சிம்பு என்கிற நண்பன்!


இன்றைக்கு சன் டி.வி-யில் ‘அறை எண் 305-ல் கடவுள்’ திரைப்படம் போட்டார்கள். என் அன்புக்குரிய நண்பர் சிம்பு என்கிற - சிம்புதேவன் என்கிற - செந்தில்குமார் இயக்கிய படம் அது.

தனது முதல் படமான ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’யிலேயே தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர் சிம்பு. அடுத்து அவர் இயக்கிய ‘அறை எண் 305-ல் கடவுள்’ படமும் மிக அருமையான படம். மூன்றாவதாக இயக்கிக்கொண்டு இருக்கும் ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ படமும் மிக வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. அவர் அந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வார் என்று என் மனசுக்குள் ஒரு பிம்பம் இருக்கிறது. அவரோடு அதிகம் பழகியிருப்பதால், அவரின் சிந்தனைப் போக்கு எனக்கு ஓரளவு தெரியும்.

விகடனில் அவர் என்னோடு பணியாற்றியபோது, ஒரு முறை அவர் என்னிடம், “சார், சாவியில நீங்கதான் என்னோட முதல் சிறுகதையைப் பிரசுரிச்சு ஊக்குவிச்சீங்க” என்றார். நான் ஆச்சரியமாக, “அப்படியா! சிம்பு என்ற பேர்ல யார் கதையையும் நான் பிரசுரிச்ச ஞாபகமே இல்லையே?” என்றேன். “இல்லை. நான் ஹில்கூ என்கிற புனைபெயரில் எழுதி அனுப்பியிருந்தேன்” என்றார். அதென்ன ’ஹில்கூ’ என்று கேட்டேன். “Senthilkumar என்கிற என் பெயரின் நடு ஐந்து எழுத்தை எடுத்து உருவாக்கிய பெயர் அது” என்றார்.

“ஹில்கூங்கிற பேரைக் கேட்டதும், இப்போ ஓரளவுக்கு ஞாபகம் வருது. ஒரு மனோதத்துவ டாக்டர் கிட்டே ஒருவரைப் பைத்தியம்னு அழைச்சுக்கிட்டுப் போவாங்க. கடைசியில், அழைச்சுக்கிட்டு வரப்பட்டவர் பைத்தியம் இல்லை, அவரை அழைச்சுட்டு வந்தவர்தான் பைத்தியம் என்பது மாதிரி அந்தக் கதை இருக்கும். படம் கூட ஜெயராஜ்தான் போட்டிருப்பார். சரியா?” என்றேன்.

“வாவ்! எப்படி சார் இவ்ளோ ஞாபகம் வெச்சுட்டிருக்கீங்க? என்னால நம்பவே முடியலை!” என்று அலறியேவிட்டார்.

ஒருநாள், இயக்குநர் சேரனிடம் உதவியாளராகச் சேர வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், “போய்ச் சேரட்டுமா, உங்க அட்வைஸ் என்ன?” என்று கேட்டார். “உடனே போய்ச் சேருங்க. நீங்க இளைஞர். இன்னும் பெரிய அளவுல வரவேண்டியவர். வாய்ப்பு கிடைக்கும்போது நல்ல முறையில் பயன்படுத்திக்குங்க. உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு. பெஸ்ட் ஆஃப் லக்!” என்றேன்.

அன்றிலிருந்து தான் அசிஸ்டெண்ட் டைரக்டராகப் பணிபுரிந்த ஒவ்வொரு படத்துக்கும், எனக்குச் சௌகரியமாக முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்று பார்க்கிற மாதிரி நான்கு சினிமா டிக்கெட்டுகளை மறக்காமல் அன்போடு தந்து வந்தார். இம்சை அரசனுக்கும் அப்படி டிக்கெட்டுகள் கொடுத்தபோது ஒன்று சொன்னார்... “சார், விகடன்ல ரெட்டைவால் ரெங்குடு, முன்ஜாக்கிரதை முத்தண்ணான்னு ஏற்கெனவே மதன் சார் போட்ட மாதிரி கேரக்டர் ஜோக்ஸ் போடச் சொல்லி எம்.டி. (ஆசிரியர் பாலசுப்ரமணியன்) சொன்னாரு. அதன்படி நான் ரெண்டு செட் ஜோக் தயார் பண்ணி உங்க கிட்டே கொடுத்தேன். ஒண்ணு, சயின்ஸ்ஃபிக்‌ஷன் ஜோக். ஏலியன்களெல்லாம் வரும். மற்றது அசட்டு அரசன் ஜோக்ஸ். நீங்க ரெண்டாவதுதான் நல்லாயிருக்குன்னு ஓ.கே. பண்ணி எம்.டி-க்கு அனுப்பினீங்க. அதைத்தான் இப்போ முழு திரைப்படமாக்கியிருக்கேன்.”

