அதை நீ எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது.
.

பன்றிக்கு நன்றி சொல்லி...

ன்னி வளர்த்தவன் பணக்காரன்; கோழி வளர்த்தவன் கோடீஸ்வரன்’ என்றொரு சொலவடை கிராமப்புறங்களில் உண்டு.

பன்றிக்கு நன்றி சொல்லிக் குன்றின் மேல் ஏறி நின்றால், வென்றிடலாம் குலசேகரனை. அவன் யார்?’ என்று இம்சை அரசன் படத்தில் வடிவேலு கேட்டு, வயிறெல்லாம் புண்ணாக்குவார்.

சேமிப்பைக் குறிக்கும் சின்னம் பன்றி. அதனால்தான் உண்டியலின் வடிவத்தைப் பன்றி உருவமாக அமைத்திருக்கிறார்கள்.

ஆனால், பன்றிகளுக்கு இருந்த இந்த நல்ல பெயரெல்லாம் சமீபத்திய பன்றிக் காய்ச்சலால் பறிபோய்விட்டது. உண்மையில், பன்றிதான் இந்தக் காய்ச்சலுக்குக் காரணமா என்றே எனக்குச் சந்தேகமாக உள்ளது. பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம் என்பது போல், எங்கோ பன்றிப் பண்ணை ஒன்றில் வேலை செய்தவர்களிடமிருந்து இந்தக் காய்ச்சல் புறப்பட்டதால், பழி பன்றி தலையில் விழுந்ததோ என்று நினைக்கிறேன்.

Swine என்ற சொல்லுக்கு ‘விரும்பத்தகாத’, ‘வெறுக்கத்தக்க’ என்ற பொருள்களும்கூட உண்டு. விரும்பத்தகாத அல்லது அடையாளம் காணப்படாத ஒரு காய்ச்சல் என்ற அர்த்தத்தில் Swine Fever என்று குறிப்பிடப்போக, அது Swine என்பதன் மற்றொரு அர்த்தமான பன்றியைக் குறித்ததாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

பன்றிக் காய்ச்சல் ஒன்றும் புதுசு இல்லை. முதன்முதலில் 1918-ம் ஆண்டு இந்த வகையான காய்ச்சல் ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள். 1968-ம் ஆண்டு ஹாங்காங்கில் இந்தக் காய்ச்சல் பரவி, பின்னர் உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள். இதெல்லாம் வலைத் தகவல்கள்.

நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே, ஒவ்வொரு சீஸனுக்கும் ஒரு நோய் விசுவரூபமெடுத்து உயிர்களைப் பலி வாங்கி வந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் ஆடுகளிடையே நீல நாக்கு நோய் வெகுவாகப் பரவியது. மாடுகளிடையே கோமாரி நோய். சில ஆண்டுகளுக்கு முன் ‘ஆந்த்ராக்ஸ்’ நோய் மாடுகளால் பரவியது தெரியும். யானைகள்கூடப் பாதிக்கப்பட்டதாகக் கேள்வி. சூலை நோய் ஒரு சமயம் வாட்டியெடுத்தது. எலிகளால் பிளேக் நோய் பரவியது. கொசுக்களால் டெங்கு ஜுரம், சிக்குன் குனியா என்ற நோய்கள். அப்புறம் பறவைக் காய்ச்சல் வந்தது. இருக்கிற அப்பாவிக் கோழிகளையெல்லாம் பிடித்துக் கொன்று குவித்தார்கள். இப்போது பன்றிகள்!

‘ஒளிவிளக்கு’ படத்தில், ஊருக்குள் விஷ ஜுரம் பரவி, ஊரையே காலி செய்துகொண்டு போவதாகக் காட்சி வரும். நிஜத்திலேயே அப்படி நடந்து நான் பார்த்திருக்கிறேன். காலரா பரவிப் பலர் மாண்டதை என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். பெரியம்மை நோயும் வெகு காலம் தீர்க்கப்படாத ஒரு நோயாகவே இருந்து மனிதனுக்குச் சவால் விட்டுக்கொண்டு இருந்தது. அதற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து, பின்னர் அந்த நோயை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டு, அந்தச் சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக ‘பெரியம்மையா? கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ரூ.1,000 அன்பளிப்பு!’ என்று ஸ்டென்சில்-கட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதையும் பார்த்திருக்கிறேன்.

