பாறைத் தோட்டப் பூங்கா!

ண்டிகர் ஒரு ஸ்பெஷல் நகரம். இரண்டு மாநிலங்களுக்குத் தலைநகரம். பார்த்துப் பார்த்துச் செதுக்கிய நகரம். அகலமான சாலைகள் கொண்ட அழகு நகரம்.

ங்கே வசித்த நேக் சந்த் என்பவர் போன வருடம்தான், அதாவது 2015-ல், தனது 90-வது வயதில் இறந்தார். அன்றைய தினம் சண்டிகரின் அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

யார் இவர்? சுதந்திரப் போராட்ட வீரரா? தொழில் அதிபரா? இலக்கியவாதியா? திரைத்துறைப் பிரபலமா?

இல்லை. ஆனால், காலத்தால் அழியாத ஓர் அற்புதமான பூங்காவை சண்டிகரில் உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார் இவர்.

சிறந்த பூங்கா என்றால், அங்கு பசுமை கொழிக்கும்; குப்பைகளும் வேண்டாத பொருள்களும் அவ்வப்போது நீக்கப்பட்டுவிடும் அல்லவா! ஆனால், இந்தப் பூங்காவில் அவற்றுக்குத்தான் முன்னுரிமை.

ஓட்டை உடைசல்கள், பயனற்ற சிதைந்த உலோகங்கள், குப்பைகள் இவற்றைக் கொண்டுதான் 'ராக் கார்டன்' எனப்படும் இந்தப் பூங்காவை வடிவமைத்திருக்கிறார் நேக் சந்த். பயனில்லாத கண்ணாடிகள், ​சைக்கிளின் ஹேண்டில்பார்கள், துருப்பிடித்த எண்ணெய் டிரம்கள், பாட்டில் மூடிகள், உடைந்த ஓடுகள், ஒழுங்கமைப்பு இல்லாத பாறைகள் போன்றவற்றைக் கொண்டுதான் இந்தப் பூங்கா உருவாகியிருக்கிறது. சராசரியாக தினமும் 5,000 பேர் சுற்றுலாப் பயணிகளாக இங்கே வந்து பார்வையிட்டுவிட்டுப் போகிறார்கள். இந்தப் பூங்காவைப் பார்க்காமல் போனால், அவர்களின் பயணம் முழுமை அடைவதில்லை. சண்டிகரின் மையப் பகுதியில் இருக்கிறது ந்தப் பூங்கா. கொஞ்ச நஞ்சமல்ல, 12 ஏக்கர் பரப்பு கொண்டது.

நுழைவுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு ஒரு குகைக்குள் நுழைந்தோம். இரண்டு புறமும் கல் சுவர்கள். நடுவே சிறிய பாதைகள் வழியாகச் சென்றால், வெவ்வேறு சிறு சிறு அறைகளுக்குள் (மேலே கூரை இல்லை) செல்லலாம். கிட்டத்தட்ட குகையில் நுழைந்து செல்வது போலத்தான் உள்ளது. ஒரு ‘மேஸ்’ வடிவத்துக்குள் செல்வது போல் உள்ளது. வளைந்து வளைந்து சென்று, ஒரு கட்டத்தில் வெளியே வரத் தெரியாமல் சிக்கிக் கொள்வோமா என்றும் கொஞ்சம் திகிலாக இருந்தது உண்மை.

பீங்கான் வடிவங்கள், மனித, மிருக உருவங்கள், பாறையில் உருவான செயற்கை மரங்கள்,  ஆங்காங்கே செயற்கை அருவிகள்.  செயற்கைக் குன்றுகள், அலங்கார அணிவகுப்பைப் போல அடுக்கப்பட்டிருக்கும் மண்பானைகள், வெண்கற்கள், கண்ணாடிகள், கிளிஞ்சல்கள் ஆகியவை பதிக்கப்பட்ட படிகள்.

