கார்ட்டூனிஸ்ட்டுக்குள் ஓர் ஆன்மிகவாதி!

வெங்கட்ராகவன் என்கிற கார்ட்டூனிஸ்ட் கேஷவ்வை எனக்கு அதிகம் பழக்கம் இல்லை. ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ பகுதியைத் தொகுப்பதற்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டியபோது அவரின் ‘தொண தொண தொளசிங்கம்’, ‘முழுச்சோம்பல் முருகேஷ்’ போன்ற கேரக்டர் ஜோக்குகளையும், அவர் வரைந்த கர்னாடக சங்கீத பாடகர்களின் கேரிகேச்சர்களையும் பார்த்தேன்.

அப்போது நான் வியந்ததைவிட அதிகம் வியந்தது, அவர் தனது ஓவியக் கண்காட்சிக்கு அழைப்பு வைக்க விகடன் அலுவலகத்துக்கு வந்தபோதுதான். அழைப்பிதழில் அவரின் கண்காட்சியில் இடம்பெறவிருக்கும் படங்களின் சாம்பிள்களை அச்சிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு சொல்லில் அடங்காதது. அத்தனையும் ஆன்மிக ஓவியங்கள் என்பதோடு, அவை சம்பிரதாயமான முறையில் வரையப்படாமல், நவீன பாணியில் வரையப்பட்டிருந்தது. ஓவியர் கேஷவ்வை நான் நேரில் சந்தித்தது அப்போதுதான்.

சக்தி விகடன் இதழுக்குப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், எழுத்தாள நண்பர் சாருகேசி அவர்கள் மூலம் மீண்டும் கேஷவ்வை அவரது இல்லத்துக்கே சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. “ஸ்ரீமத் பாகவதத்தை முழுமையானதொரு பெரிய ஓவியமாக கேஷவ் வரைந்திருக்கிறார்; போய்ப் பார்ப்போம், வருகிறீர்களா?” என்று அழைத்தார் சாருகேசி. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று போனேன்.

ஸ்ரீமத் பாகவதம் என்பது பகவான் விஷ்ணுவின் கதைகளையும், ஸ்ரீகிருஷ்ண லீலைகளையும் விவரிக்கும் தொகுப்பு. அதை ஓவியமாகக் காட்சிப்படுத்த தேர்ந்தெடுத்ததே, திரு.கேஷவ் தன் தூரிகை ஆற்றலின் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையைக் காட்டுவதாகும். பாகவதத்தில் அத்தனைச் சம்பவங்கள்; ஒவ்வொன்றிலும் புதைந்திருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்கள்... அத்தனையையும் ஒரு கேன்வாஸில் மெகா ஓவியமாகத் தீட்டுவதற்கு மகா பொறுமை வேண்டும்; ஆழ்ந்த அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.

அந்த பாகவத ஓவியத்தைக் கண்டு நான் விக்கித்து நின்றுவிட்டேன். அதுவொரு அசாத்தியமான உழைப்பில் விளைந்த அற்புதப் படைப்பு! ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, அதை அப்போதே சக்தி விகடன் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நான் பரபரத்தேன். அப்போது, சக்தி விகடனின் எட்டாம் ஆண்டு தொடக்க இதழை அதிக பக்கங்களுடன் டைஜஸ்ட் வடிவில் கொண்டு வருவதாக இருந்தோம். அதற்கு இந்த பாகவத ஓவியம் ஒரு வெயிட்டான மேட்டராக இருக்கும் என்று என் பத்திரிகை புத்தி கணக்குப் போட்டது.

ஆனால், கேஷவ் மறுத்துவிட்டார். காரணம், நாங்கள் போயிருந்த நேரத்தில், அந்த மெகா ஓவியத்தில் முக்கால்வாசிதான் பூர்த்தியாகியிருந்தது. “இதைப் பூர்த்தி செய்தவுடன் நானே கூப்பிட்டு சக்தி விகடனுக்கு இது குறித்து பேட்டி அளிக்கிறேன்” என்றார்.