இவையெல்லாம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலி வாங்கும் நோய்கள் என்பதால் இவற்றைக் கொள்ளை நோய் என்றார்கள். அதே போல், இப்போது இந்தப் பன்றிக் காய்ச்சலையும் கொள்ளை நோய் என்று அறிவித்திருக்கிறார்கள்.

எனக்கென்னவோ, இம்மாதிரி கொள்ளை நோய்கள் பரவ பறவைகளோ, மிருகங்களோ, வேறு உயிரினங்களோ காரணமாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது. மனிதன்தான் காரணம். அவன் செய்கிற அட்டூழியங்கள்தான் இவற்றுக்கெல்லாம் ஆதி காரணம். இயற்கையை அவன் சீண்டிப் பார்க்கப் பார்க்க, அதுவும் இவனைச் சீண்டுகிறது.

நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் பூகம்ப அதிர்வுகள் தென்பட்டதாகப் பலர் சொன்னார்கள். மனிதனின் ஒழுக்கமின்மை, பொறுப்பற்ற செயல்களால் எரிச்சலுறும் இயற்கை பதிலுக்குத் தன் சீற்றத்தைச் சுனாமியாக, பூகம்பமாக, புயலாக வெளிப்படுத்துகிறது. இம்மாதிரி கொள்ளை நோய்கள் உண்டாகவும் இயற்கையின் எரிச்சல்தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

மனிதன் ஒவ்வொன்றுக்கும் மருந்தும் தடுப்பூசியும் கண்டுபிடித்து, ‘ஆகா, ஒழித்துவிட்டேன், வென்றுவிட்டேன்’ என்று மமதையோடு குதிக்கக் குதிக்க, இயற்கையும் வேறு ஒரு ரூபத்தில் குடைச்சல் கொடுத்து, ‘இப்ப என்ன பண்ணுவே? இப்ப என்ன பண்ணுவே?’ என்று நையாண்டி செய்கிறது; ‘நாயகன்’ கமல் சொல்வதுபோல், ‘முதல்ல அவனை நிறுத்தச் சொல், நான் நிறுத்தறேன்’ என்கிறது.

நிறுத்துவானா மனிதன்?

*****
காற்று கெட்டிருக்கிறதா? அது வளர்ந்த நாடு!
தண்ணீர் கெட்டிருக்கிறதா? அது வளரும் நாடு!
பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க பெரியோர்களே!...>

இனிய நண்பர் இயக்குநர் விஜய்ராஜ்!

ரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, விகடன் அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார் இயக்குநர் விஜய்ராஜ்.

விஜய்ராஜைப் பற்றி இங்கே பெருமையாகச் சொல்லியாகவேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. என் மனம் கவர்ந்த, என்னைப் போன்ற கோடானுகோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த பாட்டுத் தலைவன் டி.எம்.சௌந்தரராஜன் பற்றிய ஒரு மெகா டாக்குமெண்ட்டரி சீரியலை கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, கடுமையான போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கொஞ்சமும் தளர்ச்சியோ சோர்வோ அடையாமல், விடாமுயற்சியோடு ஒரு தவம் போல் எடுத்து வருகிறார் விஜய்ராஜ்.

என் இனிய நண்பரும் ஆன்மிகச் செம்மலுமான பி.என்.பரசுராமன், டி.எம்.எஸ். அவர்களின் இல்லத்தில் வைத்து நண்பர் விஜய்ராஜை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். விஜய்ராஜின் வயது அதிகபட்சம் 35-க்குள்தான் இருக்கும். இத்தனை இளம் வயதில் டி.எம்.எஸ். மீது இவருக்கு இத்தனை ஈடுபாடா என்கிற வியப்பும் மகிழ்ச்சியும்தான் அவர் மீது எனக்கு அதிக பிடிப்பை ஏற்படுத்திற்று. நானும் ஓர் டி.எம்.எஸ். வெறியன் என்கிற எண்ணம்தான் அவருக்கும் என் மீது ஆழ்ந்த நட்பை உருவாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் சந்தித்தபோதெல்லாம் டி.எம்.எஸ். குரல் வளத்தைத் தவிர, எங்களுக்குப் பேச வேறு விஷயமே இருக்காது. இருந்தாலும், பேசத் தோன்றாது.