நேக் சந்த், ஷகர்கர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. பிரிவினையின்போது இந்தியாவில் தங்க முடிவெடுத்து, பஞ்சாபுக்கு வந்து சேர்ந்தார். சண்டிகர் பகுதியிலுள்ள தனது சொந்த நிலத்தில்தான் ராக் கார்டனை உருவாக்கினார். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் இதை அவரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான சில தொழிலாளிகளும் உருவாக்கியிருக்கிறார்கள். 1975-ல் இந்த ரகசியம் வெளியானபோது, அனுமதி இல்லாமல் இதையெல்லாம் செய்ததற்காக ராக் கார்டனை இடித்துவிடப் போவதாக அரசு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அணி திரண்டு சென்று அதை எதிர்த்தார்கள். பிறகு அரசும், சண்டிகருக்கு ராக் கார்டன் பெருமையைச் சேர்க்கும் என்பதை உணர்ந்துகொண்டதால், 50 தொழிலாளிகளை அரசு செலவில் நேக் சந்துக்கு உதவியாக அனுப்பியது.

இதை உருவாக்கிய நேக் சந்துக்கு, அவர் வாழும் காலத்திலேயே நமது அரசு பத்மஸ்ரீ விருது அளித்து  கெளரவித்திருப்பது நல்ல விஷயம்!

1957-ல் இந்த ராக் கார்டனை உருவாக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்திக்கொண்டு வந்திருக்கிறார் நேக் சந்த். நாங்கள் போயிருந்தபோதுகூட இந்த விரிவாக்க வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன.ந்தக் கட்டடத் தொழிலாளிகள் தமிழ் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அவர்களுடன் பேசியதில், அங்கு வேலை செய்யும் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. தமிழ்நாட்டிலிருந்து சென்று அந்தத் தொழிலாளிகளிடம் நாங்கள் தமிழில் பேசியதில் அவர்களுக்கு மிகவும் சந்தோஷம்.

சண்டிகரில் நாங்கள் பார்த்த இடங்களில் ‘வேஸ்ட்’ என்று சொல்ல முடியாத ஒரு நல்ல இடம், வேஸ்ட் பொருள்களால் ஆன இந்த ‘ராக் கார்டன்’.

இன்றைய நாள் இனிய நாள்!

முப்பெரும் தேவியரில் முதலாமவர்!

