பல நேரங்களில் பல மனிதர்கள்!

லகம் ரொம்பப் பெரியது என்று முன்பெல்லாம் நினைத்துக்கொண்டு இருந்தேன். வாகன வசதிகள் வளர வளர, உலகம் சுருங்கிக்கொண்டே வந்தது. தகவல் தொழில்நுட்பம் வளர வளர, அது எலுமிச்சம்பழம் அளவு சுருங்கிவிட்டதாகத் தோன்றுகிறது.

என்றைக்கோ பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் பல வருடங்களுக்குப் பின்பு வேறு எவர் மூலமாகவோ ஒரு தொடர்பில் வருவது எனக்கு அடிக்கடி நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. எப்போதோ நான் பார்த்த ஒரு டீன் ஏஜ் பெண்ணைப் பல வருடங்களுக்குப் பின்னர் ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியராகச் சந்திப்பேன் என்று நினைத்திருப்பேனா, அது போல்தான்!

சமீபத்தில் இன்னும் இரண்டு உதாரணங்கள்.

நண்பர் மார்க்கபந்துவின் வீட்டு விசேஷம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றார்கள் அல்லவா, என் பெற்றோர்! அங்கே சமையல் செய்தவர் எழுபது வயதைக் கடந்த ஒரு மாது! சமீபத்தில்தான் அவர்களிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்ந்திருந்தார் அவர்.

விசேஷத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் மார்க்கபந்து குடும்பத்துப் பெண்டிரும் அந்த மாதுவும் சாப்பாடு பரிமாறினார்கள். அப்பாவும் மார்க்கபந்துவும் அருகருகே அமர்ந்து பல விஷயங்களைப் பேசியபடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். பேச்சினிடையே, நாங்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த கிராமமான சங்கீதமங்கலம் பற்றிப் பேசியிருக்கிறார் அப்பா. அந்த ஊர் பெயரைக் கேட்டதும், அந்த சமையல்கார மாது, “நீங்கள் சங்கீதமங்கலமா? அங்கே நோட்டக்காரர் ஜெயராமன் என்பவரைத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

“அட, நல்லாத் தெரியுமே! அவர் வீட்டுக்கு எதிர் வீட்டுலதானே நான் இருந்தேன்” என்று அப்பா சொல்ல, “அவருடைய மச்சினிதான் நான்” என்று சொல்லியிருக்கிறார் அந்த மாது.

“வறுமை காரணமாக என்னுடைய பிள்ளையை என்னால் வளர்த்துப் படிக்க வைக்க முடியவில்லை. அவர் நல்ல பணக்காரர். அதனால், என் மகனை சங்கீதமங்கலத்தில் என் அக்கா வீட்டில்தான் விட்டிருந்தேன். வருஷத்துக்கு ஒரு முறை வந்து என் பிள்ளையைப் பார்த்துவிட்டுப் போவேன்” என்று சொன்னார் அந்தப் பெண்மணி.

அவர் சொன்ன அந்தப் பிள்ளையை எனக்கே தெரியும். ரொம்பவும் ஏழ்மையோடு ஒட்டிய வயிறும், கருமை படர்ந்த கண்களுமாக, ஒல்லியாக இருப்பான். அவன் தன் பெரியம்மா வீட்டில் இருப்பதுபோல் உரிமையாக வளரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வேலைக்காரச் சிறுவன் போலத்தான் வளர்ந்தான். மற்றவர்களோடு சுவாதீனமாகப் பழகுவதற்கே தயங்கி, ஒதுங்கி ஒதுங்கிப் போகும் அவனைப் பார்த்து நான் பரிதாபப்பட்டிருக்கிறேன்.

எத்தனை வருடத்துக்குப் பின், எதிர்பார்க்காத ஓரிடத்தில் அவனது அம்மாவைச் சந்திக்க நேரிட்டிருக்கிறது!

இன்னொரு சம்பவம்... நாலைந்து நாட்களுக்கு முன்பு சக பதிவர் பட்டாம்பூச்சி சூர்யா என்னை வந்து விகடன் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பொதுவாகவே எனக்குப் புதிய புதிய முகங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது என்பது பிடித்தமான விஷயம். ஆனால், முகங்களை நினைவு வைத்துக்கொள்வது மட்டும் எனக்குச் சவாலான விஷயமாகவே இருக்கிறது. நான் பழகிய பலர் ஒரே மாதிரி முகத்தோற்றத்துடன் இருப்பதாக எனக்குப் படும். இதனால், மறுமுறை ஒருவரைப் பார்க்கிறபோது இவரா, அவரா என்று குழப்பம் வந்துவிடும். அல்லது, எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று தோன்றும். சில சமயம், முன்பின் பழக்கமில்லாதவரையும் எங்கோ பார்த்த மாதிரி தோன்றும். இதனால் முகங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவது சின்ன வயதிலிருந்தே சாத்தியமானதாக இல்லை எனக்கு. இதனால் என் நெருங்கிய நண்பர்கள்கூட, அவர்களை நான் அலட்சியம் செய்துவிட்டதாகக் கோபித்துக்கொண்டு என்னுடனான நட்பை முறித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பட்டாம்பூச்சி சூர்யாவுக்கு வருவோம். அவர் முகம்கூட எங்கள் அலுவலகத்திலேயே வேலை செய்கிற சக ஊழியர் ஒருவரின் முகத்தை ஒத்திருக்கிற மாதிரிதான் தோன்றுகிறது.

சூர்யா மிகக் கலகலப்பான நபராக இருந்தார். புதியவர் போல இல்லாமல் நெடுநாள் பழகியவர் போலப் பேசிப் பழகினார். உலக சினிமா பற்றியெல்லாம் பேசினார்.

பேச்சினிடையே, நான் விழுப்புரம் மகாத்மா காந்தி பள்ளியில் படித்தவன் என்பதைச் சொன்னேன். “அப்படியானால் உங்களுக்கு சங்கரநாராயணன் ஆசிரியரைத் தெரிந்திருக்குமே?” என்றார். “தெரியாமல் என்ன... நான் விழுப்புரத்தில் எங்கள் மாமா வீட்டில்தான் தங்கிப் படித்தேன். அந்த வீட்டின் ஒரு போர்ஷனில்தான் சங்கரநாராயணன் சார் குடியிருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள்; ஒரு பெண். பிள்ளைகளை அவர் அம்பி, குந்தம்பி என்றுதான் கூப்பிடுவார். பெண்ணை அங்கச்சி என்று அழைப்பார். அவரின் மூத்த மகன் கணேசன் என் கிளாஸ்மேட்!” என்றேன்.

“மூன்றாவது மகன் இங்கே சென்னையில் ஜெயின் காலேஜில் படித்தார். அவர் என் கிளாஸ்மேட்” என்றார் பட்டாம்பூச்சி சூர்யா.

சங்கரநாராயணன் சார் பார்ப்பதற்கு எழுத்தாளர் அசோகமித்திரனின் சாயலில் இருப்பார். நான் அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சியான 11-ம் வகுப்பை முடித்துவிட்டு அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறிய பின்பு, அந்த ஆசிரியருக்கும் எனக்குமான தொடர்பு விட்டுப் போயிற்று. அவருடைய மகன் கணேசன் படிப்பில் சுட்டி. எப்போதும் வகுப்பில் அவன்தான் முதல் மாணவனாக வருவான். இப்போது அவன்... மன்னிக்கவும், அவர் வாஷிங்டன் யூனிவர்சிடியில் மிக உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பதாகவும், மகனுக்குத் திருமணம் செய்து வைத்துத் தாத்தா ஆகிவிட்டதாகவும் சொன்னார் பட்டாம்பூச்சி சூர்யா.

சங்கரநாராயணன் சார் இங்கேதான் சென்னையில், டிரஸ்ட்புரத்தில் இருக்கிறாராம். சூர்யாவின் குடும்ப நண்பராம். இவர் அடிக்கடி சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவாராம்.

ஒருநாள் சூர்யாவின் துணையோடு, என் பழைய ஆசிரியரைச் சென்று சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

உலகம்தான் எத்தனைச் சுருங்கி வந்துவிட்டது!

*****
சக மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருக்காதீர்கள். பிறகு அவர்களை நேசிக்க நேரமில்லாமல் போய்விடும்!

(அசோக)மித்திரனின் மித்திரன் நான்!

ண்பர் முகில் கொடுத்திருந்த லிங்க் மூலம் பாலுசத்யா பிளாகில் போடப்பட்டிருந்த, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் அசோகமித்திரனின் நேர்காணலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அவருடனான பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டது.

அசோகமித்திரனின் பல சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அவரது சிறுகதை ஒன்றில் மகாத்மா காந்தியை ஒருவர் கடுமையாக விமர்சிப்பார்; மற்றவர் அதை மறுத்து ஆதரவாகப் பேசுவார். ரொம்ப காலத்துக்கு முன் படித்தது. கதைத் தலைப்பு ஞாபகமில்லை. ஆனால், ரொம்பத் துணிச்சலாக எழுதப்பட்ட கதை அது.

‘எலி’ என்று ஒரு சிறுகதை. மிகவும் ரசனையாக எழுதப்பட்ட கதை அது. ஓர் எலியைக் கொல்வதற்காக ஒருவன், சூடாக அப்போதுதான் போடப்பட்டுக்கொண்டு இருக்கும் மசால் வடை ஒன்றை வாங்கிக்கொண்டு வருவான். ‘இதை நான் தின்பதற்காக வாங்குகிறேன் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஓர் எலியைக் கொல்வதற்காக வாங்கிப் போகிறேன் என்று தெரிந்தால் வருத்தப்படுவானோ?’ என்று அவன் மனசுக்குள் நினைத்துக் கொள்வான். எலிப்பொறியில் வடையைப் பொருத்தி வைத்துவிடுவான். மறுநாள் காலை எலி கழுத்து நசுக்குண்டு இறந்திருக்கும். அதன்பின் அசோகமித்திரன் கடைசி வரியாக எழுதியிருந்ததுதான் ரொம்ப டச்சிங்! ‘அந்த வடை துளியும் தின்னப்படாமல் முழுசாக இருந்தது கண்டு அவன் மனம் கலங்கியது’ என்று எழுதியிருப்பார். சாகிற எலி கடைசி நேரத்தில் அந்த வடையைச் சுவைத்துவிட்டாவது சாகக் கூடாதோ! பாவம், அதற்குக் கொடுப்பினை அவ்வளவுதான்!

30 ஆண்டுகளுக்கு முன், நான் சென்னைக்கு வந்து சில மாத காலம் தங்கியிருந்த சமயத்தில், கே.கே.நகர் பள்ளியின் (இப்போது சரவணபவன் எதிரில் உள்ள பள்ளி) வெளியே ஒரு கரும்பலகையில் ‘இன்று காலை 10 மணிக்கு எழுத்தாளர் அசோகமித்திரன் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றுகிறார்’ என்று சாக்பீஸால் எழுதியிருந்ததைக் கண்டேன். அப்போது சரியாக மணி 10. உடனே ஓர் உந்துதலில் பள்ளியின் உள்ளே சென்றேன். வாட்ச்மேன் தடுத்து நிறுத்திவிட்டார். ‘யார்?’ என்று விசாரித்தார். ‘நானொரு வழிப்போக்கன். அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கவேண்டும். என்னை உள்ளே அனுமதியுங்கள்’ என்றேன். மறுத்துவிட்டார். அப்போதைய என் தோற்றம் அத்துணை மதிப்புக்குரியதாய் இல்லை போலும்! ‘இங்கேயே நின்றுகொண்டு கேள்’ என்றார். அப்படியே காம்பௌண்ட் கேட் அருகில் நின்று கேட்டேன். ஸ்பீக்கர் ஒலி ஒரே இரைச்சலாக இருந்தது. வார்த்தைகள் எதுவும் தெளிவாகக் காதில் விழவில்லை. எனவே, கிளம்பிப் போய்விட்டேன்.

அதன்பின்பு, திரு. அசோகமித்திரன் அவர்களை எனக்கு சாவி நாட்களிலிருந்து பழக்கம். ‘சாவி’யில் நான் முழுப் பொறுப்பு ஏற்றிருக்கும்போதுதான் அவர் அதில் ‘மானஸரோவர்’ தொடரை எழுதத் தொடங்கினார். வாராவாரம் தம் மகன் மூலம் அந்த வார அத்தியாயத்தைக் கொடுத்து அனுப்புவார். மற்றபடி அப்போது நேரில் பார்த்ததில்லை.

நான் அப்போது மேற்கு மாம்பலத்தில் என் தங்கை குடும்பத்தோடு ஒரு சிறு குடித்தனத்தில் தங்கியிருந்தேன். ஒரே ஒரு சின்ன அறைதான். ஒருவர் நிற்பதற்கு மட்டுமேயான கிச்சன். அங்கே இருந்த எல்லாக் குடித்தனங்களும் அப்படித்தான் மிகச் சிறியவை. மொத்தம் பத்து குடித்தனங்கள் இருக்கும். அங்கே இருந்த ஆணகள் எல்லோரும் இரவில் மொட்டை மாடியில்தான் அரட்டை அடித்தபடி படுத்து உறங்குவோம்.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை, காலை 12 மணியளவில் நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு பெரியவர் வந்தார். வெளியே நின்றபடியே, “ரவிபிரகாஷ் இருக்காரா?” என்று கேட்டார். “வாங்க உள்ளே” என்று அழைத்தேன். ஒரு ஸ்டீல் நாற்காலியை எடுத்துப் போட்டேன். “இருக்கட்டும், பரவாயில்லை. இதைக் கொடுத்துட்டுப் போகத்தான் வந்தேன்” என்று ஒரு கவரை நீட்டினார். மேலே மானஸரோவர் என்று எழுதியிருந்தது.
“அசோகமித்திரன் கொடுத்துட்டு வரச் சொன்னாரா? வழக்கமா அவர் பையன் வந்து தருவார். இன்னும் வரலையேன்னு பார்த்தேன்” என்றேன். “ஆமாம். அவர் பையன் பம்பாய் போயிருக்கான். அதான், நீயே போய்க் கொடுத்துட்டு வந்துடுன்னு என்கிட்டே கொடுத்தனுப்பினார். சரி, நான் வரேன்” என்றார். வெயிலில் நடந்து வந்திருந்ததில் அவர் முகம் பூராவும் வேர்த்திருந்தது. “மோர் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டேன். “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஒரு டம்ளர் தண்ணி மட்டும் கொடுங்க, போதும்” என்று வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினார். “நீங்க யாரு?” என்றேன். அவர் என் கண்களை ஆழமாகப் பார்த்து, “அசோகமித்திரன்” என்று சொல்லிவிட்டு, “வரேன்” என்று விறுவிறுவென்று கிளம்பிப் போனார்.