‘இமயத்துடன்’ என்ற தலைப்பில் தான் எடுத்திருந்த டி.எம்.எஸ். பற்றிய, எடிட் செய்யப்படாத காட்சிகளைப் பார்க்க வருமாறு சென்ற வருடத்தில் ஒரு நாள் என்னை விஜய்ராஜ் அழைத்திருந்தார். போயிருந்தேன். இரவு 8 மணி முதல் நடு இரவு 2 மணி வரை, அவரும் சளைக்காமல் ஒவ்வொன்றாகப் போட்டுக் காண்பித்தார்; நானும் சோர்வுறாமல் அத்தனையும் பார்த்துக் களித்தேன். சோர்வுற்று இருப்பவனையும் சுறுசுறுப்பாக்கிடும் குரல் அல்லவா டி.எம்.எஸ்-ஸின் குரல்!

விஜய்ராஜ் எடுத்திருந்த காட்சிகளைப் பார்க்கப் பார்க்க, அவரின் கடுமையான உழைப்பு, தேடல், தான் மேற்கொண்டுள்ள அந்தக் காரியத்தில் அவருக்கு உள்ள ஆத்மார்த்தமான ஈடுபாடு அத்தனையும் துல்லியமாகப் புரிந்தது. பிரமித்துப் போனேன்.

அதன்பின், அந்த சீரியல் தொடர்பாக தனது அடுத்தடுத்த கட்ட முயற்சிகளையும் ஆர்வத்தோடு என்னிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வார் விஜய்ராஜ். பிரபல இந்திப் பாடகி லதா மங்கேஷ்கரின் சந்திப்புக்காக விரைவில் மும்பை செல்லவிருக்கிறார். அந்த பேட்டியும் வெற்றிகரமாக முடிந்தால் (நிச்சயம் முடித்துவிடுவார் விஜய்ராஜ்) கிட்டத்தட்ட இந்த ‘இமயத்துடன்’ டாகுமெண்ட்டரி பூர்த்தியானது மாதிரிதான். விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிடும்.

டி.எம்.எஸ். என்கிற மாபெரும் கலைஞனுக்கு உரிய மதிப்பையும், அவரின் கம்பீரக் குரலுக்கும் கலைத்திறமைக்கும் உரிய மரியாதையையும் கௌரவத்தையும் இங்கே தமிழகத்தில் போதிய அளவுக்கு அளித்திருக்கிறோமா என்றால், இல்லை என்பதே வருத்தமான பதிலாக இருக்கிறது. அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான்கு தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். 90 வயது முதியவரிலிருந்து 9 வயது சிறுவர் வரை அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் தனித்தனியாக, மனதில் ஆதங்கம் சுமந்துகொண்டு இருக்கிறார்கள்.

விஜய்ராஜ் மேற்கொண்டு இருக்கிற இந்தத் தவத்தின் விளைவாக டி.எம்.எஸ். மட்டுமல்ல; அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களும் ஆனந்தத்தில் திளைக்கப் போகிறார்கள். இது மாபெரும் காரியம்; இதைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.

சமீபத்தில் விஜய்ராஜ் என்னை வந்து சந்தித்தபோது, தான் தேடிக் கண்டுபிடித்துச் சேகரித்த டி.எம்.எஸ்ஸின் சில அபூர்வ பாடல்களையும் காட்சிகளையும் டிவிடி-யில் பதிந்துகொண்டு வந்து, நான் கேட்டும் பார்த்தும் மகிழ்வதற்காக எனக்குத் தந்தார். சன் டி.வி-யெல்லாம் வருவதற்கு முன்பு, சென்னைத் தொலைக்காட்சியில் ‘நள தமயந்தி’ என்றொரு சீரியலில் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். தவிர, பழைய தெலுங்கு நடிகர் பத்மனாபாவுக்கு அட்டகாசமான ஒரு தெலுங்குப் பாட்டு பாடியிருக்கிறார். அதே போல், ‘அன்னக்கிளி’ படத்துக்குச் சில வருடங்களுக்கு முன்பாகவே ‘தீபம்’ என்றொரு படத்துக்கு இளையராஜா இசையமைத்து, பின்னர் அந்தப் படம் வெளிவரவே இல்லை. (பாலாஜி தயாரிப்பில் பின்னர் வெளிவந்த சிவாஜி நடித்த ‘தீபம்’ வேறு!) அந்தப் படத்தில் கங்கை அமரன் எழுதிய ‘சித்தங்கள் தெளிவடைய’ என்ற பாடலை உருக்கமாகப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

