டி.எம்.எஸ். என்கிற இமயத்துடன்..!

ன் இனிய நண்பரும், பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்த முன்னாள் மாணவருமான இயக்குநர் விஜயராஜைப் பற்றி முன்பே ஒருமுறை இந்த வலைப்பூவில் எழுதியுள்ளேன்.

என் மனம் கவர்ந்த பாடகர் ஏழிசை மன்னர் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மெகா சீரியலாக எடுத்துக்கொண்டு இருக்கிறார் அவர். ரஜினியை பேட்டி எடுத்து முடித்ததும்... ஏ.ஆர்.ரஹ்மானைப் பேட்டி எடுத்து முடித்ததும்... இளையராஜாவை பேட்டி எடுத்து முடித்ததும்... என சீரியலின் ஒவ்வொரு வளர்ச்சியையும் என்னோடு உடனுக்குடன் பகிர்ந்து கொள்வார். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் மூன்று நான்கு மணி நேரத்துக்கு மேல் பாடகர் டி.எம்.எஸ்ஸின் பெருமைகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்போம். அதைத் தாண்டி எங்களுக்குப் பேச வேறு விஷயம் இருக்காது; தேவையும் படாது!

சென்ற வாரத்தில் அது போல் ஒரு நாள் போன் செய்திருந்தார். இந்த சீரியலுக்காக இந்தி இன்னிசைக் குயில் லதா மங்கேஷ்கரையும் டி.எம்.எஸ்ஸையும் சந்திக்க வைத்துப் பேச வைத்திருக்கிறாராம். இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லிவிட்டு, “மும்பையிலிருந்துதான் கிளம்பிட்டேன். நாளை சனிக்கிழமை மாலைக்குள் சென்னையில் இருப்பேன். வந்ததும் மறுபடி உங்களோடு தொடர்பு கொள்கிறேன்” என்றார்.

“பிரயாண அலைச்சல்ல வந்திருப்பீங்க. பேசாம போய் ரெஸ்ட் எடுங்க. ஞாயிற்றுக் கிழமை நிதானமா பார்த்துக்கலாம்!” என்றேன்.

“இதிலென்ன அலைச்சல் சார்? நானா மூச்சிரைக்க ஓடி வரப் போறேன்? ரயில்தானே சுமந்துக்கிட்டு வருது! நீங்க டி.எம்.எஸ்ஸின் எத்தனைப் பெரிய ரசிகர்னு எனக்குத் தெரியும். வாங்க, எடுத்த பதிவுகளைப் போட்டுக் காண்பிக்கிறேன்” என்றார்.

அதன்படியே, சென்னை வந்த மறு நிமிஷமே தொடர்பு கொண்டார். “சார், இதை லேபுக்குப் போய் பிரின்ட் போட்டுக்கிட்டு நேரே ஸ்ரீராம் ஸ்டுடியோ வந்துடறேன். நீங்களும் வரீங்களா, எப்படி வந்திருக்குன்னு பார்க்கலாம்!” என்று ஆர்வத்துடன் அழைத்தார். கிளம்பிப் போனேன். கோடம்பாக்கம் பவர் ஹவுஸில் இறங்கிக் கொண்டேன். நல்ல மழை! பைக்கில் வந்திருந்தார். எனக்காக ஆட்டோ தேடினார். “அட, வேணாம் விடுங்க! உங்க பைக்லயே போயிடலாம்! மழையில நனைஞ்சா ஒண்ணும் ஊசிட மாட்டேன்” என்று பில்லியனில் தொற்றிக் கொண்டேன்.

நேரே ஸ்டுடியோ போனோம். எல்லாம் தயாராக இருந்தது. மும்பையில் தான் எடுத்த லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவுகளை ஒரு தொலைக்காட்சியில் போட்டுக் காண்பித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பதிவு. எடிட்டிங் செய்யப்படாத, பின்னணி இசை, கிளிப்பிங்ஸ் எதுவும் சேர்க்கப்படாத ஆரம்ப, புத்தம் புதிய பதிவு. (டி.எம்.எஸ்., லதா மங்கேஷ்கர் சந்திப்பு பற்றி என் இன்னொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிக’னில் எழுதியுள்ளேன். 30.12.09 ஆனந்த விகடன் இதழில் வெளியான கட்டுரை அது!)

விஜயராஜ் என்னைவிட வயதில் 12 வயது இளையவர். ஆனால், என்னைவிட டி.எம்.எஸ்ஸின் அதி தீவிர ரசிகராக இருக்கிறார். இல்லையென்றால், டி.எம்.எஸ். பற்றிய ‘இமயத்துடன்...’ என்கிற இந்த மெகா சீரியலை ஒரு தவம் போல் கடந்த பத்து வருடங்களாக முழு மூச்சுடன் இயக்கிக்கொண்டு இருக்க மாட்டார்.

“ஒரு பாடகரின் வரலாற்றை ‘மலரும் நினைவுகள்’ போன்று பதிவு செய்ய இத்தனை நீண்ட, நெடிய காலம் தேவையா?” என்று கேட்டேன்.

“வழக்கமா எல்லாரும் செய்யற மாதிரி இங்கேயே ஏழெட்டு வி.ஐ.பி-க்களைப் பேட்டியெடுத்து, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கருக்கு டி.எம்.எஸ். பாடிய பிரபலமான பாடல் காட்சிகளைச் சேர்த்து, ‘மலரும் நினைவுகள்’னு ஒப்பேத்த நான் விரும்பலை. டி.எம்.எஸ். ஐயா எங்கே பிறந்தார், எந்தக் கோவில் வாசலில் இந்தி டியூஷன் நடத்தினார், முதன்முதல்ல எந்த ஸ்டுடியோவில் பாடினார், எந்தப் படத்துல முதல்ல நடிச்சார்னு ஒண்ணு விடாம ஆதியோடந்தமா அவரது ஒவ்வொரு வளர்ச்சியையும், அது தொடர்பான இடங்களுக்கே அவரை அழைச்சுட்டுப் போய் பதிவு செஞ்சிருக்கேன். சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன்னு அந்தக் காலத்து சினிமா நட்சத்திரங்கள்லேர்ந்து ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலுன்னு இந்தக் காலத்து ஸ்டார்கள் வரைக்கும், கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல டி.எம்.எஸ்ஸோடு பேச வெச்சுப் பதிவு பண்ணியிருக்கேன். தவிர, வழக்கமா நமக்கெல்லாம் தெரிஞ்ச பாடல்கள் இல்லாம, இதுவரைக்கும் தெரியாத பாடல்களையெல்லாம் இதுக்காகத் தேடித் தேடிப் போய் சேகரிச்சுக் கொண்டு வந்து இதுல சேர்த்திருக்கேன். இதுல ஒரு வேடிக்கையான வேதனை என்னன்னா, இங்கே அருமை தெரியாம நாம தவறவிட்ட பல பாடல்களை சிங்கப்பூர்லயும் மலேசியாவிலயும் உள்ள டி.எம்.எஸ். ரசிகர்கள் பத்திரப்படுத்தி வெச்சிருக்காங்க. ஆகவே, நாலஞ்சு முறை அங்கேயெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு, அதையெல்லாம் பதிவு பண்ணிக்கிட்டு வந்திருக்கேன்.

