அன்பு ‘வெள்ளம்’!

லைப்பூ பக்கம் வந்து வருடக்கணக்காகிவிட்டது. சமீபத்தில், எனது மற்றொரு (உங்கள் ரசிகன்) வலைப்பூவில் எனது மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய விகடன் குழும சேர்மன் அமரர் எஸ்.பாலசுப்ரமணியம் அவர்களுடனான எனது அனுபவங்களை வாரந்தோறும் எழுதுவதென்று தீர்மானித்து, இரண்டு வாரமாக எழுதி வருகிறேன். கூடவே, எனது இந்த வலைப்பூவிலும் அவ்வப்போது என் அனுபவங்களை எழுதலாமென்று உத்தேசம்!

’உங்கள் ரசிகன்’, ‘என் டயரி’ இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு. அது என் பழைய அனுபவங்களை, கதைகளை நினைவுகூர்ந்து பதிவது. தவிர, ஏதேனும் ஒன்றைப் பற்றி அழுத்தமாகவும் விரிவாகவும் எழுதுவது. இது அப்படியல்ல; ‘என் டயரி’ என்னும் தலைப்புக்கேற்ப அன்றாட நடப்புகளை என் கோணத்தில் அலசுவது.

அந்த வகையில், குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது இங்கே என் எண்ணங்களைப் பகிர்வேன்.
***

அன்பு ‘வெள்ளம்’!


இந்த வருடம் நவம்பர்-10 தீபாவளியின்போது தொடங்கிய மழை, ஒரு மாத காலம் நீடித்து, டிசம்பர்-10-லிருந்துதான் ஓய்ந்திருக்கிறது. சாலைகளில் முழங்கால் உயரத்துக்கு, சில இடங்களில் இடுப்பளவுக்கு வெள்ளம்!

டிசம்பர் 2-ம் தேதி மழையோடுகூட, உடைந்துவிடும் அபாயத்திலிருந்த ஏரிகளை முன்யோசனையோடு படிப்படியாகத் திறக்காமல் திடுமென ஒரேயடியாகத் திறந்துவிட்டபடியால், சாலையில் நின்ற தண்ணீர் மட்டம்  மளமளவென்று உயர்ந்துகொண்டே வந்து, வீட்டினுள்ளும் புகுந்துவிட்டது. வீட்டினுள் தண்ணீர் புகுந்தது பற்றி, தண்ணீரோடு அட்டைப்பூச்சி, செத்த எலி போன்றவை மிதந்து வந்தது பற்றி என் நண்பர்களோடு வாட்ஸ்-அப்பில் செய்தி பரிமாறிக்கொண்டிருந்தபோது ஏர்டெல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காலையிலிருந்தே கரன்ட்டும் இல்லை.

நாங்கள் இருப்பது, எட்டு குடும்பங்கள் கொண்ட ஒரு அப்பார்ட்மென்ட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில்! எதிர் ஃப்ளாட்டில் இருந்த தம்பதியரை அவர்களின் பிள்ளை வந்து தங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

நாங்கள் என்ன செய்வதென்று புரியாமல் விழித்துக்கொண்டு இருந்தபோது, நாலாம் நம்பர் ஃப்ளாட்டுக்காரர் வந்து, “யாரும் கீழே இருக்காதீங்க. ஆபத்து! வீட்டைப் பூட்டிக்கிட்டு மேலே வந்துடுங்க” என்று அழைத்தார்.

இரண்டாவது மாடியில் ஐந்தாம் எண் ஃப்ளாட்டில் 74 வயதான ஒரே ஒரு பாட்டியம்மா மட்டும் தனியாக இருக்கிறார். அவருடைய மகன் மும்பையில் இருக்கிறார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பாட்டி தனியாகக் கிளம்பி, ஃப்ளைட் பிடித்து மும்பை போய்விடுவார். அங்கே இரண்டு மாதம் இருந்துவிட்டுப் பின்பு இங்கே வந்துவிடுவார். இந்த முறை ரயில், ஃப்ளைட் எல்லாம் கேன்சலாகிவிட்டதால், அவர் இங்கேதான் இருந்தார். அவர் வீட்டில் நாங்கள் தங்கிக்கொள்ளலாம் (மற்ற எல்லா ஃப்ளாட்டுகளிலும் தலா ஐந்தாறு குடும்ப உறுப்பினர்கள் இருந்தார்கள்) என நாலாம் நம்பர்காரர்கள் சொன்னார்கள்.