ன் மரியாதைக்குரிய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர், எழுத்தாளர் திருமதி சிவசங்கரி. ஆனந்த விகடனில் வெளியான அவரின் தொடர்கதை ’பாலங்கள்’ மூன்று தலைமுறைப் பெண்களின் கதைகளைச் சொல்லியது. வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கதை அது. அவரின் ’ஒரு மனிதனின் கதை’ குடிப்பழக்கத்தின் தீமையை பொட்டில் அறைந்தாற்போல் விவரித்தது. அப்போது அந்தத் தொடர்கதையைப் படித்துவிட்டு, அந்த பாதிப்பால் குடிப்பழக்கத்தைப் பலர் கைவிட்டது எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு வலுவான எழுத்து சிவசங்கரியுடையது. அந்தத் தொடர்கதை ஆரம்பிக்கும்போது சென்னையில் ஹோர்டிங் வைத்து விளம்பரப்படுத்தியது விகடன் என நினைக்கிறேன். ஒரு பத்திரிகைத் தொடர்கதை விளம்பரத்துக்காக அதற்கு முன்போ பின்போ இப்படி ஹோர்டிங் வைக்கப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் சாவியில் பணியாற்றிய காலத்தில், சிவசங்கரியிடம் தொடர்கட்டுரை கேட்டு வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன். ‘மண் வளம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ நடத்தி, அதன் நடுவர் குழுக் கூட்டத்தின்போது அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். மற்றபடி அவருடன் அதிகப் பழக்கமில்லை.
நான் விழுப்புரத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சிவசங்கரி வழுதரெட்டியில் வசித்தார். அவரின் சிறுகதைகளை நான் அப்போதே படித்ததுண்டு. ஒருமுறை, திரு.வி.க ரோட்டில் உள்ள ஒரு கடையில் நான் பாடப் புத்தகம் வாங்கிக்கொண்டு இருந்தபோது, அருகில் இருந்த மற்றொரு கடை வாசலில் ஒரு கார் வந்து நின்றது. யாரென்று பார்த்தால், இறங்கியவர் எழுத்தாளர் சிவசங்கரி. கூடவே உதவியாளர் போன்று வேறு ஒரு பெண்மணியும் இறங்கினார். இருவரும் அந்தக் கடைக்குள் சென்று ஏதோ வாங்கினார்கள். நான் சென்று, என்னை சிவசங்கரியிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளலாமா என்று பார்த்தேன். ஆனால் அத்தனை பெரிய எழுத்தாளியிடம் பள்ளிச் சிறுவனான நான் போய் அறிமுகப்படுத்திக் கொண்டால் மதிப்பாரா என்று புரியாமல், தயக்கத்துடன் அவர் மீண்டும் காரில் ஏறிச் செல்கிற வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
பின்னர், விழுப்புரத்தில் எனது கல்லூரிப் படிப்பு துண்டாகி, மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த நேரத்தில், வழுதரெட்டியில் இருந்த சிவசங்கரியின் உதவியாளராக என்னைச் சேர்ப்பதற்கு மாமா முயன்றார். ஆனால், வேறு பல காரணங்களால் அந்த முயற்சி தள்ளிப் போய், நானும் அப்போது சில காலம் சென்னை வந்து ஒரு சின்ன வேலை தேடிக்கொண்டு செட்டிலானேன்.
இவ்வளவுதான் எழுத்தாளர் சிவசங்கரியுடனான எனது பழக்கம்.
சில மணி நேரத்துக்கு முன்பு எனக்கு ஒரு போன்கால் வந்தது. எடுத்தால், எதிர் முனையில் சிவசங்கரி. “சொல்லுங்கம்மா” என்றேன். ரொம்ப நாள் பழகியவர்போன்று, நெருங்கிய அன்பான உறவினர் பேசுவது போன்று வாஞ்சையான குரலில், “ரவி, எதுக்கு இப்போ உங்களுக்குப் போன் பண்ணேன் தெரியுமா? இப்பத்தான் மூணு மணி நேரமா உங்க பிளாக் பதிவுகளையெல்லாம் ஒண்ணுவிடாம மொத்தமா படிச்சு முடிச்சேன். அப்பப்பா... நகாசு பூசாத என்னவொரு எளிமையான எழுத்து! அரவிந்த அன்னையைப் பத்தி நீங்க எழுதியிருந்தது, உங்களுக்கு வந்த சோதனையிலிருந்து அன்னை உங்களைக் காப்பாத்திக் கரை சேர்த்தது, ஆசிரியர் சாவி பத்தி, சுஜாதா பத்தி, ஆசிரியர் பாலு பத்தியெல்லாம் நீங்க எழுதினது அத்தனையும் படிச்சேன். சூப்பர்ப் ரவி! ஆடம்பரமில்லாத, நம்மோடு நேர்ல பேசற மாதிரியான நடையில நீங்க எழுதினதைப் படிக்கிறப்போ, நீங்க சந்தோஷப்படற இடங்கள்ல அந்த சந்தோஷம் என்னையும் தொத்திக்கிச்சு; கண் கலங்குற இடத்துல என் கண்களும் கலங்கிச்சுங்கிறது நிஜம். இதையெல்லாம் நீங்க புஸ்தகமா கொண்டு வரணுமே?” என்றார்கள்.
சிவசங்கரி, இந்துமதி, அனுராதாரமணன் இவர்களையெல்லாம் எழுத்துலகின் முப்பெரும் தேவியர்களாகக் கருதுகிறவன் நான். அப்படியிருக்க, என் வலைப் பதிவுகளைப் பாராட்டுவதற்காகவே மிகச் சிறந்த எழுத்தாளரும் கட்டுரையாளருமான சிவசங்கரி வேலை மெனக்கிட்டு எனக்குப் போன் செய்திருக்கிறார் என்றால், நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் அல்லாமல் வேறென்ன?
“வாங்களேன் ஒரு நாள் வீட்டுக்கு! சாவி சாரைப் பத்தியும், பாலு சாரைப் பத்தியும் உங்க கிட்டே நிறைய அரட்டையடிக்கணும்போல இருக்கு!” என்று பிரியத்துடன் அழைத்தார்.
விரைவில் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்குமென்று நினைக்கிறேன்.