பாதிச் சாப்பாட்டில் எனக்குப் புரைக்கேறிவிட்டது. எச்சில் கையோடு எழுந்து வெளியே ஓடினேன். அவர் குடித்தனத்தின் குறுகலான சந்தைக் கடந்து தெருவில் இறங்கி மறைந்துவிட்டார்.

ஒரு கணம் என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ கனவு மாதிரி இருந்தது. அத்தனைப் பெரிய எழுத்தாளரா என் வீட்டுக்கு வந்து அருகில் அமர்ந்து என்னோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்! 30 வருடத்துக்கு முந்தைய நிகழ்வு ஞாபகத்துக்கு வந்தது.

அதன்பின், அந்த வாரத்திலேயே ஒருநாள் நானே அவரைத் தேடிச் சென்றேன். அவர் அப்போது தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில், கிருஷ்ணவேணி தியேட்டரை ஒட்டிய ஒரு தெருவில் இருந்தார். வீட்டைக் கண்டுபிடித்துப் போனேன். “இங்கே எழுத்தாளர் அசோகமித்திரன்னு...” என்று குரல் கொடுத்தேன். “எழுத்தாளர் கிழுத்தாளர் யாரும் இங்கே இல்லை. நான் தியாகராஜன்தான் இருக்கேன். உள்ளே வாங்க” என்றார். போனேன். குறுக்கே இரண்டு மூன்று பெஞ்சுகள் போட்டு, அவற்றின் மீது ஏகப்பட்ட புத்தகங்களைக் குவித்து வைத்து, நடுவே நின்று ஏதோ தேடிக்கொண்டு இருந்தார்.

“சார், திடீர்னு இப்படி நீங்களே கிளம்பி என் வீட்டுக்கு வருவீங்கன்னு நான் நினைக்கலே!” என்றேன்.

“ஏன், அதனால என்ன?” என்றார்.

“உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்? போன் பண்ணிச் சொல்லியிருந்தா நானே வந்து வாங்கிட்டுப் போயிருப்பேனே!” என்றேன். “வர ஞாயிற்றுக் கிழமை நானே வந்து சேப்ட்டரை வாங்கிட்டுப் போறேன்.”

“சரி” என்றார்.

அதன்படியே, அடுத்தடுத்து நாலைந்து வாரங்கள் தொடர்ந்து அவர் வீட்டுக்குப் போய் மானஸரோவர் அத்தியாயங்களை வாங்கிக் கொண்டு வந்தேன்.

அதன்பின் ஒருநாள் அவரிடமிருந்து போன் வந்தது. “இனிமே நீங்க வர வேணாம். என் பையன் வந்துட்டான். நான் அவன்கிட்டேயே கொடுத்தனுப்பறேன். அதுதான் முறை!” என்றார்.

சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டு, நான் ஆனந்த விகடனில் சேர்ந்திருந்த புதிது. அசோகமித்திரனுக்கு சாவி பத்திரிகை நின்றது தெரியும். நான் விகடனில் சேர்ந்தது தெரியாது. அப்போது அவரிடமிருந்து என் வீட்டு முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ஒரே ஒரு வரி மட்டுமே எழுதியிருந்தார்...

“ரவி, இப்போது எங்கே இருக்கிறீர்கள்?”

*****
ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் எப்போதும் மூடிய கதவையே பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!

பெயர் விநோதங்கள்!

ண்பர் மார்க்கபந்து என் மதிப்புக்குரிய நண்பர். கடந்த 30 வருடங்களாக அவரை எனக்குத் தெரியும். (அவரைப் பற்றிய நீண்ட கட்டுரையை என் இன்னொரு பிளாகில் வெளியிட்டுள்ளேன்.) இங்கே அசோக் நகரில்தான் இருக்கிறார். நடந்து போகக்கூடிய தொலைவு!

நேற்றைக்குத் தன் வீட்டில் ஏதோ விசேஷம் என்று அவரும் அவர் மனைவியுமாக வந்து என் அப்பாவையும் அம்மாவையும் தங்கள் காரில் அழைத்துச் சென்றார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன், ஆனந்த விகடனில் வெளியான என் முதல் சிறுகதையைப் பாராட்டி அவர் அப்போது எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கதையின் தலைப்பு ‘விளக்கில் விழுந்த விட்டில்’.

கதை அருமையாக இருக்கிறது என்று தாராளமாகப் பாராட்டிவிட்டு, ‘அந்தக் கதையில் கதாபாத்திரங்கள் யாருக்குமே பெயர் இல்லை. இது எனக்கு ஒரு புதுமையாக இருந்தது. திட்டமிட்டு அப்படி எழுதினீர்களா?’ என்று கேட்டு எழுதியிருந்தார். அதை நானே அதன் பிறகுதான் கவனித்தேன்.

திட்டமிட்டெல்லாம் அப்படி எழுதவில்லை. யதேச்சையாக அமைந்த விஷயம் அது.

நண்பர் மார்க்கபந்து தன் கடிதத்தில், அந்தக் கதையில் இருந்த இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லையே தவிர, போகிற போக்கில் மூன்று பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன். கதாநாயகியை ‘சுந்தர், சுரேஷ், மகேஷ் என வரிசையாகப் பலர் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள்’ என்று எழுதியிருந்தேன். அந்த மூன்று பெயர்களைத் தவிர, கதை மாந்தர்கள் யாருக்கும் பெயர் இல்லை.

‘ரவிபிரகாஷ், ஒரு வேடிக்கை தெரியுமா? என் பெரிய பையன் பேர் சுந்தர்; அடுத்த மகன் பேர் சுரேஷ்; மூன்றாவது மகன் பெயர் மகேஷ். எனக்கு மூன்று மகன்கள். மிகச் சரியாக எப்படி அந்த மூன்று பெயர்களையும் நீங்கள் வரிசைப்படி எழுதினீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் மார்க்கபந்து.

இதுவும் யதேச்சையாக அமைந்த விஷயம்தான்! இப்படியான பெயர் விசித்திரங்கள் எனக்கு அடிக்கடி நிகழ்ந்திருக்கின்றன. ரொம்ப போரடிக்காமல், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்.

எனக்குத் திருமணமான புதிது. சாவி வார இதழில் இருந்த சக நண்பர்கள் எங்களுக்கு விருந்தளித்து மகிழ தங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று, ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று விருந்துண்டு மகிழ்ந்தோம்.

சாவியில் விளம்பரப் பிரிவு மேலாளராக இருந்தவர் சீனிவாசகமணி என்பவர். இப்போது ‘கோபுர தரிசனம்’ என்னும் ஆன்மிக மாத இதழை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரின் அழைப்பின் பேரில் ஒரு ஞாயிற்றுக் கிழமை, நானும் என் மனைவியுமாக திருவான்மியூரில் இருந்த அவர் வீட்டுக்குப் பஸ்ஸில் சென்றோம்.

திருவான்மியூரில் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பில் இறங்கும்போது, ஒரு பெரிய விபத்தில் சிக்கி, என் மனைவியின் முகத்தில் பலத்த அடிபட்டு, மயங்கி விழுந்துவிட்டார். முகம் முழுக்க ரத்தமாகிவிட்டது. நான் பதறி, அவரைத் தூக்கிக்கொண்டு, நடக்கிற தொலைவில் இருந்த பி.ஆர்.ஹாஸ்பிட்டலுக்குச் சென்று அட்மிட் செய்தேன். முகத்தில் தையல் போட்டு, மதியத்துக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

இதற்கிடையில், நடந்த விஷயத்தை நான் சீனிவாசக மணிக்குத் தொலைபேசியில் சொல்லி, எதிர்பாராத மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது என்று கேட்டேன். அப்போது 600, 700 ரூபாய் ஆகியது என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. பதறிப்போய் உடனே பணத்துடன் வந்தார்.

தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும் மகிழ்ச்சியான சூழலில் இப்படி ஆகிவிட்டது குறித்துப் பெரிதும் வருந்தினார். பிறகு முதல் தேதியன்று நான் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோதும் பிடிவாதமாக வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.

மதியம் வரை என்னோடு கூடவே ஆஸ்பத்திரியில் இருந்தார். டிஸ்சார்ஜ் செய்ததும், ஒரு ஆட்டோவில் அருகில் இருந்த அவரின் வீட்டுக்குப் போனோம். என் மனைவியால் சாப்பிட முடியாத நிலை. சீனிவாசக மணியின் மனைவி ரசம் சாதத்தைக் குழைவாகக் கரைத்துக் கஞ்சி போல் ஆக்கிப் பொறுமையாக என் மனைவிக்கு ஸ்பூனால் ஊட்டினார். நான் மட்டும் விருந்துண்டேன்.

பின்னர், அவர்களிடம் விடைபெற்று ஆட்டோவில் புறப்பட்டோம். கொஞ்ச நாளைக்கு என் மனைவியால் தனியாகக் காரியம் எதுவும் செய்ய முடியாது என்பதால், நேரே என் வீட்டுக்குப் போகாமல், மாம்பலத்தில் இருந்த என் தங்கை வீட்டுக்குப் போனோம். என் மனைவியின் உடல் நிலை பூரண குணமாகும் வரை அங்கேயேதான் இருந்தோம்.

சரி, இதில் என்ன பெயர் விசித்திரம் என்றால்...

என் மனைவியின் பெயர் உஷா. எங்களை விருந்துக்கு அழைத்த நண்பர் சீனிவாசக மணியின் மனைவி பெயரும் உஷா. பி.ஆர். ஹாஸ்பிட்டலில் என் மனைவிக்குச் சிகிச்சை அளித்த டாக்டரின் பெயரும் உஷா. நாங்கள் வீடு திரும்பிய ஆட்டோவிலும் உஷா என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. என் வீட்டுக்குப் போகாமல் என் தங்கை வீட்டுக்கு வந்ததாகச் சொன்னேனல்லவா, என் தங்கையின் பெயரும் உஷா.

இப்படி ஒரே நிகழ்வில் அடுத்தடுத்து ஐந்து உஷாக்கள் இருந்தது விசித்திரம்தானே?

*****
யாருடன் சேர்ந்து சிரித்தீர்களோ, அவரை ஒருவேளை நீங்கள் மறந்துவிடலாம். ஆனால், யாருடன் சேர்ந்து அழுதீர்களோ, அவரை உங்களால் மறக்க முடியாது!

சில இடங்கள்... சில ஞாபகங்கள்..!

ஞாயிற்றுக் கிழமை சற்று காலாற நடந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். அசோக் பில்லர் வரை சென்றேன். அங்கேயே சற்று நேரம் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று, டீஸல் புகை கக்கியபடி போகும் வரும் வாகனங்களைப் பார்வையிட்டுக்கொண்டு இருந்தேன். ‘பாங்... பாங்...’ என்று வாகன அலறல்கள்! சிக்னல் எப்போது மாறும் என்று துடித்துக்கொண்டு, பச்சை விழுந்த அடுத்த விநாடி சீறிக் கிளம்பும் பைக்குகள், பஸ்கள், கார்கள்..! தெருவைக் கடக்க ஐந்து நிமிடத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கே வந்த நினைவு எழுந்தது. இந்த அசோக் நகர் பகுதிக்கு வந்து நிரந்தரமாக இங்கேதான் குடியிருக்கப்போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியாது.

1979-ல், கிராமத்திலிருந்து நான் மட்டும் தனியாகக் கிளம்பி, மண்ணடியில் இருந்த என் அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தேன். அத்தை குடியிருந்தது பல குடித்தனங்கள் கொண்ட ஒரு பழைய குடியிருப்பில். சிறிய இடம்தான். பக்கத்துக் குடித்தனத்தில் இருந்தவர்கள், ஏன், அந்தக் குடியிருப்பில் இருந்த அனைவரின் முகமும் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் மறந்துவிட்டது. பக்கத்துக் குடியிருப்பில் இருந்தவர்களில் ஒரே ஒரு பெண்ணின் பெயர் மட்டும் ஞாபகத்தில் உள்ளது. காரணம், அது என் அம்மாவின் பெயர். சீதா. எனவே, நான் அந்தப் பெண்ணை கீதா என்றுதான் அழைப்பேன். ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். கீதா படபடவென்று பேசுகிற பெண். நான் நேர்மாறாக சங்கோஜி!

பக்கத்து வீட்டில் குடியிருந்த சுபாஷிணி என்ற பெண், இந்த கீதாவின் சிநேகிதி என்பதால் அடிக்கடி இங்கே வரும். அப்போது என் சிறுகதைகள் கல்கியிலும், குங்குமம் பத்திரிகையிலும் வெளியாகியிருந்தன. அவற்றை என் அத்தை அந்தப் பெண்களிடம் பெருமையோடு காட்ட, அவர்களும் என்னைப் பாராட்டிப் பேச, புளகாங்கிதம் அடைந்தேன்.

கீதாவின் சிநேகிதி சுபாஷிணி அப்போது கல்லூரியில் சேர்ந்திருந்ததாக ஞாபகம். கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியதாகச் சொல்லும். திறமைசாலியான பெண். அதுவும் கீதா போலவே படபடவென்று பேசும். கலகலப்பாகப் பழகும். கிராமத்திலிருந்து வந்ததால், எனக்குத்தான் அவர்களுடன் பழகுவதில் சற்றுத் தயக்கம் இருந்தது. (அந்த சுபாஷிணி யார் என்பதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன்.)

சரி... விஷயத்தை எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய்விட்டேன். அத்தை வீட்டில் நான் இருந்த சமயத்தில், மாம்பலத்தில் என் அம்மாவின் சித்தி வீடு இருந்தது. (இப்போதும் இருக்கிறது.) அங்கே வந்து சித்தியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பிராட்வேயில் பஸ் பிடித்தேன். கையில் அதிகம் பணம் இல்லை. அயோத்தியா மண்டபம் என்று கேட்டு டிக்கெட் வாங்கினேன்.

எனக்கு மெட்ராஸ் அப்போது அத்தனைப் பரிச்சயமில்லை. என்றாலும், அயோத்தியா மண்டபம் ஸ்டாப்பிங் தெரியாமல் போய்விடப் போகிறதா என்ன என்று யாரையும் நான் கேட்கவும் இல்லை. தவிர, பிறரை வழி கேட்பது என்பதே என்னை ஒரு அசடாகக் காட்டிவிடுமோ என்றும் நான் அப்போது அசட்டுத்தனமாக எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில், நான் அந்த ஸ்டாப்பிங்கைத் தவறவிட்டதுதான் மிச்சம்!