அதன்பின், அவரோடு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், நானும் சாருகேசியும். அரசியல் கார்ட்டூன்கள் வரையும் கார்ட்டூனிஸ்ட்டுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு இல்லை. யாரோ ஒரு சாதுவிடம், மதத் தலைவரிடம், பழுத்த ஆன்மிகவாதியிடம் பேசிக்கொண்டிருப்பதான உணர்வு. பாகவதத்தில் தொடங்கி, புராணங்கள், இதிகாசங்கள், தத்துவங்கள் என சகலமும் பேசினார். ‘ஹா’வென்று வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, பாகவத படத்தைப் பூர்த்தி செய்தார் கேஷவ். முன்பு எங்களிடம் வாக்குத் தந்தபடி மறக்காமல் அழைப்பு விடுத்தார். அவரை பேட்டி கண்டார் எழுத்தாளர் திரு.சாருகேசி. சக்தி விகடனின் எட்டாம் ஆண்டு சிறப்பிதழுக்காக நான் திட்டமிட்டிருந்த கேஷவ்வின் பேட்டி, புத்தாண்டில் வெளியாகவிருக்கும் பொங்கல் சிறப்பிதழில் வெளியாகிறது.

பெங்களூரில், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கேஷவ். ஓவியத்தில் நாட்டம் அதிகம் என்றாலும், முறைப்படி கற்க வசதி இல்லை. தரமான காகிதம் வாங்கக்கூட இயலாமல், காலண்டர் தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றின் பின்புற வெள்ளைப் பகுதியில் வரைந்து பழகியவர்.

அவர் முதன்முதலில் படங்கள் வரைந்தது ஆனந்த விகடனில்தான். டிசம்பர் சீஸனின்போது ஒவ்வொரு கச்சேரிக்கும் நேரில் போய், பாடகர்களின் பாவனைகளை நேரடியாக ஸ்கெட்ச் பண்ணியது, தனது ஓவியத் திறனை வெகுவாக வளர்க்க உதவியது என்கிறார் கேஷவ்.

கிளுகிளு கதைகள் எழுதும் புஷ்பாதங்கதுரைக்கும் பக்தி மயமாக ஆன்மிகக் கட்டுரைகள், கதைகள் எழுதும் ஸ்ரீவேணுகோபாலனுக்கும் சம்பந்தமே இருக்காது. சிவாஜியின் அபாரமான டபுள்-ஆக்ட் போல இருக்கும். இருவரும் ஒருவரே என்பதை என்னால் ரொம்ப நாளைக்கு நம்பவே முடியவில்லை. அதேபோலத்தான் ‘தி ஹிந்து’ நாளேட்டில் அதிரடி அரசியல் கார்ட்டூன்கள் போடும் கேஷவ்வுக்குள்ளா இப்படியொரு ஆன்மிக ஓவியர் ஒளிந்திருக்கிறார் என ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

“இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அரசியல் கார்ட்டூன்கள் என்பது அடையாளக் குறியீடுகள்தான். அரசியல் நிகழ்வு குறித்த என் எண்ணத்தை அடையாளக் குறியீடாக வரைகிறேன். அவை அரசியல் கார்ட்டூன் ஆகிறது. புராணங்களில், இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களை அடையாளக் குறியீடாக வரைகிறேன். அவைதான் இந்த ஓவியங்கள்!” என்றார் கேஷவ்.

“என்ன சொல்கிறீர்கள்? இந்த ஓவியங்கள் அடையாளக் குறியீடுகளா?” என்றேன் வியப்புடன்.

“ஆமாம்! விஷ்ணு என்றால் எல்லாருக்கும் தெரிந்த மகாவிஷ்ணுவை அப்படியே நான் வரைவதில்லை. விஷ்ணு என்கிற உருவகத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் தத்துவத்தை, அதன் மையக் கருத்தையே ஓவியமாக வரைகிறேன். அனுமன் ஆற்றல் மிகுந்தவன்; அதே நேரம் அடக்கம் மிகுந்தவன். ஆகவே, என் பார்வையில் அனுமனை எப்படி வரைந்திருக்கிறேன், பாருங்கள்” என்று அழைத்துச் சென்று, ஓர் ஓவியத்தின் முன் நிறுத்தினார் கேஷவ்.