நகைச்சுவை மன்னர்கள் முல்லை-கோதண்டம்

ருத்தங்களில் தோய்ந்து, விரக்தியில் ஒடிந்து, வெறுப்பில் அமிழ்ந்து பாறை போல் இறுகியிருக்கும் மனதை ஆற்றுப்படுத்தி லேசாக்குவதில் இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதிலும், நகைச்சுவையின் பங்கு மிகப் பெரிது!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து தமிழ் சினிமாவின் நகைச்சுவைகளை அவதானித்து வருகிறேன். அவரின் நகைச்சுவை, வெறுமே போகிற போக்கில் சிரித்துவிட்டு அத்தோடு மறந்துவிடுகிற மாதிரி இல்லாமல், சிந்தனைக்குரியதாகவும் இருக்கும். கசப்பு மருந்தான புத்திமதிகளை நகைச்சுவைத் தேனில் குழைத்துத் தந்த கெட்டிக்காரர் கலைவாணர். அந்த வகையில், அவருக்கு ஈடாக வேறு எவரையும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு.

நடிகவேள் எம்.ஆர்.ராதா, வில்லத்தனத்தினூடே நகைச்சுவையைக் கலந்து இஞ்சி முரப்பா போல் விறுவிறுப்பாகத் தந்த மேதை. குரலை ஏற்றியும் இறக்கியும், உயர்த்தியும் தாழ்த்தியும், ஓர் அபார சர்க்கஸ் சாகசம் போன்று பார்ப்போரை, கேட்போரை வசீகரிக்கச் செய்தவர். ‘ரத்தக்கண்ணீர்’ படம் அவரின் மாஸ்டர்பீஸ்! அதில் அவர் பேசி நடித்த வசனங்களை சிவாஜி கணேசனே பேசியிருந்தாலும், ராதா அளவுக்கு எடுபட்டிருக்காது என்பது சிவாஜி கணேசனின் தீவிர ரசிகனான என் அழுத்தமான அபிப்ராயம். ரத்தக்கண்ணீர் படத்தை 35 முறைகளுக்கு மேல் பெரிய திரையிலும், பலப்பல முறை சின்ன திரையிலும் (என்னிடம் டிவிடி இருக்கிறது) பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதே பிரமிப்பு... ‘பாவி மனுஷன், என்னமா கலக்குறான்யா!’

டணால் தங்கவேலு, ஜே.பி.சந்திரபாபு, வி.கே.ராமசாமி, நாகேஷ், கவுண்டமணி- செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என தமிழ்த் திரை தந்த நகைச்சுவை நட்சத்திரப் பட்டாளம் பெரிது. போதாக்குறைக்கு உதிரியாக ஏ.கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், ஒய்.ஜி.மகேந்திரன், பக்கோடா காதர், குண்டு கல்யாணம், உசிலைமணி, ஓமகுச்சி நரசிம்மன், தயிர்வடை தேசிகன், வையாபுரி, பாப் கருணாஸ், சிங்கமுத்து, போண்டா மணி, அல்வா வாசு, பரோட்டா சூரி, ரோபோ சங்கர் என அந்தப் பட்டியல் மிக நீளமானது.

சின்னத் திரைகளிலும் மிமிக்ரி, ஸ்டேண்ட் அப் காமெடி என விதம்விதமாகப் பலர் நகைச்சுவை மழை பெய்து வருகிறார்கள். அச்சு அசலாக பிரபலங்களின் குரலில், அதே பாணியில் பேசுகிறவர்களைக் கண்டால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ரஜினிகாந்த் பாணியில் பலர் தத்ரூபமாகப் பேசுகிறார்கள். சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் போலப் பேசுவதைக் கண்களை மூடிக்கொண்டு கேட்டால், எதிரே ரஜினிகாந்தே நின்று பேசுவது போல் இருக்கும். இன்னும்... கமல்ஹாசன் குரலில், வி.எஸ்.ராகவன் குரலில், கவுண்டமணி குரலில் எனப் பல குரல்களிலும் பேசி அசத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் விஜய் டி.வி-யில் ஒரு காமெடி நிகழ்ச்சியில், நவீன் என்று ஒருவர் அச்சு அசல் கமல்ஹாசன் போலவே பேசினார். எந்திரனில் ரஜினிக்குப் பதிலாக கமல் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது அந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.