திறமையான டைரக்டர் எனப் புகழ்பெற்றபோதிலும், எப்படித்தான் கொஞ்சம் கூட பந்தா என்பதே இல்லாமல் இத்தனை எளிமையாக இன்னமும் அவரால் பழக முடிகிறது என்பது நிஜமாகவே எனக்கு ஆச்சரியாமாக இருக்கிறது. இந்த எளிமையே அவரை இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாழ்க நண்பர் சிம்பு என்கிற சிம்புதேவன் என்கிற செந்தில்குமார்.

*****
பிறருக்குத் தருவதற்கு மிக மிக மலிவான, அதே சமயம் மிக மிகச் சிறந்த பரிசுப் பொருள் ஒன்று உண்டு. அதன் பெயர் - அன்பு!

ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...


ரொம்ப நாளைக்குப் பிறகு சரோஜ் நாராயண்சுவாமியிடமிருந்து போன்கால்.

படம் பார்த்தா சத்யம் தியேட்டர்ல பார்க்கணும், டிபன் சாப்பிட்டா சரவணபவன்ல சாப்பிடணும்கிற மாதிரி அந்தக் காலத்துல எங்களுக்கெல்லாம் ரேடியோவில நியூஸ் கேட்டா சரோஜ் நாராயண்சுவாமி வாசிச்சுக் கேட்கணும். அப்பத்தான் நியூஸ் கேட்ட திருப்தி கிடைக்கும்.

'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சுவாமி' என்று தனக்கே உரிய மிடுக்கும் கம்பீரமுமான குரலில் அவர் செய்தி வாசிக்கத் தொடங்கும்போதே இஞ்சி மொரப்பா சாப்பிட்ட மாதிரி நம்முள்ளும் அந்தச் சுறுசுறுப்பு குடியேறிவிடும்.

சிம்மக்குரலோன் சிவாஜிகணேசனே ஒருமுறை, 'நான் இரண்டு குரல்களுக்கு ரசிகன். ஒன்று இலங்கை அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் குரல்; மற்றது, செய்தி அறிவிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமியின் குரல்' என்று சொல்லியிருக்கிறார் என்றால், சும்மாவா பின்னே..?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடுமென்று ஒருநாள் அவர் முதன்முறையாக என்னோடு போனில் தொடர்பு கொண்டார். 'வணக்கம்மா... சொல்லுங்க' என்றேன். 'நான் யார் பேசறேன்னு தெரியறதா?' என்று கேட்டார். 'தெரியுமே, சரோஜ் நாராயண்சுவாமிதானே?' என்றேன். 'அட, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?' என்றார் ஆச்சர்யமாக. 'இதில் ஆச்சர்யப்பட என்னம்மா இருக்கிறது? உங்க குரல்தான் உலகத்துக்கே தெரியுமே?' என்றேன். 'அப்படியா!' என்று ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கேட்டார்.

அன்று முதல் அவ்வப்போது அடிக்கடி என்னோடு போனில் உரையாடுவார். நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் அவரது குரலை எந்த அளவுக்கு ரசித்துக் கேட்டேனோ அதே அளவுக்கு இன்றைக்கு அவர் போனில் பேசும்போதும் சிலிர்ப்பு உண்டாகிறது.

தனக்குக் கலைமாமணி விருது கிடைத்திருப்பதைச் சொன்னார். ஆனால், விழாதான் எப்போன்னு தெரியலே என்றார். தேர்தல், அமைச்சரவை விரிவாக்கம்னு தள்ளிப் போகுது; கூடிய சீக்கிரம் அறிவிச்சுடுவாங்கன்னு நினைக்கிறேன் என்றேன்.

'ஜெயா டி.வி-யில் என் குரலை யாரோ அப்படியே மிமிக்ரி செய்து செய்தி வாசிக்கிறார்கள்; என்னிடம் கேட்பவர்களுக்கு அது நான் இல்லை என்று அடிக்கடி விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டி இருக்கிறது' என்றார்.

கடைசியாக, என் பிளாக் படித்ததைப் பற்றிச் சொன்னார். பாராட்டினார். தனது கருத்துக்களைப் பின்னூட்டம் இட்டிருப்பதாகச் சொன்னார். ஆனால், வரவில்லை.

அவரே ஒரு பிளாக் எழுதலாமே என்கிற என் அபிப்ராயத்தைச் சொன்னேன். என்னைப் போல எத்தனையோ பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது குரலுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். இந்திரா காந்தியிலிருந்து பல பெரிய புள்ளிகள் வரை நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்; ஆகாசவாணியில் பல பிரமுகர்களை பேட்டி கண்டவர்; அந்தக் காலத்தில் ஆனந்த விகடன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியவர்; அனுபவங்களின் பெட்டகமாக இருப்பவர்; நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். அவர் பிளாக் எழுதினால் என்னைப் போன்றவர்களுக்கு அது ஓர் அனுபவப் புதையலாக இருக்கும்.

*****
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஒரு குரு!

ஞாநி தந்த ஞானம்!

ஞாநி என் மதிப்புக்குரிய நண்பர். அவருடைய கட்டுரைகளை நான் விரும்பிப் படிப்பேன். தனது வாதத்தை எதிர்க் கருத்து கொண்டவர்களும் ஏற்கும்படி எடுத்து வைப்பதில் அவர் வல்லவர். அவரது சில கருத்துக்களோடு நான் உடன்படவில்லை என்றாலும், அதை அவர் விவரிக்கிற அழகுக்காகவே படிப்பேன்; ரசிப்பேன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறாமல், தன் மனத்துக்குப் பட்டதைப் பளிச்சென்று சொல்லக்கூடியவர் ஞாநி என்பதில் எனக்குச் சற்றும் மாறுபாடான கருத்து இல்லை.

ஆனால், இந்தக் கட்டுரை அவரைப் பற்றியது அல்ல. இன்றைக்கு அவர் அனுப்பியதாகச் சொல்லி ஒரு நண்பர் என்னைச் சந்திக்க வந்தார். கொஞ்சம் பொறுங்கள்... இது அந்த நண்பரைப் பற்றியதும் அல்ல.

ஞாநியைப் பற்றிய சிந்தனைகள் எழுவதற்கு அந்த நண்பரின் வருகை ஒரு காரணமாக இன்று அமைந்தது. பின்னே, ஞாநியைப் பற்றிய கட்டுரையும் இல்லை என்று சொன்னேனே என்று பார்க்கிறீர்களா? நேரடியாக விஷயத்துக்கே வருகிறேன்.

அலுவலகம் விட்டு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, ஒரு ஆக்சிடென்ட் நிகழ இருந்தது. முன்னே சென்றுகொண்டு இருந்த ஒரு பைக்காரர் ஸ்லிப் ஆகி, சாலையின் மையத்தில் பைக்கோடு விழுந்தார். நான் சென்ற பஸ் டிரைவர் மிக சாமர்த்தியமாக வளைத்து சடன் பிரேக் அடித்தார். உள்ளே நாங்கள் தடுமாறினாலும், அவர் அப்படிச் சுதாரித்துச் செயல்பட்டிருக்கவில்லை என்றால், அந்த பைக்காரர் சட்னி ஆகியிருப்பார்.

அது மட்டுமல்ல, பனகல் பார்க் நெரிசலில் அவர் பஸ்சைச் செலுத்திய விதம், கூட்டத்தின் நடுவிலும் எந்தச் சிரமும் இல்லாமல் பூ மாதிரி நுழைந்து முன்னேறிய விதம், ஸ்டாப்பிங் ஓரமாக பஸ்சை அணைத்து நிறுத்திய பாங்கு, எதிரே கத்துக்குட்டி காரோட்டி அங்கேயும் நகராமல், இங்கேயும் நகராமல் படுத்தியபோதும் சற்றும் கோபம் கொள்ளாமல் இதமாகக் கடந்து சென்ற பாணி, பயணிகளிடம் கடுப்படிக்காமல் கலகலவென்று பேசிய தன்மை இதெல்லாம் எனக்கு அந்த டிரைவர் மீது ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

இங்கேதான் ஞாநி வருகிறார். அவரும் நானும் முன்பு ஒரு திருமணத்தில் கலந்துகொண்டோம். மெல்லிசைக் கச்சேரி நடந்துகொண்டு இருந்தது. ஒரு பாட்டு முடிந்ததும் ஞாநி எழுந்து அவர்களிடம் போனார். தன் விருப்பமாக ஏதாவது ஒரு பாடலைச் சொல்லிப் பாடும்படி கேட்கப் போகிறாரோ என்று நினைத்தேன். இல்லை.

அவர்கள் பாடிய விதமும், அதற்குப் பக்கத் துணையாக இருந்த பக்கவாத்தியக்காரர்களின் ஒத்துழைப்பும் அருமையாக இருந்ததாக மனம் விட்டுப் பாராட்டினார். நாமும் எத்தனையோ கல்யாணத்தில் கலந்துகொண்டு இருக்கிறோம். பந்தி ரெடி என்று தகவல் வந்தவுடன் கச்சேரியாவது கத்திரிக்காயாவது என்று ஓடிப் போய்விடுகிறோம். சிலருக்கு பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமே என்ற பதற்றம். யார் போய் வேலை மெனக்கிட்டுப் பாராட்டுவது!

ஆனால், ஞாநி பாராட்டினார். பஸ்சில் சென்றுகொண்டு இருந்த எனக்கு உடனே ஞாநி ஞாபகம்தான் வந்தது. நான் இறங்குமிடம் வந்ததும், டிரைவரின் அருகில் போய் 'சார், உங்க டிரைவிங் திறமை அபாரம். பார்த்தா சின்னவரா தெரியறீங்க. ஆனா, சீனியர் டிரைவர் கூட இந்த அளவுக்கு பஸ்சை நறுவிசா ஓட்டி நான் இதுவரை பார்த்ததில்லே. பாராட்டுக்கள்!' என்றேன்.

அவர் என்னை நிதானமாகத் திரும்பிப் பார்த்தார். நான் புன்சிரிப்பை முகத்தில் தேக்கிக்கொண்டு, அவரது நன்றி வார்த்தைக்காகக் காத்திருந்தேன்.

அவர் சொன்னார்... 'என்ன, கிண்டலா? அவனவன் ஆயிரம் ...கடிக்கு மத்தியிலே வண்டி ஓட்டிட்டு வரான். டெப்போவிலேயும் பிடுங்கல்; தெருவிலேயும் பிடுங்கல். யாரா வேணாலும் பிறக்கலாம், டிரைவரா மட்டும் பிறந்துடக்கூடாதுன்னு இருக்கு எங்க பொழைப்பு. இதுல நீங்க நக்கல் பண்ண வந்துட்டீங்க. போங்க சார், உங்க பாராட்டை நீங்களே வெச்சுக்குங்க. நான் கொண்டு போயி எந்த பேங்க்ல போட்டுக்கப் போறேன்!'

எனக்கு அந்த டிரைவரின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. வழி நெடுக ஒவ்வொரு விதத்திலும் என்னைக் கவர்ந்தவர் என்னிடம் மட்டும் என் அப்படி நடந்து கொண்டார்? அவருக்கு வேறு ஏதாவது மனக் கஷ்டமோ? அப்படியிருந்தால் பயணிகளிடம் கலகலவென்று பேசினாரே... அதெப்படி? ஒருவேளை, என் மனமார்ந்த பாராட்டில்கூட என்னையுமறியாமல் கேலித் தொனி ஒட்டியிருந்ததோ? அப்படி இருக்கவும் வாய்ப்பில்லையே? அடங்கிய குரலில் மிகவும் தன்மையாகத்தானே பேசினேன்!

மறுமுறை கண்டிப்பாக அவரைச் சந்திப்பேன். அப்போது இது பற்றி நிதானமாக அவரிடம் விசாரிப்பேன்.

அது இருக்கட்டும்... இன்றைக்கு எனக்குத் தூக்கம் வருமா என்று தெரியவில்லையே?

*****
என்ன தெரிந்துகொண்டாய் என்பது முக்கியமல்ல; அதிலிருந்து என்னஅறிந்துகொண்டாய் என்பதே முக்கியம்!

ரத்தக்கண்ணீர்


நம்மவர்களுக்கு நம்மவர்களை மதிக்கத் தெரியாது.

எந்தத் துறையிலும் சிறப்பானவர்களைப் பற்றிக் கேட்டால், யாராவது ஒரு வெளிநாட்டுக்காரரைப் பற்றித்தான் சொல்வார்களே தவிர, இங்கே இருக்கிறவர்களைப் பற்றி வாயே திறக்கமாட்டார்கள். 'அற்புதமான சினிமா எது?' என்று கேட்டுப் பாருங்கள்; 'பை சைக்கிள் தீவ்ஸ்', 'பென்ஹர்' என்று தாங்கள் பார்த்திராத, ஆனால் கேள்விப்பட்டிருக்கிற பெயர்களைச் சொல்லுவார்கள். 'சிறப்பான டைரக்டர் யார்?' என்று கேளுங்கள்; சட்டென்று 'அகிரா குரோசோவா' என்பான். அவர் மூஞ்சி எப்படியிருக்கும் என்று கூடத் தெரியாது இவனுக்கு.

நம்ம சிவாஜிக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. நமது இசை ஜாம்பவான்களான கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி., இளையராஜாவெல்லாம் இசை மாமேதைகள். நம்மிடையே இருந்த, இன்னும் இருக்கிற பல இயக்குனர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால், அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் கொடுத்திருக்கிறோமா? உரிய முறையில் உயரிய விருதுகள் கொடுத்து கவுரவித்திருக்கிரோமா? மறைந்த நகைச்சுவை மாமேதை நாகேஷுக்கு ஒரு பத்ம விருது கிடையாது; வாழும் கலைஞர் எம்.எஸ்.வி-க்கு உரிய விருதுகள் இன்னமும் வழங்கப்படவில்லை.

நேற்றைய ஞாயிற்றுக் கிழமையன்று 'ரத்தக்கண்ணீர்' சிடி வாங்கி வந்து வீட்டில் போட்டுப் பார்த்தேன். 1954-ல் வெளியான படம். அடேங்கப்பா..! 55 வருடங்களாகியும் இன்றைக்குப் பார்த்தாலும் கொஞ்சமும் சலிப்பின்றி, விறுவிறு சுறுசுறுவென்று இருந்தது படம்.

எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்கு எந்த உலக நடிகனும் கிட்டே வரமுடியாது என்று சொல்வேன். ஆரம்பத்தில் அந்தப் பணக்காரத் திமிர், பின்னர் குஷ்டம் வந்தபோதும் இம்மியளவும் குறையாத நையாண்டி எனப் பின்னிஎடுத்திருக்கிறார் மனுஷன். இடி, மழை, புயலில் அவரை எம்.என்.ராஜம் வீட்டை விட்டுத் துரத்தும் காட்சியை அவ்வளவு த்ரில்லாகப் படமாக்கியிருப்பார்கள் கிருஷ்ணன்-பஞ்சு.

'குற்றம் புரிந்தவன்' பாடலைப் படமாக்கியிருக்கும் விதமும், பாடலின் இடையிடையே எம்.ஆர்.ராதாவின் குரலும் அபாரம். பாட்டு முடிந்து, அவர் கடற்கரைச் சாலையில் நீள நெடுக கையை வீசிக்கொண்டு நடந்து வரும் காட்சி மிகவும் அற்புதம்!

இதன் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு. கலக்கியிருக்கிறார். 'நாய்க்கு என்னடா போட்டே?' 'சோறு போட்டேன்.' 'சோறு போட்டே ஃபூல்! சோறு தின்கிற நாய் இந்திய நாய். இது அமெரிக்க நாய். அவிழ்த்துவிடு, இஷ்டப்பட்டதைத் திங்கட்டும்' என்கிற பணத் திமிராகட்டும்... 'ஜீவகாருண்ய கட்சியைச் சேர்ந்தவங்களா? அப்படின்னா என்னப்பா அர்த்தம்?' 'நாங்க உயிர்களைக் கொல்லமாட்டோம்.' 'ஓஹோ.. ராத்திரில மூட்டைப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?' என்று கேட்கிற நக்கலாகட்டும்...

இன்றைக்கும் உலக அளவில் பேசப்படவேண்டியவர் திருவாரூர் தங்கராசு. ஆனால், என்ன ஆனார்? ரத்தக்கண்ணீர் படத்துக்குப் பிறகு வேறு எதற்காவது வசனம் எழுதினாரா? எனக்குத் தெரியவில்லை.

அதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே... நம்மவர்களுக்கு நம்மவர்களை மதிக்கத் தெரியாது!
*****
ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு ஏற்ற மிக நல்ல நாள் நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் இருக்கிறது.

சிக்கலில் இலங்கை!


சிக்கலில் மாட்டித் தவித்துக்கொண்டு இருக்கிறது இலங்கை.

விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம் என்று மார் தட்டும் இலங்கை அரசுக்கு இனிமேல்தான் இருக்கிறது தலைவலி.

ஏற்கெனவே விடுதலைப் புலிகளுடன் அது நடத்திய உள்நாட்டு யுத்தத்தால் விசனமுற்ற அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள், இலங்கைக்கு அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்திக்கொண்டுவிட்டன. மேலும் அங்கே தொழில் முயற்சிகள் மேற்கொள்வதையும் கை கழுவிவிட்டன. இதனால் இலங்கைக்குப் பணப் பற்றாக்குறை.

இந்நிலையில், பிரபாகரனை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ராஜபக்ஷே நடத்திய வெறியாட்டத்தில் சில ஆயிரம் புலிகளும், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் மாண்டது மட்டுமின்றி, இலங்கை ராணுவத்திலும் ஆயிரக்கணக்கில் இறந்து போனார்கள்.

இங்கே நம் பாரத நாட்டில் ஓர் ராணுவ வீரரின் உயிர் இழப்பைக் கூட நம்மால் தாங்க முடிவதில்லை; பதைபதைத்துப் போகிறோம். உயிர்த் தியாகம் செய்த அவருக்கு உரிய கௌரவத்தை இந்திய அரசு உரிய முறையில் நிறைவேற்றுகிறது. ராணுவ அமைச்சர் நேரில் வந்து மரியாதை செய்யவில்லை, ராணுவ உயர் அதிகாரிகள் வரவில்லை என்று அவ்வப்போது சில குறைகள் சொல்லப்பட்டாலும், இங்கே ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவே செய்கிறது. ஒரு சில நடைமுறைகளில் மேலிடம் தவறும்போதெல்லாம் பத்திரிகைகள் அதைச் சாடி எழுதுகின்றன. இவ்வளவு ஏன், மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தபோது, அதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர் ஒருவரின் உடலுக்கு உடனே வந்து மரியாதை செய்யவில்லை என்று, கேரளா முதலமைச்சரை 'வெளியே போ' என்று அந்த வீரரின் தகப்பனார் விரட்டியதையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோமே!