பஸ்ஸில் கூட்டம் இல்லை. தெருவிலும் அத்தனை நெரிசல்கள் இல்லை. அப்போதெல்லாம் பஸ்ஸில் யாரும் நின்றபடி பயணம் செய்து நான் பார்த்தது இல்லை. பஸ் யாருமற்ற வனாந்தரமான பகுதியில் ஓடிக்கொண்டிருக்கவும்தான், நான் என் ஸ்டாப்பிங்கைத் தவற விட்டது புரிய, தயங்கித் தயங்கிப் பக்கத்தில் இருந்தவரைக் கேட்டேன். “இப்போதானே தம்பி போச்சு! அடுத்தது அசோக் பில்லர் வரும். இறங்கிக்க. நடக்கிற தூரம்தான்!” என்றார்.

பில்லர் வந்தது. இறங்கினேன். பில்லர் மட்டும்தான் இருந்தது. சுற்றிலும் வேறு கடைகள், கட்டடங்கள் எதுவும்... ஆமாம், எதுவுமே இல்லை! செம்மண் காடாக இருந்தது. கப்பிக்கல் பதித்த செம்மண் சாலை. நான் வந்த பஸ் கிளம்பிப் போனதும், நான் ஏதோ தீவில் மாட்டிக்கொண்ட ஒற்றை மனிதன் போலானேன்.

ஒரு சின்னஞ்சிறிய கட்டடம் மட்டும் இருந்தது. அது போஸ்ட் ஆபீஸ். ஞாயிறு என்பதால் விடுமுறை. பக்கத்தில் சற்றுத் தொலைவில் ஒரு பெரிய கட்டடம் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. (அங்கு சினிமா தியேட்டர் வரப்போகிறது என்று பின்னர் என் சித்தி பையன் மூலம் அறிந்தேன். அதுதான் உதயம் காம்ப்ளெக்ஸ்.)

மாம்பலத்துக்கு வழி விசாரிக்கவும் யாரும் கண்ணில் தென்படாததால், நான் எனக்குத் தோன்றிய திசையில், ஒரு யூகத்தில் குத்துமதிப்பாக நடந்தேன்... நடந்தேன்... நடந்துகொண்டே இருந்தேன். நீள நெடுக செம்மண் சாலைதான். ஒரு ஈ, காக்கா கண்ணில் படவில்லை. கடை கண்ணி எதுவும் இல்லை. பதினைந்து, இருபது நிமிடம் நடந்திருப்பேன். நல்ல வெயில். உச்சி வேளையாக இருந்ததால், மரங்களின் அடியிலும் நிழல்கள் இல்லை.

ரொம்ப நேரம் நடந்தபின், கொஞ்சம் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது. இளநீர் வண்டிக்காரர் ஒருவர் தென்பட்டார். அவரிடம் போய், அயோத்தியா மண்டபத்துக்கு வழி கேட்டேன். “அது ரொம்ப தொலைவு ஆச்சுங்களே! இது வட பழனி. இடது கைப் பக்கமா போனீங்கன்னா பஸ் ஸ்டாண்டு வரும். இந்நேரத்துக்கு ஏதாச்சும் பஸ் இருக்கும். அதுல போங்க” என்றார்.

எனக்குப் பக்கென்றது. கையில் மிச்சமிருந்த காசுக்கு இளநீர் வாங்கிக் குடித்துவிட்டேன். பஸ் டிக்கெட்டுக்கு எவ்வளவு தேவைப்படுமோ! (அப்போதெல்லாம் மினிமம் 25 காசுதான் டிக்கெட்!) இருந்தாலும் இத்தனை தூரம் வந்தது வந்துவிட்டோம், வட பழனி பஸ் ஸ்டேண்டைப் பார்த்துவிட்டே போய்விடுவோம் என்று நடந்தேன். ராம் தியேட்டர், கமலா தியேட்டர் எல்லாம் வந்தன. ஒரு கோயில் தெரிந்தது. (வடபழனி முருகன் கோயில்). உள்ளே போய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ‘மாம்பலத்துக்கு நல்ல வழி காட்டப்பா முருகா’ என்று வேண்டிக்கொண்டுவிட்டு, அங்கிருந்தோரிடம் மாம்பலத்துக்கு வழி விசாரித்துக்கொண்டு மறுபடி நடந்தே சித்தி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

சித்தியிடம் விஷயத்தைச் சொன்னதும், “அடப்பாவி! இதோ இருக்கு பில்லர். அடுத்த ஸ்டாப்பிங்தான். ரெண்டே நிமிஷத்துல ஓடி வந்துடலாம். நீ வடபழனிக்கு எங்கே போனே?” என்று சிரித்தார்.

அந்த அசோக் பில்லரா இது? பாலைவனம் மாதிரி இருந்த இடமா இத்தனை ஜன நெரிசலோடு பிதுங்கிக்கொண்டு இருக்கிறது! பிரமிப்பாக இருக்கிறது.

அது இருக்கட்டும்... இடையில் கீதாவின் சிநேகிதி சுபாஷிணி பற்றி ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என்று சொன்னேனே... பலப் பல வருடங்களுக்குப் பிறகு, 1995-ல் ஆனந்த விகடனில் வேலை கிடைத்து நான் உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தபோது, அங்கே பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த சுபாதான் அது!

இந்த விஷயத்தை நானாக இதுவரை சுபாவிடம் சொன்னதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுக்குத் தன் கணவரோடு வந்த அந்த கீதா (இன்றைக்கும் சுபாவோடு அதே நட்போடு பழகி வருகிறார்) ஒருவேளை சொல்லியிருக்கக்கூடும். ஆனால், அதன்பின் அந்த கீதாவையும் நான் இதுவரை சந்திக்கவேயில்லை.

*****
ஒவ்வொரு நண்பரும் எப்போதோ ஒரு சமயம் அந்நியராக இருந்தவர்தான்; ஒவ்வொரு அந்நியரும் எப்போதோ ஒரு சமயம் நண்பராக இருந்தவர்தான்!

‘தினம்’ ஒரு பேத்தல்!

“ஹனி டார்லிங்! சூட்கேஸ்ல ஸ்வெட்டர், ஷால், கம்பராமாயணம், காசி அல்வா எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டியா?”

“ஆச்சு டியர்! அப்புறம், போன தடவையே கேட்டாரே, தி.ஜானகிராமன் நாவல்கள், அதையும் மறக்காம எடுத்து வெச்சுக்கிட்டேன்!”

“வெரிகுட்! அமிர்தாஞ்சன், கால் வலித் தைலம்...”

“மறப்பேனா டியர்? புதுப் போர்வை கூட ஒண்ணு எடுத்துக்கிட்டேன்...”

“கிரீட்டிங் கார்டு மறந்துட்டீங்களே மம்மி!”

“ஐயோ, என் குழந்தை எத்தனை சமத்து பார்த்தீங்களா?”

“யெஸ்... யெஸ்! என் ரத்தம் இல்லையா?”

அவள் தன் மகனைத் தூக்கிக் கொள்ள, அவளின் கணவன் அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான் - முதியோர் இல்லத்தில் இருக்கும் தன் அப்பாவைக் காண!

தந்தையர் தினமாயிற்றே! வாழ்த்துப் பெற வேண்டாமா அப்பாவிடம்!

மெரிக்காவின் அசட்டுக் கலாசாரம் இங்கேயும் பரவி வருகிறது.

அன்னையர் தினம், காதலர் தினம், முட்டாள்கள் தினம், கழுதைகள் தினம், நாய்கள் தினம் என்று வர்ஜா வர்ஜமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஒரு தினம் கொண்டாடி, கையில் ஒரு பொக்கேவோ கிரீட்டிங் கார்டோ கொடுத்து முடித்துக்கொள்வது அவர்கள் வழக்கம். நாகரிகம் என்ற பெயரில் பிறரிடம் உள்ள நல்ல வழக்கங்கள் எதை நாம் பின்பற்றி இருக்கிறோம்? பிறரிடம் உள்ள ஏதாவது ஒரு பழக்கத்தை நாம் பின்பற்றுவதாக இருந்தால், அது ஒன்று ஆபாசமாக இருக்கும்; அல்லது, இந்த மாதிரியான அசட்டுத்தனமாக இருக்கும்.

தினம் கொண்டாடுவது வருடாந்திர திதி மாதிரி ஆகிவிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாகக் கொண்டாட வேண்டுமாம். இது அமெரிக்காவில்! ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைதான் தந்தையர் தினம். இன்னும் நாட்டுக்கு நாடு இது மாறலாம்!

அமெரிக்கனுக்கு பெண்டாட்டியும் பிள்ளைகளுமே சாஸ்வதமில்லை. ‘என் பிள்ளையும் உன் பிள்ளையும் நம் பிள்ளையோடு விளையாடுகின்றன பார்!’ என்கிற ரீதியில் போகிற வாழ்க்கை அவர்களுடையது. ‘கிளிக்கு றெக்க முளைச்சுடுத்து; ஆத்தை விட்டுப் பறந்து போயிடுத்து’ என்று அங்கே யாரும் வசனம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள். பறந்து போகவில்லை என்றால்தான் துரத்தி விடுவார்கள். பதினாறு வயசுக்கு மேல் அந்தப் பையனாகவே யாராவது ஒரு கேர்ள் ஃப்ரெண்டைத் தேடிக்கொண்டு, அவளோடு செட்டிலாகிவிடுவான். அப்படி ஆகவில்லை என்றால், பெற்றோர் பதைபதைத்துப் போவார்கள்.

அப்பா-மகன் என்கிற உறவுகளுக்கெல்லாம் அங்கே அர்த்தம் கிடையாது. வழியில் இருவரும் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால், “ஹி ஈஸ் மை ப்ளட்!” என்று அப்பா தன் அப்போதைய துணையிடமோ, அல்லது “ஒன்ஸ் ஹி வாஸ் மை மதர்’ஸ் ஃபியான்ஸ்” என்று மகன் தன் சிநேகிதியிடமோ ஒரு மூன்றாம் மனிதரைப் போல அறிமுகம் செய்துவைத்துவிட்டு, அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு அப்பால் நகர்ந்துவிடுவார்கள். அவர்களுக்குத் தேவை வருடத்தில் ஒருநாள் மம்மி டே, டாடி டே எல்லாம்!

நாமுமா அந்த அசட்டுத்தனத்தில் பங்கேற்பது? மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கும் மேலாகப் பெற்றோர்களை வைத்துப் போற்றுகின்ற கலாசாரம் நமது கலாசாரம். கூவத்தில் முங்கிக் குளித்துவிட்டு கூடிகூரா பவுடர் போட்டுக் கொள்கிற இந்த மாதிரியான பேத்தல்கள் எனக்குச் சகிக்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன், ‘விஷ்ராந்தி’ முதியோர் இல்லத்தின் நிறுவனர் சாவித்திரி வைத்தி அவர்களோடு ஒருமுறை நான் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சொன்னார்... “முதியோர் இல்லங்கள் எல்லாம் ஒழியணும்!”

“என்னம்மா சொல்றீங்க?” என்றேன் புரியாமல்.

“பின்னே என்ன? போலீஸ் ஸ்டேஷன்கள் ஒரு ஊர்ல அதிகம் இருந்தா திருட்டுப் பசங்க அதிகமாயிட்டாங்கன்னு அர்த்தம். முதியோர் இல்லங்கள் அதிகமா இருந்தா, பிள்ளைங்க மனசு திரிஞ்சு போச்சுன்னு அர்த்தம். அது நாட்டுக்கு நல்லதில்லை!” என்றார்.

எப்போது இங்கே பெற்றோர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் எல்லாம் ஆண்டுக்கு ஆண்டு அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறதோ, அத்தனைக்கத்தனை பெற்றோர்-பிள்ளைகள் உறவு விரிசலாகிக்கொண்டே வருகிறது என்று பொருள்.

எந்தப் பெற்றோராவது் ‘பிள்ளைகள் தினம்’, ‘மகன் தினம்’, ‘மகள் தினம்’ என்றெல்லாம் கொண்டாடியது உண்டா? இல்லை. ஏன்? அவர்கள் மனசு அந்த அளவுக்கு வக்கரித்துப் போகவில்லை.

‘தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனசு பித்தம்மா, பிள்ளை மனசு கல்லம்மா...’ என்ற கண்ணதாசனின் வரிதான் சட்டென்று ஞாபகத்துக்கு வருகிறது!

முடிப்பதற்கு முன்...

ரம்பக் கதையின் முடிவாக இன்னும் சில வரிகள் எழுதலாம் என்று தோன்றியது.

“என்னடா கண்ணா! கையிலே கிரீட்டிங் கார்டு வெச்சிருக்கே! தாத்தா கிட்டேர்ந்து வாங்கிக்கிட்டியா?”

“ஆமா டாடி! நானும் பெரியவனானதும் இதே மாதிரி வந்து பார்த்து உங்களுக்குத் தர வேணாமா டாடி?”

*****
ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு வாழ்வியல் உதாரணமாக நடந்து காட்டவேண்டியவற்றில் முதலாவது, தன் பெற்றோர்களை மதிப்பதுதான்!

குட் பை ஹேமா!

‘உண்மையான உறவுகளை ஒரு நிமிடம் கண்களை மூடி நினைக்கும்போது பிரிவின் ஏக்கம் விழி ஓரம் கசிகின்ற கண்ணீர்த் துளிகளில் தெரியும்... நான் தற்காலிகமாக விடைபெறும் நேரம் வந்துவிட்டது. வாழ்த்தி வழியனுப்புங்கள். ஃப்ரைடே மார்னிங் எனக்கு ஃப்ளைட். மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம். வரட்டா! - ஹேமாஜி.’

புதன்கிழமை மதியம், தவறுதலாக என் செல் எண்ணுக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ் இது. ஆங்கில ட்ரான்ஸ்லிடரேஷன் செய்யப்பட்டிருந்தது.

யார் அந்த ஹேமாஜி? தெரியவில்லை. யாருக்கு இந்த மெசேஜை அனுப்ப நினைத்தார்? தெரியவில்லை. எங்கே ஃப்ளைட் பிடிக்கப்போகிறார், சென்னையிலா, பெங்களூரிலா, மும்பையிலா? கவிதை போன்ற அழகான தமிழ் வார்த்தைகள் என்பதால், அநேகமாகச் சென்னையிலிருந்துதான் புறப்படுவார் என்று ஒரு யூகம்!