மிமிக்ரி கலைஞர்கள் என்னதான் தங்கள் தனித் திறமையால் அசத்தினாலும், நகைச்சுவை என்று வரும்போது ஒரு புன்னகையை மட்டுமே அவர்களால் என்னிடத்தில் தோற்றுவிக்க முடிந்திருக்கிறது. ஸ்டேண்ட் அப் காமெடி செய்பவர்கள் பல நேரம் எத்தனையோ ஆயிரம் முறை சொல்லிச் சொல்லி அலுத்துப்போன நகைச்சுவை வெடிகளைக் கொளுத்திப் போட, அவை புஸ்ஸென்று போய்விடுகின்றன.

வடிவேலுவின் நகைச்சுவைக்குப் பின்பு நான் மனம்விட்டு ரசித்துச் சிரித்தது உண்டா என்று யோசித்தால், யோசித்துக்கொண்டே இருக்கவேண்டியதாக இருக்கிறது. அதற்காக மற்றதெல்லாம் மோசம் என்று சொல்ல வரவில்லை. ஓகே ரகம்தான்! ஆனால், வாய் விட்டு, மனம் விட்டு, அடக்கமாட்டாமல் வயிறு வலிக்கச் சிரித்தது அபூர்வம்தான்!

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து அப்படி வயிறு வெடிக்கும்படியாகச் சிரித்தேன். விஜய் டி.வி-யின் ‘கலக்கப் போவது யாரு?’ வீடியோ பதிவுகளை ஹாட்ஸ்டார் டாட்காமில் பகிர்ந்து வருகிறார்கள்.  அதில் கோதண்டம், முல்லை என்னும் இருவர் நடத்திய ஒரு நிகழ்ச்சியே அது!

ஓர் எழுத்தாளருக்குப் பொறுமையின் சிகரம் என்று விருது கொடுக்கிறார்கள். அவரை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி காண்கிறார்கள். பேட்டி காண்பவர் வந்த விருந்தினரைப் பாடாய்ப் படுத்தி, குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்டு அவரின் பொறுமையைச் சோதித்து, ‘விருதும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்’ என்று வெறுப்பின் உச்சத்தில் கத்துகிற அளவுக்குக் கொண்டுபோய் விடுகிறார்.

விருது பெற்ற எழுத்தாளராக கோதண்டத்தின் பர்ஃபாமென்ஸ் அசத்தல் ரகம்! அற்புதமான முகபாவனைகள், பாடி லாங்வேஜ், குரல் மாடுலேஷன் அத்தனையும் கலந்துகட்டி, பின்னியெடுக்கிறார். பேட்டி காண்பவர் முல்லை. சற்றும் சலனமே படாமல், நிறுத்தி நிதானமாக, வந்த விருந்தினரை வெறுப்பேற்றுகிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நிஜமாகவே வயிறு வலிக்க, கண்களின் கண்ணீர் தெறிக்கச் சிரித்தேன். இதோ, அந்த நிகழ்ச்சிக்கான யூ.ஆர்.எல். லின்க்.

http://www.hotstar.com/tv/kalakka-povadhu-yaaru/4883/who-is-the-funniest/1000065547

இதைப் பார்த்தபோது, ரொம்ப காலத்துக்கு முன்னால், ‘கல்யாணப் பரிசு’ படத்தில் தங்கவேலு, சரோஜா ஜோடியின் காமெடி நினைவுக்கு வந்தது. அற்புதமான நகைச்சுவை விருந்து அது. கொஞ்சம்கூட ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல், எடுத்துக்கொண்ட கான்செப்டும் தெளிவாக, பார்த்து ரசிக்கும் விதத்தில் அமைந்த காமெடி அது. எனக்குத் தெரிந்து அதற்குப் பின்பு, அதே உயர்ந்த தரத்தில், மனம் விட்டுச் சிரித்த நிகழ்ச்சி முல்லை-கோதண்டத்தின் இந்த நிகழ்ச்சிதான்!

அதன்பின், அவர்கள் பங்கேற்ற அத்தனை நிகழ்ச்சிகளையும் ஹாட்ஸ்டார் டாட்காமில் தேடித் தேடிப் பார்த்து ரசித்தேன். இன்னொரு வெடிச்சிரிப்பு நிகழ்ச்சி...