லதா மங்கேஷ்கரை எப்படியாவது இந்த சீரியலுக்காகப் பேச வெச்சுடணும்னு பாடுபட்டுக்கிட்டிருந்தேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. ஆனா, நடுவுல அவங்களுக்கு உடம்பு முடியாம போச்சு. அவங்க தேறி வந்து, வரலாம்னு க்ரீன் சிக்னல் கொடுத்தப்போ இங்கே நம்ம டி.எம்.எஸ். ஐயா உடம்பு சரியில்லாம நாலஞ்சு நாள் படுத்துட்டாரு. இப்படியே இது தள்ளிக்கிட்டுப் போய், ஒருவழியா முடிச்சுட்டோம். இத்தனை ஆண்டுக் காலம் இழுத்ததுக்கு அதுதான் காரணம்” என்றார் விஜய்ராஜ்.

மும்பையில் லதா மங்கேஷ்கர் வீட்டுக்குப் போவதற்கு முன்னதாக, இந்திப் பாடகர் முகமது ரஃபியின் வீட்டுக்கும் சென்றிருக்கிறார்கள் இந்தக் குழுவினர். முகமது ரஃபிக்கு ஒரே ஒரு மகன்; இரண்டு மகள்கள். யாரும் சினிமா துறையில் இல்லை. முகமது ரஃபி வாங்கிய விருதுகளையெல்லாம் ஒரு ஹாலில் கண்காட்சி போல் வைத்துப் பராமரித்து வருகிறார் ரஃபியின் மைத்துனர் பர்வேஷ் அஹமது.

அவரும், ரஃபியின் வாரிசுகளும் டி.எம்.எஸ்ஸை அன்புடன் வரவேற்று அவற்றை யெல்லாம் சுற்றிக் காட்டுகிறார்கள். ரஃபி உட்கார்ந்த நாற்காலி, வாசித்த வீணை, ஆர்மோனியம், அவருக்குக் கிடைத்த பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை விளக்குகிறார்கள். அவர்களோடு அழகான இந்தியில் சரளமாக உரையாடுகிறார் டி.எம்.எஸ். லதா மங்கேஷ்கரோடும் இந்தியில்தான் உரையாடியிருக்கிறார்.

“இந்திப் பாடகி லதா மங்கேஷ்கரம்மாவுக்குத் தெரியுது நம்ம டி.எம்.எஸ்ஸோட பெருமை. கேட்டதுமே ஒப்புக்கிட்டாங்க. இங்கேயும் சூப்பர் ஸ்டார் ரஜினி கிட்டே பர்மிஷன் கேட்டவுடனேயே, ‘எப்ப வேணா வாங்க விஜய், ரெக்கார்டிங்கை வெச்சுக்கலாம்’னு சொல்லிட்டாரு. அதே போல ஆஸ்கர் நாயகன் ரஹ்மானும் தன் பிஸியான வேலைகளுக்கிடையில டயம் ஒதுக்கி டி.எம்.எஸ். ஐயாவோடு உட்கார்ந்து பேசிக் கொடுத்தாரு. பி.சுசீலாம்மா, ஜானகியம்மா, எஸ்.பி.பி., எம்.எஸ்.வி., வாலி, வைரமுத்துன்னு நான் அணுகிய எல்லாருமே ஆர்வத்தோடு இதுல பங்கெடுத்துக்கிட்டாங்க. ஆனா பாருங்க, சினிமா உலகையே தான்தான் புரட்டிப் போறதா சொல்லிட்டிருக்கிற ஒரு ‘பெரிய’ நடிகர் மட்டும் இப்போ அப்போன்னு அஞ்சாறு வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டிருக்காரு!” என்றார் வருத்தத்தோடு!

“விடுங்க விஜய், அவர் இல்லேன்னா ஒண்ணும் குடி முழுகிடாது! நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க. இதுல பங்கெடுத்துக்கக் கொடுத்து வைக்கலியேன்னு வருத்தப்பட வேண்டியது அவருதான்!” என்றேன்.

எதிரெதிர் துருவங்களாக இருந்த இளையராஜா-டி.எம்.எஸ்., டி.ராஜேந்தர்-டி.எம்.எஸ். இவர்கள் பழையனவற்றையெல்லாம் துப்புரவாக மறந்து, மனம் விட்டுச் சிரித்துப் பேசும் காட்சிகள் இந்த சீரியலில் இடம்பெற்றுள்ளன.

தன் செல்ல மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடித்து வைத்துவிட்ட தகப்பனார் போன்று பெருமிதத்திலும் பரவசத்திலும் இருக்கிறார் விஜயராஜ். அநேகமாக, ‘இமயத்துடன்’ என்கிற இந்த மெகா சீரியல் வருகிற தமிழர் திருநாளிலிருந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

இதை முடிப்பதற்குள் விஜயராஜ் சந்தித்த சோதனைகள், தடைக் கற்கள் எத்தனை எத்தனையோ! நாலைந்து சினிமா வாய்ப்புகள், இரண்டு மூன்று தொலைக்காட்சி மெகா சீரியல் இயக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும், கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காக மறுத்துவிட்டார். இதனால் நட்பு வட்டாரங்களில் இவருக்குப் ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று ஒரு பெயர்.

