ராஜேஷ்குமார் என்னும் ராக்கெட்!

ழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் எனக்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கம் உண்டு. சாவி சார் முதன்முதல் ‘மோனா’ மாத இதழைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் கொடுத்து, பன்னிரண்டு நாட்களுக்குள் அடுத்த இதழை ரெடி செய்து, சரியாக முதல் தேதியன்று (ஜனவரி 1, 1988) தன் மேஜையில் இருக்கும்படி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டபோது, நம்பிக்கையுடன் நான் அணுகிய எழுத்தாளர் ராஜேஷ்குமார். அன்றைக்கு நான் கேட்டபடியே ஒரே வாரத்தில் மோனாவுக்கான நாவலை (சின்ன தப்பு, பெரிய தப்பு) ரெடி செய்து, கூரியரில் அனுப்பி வைத்து உதவினார் ராஜேஷ்குமார்.

சொன்னால் சொன்ன வாக்குத் தவறாதவர்கள் என ஓவியர்களில் திரு.ஜெயராஜையும், எழுத்தாளர்களில் திரு.ராஜேஷ்குமாரையும் சொல்லலாம். இதற்காக மற்ற ஓவியர்களும், எழுத்தாளர்களும் தாமதப்படுத்துவார்கள் என்று நான் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை. மேலே குறிப்பிட்ட இந்த இருவரையும் 100 சதவிகிதம் முழுமையாக நம்பி, தைரியமாக பத்திரிகையில் நமது அடுத்த வேலைகளைப் பார்க்கலாம் என்கிறேன்.

சாவி வார இதழில் நான் பணியாற்றியபோது, ஓவியர் ஜெயராஜுக்கு போனிலேயே சிச்சுவேஷனைச் சொல்லி, மறுநாள் மதியத்துக்குள் படம் தேவை என்றால், காலையிலே போன் செய்து “படம் ரெடி!” என்பார் ஜெ. ஒரு நாளுக்கும் அதிகமாக அவருக்குப் படம் வரைய அவகாசம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. இன்றைக்கு ஓவியர் ஸ்யாமும் பத்திரிகையின் அவசரத்தைப் புரிந்துகொண்டு, அந்த அளவுக்கு படு வேகமாக வரைந்து கொடுத்து உதவுகிறார்.

ஸ்டார் எழுத்தாளர்களிடம் சிறுகதை வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அவகாசம் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம்! அதுவே தொடர்கதை என்றால், கதையை ரெடி செய்துகொண்டு, முதல் அத்தியாயத்தை எழுதி அனுப்பப் பதினைந்து நாட்களாவது தேவை.

அதிலும் இன்றைக்குச் சாதனை படைத்துவிட்டார் ராஜேஷ்குமார்.

ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் ஒரு ஸ்டார் எழுத்தாளரின் தொடர்கதை வெளியானால் நன்றாக இருக்கும் என ஆசிரியர் குழு கடைசி நேரத்தில் முடிவு செய்தது. அதாவது, தீபாவளிச் சிறப்பிதழுக்கான வேலைகள் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பக்கங்களை அச்சுக்கு அனுப்பத் தொடங்கிய பிறகு! சிறப்பிதழுக்கான வேலைகளை திங்கள் கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை முடித்துவிட உத்தேசம்! ஸ்டார் ரைட்டரின் தொடர்கதை வேண்டும் எனத் தீர்மானித்தது திங்கள் கிழமையன்று மாலையில்தான்.

உடனே, ராஜேஷ்குமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். லேப்டாப், ஐபாட், மொபைல் என இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப அவர்களை மையப்படுத்தி, அதில் கிரைமும் கலந்து ஒரு தொடர்கதை வேண்டும் என்று கேட்டேன். அந்தக் கதையில் வேறு என்னவெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதையும் விவரித்துச் சொன்னேன். சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டவர், எழுதுவதாக ஒப்புக் கொண்டார். அப்புறம்தான் நான் அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டேன்.

“சார்! இந்தக் கதையை தீபாவளிச் சிறப்பிதழ்ல ஆரம்பிக்க எண்ணியிருக்கோம். ஏற்கெனவே அதுக்கான வேலைகள் தொடங்கியாச்சு. அதனால, அதிக நாள் இல்லே. முதல் அத்தியாயம் எனக்குச் சீக்கிரமே வேணும்!” என்றேன். அவர் “தருகிறேனே!” என்றார். ‘சீக்கிரம் என்றால்... ஒரு ஐந்தாறு நாளாவது அவகாசம் தர மாட்டோமா?’ என்று எண்ணியிருப்பார்போல. “என்னிக்கு வேணும்?” என்றார். “உடனே! நாளைக்கே!” என்றதும் பதறிவிட்டார். “என்ன ரவி, என்ன சொல்றீங்க?” என்றார்.

“ஆமாம் சார்! விளையாட்டில்லை; நெஜம்மாத்தான் சொல்றேன். ஓவியருக்கு வேற அனுப்பிப் படம் வாங்கணும். இடையில மூணு நாள்தான் இருக்குது!” என்றேன். கொஞ்சம் திக்குமுக்காடிவிட்டார். எங்களுடைய நெருக்கடியைச் சொன்னேன். “சரி ரவி! நாளைக்கு ராத்திரிக்குள்ள முதல் அத்தியாயத்தை ரெடி பண்ணி, உங்களுக்குக் கூரியர்ல அனுப்பிடறேன். அது புதன்கிழமை காலையில உங்க கைக்குக் கிடைச்சுடும். பரவாயில்லையா?” என்றார். சம்மதித்தேன்.

ஆச்சரியம்! இன்று காலையில் கதை என் மேஜையில் இருந்தது.

மதியம் ஒரு மணிக்கு போன் செய்தார். “என்ன ரவி, கதை கிடைச்சுதா?” என்றார்.

“இதுவும் ஒரு கின்னஸ் சாதனைதான் சார்! அசத்திட்டீங்க!” என்றேன். உலகிலேயே அதிக நாவல்கள் எழுதியவர் என்கிற சாதனையை சீக்கிரமே ராஜேஷ்குமார் கின்னஸில் பதிய இருக்கிறார். அதற்காக, விகடனில் வெளியான அவரது நாவல்கள் பற்றிய ஒரு சான்றிதழை சில மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தார். அனுப்பி வைத்திருந்தேன். இப்போது இத்தனை குறுகிய அவகாசத்தில் ஒரு தொடர்கதையை ஆரம்பிப்பதையும் கின்னஸில் சேர்த்துக் கொள்வார்கள் என்றால், அது கட்டாயம் ராஜேஷ்குமாரின் இந்த நாவலாகத்தான் இருக்கும்.

விகடனில் இப்போது ஆரம்பிக்கப்போகும் நாவலின் முதல் அத்தியாயத்தை, ராஜேஷ்குமாரின் கைப்பிரதியிலேயே விறுவிறுவென வாசித்தேன். பயங்கர வேகம்.

இளைஞர்களுக்குப் பொதுவாக மற்ற எல்லா பைக்குகளையும்விட யமாஹாதான் பிடிக்கும் என்று சொல்வதுண்டு. காரணம், எடுத்த எடுப்பில் டாப் கியரில் எகிறிப் பறக்கிற பைக் அது. அந்த மாதிரி ஒரு வேகம் ராஜேஷ்குமாரின் எல்லா நாவல்களிலுமே இருக்கும். இப்போது அனுப்பியதிலோ புல்லட் வேகம்!

ராஜேஷ்குமார் முன்பு எழுதிய ‘இரவில் ஒரு வானவில்’ நாவல், ‘அகராதி’ என்ற பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. ன்பு, டமை, ராஜ்யம், தியாகம் இவற்றின் முதல் எழுத்துக்களைச் சேர்த்த வார்த்தையே அது. அநேகமாக தீபாவளிக்குப் பத்துப் பன்னிரண்டு நாள் கழித்து அது ரிலீஸாகும் என்று தெரிகிறது. தவிர, கலைஞர் டி.வி-யில், தனது க்ரைம் கதைகளை நாலு நாலு எபிஸோடுகளாக (இந்தியில் முன்பு வெளியான ‘தி க்ளூ’ போல) சீரியலாக்கும் முயற்சியில் வேறு மும்முரமாக இறங்கியுள்ளார். இத்தனை நெருக்கடிகளுக்கிடையில் அசுர வேகத்தில் செயல்பட்டு, முதல் அத்தியாயத்தை உரிய நேரத்தில் அனுப்பியது நிச்சயம் ஒரு சாதனைதான்!

இரண்டு தனித்தனி டிராக்குகளாகக் கதை செல்கிறது. இரண்டிலும் சிலிர்க்க வைக்கும் மர்ம முடிச்சு. இதை மேலும் சுவாரஸ்யப்படுத்த, ஒரு கதைக்கு ஓவியர் ஸ்யாமையும், இன்னொரு கதைக்கு ஓவியர் அரஸ்ஸையும் படம் போடச் சொல்லியிருக்கிறோம். தவிர, கதையைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு இந்தக் கதை தொடர்பாக வாரா வாரம் ஏதாவது பரிசுப் போட்டிகளும் வைக்கலாமா (முன்பு சுஜாதாவின் ‘யவனிகா’ நாவலில் போட்டிகள் வைத்த மாதிரி) என்று யோசித்து வருகிறோம்.

நான் தொடர்கதை பற்றி ராஜேஷ்குமாருடன் பேசிய அந்தக் கணத்திலிருந்து தூக்கம் தொலைந்தது அவருக்கு. இரவெல்லாம் கண் விழித்துக் கதைக்கு ஒரு அவுட்லைன் யோசித்து, விடியற்காலையில் நான்கு மணிக்குதான் உறங்கச் சென்றாராம். பின்னர், எழுந்ததிலிருந்து மளமளவென்று எழுதத் தொடங்கி, சரி பார்த்து, திருத்தி, காப்பி எடுத்து, நேற்று மாலை 6 மணிக்குக் கூரியரில் சேர்த்திருக்கிறார்.

ராஜேஷ்குமார் வேகம்; அவரின் எழுத்து நடை படு வேகம்!

*****
செயல் புயல் ஆசாமி போலச் சிந்தியுங்கள்; சிந்தனைப் புயல் ஆசாமி போலச் செயல்படுங்கள்!

சிரிப்பு... மன்னிக்க, சிறப்பு விருதுகள்!


மிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 2007, 2008-ம் ஆண்டுகளுக்கான விருதுகள் இவை. யார் மனசும் புண்படக்கூடாது என்கிற நல்ல எண்ணம் உள்ளவர் நம் முதல்வர். தனக்கு ரஜினியும் முக்கியம், கமலும் முக்கியம் என்கிற காரணத்தால் ‘சிவாஜி’ படத்துக்காக ரஜினிக்குச் சிறந்த நடிகர் விருதும், ‘தசாவதாரம்’ படத்துக்காக கமலுக்குச் சிறந்த நடிகர் விருதும் அளித்துக் கௌரவித்துவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குரிய விருதுகளை ஒரே நேரத்தில் வழங்கியதில் இது ஒரு சௌகரியம்! சிறந்த நடிகருக்கான விருதினை மட்டும் கொடுத்தால் போதுமா? சிறந்த படங்களாகவும் சிவாஜி, தசாவதாரம் இரண்டையும் தேர்ந்தெடுத்தால்தானே முழுத் திருப்தி கிடைக்கும்!

சரி, யார் மனசும் புண்படக்கூடாது என்கிற நல்ல எண்ணமுள்ள நம் முதல்வர், தம் மனசு மட்டும் புண்படும்படியாக விட்டுவிடுவாரா? உளியின் ஓசைக்கு மூன்று விருதுகள். சிறந்த உரையாடல் ஆசிரியர்: மு.கருணாநிதி, சிறந்த நகைச்சுவை நடிகை: கோவை சரளா (இப்படியொரு நடிகை இருப்பதே சமீப காலத்தில் எனக்கு மறந்து போய்விட்டது), சிறந்த நடன ஆசிரியர்: சிவசங்கர் என மூன்று விருதுகள். அப்படிப் போடு!

ஆனால், இதற்கெல்லாம் பழியைத் தூக்கி நம் முதல்வர் தலையில் போடுவது ரொம்பத் தப்பு! நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழுதான் விருதுக்குரியவர்களைப் பரிந்துரைத்தது. அதைத் தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டது. அவ்வளவுதான்! பின்னே, தனக்குத் தானே சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதைப் பரிந்துரைத்துக் கொள்வாரா கருணாநிதி? சொல்லப் போனால், நீதிபதி ராஜன் தலைமையில் அமைந்த அந்தக் குழு, சிறந்த திரைப்படமாக ‘உளியின் ஓசை’யையும் தேர்ந்தெடுத்திருந்திருக்கக்கூடும். கருணாநிதியே ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்’ என்று கூச்சப்பட்டு, அதைப் பட்டியலிலிருந்து விலக்கியிருக்கலாம்.

தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வாரா கருணாநிதி என்று நான் கேட்டதுமே சிலர், ‘ஏன்? அண்ணா விருதை அவர் தனக்குத் தானேதானே கொடுத்துக் கொண்டார்?’ என்று சண்டைக்கு வரலாம். முன்பு, பேராசிரியர் அன்பழகனுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கக் கருணாநிதி முன்வந்தபோதுகூட, தன் வயதையும் உடல் நிலையையும் காரணம் காட்டிப் பேராசிரியர் அந்தப் பதவியைத் தான் ஏற்க முடியவே முடியாதென்று சத்தியாக்கிரகம் செய்து மறுத்துவிட்டதால்தானே, வேறு வழியில்லாமல் அதை ஸ்டாலினுக்கு வழங்கினார் கருணாநிதி. அது போல ‘அண்ணா விருதை’ வாங்கும் தகுதி தனக்கில்லை என்று அன்பழகன் இப்போதும் மறுத்திருக்கலாம். அந்த விருதுக்கு அன்பழகனே தகுதியில்லை என்றால், பிறகு தன்னை விட்டால் வேறு யார் தகுதி என்று வேறு வழியில்லாமல் கருணாநிதி தானே அதைப் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கலாம். யார் கண்டது?

சமீப காலத்தில், சுண்டல் மாதிரி வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் ‘கலைமாமணி’ பட்டம் கொடுத்துக் கொடுத்து, அந்தப் பட்டத்துக்கே ஒரு கௌரவம் இல்லாமல் போய்விட்டது. டாக்டர் பட்டமும் அந்தக் கதிக்கு வந்துவிட்டது. இப்போதைய தமிழக அரசின் திரைப்பட விருதுகள்கூட அப்படித்தான் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு நாகேஷுக்கு நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கங்கை அமரன் பேசியதை இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.

“நகைச்சுவை மாமேதை நாகேஷுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்காமல், மத்திய அரசு மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டு விட்டது. நம்மவர்கள் டெல்லியில் உள்ள அந்த கமிட்டியில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பட்டத்தை வாங்கிக் கொள்கிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு போகிறது என்று எனக்கும் தெரியும். இப்போது நடிகர் விவேக்குக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு வந்ததுமே விவேக் என்ன செய்திருக்க வேண்டும்? ‘நகைச்சுவைக்கே அரசன் நாகேஷ். அவருக்குக் கொடுக்காத இந்த விருது எனக்கு வேண்டாம்’ என்று மறுத்திருக்க வேண்டாமா? பட்டம், பட்டம்னு ஏன்யா இப்படி அலையறீங்க? இதே போலத்தான் நம்ம வைரமுத்துவும். கவியரசு என்றால், அது கண்ணதாசன் ஒருவர்தான். அதில் ஓரிரு வார்த்தையைச் சேர்த்து, ‘கவிப் பேரரசு’ என்று போட்டு, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஒரு பட்டத்தை வாங்கிக் கொண்டார்.

இந்த விருதை செலக்ட் பண்ற கமிட்டியிலே இருக்கிற என் நண்பர் ஒருத்தர், ‘உங்க அண்ணன் இளையராஜாவோட பயோடேட்டாவை அனுப்புங்க. அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்துடலாம்’னு சொன்னாரு. ‘முதல்ல எங்க எம்.எஸ்.வி. ஐயாவுக்குக் கொடுங்க. அப்புறம் இளையராஜாவுக்குக் கொடுக்கலாம்’னு சொல்லிட்டேன்.

‘பாரதி’ படத்துல எங்க அண்ணன் பொண்ணு பவதாரிணி, ‘குயில் போல பொண்ணு ஒண்ணு...’ அப்படின்னு ஒரு பாட்டைக் கிணத்துக்குள்ளேருந்து பாடிச்சு. அதுக்காக தேசிய விருது கொடுத்துட்டாங்க. அதுக்காக எவ்வளவு செலவு செஞ்சாங்கன்றது எனக்குத் தெரியும். அதே படத்துல ‘நிற்பதுவே... நடப்பதுவே’னு ஒரு பாட்டு. அருமையான பாட்டு. அதைப் பாடிய பையனோட குரலும் பிரமாதம். அவனுக்குக் கொடுத்திருக்கணும் தேசிய விருது. இதையெல்லாம் நினைக்கும்போது வயிறு பத்தி எரியுது” என்று ஆவேசமாகப் பேசினார் கங்கை அமரன்.

மிக நேர்மையான பேச்சு. நியாயமான பேச்சு! அவர் சொன்னதில் ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு உடன்பாடில்லை. ‘நாகேஷுக்கே இல்லாத விருது தனக்கு வேண்டாம்’ என்று விவேக் மறுத்திருக்க வேண்டாமா என்று கேட்டார். இப்படி விருது கொடுக்கப்பட்ட ஒவ்வொருவருமே, யாரையோ ஒருவரைச் சுட்டிக்காட்டி ‘அவருக்கே இல்லாத விருது எனக்கு வேண்டாம்’ என்று மறுத்துக்கொண்டு இருந்தால், பிறகு யாருக்குத்தான் விருது கொடுப்பது? எந்தக் கையூட்டும் இல்லாமல், சிபாரிசும் இல்லாமல், நியாயமான தகுதியின் அடிப்படையில் வந்த விருதாக இருந்தால், மறுப்புச் சொல்ல வேண்டியதில்லை. தாராளமாக ஏற்கலாம். தப்பில்லை.

இங்கே ரஜினி, கமல் இருவரின் நிலையும் அதுதான்! அவர்களாக இந்தத் தமிழக அரசு திரைப்பட விருதுகளைத் தேடிப் போயிருக்க மாட்டார்கள். சொல்லப் போனால், இதற்காக அவர்கள் கொஞ்சம் கூச்சமே கூடப் பட்டிருக்கலாம். ஒரு உதாரணத்துக்கு, இப்போது அவர்களுக்குக் ‘கலைமாமணி’ பட்டம் தருவதாக வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு எப்படி இருக்கும்?

அது சரி, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ‘கலைமாமணி’ பட்டங்கள் இன்னின்னாருக்கு என்று அறிவித்தார்களே! என்ன ஆயிற்று? அவற்றை எப்போது வழங்கப் போகிறார்கள்? அந்த காமெடி டிராமா என்றைக்கு?

*****
உன் தகுதிக்கு மீறி உன்னை ஒருவர் புகழ்கிறாரா? உண்மையில், உன்னை அவர் இகழ்கிறார்!

என் ஆசிரியர்கள்!

ன் ஆசிரியர்களைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தோன்றியது. அப்புறம், ‘அடடா! இந்த யோசனை செப்டம்பர் 5-ம் தேதி வந்திருந்தால், பொருத்தமாக இருந்திருக்குமே என்று நினைத்தேன்.

இன்றைக்கு சரஸ்வதி பூஜை! ஆசிரியர்கள் பற்றிய பதிவை இன்றைக்கு இட்டாலும் பொருத்தமாக இருக்கும்தானே!

அருணாசல ஐயர்: மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களிலிருந்துதான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. எனக்குச் சின்ன வயதில் கையெழுத்து அழகாகவே இருக்காது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதா?) அழகாக இருக்காது என்பது மட்டுமல்ல; சிலேட்டில் மண்டை மண்டையாக எழுதுவேன். சிலேட்டின் ஒரு பக்கம் முழுக்க ‘அ’ என்ற ஒரே ஓர் எழுத்தை எழுதிவிட்டு, மறுபக்கம் ‘ஆ’ என்று எழுதிவிட்டு, ‘இ’யை எங்கே சார் எழுதுவது என்று அவரிடம் கேட்பேனாம். ஓங்கி உலகளந்த பெருமாளுக்கு மகாபலிச் சக்கரவர்த்தி மூன்றடி நிலம் தானம் கொடுக்க முன் வந்தபோது, மகாவிஷ்ணு பூமியை ஓரடியாலும், வானத்தை மறு அடியாலும் அளந்துவிட்டு, இன்னொரு அடியை எங்கே வைப்பது என்று கேட்க, மகாபலி ‘என் தலையில் வையுங்கள்’ என்றானாம். விஷ்ணு அவன் தலையில் கால் வைத்து அவனை ஒரே அமுக்காக அமுக்கி, பாதாளத்தில் தள்ளிவிட்டார் என்பது புராணம். அந்தக் கதையாக, நான் இரண்டு எழுத்துக்களை எழுதிவிட்டு, மூன்றாம் எழுத்துக்கு இடம் கேட்க, அருணாசல ஐயர் நொந்து போய், ‘என் தலையில் எழுது’ என்பாராம் கடுப்பாக. என் அப்பா சக ஆசிரியர் என்பதால், என் எழுத்துத் திறமையை(!)ப் பற்றிய புகார்கள் அவருக்குப் போகும். ஒரு நாள் அருணாசல ஐயர் என் அப்பாவிடம் கேலியாக, ‘சார், உங்க பையன் எதிர்காலத்துல பெரிய எழுத்தாளனா வருவான்னு நினைக்கிறேன். பாருங்க, பெரிசு பெரிசா ரெண்டே ரெண்டு எழுத்தை மட்டும் எழுதிட்டு இன்னொரு எழுத்தை எங்கே எழுதறதுன்னு கேக்கறான்!’ என்று சொல்லியிருக்கிறார். 1978-ல் எனது முதல் சிறுகதை ‘கல்கி’யில் வெளியானபோது இதைச் சொல்லி, ‘அருணாசல ஐயர் கேலியாகச் சொன்னாரோ என்னவோ, அவர் வாக்கு பலிச்சுட்டுது. நீ பெரிய எழுத்தாளனா வரப் போறே!’ என்று மகிழ்ந்தார் அப்பா.

ஜெயராமன் - பத்மாவதி: நான் நான்காம், ஐந்தாம் வகுப்புகள் படித்தது இவர்களிடம்தான். காணை கிராமத்துப் பள்ளியில் இந்தத் தம்பதி பணியாற்றினார்கள். ஜெயராமன் சார் அடிக்க வந்தால், கரும்பலகையைச் சுற்றி ஓடி, அவருக்கு ஆட்டம் காட்டுவேன். இப்போது போல், சுவரில் பதிக்கப்பட்ட கரும்பலகைகள் இல்லை அப்போது. உயரமான மர முக்காலி ஸ்டேண்ட் மீது, அச்சாணிகள் பொருத்தி, கரும்பலகையைத் தூக்கி நிறுத்த வேண்டும். அதை இரண்டு நாளைக்கொரு முறை நாலைந்து பிள்ளைகளாக இறக்கி, மணல், கரி, கோவைக்காய் போட்டுத் தேய்ப்பது ஒரு சுவாரசியமான வேலை. வகுப்பில் ஒரு மூலையாக அந்தக் கரும்பலகை நிறுத்தப்பட்டிருக்கும். வீட்டுப் பாடம் எழுதவில்லையென்றோ, கேள்விக்குப் பதில் தெரியவில்லையென்றோ ஜெயராமன் ஆசிரியர் பிரம்பை ஓங்கிக்கொண்டு என்னை அடிக்க வரும்போது தப்பித்து, அந்தக் கரும்பலகையின் பின்னால் ஓடிப் பதுங்கிக் கொள்வேன். அவரும் சிரமப்பட்டு, நுழைந்து வருவார். நான் சிக்காமல் வெளியேறித் தப்பித்து, சுற்றிச் சுற்றி ஓடி ஆட்டம் காட்டுவேன். கடைசியில், ஆசிரியர் ஜெயராமன் களைத்துப் போய், ஒரு பிரம்மாஸ்திரம் எடுத்து வீசுவார்... “ரவி! மரியாதையா வந்து உதை வாங்கிக்க. இல்லேன்னா, நேரே உங்கப்பா கிட்ட போய்ச் சொல்லுவேன்!” என் அப்பா பிரம்பை எடுத்து வீறினால், முழங்காலுக்குக் கீழே தண்டு தண்டாக வீங்கிப் போகும். சிராய்ப்பு போல ரத்தம் பெருகும். அதற்கு ஜெயராமன் வாத்தியாரின் அடியே தேவலாம் என்று பகுத்தாய்ந்து, அமைதியாக அவர் முன் பரிதாபமாகக் கையை நீட்டுவேன். அவருக்கும் என் மீது இரக்கம் தோன்றி, ஒப்புக்கு மென்மையாக ஒரு அடி கொடுத்து, புத்தி சொல்லி, உட்கார வைப்பார். அவரின் மனைவி பத்மாவதி சிறந்த பேச்சாளர். கே.பி.சுந்தராம்பாள் போல இருக்கும் அவரின் குரல். தங்கு தடையின்றிச் சரளமாகப் பேசுவார். உள்ளூர் கோயில் திருவிழாக்களிலும், விழுப்புரம் போன்று அருகில் உள்ள கோயில் விழாக்களிலும் கலந்துகொண்டு, புராணச் சொற்பொழிவுகள் செய்வார். எனக்குத் திருமணமான புதிதில் (1992) விழுப்புரத்தில் ஒருமுறை அவரைச் சந்தித்தேன். என் மனைவியிடம் என்னைப் பற்றிய அருமை, பெருமை(!)களை (ஜெயராமன் ஆசிரியருக்கு ஆட்டம் காட்டியது உள்பட) சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். திரு.ஜெயராமன் இப்போது இல்லை. பத்மாவதி டீச்சர் இருப்பாரா, இல்லையா என்று தெரியவில்லை. இருந்தால், சந்திக்க விரும்புகிறேன். அவருக்கு இப்போது 75 வயதுக்கு மேல் இருக்கும்.

காமாட்சி இருசாரெட்டியார்: இருசாரெட்டியாரின் மனைவி காமாட்சி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர் பெயரே காமாட்சி இருசாரெட்டியார்தான். ஆண் ஆசிரியர்தான். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது இவர்தான் காணை எலிமென்ட்டரி ஸ்கூலின் தலைமை ஆசிரியராக இருந்தார். என் வகுப்பாசிரியரும்கூட. அருமையாகக் கதைகள் சொல்லுவார். கதை எழுத வேண்டும் என்கிற என் ஆர்வத்துக்கு மறைமுகத் தூண்டுகோலாக இருந்தது இவர் சொன்ன கதைகளாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருமுறை, மிக சுவாரசியமாகக் கதை ஒன்றைச் சொல்லிக்கொண்டே வந்தவர், அதை ஒரு சரியான மர்ம முடிச்சில் நிறுத்திவிட்டார். மறுநாள் நாங்கள் சாத்தனூருக்குச் சுற்றுலா செல்வதாக இருந்தது. அப்போது பஸ்ஸில் மிச்ச கதையைச் சொல்வதாகச் சொன்னார் இருசா ரெட்டியார். அதுவரை நான் சுற்றுலாவில் கலந்துகொள்வதாகவே இல்லை. அப்பா எனக்காகப் பணம் கட்டவில்லை. இவர் இப்படிக் கதையைப் பாதியில் நிறுத்தி, அந்த மர்மத்தை சுற்றுலாவில்தான் சொல்லப் போவதாகச் சொன்னவுடன், அப்பாவை அரித்துப் பிடுங்கி சுற்றுலாவில் நானும் கலந்துகொண்டேன். சொன்னபடியே, பஸ்ஸில் கதையின் மிச்ச பகுதியைச் சொல்லி முடித்தார் இருசா ரெட்டியார். அந்தக் கதை என்ன என்பது இப்போது ஞாபகம் இல்லை.

ராஜாப்பிள்ளை: நான் எட்டாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை படித்தது விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில். இந்த நான்கு வருடங்களிலும் எனக்குப் பல ஆசிரியர்கள் மாறியிருக்கிறார்கள். என்றாலும், ஒரு சில ஆசிரியர்கள் தொடர்ந்து அத்தனைக் காலமும் எனக்குப் பாடம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் ராஜாப்பிள்ளை, அ.க.முனிசாமி, சங்கரநாராயணன், டேவிட்ராஜ்.

ராஜாப்பிள்ளை ஆசிரியர் மிக அழகாக இருப்பார். நடிகர் சிவகுமாருக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடைப்பட்ட உருவமாக இருப்பார். நல்ல உயரமாக, கம்பீரமாக, மிடுக்காக இருப்பார். அத்தனை வகுப்புகளுக்கும் கணிதப் பாடம் போதித்தவர் அவர். அவர் சொல்லித் தருவது மிகத் தெளிவாகப் புரியும். சரியாகக் கணக்குப் போடவில்லை என்றால், பிரம்பால் வெளுத்து வாங்கிவிடுவார். மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். எனக்கு மற்ற பாடங்கள் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான். ஆனால், கணக்கு நன்றாக வரும். எனவே, எனக்குத் தெரிந்து அவரிடம் பிரம்படி வாங்காத ஒரே மாணவன் நானாகத்தான் இருப்பேன்.“என்ன ஐயிரே! காலையில சாப்பிட்டியா? அப்புறம் ஏன் குரலே வெளிய வரமாட்டேங்குது? பப்புஞ்சாம், மோர்ஞ்சாம் சாப்பிட்டா நோஞ்சான்!” என்பார். அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே, கணக்கு எனக்கு நன்றாக வருமென்றாலும், ஆங்கிலம், கணக்கு இரண்டுக்கும் அவரிடம் டியூஷன் வைத்துக் கொண்டேன் நான்.

அவருக்கு இரண்டு மனைவிகள் என்பது அவரிடம் டியூஷனுக்குப் போன பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. இங்கே காந்தி ஸ்கூலில் படித்தபோதும் ஒருமுறை சாத்தனூர் சுற்றுலாவுக்குப் போனேன். அப்போது அவர் அட்டகாசமான பேண்ட், சட்டையில் அமர்க்களமாக வந்து, விசிலடித்துப் பாட்டுப் பாடி, உற்சாகமாக இருந்தார். வகுப்பில் பார்க்கும் கெடுபிடி வாத்தியாராக இல்லை.

நான் விகடனில் சேர்ந்த பின்னர் திடீரென்று ஒருநாள் அவரிடமிருந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்து வந்தது. அது எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. பதில் போட்டேன். அடுத்தடுத்த வருடங்களிலும் அவரிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்துகொண்டு இருந்தன. பின்னர் ஒருமுறை, மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியிலேயே போய் அவரைச் சந்தித்தேன். திடீரென்று அவர் எல்லா வகுப்பு மாணவர்களையும் ஒரு பெரிய ஹாலில் கூட்டி, என்னை அவர்களுக்கு உற்சாகமூட்டி, அறிவுரைகள் சொல்லும்படியாக உரையாற்றச் சொன்னார். நான் எதிர்பார்க்கவே இல்லை இதை. என்றாலும் சுதாரித்து, ஆசிரியர்களின் மேன்மை, மாணவர்களின் கடமை என எனக்குத் தெரிந்த அனுபவங்களைக் கொண்டு அவர்களிடையே ஒரு மணி நேரம் பேசினேன்.

அதன்பின்பு சில ஆண்டுகள் கழித்து, என் மனைவி, குழந்தைகளோடு விழுப்புரம் போய், அவரைச் சந்தித்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டு இருந்தார். தன் மகள்களுக்குத் திருமணம் ஆகி, பேரன் பேத்தி எடுத்துவிட்டதைச் சொன்னார். இப்போதும் விழுப்புரம், வழுதரெட்டியில் சொந்த வீடு வாங்கிக் குடியிருக்கிறார். அவரையும் போய்ப் பார்த்துப் பேசவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.

அ.க.முனிசாமி: எங்கள் தமிழய்யா! இவர் அட்டெண்டன்ஸ் எடுத்தால், ‘பிரசென்ட் சார், ஆஜர் சார்’ என்று சொல்லக் கூடாது. தோலை உரித்துவிடுவார். ‘உள்ளேன் ஐயா!’ என்றே சொல்ல வேண்டும். இவர் வீட்டின் வாசல் மற்றும் அறைகளின் வாசல்களில் தொங்கும் திரைச்சீலைகளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நடந்து வந்துகொண்டு இருப்பார்கள். தீவிர நாத்திகராக இருந்தவர் முனிசாமி. ஆனால், பின்னர் பழுத்த ஆத்திகராக மாறிவிட்டார். கோயில் விழாக்களில் நடைபெறும் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு பேசுவார். விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தில் இவர் பேசியதை ஆவலோடு போய்க் கேட்டேன். தலைமை திருக்குறள் முனிசாமி.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எல்லாவற்றிலும் என்னைக் கலந்துகொள்ளச் சொல்லி உற்சாகப்படுத்தி, மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே இந்தப் போட்டிகள் நடக்கும்போது அந்தந்த ஊருக்கும் என்னை அழைத்துப் போய், நான் பரிசுகளை வென்றபோது பாராட்டி மகிழ்ந்தவர் தமிழய்யாதான். இவரின் பிள்ளைகளுக்குப் புகழேந்தி, இளங்கோ என்று புலவர்களின் பெயரைத்தான் வைத்துள்ளார்.

ஆண்டு முடிவில் மாணவர்கள் எல்லோரும் ஆசிரியர்களிடம் ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டிக் கையெழுத்துக் கேட்டோம். மற்ற ஆசிரியர்கள் என்ன எழுதிக் கையெழுத்திட்டார்கள் என்று ஞாபகம் இல்லை. அ.க.முனிசாமி அவர்கள் எனக்கு எழுதித் தந்தது மட்டும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

‘சின்னஞ்சிறு வயதினிலே பேரறிவு பெற்றவர் ஏராளம்;
நீயும் அவர்களைப் போல் உயர்வடைவாய் தாராளம்!’

சங்கர நாராயணன்: எனக்குச் சரித்திரம், பூகோளம் கற்றுக் கொடுத்த ஆசிரியர். நான் விழுப்புரத்தில் என் மாமா வீட்டில் தங்கிப் படித்தபோது, இவர் குடும்பமும் அதே வீட்டில் ஒரு போர்ஷனில் குடியிருந்தது. அவருக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். அவர்களை அவர் பெயர் சொல்லி அழைக்க மாட்டார். அம்பி, பெரியம்பி, குந்தம்பி, அங்கச்சி என்றுதான் அழைப்பார். அவரின் மூத்த மகன் கணேசன் என்னோடு படித்தவன். பிரமாதமாகப் படிப்பான். ரொம்பக் கெட்டிக்காரன். இன்றைக்கு அவன்(ர்) வாஷிங்டன் யூனிவர்சிடியில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார் என்பதைச் சக பதிவர் பட்டர்ஃப்ளை சூர்யா மூலம் சமீபத்தில் அறிந்துகொண்டேன். சூர்யா, சங்கர நாராயணனின் மூன்றாவது மகனுடன் ஜெயின் காலேஜில் ஒன்றாகப் படித்தவராம். அங்கச்சி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் திருமணமாகி, இங்கே சென்னையில் அண்ணா நகரில்தான் இருக்கிறார்; சங்கரநாராயணன் சாரே இங்குதான் ட்ரஸ்ட்புரத்தில் இருக்கிறார் என்றார் சூர்யா.

சங்கரநாராயணன் சார் பார்ப்பதற்கு எழுத்தாளர் அசோகமித்திரன் போல இருப்பார். எனக்குச் சரித்திரம் என்றால் வேப்பங்காய். போர்களையும், அது நடந்த வருடங்களையும், பூமிப் பிரதேசங்களையும், அங்கு விளையும் தானியங்களையும் நினைவு வைத்துக்கொள்வது என்னால் இயலாத காரியம். இதனால் சாரிடம் நிறைய அடி வாங்குவேன். “நான் உங்க வீட்டில் குடியிருக்கிறேன் என்பதற்காக அடிக்காமல் விட்டுடுவேன்னு நினைச்சுடாதே! எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்!” என்று சொல்லி எனக்குக் கூடுதலாக இரண்டு அடி வைப்பார்.

பட்டர்ஃப்ளை சூர்யா மனது வைத்தால், என் ஆசிரியரை சூர்யாவோடு சென்று சந்திக்க விரும்புகிறேன்.

டேவிட் ராஜ்: மகாத்மா காந்தி பள்ளியின் தலைமை ஆசிரியர். மிக மென்மையான குரல் இவருக்கு. யாரையும் அடிக்க மாட்டார்; திட்டக்கூட மாட்டார். ஆனாலும், மொத்த மாணவர்களுக்கும் இவரைக் கண்டால் நடுக்கம். இவரது பிறந்த நாளை எப்படியோ தெரிந்துகொண்டு, அன்று இவரை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். வகுப்பறை வாசலில் உயரே ஒரு அட்டைப் பெட்டியைப் பொருத்தி, அதனுள் உதிரிப் பூக்களைப் போட்டு, அதன் மூடியை லேசாக மூடி, அதில் ஒரு ட்வெய்ன் நூலைக் கட்டி, பின் வரிசையில் இருந்த ஒரு மாணவனின் கையில் கொடுத்தோம். ஆசிரியர் டேவிட் ராஜ் வாசலில் வரும்போது, நாங்கள் கண் ஜாடை காட்ட, அந்த மாணவன் நூலைப் பிடித்து இழுத்தானென்றால், மூடி திறந்துகொண்டு, பூக்கள் ஆசிரியரின் தலையில் சொரியும் என்பது ஏற்பாடு.

ஆசிரியரும் வந்தார். கண் ஜாடை காட்டினோம். ஆனால், என்னவோ சிக்கல்... அட்டைப் பெட்டியின் மூடி திறக்கவேயில்லை. ஆசிரியர் உள்ளே நுழைந்து பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டார். நாங்கள் எங்கள் திட்டம் சொதப்பலாகிவிட்டதை எண்ணி, பாடத்திலும் கவனம் செல்லாமல் திருதிருவென்று பேஸ்தடித்தது போல் உட்கார்ந்திருந்தோம். டேவிட்ராஜ் இதைக் கவனித்துவிட்டார். “என்ன பிரச்னை? ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். விஷயத்தை அசடு வழிந்துகொண்டே சொன்னோம்.

டேவிட்ராஜ் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டார். “என் மீது இவ்வளவு அன்பா? உங்களுக்காக நான் அப்படியென்ன செய்திருக்கிறேன்?” என்று கண் கலங்கினார். “சரி, நான் வாசலில் நின்றுகொள்கிறேன். நீங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துங்கள்” என்று போய் நின்றுகொண்டார். பின் வரிசைப் பையன் நூலை இழுத்தான். பூக்கள் ஆசிரியரின் தலைமீது கொட்டின.

எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லையே என்ற குறை எங்களுக்கு. ஆனாலும், டேவிட் ராஜ் எங்களின் அன்பைப் புரிந்து கொண்டு, அனைவருக்கும் நன்றி சொன்னார். ஸ்கூல் பியூனை அனுப்பி கடையிலிருந்து ஐந்து பேனாக்கள் வாங்கி வரச் செய்து, இந்தத் திட்டத்துக்கு மூலகாரணமாக இருந்து செயல்பட்ட நான் உள்பட ஐந்து மாணவர்களுக்கு அவற்றை ஆளுக்கொன்றாகப் பரிசளித்தார்.

டேவிட்ராஜின் மனைவி பெயர் மல்லிகா. இவர் எழுபது, எண்பதுகளில் ஆனந்தவிகடனில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்பது நான் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்த பின்புதான் தெரிந்தது. என்னிடமேகூட அவரின் சிறுகதைகள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றை நான் தேர்ந்தெடுத்து, ஆசிரியரால் நிராகரிக்கப்பட்டது வேறு கதை!