தென்கச்சி கோ.சுவாமிநாதன் பாணியில், ராஜராஜசோழன் வேட்டைக்குப் போன நிகழ்ச்சியை (டி.வி-யில்) சொல்லத் தொடங்குகிறார் முல்லை. லாஜிக் மீறல்களுடன் அவர் சொல்லும் கதையைக் கேட்டுத் தலையைப் பிய்த்துக் கொள்ளும் ரசிகனாக கோதண்டம். ராஜராஜசோழன் முதலில் முனிவரைச் சந்திக்கிறார். அவரிடம், ‘நான்தான் ராஜராஜசோழன். என்னோட 200 சிசி பைக்கை எடுத்துக்கிட்டுக் காட்டுல வேட்டையாட வந்தேன்...’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சொல்லத் தொடங்குவதில் ஆரம்பிக்கிறது முல்லையின் அட்ராசிட்டி. ஒவ்வொரு முறை ராஜராஜசோழன் ஒரு புதியவரைச் சந்திக்கும்போதும், மீண்டும் முதலில் இருந்து ‘நான்தான் ராஜராஜசோழன்...’ என்று தொடங்கி, வரிசையாக நூல் பிடித்தாற்போன்று அதுவரை நடந்தவற்றை முல்லை விவரிக்கும் அழகே அழகு! கொஞ்சம்கூடப் பிசிறாமல், எதிரே கோதண்டம் பண்ணுகிற அலம்பலைக் கண்டுகொள்ளாமல், தன்போக்கில் கதை சொல்லிக்கொண்டு போவதற்கு மகா ஞாபகசக்தியும், திட சிந்தனையும் வேண்டும். அசத்திவிட்டார் முல்லை!

இறுதியில், அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகனான கோதண்டம், ‘நான்தான் ராஜராஜசோழன்... நான்தான் ராஜராஜசோழன்...’ என்று பைத்தியம் தலைக்கேறிக் கதறுவது, வயிற்றைப் புண்ணாக்கும் நகைச்சுவையின் உச்சம்! யப்பா..! அதன் லின்க் கீழே.

http://www.hotstar.com/tv/kalakka-povadhu-yaaru/4883/pazhani-nisha-rock/1000080957

இவர்களின் நிகழ்ச்சிகளை இந்த 11-ம் தேதிதான் முதன்முதலாகப் பார்த்தேன். இப்படி ஒரு இரட்டையர், நகைச்சுவையில் பின்னிப் பெடலெடுக்கிறார்கள் என்று என் மகன் அறிமுகப்படுத்திப் போட்டுக் காண்பித்த பிறகுதான் எனக்குத் தெரியும்.

மறுநாள், முல்லை-கோதண்டம் நடத்திய அத்தனை நிகழ்ச்சிகளையும் வரிசையாகத் தேடித் தேடிப் பார்த்துவிட்டேன். இத்தனை பெரிய திறமைசாலிகளை, நகைச்சுவைத் திலகங்களை உடனடியாகச் சந்தித்துப் பேச வேண்டும் எனத் துடித்தேன்.

அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் அருள்வளன் அரசு, சேனல்களோடு தொடர்புடையவர் ஆதலால், அவர் மூலமாக முல்லை-கோதண்டம் இருவரையும் சந்திக்க முயன்றேன். அவர்கள் இருவரும் வடபழனியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில், தற்போது டப்பிங் நிகழ்ச்சியில் இருப்பதாகவும், மாலை 6 மணிக்கு வந்தால் சந்திக்கலாம் என்று முல்லை சொன்னதாகவும் அருள்வளன் அரசு தெரிவித்தார்.

‘இல்லை. அவர்களின் பணியிடத்தில் சென்று சந்திப்பதை அவர்களுக்குத் தரும் இடையூறாக நினைக்கிறேன். அவர்களை ஒரு ரசிகனாக சந்தித்து அளவளாவ ஆசை. எனவே, அவர்களுக்கு சௌகரியப்பட்ட ஒரு நேரத்தில், அவர்களின் இல்லத்துக்கு நானே நேரில் சென்று சந்திக்க விரும்புகிறேன்’ என்று அருள் மூலமே தெரிவித்தேன். அப்படியானால், என்னைச் சந்திக்க அவர்கள் இருவரும் என் அலுவலகத்துக்கே வருவதாகச் சொன்னார்களாம்.