இவரின் தாயார், டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகை. அவரின் ரசனை அப்படியே மகனுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. இந்த சீரியலை இயக்குவதற்குப் பூரண ஆசிகள் வழங்கி, இவர் சோர்ந்து போகும் சமயங்களில் எல்லாம் உற்சாக வார்த்தைகள் சொல்லி ஊக்கம் தந்த அந்தத் தாய் சில மாதங்களுக்கு முன் மறைந்தது விஜயராஜுக்குப் பெரிய இழப்பு. அதையும் தாங்கிக்கொண்டு, இந்த சீரியலை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

சரி, அடுத்து என்ன செய்யப் போகிறார் விஜயராஜ்?

“கோலங்கள் புகழ் இயக்குநர் திருச்செல்வம் என் இனிய நண்பர். அவர் புதுசா இயக்கவிருக்கிற ‘மாதவி’ சீரியல்ல எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கார். ஹீரோயினுக்கு உதவி செய்யுற நண்பன் கேரக்டர். இன்னும் சரியா தெரியலை. அதுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். அடுத்து, சினிமா படங்கள் இயக்கும் வாய்ப்பு ரெண்டொண்ணு இருக்கு. அதைச் செய்வேன். பார்க்கலாம், முதல்ல இந்த சீரியல் வெளியாகி நான் யார்னு காட்டட்டும்!” என்கிறார் விஜயராஜ்.

‘இமயத்துடன்’ சீரியலை டி.எம்.எஸ்ஸின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு கண்டுகளித்து, மெகா ஹிட்டாக்குவார்கள் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்த சீரியலின் வெற்றி, டி.எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனுக்கான அங்கீகாரம் மட்டுமில்லை; ரசிக உள்ளத்துடன் இதை இயக்கிய ஓர் இயக்குநரின் உண்மையான உழைப்புக்கான அங்கீகாரமாகவும் அமையும்!

***
சோதனைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான், வெற்றியை நீங்கள் எப்படி அடையப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது!
.

சிரித்தார் சிநேகிதி; அழுதேன் நான்!

ருபது ஆண்டுக் காலமாக என் நட்பு வட்டத்துக்குள் இருக்கும் நெருங்கிய சிநேகிதி ஒருவர் (ப்ளீஸ், பெயர் வேண்டாமே!) இன்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வந்ததற்கான முக்கியக் காரணம், மறைந்த என் மாமியார் பற்றித் துக்கம் விசாரிப்பது.

மாமியார் மறைந்த அன்றைக்கே தொலைபேசி மூலம் அவருக்குச் செய்தி சொல்லியிருந்தேன். அடுத்த ஒரு வாரத்துக்குள் வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. பிறகு நானும் மறந்துவிட்டேன். நேற்று வேறு ஒரு விஷயத்துக்காக யதேச்சையாக போன் செய்திருந்தார். பேச்சோடு பேச்சாக, “வரேன்னு சொன்னீங்க... அப்புறம் எங்கே ஆளையே காணோம்?” என்றேன், கொஞ்சம் கேலி தொனியில். “வரணும் சார், ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் வரணும்னு நெனைச்சுப்பேன். முடியாம போயிடும். நாளைக் காலையில் கண்டிப்பா வரேன்” என்று தன்மையான குரலில் சொன்னார்.

காலையில் அவர் வரவில்லை. மதியம் மூன்றரை மணி வரையிலும் வரவில்லை. நான் ஓவியர் மாயா வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டேன். அங்கிருந்து நண்பர் மார்க்கபந்து வீட்டுக்குப் போய்ப் பேசிக்கொண்டு இருந்தபோது, வீட்டிலிருந்து போன்கால் வந்தது, அந்தச் சிநேகிதி வந்து எனக்காகக் காத்துக்கொண்டு இருப்பதாக. உடனே கிளம்பிப் போனேன் வீட்டுக்கு.

அவரின் தோற்றமே வித்தியாசமாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் பார்த்ததைவிட குண்டாக இருந்தார். தலைமுடி வழக்கத்துக்கு மாறாக ஏதோ போல் இருந்தது. அவரின் பருமனை நட்பு ரீதியில் சகஜமாக கேலி செய்து பேச, வாய் வரை வார்த்தை வந்துவிட்டது. ஆனால், கிளம்பிப் போகிறபோது கேட்கலாம் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

என் மாமியார் பற்றி என் மனைவியிடம் இதற்கு முன் நெடு நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார் அவர். நான் போனதும் என்னிடம் ஓரிரு வார்த்தைகள் அது பற்றிப் பேசிவிட்டு, குழந்தைகளின் படிப்பு பற்றி விசாரித்துவிட்டு, தான் வந்த வேறொரு வேலை சம்பந்தமாக என்னிடம் அரை மணி பேசிவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார். அதுவரையில் அவரின் தோற்றத்தைத் தவிர, அவரின் நடையுடை பாவனைகளிலோ, கலகலப்பான பேச்சிலோ, சிரித்த முகத்திலோ எந்தவொரு மாற்றமும் எனக்குத் தெரியவில்லை.

விடைபெறுகிற சமயத்தில், “உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். நான் நாளைக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகப் போறேன். ஒரு சின்ன ஆபரேஷன்” என்றார் அதே சிரித்த முகபாவத்தோடு. நான் வழக்கமாகப் பெண்களுக்கு நடக்கும் டி-அண்ட்-சி ஆபரேஷனாகவோ அல்லது ஹிரண்யா (குடலிறக்கம்) ஆபரேஷனாகவோ இருக்கும் என்று எண்ணியபடியே அது பற்றி விசாரித்தேன்.

“எனக்கு பிரெஸ்ட்ல கான்சர். ஆபரேட் பண்ணி ரிமூவ் பண்ணலேன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதான்” என்றார் கொஞ்சமும் பதற்றமில்லாத குரலில். அவர் சொல்கிற தொனியைப் பார்த்தால், வழக்கமாக அவர் சும்மா பொய் சொல்லி விளையாடுகிற மாதிரி, ஏதோ ஏப்ரல் ஃபூல் செய்கிற மாதிரிதான் இருந்ததே தவிர, கொஞ்சம்கூட நம்புகிற மாதிரியே இல்லை. “என்ன சொல்றீங்க?” என்றேன் புரியாமல்.