இப்படி, தான் சேகரித்தவற்றையெல்லாம் எனக்கு அன்போடு கொண்டு வந்து தந்தார் விஜய்ராஜ். அவரின் இந்த முயற்சி, வரலாற்றில் அவரை நிலைநிறுத்தக்கூடிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.

விரைவில் அது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, தமிழ் நெஞ்சங்களை மகிழ்விப்பதோடு, நண்பர் விஜய்ராஜுக்கும் ஓர் உயர்ந்த இடத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என மனதார விரும்புகிறேன்.

வாழ்க விஜய்ராஜ்! வெல்க அவரது தவம்!

*****
அடுத்தடுத்துத் தடைகள் வந்துகொண்டே இருக்கிறதே என்று சோர்ந்து போகாதீர்கள்; நீங்கள் வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்!

கம்ப்யூட்டருக்குப் பன்றிக் காய்ச்சல்!

திருஷ்டி பட்டுவிட்டது போலிருக்கிறது... தொடர்ந்து என் பிளாகுகளில் பதிவிட முடியாமல், என் சிஸ்டத்தில் பன்றிக் காய்ச்சல் பற்றிவிட்டது. வைரஸ் தொற்றிவிட்டது. ஜன்னலைத் திறந்தாலே WARNING என்று அலறுகிறது. எந்த ஆன்ட்டி வைரஸ் மருந்து கொடுத்தாலும் ஜுரம் விடுவதாயில்லை.

லினக்சும் இருக்கிறது. ஆனால், அதில் தமிழ் எழுத்துக்கள், ஆதி கால கல்வெட்டுத் தமிழ் போலப் படிக்கவே முடியாமல் இருக்கிறது.

என் (சிஸ்டத்துக்கான) குடும்ப டாக்டரான என் தம்பி, வரும் ஞாயிறு அன்று வந்து சிஸ்டத்துக்கு சிகிச்சை செய்வதாய்ச் சொல்லியிருக்கிறார்.

அதுவரை பொறுத்தருள்க.

அலுவலக சிஸ்டத்தில் பிளாக் எழுத விரும்பவில்லை. மற்றவர்களைச் செய்யாதே என்று தடுக்கிற நானே அந்தத் தவற்றைச் செய்யலாமா? விளக்கத்துக்காக இந்தப் பதிவை மட்டும் அலுவலகத்தில் வைத்துப் பதிகிறேன்.

என் சிஸ்டத்தின் ஜுரம் தணியப் பிரார்த்தியுங்கள்.

எங்கே என் பழைய நண்பன்?

‘கண்ணனிடமிருந்து ஒரு கடிதம்’ என்று ஒரு பதிவை எனது மற்றொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிக’னில் சமீபத்தில் பதிந்திருந்தேன். அதற்கு முன்னதாக ‘கண்ணன் எத்தனைக் கண்ணனடி’ என்று எழுதிய பதிவைப் படித்துவிட்டு, அதில் இடம்பெற்றிருந்த என் பழைய நண்பர் கண்ணன், சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு என்னை இ-மெயிலில் தொடர்பு கொண்டது பற்றிய பதிவு அது.

நேற்று ஞாயிறு மதியம்போல் இந்த வலைப்பூவில் ‘நண்பர்கள் தினம்’ பற்றி எழுதிக்கொண்டு இருக்கும்போதே, கண்ணன் என்னை ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று போன் செய்துவிட்டு வரும்படி எழுதியது நினைவுக்கு வர, நட்புக்கு நாமும் மரியாதை செய்தால் என்ன என்று திடீரென்று தோன்ற, அவரது செல்லுக்குத் தொடர்பு கொண்டேன். ‘வீட்டில்தான் இருக்கிறேன். அவசியம் வாருங்கள்’ என்றார். உடனே கிளம்பி, பெரம்பூர் போனேன்.