ராமன்,லட்சுமணன், சீதை எல்லோரும் சாதாரண மானுடர்கள் போன்று இயல்பான தோற்றத்தில் இருக்க, ராமனின் காலடியில் தன் உடம்பு மொத்தத்தையும் எண்சாணாகக் குறுக்கிக்கொண்டு மடிந்து வணங்கிக்கொண்டு இருந்தது - மன்னிக்கவும் - இருந்தார் அனுமன். என் கண்கள் வியப்பால் விரிந்தன.

“ஆனந்தத்தின் அடையாளக் குறியீடுதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எல்லோரையும் நாம் வெறுமே கடவுளர்களாக வைத்து வழிபடுகிறோமே தவிர, ஒவ்வொன்றின் மூலமும் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களைக் கோட்டை விட்டுவிடுகிறோம். நம் இந்துப் புராணங்களில் சொல்லப்படாத வாழ்க்கை நெறிமுறைகளே இல்லை...”

திரு.கேஷவ்வின் ஆன்மிக விளக்கங்கள் அபாரமானவை. அவற்றை ஒரே சந்திப்பில் அப்படியே உள்வாங்கிக்கொள்கிற பக்குவமும் தகுதியும் எனக்கு இல்லை.

கேஷவ் தனது அன்றாட வேலைகளுக்கிடையிலும், அலுவலகப் பணிகளுக்கிடையிலும், இந்த பாகவத ஓவியத்தை வரைவதற்கு எடுத்துக்கொண்ட காலம் சுமார் மூன்றரை ஆண்டுகள்.
இதை அவர் எதற்காக வரைந்தார்?

ஆத்ம திருப்திக்காக வரைந்தார் என்று நம்ப இடமுண்டு. ஆனால், இந்த அற்புதமான படைப்பை இனி அவர் என்ன செய்யப் போகிறார்?

அது பற்றி அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

காஞ்சி மகான் தற்போது நம்மிடையே இருந்திருந்தால், மறு யோசனையின்றி இந்த ஓவியத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பித்து, அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்திருப்பார் கேஷவ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

பின்குறிப்பு:

காஞ்சிப் பெரியவர் படத்தை மிக அற்புதமாக, தத்ரூபமாக வரைந்து, அதை அந்த காஞ்சி மகானிடமே காண்பித்து, அவரின் ஆசியாக மட்டைத் தேங்காயைப் பெற்றிருக்கிறார் கேஷவ். அந்தத் தேங்காயை இன்றைக்கும் பெரியவர் படத்தின் முன்பு வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு, திரு.கேஷவ்வை நான் சந்தித்தபோது, சாவியிடம் நான் பணியாற்றியதைச் சொல்லி, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது அவர் இந்தக் காஞ்சி மகான் படத்தைக் காண்பித்து, “இந்தப் படத்தைப் புகைப்படம் எடுத்து ஆசிரியர் சாவியிடம் கொண்டு காண்பித்து, அவரின் பாராட்டுக்களையும், ஆசிகளையும் பெற்றுக் கொண்டேன். அடுத்த வார சாவி இதழில் அட்டைப்படமாக இதை வெளியிட்டுவிட்டார் சாவி. அது எனக்குப் பெரிய தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஏனென்றால், இங்கே நான் பணியாற்றும் இடத்தில் முன் அனுமதி பெறாமல் வெளியிடங்களில் படம் வரையக் கூடாது!” என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

எனக்குத் துணுக்கென்றது. அந்தப் படத்தை சாவி அட்டையில் வெளியிட்டவன் நான்தான். பத்திரிகைப் பணியில் சேர்ந்த புதிதாகையால், ஒருவர் தந்த படத்தை அவருக்கே சொல்லாமல், அவரின் முன் அனுமதி பெறாமல் பத்திரிகையில் வெளியிடக்கூடாது என்கிற பத்திரிகை தர்மம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இருந்தாலும், அன்று கேஷவ்விடம் இந்த உண்மையை நான் சொல்லவில்லை. கொஞ்சம் பயம்தான்!

***
நமக்குத் தெரியாதவற்றிலிருந்து பயம் வளர்கிறது; நம்மால் செய்ய இயலுவதிலிருந்து நம்பிக்கை பிறக்கிறது.

கிறுக்குத்தனங்கள்!