முதல் கட்டமாக என் அம்மா, மனைவி, மகள் மூவரையும் அங்கே போகச் சொல்லிவிட்டோம். நான், என் மகன், எங்களோடு இருக்கும் என் தங்கை மகன் மூவருமாக கீழே இருக்கும் பொருள்களை மேலே ஏற்றினோம். படுக்கைக் கட்டிலின் அடியில் இருக்கும் இழுவை டிராயர்களை வெளியே இழுத்து, பீரோ மேல் வைத்தோம். அதில்தான் என்னுடைய முக்கியமான தஸ்தாவேஜுகள் இருக்கின்றன. ஃப்ரிட்ஜ், சோபா இதையெல்லாம் என்ன செய்வதென்று தெரியவில்லை. பின்னர், கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு மேலே சென்றோம். அதற்குள் வீட்டுக்குள் கணுக்காலுக்கு மேல் தண்ணீர் ஏறியிருந்தது.

பாட்டி வீட்டில் சோபாவில் போய் உட்கார்ந்தோம். ‘பகலில் ஒரு இரவு’ எனப் படத்தலைப்பு மாதிரி, பகலிலேயே இருளாக இருந்தது. மெழுகுவத்தி வெளிச்சம் அந்தப் பொழுதை இரவு என்றே தோன்ற வைத்தது.

அப்போதிலிருந்து, நாலாம் நம்பர் வீட்டிலிருந்து வேளாவேளைக்கு காபி வந்தது; இரவு உப்புமா, தொட்டுக்கொள்ள கொத்சு வந்தது.

2, 3, 4 ஆகிய மூன்று முழு நாட்களும் மின்சாரம் இன்றி, டி.வி., மொபைல் என வெளியுலகத் தொடர்பின்றி, இருளில், ஹவுஸ் அரெஸ்ட் போல் கழிந்தது. கையிருப்பில் இருந்த பால் பாக்கெட்டுகள், மெழுகுவத்தி எல்லாமே கரைந்துவிட, மூன்றாம் நாள் காபி, டீ எதுவும் இல்லை. காலையா, மாலையா... என்ன நேரம் என எதுவும் புரியவில்லை. வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருப்பது போல குழப்பமாக இருந்தது. விமானத்தில் பறந்து வேறு ஒரு நாட்டுக்குப் பயணப்பட்டால், அங்கே இறங்கியதுமே ‘ஜெட்லாக்’ எனப்படும் ஒரு மயக்கம், ஒரு குழப்பம் வருமாமே, அப்படியானதொரு கால மயக்கத்தில் தள்ளப்பட்டிருந்தோம்.

வெள்ளிக்கிழமைதான் மழை சற்று ஓய்ந்தது. வெள்ளமும் வடிந்தது. வீடு எப்படி இருக்கிறதென்று பார்க்க, கீழே இறங்கிப் போனோம்.

வீடு முழுக்க சேறும் சகதியும் பாதம் மூழ்கும் அளவுக்குப் படிந்து கிடந்தது. நாற்றம் தாங்கவில்லை. முழங்காலுக்குச் சற்று உயரமான அளவில் தண்ணீர் நின்றிருந்தது, சுவரில் படிந்திருந்த, சோபாவில் படிந்திருந்த கறைகளின் மூலம் தெரிந்தது.