அதற்கு ரிப்ளை கொடுத்துப் பார்த்தேன்... ‘Message sending failed'. தொடர்புகொள்ள முயன்றேன்... ‘தாங்கள் தொடர்புகொள்ளும் நபர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்...’

புதன், வியாழன் இந்த இரண்டு நாட்களுமே மேற்படி எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஹேமாவைத் தொடர்புகொள்ள முயன்று தோற்றுப்போனேன். என் கவலை, அவர் தவறான எண்ணுக்குத் தகவல் அனுப்பியதை அறியாமல், சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து வாழ்த்து வரவில்லையே என்று அவர் மீது கோபப்படப் போகிறாரே என்பதுதான். விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்தால் அந்த நபர் ஹேமாவை விமான நிலையத்துக்கே கூட வந்து வழியனுப்பி வைத்திருக்கக் கூடும்.

என் கணக்கு அவர் ஓர் ஆணாகத்தான் இருக்கவேண்டும். அதுவும், அவரின் காதலனாக இருக்கலாம். அவர் அவரின் குடும்பத்துக்குத் தெரிந்தவராக இருக்கவேண்டும். அவர்களின் காதல் இரு குடும்பத்தாருக்கும் தெரிந்திருக்கலாம். அவர்கள் சம்மதத்தோடு இருவரின் திருமணமும் அடுத்த ஆண்டு செய்யப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெண் வெளிநாட்டில் ஒரு நல்ல வேலையில் இருக்க வேண்டும். லீவுக்கு வந்த இடத்தில் காதலனோடு சில நாட்கள் பழகிவிட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிகிற வேளையில் உருக்கமாக இப்படி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கக் கூடும். தான் தவறான எண்ணுக்கு அனுப்பியது தெரிந்து அந்தப் பெண் மீண்டும் அவனைத் தொடர்பு கொண்டு பேசியிருப்பாள். பேசியிருக்க வேண்டும். அப்படித்தான் நம்ப விரும்புகிறேன்.

எந்த வகையிலோ என்னோடு தொடர்பு கொண்ட அந்தப் பெண் பத்திரமாக ஊர் போய்ச் சேரவேண்டுமே என்கிற பதைப்பு என்னுள் எழுந்தது. 'Good bye Hema! I wish you a happy journey!' என்று காலையில் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி வைத்தேன். வழக்கம்போல் அதுவும் போகாமல் தோற்றுப் போனது. நேற்றுக் காலை புறப்பட்ட எந்த விமானமும் விபத்துக்குள்ளாகவில்லை என்கிற தகவல் என்னைக் கொஞ்சம் நிம்மதியுறச் செய்தது.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, எனக்கொரு எஸ்.எம்.எஸ். வந்தது... 'Father serious. Start immediately!' பதறிப்போனது எனக்கு. என் அப்பா என்னோடு பத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். என் பதற்றம் அது இல்லை. யாரோ ஒரு மகனுக்கு அவனுடைய அப்பா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது தெரியாமல் போய்விடப் போகிறதே என்கிற கவலைதான். உடனே ரிப்ளை கொடுத்துவிட்டேன்... ‘உடனடியாக தொலைபேசி எண்ணைச் சரிபார்த்து, சரியான எண்ணுக்கு இந்தத் தகவலை அனுப்பவும்.’

என் பதில் சரியாகவே போய்ச் சேர்ந்துவிட்டது.

செல்போன் என்பது இன்றைய உலக வாழ்க்கையில் ஓர் வரம்தான். முன்பெல்லாம் தந்தி கொடுத்தால்கூட மறு நாள் காலையில்தான் கிடைக்கும். டெல்லிக்குப் பேசவேண்டுமென்றாலும், தபாலாபீஸில் ஒரு விண்ணப்பம் வாங்கி எழுதிக்கொடுத்து ட்ரங்க்கால் புக் செய்து மணிக்கணக்கில், ஏன் நாள் கணக்கில்கூட அங்கேயே வாசலில் தேவுடு காத்திருக்க வேண்டும். வெளிநாட்டுக்குப் பேச வேண்டும் என்றால், ஒரு ராஜ சூய யாகமே நடத்தின மாதிரி!

இன்றைக்கு விநாடிகளில் யாரும் யாரையும் தொடர்புகொண்டுவிட முடிகிறது. ஆனால், மனங்கள்தான் தொடர்புகொள்ள முடியாமல் ஒன்றுக்கொன்று வெகு தூரம் விலகிவிட்டன.

*****
பாதி உலகம் அறியாமையால் துன்புறுகிறது; மீதி உலகம் புத்திசாலித்தனத்தால்!

25.8.1988 தேதியிட்ட கடிதம்!

ருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கடிதத்தை இன்றுவரை பத்திரமாக வைத்திருந்து, ‘இதையும் பிளாகில் போடுடா’ என்று கொடுத்தார் என் அப்பா. என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லித் தொடர்ந்து வற்புறுத்தி வந்த அவரின் கடிதத்துக்கு நான் எழுதிய பதில் கடிதத்தின் நீளம் ஃபுல்ஸ்கேப் பேப்பரில் 24 பக்கம். அதை அத்தனையும் இங்கே போடுவது சாத்தியமில்லை என்பதால், எடிட் செய்து சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.

ன்புள்ள அப்பா, அம்மாவுக்கு,

ரவி அநேக நமஸ்காரங்கள். நலம். நலமறிய ஆவல்.

உங்கள் கடிதம் கிடைத்தது. திருமணம் பற்றித் தொடர்ந்து விசாரித்து எழுதுவதால், கீழ்க்கண்டவற்றை எழுதுகிறேன்.

மதம், சம்பிரதாயம், பகுத்தறிவு, மூட நம்பிக்கை எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள். நேரடியாகத் திருமணம் என்பது என்ன என்கிற விஷயத்துக்கு வருவோம்.

திருமணம் என்பது இரு மனம், இரு உடல் ஒன்று சேர்கிற வைபவம். ஆண் பெண் உறவு முறையை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர, நமது மூதாதையர்கள் சடங்கு, சம்பிரதாயம், அக்னி, ஹோமம் எனப் பலவற்றை ஏற்படுத்தினார்கள்.

எதிரே வரும் பெண் திருமணமானவள் என்று அவள் கழுத்துத் தாலி மூலம் அறிந்து ஆண்கள் ஒதுங்கிச் செல்லவேண்டும் என்பதற்காகப் பெண்ணுக்குத் ‘தாலி’ அணிவித்தார்கள். எதிரே வரும் ஆண் திருமணமானவன் என்று அறிந்து பெண்கள் விலகி நடக்க, ஆணின் காலில் ‘மெட்டி’ அணிவித்தார்கள். ஆண் நிமிர்ந்தே நடப்பவன் என்பதால், அவன் கண்களில் படும்படியாகத் தாலி; பெண் தலை குனிந்தபடியே நடப்பவள் என்பதால், அவள் பார்வையில் படும்படியாக ஆணின் கால் விரலில் மெட்டி. இது சம்பிரதாயம்.

ஆனால், ஆண் என்ன செய்தான்? மெட்டி அணிய அசூயைப்பட்டு, அதையும் பெண்ணிடம் தள்ளிவிட்டான். கால் விரலில் மெட்டி அணியவே அசிங்கப்பட்ட ஆண், ஒரு பெண்ணின் கழுத்தில் துரைத்தனமாய்த் தாலி கட்டிய கையோடு, வந்திருக்கும் கூட்டத்தாரைப் பெருமிதமாய்ப் பார்ப்பது திமிர் இல்லையா? ‘இப்போதிலிருந்து இவள் என் அடிமை’ என்று வந்திருப்பவர்களுக்கு அவன் சொல்லாமல் சொல்லவதல்லாமல் இச் செய்கைக்கு வேறு என்ன அர்த்தம்?

தாலி அணிவிப்பது, ’என்றும் உன்னைக் கைவிடேன்’ என்று உறுதி கொடுப்பதான உயர்ந்த நோக்கத்தின்பாற்பட்டதாம்! தாலியானது பெண்ணின் மார்பில் அசைந்து அசைந்து படும்போதெல்லாம், ‘உன்னைக் காப்பாற்ற உன் கணவன் இருக்கிறான்’ என்று அது அவளுக்குத் தைரியம் சொல்லுமாம். சமீபத்தில் நான் பார்த்த திரைப்படமொன்றில் வந்த முட்டாள்தனமான வசனம் இது.

இன்று எத்தனைப் பெண்கள் வேலைக்குப் போய்த் தங்களையும் காப்பாற்றிக்கொண்டு, தன் கணவனையும் சேர்த்துக் காப்பாற்றி வருகிறார்கள்! அப்படியானால் அவனுக்குத் தைரியம் சொல்ல, அவளல்லவா அவனுக்குத் தாலி கட்டவேண்டும்?

அதெல்லாம் இல்லை. தாலி கட்டுவதென்பது ஆணின் ஆதிக்க வெறி. ‘பெண்ணே, நீ என்னைவிட மட்டம்’ என்று சொல்லி ஆனந்தப்படுகிற மனோவியாதி. பசுவுக்கு மூக்கணாங்கயிறும், பெண்ணுக்குத் தாலியும் ஒன்றேயல்லாமல் வேறென்ன?

பெண்களை ஒருபுறம் தெய்வமென்றும், தாய்க்குலமென்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டே, இன்னொருபுறம் அவர்களை ஏமாற்றுவதும், அடிப்பதும், அடிமைப்படுத்துவதுமே ஆண்களின் வேலையாகப் போய்விட்டது. அனுமார் என்று கும்பிட்டுக்கொண்டே, குரங்கை இழுத்துப் போய் தெருவில் வித்தை காட்டிப் பிச்சை எடுக்க வைக்கவில்லையா?

பெண்கள் தெய்வங்கள் இல்லை; மிருகங்களும் இல்லை. மனுஷிகள். அந்த மரியாதையை அவர்களுக்கு ஆண்கள் ஒழுங்காகத் தந்தால் போதும்! தாலி புனிதம் என்று புரட்டுவாதம் பேசிப் பெண்களை ஏமாற்றி, லைசென்ஸ் வில்லை கட்டிய நாய்கள் மாதிரி இனியும் பெண்களைத் தாலியுடன் அலைய விடவேண்டாம். ‘அவர்களே விரும்பி ஏற்கிறார்களே, அப்புறம் உனக்கென்ன?’ என்று கேட்காதீர்கள். நுகத்தடியைத் தூக்கியதும், தானாகவே அதன் கீழ் தன் கழுத்தைக் கொண்டு வருகிற வண்டிமாடுகள் மாதிரிப் பெண்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.

எனக்குத் தாலி கட்டுவதில் உடன்பாடில்லை. அருவருப்பாக இருக்கிறது. நமது வைதிகச் சடங்குகளில்கூட ‘சப்தபதி’ என்கிற சடங்குதான் உண்டே தவிர, தாலி கட்டும் வழக்கம் இல்லை. அது இடையில், ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆண்களால் நுழைக்கப்பட்ட சம்பிரதாயம்.

இப்படியெல்லாம் நான் பேசுவதைக் கேட்டுவிட்டு, “ஏதேது... நீ பேசறதைப் பார்த்தா, நீயே ஒரு பெண்ணைப் பார்த்து வெச்சிருப்பே போலிருக்கே?” என்றார் மாமா. இல்லை. அப்படி எதுவும் நானே ஒரு பெண்ணைப் பார்த்து வைக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அதை உங்களிடமிருந்து மறைக்கிற அளவுக்கு என் மன முதிர்ச்சி குன்றிப் போய்விடவில்லை.

நிதானமாய்ப் பாருங்கள். அவசரம் ஒன்றுமில்லை. அதற்குள் இந்தப் பத்திரிகைத் துறையில் நானும் சற்று அழுத்தமாகக் காலூன்றிக் கொள்கிறேன்.

ஆனால், தாலி கட்டுவதுதான் கல்யாணம் என்றால், அப்படியொரு கல்யாணமே எனக்குத் தேவையில்லை. சட்டபூர்வமாகப் பதிவு செய்துகொண்டு, சிக்கனமாய் வீட்டில் ஒரு பாயசம், பருப்பு. முடிந்தது திருமணம் என்று இருக்கவேண்டும்.

திருமணத்துக்கெனப் பெண் வீட்டார் செலவிட உத்தேசித்திருக்கும் பணத்தைப் பெண் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடச் சொல்லுங்கள். நாளைக்கு அவளுக்கு உதவும். எனக்கு ஒரு பைசாவும் வேண்டாம்.

மற்றவை உங்கள் பதில் பார்த்து.

அன்புடன், ரவிபிரகாஷ்.

டைசியில் அந்தச் சோகத்தை ஏன் கேட்கிறீர்கள்? எட்டு வருட காலம் போராடியும் என் நிபந்தனைகளுக்கு எந்தப் பெண் வீட்டாரும் சம்மதிக்காமல், எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறதே என்பதால், வேறு வழியின்றி, என் 36-வது வயதில் தாலி கட்டித்தான் கல்யாணம் செய்துகொண்டேன். மாங்கல்யம் தந்துனானேனா, மமஜீவன ஹேதுனா...

*****
எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தாங்கள் மாறுவதை அல்ல!

தொகுதிக்கு வேணும் ஒரு தகுதி!

ண்பர் வேணுகோபால் எனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியிருந்தார் (எனக்கு இ-மெயில் அனுப்புறவங்க எல்லாருமே நண்பர்கள்தான்!). அதில்...

‘உங்க ஏடாகூட கதைகள் புத்தகம் வாங்கிப் படிச்சேன். அதுல, கிட்டத்தட்ட 300 சிறுகதைகள் எழுதியிருக்கிறதா உங்களைப் பற்றிய குறிப்பு சொல்லுது. இத்தனைக் கதைகள் எழுதியிருக்கிறவர் சிறுகதைத் தொகுதி எதுவும் வெளியிட்ட மாதிரி தெரியலையே! ஏன் வெளியிடலை? அல்லது, வெளியிட்டு எனக்குத்தான் தெரியலையா? அப்படியிருந்தா அடியேனை மன்னிக்கவும்!’ என்று எழுதியிருந்தார்.

மன்னிக்கவாவது..! சிறுகதைத் தொகுதி ஏன் வெளியிடலைன்னு ஒருத்தர் உரிமையோட கேக்கறதே சந்தோஷமான விஷயமாச்சே!

நண்பர் வேணு (ரொம்ப நெருங்கிட்டார்) சொல்வது நிஜம்தான். சிறுகதைத் தொகுதி எதுவும் நான் வெளியிடவில்லை. ஏன்?