“ஆமா ரவி சார், உண்மைதான்! என் தலையைப் பார்த்தா உங்களுக்கு வித்தியாசம் தெரிஞ்சிருக்குமே! ரெண்டு மாசமா கீமோ தெரபி கொடுத்ததுல முடியெல்லாம் கொட்டிப் போச்சு. நல்ல வேலையில இருக்கேன். நாலு பேரைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கு. மொட்டைத் தலையோட எப்படிப் போறது? எனக்குப் பரவாயில்லை; போயிடுவேன். பார்க்கிறவங்க முகம் சுளிப்பாங்களே, அதுக்காகத்தான் என் கணவர் கிட்டே கூடச் சொல்லாம, ஒரு நண்பரைக் கூட்டிக்கிட்டு நேரே வட பழனி போனேன். அங்கே வடபழனி முருகனுக்கு, என் தலையில கொஞ்ச நஞ்சமிருந்த முடியையும் துப்புரவா மொட்டையடிச்சுக் காணிக்கை கொடுத்துட்டேன். அங்கேயே எனக்குத் தெரிஞ்ச தோழி கடையில ஏழாயிரம் ரூபா கொடுத்து விக் வாங்கி வெச்சுக்கிட்டேன்” என்றார்.

“எப்படித் திடீர்னு... போன தடவை வந்திருந்தப்போ கூட இது பத்தி ஒண்ணும் சொல்லலையே?” என்றேன், மனசுக்குள் உருவான என் பதற்றத்தைத் தணித்துக் கொண்டு.

“எனக்கும் அப்ப தெரியாது. ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பண்ற மாமோகிராம் டெஸ்ட்டை ஆயிரம் ரூபாய்க்குப் பண்றதாக ரெண்டு மாசத்துக்கு முன்னே ஒரு லேப்ல ஆஃபர் போட்டிருந்தாங்க. நமக்குத்தான் எதைத் தள்ளுபடியில கொடுத்தாலும் போய் வாங்கற புத்தியாச்சே! உடனே போய் பண்ணிக்கிட்டேன். மார்புக்குள்ள கான்சர் கட்டி ஃபார்ம் ஆகியிருக்கிறதா காட்டிடுச்சு. முதல்ல எனக்கும் பதற்றமாதான் இருந்தது. அதனால என்ன செய்ய முடியும்? ராய் மருத்துவமனைக்குப் போனேன். அங்கே கன்ஃபர்ம் பண்ணி, உடனே ஆபரேட் பண்ணி ரிமூவ் பண்ணிடறதுதான் பெஸ்ட்னு சொல்லிட்டாங்க. அங்கேயே கீமோ தெரபியும் கொடுத்தாங்க. கீமோ தெரபின்னா வேற ஒண்ணுமில்லை. சலைன் வாட்டர் மாதிரி ஏதோ ஏத்தினாங்க. இந்த ரெண்டு மாசத்துல நாலு தடவை அப்படி கீமோ தெரபி பண்ணிக்கிட்டேன். ஒரு தடவை கீமோ தெரபி பண்ணிக்கிட்டா அடுத்த ஒரு வாரத்துக்குச் சோறு திங்க முடியாது. வாய், வயிறு எல்லாம் புண்ணாயிடும். உடம்பெல்லாம் எரியுற மாதிரி இருக்கும். வெறும் எளநி, ஜூஸ் இதுதான் ஆகாரம். தயிர்சாதம் மட்டும் சாப்பிடலாம். உடம்பு பாதியா குறைஞ்சுடும்னாங்க. ஆனா நான் பாருங்க, ரெண்டு சுத்துப் பெருத்துட்டேன். ஒரு தடவை கீமோ தெரபி பண்ணிக்க ரூ.16,000 செலவு. ஆபரேஷனுக்கு ஒன்றரை லட்சம்! நாளைக்கு ஆபரேஷன். ஒரு வாரம் அங்கே இருக்க வேண்டியிருக்கும்...”

அவர் சொல்லச் சொல்ல எனக்கு நடுக்கமாக இருந்தது. அவரோ ஏதோ கொடைக்கானல் டூர் போய் வந்த அனுபவத்தை விவரிப்பது போலக் கேஷுவலாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

“ஆபரேஷன் சரி, அதுக்கப்புறம் ஒண்ணும் பயமில்லையே? டாக்டர்கள் என்ன சொல்றாங்க?” என்று கேட்டேன்.

“ஆரம்பத்துலேயே கண்டுபிடிச்சுட்டீங்களே, நீங்க ரொம்ப லக்கின்னாங்க. பெரும்பாலான கேஸ்கள்ல ரொம்ப முத்தின பிறகுதான் தெரியவே தெரியுமாம். ஏன்னா, அதுவரைக்கும் எந்த அறிகுறியும் தெரியாது; வலியும் இருக்காது. அதுக்கப்புறம் ஆபரேட் பண்ணினாலும், அது வேற இடங்களுக்குப் பரவுறதுக்கு வாய்ப்புண்டாம். ஆரம்ப நிலையிலேயே நான் கண்டுபிடிச்சுட்டதால, பிரெஸ்ட்டை ரிமூவ் பண்ணி எடுத்துட்டா, அதுக்கப்புறம் நான் நூறு வயசுகூட வாழ்வேனாம். ஒரு பயமும் இல்லைன்னாங்க” என்று சொல்லிச் சிரித்தார்.

என்னால் பதிலுக்குச் சிரிக்க முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே அழுதேன்!

என் மனைவியால் தாங்க முடியவில்லை. அவரை அணைத்துக் கொண்டு, “கண்டிப்பா நீங்க நூறு வயசு வாழ்வீங்க. அன்னை கைவிடமாட்டார்” என்று விசும்பினாள். “நீங்க சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்” என்றாள்.

“கவலைப்படாதீங்க உஷா! நூறு வயசு வரைக்கும் நான் அப்பப்போ வந்து உங்களை பிளேடு போட்டுக்கிட்டு இருப்பேன். அடுத்த வாரம் நானே வந்து உங்களை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். வரேன் ரவி சார், உஷாவுக்கு தைரியம் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு, சிரித்தபடி கையசைத்துவிட்டு ஆட்டோவில் கிளம்பிப் போனார் அந்தச் சிநேகிதி.

நான் பேச்சற்று, பதிலுக்குக் கையசத்து வழியனுப்பினேன்.

***
சந்தோஷத்தை வாங்க முயலாதீர்கள்; அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள்; அது சுலபம்!
.

அதிகம் நிலவு; கொஞ்சம் நெருப்பு!

ந்தோஷமான செய்தி ஒன்று; கொஞ்சம் வருத்தமான செய்தி ஒன்று!