மகன், மகள், தங்கை மகன் மூவரும்தான் சேறு, சகதிகளை வெளியே தள்ளி, வீட்டைச் சுத்தப்படுத்தினார்கள். முதல் இரண்டு மூன்று சுற்றுக்கள் தூய்மைப்படுத்த, வெளியில் நின்ற மழைத் தண்ணீரையே பயன்படுத்திக் கொள்ளச் சொன்னேன். ஃபைனலாக இரண்டு தடவை வீட்டைக் கழுவ, கிணற்று நீர் பயன்பட்டது. கிணற்றில் மேல் விளிம்பு வரை தண்ணீர் இருந்தது. பக்கெட்டால் மொண்டு மொண்டு கொண்டு வந்து கொட்டி, ஹார்ப்பிக், டெட்டால் எல்லாம் போட்டு, வீடு மொத்தத்தையும் கழுவித் தள்ள மாலை மணி 3 மணி வரை ஆகிவிட்டது. காலையில் 9 மணிக்குத் தொடங்கிய வேலை.

என்னால் முடியவில்லை. எல்லாம் பிள்ளைகள் பார்த்துக்கொண்டார்கள்.

இதனிடையில் என் மனைவிக்கு வீஸிங் ட்ரபிள் அதிகமாகிவிட்டது. மூச்சு விடச் சிரமப்பட்டாள். மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் திறக்கப்படவில்லை. வெளியே இடுப்பு வரை தண்ணீர். போய்ப் பார்க்கவும் வழியில்லை.

கார் கண்ணாடி வரை தண்ணீருக்குள் மூழ்கியிருந்தது. ஸ்கூட்டி மூழ்கியேவிட்டது.

அரை லிட்டர் பால் பாக்கெட் 100 ரூபாய், 150 ரூபாய் என விற்று, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் எனச் செயல்பட்டார்கள் சில உத்தமர்கள். வாட்டர் கேன் 150 ரூபாய்.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரண்டு நாள்களும் நாங்கள் மெழுகுவத்தி வெளிச்சத்தில் சீட்டு விளையாடினோம். என் சின்ன வயது அனுபவங்களை என் வாரிசுகளுக்குச் சொன்னேன். புதிர் விளையாட்டு விளையாடினோம். அதுவும்  ஒரு புதிய அனுபவமாகத்தான் இருந்தது.

சனிக்கிழமை காலையில் எங்கள் ஃப்ளாட்டுக்கு வந்தோம். ஞாயிறு இரவு 7 மணிக்கு கரண்ட் வந்தது. சீரியல், சினிமாப் பாடல் என என் வீடு இயல்பு நிலைக்குத் திரும்ப, அனைவரும் வழக்கம்போல் தனித்தனித் தீவுகளானோம்.

டி.வி-யில் வெள்ளத்தின் உக்கிரத்தைப் பார்க்கையில் பயமாக இருந்தது. மேம்பாலங்கள் எல்லாம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம். அடையாறு சீறிப் பாய்ந்துகொண்டு இருந்தது. சப்வேக்களில் எல்லாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கார்கள் காகிதக் கப்பல்களாக மிதந்து, அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டு இருந்தன. படகுக் கார் ஓடவேண்டிய சாலைகளில் எல்லாம் படகுகளே ஓடிக்கொண்டு இருந்தது விசித்திரமான காட்சிதான்!

ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பேர் உடைமைகளை இழந்து, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களிலும், சர்ச் மற்றும் கோயில் மண்டபங்களிலும் தஞ்சம் புகுந்திருந்தார்கள். அவர்களை நினைக்கையில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்கள் பட்ட துயரங்களுக்கு முன், எங்களுடைய மூன்று நாள் ஹவுஸ் அரெஸ்ட் துயரமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று தோன்றியது.

இந்த வெள்ளத்தில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்த சில விஷயங்களும் உண்டு. அவை...

1) இளைஞர்களின் அற்புதமான சேவை. கல்லூரி மாணவர்களும், ஐ.டி-யில் வேலை செய்யும் இளைஞர்களும் படகுகளில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவினார்கள். பொதுவாக, பொறுப்பில்லாதவர்கள் என்று அவர்களைப் பற்றி மனதில் பதிந்திருக்கும் பிம்பம் உடைந்து, சுக்குநூறாகியது. நமது இளைஞர்களைப்  பற்றிய பெருமித எண்ணமும் நம்பிக்கையும் உண்டாகியது.