முதல் காரணம் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் மாதிரியெல்லாம் எழுத்தாளன்னு கம்பீரமா சொல்லிக்கிற அளவுக்குச் சமுதாயத்தைப் புரட்டிப் போடற மாதிரி எதையும் நான் எழுதிடலை.

இரண்டாவதாக சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, அனுராதா ரமணன் மாதிரியெல்லாம் எனக்கென்று வாசகர் வட்டம் எதுவும் உருவாகவில்லை. சாவியில் நான் பணியாற்றிய எட்டு வருடங்களில் வாரத்துக்கு மூன்று, நான்கு கதைகள் வெளியானால் அதில் ஒரு கதை என்னுடையதாக இருக்கும். நானே பொறுப்பாசிரியராக இருந்துகொண்டு நானே என் கதையை எப்படிப் பிரசுரித்துக்கொள்வது என்கிற கூச்சம் காரணமாகவும், நேர்மை(!) காரணமாகவும் வெவ்வெவ்வெவ்வேறு புனைபெயர்களில் எழுதித் தள்ளினேன். சூர்யகலா, சந்திரகலா, வைஷ்ணவி, ராஜ்திலக், உஷாபாலு, உஷாரவி, ஆர்.ஷைலஜா, ரஜ்னீஷ், சீதாநரசிம்மன், ஜெயஸ்ரீநாராயணன், ராஜா மகள், என்னார், ஐஸ்... எனத் தொடரும் அந்தப் புனைபெயர் பட்டியல் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்த சர்வஜித் வரையில் வெகு நீளமானது. சகுந்தலா நடராஜன், கோபி, ஜெய்குமாரி, ரேவதி ராஜேந்தர் என அந்தந்த வாரம் மனசுக்கு என்ன பெயர் தோன்றுகிறதோ அந்தப் பெயரில் என் கதையை வெளியிட்டுவிடுவேன். வாசகர் வட்டம் உருவாகாததற்கு இது முக்கியக் காரணம்.

ஆனால், அது பற்றி நான் இன்றைக்கும் வருத்தப்படவில்லை. ‘ஆமா, பெரிய அமரகாவியமா படைத்துவிட்டோம்!’

மூன்றாவது, சிறுகதைத் தொகுதி போட்டால் யாருக்காவது பயன் இருக்க வேண்டும். சமுதாயத்துக்கு அதனால் ஒரு பயனும் இல்லை என்பது தெளிவு. சரி, எனக்காவது ஏதாவது பயன் உண்டா என்றால், அதுவும் இல்லை. ‘நானும் நாலு சிறுகதைத் தொகுதி வெளியிட்டிருக்கிறேனாக்கும்’ என்று அறிந்தவர் தெரிந்தவரிடமெல்லாம் ஜம்பமடித்துக்கொள்ளத்தான் உதவும். நானே அவற்றைக் காசு கொடுத்து வாங்கி, ஆட்டோகிராப் போட்டு, யாருக்காவது கல்யாணம் கார்த்தி என்று வந்தால், பணத்துக்குப் பதிலாக இதைக் கொண்டு போய் அவர்கள் தலையில் கட்டிவிட்டு வரலாம். வேறு ஒரு பிரயோஜனமும் இல்லை.

நான்காவதாக, ‘என் சிறுகதைத் தொகுதியை நீங்கள் வெளியிடுகிறீர்களா?’ என்று எந்தப் பதிப்பகத்தாரிடமும் போய் பல்லிளித்து நிற்க நான் தயாராக இல்லை.

அப்படியும் தானாகவே ஒரு பதிப்பகம் என் சிறுகதைத் தொகுதியை வெளியிட முன்வந்தது. ‘ஒரு இருபது மணியான கதைகளைப் பொறுக்கிக் கொடுங்கள். இந்த புக் ஃபேருக்குக் கொண்டு வந்துவிடலாம்’ என்று பரபரத்தது. ‘எனக்கு எவ்வளவு தருவே?’ என்று நான் கேட்கவில்லை. ‘ஏதோ அவர்களாக ஆர்வப்பட்டுப் புத்தகம் போடுகிறேன் என்கிறார்களே! அதற்கு நம்மால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுப்போம்’ என்று என் கதைகளைத் தேடி எடுத்து (உபயம்: என் அப்பா) அவர்களிடம் கொடுத்தேன்.

அது மட்டுமல்ல, சாவி அவர்களிடம் அணிந்துரை வாங்கினேன். தவிர, ஒவ்வொரு சிறுகதைக்கும் தனித்தனியாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், மணியம் செல்வன், ஜெயராஜ், கிரேஸி மோகன், திலகவதி ஐ.பி.எஸ்., எனப் பலதரப்பட்ட வி.ஐ.பிக்களிடம் சுருக்கமான விமர்சனம் வாங்கினேன். எல்லாவற்றையும் அந்தப் பதிப்பகத்தாரிடம் கொடுத்து, ஃபைனல் புரூஃப் வரைக்கும் பார்த்துக் கொடுத்தேன்.

அதன்பிறகு அதை நானும் மறந்துவிட்டேன். அவர்களும் மறந்துவிட்டார்கள். புக் ஃபேர் மட்டும் மறக்காமல் வந்து போயிற்று.

புக் ஃபேருக்கு முன்னதாக நான் ரொம்ப நம்பிக்கையாக, “என்ன, புத்தகமெல்லாம் ரெடியாயிடுச்சா?” என்று கேட்டேன். “அது வந்து சார்... இந்த முறை கொண்டு வர முடியலை. கொஞ்சம் பண நெருக்கடி. ஜூன்ல கண்டிப்பா கொண்டு வந்துடலாம்” என்றார் குழலூதும் அந்தப் பதிப்பக உரிமையாளர்.

“இருக்கலாம். பண நெருக்கடியாகவே இருக்கலாம். ஜனவரியில் கொண்டு வர முடியாமல் இருக்கலாம். ஜூன்ல கண்டிப்பா கொண்டு வரவும் செய்யலாம். ஆனா, இதையெல்லாம் நானா போன் போட்டுக் கேட்டப்புறம்தான் சொல்றதா? வேண்டாம். நீங்க என் கதைகள் எதையும் புத்தகமா போட வேண்டாம். புத்தகமா போடுங்கன்னு நான் உங்க கிட்டே வந்து அழலை! இப்பவே வரேன். நான் கொடுத்த அத்தனையையும் என் கிட்டே திருப்பிக் கொடுத்துடுங்க” என்றேன்.

சொன்னபடியே போனேன். திரும்பப் பெற்றேன். வீட்டுக்கு வந்து பரண் மீது எங்கேயோ அந்தச் சிறு மூட்டையைத் தூக்கிப் போட்டேன். தலைமுழுகி விட்டேன்.

புத்தகம் என்னாயிற்று என்று கேட்பதற்கு சாவி சார் இல்லை. அடுத்த சில மாதங்களில் அமரராகிவிட்டார். அவர் ஆவலோடும் அபிமானத்தோடும் எழுதிக் கொடுத்த அணிந்துரையைப் புத்தகத்தில் அவருக்கு நான் காட்டி மகிழக்கூடிய பாக்கியம் எனக்கு வாய்க்கவேயில்லை.

அதன்பிறகு, சிறுகதைத் தொகுதி வெளியிட வேண்டும் என்ற யோசனையே எனக்கு வரவில்லை. அப்படியே யாராவது புத்தகம் போடுகிறேன் என்று வந்தாலும், திருவிளையாடல் தருமி மாதிரி, ‘ஐயோ! அவன் இல்லை... வரமாட்டான்... நம்பாதே!’ என்று எகிறிக்குதித்து ஓடிவிடுவேன். ஓவியர் மணியம் செல்வன் என் சிறுகதைத் தொகுதி வராமல் நின்று போனதை அறிந்து, “வானதி பதிப்பகத்தாரிடம் சொல்லிப் போடச் சொல்கிறேன். அதை அப்படியே கொண்டு வாருங்கள்” என்றார். “ஆஹா! பேஷாகச் செய்கிறேன்” என்று சொன்னதோடு சரி! இன்றுவரை கொண்டு போகவில்லை.

ஆக, நமக்கு ‘சிறுகதைத் தொகுதிப் புத்தகம் பிராப்தி அஸ்து!’

*****
ஒன்றைச் செய்து முடிக்கக் கடைசி நேரம் என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால், அது கடைசி வரை செய்து முடிக்கப்படாமலே போய்விடும்!

நீரும் நெருப்பும்

பிரபல எழுத்தாளரும் வீணை வித்வானுமான திருமதி கீதா பென்னட், என் பிளாக்குகளைத் தொடர்ந்து படித்துப் பாராட்டி வருபவர். அவர் சமீபத்தில் எனக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலுக்கான பதிலை இன்றுதான் அவருக்கு அனுப்பினேன். அதுவே இன்றைய ‘என் டயரி’யின் பிளாக் விஷயமாகிவிட்டது.

இதோ...

ன்புள்ள திருமதி கீதாபென்னட் அவர்களுக்கு,

வணக்கம். தங்களுக்கும் ‘நீரும் நெருப்பும்’ படம் பிடிக்கும் என்று ஒரு தகவலாகத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். எனக்கு அந்தப் படம் பிடித்ததற்கான காரணத்தை அறிய இத்தனை ஆவலாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை.

பொதுவாக எனக்கு எம்.ஜி.ஆர். படங்களே பிடிக்காது. அடிப்படையில் நான் ஒரு சிவாஜி ரசிகன். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர். படம் ’குமரிக்கோட்டம்’. அது ரிலீசான சமயத்தில் நான் எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் படம் எனக்குச் சற்றும் பிடிக்கவேயில்லை. அது ஜீரணமாகவேண்டும் என்பதற்காக அடுத்த காட்சியிலேயே சிவாஜியின் ’தங்கைக்காக’ பார்த்தவன் நான்.

என்றாலும், ’குமரிக்கோட்டம்’ படப் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ‘எங்கே அவள்... என்றே மனம்... தேடுதே ஆவலாய்...’, ‘நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...’ இரண்டும் எனக்கு அத்தனைப் பிடிக்கும். பாடகர்களில் நான் பெரிதும் டி.எம்.எஸ். ரசிகன். சின்ன வயதிலிருந்தே அவரது பாடல்களைக் கேட்டு, உண்டு, சுவாசித்து வளர்ந்தவன். எனக்கு நினைவு தெரிந்து, ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி...’, ‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்...’ போன்ற எம்.ஜி.ஆர். படப் பாடல்களையும், அவை டி.எம்.எஸ். பாடியவை என்பதால் ரசித்திருக்கிறேன்.

அந்த வகையில் ’குமரிக்கோட்டம்’ படப் பாடல்களும் இனிமையாக இருக்கவே, அதன்பின் எம்.ஜி.ஆர். படங்களையும் பார்க்கத் தொடங்கினேன். பல படங்கள் பார்த்திருக்கிறேன். அவற்றில் எனக்குப் பிடித்தவை நீரும் நெருப்பும், நல்ல நேரம், மலைக்கள்ளன் ஆகியவை. ’பல்லாண்டு வாழ்க’ படத்தையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

’பல்லாண்டு வாழ்க’ படத்தில் பல அபத்தங்கள் இருந்தாலும், கதை மனதுக்கு இதமாக இருந்தது. அதில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் மென்மையாக இருந்தது. எனவே, அந்தப் படம் பிடித்தது.

மலைக்கள்ளனில் நிஜமாகவே எம்.ஜி.ஆர். நடிப்பு அருமையாக இருந்தது.

’நல்ல நேரம்’ யானைகளுக்காக ரசித்துப் பார்த்த படம்.

’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.

நான் ரசித்துப் பார்த்து என்ன..? அந்தப் படம் ஃப்ளாப்! அது பெரும்பாலானோருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஒரு படத்தில் ஏதாவது ஒரு அம்சம் நன்றாக இருந்துவிட்டாலும் போதும், என்னால் அதை ரசிக்க முடியும். ரசிப்பேனே தவிர, அது சிறந்த படமா, இல்லையா என்பது வேறு விஷயம்! நன்றாக ஓடிய எத்தனையோ படங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கென்ன செய்வது?

அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார். பொதுவாக எம்.ஜி.ஆர். படம் எதுவும் அதிகம் ஃப்ளாப் ஆனதில்லை. ‘நீரும் நெருப்பும்’ ஏன் ஓடவில்லை என்று எனக்குப் புரியவில்லை.

இந்தப் படம் மட்டுமல்ல, நான் ரசித்துப் பார்த்த பல படங்கள் ஃப்ளாப் ஆகியிருக்கின்றன. ஸ்ரீதர் இயக்கிய ‘ஓ மஞ்சு’ படமும் அவற்றில் ஒன்று.

கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை, ரத்தக்கண்ணீர் தவிர, பொதுவாக அன்றைக்கு நான் ரொம்ப ரசித்துப் பார்த்த பல படங்களை இன்றைக்குப் பார்க்கிறபோது அத்தனை ரசனையாகத் தெரியவில்லை. காரணம், கால மாற்றம். ’பாலும் பழமும்’ படத்தை அத்தனை ரசித்துப் பார்த்திருக்கிறேன். அதே போல் ‘பாச மலர்’. அவற்றைச் சமீபத்தில் பார்த்தபோது, போரடித்தன.

நீரும் நெருப்பும், ஓ மஞ்சு உள்ளிட்ட படங்களும்கூட இன்றைக்குப் பார்த்தால், ஒருவேளை போரடிக்குமோ என்னவோ! ஆனால், அவற்றை மீண்டும் ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.

*****

வாழ்க்கை ஒரு விருந்து. அதை ரசியுங்கள். மெனுவைப் படித்தே நேரத்தைப் போக்காதீர்கள்!

ஸ்யாம்ராஜ்யம்!

ன் இனிய நண்பர்களில் ஒருவர் ஓவியர் ஸ்யாம்.

சிலரைப் பாராட்ட எனக்கு அலுப்பதே இல்லை. காரணம், அவர்களின் தனித் திறமை என்னை அந்த அளவுக்குப் பிரமிக்கச் செய்கிறது. அப்படி நான் எப்போதும் மதித்துப் போற்றும் ஒரு திறமைசாலி - ஓவியர் ஸ்யாம்.

இவரை எனக்கு சாவி காலத்திலிருந்தே தெரியும். அப்போது குமுதம் பத்திரிகையில் இவர் வரையும் படங்களைப் பார்த்துப் பிரமித்து, சாவி இதழுக்கும் ஓரிரு படங்கள் வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன். பின்னர் அவர் குமுதம் பத்திரிகையிலேயே வேலைக்குச் சேர்ந்திருந்தார்; வெளிப் பத்திரிகைக்கு வரைய அனுமதி இல்லை என்பதாலோ அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை... தொடர்பு விட்டுப் போயிற்று.