கண்ணன் என்கிற என் சங்கீதமங்கல நண்பர் விஜய்கிருஷ்ணனை நேரில் பார்த்தபோது, நான் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்தில் அவர் இல்லை. யாரோ ஒரு பெரியவரைப் பார்ப்பதுபோல் இருந்தது. தலை முழுக்க வழுக்கையாகி, இருந்த சொற்ப முடிகளும் வெளேரென்று நரைத்து, தொப்பையும் தொந்தியுமாய் சீனியர் ஹிந்தி நடிகர் போல இருந்தவரை ‘டேய்’ என்று ஒருமையில் அழைத்துப் பேசத் தயக்கமாக இருந்தது. அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கால மாற்றம் நண்பர்களின் அன்னியோன்னியத்தைச் சிதைத்திருந்தது.

நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் கண்ணன். அவரின் தந்தையார், கிராமத்தில் சொந்தமாகத் தறி வைத்திருந்தார். சாலை ஓரமாகச் சட்டங்கள் அமைத்து, நெசவு நூல்களை நீள நீளமாக விரித்து வைத்து, அதில் இழைகள் சீராக இருக்கிறதா, முண்டு முடிச்சு இருக்கிறதா என்று பார்த்து, கஞ்சி போடுவார்; காய வைப்பார். பின்பு நெசவு உருளையில் பக்குவமாகச் சுருட்டி எடுத்துப் போய் தறியில் பொருத்தி நெசவு செய்வார். பெரும்பாலும் லுங்கிகள்தான் அடிப்பார். அவர் மறைந்து 12 வருடம் ஆகிறதென்றார் கண்ணன்.

கண்ணனுக்கும் தறி அடிக்கத் தெரியும். ஒரு தடவை அவர் வீட்டுத் தறிக் குழியில் நான் இறங்கி, தறி அடித்துப் பார்த்திருக்கிறேன். நடுவே தொங்கும் குஞ்சலத்தை வாகாக ஒரு இழுப்பு இழுத்தால் இந்தப் பக்கத்திலிருந்து ராக்கெட் போன்ற ஒரு சிறு பொறி நூலை விட்டுக்கொண்டே அந்தப் பக்கத்திற்கு ஓடும். ஆனால், முழு விசை கொடுத்து எனக்கு அடிக்கத் தெரியாததால், ஓடிய உருளை பாதியிலேயே தேங்கி நின்றுவிட்டது. அதே போல், தையல் மெஷின் போல காலை மாற்றி கீழே உள்ள கட்டைகளை பெடலிங் செய்யவேண்டும். அப்போதுதான் நெடுக்கு நூல்கள் மேலும் கீழும் மாறி மாறி ஏறி இறங்க, ஊடாக இந்த உருளை ஓடி ஓடி நெய்யும். எனக்குப் பெடலிங்கும் சரியாக வரவில்லை. என்னவோ சிக்கல் செய்துவிட்டு எழுந்துவிட்டேன்.

இப்படிப் பழைய விஷயங்களை எல்லாம் ஞாபகப்படுத்தி இருவரும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அவர் மனைவி கோகுலவாணி தட்டை, சீடை போன்ற பலகாரங்களைக் கொண்டு வந்து உபசரித்தார். உறவுமுறையிலான திருமணம்தான் கண்ணனுடையது.

சங்கீதமங்கலம் கிராமத்தில், நோட்டக்காரர் என்று சொல்லக்கூடிய நிலச்சுவான்தார் ஒருவரின் விவசாய நிலத்தின் நடுவே பெரிய பாசனக் கிணறு ஒன்று உண்டு. தண்ணீர் ஸ்படிகம் மாதிரி, ஏதோ ஸ்டார் ஹோட்டல் ஸ்விம்மிங் பூல் மாதிரி இருக்கும். நாள் தவறாமல், எங்கள் தெரு நண்பர்களுடன் அங்கு சென்று குதித்துக் கும்மாளம் போடுவது என் வழக்கம். 20 அடி ஆழமாவது தண்ணீர் இருக்கும். கரையில் இருக்கிற பம்ப் செட் மீது ஏணி வழியாக ஏறி, அங்கிருந்து தலைகீழ் அம்பு போல் டைவடித்துக் கிணற்று நீரில் குதிப்பது எனக்குப் பிடித்தமான ஒரு விளையாட்டு. குறிப்பாக, மேலிருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை நீரில் விட்டெறிந்து, அது மெல்ல மெல்ல நீரில் மூழ்குவதைப் பார்த்துவிட்டுப் பின்னர் நீரில் டைவடித்து பாய்ந்து போய் அந்தக் காசைப் பிடித்துக்கொண்டு நீந்திக் கரையேற வேண்டும்.

கண்ணன்தான் எனக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அவர் இதில் கில்லாடி. ஒருமுறை கூடத் தவறாமல் காசைக் கைப்பற்றிவிடுவார்.

பிறகு, தண்ணீருக்குள்ளேயே ஒளிந்து விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவோம். கிணற்றுச் சுவரோரம் பொந்துகளில் தண்ணீர்ப் பாம்புகள் இருக்கும். கண்ணன் சும்மாயிராமல் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு போய் அவற்றைச் சீண்டி வெளியேற்றுவார். அது தண்ணீரிலும் தரைப் பாம்பு போலவே வளைந்து வளைந்துதான் செல்லும். எனக்குக் கை கால் உதறலெடுத்து சட்டென்று நீந்திக் கரையேறிவிடுவேன்.

கண்ணன் வேறு ஒரு தெருவில் இருந்ததால், அபூர்வமாகத்தான் எங்களின் ‘கேணி’ சந்திப்பு நிகழும். ஒரு முறை அவர் பம்பு செட்டிலிருந்து குதிக்கும்போது பேலன்ஸ் தவறிக் குதித்ததால், வயிற்றில் பலமாக அடிபட்டு, துடியாய்த் துடித்தார். சுற்றி இருந்த எங்களுக்கு பயமாய்ப் போய்விட்டது. அவரை அத்தனை பேருமாய்த் தூக்கிக்கொண்டு உள்ளூர் டாக்டரிடம் சென்றோம். அவர் வயிற்று வலிக்கு ஏதோ மருந்து கொடுத்தார். நல்லவேளையாய் எந்தப் பிரச்னையும் இல்லாமல் குணமாகிவிட்டார். கிணற்றில் லாகவம் தெரியாமல் குதித்தால் குடல் கிழியும் அபாயம் உண்டு.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டுக் கிளம்பியபோது மணி 8.

பழைய நண்பருடன் பேசிவிட்டு வந்தது ஓர் இனிய அனுபவம்தான். பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது ஒரு சந்தோஷமான விஷயம்தான். ஆனாலும், பழைய நட்பைப் புதுப்பித்துக்கொண்ட உணர்வு எனக்கு ஏற்படவில்லை. புதிய நட்பை உருவாக்கிக்கொண்ட மகிழ்ச்சி மட்டுமே உள்ளது!

நண்பர்கள் தினம்!

ஹா... ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க!

இன்று நண்பர்கள் தினமாமே? ஆகஸ்ட் 2 நண்பர்கள் தினமா, அல்லது ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமா?

காலையிலிருந்து என் மொபைல் இன்பாக்ஸ் 'HAPPY FRIENDSHIP DAY' வாழ்த்து SMS-களால் நிரம்பி வழிந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மெஸேஜ் வர வர, அவற்றுக்கு உடனுக்குடன் தேங்க்ஸ் ரிப்ளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என் குழந்தைகள்.

தகவல் தொடர்பு மிக மிக எளிமையாகிப் போனதிலிருந்து ஸ்பெஷல் தினங்களுக்கு வாழ்த்து சொல்வதும், அவற்றுக்கு நன்றி தெரிவிப்பதும் உணர்வுபூர்வமாக இல்லாமல், ஒரு சிராத்தம் போல் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது எனக்கு.