சின்ன வயதில் என்னிடம் ஒரு கிறுக்குத்தனம் இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் ஏதேனும் ஓட்டாஞ்சில்லு கண்ணில் பட்டால், அதைக் காலால் உதைத்துத் தள்ளிக்கொண்டே, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டு போக முடியுமா என்று முயற்சி செய்வேன். பல நேரம் என் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

அநேகமாக இதே போன்ற கிறுக்குத்தனங்கள் அந்த வயதுப் பிள்ளைகள் அனைவரிடமும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சிறுவர்களிடம் மட்டுமல்ல; பெரியவர்களிடமும் சில கிறுக்குத்தனங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் நண்பர் ஒருவரோடு சாலையில் நடந்து போகும்போது, வழியில் கடக்கும் மரம், மட்டை, அறிவிப்புப் பலகை என கைக்குத் தட்டுப்படும் எல்லாவற்றையும் லேசாகத் தட்டிக்கொண்டே வருவார். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘டாக்டர் ஜான்சன் தெரியுமா, பெரிய மேதை! அவருக்கும் இப்படி ஒரு பழக்கம் இருந்ததாம்’ என்பார்; இந்த ஒரு விஷயத்திலாவது, ஒரு பெரிய மேதையோடு தன்னைச் சமமாக ஒப்பிட்டுக் கொள்ளும்படியான வாய்ப்பு கிடைத்ததே என்கிற திருப்தி அவருக்கு உள்ளூர இருந்திருக்குமோ, என்னவோ!

வேறு சிலர் இருக்கிறார்கள். தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறுமா என்பதை அறிய, ஜோசியம் போல சில பரீட்சைகள் செய்து பார்ப்பார்கள். “நான் அந்தப் பச்சைக் கட்டடத்தைத் தாண்டுவதற்குள், தெரு வளைவிலிருந்து ஒரு பஸ்ஸோ, காரோ எதிர்ப்பட்டுவிட்டால், நான் போகிற காரியம் ஜெயம் என்று அர்த்தம்” என்று மனசுக்குள் தீர்மானித்துக் கொள்வார்கள். எதிர்ப்படவில்லையென்றால், சற்றும் மனம் தளராமல், “நான் அந்தத் தெருவில் திரும்புவதற்குள் என்னைக் கடந்து ஏதேனும் வாகனம் முந்திச் சென்றால், நான் போகிற காரியம் வெற்றி!” என்று மறு தீர்மானம் செய்துகொள்வார்கள். தப்பித் தவறி, சைக்கிள் டயர் ஓட்டும் சிறுவன் யாராவது இவரைக் கடந்து போய்விட்டால், மனசுக்குள் ஒரே கொண்டாட்டம்தான்! காரியம் பழமாகும் என்பதற்கான சிக்னல் கிடைத்துவிட்டதே!

என்னிடமும் சமீப காலமாக ஒரு கிறுக்குத்தனம் இருந்தது. அதைக் கிறுக்குத்தனம் என்பதைவிட, ஏதோ அபூர்வமான திறமை (ஒன்றுக்கும் உதவாத திறமை அது!) என்பதாக எண்ணி, மனசுக்குள் பெருமைப்பட்டுக்கொள்வேன். இதனாலேயே அந்தக் கிறுக்குத்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தேன்.