விகடனில் வேலைக்குச் சேர்ந்த பின்னர், இவரை எப்படியாவது இந்த இதழுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அப்போதெல்லாம் விகடனுக்குள் ஒரு புதிய ஓவியர் சட்டென்று புகுந்துவிட முடியாது. ஆனாலும், இவர் திறமையை எப்படியாவது் பயன்படுத்திக்கொண்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

நான் விரும்பியது ஒரு சில வருடங்களில் நிறைவேறியது. என் விருப்பப்படி ஓவியர் ஸ்யாமிடம் படம் வாங்கிப் போட ஒப்புதல் கிடைத்தது. அதன்பின் ஸ்யாமிடம் பேசினேன். “நீங்கள் குமுதத்துக்கு மட்டும்தான் போடுவீர்களா? விகடனுக்குப் போட மாட்டீர்களா?” என்று கேட்டேன். “இல்லை சார், நிறைய தடவை முயற்சி பண்ணேன். விகடனில் சான்ஸ் கிடைக்கலை. சரி, நமக்கு அதிர்ஷ்டமில்லை போலன்னு நினைச்சு விட்டுட்டேன்” என்றார்.

“இல்லை. நீங்க விகடனுக்கு வரையறீங்க. உடனே ஒரு சிறுகதை அனுப்பறேன். வரைஞ்சு கொடுங்க” என்று அன்றைக்கே அவருக்கு ஒரு சிறுகதை அனுப்பினேன். வரைந்து கொடுத்திருந்தார். அது விகடனில் பிரசுரமாயிற்று. ஆரம்பத்தில் நான்கைந்து இதழ்களுக்கு ஒரு முறை விகடனில் அவர் வரைந்த படம் வரும். அது பின்னர் இரண்டு இதழ்களுக்கு ஒரு முறை என்றாகி, இப்போது விகடனில் ஸ்யாம்ராஜ்யம்தான்!

அவர் வரையும் பெண்கள், பார்த்ததுமே காதலிக்கத் தோன்றும்படி அத்தனை அழகாக இருப்பார்கள். அடுத்து, அவர் வரையும் கோணங்கள். ஒரு சினிமா ஒளிப்பதிவாளர் காமிரா ஆங்கிள் வைக்கிற மாதிரி, அவர் வரையும் படங்கள் புதுசு புதுசான கோணங்களில் பார்க்கவே ரசனையாக இருக்கும். அவர் வரையும் பாணியும் படத்துக்குப் படம் வித்தியாசப்படும். ஒரு முறை நூல் நூலாக இழுத்த மாதிரி ஒரு படம் வரைந்து தந்திருந்தார். அத்தனை நூல் கோடுகளை எப்படித்தான் போட்டாரோ என்று என்னால் கற்பனை கூடச் செய்ய முடியாதிருந்தது. அவரிடமே கேட்டுவிட்டேன். “சிவப்பா காசித்துண்டுன்னு சொல்வோமில்லையா, அதன் நூல் நுனிகளைக் கலர்ல தோய்ச்சு அப்படியே இழுத்து இழுத்துப் போட்டேன்” என்று விளக்கினார். வல்லவனுக்கு நூலும் ஆயுதம்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஓவியர் ஸ்யாமின் பரம ரசிகர். அடிக்கடி போன் செய்து ஸ்யாமின் ஓவியங்களைப் பாராட்டிச் சொல்வார். ஒரு முறை அவரிடம் படக் கதை ஒன்று கேட்டிருந்தேன். “ஸ்யாம் படம் வரைவதாக இருந்தால் படக் கதை தருகிறேன். காரணம், அந்தக் கதைக்கு ஸ்யாமால்தான் படம் போட முடியும்” என்றார். அதன்பின், அந்தப் படக் கதையின் கேரக்டர்களை அவரே ஓவியரிடம் நேரில் விளக்கிச் சொல்லட்டும் என்று ஸ்யாமை சுஜாதாவிடம் அழைத்துப் போயிருந்தேன். ஸ்யாமின் படங்களை அவர் எத்தனை ரசித்திருக்கிறார் என்பதை அன்றுதான் அறிந்தேன்.

இத்தனை திறமையுள்ள ஓவியர் ஸ்யாம் ஏன் திரைத்துறைக்குப் போகவில்லை என்பது என் ஆதங்கம். அவரிடமே கேட்டேன். அதில் அவருக்கு அத்தனைப் பிடித்தமில்லை. சுதந்திரமாகத் தன் விருப்பப்படி வேலை செய்ய முடியவில்லை என்பதுதான் காரணம் என்றார். சினிமா என்பது ஒரு டீம் வொர்க். அதில் தன் தனித்தன்மை அடிபட்டுப் போகிறது என்று நினைக்கிறார். தவிர, அது ஒரு டென்ஷனான வொர்க். ஸ்யாம் சற்று ஜாலியான ஆசாமி. தன் போக்கில் இயங்க வேண்டும் என்று விரும்புகிறவர். அதற்கு அங்கே குந்தகம் ஏற்பட, வேண்டாம் என்று விலகிவிட்டதாகச் சொன்னார். ஆக, திரைத் துறைக்குப் பெரிய நஷ்டம்.

ஸ்யாம் ஃபேஷன் ஷோக்களில்தான் இப்போது ஆர்வம் செலுத்தி வருகிறார். நகைக்கான ஃபேஷன் ஷோ, உடைக்கான ஃபேஷன் ஷோ மாதிரி ஓவியங்களுக்கான ஃபேஷன் ஷோக்களும் நடக்கின்றன. அதில் கேட்வாக் செய்யும் பெண்கள் தங்கள் உடலில் விசித்திரமான, புதுமையான ஓவியங்கள் வரைந்துகொண்டு ஒளிவெள்ளத்தில் நடந்து வரும்போது, மிக அற்புதமாக இருக்கும். அதற்கான இசை, அலங்காரம், நடைப் பயிற்சி, கலந்துகொண்ட மாடல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பரிசுகள் உண்டு; விருதுகள் உண்டு.

மாடல்கள் தங்கள் உடம்பில் வரைந்துகொள்ளும் ஓவியங்களும் மிகப் புதுமையாக இருக்கும். உதாரணமாக, ஒரு மாடல் நடந்து வரும்போது, மார்புகள் லேசாகக் குலுங்குமல்லவா... ஓவியர் அவள் மார்புகள் மீது புறாக்கள் போல் வரைந்திருந்தால், அவள் ஒளி வெள்ளத்தில் நடந்து வரும்போது புறாக்கள் சிறகடிப்பது போன்று தோற்றம் கொடுக்கும். ஸ்யாம் இப்படியான புதுமை ஓவியங்கள் வரைவதில் கில்லாடி. ஒருமுறை அவர் ஒரு மாடல் உடம்பில் ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்குவது போல, உள் எலும்புகள் தெரிவது போலத் தத்ரூபமாகப் படம் வரைந்து அனுப்பினாராம். அந்த மாடல் ஒளிவெள்ளத்தில் கேட்வாக்கி வரும்போது அந்த அசைவில், தொங்கிய சதை ஆடுவது போல, கையே பிய்ந்து கீழே விழுந்துவிடும் போல, உள் எலும்புகள் அசைவது போல ஒரு மாயத்தோற்றம் கிடைக்க, பார்வையாளர்களிடமிருந்து பலத்த கை தட்டல் எழுந்ததாகச் சொன்னார்.

என்றாலும், அத்தகைய ஓவியங்களுக்கென தான் பிரத்யேக ஓவியப் பயிற்சி பெறவில்லை, சான்றிதழ் இல்லை என்பதால், என்னதான் கை தட்டல் வாங்கினாலும் இவரை மேடையேற்றிக் கௌரவிப்பதோ, விருது கொடுப்பதோ கிடையாதாம். ஆனால், இவர் ஓவியம் வரைந்த மாடல், போட்டியில் வென்று பரிசு பெறுவார். அந்த ஃபேஷன் ஷோவை நடத்தும் ஏஜெண்ட்டிடமிருந்து கமிஷன் போக ஓவியர் ஸ்யாமுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை கிடைக்குமாம். கோவா, மும்பை என எங்கே ஃபேஷன் ஷோ நடந்தாலும் அதை நடத்தும் ஏஜெண்ட்டிடமிருந்து, அல்லது அதில் பங்கேற்கும் மாடலிடமிருந்து ஸ்யாமுக்குப் போன் வந்துவிடுமாம். இவரும் அந்தச் சமயத்தில் அங்கே சென்று, ஃபேஷன் ஷோ நடக்கும் அரங்கத்துக்கு சில பர்லாங்குகள் தள்ளி ஓர் அறை எடுத்துக்கொண்டு தங்கி, தன்னை அழைத்த குறிப்பிட்ட அந்த மாடல் உடம்பில் படம் வரைந்து தந்துவிட்டு, ஷோவை பார்வையாளர்களில் ஒருவராகப் பார்த்து ரசித்துவிட்டு வந்துவிடுவாராம்.

உடம்பில் வரையும் பெயிண்ட் பிரத்யேகமானதா என்று கேட்டேன். “ஆமாம். அது சாக்லெட் க்ரீம் போன்றது. வழித்துச் சாப்பிட்டுவிடலாம்” என்றார்.

“மாடல்கள் நம்மளை மதிச்சுக் கூப்பிடறாங்க, சார்! நல்ல வருமானமும் கிடைக்குது. எந்த டென்ஷனும் இல்லை. நான் சுதந்திரமா, சந்தோஷமா இதைப் பண்ணிட்டிருக்கேன்” என்றார் திருப்தியான குரலில்.

ஒரு மனிதனுக்குத் தேவையானது திருப்தியும் சந்தோஷமும் நிம்மதியும்தான்! அந்த மூன்றும் ஸ்யாமிடம் இருக்கின்றன.

வாழ்க ஸ்யாம்!

*****

செய்யும் தொழிலில் ஆர்வமும் சந்தோஷமும் இருந்தால், திறனும் கச்சிதமும் தாமே வரும்!

இந்த நாள் இனிய நாளா?

யாரெல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்?

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள். தவிர, வீடுகளில் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாட்களை ஒரு குறிப்பிட்ட வயசு வரையில் பெற்றோர்கள் ஆசை ஆசையாகக் கொண்டாடுவார்கள். மற்றபடி குப்பனும் சுப்பனும் பிறந்த நாள் கொண்டாடியதாகத் தெரியவில்லை.

தொழிலதிபர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதன் காரணம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் ஓர் உத்தி அது! பிசினஸ். சினிமா நட்சத்திரங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதன் காரணம் விளம்பரம் மற்றும் சினிமா வாய்ப்புத் தேடும் ஒரு வலை. பப்ளிசிட்டி. அரசியல்வாதிகள் பிறந்த நாள் கொண்டாடுவதில் நிதி திரட்டுவது, கறுப்பை வெள்ளையாக்குவது, விளம்பரம் தேடுவது எனப் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

சமீபத்தில் கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சென்னை, எல்.ஐ.சி. அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஹோர்டிங்கில், ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்ற பாடல் வரிகள் இருந்ததைப் பார்த்துச் சிரித்தேன். அது கலைஞரை எதிர்த்து காட்சிக்குக் காட்சி இரட்டை இலைகளைக் காட்டி, எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படப் பாடல். அதைக் கூச்ச நாச்சமில்லாமல் கலைஞரின் பிறந்த நாள் வாழ்த்தாக உபயோகித்துக்கொள்ள எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

சினிமாக்காரர்களின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ, ரசிகர்கள் ஆர்வமாகக் கொண்டாடுகிறார்கள். என்னதான் ரஜினி தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரசிகர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி, வருடம் தவறாமல் ரிஷிகேஷ் போய்க்கொண்டிருந்தாலும், அவர்களின் ரசிகர்கள் தோரணம் கட்டி, பெரிய ஸ்பீக்கர்கள் வைத்து, பாட்சா, படையப்பா பாடல்களை ஓடவிட்டு, அன்னதானம் செய்து கலக்கத் தவறுவதில்லை. கமல்ஹாசனின் ரசிகர்கள் தங்கள் நட்சத்திர அபிமானத்தை, கமல் பிறந்த நாளன்று ரத்த தானம் கொடுத்துக் காட்டிக் கொள்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் இன்றைக்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் எம்.ஜி.ஆர். பாடல்கள் தெருவுக்குத் தெரு, முக்குக்கு முக்கு அலறும். அத்தனையும் டி.எம்.எஸ். பாடிய பாடல்கள். மறந்தும் எஸ்.பி.பி., சீர்காழி, பி.பி.எஸ் பாடிய பாடல்கள் ஒலிபரப்பப்படா! காரணம், அவை எம்.ஜி.ஆரை நினைவூட்டுவதில்லை. ஒவ்வொரு தெருவிலும் ஒரு சின்ன பந்தல் போட்டு, ஒரு ஸ்டீல் நாற்காலியில் எம்.ஜி.ஆரின் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டு, பக்கத்தில் நீர்மோர் பானையோ, குடிநீர் பானையோ வைக்கப்பட்டு இருக்கும்.

சிவாஜி பிறந்த நாள் அத்தனை படாடோபமாகக் கொண்டாடப்படுவதில்லை. ஏதேனும் சினிமா விழாக்களில், இசை நிகழ்ச்சிகளில், எஃப்.எம் ஒலிபரப்புகளில் அவரது பாடல்கள் ஒலிபரப்பப்படுவதோடு சரி!

ஜனவரி 17 - எம்.ஜி.ஆர். பிறந்த நாள், அக்டோபர் 1 - சிவாஜி பிறந்த நாள், ஜூன் 3 - கலைஞர் பிறந்த நாள், நவம்பர் 7 - கமல்ஹாசன் பிறந்த நாள், டிசம்பர் 12 - ரஜினிகாந்த் பிறந்த நாள் என்று நினைவு வைத்துக் கொண்டாடி மகிழும் சாமான்ய ஜனங்களுக்கு அவர்களின் அப்பா, அம்மா பிறந்த நாள்கள் நினைவிருக்குமா, அவற்றைக் கொண்டாடி மகிழ்வார்களா என்பது சந்தேகம்தான்.

அவ்வளவு ஏன், எனக்கே என் பெற்றோரின் பிறந்த தேதிகள் தெரியவில்லை. எத்தனைக் கேவலமான விஷயம் இது!