‘இல்லை. நான் அவர்களின் ரசிகனாக மட்டுமே சந்திக்க விரும்புகிறேன். இங்கே அவர்கள் வருவதற்குத் தடையில்லை. ஆனால், ஏதோ அலுவலக நிமித்தம் சந்தித்த மாதிரி இருக்கும். ஒரு ரசிகனுக்கு ஏற்படும் அந்த உண்மையான சந்தோஷம் எனக்குக் கிடைக்காமல் போய்விடும்’ என்று மறுத்துவிட்டேன்.

எனில், என்னுடைய வீட்டுக்கே அவர்கள் இருவரும் இரவு 8 மணியளவில் வருவதாகச் சொன்னார்களாம். அதைக் கேட்டதும் பதறிவிட்டேன். ரசிகன் என்கிற முறையில் அவர்களை நான் சென்று பார்ப்பதே சரி; அதுதான் முறை! அதைவிட்டுவிட்டு அந்த அற்புதமான கலைஞர்களை என் இடத்துக்கு வரவழைப்பதாவது! எனவே, வெள்ளி, சனி, ஞாயிறு என பொங்கல் லீவில் ஒருநாள் நிதானமாகச் சந்திக்கலாமே என்று என் கருத்தை அருள் மூலம் தெரிவித்தேன்.

ஆனால்,  அவர்கள் இருவரும் கலைநிகழ்ச்சிக்காக அந்த நாட்களில் வெளியூர் பயணப்படுகிறார்களாம். பொங்கல் முடிந்து வரும் புதன், வியாழனில் சந்திக்கலாமா என்று கேட்டார்கள். எனக்கு அதுவும் ஏமாற்றமாக இருந்தது. சந்திப்பைத் தள்ளிப்போட நான் விரும்பவில்லை.

கடைசியாக, “சரி, அப்படியானால் ஒன்று செய்யலாம். என் காரை அனுப்பி  அவர்களை ஸ்டுடியோவிலிருந்து பிக்கப் பண்ணிக் கொள்கிறேன். என் வீட்டில் அவர்களோடு பேசி முடித்ததும், திரும்ப அவர்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கேயே அவர்களை டிராப் பண்ணச் சொல்கிறேன்” என்றேன்.

‘சாருக்கு எதற்கு சிரமம்? எங்கள் பைக்கில் நாங்களே வந்துவிடுகிறோம். அவர் அட்ரஸை மட்டும் சொல்லுங்கள்’ என்றார்களாம் இருவரும்.

‘முடியவே முடியாது! என்னுடைய சுயநலத்துக்காக அந்த மகா கலைஞர்களை அலைய வைக்க முடியாது. அவர்களுக்குச் சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன். அதன்பின், ஒருவழியாய்ச் சம்மதித்தார்கள்.

என் மகனை அனுப்பி, அவர்களை அழைத்து வரச் சொன்னேன். இரவு 8:30 மணிக்கு வந்தார்கள். அவர்களை நேரில் சந்தித்ததும் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. ஒரு முக்கால் மணி நேரம் அவர்களோடு உரையாடினேன். என்னுடைய உளமார்ந்த பாராட்டுதல்களையும் தெரிவித்தேன்.

மிக மிக அன்பாகவும், இனிமையாகவும் பேசிப் பழகி, தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள் அந்த அற்புதக் கலைஞர்கள் இருவரும். இந்த நாள் (13.1.16) மிக மிக இனிய நாளாக அமைந்தது எனக்கு.

இரவு 9:30 மணிக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பினேன் இருவருக்கும்.

முல்லை- கோதண்டம் இருவரும் சினிமாவில் மிகப் பெரிய இடத்தை அடைய வேண்டும், புகழின் உச்சத்தைத் தொட வேண்டும் என்று ஒரு ஆத்மார்த்த ரசிகனாக விரும்புகிறேன்.

அடைவார்கள்; அதற்கான முழுத் தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது!