அடைமழை, அர்த்தராத்திரி, அவள்!

‘1977-ஆம் ஆண்டு டயரியில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. அத்தனை முக்கியமானது இல்லை என்றாலும், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அது அடுத்த பதிவில்’ என்று குறிப்பிட்டு, ஜனவரி முதல் தேதியன்று ஒரு பதிவு போட்டிருந்தேன். (சில ஆண்டுகளுக்கு முன், ‘ஏடாகூடம்’ என நான் எழுதிவந்த வலைப்பூவில் போட்டிருந்த பதிவின் மறுபிரசுரம் அது. இப்போது ‘ஏடாகூடம்’ வலைப்பூ இல்லை.) ஆனால், அதற்கு அடுத்து வேறு சில பதிவுகளைப் போட்டுவிட்டேன். யதேச்சையாக எடுத்துப் பார்க்கும்போதுதான், தொடர்ச்சி போடுவதாகச் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. இதோ, அந்தத் தொடர்ச்சி...

நான் வேலை வெட்டியில்லாத தண்டச் சோறாகப் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த காலம் அது. அப்போது நாங்கள் சங்கீதமங்கலம் என்கிற அழகான பெயர் கொண்ட கிராமத்தில் இருந்தோம். அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அனந்தபுரம் என்கிற மேஜர் பஞ்சாயத்து டவுன். அங்கே பனமலை குமரன் என்று ஒரு சின்ன தியேட்டர் உண்டு. மழைச்சாரல் விழுகிற மாதிரியான, ஓடித் தேய்ந்த பழைய ரீல் படங்களை அங்கே போடுவார்கள்.

அதற்கு எதிர்த்தாற்போல் இருந்த கட்டடத்தில் குணசேகரன் என்பவர் தட்டச்சுப் பயிலகம் நடத்தி வந்தார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். நாத்திக வாதம் பேசுபவர். ஆனால், அத்தனை இனிமையானவர். என்னை ரவி என்று கூப்பிடாமல், பிரகாஷ் என்று என் பெயரின் பின்பாதியைச் சொல்லி அழைத்தவர் அவர் ஒருவர்தான். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஜாலியாக இருக்கும் சமயங்களில், 'ஐயிரே!' என்று அழைப்பார்.

பொதுவாக, திராவிடர் கழகத்தினர் ஒரு கூட்டமாகத் திரளும்போதுதான் பிராமண எதிர்ப்புக் கோஷங்களைக் கிளப்பி மனம் புண்படச் செய்கிறார்களே தவிர, தனித் தனி நபராக என்னோடு பழகிய தி.க. நண்பர்கள் அனைவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். தமாஷுக்குக்கூட யாரும் என் சாதியை இழித்துப் பேசியது இல்லை. என் தமிழ் ஆசான் அ.க.முனிசாமி அவர்கள்கூட தி.க-தான். அவர் வீட்டில் தொங்குகிற திரைச்சீலை ஒன்றில் அண்ணா, கையில் புத்தகத்தோடு நடந்து வருவார்; மற்றொன்றில், பெரியார் கைத்தடியோடு நிற்பார். பின்னாளில் இவர் ஆஸ்திகவாதியாக மாறிவிட்டார். கோயில்களில் பட்டிமன்றங்கள், புராணச் சொற்பொழிவுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு பேசுவார்.

தனித்தனியாக ஒவ்வொரு மனிதனும் பண்பட்டவனே! ஒரு கூட்டமாகத் திரளும்போதுதான் கட்டுப்பாடு இழக்கிறான். இது தி.க-வினருக்கு மட்டுமல்ல; எந்த ஒரு கட்சிக்கும், எந்த ஒரு இனத்துக்கும், எந்த ஒரு சமுதாயத்துக்குமே பொதுவானது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். வெட்டியாகத் திரிகிறோமே, தட்டச்சு கற்போமே என்று அந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன். சங்கீதமங்கலத்திலிருந்து தினமும் நடந்தேதான் வருவேன்; நடந்தேதான் போவேன். இரண்டு ஆண்டு காலத்தில் ஆங்கிலம் ஹையர், தமிழ் ஹையர் இரண்டும் அவரிடம் பயின்று, பாஸ் செய்தேன். பயிற்சி நேரம் ஒரு மணி என்று பெயர்; நான் நாளெல்லாம் அவர் பயிலகத்திலேயே கிடந்ததால், எந்த மெஷின் காலியானாலும் உட்கார்ந்து பயிற்சி செய்வேன். அவரும் ஒன்றும் சொல்லமாட்டார். அவர் தம்பி இளங்கோ என் நண்பன். தமிழ்ச்செல்வி என்கிற பெண்ணை அவன் லவ் பண்ணி, அதற்கு நான் தூது போனது தனிக் கதை!

நான் டயரியில் எழுதி வைத்த சுவாரஸ்யமான விஷயம் அதுவல்ல.

ஒரு மழைக்காலத்தில் டைப்ரைட்டிங் முடிந்து, மாலையில் எதிரே உள்ள தியேட்டரில் படம் பார்க்கப் போனேன். 'அன்பளிப்பு' என்பது படத்தின் பெயர். சிவாஜிகணேசன், சரோஜாதேவி, ஜெய்சங்கர் நடித்த படம் அது. 'வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே... வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்... நான் வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்... அத்திரி மாத்துப் பத்திரி பொண்ணு ஐஸுபக்கா பக்காடி...' என்று ஒரு மாட்டுவண்டியில் சிவாஜியும் சரோஜாதேவியும் ஜாலியாகப் பாடி வரும் காட்சி இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

படம் முடிந்து ஒன்பது மணிக்கு வெளியே வந்தபோது, மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டு இருந்தது. நல்ல இருட்டு. பஸ் கிஸ் எதுவும் வருகிற மாதிரி தெரியவில்லை. நான் குடை கொண்டு வந்திருந்தேன். எனவே, வழக்கம்போல நடராஜா சர்வீஸில் கிளம்பிவிட்டேன். இடியும் காற்றுமாகப் புரட்டியெடுத்துக்கொண்டு இருந்தது. பளீர் பளீரென்று மின்னல் வெட்டுக்கள். இருட்டாக இருந்தாலும், பழகிய ரோடு ஆதலால் வேகமாக நடையை எட்டிப் போடமுடிந்தது. முன்னே பின்னே ஒருத்தரும் இல்லை. நான் மட்டும் தனியனாக நடந்துகொண்டு இருந்தேன்.

கொஞ்ச தூரம் போனதுமே குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. சீக்கிரமாக வீடு போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று கால்களை எட்டிப் போட்டேன். எங்கோ குழந்தை சிணுங்குகிற சத்தம் கேட்டது. இந்த வேளையில், இந்த இருட்டில் குழந்தையா! அடுத்த ஒரு மின்னல் வெட்டில், சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில், இளம்பெண் ஒருத்தி கையில் குழந்தையுடன் நின்றிருப்பது தெரிந்தது. அருகில் போனேன். அந்தப் பெண்ணின் உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது.

"நீங்க சங்கீதமங்கலம் போகணுமா? நானும் அங்கேதான் போறேன். வாங்க, குடையிலேயே போயிடலாம்!" என்று அழைத்தேன்.

அவள் கொஞ்சம் தயங்கினாலும், சூழ்நிலை கருதி என்னோடு வரச் சம்மதித்தாள். அவளுக்குக் கிட்டத்தட்ட என் வயசுதான் இருக்கும். ஆனால், ஆண்களைவிடப் பெண்கள் முதிர்ச்சியாக, அதுவும் புடவையில் என்றால் கேட்கவே வேண்டாம். பெரியவர்களாகத் தெரிவார்களே! அவள் வெள்ளைக் கோடுகள் போட்ட கறுப்புப் புடவையில் அழகாக இருந்தாள். (அது சரி, அந்த வயசில் எனக்கு எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் தெரிந்தார்கள்!) அந்தப் பெண்ணின் சேலை, ஜாக்கெட் முழுவதும் மழையில் நனைந்து, உடம்போடு ஒட்டியிருந்தது. தலைமுடி ஈரத்தில் நனைந்து, முகத்தில் கேச இழைகள் படிந்திருந்தது கூட அழகாகத் தோன்றியது. குடைக்குள் எனக்கு மிக நெருக்கமாக அவள் நடந்தபோது, இனம்புரியாத உணர்வுகள் என்னுள் படபடத்தன. அவள் கையில் இருந்த குழந்தை மீது சாரல் அடிக்கக்கூடாது என்கிற அக்கறையில் நான் அவளோடு இன்னும் நெருங்கி நடக்க, அவள் அடுத்த ஆண் என்கிற கூச்சத்தோடு விலகி நடந்தாள்.

"எங்கே இந்த ராத்திரியில இங்கே வந்து மாட்டிக்கிட்டீங்க?" என்றேன், ஏதாவது பேசவேண்டுமே என்று.

"சினிமாவுக்கு நானும் என் வூட்டுக்காரரும் வந்தோம். நடுவுல அவருக்கு சோலி வந்துடுச்சி. 'நீ படம் பார்த்துட்டு வூட்டுக்குப் போ! நான் சிறுவாலை வரைக்கும் போய் ஒரு சோலிய முடிச்சுட்டு ராவிக்கா வூட்டுக்கு வந்துடறேன்'னு சொல்லிட்டுப் போயிட்டாரு. மழை வலுக்கறதுங்காட்டியும் வூட்டுக்குப் போயிடணும்னு, படம் முடியறதுக்கு மிந்தியே பொறப்டேன். இங்க வசமா வந்து மாட்டிக்கிட்டேன்" என்றாள்.

"பெரியவங்க பரவால்ல... சமாளிச்சுக்கலாம்! குழந்தைக்கு ஒண்ணரை வயசுதான் ஆவும்போலிருக்கு. அது இப்படி மழையில நனைஞ்சுதுன்னா என்னத்துக்காகுறது? குடையாச்சும் கொண்டு வந்திருக்கலாமில்லே?" என்றேன்.

"குடை இல்லியே! இருந்தா கொண்டு வந்திருப்போம்" என்றாள் பாவமாக. அவளுக்கும் அவள் கையிலிருந்த குழந்தைக்கும் சாரல் படாதவாறு குடை பிடித்தபடி நெருக்கமாக நடந்தபோது, அகஸ்மாத்தாக அவ்வப்போது அவள் மீது நான் உரச நேர்ந்தது. தவிர, அவள் வேகத்துக்கேற்ப நான் நடக்கும் வேகமும் குறைந்தது.

"நீங்க வாத்தியார் வூடா?" என்றாள். "ஆமா!" என்றேன். "ஐயர் வாத்தியார் மவன்தானே நீங்க?" என்றாள் மறுபடி. "ஆமா!" என்றேன். "உங்க அப்பா கிட்டதான் என் தம்பி படிக்குறான். மணின்னு பேரு" என்றாள்.

அவள் இப்படிச் சொன்னது, 'என்னிடம் ஏதாவது தப்புத்தண்டாவாக நடக்க முயற்சி செய்தால், மாட்டிக்கொள்வாய். நீ யாரு, என்னன்னு உன் ஜாதகமே எனக்குத் தெரியும்' என்று மறைமுகமாக எனக்கு எச்சரிக்கை விடுப்பது போல் இருந்தது.

அதன்பின் அதிகம் பேசாமல் நடந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்திருப்போம்... அடிக்கிற மழையில், எதிரே பலகீனமான டைனமோ வெளிச்சத்தோடு ஒரு சைக்கிள் வந்துகொண்டு இருந்தது.

அது வேறு யாருமில்லை; அவளின் கணவன்தான். நல்ல கிராமத்து தேகம். அவன் என்னைவிட நாலைந்து வயதுதான் பெரியவனாக இருப்பான். ஆனால், உடலுழைப்பால் கைகளும் கால்களும் முறுக்கேறியிருந்தன. கட்டுமஸ்தாக, பெரிய ஆள் போல இருந்தான்.

எங்கள் இரண்டு பேரையும் அத்தனை நெருக்கமாகப் பார்த்தவன் என்ன நினைப்பானோ என்று என் மனதில் ஒரு குறுகுறுப்பான உணர்வு ஓடியது. எல்லாம், நிறையக் கதைகள் படித்ததால் வந்த அதிகப்படியான கற்பனை! அவன் பார்க்கத்தான் பட்டிக்காட்டானாக இருந்தானே தவிர, பக்கா ஜென்டில்மேனாக இருந்தான்.

"தம்பி, ரொம்ப டாங்க்ஸ் தம்பி! அவசர ஜோலியா போயிட்டேன். பாவம் புள்ள, கையில குழந்தையோடு எங்கே மாட்டிக்கிச்சோ என்னமோன்னு பதறிப்போய் ஓடியாறேன்! காப்பாத்திக் கர சேத்துட்டீங்க!" என்றவன், அந்தப் பெண்ணிடம், "வா புள்ள! கேரியர்ல உக்காந்துக்க. வெரசா போயிரலாம்" என்றான்.

"நீங்களும் வாங்க தம்பி, முன்னாடி பார்ல உக்காருவீங்கள்ல?" என்றான்.

"இருக்கட்டுங்க! இந்த மழையில அவங்கள வெச்சு ஓட்டுறதே பெரிய காரியம். நீங்க போங்க, நான் வரேன். அது இருக்கட்டும், இவ்ளோ தூரம் இவங்களை நனையாம கூட்டி வந்தது வீணாப் போயிடும் போலிருக்கே. இந்த மழையில எப்படிப் போவீங்க?" என்றேன்.

"மழையப் பாத்தா முடியுங்களா? போய்த் துவட்டிக்க வேண்டியதுதான். ஈரம் பட்டா உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?" என்று சிரித்தான்.

"சரி, இந்தக் குடையை எடுத்துக்கிட்டுப் போங்க! நாளைக்கு வாங்கிக்கிறேன்" என்றேன்.

"இதெல்லாம் ரொம்ப அநியாயம் தம்பி! நீங்க நனைஞ்சு வருவீங்க, நாங்க பாட்டுல கண்டுக்காம போகணுமா? என்ன புள்ள, வாயில கொழுக்கட்டையா? தம்பிக்கு எடுத்துச் சொல்றது!" என்றான்.

இவ்வளவு நேரமும் அந்தப் பெண், குடையின் கீழ் பாதுகாப்பாக என்னை ஒட்டித்தான் நின்றுகொண்டு இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

"நீங்களும் வாங்க! பார் கட்டைல உட்கார்ந்துக்குங்க. பயப்படாதீங்க. இவரு எட்டு ஆளை வெச்சுக்கூட ஓட்டுவாரு!" என்று சிரித்தாள்.

அவன் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு, தரையில் காலூன்றிக் கொள்ள, அவள் பத்திரமாக கேரியரில் உட்கார்ந்துகொண்டு, மடியில் குழந்தையைக் கிடத்திக்கொண்டாள். அதுவரை அவளுக்கு நான் குடை பிடித்துக்கொண்டு இருந்தேன்.

"குடையை இப்படி என்கிட்ட கொடுங்க. ம்... பார்ல உட்காருங்க, சொல்றேன்!" என்று வற்புறுத்தினான் அவன். உட்கார்ந்துகொண்டேன். பாரில் உட்கார்ந்து வருவது பெரிய சங்கடமாக இருந்தது எனக்கு.

அவனே இடக் கையில் குடையைப் பிடித்தபடி, வலக் கையால் ஹேண்டில்பாரைப் பிடித்து, சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

ஒரு வழியாக சங்கீதமங்கலம் வந்தது. ஏரியைக் கடந்து ஊருக்குள் நுழைகிற எல்லையிலேயே அவர்களின் குடிசை. அவளை இறக்கிவிட்டுவிட்டு, "நீ இரு புள்ள! நான் தம்பியைப் போய் அதும் வூட்டுல விட்டுட்டு வந்துடறேன்" என்றான்.

"அதெல்லாம் வேணாங்க. நான் நடந்தே போயிடுவேன்" என்றாலும் கேட்கவில்லை. "அட, நீங்க சும்மா இருங்க தம்பி. ரெண்டு மிதி மிதிச்சா உங்க வூடு! கேரியர்ல உட்காருங்க. சல்லுனு போயிரலாம். எவ்ள நேரம் ஆயிரப் போவுது!" என்று வலுக்கட்டாயமாக என்னை ஏற்றிக்கொண்டு சரசரவென்று கொண்டு வந்து என் வீட்டு வாசலில் விட்டுவிட்டு, சட்டென்று மழையிலேயே தொப்பலாக நனைந்தபடி சைக்கிளை ஓட்டிக்கொண்டு போய்விட்டான்.

படிப்புக்கும் பண்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை, வசதிக்கும் நாகரிகத்துக்கும் தொடர்பு இல்லை என்று எனக்கு உணர்த்திய சம்பவம் இது.

'மழையில நனைஞ்சா இந்த உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?' என்று கேட்டான். உண்மைதான், இரும்புதான் துருப்பிடிக்கும்; தங்கம் துருப்பிடிக்குமா என்ன?

இந்தச் சம்பவத்தைதான் என் டயரியில் எழுதி வைத்திருந்தேன். இத்தனை விலாவாரியாக அல்ல! சுருக்கமாக.

மறுநாள் டயரி எழுதுவதற்காக அதை எடுத்தபோது, அதில் என் அப்பாவின் கையெழுத்து தெரிந்தது.

பரபரப்பாகப் படித்தேன். குறிப்பிட்ட சம்பவத்தைப் படித்ததாகவும், என்னை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் எழுதியிருந்தார். 'உதவவேண்டும் என்கிற உன் உள்ளம் உயர்ந்தது; ஆனால், எல்லோரும் அந்தப் பெண்ணின் கணவன் போல் இருப்பார்கள் என்பது நிச்சயம் இல்லை. நீ ஒன்று செய்திருக்கலாம். பேசாமல் அந்தப் பெண்ணிடமே குடையைக் கொடுத்து, வசதியாக அவளை நடந்துவரச் சொல்லிவிட்டு, நீ தனியாக மழையில் நனைந்தே நடந்து வந்திருக்கலாம்' என்று எழுதியிருந்தார். 'ஆமாமில்லே..? இது ஏன் எனக்கு அப்போது தோணலே?' என்று நினைத்துக்கொண்டேன்.

மறுநாளிலிருந்து நான் டயரி எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

***
சிறந்த எண்ணங்கள் மூளையிலிருந்து பிறக்கின்றன. உயர்ந்த எண்ணங்களோ இதயத்திலிருந்து தோன்றுகின்றன.

34‍-வது புத்தகக் காட்சி!

நான், பொன்ஸீ, ஆரூர்தாஸ், அவரின் அண்ணன் மகன்
ரு வழியாக, 34-வது புத்தகக் காட்சியை நேற்று பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

சங்கீத கச்சேரிக்குப் போகிறவர்கள், அங்கே கான்ட்டீனில் ஒரு வடையையாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வரவில்லையென்றால், கச்சேரிக்குப் போய் வந்த புண்ணியமே அவர்களுக்குக் கிட்டாது என்பதுபோல ஆகிவிட்டது புத்தகக் காட்சியும்! உள்ளே ஸ்டால்களுக்கு நிகரான கூட்டம் கான்ட்டீனிலும் அம்மியிருந்தது.

சரியாக இரண்டு மணிக்கு, நான் என் மகனோடு புத்தகக் காட்சிக்குள் நுழைந்தேன். முதலில், விகடன் ஸ்டாலைத் தேடிக் கண்டுபிடித்து, 'காலப் பெட்டகம்' தொகுப்புப் புத்தகம் ரெடியாகி விற்பனைக்கு வந்துவிட்டதா என விசாரித்தேன். 'இன்னும் இல்லை; இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும்' என்றார்கள். வெளியே ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருந்ததால், பலர் வந்து மேற்படி புத்தகம் இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிப் போனதாகத் தகவல்.

'சரி, வருகிறபோது வரட்டும்' என்று, நான் என் மகனுடன் மொத்த ஸ்டால்களையும் ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

பொங்கல் போனஸ் கையில் இருக்கிற நேரமாகப் பார்த்து புத்தகக் காட்சியை நடத்தலாம் என்று முதன்முதலில் ஐடியா கொடுத்த புண்ணியவான் யாராக இருந்தாலும், இதோ, அவர் வாயில் ஒரு பிடி சர்க்கரை! என் கையிலும் கணிசமாகக் காசிருந்தது. அதற்கேற்ப என்னென்ன வாங்கவேண்டும் என்று என் மகனின் மனதிலும் ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது.

எந்த ஸ்டாலையும் விட்டுவிடக்கூடாது என்கிற உத்தேசத்தில், முதலில் இடது கோடியிலிருந்து தொடங்கி, 'எஸ்' மாதிரி 'யு' டர்ன் அடித்து, வளைந்து வளைந்து வந்தோம். வழியில் ஏதேனும் ஒரு பதிப்பகத்தின் ஸ்டால் என் மகனை ஈர்த்துவிட்டால், 'அப்பா! ஒரு நிமிஷம்' என்று சொல்லிவிட்டு, உள்ளே போய் ஜோதியில் கலந்துவிடுவான். அவன் வரும் வரையில் நான் பாதையில் நின்றுகொண்டு, அறிந்தவர் தெரிந்தவர் யாரேனும் தென்படுகிறாரா என்று பார்ப்பேன்.

உள்ளே போனவன், பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்து, 'அப்பா! உள்ளே ரெண்டு புக்ஸ் செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன். 240 ரூபாயாம். டிஸ்கவுன்ட் போக 200 ரூபாய்க்குள்ளதான் ஆகும். காசு கொடு!' என்பான். என்ன வாங்கி வருகிறான் என்று பார்த்தால், ஏதாவது கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகமாக இருக்கும்.

பிறகொரு ஸ்டாலில் புகுந்து, மாஜிக் செய்வது எப்படி, ஐம்பது வகை டிரிக்ஸ், சீட்டுக்கட்டில் தந்திர விளையாட்டு, ஓரிகாமி மற்றும் டிராயிங் சம்பந்தமான புத்தகங்களை அள்ளி வந்தான். அமர்சித்ரா காமிக்ஸுகள் அடுக்கி வைத்திருந்த ஸ்டாலில் புகுந்து பஞ்சதந்திரக் கதைகள், பீர்பால் ந‌கைச்சுவைக் கதைகள், ஹனுமான், நாரதர், சகுந்தலை போன்று காமிக்ஸ் புத்தகங்களாக ஒரு பத்துப் பன்னிரண்டு தேற்றிவிட்டான்.

'நீ ஒண்ணுமே வாங்கலையாப்பா?' என்று கரிசனமாகக் கேள்வி வேறு! அவன் கேட்டானே என்று ரோஷம் வந்து, கண்ணதாசன் பதிப்பகத்தில் புகுந்து, 'அர்த்தமுள்ள இந்து மதம்' ஒரு செட் அப்படியே மொத்தமாக வாங்கினேன். அதை அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாசித்திருக்கிறேனே தவிர, முழுமையாகப் படித்ததில்லை. வெறுமே லைப்ரரிக்குச் சேர்ப்பதற்காக என்றில்லாமல், படித்தே தீருவது என்று வாங்கினேன்.

'அர்த்தமுள்ள இந்து மதம்' என்கிற தலைப்பு சாவி சார் தந்தது. தினமணிகதிரில் அவர் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது, கவியரசு கண்ணதாசனிடம் ஆன்மிக விஷயங்களைத் தொடராக எழுதும்படி கேட்டுக்கொண்டாராம். உடனே கண்ணதாசன் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டு, "நல்ல ஆளைப் பிடிச்சீங்க சார், ஆன்மிக விஷயம் எழுதுறதுக்கு! நான் சினிமாக்காரன். தவிர, போதைக்கு அடிமையானவன்னு உலகத்துக்கே தெரியும். நான் எழுதினா எவனாவது மதிப்பானா?" என்று மறுத்தாராம். "இல்லை. நீங்க எழுதினாதான் இளைஞர்கள் படிப்பாங்க. உங்க பர்சனல் வாழ்க்கையையும், எழுத்தையும் இணைச்சுப் பார்க்க மாட்டாங்க. விஷயம்தான் முக்கியம். யார் எழுதறாங்கன்றது முக்கியம் இல்லே. கொள்ளைக்காரனா இருந்த வால்மீகிதானே ராமாயணம் எழுதினாரு?" என்று வற்புறுத்தினாராம் சாவி.

"இந்து மதத்தின் சிறப்புகளை நீங்க உங்க அனுபவத்தோடு உதாரணங்கள் சொல்லி எழுதுங்க. நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்!" என்று சொன்ன சாவி, 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்னும் தலைப்பைச் சொல்லி, அறிவிப்பையும் வெளியிட்டாராம்.

பத்திரிகையுலக ஜாம்பவானின் வாக்கு பொய்க்குமா என்ன? அந்தத் தொடர் வெளியான காலத்தில் அத்தனைப் பரபரப்பாக இருந்தது. நேற்றைக்கும் நான் பார்த்த வரையில் கண்ணதாசன் பதிப்பகத்தில் 'அர்த்தமுள்ள இந்து மதம்' புத்தக விற்பனைதான் படு சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது.

பிள்ளையார், சரஸ்வதி, சிவன், ஷீர்டி சாயிபாபா என 3டி கடவுள் படங்களை ஓரிடத்தில் விற்றுக்கொண்டு இருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்னால், தி.நகர் பிளாட்பாரத்தில் இதே போல் 3டி இயற்கைக் காட்சிப் படங்களை ஒன்று 150 ரூபாய் என்கிற வீதத்தில், நாலைந்து படங்கள் வாங்கினேன். இங்கே சாமி படங்கள் விலை மலிவாக, பிரேமிட்டது 90 ரூபாய், வெறும் படம் 60 ரூபாய் எனக் கிடைத்தது. அதிலும் ஒரு நாலைந்து வாங்கிப் போட்டேன்.

பியானோ சாஃப்ட்வேர், கிட்டார் சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் கேம்ஸ் என ஒரு ஸ்டாலில் புகுந்து புறப்பட்டு 600 ரூபாய்க்கு வேட்டு வைத்தான் மகன். 'கண்ணா! அவ்ளோதான். கொண்டு வந்த 2,500 ரூபாயும் காலி. பையில பத்து ரூபா தாள் கொஞ்சமும், ஐம்பது ரூபாய் ஒண்ணோ ரெண்டோ கிடக்கும்னு நினைக்கிறேன். அதனால, ஷாப்பிங் முடிஞ்சுது. கிளம்பறோம்!' என்றேன்.

இதற்குள் அத்தனை ஸ்டால்களையும் நாங்கள் ஒரு ரவுண்டு வந்துவிட்டிருந்தோம். மீண்டும் கூட்டத்தில் நீந்தி விகடன் ஸ்டாலுக்குப் போகிற வழியில் விகடன் பிரசுர பொறுப்பாசிரியர் பொன்ஸீயிடமிருந்து போன்... 'வாங்க! பொட்டி வந்துடுச்சு!'

'காலப் பெட்டகம்' புத்தகம் தயாராகி வந்துவிட்ட‌து என்பதையே அவர் அப்படிச் சொன்னார்.

விகடன் ஸ்டாலுக்குப் போனோம். அங்கே என் பெருமதிப்புக்குரிய கதை வசனகர்த்தா, என் மீது மிகவும் அன்புகொண்ட பெரியவர் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் வந்திருந்தார். 'காலப் பெட்டகம்' புத்தக‌த்தின் முதல் பிரதியை அவரிடம் வழங்கினார் பொன்ஸீ.

மாலை 6 மணி போல், ஆரூர்தாஸ் அவர்களை அழைத்துச் சென்று, கான்டீனில் காபி வாங்கித் தந்தோம். டிபன் எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் ஆரூர்தாஸ். தனக்கு சதாபிஷேகம் விரைவில் வரவிருக்கிறது என்றும், தன் மீது அன்புகொண்ட தொழிலதிபர் நல்லி குப்புசாமி அதை கிராண்டாக நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார் என்றும், அவசியம் நான் குடும்பத்தோடு அந்த விழாவுக்குக் கட்டாயம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் ஆரூர்தாஸ். ‌"இன்னும் அதற்குச் சில மாதங்கள் இருக்கு. அழைப்பு அனுப்பறேன் ரவி! கட்டாயம் வரணும். நீங்க என் குடும்பத்துல ஒருத்தர்!" என்றார். பெரிய ஆளாக வரவேண்டும் என என் மகனின் தலையில் கை வைத்து, மனமார ஆசிர்வதித்தார் அந்தப் பெரியவர்.

காஞ்சிப் பெரியவர் உள்பட, மகான்கள் யாரையும் நான் சந்தித்ததோ, ஆசி பெற்றதோ கிடையாது. எனக்குக் கிடைத்ததெல்லாம் சாவி சார், பாலு சார், டி.எம்.எஸ்., பாக்கியம் ராமசாமி, ஆரூர்தாஸ் போன்ற பெரியவர்களின் ஆசிகள்தான். என் மகனுக்கும் அவர்களின் ஆசி கிடைத்திருப்பதில் பூரண மன நிறைவு எனக்கு.

மணி மாலை 6:30.

புதிர்ப் போட்டி வைத்து, அதில் வென்ற பதிவுலக நண்பர்கள் திரு.சொக்கன், திரு.அதிஷா இருவருக்கும் 'காலப் பெட்டகம்' புத்தகம் பரிசளிப்பதாகவும், புத்தகக் காட்சிக்கு வந்தால் நேரிலேயே வழங்குவதாகவும் சொல்லியிருந்தேன். திரு.சொக்கன், தன்னால் செவ்வாய் அன்றுதான் சென்னை வரமுடியும் என்றும், அதிஷாவிடம் தனக்கான புத்தகத்தைக் கொடுத்துவிட்டால் பெற்றுக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால், அதிஷாவும் நேற்று புத்தகக் காட்சிக்கு வரவில்லை. எனவே, மகனுடன் கிளம்பிவிட்டேன்.

இன்று காலையில் போன் செய்துவிட்டு, விகடன் அலுவலகம் வந்திருந்தார் அதிஷா. அவருடன் யுவகிருஷ்ணாவும் வந்திருந்தார். அவர்களுடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். துடிப்பும் உற்சாகமும் நிரம்பிய இளைஞர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதைப் போன்ற எனர்ஜி டானிக் வேறு எதுவும் இல்லை.

சொன்னபடி திரு.சொக்கனுக்கும் சேர்த்து அதிஷாவிடம் 'காலப் பெட்டகம்' புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்துவிட்டேன்.

அதிஷா என்பது ஒரு பெண்ணின் பெயர் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இல்லையாம். அது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குருவின் பெயராம். ஓஷோ ரஜ்னீஷுக்கும் குரு போன்றவராம் அதிஷா. ரஜ்னீஷின் புத்தகம் ஒன்றில் இந்தப் பெயரைப் பார்த்ததும் ஈர்க்கப்பட்டுத் தன் புனைபெயராக வைத்துக்கொண்டதாகச் சொன்னார் அதிஷா.

குரு அதிஷாவை ரஜ்னீஷ் சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த அதிஷாவை என் மகன் ரஜ்னீஷ் சந்திக்கும் வாய்ப்பு நேற்று இருந்தது.‌

அதிஷா வராததால், நேற்று ஒரு மகத்தான குரு சிஷ்ய சந்திப்பு நிகழாமல் போய்விட்டது!

***
ஒரு பொருளின் விலை என்பது அந்த‌ச் சரக்குக்குதானே தவிர, அது வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கோ புட்டிக்கோ அல்ல; ஆனால், ஒரு புத்தகத்தின் விலை என்பது அட்டைக்கும், அச்சுக்கும், தாளுக்கும்தானே தவிர, அதில் உள்ள சரக்குக்கு அல்ல!

ரம்மியமான ரமணீய நினைவுகள்!

ழுத்தாளர் ரமணீயன் மறைந்துவிட்டார். இந்த வார குமுதம் கேள்வி-பதில் பகுதி பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். 'அடடா!' என்று கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அவருடன் சொல்லிக்கொள்ளும்படியாக எனக்கு அதிகம் தொடர்பு இல்லையென்றாலும், நான் சாவியில் சேர்ந்த புதிதில் அங்கே முக்கியப் பொறுப்பில் இருந்தவர் ரமணீயன்தான் என்கிற விதத்தில் பழக்கம் உண்டு.

அபர்ணா நாயுடு என்கிற புனைபெயரில் பிரபலமான திரு.சி.ஆர்.கண்ணன், திரு.ரமணீயன் மற்றும் இன்றைய தினமணி நாளேட்டின் ஆசிரியர் திரு.வைத்தியநாதன் ஆகியோர் அங்கே மும்மூர்த்திகளாக இருந்தார்கள்.

கண்ணன் பெரும்பாலும் கட்டுரைத் தொடர்கள், தொடர்கதைகள் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு மேட்டர்களைக் கவனித்துக் கொள்வார்; வைத்தியநாதன் சினிமா மேட்டர்களையும், அரண்மனை ரகசியம், அரசல் புரசல் என்பன போன்ற தலைப்புகளில் டெல்லி, தமிழகம் சார்ந்த அரசியல் மேட்டர்களையும் சேகரித்துத் தருவார். ரமணீயன், சாவி இதழ் கலகலப்பாக வரவேண்டும் என்பதிலும், சிறுகதை மற்றும் லேஅவுட் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி, வாரா வாரம் பத்திரிகையைக் கொண்டு வருவதில் ஈடுபடுவார். குமுதத்துக்கு எப்படி ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் ஆகிய மூவரோ, அது போல சாவிக்கு இவர்கள் மூவரும் என்று நான் எண்ணிக் கொள்வேன்.

சாவி சாருக்குமேகூட அப்படியொரு எண்ணம் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். காரணம், அவர் மற்ற பத்திரிகைகள் எதையும் தனக்குப் போட்டியாக நினைக்க மாட்டார். குமுதத்தை மட்டுமே போட்டியாக நினைப்பார். இத்தனைக்கும் அதன் சர்க்குலேஷனும் சாவி சர்க்குலேஷனும் மலையும் மடுவும் போல. இருந்தாலும், தன் பத்திரிகையின் சர்க்குலேஷனை என்றாவது ஒரு நாள் குமுதத்தை விஞ்சிக் காட்டிவிட வேண்டும் என்று ஒரு தீராத தாகம் அவருக்கு எப்போதும் இருந்தது.

வாரா வாரம் குமுதம் வந்ததுமே, அதை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு வரி விடாமல் படித்துவிடுவார் சாவி. எங்கள் அனைவரிடமும், "பார்த்தீங்களா, எப்படிப் பிரமாதப்படுத்தியிருக்கான் குமுதங்காரன்! அவனால பண்ண முடியும்போது உங்களால முடியாதா?" என்பார். "பாருங்க, தலைப்பை எவ்வளவு க்ரிஸ்ப்பா கொடுத்திருக்கான். தலைப்பைப் படிச்சதுமே அந்தக் கதையை, கட்டுரையை உடனே படிக்கணும்னு தோணுது இல்லையா, அங்க நிக்கறான் குமுதங்காரன்!" என்பார். குமுதத்தில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்துக்கான லேஅவுட் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அதைப் பிரித்து எங்களிடம் காண்பித்து, "எவ்வளவு ரசனையோட பண்ணியிருக்கான் பாருங்க! இந்த மாதிரிதான் நம்ம சாவியைக் கொண்டு வரணும்னு நான் விரும்பறேன்" என்பார். குமுதத்தில் தலைப்பு எழுத்தை ஏதாவது புதுமையாக, வித்தியாசமாக எழுதியிருந்தாலும் அதை எங்கள் ஆர்ட்டிஸ்டிடம் காட்டி, "இந்த மாதிரி உன்னால எழுத முடியாதா?" என்பார். ஆனால், அந்த ஓவியரின் திறமையைக் குறைவாக எடை போடுகிற மாதிரி பேச மாட்டார். "இதைவிட உன்னால இன்னும் சிறப்பா, அழகா எழுத முடியும். கொஞ்சம் யோசிக்கணும். மூளையைக் கசக்கணும். அவ்வளவுதான்!" என்பார்.

சாவியின் கனவுகளுக்கெல்லாம் கை கொடுக்கும் வலது கரமாகத் திகழ்ந்தவர் ரமணீயன்தான். சாவி சாரைப் போலவே ரமணீயனுக்கும் குமுதப் பித்து அதிகம். அவரிடம் நான் பழக நேர்ந்தது அதிகபட்சம் ஓராண்டுக் காலம்தான். அதற்குள் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

'ரவிபிரகாஷ்' என்று எனக்குப் பெயர் சூட்டியவரே ரமணீயன்தான். அதற்கு முன்னால் நான் கல்கி, ஆனந்தவிகடன், தினமணிகதிர், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் எல்லாம் 'இரவிப்பிரகாஷ்' என்றே எழுதி வந்தேன். சாவியில் சேர்ந்த இரண்டு வாரங்களிலேயே சிறுகதை ஒன்றை எழுதித் தரும்படி கேட்டார் ரமணீயன். அப்படியே எழுதி, அவரிடம் பரிசீலனைக்குத் தந்துவிட்டு, அவரின் அபிப்ராயத்தை அறிய ஆவலோடு காத்திருந்தேன்.

இரண்டு நாள் கழித்து, என்னைக் கூப்பிட்டார். அவர் கையில் நான் எழுதிக் கொடுத்த கதை. "என்ன இது, நல்லாவே இல்லே!" என்றார், சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு. சட்டென்று மனம் சுணங்கிப்போனது. அடுத்த விநாடியே பளீரென்று சிரித்தவர், "அட, நான் உன் கதையைச் சொல்லலைப்பா! அது சூப்பரா இருக்கு. நான் நல்லால்லேன்னு சொன்னது நீ பேர் எழுதுற விதத்தை! ஸ்கூல் படிக்கும்போது உனக்கு உன் தமிழய்யாவை ரொம்பப் பிடிக்குமோ? என்ன இது, இ.. ர.. வி.. ப்.. பி.. ரகாஷ்னுட்டு! அதெல்லாம் வேணாம். வெறுமே ரவிபிரகாஷ்னு போடு போதும்! என்னைப் பாரு, இரமணீயன்னா போட்டுக்கறேன்?" என்றார்.

தொடர்ந்து அவரே, "எம்.ஜி.ஆர். தன் பெயரை எம்.ஜி.இராமச்சந்திரன்னு போட்டுக்கறாரே! அவரைவிட உங்க புகழ் உசந்துடுச்சான்னெல்லாம் கேக்கக்கூடாது! ரவிபிரகாஷ்னு போட்டுக்கோன்னா போட்டுக்கணும்!" என்று உரிமையோடு சொல்லிவிட்டு, அந்த வாரமே என் சிறுகதையைப் பிரசுரித்தார். எப்படித் தெரியுமா? கதைத் தலைப்பை மிகச் சிறியதாகவும், கதாசிரியர் பெயரைக் கதைத் தலைப்பு மாதிரி பெரியதாகவும் வைத்து லே அவுட் செய்யச் சொன்னார். எனக்கு அது புதுசாக இருந்தது. "என்ன சார் இது, இவ்ளோ பெரிசாவா கதாசிரியர் பெயரைப் போடுவாங்க?" என்றேன். "ஏன், என்ன தப்பு? போடக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?" என்றார். "இல்ல... சார் (சாவி) ஏதாவது கோவிச்சுக்க மாட்டாரா?" என்று கேட்டேன். "மாட்டேன்! பாராட்டுவார். நீ வேணா பாரு!" என்றவர், "எப்படியோ, உன்னால இந்த வாரம் எழுதின கதாசிரியர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். எல்லார் பேரும் பெரிசா கொட்டை எழுத்துல வரப்போகுதே!" என்று சிரித்தார்.

அந்தக் கதை 'அடிமைகள்'. ரமணீயன் சொன்னது போலவே சாவி சார் அந்த லே-அவுட்டைப் பாராட்டவே செய்தார்.

"உனக்கு எந்த ஓவியருடைய படம்னா ரொம்பப் பிடிக்கும்?" என்று கேட்டார் ரமணீயன். "மாயா" என்றேன். "சரி, அப்படின்னா இந்தக் கதையை நீயே நேர்ல அவர்கிட்ட கொண்டு போய்க் கொடுத்து, படம் போட்டு வாங்கிட்டு வா!" என்றார்.

சாவி வார இதழில் அதுவரை ஓவியர் மாயா படம் வரைந்ததில்லை. அந்த என் கதைக்கு வரைந்ததுதான் சாவியில் மாயா வரைந்த முதலும் கடைசியுமான படம்.

ஒருமுறை, லே அவுட் செய்யப்பட்ட இரண்டு பக்கப் படக் கதை ஒன்றை வைத்துப் படித்துக்கொண்டு இருந்தார் ரமணீயன். படங்கள்: ஓவியர் அரஸ். நான் எட்டிப் பார்த்ததும், "இந்தா! படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு?" என்று அதை என்னிடம் கொடுத்தார் ரமணீயன்.

வாங்கிப் படித்தேன். இரண்டு மூன்று கட்டங்கள் படித்ததுமே, அது படக் கதை இல்லை; சினிமா விமர்சனம் என்று புரிந்தது. மேலே படிக்காமல் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து, "சார்... என்ன சார் இது! சினிமா விமர்சனமா இப்படி..." என்று இனம்புரியாத ஒருவித பரபரப்பும், இன்ப அதிர்ச்சியும், குழப்பமும் சேர்ந்த கலவையாய்க் கேட்டேன். "ஏன் ஷாக் ஆகிறே? சினிமா விமர்சனத்தை இப்படிப் படக் கதையாகப் போடக் கூடாதா என்ன? விஷயம் வாசகர்களுக்குப் போய்ச் சேரணும். அவ்வள‌வுதானே! இப்ப உனக்கு ஏற்பட்ட இந்த உணர்வு, இதைப் படிக்கிற அத்தனை வாசகர்களுக்கும் ஏற்படும் இல்லையா, அதுதான் ஒரு பத்திரிகையோட சக்ஸஸ் ஃபார்முலா!" என்றார். படக் கதை போன்று விமர்சனம் வெளியான அந்தப் படம் 'பாடு நிலாவே'.

'சாவி' இதழ் ஒன்றில் புதுமையான ஒரு சிறுகதை எழுதியிருந்தார் ரமணீயன். கதையின் ஆரம்பத்தில் ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தார். 'இந்தக் கதையில் கே.ஆர்.விஜயா நடித்த சினிமா படங்களின் பெயர்கள் ஐம்பது இடம்பெற்றுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உண்மையில், இவற்றில் 49 தான் கே.ஆர்.விஜயா நடித்த படங்கள். மீதி ஒரு படம் கே.ஆர்.விஜயா நடித்தது அல்ல! அது என்ன படம் என்பதைச் சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு 100 ரூபாய்' என்பதே அந்த அறிவிப்பு.

அதே போல... வரி, வரி என்று அதிகம் இடம்பெறுகிற மாதிரியான வார்த்தைகளைக் கோத்து ஒரு சிறுகதை எழுதி, பின்பு அதில் இருந்த 'வரி'களையெல்லாம் நீக்கிவிட்டு, அதை 'வரி விலக்கு பெற்ற கதை' என்ற தலைப்பில் வெளியிட்டார். 'முற்றும்' என்ற வார்த்தை அதிகம் இடம்பெறுகிற மாதிரி ஒரு கதை எழுதி, பின்பு 'முற்றும்' என்ற வார்த்தையை நீக்கி அதைப் பிரசுரித்துவிட்டு, அதற்கு 'முற்றும் துறந்த கதை' என்று தலைப்புக் கொடுத்தார்.

இதெல்லாம்தான் என் அடி மனதில் பதிந்து, பின்னாளில் விகடனில் ஒரு சினிமா ஸ்பெஷலில் 250‍-க்கும் மேற்பட்ட சினிமா தலைப்புகளை வைத்து ஒரு சிறுகதை எழுதவும், 'ஏடாகூடக் கதைகள்' எழுதவும் என்னை ஊக்குவித்திருக்க வேண்டும் என்று, யோசித்துப் பார்க்கையில் இப்போது தோன்றுகிறது.

இயக்குநர் வசந்தும் (அப்போது அவர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குந‌ராக இருந்தார்) ரமணீயனும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி ஒன்றாகச் சுத்துவார்கள். 'கேளடி கண்மணி' படம் சம்பந்தமாக இருவரும் கதை டிஸ்கஸ் செய்துகொண்டு இருந்ததாக ஞாபகம். ரமணீயன் தொலைக்காட்சியில் நுழைய முயற்சி செய்துகொண்டு இருந்தார். இன்றைக்கு மெகா சீரியல், மெகா சீரியல் என்று ஒரே மெகா சீரியல் மேனியாவாக இருக்கிறதே... முதல் மெகா சீரியலுக்கு வித்திட்டவர் ரமணீயன்தான். ஆம்... அவரது கதை, வசனத்தில் உருவான 'விழுதுகள்'தான் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் வெளியான (பொதிகை சேனல்) முதல் மெகா சீரியல்.

அவர் எப்போதும் டி.வியிலேயே கவனமாக இருக்கிறார், பத்திரிகையைக் கவனிப்பதே இல்லை என்று கோபம் கொண்டு, அவரை ஒரு நாள் டிஸ்மிஸ் செய்துவிட்டார் சாவி அவர்கள்.

நான் சாவியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குள்ளாக, ரமணீயன் விலகிவிட்டதில், இழப்பு எனக்குதான். அவர் இருந்திருந்தால், பத்திரிகை நுணுக்கங்களை இன்னும் நான் அதிகமாகக் கற்றிருக்க முடியும்.
அதன்பின், சாவியில் ஓரிரு ஆண்டுகளுக்கு திரு.கண்ணன் ராஜ்ஜியமாகிப் போனது. அவர் என்னை எப்போதும் தனக்குப் போட்டியாகவே நினைத்தார். (அது பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.)

சாவியிலிருந்து விலகிச் சென்ற பின்பு, ரமணீயன் ஒரு மாத நாவல் தொடங்கி நடத்தியதாக ஞாபகம். 'எ நாவல் டைம்' என்று பெயர். ஒருவேளை, அது பாக்கெட் நாவல் ஜி.அசோகனின் பத்திரிகையாகவும் இருக்கலாம். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நாவலின் முதல் இரண்டு பக்கங்களில் ஆசிரியரின் கடிதம் இடம் பெறும். நம்மோடு தமாஷாகப் பேசுவது போன்று அந்தக் கடிதம் படிக்கப் படிக்க அத்தனை ஜாலியாக இருக்கும். ரமணீயனின் அந்தக் கடிதத்தைப் படிப்பதற்காக‌வே நான் தொடர்ந்து சில மாதங்கள் வரை அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு இருந்தேன்.

ரமணீயன் சாவியிலிருந்து விலகிய பின்பு அவரை நான் இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறேன். எனக்குத் திருமணமான புதிதில், மனைவியோடு தீவுத் திடல் சுற்றுலாப் பொருட்காட்சிக்குப் போயிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் அவரைப் பார்த்தேன். என் பணிகளைப் பற்றி அன்போடு விசாரித்தவர், "சாவி சார் ரொம்பவும் கோபப்படுவார். ஆனா, அதுல ஓர் அர்த்தம் இருக்கும்; நம் மீதான‌ அக்கறை இருக்கும். அதனால, அவர் கோபிச்சுக்கிட்டார்ங்கிறதுக்காக அவரை விட்டு வந்துடாதே! நான் வெளியே வந்ததுகூட‌ அவர் என்னைக் கோபிச்சுக்கிட்டார்ங்கிறதுக்காக இல்லை. நான் மேலே ஏற, எனக்கு அடுத்த படி தேவையா இருந்துது. அதான்!" என்று அறிவுரை சொல்லி, "வாரா வாரம் சாவி இதழ் பார்த்துக்கிட்டு வரேன். நல்லா பண்றே. இங்கே சாவி சார் கிட்டேதான் நீ நிறையக் கத்துக்கலாம். நிறையச் சுதந்திரம் கொடுப்பார். உற்சாகப்படுத்துவார். அதைப் பயன்படுத்திக்கிட்டு முன்னேர்றது உன் சமர்த்து!" என்று சொல்லி விடைபெற்றார்.

அடுத்த முறை, அவரை நுங்கம்பாக்கத்தில் இருந்த (வடக்கு சன்னதி தெருவோ, வடக்கு தேரடி தெருவோ... ஞாபகமில்லை.) அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தேன். அப்போது சாவி சார் மீது கோபித்துக்கொண்டு, வேறு பத்திரிகையில் ஏதேனும் வேலை கிடைக்குமா என்று தேடும் ஒரு முயற்சியாகவே அவரை நான் சென்று சந்தித்தேன். அப்போதும், 'உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்... கோபத்தைக் காரணம் காட்டி சாவி சாரை விட்டுப் பிரியாதேனு! பத்திரிகை சம்பந்தமா அவர் கிட்டே உன்னால கத்துக்க முடியாதது, வேற எங்கேயும் கத்துக்க முடியாது. பத்திரிகைத் துறையில் அவர் ஒரு பல்கலைக் கழகம்' என்று எனக்கு ஏகமாக புத்தி சொல்லி அனுப்பிவிட்டார்.

அந்த நல்ல மனித‌ரோடு அதிகம் பழகக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு.

(ஆனந்த விகடனில் நாலைந்து சிறுகதைகள் எழுதியுள்ளார் திரு.ரமணீயன். அவற்றில் ஒன்றை, அவரது நினைவாக, எனது 'உங்கள் ரசிகன்' வலைப்பூவில் விரைவில் பதிவிடுகிறேன்.)

***
சிலரின் அருமை அவர்கள் நம்மோடு இருக்கும்போது தெரியும்; சிலரின் அருமை, பிரியும்போதுதான் தெரிகிறது!

பட்டுக்கோட்டைப் பண்பாளர்!

ட்டுக்கோட்டை குமாரவேல், பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என பட்டுக்கோட்டைக்குச் சிறப்புச் சேர்த்த பெரியவர்கள் பலருண்டு என்றாலும், பட்டுக்கோட்டை என்றதுமே எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

சாவியில் நான் பணியில் சேர்ந்து, வெறுமே புரூஃப் பார்ப்பதோடு நிற்காமல், இதழுக்குப் பொறுப்பேற்று பத்திரிகைத் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டபோது, நான் என் விருப்பத்துக்கேற்ப ஒரு வி.ஐ.பி. எழுத்தாளரிடம் தொடர்கதை கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன் என்றால், அது பட்டுக்கோட்டை பிரபாகரிடம்தான். (அதற்கு முன்பு மோனா மாதமிருமுறை இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தபோது, நான் முதன்முதல் என் விருப்பத்துக்கேற்ப நாவல் வாங்கி வெளியிட்டது எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம். அது பற்றி முன்பு ஒருமுறை பதிவு எழுதியிருக்கிறேன்.)

பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன் நான் அதிகம் படித்தது மௌனி, லா.ச.ரா., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்... இவர்கள் யாருடைய கதைகளையும் அல்ல. ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்கள் இருவருடைய சிறுகதைகளையும், மாத நாவல்களையும் மட்டுமே நான் அதிகம் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.

ராஜேஷ்குமாரின் நாவல் எடுத்த எடுப்பில் யமஹா பைக் மாதிரி குபுக்கென்று வேகமெடுத்துக் கிளம்பும். வர்ணனைகளைவிட கதையின் பரபரப்புக்கும் திடுக் திருப்பங்களுக்கும் அவர் கதைகளில் அதிக முக்கியத்துவம் இருக்கும். படிக்கத் தொடங்கிவிட்டால், முடிக்கும் வரை கீழே வைக்கமுடியாது. அத்தனை விறுவிறுப்பாக இருக்கும்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கதை வேறு ரகம். மாத நாவல்களைப் பொறுத்தவரையில் முதல் அத்தியாயம் ஓர் இனிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிற விதமாக, ரசனையாகச் செல்லும். இரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கிய கதைக்குள் நுழைவார். சில வர்ணனைகளைப் படித்தபின், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அந்த வர்ணனைகளை மீண்டும் மனசுக்குள் காட்சியாக்கி ஓட்டிப் பார்த்து, அந்த ரசனையில் திளைப்பது எனக்கு மிகவும் விருப்பம். இதனால், அவரது நாவலைப் படித்து முடிக்க ரொம்ப நேரமாகிவிடும். ஒரே மூச்சில் படிக்க வேண்டுமென்று தோன்றாது. அனுபவித்து அனுபவித்துப் படிப்பேன்.

ராஜேஷ்குமாரின் கதை சூடும் சுவையும் உள்ள உயர்தரமான காபி என்றால், பட்டுக்கோட்டை பிரபாகரின் கதை நிதானமாகப் பருகவேண்டிய பழரசம். திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி - ரஜினி, கமல் என்கிற மாதிரி ராஜேஷ்குமார் - பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் நாவல் உலகில் இரு பெரும் தூண்கள் என்பது என் கருத்து.

எண்பதுகளில், திருச்சியில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அங்கே அவர்கள் சாவி பத்திரிகையைத் தொடர்ந்து வாங்கிப் படிப்பது தெரிந்தது. ஆரம்ப இதழ் முதல் அனைத்தையும் பைண்டு செய்து வைத்திருந்தார்கள். சாவி என்றொரு பத்திரிகையை முதன்முதல் அங்கேதான் பார்த்தேன். அதில் ஒரு நெடுங்கதையைப் படித்தேன். தலைப்பு ஞாபகம் இல்லை.

நாலைந்து நண்பர்கள். அவர்களில் ஒருவன், துப்பறியும் சிங்கமாக வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, எப்போதும் அது பற்றியே பேசிக்கொண்டு இருப்பான். ஒருமுறை, அவன் துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதாக ஒரு சம்பவம் நிகழும். ரிமோட் ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில், ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, ஹாலில் ஒரு பெண் கொலையுண்டு கிடப்பது தெரியும். போலீசுக்கு போன் செய்து வரவழைத்து, அதிரடியாக அந்த வீட்டின் கதவைத் தட்டி உள்ளே போனால், யாரும் கொலையுண்டதற்கான தடயமே இருக்காது. தான் கண்ணால் பார்த்ததாகச் சொல்வான். ‘மாடியில் என் மகள் படித்துக்கொண்டு இருக்கிறாள். அவளைத் தவிர, வேறு பெண்கள் கிடையாது’ என்று சொல்லி, அவளைக் கீழே கூப்பிடுவார் அந்த வீட்டின் ஓனர். அவள் கீழே இறங்கி வர, ‘இவள்... இவள்தான் இறந்துகிடந்தாள்’ என்று அலறுவான்.

இப்படியாக, மிக மர்மமாகச் செல்லும் கதை கடைசியில், அவனது துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதற்காக நண்பர்களாகச் செய்த செட்டப் அது என்று முடியும். ரொம்பவும் ரசித்துப் படித்தேன். லயித்துப் படித்தேன். யார் எழுதிய கதை இது என்று பெயரைப் பார்த்தேன். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமானது அப்போதுதான்.

அதன்பின்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் தொடர்கதை (அது அவரின் முதல் தொடர்கதை) ஒன்று சாவி இதழில் வெளியானது. மன்னிக்கவும், அதன் தலைப்பும் மறந்துவிட்டது. (வயசாகிறது அல்லவா!) யார் எழுதுகிறார் என்று கதாசிரியர் பெயரே இல்லாமல் வெளியான தொடர்கதை அது. கதையின் விறுவிறுப்பிலும் சுவாரசியத்திலும், அதை எழுதுவது யார் என்று தெரிந்துகொள்ள சாவி வாசகர்கள் பெரிதும் ஆர்வப்பட்டார்கள். நானும்! பட்டுக்கோட்டை பிரபாகர் என்று கடைசி அத்தியாயத்தில் பெயரை வெளியிட்டார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் என் மனதில் பதிந்தது அப்போதுதான்!

எழுத்தாளரின் பெயரை வாசகர்களின் மனதில் நிலை நிறுத்த சாவி சார் கையாண்ட உத்தி அது. அவரே ஆனந்தவிகடனில் ‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதியபோது, தன் பெயரையே போட்டுக் கொள்ளாமல், கடைசி அத்தியாயத்தில்தானே பெயரை வெளியிட்டார்! அவருக்குப் பின் அதே பாணியில் கடைசி அத்தியாயத்தில் தன் பெயரை வெளிப்படுத்திக்கொண்டவர் எனக்குத் தெரிந்து பட்டுக்கோட்டை பிரபாகர் மட்டும்தான். சாவி ‘ஆப்பிள் பசி’ என்று நாவல் எழுதினார். அந்தத் தலைப்பை மிகவும் ரசித்து, அதே பாணியில் ‘விஸ்கி தாகம்’ என்று தலைப்பிட்டு ஒரு நாவல் எழுதினார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

வர்ணனைகளே இல்லாமல் வெறுமே டயலாக்குகளிலேயே ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாகர். (தலைப்பு ‘தொடரும்’ என நினைக்கிறேன்). முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒரு நாவல் எழுதினார் (இதன் தலைப்பு ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ என நினைக்கிறேன்). இப்படி அவரது பல நாவல்களை நான் ரசித்துப் படித்திருக்கிறேன். ‘ஆகாயத்தில் ஆரம்பம்’ என்று ஒரு மாத நாவல். விமானத்தில் ஒரு விஞ்ஞானியைக் கடத்துவார்கள். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத கதை அது.

பிரபாகரின் நாவலில்தான் முதன்முறையாக வில்லன்கள் கொடூரமாகப் பேசாமல், காமெடியாகப் பேசி நான் படித்திருக்கிறேன்.

சாவியில் பொறுப்பேற்றபோது, தொடர்கதை கேட்டு பட்டுக்கோட்டை பிரபாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘அடுத்த வாரம் விளம்பரத்தில் அறிவிக்க ஒரு தலைப்பு கொடுங்கள்’ என்று என் கடிதத்தில் கேட்டிருந்தேன். ‘சாவியிலிருந்து கதை கேட்டுக் கொடுக்காமல் இருப்பேனா’ என நெகிழ்ச்சியோடு, உடனே பதில் போட்டிருந்தார். கதைத் தலைப்பு: திண்ணை வைத்த வீடு. அந்த இதழிலேயே விரைவில் பட்டுக்கோட்டை பிரபாகரின் புதிய தொடர்கதை ‘திண்ணை வைத்த வீடு’ ஆரம்பிக்கவிருப்பதாக சாவியில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். சொன்னது போலவே உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதி, உடனே அனுப்பி விட்டார். ஆழ்ந்து அனுபவித்துப் படித்து ரசிக்க வேண்டிய தொடர்கதை அது.

பின்னர் நான் விகடனில் சேரும் வரைக்கும்... ஏன், சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகும்கூட பட்டுக்கோட்டை பிரபாகரை நேரில் சந்தித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் மகள் திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக விகடன் அலுவலகம் வந்திருந்தார். அப்போது சந்தித்ததுதான்! அதற்கு முன்பு வரை வெறும் தொலைபேசித் தொடர்புதான்.

திருமணப் பத்திரிகையையும் புதுமையான முறையில் வெளியிட்டிருந்தார். ஒரு சி.டி. தயார் செய்து, அதில் இன்விடேஷன், மணமகன், மணமகள் புகைப்பட ஆல்பம் மட்டுமின்றி, சார்லி சாப்ளின், லாரல்-ஹார்டி காமெடிக் காட்சிகளையும் பதிந்து தந்திருந்தார். ரசனை மனம் உள்ளவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் யோசிக்க முடியும்.

அவரின் மகள் திருமணம் சென்னை, விஜயா மஹாலில் (பழைய நாகேஷ் தியேட்டர்) நடந்தது. அதற்குச் சென்றிருந்தேன். அங்கேதான் முதன்முறையாக ராஜேஷ்குமாரையும் சந்தித்தேன்.

ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் தன் நண்பர்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி வைத்துவிடுவார் பட்டுக்கோட்டை பிரபாகர். ஒவ்வொரு முறையும் ஒரு ‘தீம்’ எடுத்துக்கொண்டு, விசேஷ கவனத்தோடு அந்த வாழ்த்து தயாரிக்கப்பட்டிருக்கும். அறிஞர்களின் பொன்மொழிகள், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், குட்டிக் குட்டிப் புதுக் கவிதைகள் என வருஷா வருஷம் புத்தாண்டு வாழ்த்து வேறுபடும். இத்தனை வேலைகளுக்கிடையில் எப்படித்தான் இவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ என்று பிரமிப்பாக இருக்கும்.

நானெல்லாம் சுத்த சோம்பேறி. புத்தாண்டு வாழ்த்துகளை எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்புவதற்குக்கூட எனக்குக் கை வராது. ஒரு சில ஆண்டுகள், ரொம்பப் பிரயத்தனப்பட்டு கிரீட்டிங் கார்டுகள் வாங்கிச் சிலருக்கு அனுப்பினேன். புத்தாண்டு தொடங்கி நாலைந்து நாட்களுக்குப் பிறகு கூட நிதானமாக அனுப்பியிருக்கிறேன். வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதுவதற்குக்கூடச் சோம்பேறித்தனம். புத்தாண்டு என்றில்லை; தீபாவளி, பொங்கல் என எந்த விசேஷத்துக்குமே நான் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அனுப்புவதை ஒரு கடமையாக நினைக்கவில்லை. அதற்காக நான் நண்பர்களை மதிக்கவில்லை என்றோ, மறந்துவிட்டேன் என்றோ அர்த்தமில்லை. தெரியவில்லை; ஏனோ, வாழ்த்துக்கள் அனுப்பத் தோன்றவில்லை.இந்த ஆண்டும் பிரபாகரிடமிருந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்து வந்தது. என் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அது. அதைப் பார்த்ததுமே சட்டென்று என் இதயம் நெகிழ்ச்சியில் கரைந்தது. இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி முன்னேற்றத்தில் போட்டோவுடன் கூடிய பிரத்யேகமான வாழ்த்து தயார் செய்வது ஒன்றும் கடினமில்லைதான்! ஆனாலும், ஒவ்வொரு நண்பருக்கும் அவருடைய புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அனுப்புவோம் என்கிற அந்த எண்ணம்... நட்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மெனக்கிடல், அந்த அக்கறை, அன்பு... அதற்கு ஈடாக எதையுமே என்னால் சொல்ல முடியவில்லை.

பிரபாகர் - தி கிரேட்!

எனக்கெல்லாம் அவரின் பக்குவம் சுட்டுப் போட்டாலும் வராது. பாருங்களேன்... தொலைபேசியிலோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, ஈ-மெயிலிலோ அவருக்கு இன்னும் நன்றிகூடத் தெரிவிக்காமல் வலைப்பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன் நான்!

***
அந்நியரை நேசியுங்கள். ஒவ்வொரு சிறந்த நண்பரும் ஒரு சமயம் அந்நியராக இருந்தவர்தான்!
.

டயரி எழுதலையோ டயரி!

பிளாக் எழுதுவது, கிட்டத்தட்ட டயரி எழுதுவது போன்றதுதான். என்ன ஒன்று... இதுஎல்லோரையும் படிக்க அனுமதிக்கும் டயரி!

தவிர, தினம் தினம் எழுதவேண்டாம்; தினம் தினம் நடப்பவற்றையெல்லாம் பதியவேண்டாம். மனசுக்குத் தோன்றுகிறபோது, தோன்றுகிற விஷயத்தை எழுதி வைக்கலாம். இதனாலெல்லாம்தான் டயரி எழுதுவதை விட, பிளாக் எழுதுவது எனக்குச் சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

நான் என் பள்ளிப் பருவத்திலேயே டயரி எழுதத் தொடங்கிவிட்டேன். பள்ளியில் செய்த குறும்பு, வாத்தியாரிடம் அடி வாங்கியது இவற்றையெல்லாம் என் டயரியில் எழுதி வைப்பேன்.

நான் டயரி எழுத ஆர்வப்பட்டதற்குக் காரணம், சிறு வயதில் நான் படித்த துப்பறியும் கதைகள்தான். எல்லாத் துப்பறியும் கதைகளிலும், காவல்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிடும் டயரிகள், சி.ஐ.டி-க்களின் கழுகுப் பார்வையில் மட்டும் வசமாகச் சிக்கிவிடும். போலீஸ், துப்பாக்கி, கத்தி, ரத்தம், பிரைவேட் டிடெக்டிவ் இல்லாமல் துப்பறியும் கதை வந்தாலும் வரும்; டயரி இல்லாமல் வராது! (நல்ல கதையாக இருக்கிறதே... டயரி இல்லையென்றால் அப்புறம் எப்படித் துப்பு கண்டுபிடிப்பதாம்!)

விளிம்புகளில் ஆரஞ்சு வண்ணம் பூசிய அரு.ராமநாதனின் பிரேமா பிரசுர புத்தகங்கள் பலவற்றை நான் என் பள்ளிப் பருவத்தில் படித்திருக்கிறேன். முக்கியமாக மேதாவி, சந்திரமோகன் எழுதிய நாவல்களை மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறேன். கல்லறைக்கு வெளியே நீண்ட கை, இறந்தவன் பேசுகிறேன் போன்று தலைப்புகளே மிரட்டும். எல்லாக் கதைகளிலும் ரிவால்வரும் டயரியும் கட்டாயம் இடம்பெறும். யாராவது யாரையாவது கொலை பண்ணியே தீருவார்கள் - இன்றைய மெகா சீரியல்கள் போல! மலைப்பாங்கான இடத்தில் பிளைமவுத் கார் பறக்கும். எந்தவொரு பங்களாவும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு பட்டனைத் தட்டினால் பெரிய சைஸ் வட்டப் படுக்கை மெதுவாகச் சுழலும். பங்களாவுக்குள் பெரிய ஹால் நடுவில் நீச்சல் குளம் இருக்கும். தேடப்படும் பணக்காரக் குற்றவாளி அந்த நீச்சல் குளத்துக்குள் இறங்கி, உள்ளே ரகசிய அறையைத் திறந்துகொண்டு, பங்களா தோட்டத்தில் உள்ள ரகசியக் கதவு வழியாக வெளியேறிவிடுவான். அவன் வெளியேறும் கதவின் மேல் புறம் செயற்கைப் புல் பதித்து, தோட்டத்துப் புல்தரையோடு ஐக்கியமாகி, ஒரு ஈ எறும்பால் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும். கடைசியில், நீள நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு மூச்சிரைக்க போலீஸ் நாய் வந்து, குறிப்பிட்ட இடத்தைக் கால்களால் பிறாண்டிக் காட்டிக் கொடுக்கும்.

ஆயிரம் இருந்தாலும், துப்பறியும் கதைகளில் என்னை ஏனோ கவர்ந்தது டயரிகள்தான். துப்பறியும் கதைகள் அல்லாது, நான் படித்த இதர சிறுகதைகள், தொடர்கதைகளிலும் அவ்வப்போது டயரிகள் இடம்பெறுவது உண்டு. பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகிதான் டயரி எழுதுவார்கள். அல்லது, யாராவது சினிமா நடிகை டயரி எழுதுவாள். வயசாளிகள் யாரும் டயரி எழுதமாட்டார்கள்.

அதேபோல், டயரி எழுதுகிறவர்கள் எல்லாரும் பணக்காரர்களாக இருப்பார்கள்; ஏழை டயரி எழுதியதாக நான் படித்தது இல்லை. இளம் வயதினரின் டயரிகளில் புதுக் கவிதைகள் இடம்பெறும்; எல்லாப் புதுக் கவிதைகளும் காதலைச் சொல்லும்.

நானும் டயரி எழுதவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது கதைமாந்தர் எழுதிய டயரிகள்தான். நிஜத்தில் டயரி எழுதியவர் யாரையும் நான் சந்தித்தது இல்லை. அல்லது, அவர் டயரி எழுதுவது எனக்குத் தெரியாமல் இருக்கலாம். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எழுதுவதுதானே டயரி?

'யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை நான் பாதுகாத்து வருகிறேன்' என்கிற த்ரில்தான் டயரி எழுதுவதில் உள்ள சுவாரஸ்யம். ஆனால், டயரி எழுதவேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு, அப்படியான விஷயங்கள் எழுதக் கிடைக்கவே இல்லை. தினம் தினம் பள்ளிக்குப் போவதும், பாடம் படிப்பதும், வீடு திரும்பி வீட்டுப் பாடம் எழுதுவதையுமே டயரி என்கிற பெயரில் எத்தனை நாள் எழுதிக்கொண்டு இருப்பது? அதிகபட்சம் தொடர்ந்து ஒரு மாதம் எழுதுவேன். அப்புறம் இரண்டு நாளைக்கொரு முறை, நாலு நாளைக்கொரு முறையாக அடுத்த ஒரு மாதம் எழுதுவேன். மார்ச் மாதம் முதல் வாரத்தோடு என் டயரிக் குறிப்புகள் முடிந்துபோகும். அப்புறம் கண்டிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தம்புது டயரியில், 'இந்த ஆண்டு முழுவதும் விடாமல் டயரி எழுதுவேன்' என்கிற புத்தாண்டுத் தீர்மானத்தோடு டயரி எழுதும் படலம் ஆரம்பமாகும்.

இப்படியாக நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து, அதாவது 1972-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு 2008 வரை... சொன்னால் சிரிப்பீர்கள், என்னிடம் முதல் ஓரிரண்டு மாதங்கள் மட்டுமே எழுதப்பட்ட டயரிகள் 36 உள்ளன.

சாப்பிடுவது, படிப்பது, தூங்குவது தவிர வேறொன்றும் அறியாத மாணவப் பருவத்தில் வேண்டுமானால் டயரி எழுத விஷயம் கிடைக்காமல் இருக்கலாம்; பத்திரிகை ஆபீஸ் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுமா அப்படி என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. சாவியில் வேலைக்குச் சேர்ந்த பின்பு எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்திருக்கின்றன! பின்னே ஏன் அவற்றை எழுதி வைக்கவில்லை?

காரணம், குறிப்பிட்ட அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில், அவை எதுவும் முக்கியமானவையாக, சுவாரஸ்யம் நிரம்பியவையாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. நிகழ்காலத்தைவிட கடந்த கால நினைவுகளில் மூழ்கி எழுவதுதான் இனிமையானது. அதனால்தான் கடந்த காலத்தில் நாம் பட்ட அவமானங்கள்கூட சுவையாக இருக்கின்றன. பழைய சம்பவங்களை நினைவுகூர்வதைத்தானே 'மலரும் நினைவுகள்' என்று சொல்கிறோம்?

அப்படிப் பார்த்தால், பத்திரிகைப் பணியில் மட்டுமல்ல; பள்ளிப் பருவத்திலும் எனக்குப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தமிழாசிரியருடன் வெளியூருக்குச் சென்று, பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கியது; ஒருமுறை எங்கள் வீட்டிலிருந்து பர்ஸ் திருடிக்கொண்டு போன கிராம முன்சீப்பின் பையனைப் பற்றி வகுப்பில் நான் மற்ற மாணவர்களிடம் சொல்லிவிட, அந்தப் பையன் மறுநாள் தன் அப்பாவையும் இன்னும் பலரையும் அழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் சண்டைக்கு வரப்போவதாகச் சொல்லி என்னை மிரட்டியது; அப்போது விழுப்புரத்தில் என் மாமா வீட்டில் தங்கியிருந்த நான் ராத்திரி பூரா தூக்கம் வராமல், நடுராத்திரி 12 மணிக்குத் தன்னந்தனியாக இருட்டில் எழுந்து போய் என் தமிழாசிரியர் அ.க.முனிசாமியின் வீட்டுக் கதவைத் தட்டி அவரை எழுப்பி, விஷயத்தைச் சொல்லி அழுதது; அவர் என் மீது பரிதாபம் கொண்டு, 'எவன் அவன்? தொலைச்சுப்புடறேன் அவனை! பயப்படாதே. தைரியமாப் போ!' என்று எனக்கு ஆறுதல் சொல்லி, தன் பையனைத் துணைக்கு அனுப்பி, என்னை வீடு வரை கொண்டு விடச் செய்தது;

என் சீனியர் ஒருவன் என்னிடம் ஒரு கவரைக் கொடுத்து, அதை எங்கள் பள்ளியிலேயே மிக அழகாக இருந்த சுஜாதா என்ற பெண்ணிடம் கொடுக்கச் சொன்னபோது, நானும் அது என்னவாக இருக்கும் என்கிற யோசனையே இல்லாமல் கொண்டுபோய்க் கொடுக்க, அதை அந்தப் பெண் அங்கேயே பிரித்துப் படித்து 'ஓ'வென்று கூச்சல் இட்டு, தன் பெற்றோரிடம் சொல்லி, ஸ்கூலை விட்டே என்னை டிஸ்மிஸ் செய்வதற்காக அழைத்து வந்தது; தலைமை ஆசிரியர் டேவிட்ராஜ், தமிழ் ஆசிரியர் முனிசாமி, கணித ஆசிரியர் ராஜாப்பிள்ளை மூவரும் எனக்கு சப்போர்ட்டாக நின்று, 'ரவி இந்தக் காரியத்தைச் செய்திருக்கமாட்டான். ரொம்ப நல்ல பிள்ளை அவன்' என்று எனக்காக வாதாடியது; விசாரணையில் நான் அந்த சீனியர் மாணவனின் மிரட்டலுக்குப் பயந்து, அந்தக் காதல் கடிதத்தைக் கொடுக்கச் சொன்னது அவன்தான் என்று காட்டிக்கொடுக்காமல் இருந்தது;

என் அப்பாவிடம் சண்டைக்கு வரப்போவதாகச் சொன்ன கிராம முன்சீப்பின் மகன் முரளிதரன் அப்படி வராததோடு, அடுத்த சில நாட்களில் தன் வீட்டிலேயே நிறையப் பணத்தைத் திருடிக்கொண்டு, வீட்டை விட்டு எங்கோ கண்காணாமல் ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டது; இரண்டு மாதமாக அவன் ஸ்கூலுக்கு வராததால் அவன் பெயரை அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் இருந்து நீக்கியது; என் கையெழுத்து அழகாக இருக்கும் என்பதால், வகுப்பு ஆசிரியர் உத்தரவுப்படி மாதாமாதம் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் நான்தான் பெயர்களை எழுதித் தருவேன் என்பதால், முரளிதரன் பெயரை அடித்தபோது உள்ளூர சந்தோஷப்பட்டது; பெண்களின் பெயர்களை மட்டும் சிவப்பு மையில் எழுதும்போது இனம்புரியாத சந்தோஷம் உண்டானது; 'என் பெயரை அழகா எழுதுடா ரவி!' என்று அந்தப் பெண்கள் என்னிடம் கெஞ்சியது;

எனக்கு நன்றாகப் படமும் வரைய வரும் என்பதால், ஓவிய ஆசிரியர் தனது 'நோட்ஸ் ஆஃப் லெஸன்' நோட்டில் என்னைப் படங்கள் வரைந்து தரச் சொன்னது; எனக்கு முழுப்பரீட்சை நடந்துகொண்டு இருந்த சமயம், விழுப்புரத்துக்குப் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தள்ளி, திருவண்ணாமலை போகும் சாலையிலிருந்து ஒதுங்கி ஒத்தையடிப்பாதையாக இரண்டு மைல்களை நடந்தே அடையவேண்டியிருந்த அதனூர் என்கிற கிராமத்தில் ஆசிரியராக இருந்த என் அப்பா, அங்கே பள்ளிக்கு எதிரே இருந்த மைதானத்தில் மேடை போட்டு பள்ளி மாணவர்களை வைத்தே டிராமா போட ஆயத்தமாக, அதில் கதாநாயகனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்கவேண்டிய என்னை, அப்பாவின் கிராமத்துப் பள்ளிப் பையன் ஒருவன் என் பரீட்சை முடியும் வரை காத்திருந்து, மாலை ஐந்து மணி சுமாருக்கு வியர்க்க விறுவிறுக்க சைக்கிள் கேரியரில் என்னை வைத்து விழுப்புரத்திலிருந்து மிதித்துக்கொண்டு போனது; அங்கே போனதும் அவசர அவசரமாக மேக்கப் போட்டு டிராமா நல்லபடியாக நடந்து முடிய, ஊர்ப்பெரியவர் (நாட்டாமை மாதிரி ஒரு பெரிய மனிதர்) மேடை ஏறி வந்து மைக் பிடித்து என் நடிப்புத் திறமையைத் தனது கிராமத்துப் பேச்சுமொழியில் பாராட்டி, என் அப்பாவிடம் ஒரு சின்ன மூட்டை முழு வேர்க்கடலைப் பயிறை தனது பரிசாகக் கொடுத்தது;

ஒரு முறை மாமாவின் வீட்டில் எதற்காகவோ கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட வேண்டும் என்று முடிவு கட்டி, துணைக்கு ஹான்சன் சௌந்திரபாண்டியன் என்கிற சக தோழனையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, திருட்டு ரயில் ஏறிவிடும் உத்தேசத்தில், பள்ளி விட்டதும் வீட்டுக்கு வராமல் இருவருமாக விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனது; அங்கே எந்த ரயிலும் இல்லாமல் காலியான பிளாட்பாரத்தில் சுற்றிக்கொண்டு இருந்தபோது, அங்கே டி.டி.ஆராக இருந்த ஹான்சனின் உறவினர் ஒருவர் எங்களை மடக்கி, அதட்டி, 'இங்கே என்ன சுத்திட்டிருக்கீங்க? ஒழுங்கா வீட்டுக்குப் போங்க' என்று விரட்டி அனுப்பியது;

விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் பிள்ளையார் கோயிலுக்கு என் அபிமான பாடகர் டி.எம்.எஸ். அவர்கள் கச்சேரி செய்ய வருகிறார் என்று கேள்விப்பட்டுப் போய், முண்டியடித்துக்கொண்டு முன்வரிசையில் இடம்பிடித்தது; 'எம்.ஜி.ஆர் பாட்டுதான் பாடணும், சிவாஜி பாட்டுதான் பாடணும்' என்று இரண்டு ரசிகர்களுக்குள்ளும் அடிதடி எழுந்து, டி.எம்.எஸ். மூட் அவுட் ஆகிப் பாதியிலேயே கிளம்பிவிட, ரகளையாகி எக்கச்சக்கமான கூட்டத்தில் நான் அடிபட்டு, மிதிபட்டு 'இன்னிக்குச் செத்தோம்' என்கிற அளவுக்கு உயிர்பயத்தில் மிரண்டது...

இப்படியாக என் பள்ளி வாழ்க்கையிலும் பல நிகழ்ச்சிகள் டயரியில் எழுதிவைக்கத் தோதாக நடந்திருக்கின்றன.

ஆனால், முன்பே சொன்னது போல, அவை எதுவும் அந்தச் சமயத்தில் முக்கியமானதாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. அவ்வளவு ஏன்... பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு, கட்டுரை, தனி நடிப்புப் போட்டிகளில் பெருந்தலைவர் காமராஜர் கையால் (அவர் அப்போது தமிழக முதலமைச்சராக இல்லை) புத்தகங்களைப் பரிசாகப் பெற்றபோது, அவர் அருமை தெரியாதவனாக அல்லவா இருந்தேன்! அதனூர் கிராமத்தில் வேர்க்கடலை பரிசாகக் கொடுத்த கிராமத்துப் பெரியவருக்கும் காமராஜருக்கும் இடையில் அப்போது எனக்குப் பெரிய வித்தியாசம் எதுவும் தோன்றவில்லை.

சமீபத்தில் என் பழைய டயரிகளை எடுத்துப் புரட்டிக்கொண்டு இருந்தேன், ஏதாவது முக்கியமான விஷயம் அகப்படுகிறதா என்று. தொடர்ந்து ஒழுங்காக எழுதியிருந்தால் நிச்சயம் பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்திருக்கும் - காமராஜரிடம் பரிசு வாங்கிய சம்பவம் போன்று! நான்தான் எந்த வருடமும் முதல் இரண்டு மாதங்களுக்கு மேல் எழுதவில்லையே!

1977-ஆம் ஆண்டு டயரியில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. (டயரி, டயரி என்று இங்கே நான் சொல்லுவதெல்லாம் உசத்தியான பிரின்ட்டட் டயரி அல்ல; நானே ஒரு 200 பக்க நோட்டில் மாதம், தேதியிட்டு எழுதி வைத்த குறிப்புகள்.) அது அத்தனை முக்கியமானது இல்லை என்றாலும், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

அது அடுத்த பதிவில்!

(சில ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் 'ஏடாகூடம்' என்னும் தலைப்பில் நான் ஒரு பிளாக் எழுதி வந்தேன். அப்புறம், வழக்கம் போல் சுவாரசியம் குறைந்து பிளாக் எழுதுவதை நிறுத்தியதோடு, பிளாகையும் க்ளோஸ் செய்துவிட்டேன். 'ஏடாகூடம்' பிளாகில் நான் இட்டிருந்த முதல் பதிவின் மறு பதிப்புதான் இது. பதிவு இன்னும் முடியவில்லை. அடுத்த பதிவில் தொடரும்.)

***
சொன்ன வார்த்தைகள் உனக்கு எஜமான்; சொல்லாத வார்த்தைகளுக்கு நீ எஜமான்!
.