ஸ்கூட்டி ஓட்டிச் செல்லும்போது, என் முன்னால் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களைப் பார்த்து, அதன் சிறப்பம்சத்தைக் கண்டுபிடிப்பேன். சில மாதங்களுக்கு முன்பு, யதேச்சையாக ஒரே நம்பர் பிளேட் கொண்ட (உதாரணமாக, 9005 என்ற எண்; ரெஜிஸ்ட்ரேஷன் ஆங்கில எழுத்துக்கள் மாறுபட்டிருக்கும்.) மோட்டார் பைக், கார் மற்றும் ஒரு வேன் ஆகியவை பக்கத்துப் பக்கத்தில் சென்றதைப் பார்த்ததிலிருந்துதான் எனக்கு இந்தக் கிறுக்குத்தனம் தொற்றிக்கொண்டது. ஒருமுறை 2786 என்ற எண் கொண்ட வண்டியும், 6872 என்று உல்டாவாக எண் கொண்ட ஒரு வண்டியும் பக்கத்துப் பக்கத்தில் சென்றதைப் பார்த்தேன். இன்னொரு தடவை 1974 என்ற எண் கொண்ட ஒரு வாகனத்தைப் பார்த்தேன். அந்த எண்ணின் சிறப்பம்சம் உடனே என் புத்தியில் உறைத்தது. வேறொன்றுமில்லை; என் ஸ்கூட்டி எண் 7419. புரிகிறதா சிறப்பம்சம்? இன்னொரு முறை, ஒரு வாகனத்தின் பக்கத்தில் சென்ற மற்றொரு வாகனத்தின் எண், முந்தின வாகனத்தின் அதே எண்களையே மாற்றிப் போட்டதாக இருந்தது. அதாவது, ஒன்றின் எண் 3741 என்றால், அடுத்த வாகனத்தின் எண் 4317 என்பதாக இருந்தது. இந்தச் சிறப்பம்சங்களையெல்லாம், என் பின்னால் உட்கார்ந்து பயணிக்கும் என் மகளிடம் உடனுக்குடன் காட்டி, அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன்.

இது மட்டுமல்ல; என் முன் செல்லும் வாகனத்தின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களின் கூட்டுத் தொகையும், அதைத் தொடர்ந்து செல்லும் மற்றொரு வாகனத்தின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களின் கூட்டுத் தொகையும் ஒன்றாக இருக்கிறது என்பது போன்ற சிறப்பம்சங்களையும் நான் கவனிப்பதுண்டு.

இந்தக் கிறுக்குத்தனம் முற்றிப்போய், வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்தில் கொண்டு தள்ளிவிடப் போகிறதே என்று பயம் வந்து, சுமார் ஏழெட்டு மாதங்களாக என்னிடம் இருந்த இந்தக் கிறுக்குப் பழக்கத்தைக் கடந்த பத்து நாட்களாக விட்டுவிட்டேன்.

என்னிடம் இது ஒரு கிறுக்குத்தனம் மட்டும்தானா, அல்லது என்னையும் அறியாமல் வேறு ஏதேனும் கிறுக்குத்தனம் என்னிடம் இருக்கிறதோ என்னவோ, தெரியவில்லை!

யார் அந்த அழகி? பரிசு யாருக்கு?

சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்குச் சரியான விடை: பூங்குழலி.

நிறையப் பேர் சரியான விடைகளை அனுப்பியிருக்கிறார்கள். என்றாலும், ஏற்கெனவே சொன்னது போல், சரியான விடையை முதலில் அனுப்பிய ‘யாழ் மைந்தன்’ அவர்களுக்கு விகடன் பிரசுர புத்தகம் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவர் தனது முகவரியை எனது இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கக் கோருகிறேன்.

இதில் எனக்குப் பெருமையும் சந்தோஷமும் அளித்த ஒரு விஷயம் என்னவென்றால், இந்தப் போட்டிக்கான விடையை என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் ஞாநியும் பின்னூட்டம் இட்டிருக்கிறார் என்பதுதான். திரு.ஞாநி அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்!

***

முட்டாளிடம் இருக்கும் குறை அவனுக்குத் தெரியாது; ஆனால், உலகுக்குத் தெரியும். புத்திசாலியிடம் இருக்கும் குறை அவனுக்குத் தெரியும்; ஆனால், உலகுக்குத் தெரியாது!

பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்!

பொன்னியின் செல்வன்- வாசிப்பு அனுபவம்

பேராசிரியர் அமரர் கல்கியின் எழுத்தாற்றல் பற்றிச் சிலாகித்துச் சொல்லவும் ஒரு தகுதி வேண்டும். அது எனக்கில்லை. என்றாலும், அவரது பொன்னியின் செல்வன் நாவல் முழுவதையும் சமீபத்தில் படித்துச் சிலிர்த்தவன் என்கிற முறையில், சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.

அமரர் கல்கியின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை ராமாயண, மகாபாரத இதிகாசங்களுக்கு நிகராக வைத்துப் போற்றத்தக்கவை. இன்றைக்கு அவற்றை எடுத்துப் படித்தாலும், அவற்றில் அமரர் கல்கி கையாண்டுள்ள வசீகரமான நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், ஒரு மாயச் சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவது போன்ற கதைப் பின்னல்களும் நம்மை அப்படியே கட்டிப்போடுவதை உணரலாம்.