தெய்வசிகாமணி: விழுப்புரம், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நான் புகுமுக வகுப்பு படித்தபோது எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்தவர் தெய்வ சிகாமணி. டைட்டாக டெரிகாட்டன் பேன்ட்டும், ஸ்லாக் ஷர்ட்டும் அணிந்து ட்ரிம்மாக வருவார். தலைமுடி சுருள்சுருளாக இருக்கும். ஸ்டைலாகப் பாடம் நடத்துவார். மற்றபடி, இவரைப் பற்றிக் குறிப்பாக எதுவும் சொல்ல, எனக்கு இவரோடு அதிகம் பழக்கம் இருந்ததில்லை. இவரைப் பற்றிச் சொல்ல முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. இவர் வேறு யாருமல்ல, இன்றைய கல்வி அமைச்சர் பொன்முடிதான்!

*****
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருமே உங்களுக்கு ஒரு குரு!

(டீ.டி.)எஸ்.வரலட்சுமி

காலையில் செய்தித்தாளில் பழம்பெரும் பாடகியும் நடிகையுமான எஸ்.வரலட்சுமி இறந்த செய்தி வந்திருந்தது.

எஸ்.வரலட்சுமி என்றதும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது அவரது ஸ்டீரியோஃபோனிக் குரல்தான். இன்றைக்கு டீ.டி.எஸ்., ஊஃபர் என எல்லாவிதமான ஒலி வசதிகளும் இருக்கின்றன. ஆனால், இவை எதுவுமே இல்லாமல் அந்த எஃபெக்டை அந்நாளிலேயே கொடுத்தது வரலட்சுமியின் குரல்.

‘வெள்ளிமலை மன்னவா...’ (கந்தன் கருணை) பாட்டைக் கேட்டுப் பாருங்கள்; நான் சொல்வது புரியும். அந்தப் பாடல் மட்டுமில்லை; அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே அந்த ரகம்தான். ‘ஏடு தந்தானடி தில்லையிலே...’ (ராஜ ராஜ சோழன்), ‘மங்கலம் காப்பாள் சிவசக்தி...’ (தாய்), ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினைத் தொட்டிலில் கட்டி வைத்தேன்...’ (நீதிக்குத் தலை வணங்கு) எல்லாமே நம்முள் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பாடல்கள்தான். கே.பி.சுந்தராம்பாள், பி.பானுமதி மாதிரி தனக்கென பிரத்யேக குரல் வளம் கொண்டவர் வரலட்சுமி.

எஸ்.வரலட்சுமியை நான் கடைசியாகப் பார்த்தது ‘குணா’ படத்தில்தான். அதுதான் அவரது கடைசி படம் என்று நினைக்கிறேன். ஆனால், முதன்முதலில் பார்த்தது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில். கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாவாக வருவார் எஸ்.வரலட்சுமி. ஒரு மாவீரனின் மனைவி என்பதற்குரிய கம்பீரத்தோடு இருப்பார்.

அதில் ஒரு ஸீன் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. (1979-ல் வேலை தேடி சென்னையில் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில்தான், அந்தப் படத்தை நான் கடைசியாகப் பார்த்தேன்.) அப்பா வீரபாண்டிய கட்டபொம்மன் (சிவாஜி) கொள்ளையர்களோடு போரிட்டு அடக்கிவிட்டுக் களைத்துப் போய் அரண்மனைக்கு வருவார். அவர் தூங்குவதற்காக அவரின் மகள் தன் அம்மாவிடம், ‘அம்மா! நீ பாடு; நான் ஆடறேன்; அதைப் பார்த்துக்கிட்டே அப்பா தூங்கட்டும்!’ என்று சொல்லும். உடனே வரலட்சுமி, ‘சிங்காரக் கண்ணே, உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி..!’ என்று பாடுவார். அந்தப் பாட்டும் டீடிஎஸ் ரகம்தான்.

கே.பி.எஸ். போல மிகக் கண்ணியமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலுமே வரலட்சுமியைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, வார இதழ் ஒன்றில், சின்ன வயதில் வரலட்சுமி நடித்த கவர்ச்சியான ஸ்டில் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். அது அப்படியொன்றும் ஆபாசமான ஸ்டில் கிடையாது. ஆனாலும், எஸ்.வரலட்சுமியை அந்தத் தோற்றத்தில் பார்த்தபோது, மனசுக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஆரம்பக் காலத்தில் ஒரு நடிகையாக அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்க வேண்டி இருந்திருக்கலாம். பின்னர் அவற்றை மறுத்துக் கண்ணியமான பாத்திரங்களையே தேர்வு செய்திருக்கலாம். என் மனதில் அவர் மீது எழுந்திருந்த ஒரு மரியாதையின் காரணமாகவே, அந்தப் பழைய ஸ்டில் சங்கடத்தை அளித்தது.

அதே போல்தான் ‘குணா’ படத்திலும்! அதில் தாசிகள் கூட்டத்தின் தலைவியாக வருவார் வரலட்சுமி. உடையிலும் தோற்றத்திலும் கடுகளவு ஆபாசமும் இல்லை என்றாலும், அப்படியொரு கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கத் தேவையில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. அவரை சாதாரண நடிகையாக நான் பார்க்கவில்லை என்பதால் இதைச் சொல்கிறேன்.

நான் ஏதோ அவரை ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் வெளியான சமயத்தில், சில காலம் கொஞ்சம் முன்னே பின்னேதான் நடிக்க வந்திருப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியோடு அறிமுகமானவர் என்பதை அறிந்து வியப்பில் ஆழ்ந்தேன்.

ஆனந்த விகடனில் 1938-ல் வெளியான தொடர்கதை ‘சேவாசதனம்’. இந்தி நாவலாசிரியர் பிரேம்சந்த் எழுதியதன் தமிழாக்கம் அது. அந்த நாவல்தான் அதே பெயரில் திரைப்படமானது. அதில் அறிமுகமானவர்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரோடு அதில் நடித்திருக்கிறார் எஸ்.வரலட்சுமி என்பது எனக்கு ஆச்சரியமான செய்தி. கீழே உள்ள படம் ‘சேவாசதனம்’ ஸ்டில். இதில் எம்.எஸ். யார், எஸ்.வரலட்சுமி யார் என்று தெரிகிறதா? இடப்புறம் இருப்பவர் எம்.எஸ். வலப்புறம் எஸ்.வரலட்சுமி.திருத்தமான முகமும், நல்ல குரல் வளமும், கணீர்க் குரலும், சுத்தமான உச்சரிப்பும் கொண்ட எஸ்.வரலட்சுமி நடித்த படங்கள் என்று விரல் விட்டால், நமக்குத் தெரிவது வீ.பா.க.பொம்மன், ரா.ரா.சோழன், கந்தன் கருணை, பூவா தலையா, பணமா பாசமா, மாட்டுக்கார வேலன், நீதிக்குத் தலைவணங்கு போன்று பத்துப் பன்னிரண்டு படங்கள்தான். ஆனால், வரலட்சுமி போன்ற ஒரு திறமையான நடிகைக்கு, அதுவும் 1938-லேயே அறிமுகமாகி தொடர்ந்து ‘குணா’ வரையிலும் நடித்து வந்திருக்கும் ஒரு நடிகைக்கு இது மிகவும் குறைவான எண்ணிக்கையல்லவா?

எண்ணிக்கை ஒரு புறம் இருக்கட்டும். அவர் நடித்து மனதில் பளிச்சென்று நிலைத்திருப்பதுதான் என்ன? வாயாடி மாமியார் கேரக்டர்கள்தானே! இன்றைக்கு தொலைக்காட்சி சீரியல்களில் வடிவுக்கரசியும், நளினியும், சாந்தி வில்லியம்ஸும் செய்கிற அதே கேரக்டர்களைத்தானே வரலட்சுமியும் செய்தார்! அந்த மாதிரி கேரக்டர்கள் செய்வதற்கு மட்டும்தான் அவர் லாயக்கானவராகிப் போனாரா?