2) சாதி, மத பேதமின்றி தமிழக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டார்கள்.

3) பல லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும், அப்படியே செலவழித்தாலும் முழுமையாகச் சுத்தம் செய்ய முடியுமா என அறுதியிட்டுக் கூற இயலாதிருந்த நிலையில், சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்த கூவத்தை இந்த வெள்ளம் சுத்தப்படுத்திவிட்டது. இனியும் இதை இப்படியே பராமரிக்க வேண்டியது தமிழக அரசாங்கத்தின், சென்னை மக்களின் கடமை!

4) குடும்பத்தில் அவரவரும் வேலைக்குப் போய்விட்டு, மாலையில் வீடு திரும்பி, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்டர்நெட் என மூழ்கிவிட, வீட்டில் உள்ள அம்மா, மனைவி ஆகியோரும் நாள் முழுக்க சீரியலில் உட்கார்ந்துவிட, குடும்பத்து நபர்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொள்ளக்கூட இயலாதிருந்த நிலையில், இந்தப் பெருமழையும் வெள்ளமும் வந்து, குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்த்தது; மனம் விட்டுப் பேசிக்கொள்ளச் செய்தது; தங்கள் எண்ணங்களை, அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளச் செய்தது.

5) எங்கள் அப்பார்ட்மென்ட்டில் ஒரு தளத்துக்கு இரண்டு குடும்பங்கள் வீதம் மொத்தம் எட்டு குடும்பங்கள்! நாங்கள் இங்கே குடியேறி ஒன்றரை வருடமாகிறது. இதுவரை யார் எந்த ஃப்ளாட்டில் குடியிருக்கிறார், அவர் எங்கே வேலை செய்கிறார் என்று எதுவும் தெரியாது. ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொண்டதுகூடக் கிடையாது. இந்த மழை வந்ததில், அனைவரும் ஒரு குடும்பமானோம். கடுகடு நபர் என நான் நினைத்திருந்த ஒரு ஃப்ளாட்வாசி, அத்தனை ஜாலியான மனிதராய் இருக்கிறார். திமிரான பெண் என நான் நினைத்திருந்த, ஒரு ஃப்ளாட்டில் வசிக்கும் பெண், அங்கிள், அங்கிள் என அன்பு மழை பொழிந்தாள். ஆக, மொத்தத்தில் அனைவரும் ஒரு குடும்பமாகிவிட்டோம்!

எங்களுடையது ஒரு சோற்றுப் பதமாக இருக்கும். சென்னை முழுக்க இதே மாதிரியான அனுபவங்கள்தான் பரவியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால், இந்தப் பலாபலன்களை அடைய நாம் கொடுத்த விலை அதிகம்!

இந்த மழையில் என் கார் பழுதாகி, ரூபாய் 12,000 வரை செலவு வைத்தது. ஸ்கூட்டி 1,200 ரூபாய் செலவு வைத்தது. இதெல்லாவற்றையும்விட, இந்த மழை, வெள்ளம் எனக்கு ஏற்படுத்திய இழப்புகளில் எல்லாம் பெரிய இழப்பாக நான் கருதுவது ஒன்றைத்தான். அது...

என் அப்பாவுக்குப் படம் வரைவதில் மிகுந்த ஆர்வம். அவர் என்னை, என் மனைவியை, மகளை, மகனை வாட்டர்கலர் படமாக வரைந்து, தமது ஆசியுரை போன்று அவற்றின் அடியில் ஒவ்வொருவரைப் பற்றியும் பாராட்டி, வாழ்த்தி சில வரிகள் எழுதித் தந்திருந்தார். அப்பா அமரராகி ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. அப்பாவின் அந்தப் படங்களை ஸ்கேன் செய்து வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். சமீபத்திய வெள்ளம் அப்பாவின் அத்தனை படங்களையும் நனைத்து, கரைத்து, உருத்தெரியாமல் ஆக்கிவிட்டது. அவற்றை அள்ளியெடுத்துக்கொண்டு போய் குப்பைத் தொட்டியில் எறிந்தபோது, மனம் பாறையாய்க் கனத்தது!