என் குழந்தைகளின் பிறந்த நாள்கள் மட்டுமே எனக்குத் தெரியும். அவற்றை மட்டுமே சென்ற வருடம் வரையில் நான் கொண்டாடி வந்திருக்கிறேன். இருவரும் ப்ளஸ் டூ முடித்து காலேஜ் போய்விட்டால், கொண்டாட்டங்கள் நின்றுபோகும். போன வருடமே அவர்கள் அதில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. அன்றைய தினம் பள்ளியில் அவர்கள் சீருடை அணிந்து செல்லத் தேவையில்லை, பிறந்த நாள் உடை உடுத்திச் செல்லலாம் என்பது அவர்களின் பிறந்த நாள் சலுகை. இறைவணக்கத்தின்போதும் பிறந்த நாள் கொண்டாடும் மாணவரின் பெயரை மைக்கில் சொல்லி, ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடுவார்கள்.

என் மனைவியின் பிறந்த நாளும், என் பிறந்த நாளும் கடந்து போய் சில நாட்களுக்குப் பிறகே நினைவுக்கு வரும். பெரும்பாலும் நட்சத்திரப்படி கோயிலில் சிறு அர்ச்சனை என்ற அளவில் எங்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கமுக்கமாக முடிந்துவிடும். பிறந்த நாள் ஞாபகம் இருந்தால், சம்பிரதாயத்துக்குக் கொஞ்சம் பாயசம் செய்வார் என் மனைவி.

சாவியில் நான் பணியாற்றியபோது, அவரது பிறந்த நாளன்று காலையில் அவரது மகன்களும் மகள்களும் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துச் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம், ‘என்ன சார், ஒவ்வொரு வயசு ஏறும்போதும் கவலையாக இல்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? எனக்கு மட்டுமா வயது ஏறுகிறது? உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும்தான் வயது ஏறுகிறது. சொல்லப்போனால் வயது ஏற ஏற, நான் ஒரு வருடம் கூடுதலாக இந்த உலகில் வாழ்ந்துவிட்டேன் என்ற சந்தோஷம்தான் ஏற்படுகிறது’ என்றார்.

தனியார் நிறுவனங்களில் தங்கள் ஊழியர்களின் பிறந்த நாளை நினைவில் வைத்திருந்து, வாழ்த்து அட்டை தருவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. ஆனந்த விகடனிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு வழக்கம் இருந்தது.

கொண்டாடுகிறோமோ இல்லையோ, நம் பிறந்த நாளை யாராவது ஞாபகம் வைத்திருந்து வாழ்த்தினால், உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் உண்டாவது நிஜம். நம் மீதும் அக்கறைப்பட ஒருவர் இருக்கிறாரே என்ற சந்தோஷம்.

இன்று காலையில் எனக்கு HDFC வங்கியிலிருந்து ஒரு SMS வந்தது. என்னவென்று பார்த்தேன்.

Happy birthday! On your special day, we wish that peace, prosperity and happiness be with you, right through.

அட, ஆமாம்! இன்றெனக்குப் பிறந்த நாள்! ஆஹா... என் மீது அக்கறைப்பட ஒரு வங்கியே இருக்கிறது!

*****
வயது எப்போதுமே அனுபவம், பக்குவம் இவற்றோடு வரும் என்று சொல்ல முடியாது; பல சமயம் அது சிங்கம் மாதிரி சிங்கிளாகவும் வரும்!

ஜிலுஜிலு குளுகுளு விகடன்!

ளீர் ஜிலீர் என்று மாறியிருக்கிறது விகடன் அலுவலகம்! விகடன் தாத்தா பத்திரிகை வடிவமைப்பில் மட்டுமல்ல, அலுவலகக் கட்டட அமைப்பிலும் ஜிலுஜிலு குளுகுளுவென மாறிவிட்டார். ஃப்ரெஷ்ஷாக, ஜீன்ஸ் போட்ட இளைஞன் மாதிரி படு இளமையாகிவிட்டார்!

நான் சேர்ந்தபோது இருந்த விகடன் அலுவலகத்துக்கும் இப்போதுள்ள அலுவலகத்துக்கும் பிரமாண்ட மாற்றம். அன்றைக்கு மரப் படிகள், வேலைப்பாடமைந்த வாசற்கால்கள், மர மேஜைகள், மர அலமாரிகள், கிர்ர்ர்ரக் கிர்ர்ர்ரக் என்று சுழலும் தாலூகா ஆபீஸ் ஃபேன்கள், ஒவ்வொரு ஊழியரின் பின்புறச் சுவரிலும் அப்பியிருக்கும் இங்க் கறைகள், வெற்றிலைக் குதப்பலோடு பேசும் சீனியர் ஊழியர்கள், காத்திருப்போருக்கு மர பெஞ்சுகள், காலடியில் ஓடும் பெருச்சாளிகள் என அது ஒரு சுவாரசியம்!

இன்றைக்கு இருப்பது அதே விகடன் அலுவலகமா என்று திக்குமுக்காடச் செய்கிறது. ரொம்ப ஹைடெக்! ஏதோ சாஃப்ட்வேர் அலுவலகம் மாதிரி படு ரிச்சாக மிரட்டுகிறது. இத்தனைக்கும் வெளிவேலைகள் முடியவில்லை. அநேகமாக கட்டட புனருத்தாரண வேலைகள் முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் என்று நினைக்கிறேன்.

படு பந்தாவான ரிசப்ஷன் ஹால், நவநாகரிகமான நாற்காலிகள், உள்ளே நடந்துபோகும் பாதையெல்லாம் கொட்டுகிற குளிர் மழை, ஹோம் தியேட்டர் வசதி, அற்புதமான லைப்ரரி, சொகுசு நாற்காலிகள், தரையெல்லாம் வழவழக்கும் டைல்ஸ், கண்ணாடிக் கதவுகள், தரையையும் கதவுகளையும் சதா துடைத்துக்கொண்டிருக்கும் பணியாட்கள் என மினி சொர்க்கம் மாதிரி இருக்கிறது ஆபீஸ்.

டாய்லெட் ஒரு நவீனம். ஒன் பாத்ரூமுக்குப் போய் நின்றால் கிளிக் என்று சிவப்பு லைட் கண்ணடிக்கும். முடித்துவிட்டு நகர்ந்தால், தானே தண்ணீர் விட்டுக் கழுவிக் கொள்ளும். தண்ணீர் விட்டு வரக்கூடச் சோம்பேறியாகிவிட்டானே மனிதன்! டாய்லெட் உள்ளும் பக்கெட், பிளாஸ்டிக் கப் எதுவும் கிடையாது. நீளமான பைப்தான். அதன் பிடியை அழுத்தினால், தண்ணீர் பீய்ச்சிடும். தேவைப்பட்ட இடங்களில் வளைத்து வளைத்து உபயோகித்துக் கொள்ள வேண்டியதுதான். நல்லவேளை, பேப்பர் உருளை வைக்கவில்லை!

லேட்டஸ்ட்டாக, அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள். சடாரென்று கதவைத் திறந்து அலுவலகத்தின் உள்ளே வெளியார் எவரும் நுழைந்துவிட முடியாது. சுவரில் பொருத்தப்பட்ட குறிப்பிட்ட பெட்டியில் அட்டையைக் காண்பித்தால், அதில் எரியும் சிவப்பு விளக்கு மாறி ஆரஞ்சு ஒளிவிடும். பின்னர், சுட்டு விரலை அதன் மீது வைத்தால், விநாடியில் க்ரீன் சிக்னல் கிடைக்கும். கண்ணாடிக் கதவு லேசாக அதிர்ந்து, திறந்துகொண்டதைத் தெரிவிக்கும். தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தால், பின்பு கதவு தானாக மூடிக்கொண்டு பூட்டிக் கொண்டு விடும். அடுத்து வருபவரிடம் அடையாள அட்டை இருந்தால்தான் உள்ளே நுழைய முடியும்.

உள்ளே வருவதற்கு மட்டுமல்ல, வெளியே போவதற்கும் அப்படியே! சேர்மன், எம்.டி., ஆசிரியர், லைப்ரரி என எந்த அறைக்குச் செல்வதற்கும் இதே விதிப்படித்தான்! ஏதோ ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி இருக்கிறதல்லவா! உண்மைதான்.

அமரர் வாசன் இருந்து பார்க்கவில்லையே இதையெல்லாம் என்றுதான் ஆதங்கமாக இருக்கிறது எனக்கு!
*****
அடுத்தவர்களின் அடிச்சுவட்டிலேயே நடந்துகொண்டு இருந்தால், உங்கள் அடிச்சுவட்டை ஒருபோதும் பதிக்க முடியாது!

'அன்னை' என்றொரு மகாசக்தி!

அன்னையின் மகிமை பற்றி என் இன்னொரு பிளாகில் தொடர்ந்து எழுதி வருகிறேன். கேட்டது, படித்தது எல்லாம் இல்லை. எல்லாம் என் சொந்த அனுபவங்கள். சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள். நிஜம்தானா என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான சம்பவங்கள்.

இறைவன் எந்த வடிவத்தில் இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. நிச்சயமாக அப்படி ஒருவன் இருக்கிறானா என்று கூட இன்னமும் எனக்கு ஆதார பூர்வமாகத் தெரியவில்லை. ஆனால், அன்னையிடம் நான் வைத்த வேண்டுதல்கள் ஒவ்வொன்றும் மிக மிக அதிசயிக்கத்தக்க விதத்தில் பலித்து வருவது நிஜம்.

நானொன்றும் எட்டு மாடி பங்களா சொந்தமாக வேண்டும், மாதம் குறைந்தபட்சம் ரெண்டு லட்சம் ரூபாய் சம்பளமாகக் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொள்ளவில்லை. எனக்கு என்ன தகுதி என்று நான் நினைக்கிறேனோ, அது கூடக் கிடைக்கவில்லையே என்று சோர்ந்து போகிற வேளையில், அதை வேண்டுதலாக அன்னை முன் வைக்கிறேன். கண்டிப்பாக நிறைவேற்றிவிடுகிறார் அன்னை.

காக்கை அடிக்கடி உட்காருகிறது; ஒவ்வொரு முறையும் பனம் பழம் விழுகிறது!

ஒரு சின்ன சம்பவத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்...

நான் அன்னையின் பக்தனாக ஆன பின்பு, ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள மியூஸிக் வேர்ல்டில் ‘புஷ்பாஞ்சலி’ என்கிற ஒரு கேசட் வாங்கினேன். அன்னையின் மீதான பக்திப் பாடல் கேசட் அது. காயத்ரி கிரிஷ் பாடியது.

மிக உருக்கமான, பக்திப் பரவசமூட்டும் பாடல்கள் ஒவ்வொன்றும். தினம்தினம் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தோம், நானும் என் குடும்பத்தாரும்.

ஏழெட்டு மாதங்களுக்குப் பின், ‘டூ-இன்-ஒன்’னில் ஏதோ பழுதாகி, ‘புஷ்பாஞ்சலி’ கேசட் ஓடும்போது, உள்ளே எங்கோ டேப் சிக்கிக்கொண்டு, வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்டு, டேப்பைப் பிய்த்துதான் வெளியே எடுக்க முடிந்தது. முக்கால்வாசி டேப் முறுக்கப்பட்டு, மொத்தமாக வீணாகி விட்டது.

மறுநாளே, இன்னொரு கேசட் வாங்கிவிடுவது என்று ‘மியூஸிக் வேர்ல்ட்’ போனேன். கடையை முழுக்க அலசினேன். குறிப்பிட்ட அந்த கேசட் இல்லை.

விடவில்லை நான். அதை எப்படியாவது வாங்கியே தீருவது என்று ஜெமினி ஃப்ளைஓவர் அருகில் இருக்கும் லேண்ட்மார்க் போனேன். அங்கும் குறிப்பிட்ட அந்த கேசட் இல்லை. எங்கெங்கே கேசட் கடைகள் கண்ணில் படுகிறதோ அங்கெல்லாம் சென்று விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் ஓடிவிட்டது. அந்த ‘புஷ்பாஞ்சலி’ கேசட் எனக்குக் கிடைக்கவேயில்லை. அன்னை பக்தர்கள் என்று எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கூடச் சொல்லி வைத்திருந்தேன். பலனில்லை.

ஒருநாள் ரொம்பச் சோர்ந்து போய், “என்ன அன்னையே! உங்கள் புகழ்பாடும் கீதங்களைக் காதாரக் கேட்டு ரசித்துக்கொண்டு இருந்தோம். இப்போது கேட்க முடியாமல் இருக்கிறதே! உங்கள் பாமாலை கேசட்டுகள் வேறு பல கிடைக்கின்றன. ஆனால், எங்களுக்குப் பிடித்தமான இந்த கேசட் மட்டும் கிடைக்கவேயில்லையே?” என்று அன்னை படத்தின் முன்பு வேண்டிக் கொண்டேன்.

இரண்டு நாள் கழித்து, இயக்குநர் சிம்புதேவன் வீட்டுக்கு வந்தார். தான் இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதாகச் சொல்லி (அதுதான் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’), பெரிய ஸ்வீட் பாக்ஸை நீட்டினார். கூடவே, இன்னொரு சின்ன கிஃப்ட் பார்சலும் தந்தார்.

“என்ன சிம்பு இது?” என்றேன். “ஒண்ணுமில்ல சார், ஒரு சிறிய கிஃப்ட். உங்களுக்குப் பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்” என்றார்.

ஆவல் தாங்கமாட்டாமல் பிரித்தேன். பயங்கர ஷாக்! அதே ‘புஷ்பாஞ்சலி’ கேசட்.

“சிம்பு! இதெப்படி...” என்று தடுமாறிவிட்டேன்.

“நீங்க அன்னை டிவோட்டின்னு தெரியும். (என் வீட்டு ஹாலில் பெரிய அன்னை படம் - எங்கள் அலுவலக ஓவியர் சரவணன் எனக்காகப் பிரத்யேகமாக வரைந்தது தந்தது - உள்ளது.) ஸ்வீட் வாங்குறப்போ பக்கத்துக் கடையில இது கண்ணுல பட்டது. என்னோட ஒரு சின்ன கிஃப்டா இருக்கட்டுமேன்னு வாங்கினேன்” என்றார்.

அவரிடம் சிலிர்ப்போடு முழு விஷயத்தையும் சொல்லி, “நீங்க எடுக்கப்போற முதல் படம் எங்கள் மகாஸ்ரீ அன்னையின் அருளால் சந்தேகமில்லாமல் பெரிய வெற்றியைப் பெறும். வாழ்த்துக்கள்!” என்றேன்.