ஆனால், இலங்கையில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அங்கே எந்த மரியாதையும் கிடையாது. சொல்லப்போனால், வீரர் இறந்துவிட்டார் என்கிற தகவலைக்கூட அவரது குடும்பத்துக்குத் தெரிவிப்பது இல்லை.

உண்மையில், அங்கே பக்கா பயிற்சி பெற்ற ராணுவ வீரர் என்று யாரும் இல்லை. இந்திய வீரர்களிடம்தான் அவர்கள் பயிற்சி பெற்றனர். மற்றபடி கல்லூரிகளில் படிக்கும் ஸ்கவுட் மாணவர்களைத்தான் போருக்குத் தயார் செய்து அனுப்பியது இலங்கை அரசு. அவர்களுக்கும் யுத்த முறை என்று பெரிதாக ஒன்றும் தெரியாது. வானில் பறந்து பறந்து குண்டுகளைப் பொழிய மட்டும் தெரியும். அதைத்தான் அவர்கள் செய்தார்கள். புலிகள், அப்பாவிகள், மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள் என்றெல்லாம் பார்க்காமல் எல்லா இடங்களின் மேலும் குண்டு மழை பொழிந்தார்கள்.

அவர்களுக்குச் சம்பளம் தருவதற்குக் கூட வக்கற்று இருக்கிறது இலங்கை அரசு. காரணம் வருமானம் இல்லை. அங்கே யாரும் டேக்ஸ் கட்டுவதில்லை. வரி வசூலிக்க வேண்டிய அலுவலகம் இருந்த கட்டடமே போரில் நாசமாகிப் போய்விட்டது. யார் எவ்வளவு கட்டவேண்டும் என்று எந்த ரெக்கார்டுகளும் இல்லை. எப்படிக் கட்டுவார்கள்?

கொழும்பிலிருந்து பாத்திர வியாபாரம், துணி வியாபாரத்திற்காக வரும் தமிழர்களை மடக்கி, 'நீ புலியா?' என்று கேட்கவேண்டியது; அவர்கள் இல்லையென்றாலும் விடாமல், 'சரி, ஒரு அஞ்சு லட்ச ரூபாய் எடு' என்று, தாதா மாமூல் கேட்டு மிரட்டுவது போல் மிரட்ட வேண்டியது; அந்தப் பணத்தைக் கொண்டு அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவேண்டியது... இப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது இலங்கை வாழ்க்கை.

எத்தனை காலத்துக்கு இப்படியே ஓட்ட முடியும்? பார்த்தார் ராஜபக்ஷே, பிரபாகரனை சாகடித்துவிட்டோம் என்று நாடகமாடி, போர் முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லி, நிறுத்தப்பட்ட நிதி உதவிகளை மீண்டும் பெற முடியுமா என்று தவித்துக்கொண்டு இருக்கிறார்.

சீனா என்னடாவென்றால், நான் அங்கே உனக்குக் கப்பல் தளம் அமைத்துத் தருகிறேன், மருத்துவமனை கட்டித் தருகிறேன் என்று தன் கால்களை அங்கே ஊன்றப் பார்க்கிறதே தவிர, கையில் பைசா தரமாட்டேன் என்கிறது. பாகிஸ்தானுக்கும் இப்போ பண நெருக்கடி.

குயுக்தி மன்னன் ராஜபக்ஷே எப்படிக் காய் நகர்த்தப் போகிறார் என்று பார்க்கலாம்.

*****
உண்மை என்பது ஓங்கி ஒலிக்கும் கண்டாமணியைப் போன்றது. ஆனால் பலசமயம் மனச்சாட்சி என்கிற அதன் நாக்கு இழுத்துக் கட்டப்பட்டே இருக்கிறது.

நமக்கு நாமே நெருப்பு!

வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு இருக்கின்றன ஊடகங்கள்.

பிரபாகரன் சுடப்பட்டு இறந்துவிட்டார் என்றது இலங்கை இராணுவம். சில வீடியோ காட்சிகளையும் காண்பித்தது. இனிப்பு கொடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் சிங்களர்கள்.