முதலில் சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ புத்தகம் என்னுடைய மொழிபெயர்ப்பில் விகடன் பிரசுரத்தின் மூலம் தமிழில் வெளியாகிவிட்டது. (அது பற்றிப் பதிவிட நான்தான் தாமதமாக்கிவிட்டேன்.) வழக்கமான மெல்லிய புத்தகமாக இல்லாமல், ஒரு கனமான நூலாக, அட்டகாசமாக வெளியாகியிருக்கிறது. உயர்தர தாளில், மிக அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. மூல புத்தகம் முந்நூற்றுச் சொச்சம் பக்கங்கள் என்றால், தமிழ்ப் பதிப்பு ஐந்நூற்றுச் சொச்சம் பக்கங்கள். கையில் வைத்திருக்கவே ஒரு கௌரவமாக இருக்கிறது.

மூலப் புத்தகத்தை வெளியிட்டவர்கள், தமிழில் இதை வெளியிட சில நிபந்தனைகளை விதித்திருந்தார்கள். அவை:

1. மூலப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைச் சரியான தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். மொழிபெயர்க்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் நாங்கள் ஒரு தமிழ் வல்லுநரை வைத்துப் படித்துப் பார்த்துச் சரியாக இருந்தால்தான் புத்தகம் வெளியிட அனுமதிக்கப்படும்.

2. நாங்கள் மூலப் புத்தகத்தை எவ்வாறு அட்டை மற்றும் உள் பக்கங்களை வடிவமைத்திருக்கிறோமோ அதே போன்ற வடிவமைப்பைத்தான் தமிழிலும் பின்பற்ற வேண்டும். புத்தகத்தின் நீள, அகலம், அட்டையில் அரக்கு நிற எழுத்துக்கள் என எதையும் ஒரு இம்மியளவும் மாற்றக் கூடாது.

3. நாங்கள் உபயோகித்திருக்கும் அதே தரத்தினாலான பேப்பரைத்தான் பயன்படுத்த வேண்டும்.

4. விலை எக்காரணம் கொண்டும் ரூ.150/-ஐத் தாண்டக்கூடாது. அதற்காகக் கட்டுரையில் எடிட் செய்து குறைத்து, பக்கங்களைக் குறைக்க அனுமதியில்லை.

மூலப் பிரசுரகர்த்தர்கள் இந்தப் புத்தகத்தை இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கொண்டு வருகிறார்கள். எனவே, எல்லாமே ஒன்று போல் யூனிஃபார்மாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். எனவேதான் இத்தகைய நிபந்தனைகள்.

விகடன் பிரசுரம் சளைத்ததா என்ன! நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு களத்தில் இறங்கியது.

முதல் ஐம்பது பக்கங்களுக்கான மொழிபெயர்ப்பைப் பார்த்தவர்கள், “மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இனி மேற்கொண்டு எதுவும் நாங்கள் பார்க்கத் தேவையில்லை. கோ அஹெட்!” என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.

கடைசி நிபந்தனை மட்டும் கொஞ்சம் இடித்தது. பொதுவாகவே ஆங்கிலப் பதிப்பு அதிக அளவில் விற்பனையாகும். இதர மொழிகளில் அந்த அளவு விற்பனையை எட்டுவது கஷ்டம். எனவே, மூலப் பதிப்பைக் கணக்கிடுகிற அதே அளவுகோலின்படி விலை வைத்தால் நிச்சயம் கட்டுப்படியாகாது. எனவே, அவர்களிடம் பேசிப் புரிய வைத்து, விலை ரூ.175/- என நிர்ணயித்துக் கொள்ள ஒப்புதல் வாங்கிவிட்டது விகடன் பிரசுரம். இது கூட அதிக லாபம் இல்லாத ஒரு விலைதான்!

மிகச் சிறந்த உள்ளடக்கம்; மிகத் தரமான தாள்; மிக அருமையான அச்சு. மூன்றையும் கூட்டிப் பார்த்தால் இந்த விலை மிகக் குறைவானது என்று புரியும்.

சரி, கொஞ்சம் வருத்தமான செய்தி என்று சொன்னேனே! அது வேறொன்றுமில்லை. இந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்புக்கான தலைப்புதான்.

ஆங்கிலத்தில் ராஷ்மி பன்சால் மிக ஸ்டைலாக ‘STAY HUNGRY, STAY FOOLISH’ என்று தலைப்பு வைத்திருந்தார். ‘பசியோடு இரு, முட்டாளாக இரு’ என்பது நேரடி அர்த்தம். அதாவது, காலிப் பாத்திரமாக நம் மனத்தை வைத்திருந்தால்தான், வெளியிலிருந்து பல நல்ல விஷயங்களை உள்ளே இறக்கிக் கொள்ள முடியும்; அதே போல் நம்மை முட்டாளாக நினைத்துக் கொண்டால்தான், பல விஷயங்களைக் கேட்டும் கற்றும் உள்வாங்கிக் கொள்ள முடியும். கவித்துவமான தலைப்பு இது.

புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தபோது, இந்தத் தலைப்பைத் தமிழ்ப்படுத்த எனக்குச் சிரமமாகவே இல்லை. காரணம், இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருவருட்பிரகாச வள்ளலார் அழகாக, ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்று உபதேசித்துவிட்டுப் போனார். பசியோடு இருப்பவனுக்குத்தான் சாப்பாடு இறங்கும்; செரிமானமாகும். தனித்திருப்பது என்பது வேறில்லை. மற்றவர்களைப் போலவே சிந்திக்காமல், இயங்காமல், தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்துவது; விழித்திரு என்றால், எப்போதும் விழிப்புடன் இருத்தல். நம்மைச் சுற்றிலும் என்ன நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்கிற விழிப்பு உணர்வு இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எனவே, ஆங்கிலத் தலைப்புக்கு மிகப் பொருத்தமாக ‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ என்று வைத்தேன். ஆங்கில பதிப்பில் உள்ளது போலவே நான்கு வரிகளாக மடக்கிப் போட்டு லே-அவுட் செய்யவும் வசதியான தலைப்பு இது.

ஆனால், இந்தத் தலைப்பில் உள்ள பொருத்தமும், நயமும், அழகும் மூலப் பதிப்பாளர்கள் நாடிய தமிழ் வல்லுநர்களுக்குப் புரியவில்லை போலும்... ‘முயற்சி திருவினையாக்கும்’ என்று நேரடியான தலைப்பைத் தந்து, அதைத்தான் வைக்க வேண்டும் என்பதை ஐந்தாவது நிபந்தனையாக்கிவிட்டார்கள். அவர்களிடம் பேசிப் புரிய வைக்க நேரமோ பொறுமையோ இல்லாததால், மேற்படி தலைப்பிலேயே வெளியாகியிருக்கிறது இந்தப் புத்தகம். என்னைப் பொறுத்த வரையில் இது எனக்கு ஒரு குறைதான்.

மயிலுக்குக் காக்கா என்று பெயர் வைத்தாலும், மயில் மயில்தானே? அது போல, தலைப்பு மாறினாலும், இந்தப் புத்தகம் நிச்சயம் எனக்குப் பெருமைக்குரிய ஒன்றுதான்!

ன்னொரு சந்தோஷமான செய்தியும், கொஞ்சம் வருத்தமான செய்தியும்கூட இருக்கிறது.

அடுத்ததாக நான் இப்போது மொழிபெயர்த்துக்கொண்டு இருப்பது டாக்டர் ஆர்.கே.ஆனந்த்தின் ‘GUIDE TO CHILD CARE’ என்ற புத்தகம். குழந்தை வளர்ப்பு பற்றிய அருமையான, விளக்கமான புத்தகம்.

மருத்துவப் புத்தகம் என்பதால் மொழிபெயர்ப்பில் ஒரு சிறு தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கவலை. “கவலையே படவேண்டாம். டாக்டர் ஆனந்தின் நெருங்கிய நண்பர் இங்கே சென்னையில் டாக்டர் பார்த்தசாரதி இருக்கிறார். அவரும் சிறந்த குழந்தை மருத்துவர். உங்கள் மொழிபெயர்ப்பை அவரிடம் காண்பித்து, தவறுகள் இருந்தால் திருத்தித் தரும்படி கேட்போம்” என்றார் விகடன் பிரசுர ஆசிரியர் திரு.வீயெஸ்வி அவர்கள்.

(இங்கே ஒரு முக்கியக் குறிப்பு: நான் SSLC வரை மட்டுமே படித்தவன். அந்தக் காலத்து SSLC என்று வேண்டுமானால் பெருமைக்காகச் சொல்லிக் கொள்ளலாம். ஆங்கிலப் புலமை இல்லாதவன்.)

அதன்படி, முதல் ஐம்பது பக்கங்களை மொழிபெயர்த்ததும், அதை டாக்டர் பார்த்தசாரதிக்கு அனுப்பி வைத்தோம். அடுத்த நாளே அது திரும்பி வந்தது, டாக்டரின் குறிப்புகளோடு.

‘Hats off for the excellent translation’ என்று முதல் வரியாகக் குறிப்பிட்டிருந்தார் டாக்டர். தொடர்ந்து, அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததன் சாராம்சம்:

‘மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். வார்த்தைகள் மிகக் கச்சிதமாக, அதே சமயம் எளிமையாகக் கையாளப்பட்டுள்ளன. இதைப் படிக்கும்போது ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தது போலவே தோன்றவில்லை. நேரடியாக மருத்துவர் தமிழிலேயே எழுதியிருக்கிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அத்தனைக் கச்சிதம்!’

டாக்டர் அந்த மொழிபெயர்ப்பில் போட்டிருந்த திருத்தங்களைப் பார்த்தேன். அத்தனையும் மருத்துவப் பெயர்கள். நான் எனக்குத் தெரிந்த தமிழில் அந்த வார்த்தைகளை மொழிபெயர்த்திருக்க, அவற்றுக்குச் சரியான பதங்களைக் குறிப்பிட்டிருந்தார் டாக்டர்.

டாக்டர் பார்த்தசாரதியின் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்துள்ளது. டாக்டருக்கு நன்றி!

சரி, கொஞ்சம் வருத்தமான செய்தி என்று சொன்னேனல்லவா? ‘ஸ்டே ஹங்ரி...’யை மொழிபெயர்க்கும்போது, ஆங்கில மூலத்தை PDF ஃபைலாக நெட்டிலிருந்து டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டேன். அதை மொழிபெயர்க்கும்போது மானிட்டரின் மேல் பாதியில் அதை வைத்துக் கொண்டு, கீழ்ப்பாதியில் வேர்ட் பேடைத் திறந்து, அப்படியே பார்த்துப் பார்த்துத் தட்டச்சு செய்துகொண்டே போவேன். எனக்கு வேலை சுலபமாக இருந்தது. தலையை அங்கே இங்கே திருப்ப வேண்டிய அவசியமில்லை. கடகடவென்று ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து பக்கங்கள் வரை மொழிபெயர்த்தேன்.

இந்தப் புத்தகம் இன்னும் PDF-ஆக வரவில்லை. எனவே, பக்கத்தில் புத்தகத்தை நிறுத்திக் கொண்டு, புத்தகத்தையும் மானிட்டரையும் மாறி மாறிப் பார்த்து அடிக்க வேண்டியுள்ளது. இதனால் கழுத்து வலி ஏற்படுவதோடு, மொழிபெயர்ப்பு வேலை மிக மிக மந்தமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பார்க்கலாம், டாக்டரின் உற்சாக வார்த்தைகள் கழுத்து வலியையும் மீறி என்னை இயக்குகிறதா என்று!

***
சிறப்பாகச் செய்வது சிறப்பாகச் சொல்வதைவிடச் சிறப்பானது!

இதயத்தை உலுக்கும் இலா அருண்!

லா அருண்... பேரைச் சொல்லும்போதே அதிரடியும் ஆர்ப்பாட்டமுமான அவரது குரல், காதுகள் வழியே இறங்கி இதயத்தை உலுக்குகிற மாதிரி ஓர் உணர்வு!

ஜெய்ப்பூரில் பிறந்தவர் இலா அருண். தனது நான்காவது வயதிலிருந்தே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஆடுவது இவரின் பொழுதுபோக்கு. ஜெய்ப்பூரில் மகாராணி பெண்கள் கல்லூரியில் படித்தார். அங்கேயும் கிராமியப் பாடல்களை அவருக்கே உரிய ஹஸ்கி குரலில் பாடி அசத்தினார். இதனால் டி.வி. நிகழ்ச்சிகளில் பாடவும், நடிக்கவும் வாய்ப்பு வந்தது. பின்னர் இவர் வெளியிட்ட ‘வோட் ஃபார் காக்ரா’ இசை ஆல்பம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றுச் சாதனை படைத்தது. அதன்பின் நிறைய ஆல்பங்களை வெளியிட்டார். ‘ஹாலே ஹாலே’ ஆல்பத்துக்குப் பிறகு, இசைத் திருட்டு, ரீ-மிக்ஸ் கலாசாரம் இவற்றை எதிர்த்து ‘இனி பாடுவதில்லை’ என்று சில காலம் ஒதுங்கியிருந்தார்.