எதுவுமே ஓர் அளவோடு இருக்கும்வரைதான் மரியாதை! அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்? தொலைக்காட்சி வந்த புதிதில் ‘ஒளியும் ஒலியும்’ என்று வாரத்துக்கு ஒருமுறை, வெள்ளிக்கிழமை மாலைகளில் மட்டும்தான் சினிமா பாடல்கள் ஒளி-ஒலிபரப்பாகும். அப்போது அலுவலகத்தில் இருக்கவேண்டி வந்தால், ‘ஐயோ! இன்றைக்கு ஒளியும் ஒலியும் போய்விடும் போலிருக்கிறதே!’ என்று மனசு தவியாய்த் தவிக்கும். இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. எந்த சேனலைத் திறந்தாலும், ‘சூப்பர்ர்ரூ... சூப்பர்ரூ...’ என்னமாவது ஒரு டமுக்கு டப்பா பாடல் காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. டி.வி-யை அணைத்துவிட்டு, எந்தச் சந்தடியும் இல்லாமல் அமைதியாக இருந்தால் தேவலாம் போலிருக்கிறது. மொத்தத்தில் ஒளியும் ஒலியும் பார்க்கிற ஆசையே போய்விட்டது. டி.வி-யில் சினிமா பாடல் காட்சி என்றால் வெறுப்பாக இருக்கிறது.

தினங்களும் அப்படித்தான். பொதுவாகவே, தினங்களில் எனக்கு அதிகப் பிடிப்பு இல்லை. முன்னெல்லாம், அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய நான்கு தினங்களில் மட்டும் தெரிந்தவர் அறிந்தவர் அனைவருக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதை நானும் வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது உண்மையிலேயே அதை நான் உணர்வுபூர்வமாகச் செய்தேன்.

காலம் செல்லச் செல்ல, எது எதெற்குத்தான் தினங்கள் கொண்டாடுவது என்று விவஸ்தையில்லாமல் போய், பெற்ற தாய்க்கு ஒரு தினம், தந்தைக்கு ஒரு தினம், பெற்றோர் தினம், பாட்டி தினம், தாத்தா தினம், பேரன் தினம், பேத்தி தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம், மகளிர் தினம், முதியோர் தினம், இளைஞர் தினம், பஸ் தினம், லாரி தினம், ஆட்டோ தினம், ஆசிரியர் தினம், காவலர் தினம், குழந்தைகள் தினம், கிழடுகள் தினம், நாய் தினம், நரி தினம் எனக் கணக்கு வழக்கில்லாமல் தினம் தினம் ஒரு தினமாக அனுஷ்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தால், திகட்டிப் போகிறது. அந்த தினத்தின் மீது உணர்வுபூர்வமான பிடிப்பும் விட்டுப் போகிறது.

ஆனால், நட்பு என்பது உயர்ந்த விஷயம். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், நட்புக்கு மரியாதை செய்வது என்பது SMS அனுப்புவதில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நான் விழுப்புரம், மகாத்மாகாந்தி உயர்நிலைப்பள்ளியில் எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் படித்துக்கொண்டு இருந்தபோது, மாநில அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, தனி நடிப்புப் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் கலந்துகொள்வேன். அப்படி ஒருமுறை கலந்துகொண்டபோது எனக்குக் கிடைத்த தனி நடிப்புக்கான தலைப்பு: ‘முரசு கட்டிலும் மோசுகீரனாரும்’. நட்பின் உறுதியை விளக்கும் சிறு நாடகம் அது.

இலக்கியத்தில், நட்பின் இறுக்கத்தை விளக்க துரியோதனன் - கர்ணன் ‘எடுக்கவோ கோக்கவோ’ சம்பவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் உள்ளன. பாடத்திலும் வந்திருக்கிறது. ஆனால், மோசுகீரனார் என்கிற புலவர் பெயரை முதன்முறையாக நான் அப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

விரிவான கதை மறந்துவிட்டது. மையக் கருத்து மட்டும் நினைவில் உள்ளது.

தகடூர் எறிந்த சேரமான இரும்பொறை என்று ஒரு மன்னன். வாரி வழங்குவதில் கர்ணன். அவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்லலாம் என்கிற எண்ணத்தோடு வெகு தொலைவிலிருந்து வருகிறார் மோசுகீரனார் என்கிற புலவர். முன்கூட்டியே அப்பாயின்ட்மெண்ட் வாங்கவில்லை என்பதால், அவரைக் காத்திருக்கச் சொல்லிவிடுகிறார்கள் அரண்மனைச் சேவகர்கள்.