வேறு எத்தனையோ கிஃப்டுகளை அவர் எனக்குக் கொடுத்திருக்கலாம்; அல்லது, அன்னையின் புகழ்பாடும் வேறு கேசட் வாங்கிக் கொடுத்திருக்கலாம். குறிப்பாக, அதே கேசட்... எப்படி?

நமக்கும் மேலே ஏதோ இனம்புரியாத ஒரு சக்தி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அந்த சக்தியை ‘அன்னை’ என்று வரித்துக்கொண்டிருக்கிறேன்.
*****
பிரார்த்தனை உங்கள் நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது; நம்பிக்கைதான் உங்கள் பிரார்த்தனைக்கு உயிர் கொடுக்கும்!

ஹேப்பி பர்த்டே டு யூ, கலைஞர்!

86 வயது கொண்டாடும் கலைஞர் மு.கருணாநிதிக்கு என் இதயம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்’ என்கிற பம்மாத்துகளின்றி, அப் பெருமகனாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் மீது எனக்கு அரசியல்ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அவரின் வழிமுறைகள் சிலவற்றின் மீது ஒரு வாக்காளனாக எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அவர் ஒரு சாதனையாளர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

சாவி வார இதழில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, அவர் நாலைந்து முறை சாவியின் இல்லத்துக்கு வருகை தந்திருக்கிறார். பலமுறை அவரே தொலைபேசியில் தொடர்புகொண்டு, “ஆசிரியர் சாவி இருக்காரா?” என்று கரகரத்த தன் பிரத்யேக கம்பீரக் குரலில் கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் நான்தான் எடுத்து அவருக்கு பதில் சொல்லியிருக்கிறேன். சாவியில் வந்த சிறுகதை, லே-அவுட் எல்லாவற்றையும் அவர் ஆசிரியர் சாவியிடம் விமர்சனம் செய்வார். அப்படி ஒருமுறை சாவியிடம் அவர் பேசிக்கொண்டு இருந்தபோது, என்னை வைத்துக்கொண்டே சாவி பெருந்தன்மையாகச் சொன்னார்... “உங்க பாராட்டுக்களெல்லாம் ரவிக்குதான் போய்ச் சேரணும். ரவிதான் என்னோட அசிஸ்டெண்ட். இதில் வர நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் அவன்தான் பொறுப்பு. நான் சும்மா மேற்பார்வை பார்க்கிறதோட சரி!”

கலைஞர் பிறந்த நாள் வருகிறபோதெல்லாம், அந்த வார சாவி அட்டையைக் கலைஞர்தான் அலங்கரிப்பார்.

சாவி ஒருமுறை அமெரிக்கா போயிருந்தபோது, சாவி இதழ் அட்டையில் நான் வெளியிட்ட ஒரு நகைச்சுவைத் துணுக்கு பெரிய புயலைக் கிளப்பிவிட்டது. மாதர் சங்கங்கள் கொதித்தெழுந்தன. கேஸ் பதிவாகி, ஆசிரியர் சாவி ஊர் திரும்பியதும் திரும்பாததுமாக அவரையும், அவரோடு என்னை, அச்சிட்ட மணியை மூவரையும் கைது செய்தது போலீஸ். அப்போது கலைஞர் எதிர்க் கட்சித் தலைவர். உடனடியாக ஓடோடி வந்து, எங்களை ஜாமீன் எடுக்க உதவினார். அந்த விவரங்களை விரிவாக என் இன்னொரு பிளாகில் (ungalrasigan.blogspot.com) பதிய இருக்கிறேன்.

அதற்கு முன், கலைஞரின் பெருந்தன்மை பற்றிய ஒரு சிறு தகவல்...

சாவி இல்லத்துக்குக் கலைஞர் வந்திருந்த சமயம்... ஆசிரியரோடும், அவர்தம் குடும்பத்தாரோடும், எங்களோடும் அவர் கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு உபசரிக்க ஆசிரியர் சாவி அட்டெண்டர் ஃபிரான்சிஸ் என்பவரை அனுப்பி, குளிர்பானம் வாங்கி வரச் சொல்லியிருந்தார். ஃபிரான்சிஸ் அதற்காக வெளியே போயிருந்த நேரத்தில், கலைஞர், சாவி இவர்களோடு நாங்களும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். புகைப்படம் எடுத்தவர் சாவியின் மூத்த மகன் பாச்சா என்கிற பாலசந்திரன்.

குளிர்பானம் வருவதற்குள் தனக்கு நேரமாகிறது என்று அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டுவிட்டார் கலைஞர். சாவியின் வீடு மாடியில்; கீழே அலுவலகம். கலைஞர் கிளம்புகிற சமயம், ஓடி வந்தார் ஃபிரான்சிஸ், குளிர்பான பாட்டில்களோடு. கொஞ்சம் ஏமாற்றமாகத் தலையைச் சொறிந்தபடி, அசட்டுச் சிரிப்பு சிரித்தார். என்னவோ சொல்லத் தயங்கினார்.

“என்ன?” என்று கேட்டார் சாவி. “அது வந்துங்க... அது... ஐயா கிளம்பிட்டாருங்களா?” என்றார் ஃபிரான்சிஸ் தயக்கத்துடன். “கிளம்பிட்டாரு. உனக்கு என்ன வேணும், அதைச் சொல்லு!” என்றார் சாவி. அவர் காதருகில் சென்று ஏதோ கிசுகிசுத்தார் ஃபிரான்சிஸ்.

“என்னவாம்?” என்று கேட்டார் கலைஞர் திரும்பி.

“உங்களோடு எல்லோரும் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கணும்னு முடிவு பண்ணியிருந்தோம். அதுல இவனும் நிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கான். கடைக்குப் போயிட்டதுல முடியாம போச்சேன்னு வருத்தப்படறான்” என்றார் சாவி.

“இவ்வளவுதானே! இது ஒரு பெரிய விஷயமா?” என்ற கலைஞர், ஏழெட்டு படிகள் இறங்கியிருந்தவர் மீண்டும் படியேறி மாடிக்கு வந்தார். மீண்டும் ஒருமுறை எல்லோரும் அவரோடு சேர்ந்து நின்றோம் - ஃபிரான்சிஸ் உள்பட! மீண்டும் படம் எடுத்தார் பாச்சா. “என்னப்பா... இப்ப திருப்தியா?” என்று ஃபிரான்சிஸிடம் திரும்பிக் கேட்டார் கலைஞர். நெகிழ்ந்து நெக்குருகிப் போய்விட்டார் ஃபிரான்சிஸ்.

மற்றவரின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கும் பண்பு கலைஞருக்கு இல்லை என்று யார் சொன்னது? என்ன... அரசியல்ரீதியாக சிலவற்றை அவர் விரும்பியோ விரும்பாமலோ பேச வேண்டியிருக்கிறது; செய்ய வேண்டியிருக்கிறது.

அதை விமர்சனம் செய்ய நமக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இலக்கியகர்த்தா, திரைக்கதை வசனகர்த்தா, கதாசிரியர், பத்திரிகையாளர், நகைச்சுவையாளர், கவிஞர், சொற்பொழிவாளர், அரசியல் தலைவர் எனப் பலவிதங்களிலும் அவரது கடின உழைப்பு அசாதாரணமானது. அதைப் போற்றுவோம்; முடிந்தால், அதில் ஒரு சிறு துளியேனும் நமக்குக் கிடைக்குமா எனப் பாடுபடுவோம்!

வாழ்க கலைஞர்!
*****
உண்மையான நண்பர்கள் உள்ள எவனும் தோற்றுப் போவதில்லை!

வியப்பதற்கு ஒன்றுமில்லை!

சமீபமாக நான் பிளாக் எழுதத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவிலிருந்து நண்பர் சத்யராஜ்குமார் http://www.sathyarajkumar.com அடிக்கடி என்னை இ-மெயிலில் தொடர்பு கொள்கிறார். அங்கே சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகிறார்.

நல்ல எழுத்தாளர். சாவியில் இவரது கதைகளை நான் பிரசுரித்திருக்கிறேன். குறிப்பாக ஒரு சிறுகதையும், தவிர சாவியின் சகோதர பத்திரிகையான மோனா மாத இதழில் இவரது ஒரு நாவலையும் பிரசுரித்த ஞாபகம் உண்டு. அந்த நாவலின் தலைப்பு என்ன என்று இரண்டு நாட்களாக மண்டையைப் போட்டு உருட்டிக்கொண்டு இருந்தேன். நினைவுக்கு வந்துவிட்டது. உடனே சந்தோஷமாக அதைக் குறிப்பிட்டு அவருக்கு இ-மெயில் அனுப்பினேன். உடனே பரவசமாகி பதில் அனுப்பியிருந்தார். அது கீழே...

‘வாவ்! இன்னும் இந்தக் கதைகளை நீங்கள் நினைவில் வைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது. எவ்வளவு ஈடுபாட்டுடன் பணியாற்றி இருப்பீர்கள் என்பதும் புரிகிறது. அந்த நாவலின் தலைப்பு 'நகராதே நட்சத்திரா' என்பது சரியே! அதன் அட்டைப்படம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது உங்கள் உழைப்புதான் என்பதில் சந்தேகமில்லை. அது தவிர 'அறுபது கிலோ மீட்டர் அதிர்ச்சி' என்ற கார் ரேஸ் பின்னணி கொண்ட நாவலையும் வெளியிட்டீர்கள். டாபிகல் சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் நான் முதலில் அனுப்பிய 'அதிரடி ஐம்பது' என்ற கதையை நீங்கள் வெளியிட்டு ஊக்குவித்ததால், அதே பாணியில் தொடர்ந்து பல சிறுகதைகள் அனுப்பினேன். அதில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தத் தண்ணீர் சிறுகதை. பின்னர் மாலைமதியிலும் அது போன்ற சில கதைகள் எழுதினேன்.
சற்றே புதுமையான கதைகளை நீங்கள் விரும்பி வெளியிடுவதாலேயே என் போன்ற எழுத்தாளர்கள் மேலும் பட்டை தீட்டப்படுகிறார்கள்...’

இயக்குநர் சிம்புதேவன் வியந்ததை முன்பு எழுதியிருந்தேன். இப்போது சத்யராஜ்குமார்.

ஆனந்த விகடனின் சகோதர பத்திரிகையான ஆன்மிக இதழ் சக்தி விகடனின் பொறுப்பாசிரியர் திரு.பி.சுவாமிநாதன். விகடனில் நான் சேர்ந்த அன்றைய தினம் எம்.டி. (ஆசிரியர் திரு.பாலன்), திரு.மதன், திரு.ராவ், திரு.வீயெஸ்வி, திரு.கே.அசோகன் இவர்களுக்கு அடுத்து எனக்கு அறிமுகமானவர் பி.சுவாமிநாதன்தான்.

அவர் ஒருமுறை சொன்னார்... “சாவியில கூட நீங்க என் சிறுகதையை வெளியிட்டிருக்கீங்க!”

“அப்படியா? சுவாமிநாதன் என்கிற பேர்லேயே எழுதினீங்களா?” என்றேன்.

“இல்லை. சின்னக் குயிலு என்கிற புனைபெயரில் எழுதினேன்.”

“ஆமாம். ஞாபகம் வருது. ஒரு மாதிரி நியூஸ்பிரிண்ட் தாள்ல சின்னக்குயிலு என்கிற புனைபெயரை மட்டும் பச்சை ஸ்கெட்ச்ல எழுதி அனுப்புவீங்க. சரியா?”

“வாவ்! எப்படி ரவி இவ்ளோ ஞாபகம் வெச்சிருக்கீங்க?” என்று ஆச்சரியப்பட்டார்.

“இன்னும் கேளுங்க சொல்றேன்... சாவியில நீங்க எழுதின ஒரு கதை... மாடியில ஒரு ரூம்ல ஒரு பேச்சுலர் தங்கியிருப்பான். வீட்டுக்காரர் பொண்ணு கீழேர்ந்து அவனுக்கு ஒரு டம்ளர்ல பாயசமோ, பாலோ எடுத்துட்டுப் போய் அவனுக்குக் கொடுக்கும். அது அவனைக் காதலிக்கும்னு கதை போகும். சரியா நினைவில்லே... அந்தக் கதைக்கான பட ஐடியாவை நான் ஓவியர் ஜெயராஜுக்கு போன்லயே சொல்லிப் படம் வாங்கினேன். ஒரு டேபிள் முன் அமர்ந்து அந்த இளைஞன் எழுதிட்டிருப்பான். இந்தப் பொண்ணு பாவாடை, தாவணி அணிந்து கையில் ஒரு சொம்பு டம்ளரோடு அங்கே வரும். அவர் உங்க கதைக்குப் போட்டிருந்த படம் இதுதான். சரியா?”

பிரமித்து நின்றுவிட்டார் பி.சுவாமிநாதன்.

எனக்கே அது ஆச்சரியம்தான். காரணம், நான் பெருமறதிக்காரன். பத்திரிகைத் தொழிலில் இத்தனை நாள் நான் குப்பை கொட்டுவது எனக்கே பேரதிசயம்.

பின்னே... சட்டென்று எப்படி அவர்கள் எழுதிய கதைகளை நினைவுகூர என்னால் முடிந்தது என்று கேட்கிறீர்களா? அது மூளையின் விசித்திரம்தான். என் மூளை எதை நினைவு வைத்துக்கொள்கிறது, எதை மறக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. ஒரு வித போட்டோ மெமரி எனக்கு இருக்கும் என்று தோன்றுகிறது.

ஹில்கூ என்கிற விசித்திரமான பெயர், அவர் எழுதிய கதைக்கு ஜெயராஜ் வரைந்த படம், அது கிளறிய கதைச் சம்பவம்... சத்யராஜ்குமார் என்கிற பெயரும் எப்படியோ தனித்துவமாக என் மனதில் பதிந்துபோயிருக்கிறது. சின்னக்குயிலு என்ற பெயரும் ஒரு வித்தியாசமான பெயர்தான். அந்தப் பெயரைச் சொன்னதுமே, அது பச்சை நிறத்தில்தான் என் கண்ணில் தோன்றியது.

மற்றபடி, பிரமிக்க என்னிடம் எதுவுமில்லை திரு.சத்யராஜ்குமார்! நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘அறுபது கிலோ மீட்டர் அதிர்ச்சி’ நாவல் பற்றி எனக்கு ஞாபகமே வரவில்லையே!
*****
உண்மையில் நாம் வளர்ந்திருக்கிறோமா? இல்லை. மற்றவர்களிடத்தில் நம்மை எப்படிச் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கற்றிருக்கிறோம். அவ்வளவே!