ஆபாச வார்த்தைகளை நுழைத்து எழுதிய பாடல்களைப் பாடுவதென்றால் இவருக்கு அறவே பிடிக்காது. ஆனால் ஆச்சர்யமாக, ‘சோளி கே பீச்சே க்யா ஹை’ (சோளிக்குள் என்ன இருக்கு?) பாட்டுதான் இவரைப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. மாதர் சங்கங்கள் போட்ட வழக்கினால் அந்தப் பாடலுக்கு கோர்ட், கேஸ், தடை உத்தரவு எல்லாம் வந்தது. ஆனால் இவரோ, “இது ஆபாசமான பாடலே அல்ல. இதைவிடப் பச்சையான பாடல்கள் எல்லாம் வந்திருக்கின்றன. அவற்றை எதிர்த்து யாரும் குரலெழுப்பவில்லை. காரணம், அவை பாப்புலராகவில்லை. இந்தப் பாடல் பிரபலமாகிவிட்டதால், இதை எதிர்ப்பதன் மூலம் தங்கள் இருப்பை வெளியுலகுக்குத் தெரியப்படுத்திக் கொள்ள் விரும்புகிறார்கள் சில மாளிகைவாசி மாதர் சங்கப் பெண்கள். இந்த எதிர்ப்புக்கெல்லாம் அஞ்சுபவள் நானல்ல” என்றார்.

“காலையில் எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போவது வரைக்கும் கிராமியப் பாடல்களைப் பாடிக்கொண்டே வேலை செய்வது ராஜஸ்தானிய கிராமத்து மக்களின் ரத்தத்தில் ஊறிப் போன பழக்கம். எங்கள் வீட்டில் ரகுநாத் என்று ஒரு வேலைக்காரர் இருந்தார். அவர் எப்போதும் ராஜஸ்தானியப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அவர்தான் தினமும் பள்ளிக்கூடத்துக்கு என்னை சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் செல்வார். அப்படி சைக்கிள் ஓட்டிச் செல்லும்போதும் கிராமியப் பாடல்களைப் பாடியபடியே வருவார். அதைக் கேட்டுக் கேட்டு எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆக, என் முதல் குரு ‘ரகுநாத்’தான்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் இலா அருண்.

இலாவின் கணவர் அருண், மெர்ச்சன்ட் நேவியில் அதிகாரியாக இருந்தவர்.

இலா பாடல்களும் எழுதுவார். இவரே எழுதி, பாடித் தொகுத்த ‘சபன்சுரி’ என்ற கிராமியப் பாடல்கள் அடங்கிய ஆடியோ கேஸட் விற்பனையில் சக்கைப் போடு போட்டது. இந்தியாவில் இந்த கேஸட் அதிகம் விற்பனையான மாநிலம்... சொன்னால் நம்ப மாட்டீர்கள் - நம்ம தமிழ்நாடுதான்! “தமிழகத்திலிருந்து எனக்குக் கிடைத்த இந்த மகத்தான வரவேற்பைக் கண்டு பிரமித்துப் போனேன்” என்று சொல்லியிருக்கிறார் இலா அருண்.

இலா அருண் சைனா கேட், சிங்காரி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ‘ஜோதா அக்பர்’ படத்தில் அக்பரின் நர்ஸ் கேரக்டரில் வருவது இலா அருண்தான். ஒரு வளர்ப்புத் தாயார் போன்ற கேரக்டர் அது.

சமீபத்தில் நம்ம ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் ‘ரிங்கா, ரிங்கா’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், அல்கா யாக்னிக் இருவருடனும் இணைந்து பாடியிருக்கிறார் இலா அருண். இவரின் ‘பஞ்சாரன்’ பாடல்கள் அதட்டலும் உருட்டலும் மிரட்டலுமாக இருக்கும். கொஞ்சம் திகிலோடுதான் அவற்றைக் கேட்க வேண்டும். எனக்கு ரொம்பப் பிடித்தமான பாடல்கள் அவை. என்னவொரு உலுக்கியெடுக்கும் குரல்!

ஏ.ஆர்.ரஹ்மான் புண்ணியத்தில் இலா அருண் தமிழிலும் பாடியிருக்கிறார். மிஸ்டர் ரோமியோ படத்தில் ‘முத்து முத்து மழையே...’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களும் இலாவின் குரலை ரசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்!

***
சந்தோஷம் என்பது ஒரு தொற்று. ஆனால், அதைப் பெறுபவராக இருப்பதைவிடப் பரப்புபவராக இருக்க முயலுங்கள்!

பாப்பரசி ஸ்வேதா ஷெட்டி!

சில மாதங்களுக்கு முன்னால் என் அபிமான கஸல் பாடகி பீனாஸ் மஸானி பற்றி எழுதியிருந்தேன். அவரின் குரல் மிகவும் மதுரமான குரல். குழைவும் நெகிழ்வும் மிக்க குரல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரல். இரவுகளில் பெரும்பாலும் நான் படுக்கையில் சாய்ந்த பின்பு கேட்பது என் அபிமான பாடகர் டி.எம்.எஸ்ஸின் முருகன் பாடல்களாகத்தான் இருக்கும். இல்லையெனில், பீனாஸ் மஸானியின் கஸல்களாக இருக்கும்.