குறிப்பாக, சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம்!

பல நூற்றாண்டுகளுக்கு முன், சோழர் காலத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்களை அருகே இருந்து பார்த்தது போல, ஒவ்வொன்றையும் நுணுக்கமாக அவர் விவரித்திருப்பதைப் படிக்கப் படிக்கப் பிரமிப்பும் பரவசமும் ஏற்படுகிறது. அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், யுத்த வியூகங்கள், சதியாலோசனைகள் எனப் படிக்கப் படிக்க, விறுவிறுப்பான ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற படபடப்பு ஏற்படுகிறது. எந்தெந்தச் சம்பவங்கள் நிஜ சரித்திரம், எவையெவை கற்பனைச் சம்பவங்கள், யார் யார் சரித்திர புருஷர்கள், எவரெல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! புத்தகத்தை முடித்துக் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும், இன்னமும் என் மனசுக்குள் சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன் என்கிற ராஜ ராஜசோழன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர்கள், பார்த்திபேந்திரன், கந்தமாறன், பூங்குழலி, மணிமேகலை என அத்தனைச் சரித்திரப் புருஷர்களும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.

அமரர் கல்கி படைத்த கதாபாத்திரங்களை நம் கண் முன்னே உலவவிட்டு, அவர்கள் காலத்தில் நாம் வாழ்கிறோமா, நம் காலத்தில் அவர்கள் வாழ்கிறார்களா என்கிற மயக்கத்தைத் தரும்படியாக, அத்தனை உயிர்ப்போடு வடித்துக் கொடுத்த ஓவிய மேதை மணியம் அவர்களின் பங்கும் பிரமிக்க வைப்பது.

பொக்கிஷம் - என்னுரை

ந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவை கலந்த பார்வையோடு அணுகுவதன் மூலம், அதில் உள்ள நல்லது கெட்டதை மக்களுக்குத் தெளிவாகவும் சுலபமாகவும் புரிய வைக்கமுடியும். அப்படி ஒரு நோக்குடன், எல்லோரையும் இன்புற்றிருக்க வைப்பதற்குத் தொடங்கப்பட்ட பத்திரிகைதான் ஆனந்த விகடன். 1926-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதழின் அறிமுகக் கட்டுரையிலேயே, தனது நோக்கம் இதுதான் என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளான் விகடன். அந்த நோக்கம் ஒரு துளியும் சிதையாமல், 85 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையில் விகடன் பீடுநடை போட்டு வருவது, வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

‘‘அந்தக் காலத்துல காலங்கார்த்தால ரயில்வே ஸ்டேஷனுக்கே போய், ஆனந்த விகடன் பார்சல் எப்போதடா வரும் என்று காத்திருந்து, அங்கேயே காசு கொடுத்துக் கையோடு வாங்கி வந்து, ஒரு பக்கம்கூட விடாமல் படிச்சு முடிச்சப்புறம்தான் அடுத்த வேலையே ஓடும் எங்களுக்கு’’ என்று தங்கள் வாரிசுகளிடமும், பேரக் குழந்தைகளிடமும் பரவசம் ததும்பும் குரலில் சொல்லி மகிழ்கிற பெரியவர்கள், மதிப்புக்குரிய சீனியர் வாசகர்கள் அத்தனைத் தமிழ்க் குடும்பங்களிலும் உண்டு.

ஆனால், தகவல் தொழில்நுட்பம், புகைப்படக் கலையின் வளர்ச்சி, அச்சு நேர்த்தி, கம்ப்யூட்டர், இணைய தளம், டிஜிட்டல் புரட்சி என எல்லா வசதிகளோடும் மிகப் பிரமாண்டமாக விசுவரூபமெடுத்து நிற்கும் இன்றைய ஆனந்த விகடனை வாசிக்கும் இளைய தலைமுறையினரின் மனத்தில்... விகடனின் இத்தனை நாள் புத்துணர்வுத் தோற்றத்துக்கு அப்படி என்னதான் காரணம் என்கிற வியப்பு கலந்த சந்தேகம் தோன்றுவது இயல்புதான்.