‘எல்லா விதமான கேரக்டர்களையும் செய்துவிட்டார்; இனி அவர் செய்வதற்கு ஒன்றுமேயில்லை!’ என்று சொல்லிச் சொல்லியே சிவாஜி கணேசனைப் பின்னாளில் பலப் பல படங்களில் உருப்படாத கேரக்டர்களைக் கொடுத்து வீணடித்துவிட்டார்கள். நல்ல நடிகை-கம்-பாடகி எஸ்.வரலட்சுமியை அப்படிக்கூட அதிகம் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை தமிழ்த் திரையுலகம்.

நினைக்க நினைக்கப் பெருமூச்சுதான் எழுகிறது.

*****
சரித்திரத்தைப் பாடம் படிப்பது சுலபம்தான்; சரித்திரத்திலிருந்து பாடம் கற்பதுதான் கஷ்டம்!

பேயைக் கண்டதுண்டா? PART II


சென்ற பதிவின் தொடர்ச்சி...
தூரத்தே தெரிந்த கொள்ளிவாய்ப் பிசாசுகளைக் கொஞ்ச நேரம் உன்னித்துப் பார்த்தார் அப்பா. பின்பு, பயங்கரமான காரியம் ஒன்றைச் செய்தார்.

“அப்பா... அப்பா... வேண்டாம்ப்பா!” என்று நான் அலறினேன். அப்பா கேட்காமல், “சீ! நான் இருக்கேன்ல... அப்புறம் என்ன பயம்? வா, இப்பவே அங்கே போய் அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பார்த்துட்டு வருவோம்!” என்று என்னை இழுத்துக் கொண்டு கீழே இறங்கினார்.

படிகளில் இறங்கிக் கீழே வந்தோம். பாதுகாப்புக்கு அப்பா ஒரு பெரிய கழியைக் கையில் எடுத்துக் கொண்டார். அந்தத் தெருவில் முனை வீடு எங்களுடையது. அடுத்து ஒரு பெரிய குப்பை மேடு. அதிலிருந்துதான் வயல்களுக்கு வண்டிகளில் உரம் எடுத்துப் போவார்கள். அத்தனை பிரமாண்ட குப்பை மேடு. அதையடுத்து ஒரு மணல் பாதை போகும். அதன் வழியே சென்றால், நேரே ஏரி. தண்ணீர் இல்லாக் காலத்தில் ஏரி வழியே நடந்து, சுடுகாட்டைக் கடந்து, நங்காத்தூர் என்கிற குக்கிராமத்தை அடையலாம். சுடுகாடு மூணு பர்லாங் தூரத்தில் இருந்தது. (பர்லாங் கணக்கு தெரியாதவர்களுக்காக: எட்டு பர்லாங் கொண்டது ஒரு மைல். ஐந்து மைல் என்பது எட்டு கிலோ மீட்டர்.)

அன்றைக்கு அந்த ஊரில் மின் வசதி இருந்ததென்றாலும், ஏரியில் எந்த விளக்குக் கம்பம் இருக்கும்? இங்கேயிருந்து பார்க்கும்போது அந்தக் கருங்கும்மிருட்டே வயிற்றைப் பிசைந்தது. அப்பா என் கையை இறுகப் பற்றிக் கொண்டு தெருவுக்கு வந்தார். அங்கே வீட்டு வாசலில் வீட்டுக்கார அம்மாள். சற்று கனத்த சரீரம். நல்ல உயரமும்கூட. தலைமுடி அவிழ்ந்து, கத்தாழை நார் போல தோளில் வழிந்து கிடந்தது. இம்சை அரசனில் ராஜகுரு நாசரின் தலைமுடியைப் பார்த்திருக்கிறீர்கள்தானே, அப்படி இருந்தது. பொதுவாகப் பகலிலேயே அந்த அம்மாளைப் பார்க்க எனக்குப் பயமாக இருக்கும். அந்த ராத்திரியில், அந்தக் கோலத்தில் பார்க்க திகிலாக இருந்தது.

“என்ன வாத்தியாரே! சொன்னாக் கேக்க மாட்டீங்க போல! அங்கே பாருங்க, பிசாசுங்க என்னமா ஆட்டம் போடுதுன்னு! போன மாசம் செத்துப் போனானே பால்காரன் முத்து, எப்படிச் செத்துப் போனான்கிறீங்க? அகால நேரத்துல பஸ்ஸை விட்டு இறங்கி, அந்த சுடுகாட்டு வழியா நடந்து வர்றப்போ, பிசாசு அறைஞ்சதுல ரத்தக் கக்கியில்ல செத்துப் போனான்!” என்றார் அந்த அம்மாள்.

“அப்படியா! அந்தப் பிசாசுங்கள்ல ஒண்ணைக் கையோட கூட்டி வரத்தான் இப்ப நாங்க போறோம்!” என்றுவிட்டு, என்னை அழைத்துக் கொண்டு அந்த மண் பாதையில் இறங்கினார் அப்பா. க்ரிச்... க்ரிச்... கர்க்குர்ர்... கர்க்குர்ர்... க்கும்... க்கும்... என்கிற நானாவித வண்டுச் சப்தங்களே என் மன பீதியை அதிகரிக்கப் போதுமானவையாக இருந்தன. ‘பிள்ளையாரப்பா! நீதான் எங்களைக் காப்பாத்தணும்!’ என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டே அப்பாவுடன் நடந்தேன்.

கொஞ்ச தூரம் போனதும், ‘கீய்ய்க்க்க்... இச்சுக்... இச்சுக்... க்ரங்க்... கீய்ய்க்க்க்...’ என்று விதவிதமான இனம்புரியாத சப்தங்கள் தொலைவிலிருந்து மெல்லியதாகக் கேட்டன. நரிகளின் ஊளை வேறு. மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. பிசாசுகளின் சிரிப்பாக இருக்குமோ!

இரண்டு பர்லாங் தூரம் சென்றுவிட்டோம். நல்ல இருட்டு. ஒரு விசித்திரம் கவனித்திருக்கிறீர்களா? தூரத்திலிருந்து பார்க்கும்போது கடும் இருட்டாக இருக்கும் பகுதி, நாம் நெருங்க நெருங்க அத்தனை இருட்டாக இல்லாமல் பாதை தெரியும் அளவுக்கு வெளிச்சமுள்ளதாக மாறும். கிராமத்தில் இதைப் பலமுறை கண்டு அதிசயித்திருக்கிறேன். நடந்துகொண்டே இருந்தோம்.

தூரத்தே சுடுகாடு தெரிந்தது. அதில் ஏதாவது பிணம் எரிகிறதோ, அந்த வெளிச்சம்தான் கொள்ளி வாய்ப் பிசாசு போல நம் கண்ணுக்குத் தெரிகிறதோ என்று என் மனசு கொஞ்சம் லாஜிக்கலாக யோசனை செய்யத் தொடங்கியதும் பயம் கொஞ்சம் விலகின மாதிரி இருந்தது.

சுடுகாட்டை நெருங்கிவிட்டோம். அங்கே பிணம் எதுவும் இல்லை. ஆனால், சற்றுத் தள்ளி செடி கொடிகளும், புதர்களும், வரிசையாகத் தென்னை மரங்களுமாக இருந்த பகுதியிலிருந்து சிவப்பு வெளிச்சம் விட்டு விட்டு வந்துகொண்டு இருந்தது. அப்பா என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனார். புதர்களைக் கடந்து, தென்னந்தோப்பின் ஊடாகக் கொஞ்ச தூரம் போனதும், ஒரு பெரிய பரந்த வயல் வெளி. அங்கே இரண்டு மூன்று டிராக்டர்கள் சுறுசுறுப்பாக நிலத்தை உழுதுகொண்டு இருந்தன. அவை பிரேக் பிடிக்கும் சத்தம், திரும்பும் சத்தம்தான் இவையெல்லாம்தான் ‘இச்சுக்... இச்சுக்... க்ரங்க்... கீய்ய்க்க்க்’ போன்ற ஒலிகளுக்குக் காரணம்.

அவற்றின் ஹெட்லைட் மங்கலாக இருந்தது. பின்புற சிவப்பு லைட் பளீரென்று இருந்தது. நேரே வரும்போது மஞ்சள் வெளிச்சம் பாய்ச்சிய அந்த டிராக்டர்கள் திரும்பிச் செல்லும்போது சிவப்பு ஒளியை உமிழ்ந்தன. அதுதான் சிவப்பு வெளிச்சம் அணைந்து அணைந்து தெரிந்ததற்குக் காரணம்.