எனினும், குழைவும் நெகிழ்வுமான குரல்கள் மட்டுமேதான் எனக்குப் பிடிக்கும் என்பதில்லை. நேர்மாறாக, அதிரடியான குரல்களும், ஆர்ப்பாட்டமான பாடல்களும்கூடப் பிடிக்கும். உஷா உதூப்பின் குரல் கனமான குரல்தான். எனக்கு அவரின் பாடல்கள் பிடிக்கும். அதே போல், இந்தியில் இலா அருண் என்றொரு பாடகி உண்டு. அவரின் குரல் முரட்டுத்தனமாக இருக்கும். ஆனாலும், அந்தக் குரலில் எனக்கு அப்படியொரு ஈர்ப்பு உண்டு. இலா அருண் கேஸட்டுகளாக நிறைய வாங்கி அடுக்கினேன் ஒரு காலத்தில். சிடி கலாசாரத்துக்கு மாறிய பிறகு, அவரின் பாடல்கள் மட்டுமல்ல; ஏனோ தெரியவில்லை, பொதுவாகவே பாடல்கள் கேட்பது குறைந்துபோய்விட்டது. (இலா அருண் பற்றித் தெரியாதவர்களுக்காக: ‘கல்நாயக்’ படத்தில் ‘சோளி கே பீச்சே க்யா ஹை’ பாடல் பிரபலமானது. அந்தக் காட்சியில் மாதுரி தீட்சித்தும் நீனா குப்தாவும் ஆடுவார்கள். மாதுரி தீட்சித்துக்கு அல்கா யாக்னிக் பின்னணி பாட, நீனா குப்தாவுக்குப் பாடுபவர் இலா அருண். இவரைப் பற்றி ஒரு தனி பதிவே போடலாம்.)

நான் சாவி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில், தூர்தர்ஷனில் அடிக்கடி பாப் ஆல்பங்களை ஒளிபரப்புவார்கள். ஷரான் பிரபாகர், பார்வதி கான் ஆகியோரின் பாப் பாடல்களை அப்போது அதிகம் கேட்டு ரசித்திருக்கிறேன். பின்னர்தான் பீனாஸ் மஸானியின் குரல் அறிமுகம்.

அதற்குச் சில ஆண்டுகள் கழித்து, அலீஷாவின் ‘மேட் இன் இண்டியா’ என்னை வசீகரப்படுத்தியது. அலீஷாவின் கேஸட்டுகளையும் தேடித் தேடி வாங்கினேன். அந்தச் சமயத்தில் பத்தோடு பதினொன்றாக நான் வாங்கிய கேஸட் ‘தீவானே தோ தீவானே ஹைன்’. ஆம்பிளைத்தனமான அந்தக் குரல் என்னை மிகவும் ஈர்த்தது. திரும்பத் திரும்ப அந்தப் பாடல்களைப் பலப்பல முறை கேட்டு ரசித்தேன். பின்பு அந்தக் குரலுக்காகவே அவரின் கேஸட்டுகளையும் தேடித் தேடி வாங்கினேன். அவர் - ஸ்வேதா ஷெட்டி.

ஏக் லடுகா, குட் லக் முண்டயா, கேல் கிலாடி கேல், தில்லாலே தில்லாலே, வா(ஹ்) பை வா(ஹ்), தக் தக் தட்கே, பண்டா படா குடு லகுதா என அவரின் ஒவ்வொரு பாட்டுமே என் ரசனைக்கேற்ப இருந்தது. இன்றைக்கும் எனது யுஎஸ்பி எம்பி3-யில் அவரின் ஏழெட்டு பாடல்கள் உள்ளன.

17 வயதில் மாடலாகக் களம் இறங்கியவர் ஸ்வேதா ஷெட்டி. அதைத் தொடர்ந்து விளம்பரத் துண்டுப் படங்களுக்குக் குரல் கொடுத்தார். பின்னர்தான் முழு நீளப் பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரின் முதல் ஆல்பமான ‘ஜானி ஜோக்கர்’ 1993-ல் வெளியாகி, அவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. பின்னர் எம்.டி.வி. நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். பின்னாளில் அவரின் ஆல்பம் ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தபோது வியப்பாக இருந்தது. அத்தனை ஒட்டி உலர்ந்த தேகம். கிள்ளியெடுக்கத் துளி சதை கிடையாது. இத்தனை வற்றலும் தொற்றலுமான உடம்புக்குள்ளிருந்தா அத்தனைக் கிறங்கடிக்கும் குரல் கிளம்புகிறது என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். அதே சமயம், குரலின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக அவரின் ஒடிசலான தேகமும் ஒட்டிய கன்னமும்கூட அழகாக இருப்பதாகவே பட்டது எனக்கு.

திறமையும் தகுதியும் நிரம்பிய இவருக்குக் குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது ஒரு சோகம். இவரது போக்கும், இவர் எடுத்துக்கொண்ட துறையும் பிடிக்காமல், அப்பா இவருக்குப் பண உதவி உள்பட எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார். அது மட்டுமல்ல, அவரோடு முகம் கொடுத்துப் பேசுவதையும்கூட நிறுத்திவிட்டார்.

ஸ்வேதா பின்பு சாரா பிரைட்மேன், கிரிகோரியன் போன்ற தன் நண்பர்களோடு இணைந்து பாப் பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தார். 1997-ல் கிறிஸ்டியன் பிராண்ட் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கணவரின் ஒத்துழைப்போடு 1998-ல் ‘தீவானே தோ தீவானே’ ஆல்பத்தை வெளியிட்டார். அது ஒன்றரை லட்சம் கேஸட்டுகளுக்கு மேல் விற்றுச் சாதனை படைத்தது. ஸ்வேதா வெளியிட்ட அடுத்த ஆல்பமும் (சஜ்னா - 2003-ல்) சூப்பர்டூப்பர் ஹிட்! ‘ரங்கீலா’ போன்ற சில திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார் ஸ்வேதா ஷெட்டி.

சமீப காலமாக அவரை அதிகம் காண முடியவில்லை. மியூசிக் வேர்ல்டில் சமீபத்தில் போய்க் கேட்டபோது அவரின் புதிய சிடி-க்கள் எதுவும் வரவில்லை என்று சொன்னார்கள். 40 வயதாகும் ஸ்வேதா இப்போதெல்லாம் பாடுவதைக் குறைத்துக் கொண்டு, தன் கணவரோடு ‘ஹாம்பர்க்’ நகரில் செட்டில் ஆகிவிட்டதாகக் கேள்வி.

அவருக்குள்ள திறமைக்கு கிராமி விருதுகள் பெற்று, இன்னும் புகழின் உச்சிக்குச் சென்றிருக்க வேண்டியவர். இப்போதெல்லாம் அவரின் குரலைக் கேட்க முடியாததில் எனக்கு ரொம்ப வருத்தம்தான்!

***
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் மட்டும் சிறந்த பெற்றோர் ஆகிவிட முடியாது. வீட்டில் பியானோ இருந்துவிட்டால் பியானோ கலைஞராகிவிட முடியுமா?