‘பொக்கிஷம்’ என்கிற தலைப்பில், ஆனந்த விகடனின் கடந்த கால இதழ்களிலிருந்து சுவாரஸ்யமான பகுதிகளைத் தொகுக்கும் இந்தப் பணியை மேற்கொண்டபோது, மேற்கண்ட கேள்விக்கான முழு விடையும் எனக்குக் கிடைத்தது!

விகடன் இதழ்கள் ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க, பிரமிப்பு தாளவில்லை எனறுதான் சொல்ல வேண்டும். எத்தனை எத்தனை பிரமுகர்கள், எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள்... ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும், அந்தந்த கால கட்டத்தில் விகடனில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், இசை மேதைகள், நடன மாமணிகள், திரைக் கலைஞர்கள் என விகடன் தன் பட்டுக் கரங்களால் தட்டிக் கொடுக்காத பிரபலங்களே இல்லை!

தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல... அகில உலகத்தையும் தன் அகன்ற பார்வைக்குள் வளைத்து, அணைத்துக்கொண்டிருக்கிறான் விகடன்.

பொன்னும் மணியும் மின்னும் வைரக் கற்களுமாகக் கொட்டிக் கிடக்கும் அந்தப் புதையலிலிருந்து இன்றைய வாசகர்களுக்கு எதைக் கொடுப்பது, எதை விடுப்பது என்கிற மயக்கமும் திகைப்பும் என்னுள் உண்டாயிற்று. காரணம், எந்த ஒரு கட்டுரையை எடுத்துப் படித்தாலும், அது இன்றைக்கும் பொருந்துவதாக, அல்லது இப்போது படித்தாலும் அதன் சுவையில் குன்றிமணி அளவும் குன்றாததாக, பழைய நினைவுகளில் நம்மைத் திளைக்க வைத்துத் தாலாட்டுவதாகவே இருக்கிறது.

ஆனந்த விகடன் எனும் காலக் கண்ணாடி வழியே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் விதமாக, 1926 முதல் 2000-வது ஆண்டு வரையிலான விகடன் பதிவுகளை ஓர் ஆவணப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் எனும் நோக்கில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதுதான் ‘ஆனந்த விகடன் காலப் பெட்டகம்’. அதற்கு வாசகர்களாகிய உங்களிடமிருந்து ஏகோபித்த வரவேற்பு! அதன் தொடர்ச்சியாகத்தான் ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ என்கிற இந்தப் புத்தகத்தை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இதோ, உங்களின் கைகளில் தவழ்கிறது ரசனையும் பாரம்பரியமும் மிக்க, குடும்பப் பாங்கான, காலங்களை வென்ற ஆனந்த விகடனின் பொக்கிஷப் பக்கங்கள்.

வருடாந்திர வரிசைப்படி இல்லாமல், அரசியல், கலை, இலக்கியம், சினிமா, நகைச்சுவை என இந்த 85 ஆண்டு காலப் பதிவுகளில் இருந்து ஒரு கதம்பமாகவே தொடுத்துள்ளேன். இவற்றை நீங்கள் வாசிக்கிறபோதே த்ரில்லான ரோலர்கோஸ்டரில் மேலும் கீழும் பயணிக்கும் பரவசத்தை உணர முடியும்.

ஆனந்த விகடனின் முதல் இதழிலிருந்து நேற்று வெளியான இதழ் வரைக்கும் ஒரே மூச்சில் படித்தவன் என்கிற கர்வம் இப்போது எனக்கு! இந்த பொக்கிஷத்தைப் படித்து முடிக்கும்போது அதுவேதான் உங்களுக்கும்!

படித்தபின் தவறாமல் உங்கள் கூர்தீட்டிய விமரிசனங்களை அனுப்பி வைத்தால், பொக்கிஷத்தின் அடுத்த தொகுப்பை இன்னும் மெருகேற்ற அது பேருதவியாக அமையும்.

மிக்க அன்புடன்,

ரவிபிரகாஷ்

ஒரு கேள்வி: இந்தப் பதிவில் வைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள அழகியின் பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள். முதலில் வரும் சரியான விடைக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு!

.