மோசுகீரனார் ஓய்வு எடுக்கவேண்டி ஓர் அறைக்குள் செல்கிறார். அங்கே ஒரு கட்டில் இருக்கிறது. அதில் படுத்து உறங்கிவிடுகிறார். அது முரசு கட்டில் என்பது பாவம், அவருக்குத் தெரியவில்லை.

முரசு கட்டில் என்பது போர் முரசு வைக்கப்படுகின்ற கட்டில். அரசு இலச்சினையைப் போன்று, மிகப் புனிதமாக மதிக்கப்படவேண்டிய ஒரு வஸ்து. அதில் அமர்வது, அரசை அவமதிப்பதாகும்.

மன்னனுக்கு இந்த விஷயம் தெரிந்தால், புலவருக்கு மரணதண்டனை நிச்சயம் என்று நினைக்கிறார்கள் சேவகர்கள், தளபதிகள், மந்திரிப் பிரதானிகள்.

மன்னன் வருகிறான். கட்டிலில் அமர்ந்திருக்கும் புலவரைப் பார்க்கிறான். உடனே வெண் சாமரம் எடுத்து வரச் சொல்லி, அதை வாங்கி, தானே புலவருக்கு வீசுகிறான். சற்றுப் பொறுத்து விழித்தெழுகிற புலவர், மன்னரே தனக்குச் சாமரம் வீசுவது கண்டு பதறிப் போகிறார். தான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கும்படி வேண்டுகிறார்.

‘மன்னிப்ப்பாவது! தமிழ் அன்னை படுத்துறங்க என் முரசு கட்டில் பாக்கியம் அல்லவோ செய்திருக்கிறது!’ என்கிறான் மன்னன்.

அவனது தமிழ் மீதான பக்தியைக் கண்டு புலவருக்கும், அவரின் தமிழ்ப் புலமையைக் கண்டு மன்னனுக்கும் பரஸ்பரம் நெருங்கிய நட்பு உண்டாகியது என்று அந்த நாடகம் முடியும்.

மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதிவேட்கை உருகெழு முரசம் - (புறநானூறு)

என்று மன்னனைப் போற்றிப் பாடுகிறார் புலவர்.

‘வலிமையும் பெருமையும் உடைய தலைவனே! குற்றமில்லாது பின்னப்பட்ட வாரையுடையதும், கருமரத்தால் அழகுறச் செய்யப்பட்டதும், மயிர்ப்பீலிகளாலும் நவரத்தின மணிமாலைகளாலும் அணி செய்யப்பட்டதுமான இம்முரசு கட்டில் எண்ணெய் நுரைபோன்று மென்மையான உழிஞைப்பூக்களால் இனிது விளங்க, அதன் தன்மை அறியாது ஏறி உறங்கிக் கிடந்த என் தலையைக் கொய்யாது, எனக்குப் பணிவிடை செய்தவனே, நீ வாழ்க!’ என்பது பொருள்.

தினத்துக்கு வருவோம். இங்கே நாம் அன்னையை உதாசீனப்படுத்திவிட்டு, அன்னையர் தினம் கொண்டாடு்கிறோம்; முதியோர் இல்லங்களை உருவாக்கிவிட்டு, முதியோர் தினம் கொண்டாடுகிறோம்; நண்பர்களின் வளர்ச்சியில் பொறாமைப்பட்டுக்கொண்டே நண்பர்கள் தினம் கொண்டாடுகிறோம்.

போலி டாக்டர்கள், போலிச் சாமியார்கள் போல ஒட்டு மொத்த மனிதர்களுமே போலி மனிதர்களாகிக்கொண்டு வருகிறோமோ என்று கவலையாக இருக்கிறது.

***
1. ‘ஏதாவது பிரச்னையா?’ என்று கேட்பான் நண்பன்; ‘என்ன பிரச்னை?’ என்று கேட்பான் உண்மை நண்பன்.

2. நண்பர்கள் உள்ள எவனும் தோற்றுப்போனதாகச் சரித்திரம் இல்லை.