ஆனால், சிங்கள அரசு சொல்வது பொய்; பிரபாகரன் சாகவில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் பழ. நெடுமாறன். பின்னர் வந்த செய்திகளும் அதை உறுதிப்படுத்தின. காட்டப்பட்ட வீடியோ காட்சியில் இருந்தது பிரபாகரன்தானா என்று சந்தேகம் வந்துவிட்டது. போர் நெருக்கடியில் இருக்கும் ஒருவர் இப்படியா மழுமழுவென்று ஷேவ் செய்துகொண்டு இருப்பார் என்பது தொடங்கிப் பல சந்தேகங்கள். சிங்கள அரசு ஏற்கெனவே பலமுறை இப்படியான டகால்டி வேலை செய்திருப்பதால், புலிகளை பலவீனப்படுத்த, மற்றவர்களைத் திசை திருப்ப அது இப்படிப் பொய் புளுகுகிறது என்று ஊடகங்கள் ஊகமாக எழுதுவது உண்மையாகவும் இருக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. பிரபாகரனே பின்னொரு நாள் தன்னை வெளிப்படுத்திக்கொண்டால்தான் குழப்பம் ஒரு முடிவுக்கு வரும். அதுவரை கடவுள் உண்டா, இல்லையா என்கிற பிரச்னை மாதிரிதான் இதுவும். உண்டென்று நம்புகிறவர்களுக்குப் பிரபாகரன் இருப்பார். இல்லையென்று மறுக்கிறவர்களுக்கு இல்லை.

இது ஒரு புறம் இருக்கட்டும்... விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதாகக் குதித்துக் கும்மாளமிட்டுக்கொண்டு இருக்கும் சிங்கள அரசோடு சேர்ந்து இந்திய அரசும் குதித்துக்கொண்டு இருக்கிறது - தலைப்புறம் சீனாவும் பாகிஸ்தானும் கையில் கொள்ளிக்கட்டையை வைத்துக்கொண்டு ரொம்ப நாளாகக் காத்திருக்க, வால்புறமும் சீக்கிரமே தீப்பிடிக்கப்போகிற விபரீதம் புரியாமல்!

அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனாவும் வல்லரசாக உருவெடுத்துக்கொண்டு வருகிறது. அதற்கு ஆண்டாண்டு காலமாக இந்தியா மீது ஒரு கண். இலங்கையில் தனது ராணுவ முகாம் அமைக்க முடிந்தால் ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என்று அது ஓநாய் போல் காத்திருக்கிறது. விடுதலைப்புலிகள் இருந்தவரையில் அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனென்றால், சீனாவுக்கு அவர்கள் எதிர்ப்பு. இலங்கையிலும் புத்த தத்துவம்; சீனாவிலும் புத்த தத்துவம். கூட்டிக் கழித்துப் பாருங்கள்... கணக்கு சரியாக வரும்.

புலிகளை ஒழித்துவிட்ட கையோடு சீனாவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்துவிட்டார் மகிந்த ராஜபக்ஷே. நூறு கோடி அமெரிக்க டாலர் செலவில் இலங்கையில் துறைமுகம் எழுப்புவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது சீனா. அடுத்து பாகிஸ்தானும் அங்கே தனது கால்களைப் பதிக்கும். இதெல்லாம் நல்லதுக்கில்லை.

இந்தியாவின் வளர்ச்சி கண்டு பொருமிக்கொண்டு இருக்கும் சீனா இலங்கையில் காலூன்றினால் அது இந்தியாவின் பாதுகாப்புக்குக் கேடு. இது பற்றிக் கவலையோடு கேட்ட பத்திரிகையாளர்களிடம், ''சீனாவுக்கு நாங்கள இடம் கொடுத்தால் இந்தியா பயப்படுவானேன்? இந்தியாவுக்குப் பரந்த மனசு வேண்டும்" என்று நக்கலும் நையாண்டியுமாகப் பதில் சொல்லியிருக்கிறார் ராஜ பக்ஷே.

இலங்கையில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதாக, அதற்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் உதவி செய்ய மறுத்துவிட்டன. 'கவலைப்படாதே! நான் இருக்கிறேன்' என்று கை கொடுக்கிறது சீனா. 'எதிரிக்கு எதிரி நண்பன்; எதிரிக்கு நண்பன் எதிரி' அல்லவா? இந்தச் சின்ன விஷயம்கூடப் புரியாமல் இலங்கைக்கு அந்தக் காலத்தில் இருந்தே உதவிக்கொண்டு இருக்கிறது இந்தியா.

ராஜீவ் கொலை நடந்தது சமீபத்தில். அது புலிகள் செய்த தவறாகவே கூட இருக்கட்டும்; ஆனால், அதற்குப் பல வருடங்கள் முன்பிலிருந்தே, ஏன்... புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தேகூட இலங்கைக்கு உதவி வந்திருக்கிறது இந்தியா.

முல்லைத் தீவில் நடந்த போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, ராஜ பக்ஷே மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்க ஜெனீவாவில், வரும் செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டப்பட உள்ளது. ஐரோப்பிய நாடுகள் சில இலங்கை அரசுக்கு எதிராக சாட்சி சொல்லத் தயாராகி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டை எப்படியாவது முறியடித்துவிடவேண்டும் என்று முனைப்பாக உள்ளார் ராஜபக்ஷே. அவருக்குச் சாதகமாகக் குரல் கொடுக்க பொலிவியா, கியூபா, மலேசியா, பக்ரைன், நிகரகுவா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. அவை மட்டுமா? நமது பரம எதிரிகளான பாகிஸ்தானும் சீனாவும் கூடத்தான்!

அவை எப்படி வேண்டுமானாலும் போய்த் தொலையட்டும். கொடுமை என்னவென்றால், இந்தியாவும் இலங்கைக்குச் சாதகமாகத்தான் பேசப் போகிறது.

நம் தலையில் நாமே மண்ணை... இல்லையில்லை, நெருப்பை வைத்துக்கொள்வதற்குச் சமமில்லையா இது?

நல்லாக் கெளப்புறாங்கையா பீதிய..!

*****
எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்க்கத் தவறினால், அந்த எதிர்பாராத நிகழ்வுகள் எதிர்பார்க்கக்கூடிய ஆபத்துகளாக மாறிவிடும் ஆபத்து உண்டு

ஈஃபிள் தாத்தா!


சமீபத்தில் கலைஞர் டி.வி-யிலோ, ஜெயா டி.வி-யிலோ, மெகா டி.வி-யிலோ... எதிலென்று சரியாக ஞாபகம் இல்லை... 'சிவந்த மண்' படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி பார்த்தேன். (ஆபீசுக்குக் கிளம்பும் வேளையில் அடுத்தடுத்து இந்த மூன்றிலுமே பழைய பாடல் காட்சிகள் ஒளிபரப்பப்படுவதால், இயன்றவரை சேனல்களை மாற்றி மாற்றி எனக்குப் பிடித்த பழைய பாடல் காட்சிகளைப் பார்த்துவிடுவது என் வழக்கம்.)

'ஒரு ராஜா ராணியிடம்...' என்ற பாடல் அது. எனக்குத் தெரிந்து வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் படம் 'சிவந்த மண்'. மேற்படி பாடல் காட்சியில் ஓரிடத்தில் 'கொலோசியம்' வரும். ஞாபகம் இருக்கா, சமீபத்தில் 'எனக்கு இருபது, உனக்குப் பதினெட்டு' படத்தில் கூட கொலோசியம் வந்ததே! அதில், இடிந்து நொறுங்கிக் கிடக்கும் அதை கிராஃபிக்ஸில் மீண்டும் பழையபடி புதுக் கட்டடமாக மாற்றும் காட்சி அருமையாக இருந்தது.

நிற்க. 'சிவந்த மண்' பாடலில் முக்கியமாக, 'ஈஃபிள்' டவர் முன் சிவாஜியும் காஞ்சனாவும் ஆடிப் பாடுவார்கள். சின்ன வயதில் அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தபோது, அந்த 'பிள்' கோபுரத்தைப் பார்த்து நான் வியந்ததுண்டு.

அந்தக் கோபுரத்துக்கு இன்று வயது 120.

1889-ல் கஸ்டேவ் பிள் என்பவரால் கட்டப்பட்ட கோபுரம் அது. சாம்ப்ஸ் டீ மார்ஸ் என்ற இடத்தில் இருக்கும் அந்தக் கோபுரத்தின் உயரம் 900 அடி. உயரமான கட்டடங்களை சிமெண்ட்டும் இரும்பும் கொண்டுதான் கட்டவேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருந்த அந்தக் கால எஞ்சினியர்களுக்குச் சவால் விடும் விதமாக மொத்தக் கோபுரத்தையும் வெறும் இரும்பினாலேயே கட்டி முடித்தார் பிள்.

அன்றைக்குச் சுமார் 12 கோடி ரூபாய் செலவில், இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. இதன் உச்சிக்குச் செல்ல மொத்தம் 1672 படிகள். கோபுரத்தைக் கட்டி முடித்ததும், அத்தனைப் படிகளையும் ஏறிச் சென்று சந்தோஷப்பட்டிருக்கிறார் கஸ்டேவ் பிள்.

பாரீஸ் போனால் அவசியம் இந்த பிள் கோபுரத்தின் மீது ஏறிப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அது சரி, இங்கே இருக்கிற எல்.ஐ.சி. கட்டடத்தின் உச்சிக்கே ஏறிப் பார்த்ததில்லை.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் பார்க்கணும்னானாம்... அந்த மாதிரி கதையா இல்லே இருக்கு!

*****
உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்வது புத்திசாலித்தனம்;
உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்வது முட்டாள்தனம்!