எங்களைப் பார்த்ததும், “என்னா சார் இந்நேரத்துல! தூக்கம் வர்லியா?” என்று விசாரித்தார் டிராக்டர் ஓட்டிக்கொண்டு இருந்த ஒருவர்.

“இவன் ராத்திரியில இந்த சிவப்பு வெளிச்சத்தைப் பார்த்துப் பேய்னு பயந்துட்டான். பேயாவது, பிசாசாவது! அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு இவனுக்குக் காட்டத்தான் இங்கே கூட்டிட்டு வந்தேன். ஆமா, ஏன் இந்த ராத்திரியில உழறீங்க?” என்று கேட்டார் அப்பா.

“என்ன சார் பண்றது? பகல் பூரா நெசவுத் தொழில் பார்க்கவே சரியாப் போகுது. தவிர, இப்ப வந்து உழுதோம்னா வெயிலும் இல்லாம இருக்கும். பெரும்பாலும் நாங்க ராத்திரியிலதான் உழுறது. மத்தபடி, பேய் என்ன சார் பேய்! மனுஷன்தான் பேய், பிசாசு எல்லாமே! அவன் கிட்டதான் பயப்பட வேண்டியிருக்குது” என்றார் டிராக்டரோட்டி சிரித்துக் கொண்டே.

நாங்கள் விடைபெற்று எங்கள் ஊருக்கு, வந்த வழியே அதே இருளில் திரும்பி நடந்தபோது, என் மனதில் இம்மியளவுகூட பேய் பயமே இல்லை.

ரி, த்ரில்லாக ஒரு நிஜ அனுபவத்தை வர்ணித்துவிட்டேன். இனி, ஜாலியாக சில பேய்க் கேள்விகள்...

‘பேயறைந்தாற்போல்...’ என்று வர்ணித்து எழுதுகிறார்களே சில கதாசிரியர்கள்; பேயறைந்தால் எப்படி இருக்கும் என்று அவர்களில் யாருக்காவது சொந்த அனுபவம் இருக்குமா?

‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏறித்தான் ஆக வேண்டும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறதே... அதென்ன பேய்க்கும் புளிய மரத்துக்கும் அப்படி ஒரு ராசி?

விக்கிரமாதித்தான் சுமந்து செல்லும் உடலில் இருக்கும் வேதாளமும் பேய், பிசாசு வகைகளில் ஒன்றா?

‘பெண்ணென்றால் பேயும் இரங்கும்’ என்கிறார்களே... இந்தக் காலத்துப் பெண்களைக் கண்டால்கூடவா?

பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்றெல்லாம்கூடப் பெயர்கள் இருக்கிறதே, அவை நிஜப் பெயர்களா? புனைபெயர்களா? புனைபெயர்கள் என்றால், பேய், பூதம் என்று பயமுறுத்தும் பெயர்களாகத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
‘பூத்து ஆரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதை குணம் ஆகாதே
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும் வண்ணம் தோள் நோக்கம்’

- என்கிறார் மாணிக்கவாசகர். பொய்கை என நம்பி கானல் நீரைத் தேடி ஓடாதே என்கிறார். பேய்த்தேர் என்றால் கானல் நீர். சரி, பேய்க்கும் கானல் நீருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

‘எனக்கு இன்னிக்கு ஒரே பேய்ப் பசி!’ என்று சமயங்களில் நாமே சொல்கிறோமே; பேய்ப் பசி என்பது எவ்வளவு கடுமையானது? ஒரு சராசரி மனிதனைப் போல ஒரு பேய் எத்தனை மடங்கு உணவு உட்கொள்ளும்? அது செரிப்பதற்கு இரைப்பை, குடல், சீரண உறுப்புகள் எல்லாம் பேய்க்கு இருக்கிறதா?

ஸாரி... ரொம்ப அறுத்துட்டேனோ? பேயே தேவலை என்கிற அளவுக்கு ஆக்கிட்டேனோ? பேய்ட்டு வரேன்! பை... பை..!

*****
தைரியம் என்பது வேறில்லை; நம் பயத்தை எதிராளிக்குத் தெரியாமல் மறைப்பது!

பேயைக் கண்டதுண்டா?

து ‘என் டயரி’ வலைப்பூவில் இடவேண்டிய பதிவே அல்ல. இருந்தாலும், இன்றைக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்ததாலும், வேறு யோசனை எதுவும் கிடைக்காததாலும் சும்மா ஜாலியாக இதை எழுதத் தொடங்கினேன்.

நீங்கள் பேயைப் பார்த்ததுண்டா? நான் பார்த்ததில்லை. ஆனால், பார்த்ததாகச் சாதித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் என்னைத் திகிலூட்டுவதற்காகச் சொன்ன பேய்க் கதைகள் உண்மையில் எனக்கு காமெடிக் கதைகளாகத்தான் தோன்றியிருக்கின்றன.

ஆனால், ஒரு திகில் சம்பவம் எனக்கே நேர்ந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது நாங்கள் சங்கீத மங்கலம் என்கிற கிராமத்தில் வசித்தோம். நாங்கள் அந்த ஊரில் பிரமாண்டமான ஒரு வீட்டுக்குக் குடிபோயிருந்த புதிது. சந்திரமுகி அரண்மனை போன்று அது ஒரு பாழடைந்த பங்களா! அதன் சிதிலமாகாத ஒரு பகுதியில் வீட்டு ஓனர் குடியிருந்தார்கள். இடிந்து விழாத இன்னொரு புறத்தில் இருந்த இரண்டு அறைகளில் நாங்கள் குடியிருந்தோம். சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்ட மிகப் பழைமையான கட்டடம் அது. இளவரசிகள் எட்டிப் பார்க்கும்படியான மாடங்கள் எல்லாம் இருந்தன. மாடிக்கு ஏறினால், மேலே நாற்புறமும் உள்ள ஜன்னல்கள் வழியாக கீழே நடு ஹாலைப் பார்க்க முடியும். சுவர்களில் எல்லாம் மிக உயரே வண்ணச் சுதைகளைக் கொண்டு பழைய பாணி ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன. கோபிகைகள் நிர்வாணமாகக் குளிப்பது, கிருஷ்ணன் அவர்கள் துணிகளையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஒரு மரத்தின்மீது ஏறி உட்கார்ந்து கொள்வது, துணிகளைக் கொடுத்துவிடும்படி கோபியர்கள் கெஞ்சுவது, ‘இரு கை கூப்பி வேண்டினால்தான் தருவேன்’ என்று கிருஷ்ணன் குறும்பு பண்ணுவது போன்ற ராசலீலா படங்கள்தான் எல்லாம்!

மின் வசதி கிடையாது. எனவே, காற்றுக்காக நானும் அப்பாவும் மாடியில் படுத்துக் கொள்வது வழக்கம். அன்றைக்கும் அப்படித்தான் படுத்துத் தூங்கினோம். நடு நிசி! திடீரென்று விழிப்பு வந்தது. யாரோ பிளிறினாற்போன்று கத்துகிற மாதிரி ஓர் அலறல்! போர்வைக்குள் இருந்தபடியே, அது நிஜமா, கனவா என்று அவதானிக்க முயன்றேன். புரியாத குழறலாக, யாரோ கழுத்தைப் பிடித்து நெரிப்பது போன்று கத்திக்கொண்டு இருந்தவர் என் அப்பாதான். நான் சற்றும் அசையாமல், போர்வைக் கிழிசல் வழியே பார்த்தேன். அப்பா எழுந்து நின்றபடி, தன் கழுத்தில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, கர்ண கடூரமாக அலறிக் கொண்டு இருந்தார். யாரோடோ போராடிக் கொண்டு இருக்கிற மாதிரி இருந்தது அவருடைய அசைவுகள். ஆனால், யாருமே இல்லை.

அப்பாவின் அலறல் அந்தத் தெரு முழுக்கக் கேட்டிருக்கும்போல. திபுதிபுவென்று எங்கள் வீட்டின் முன் இருபது முப்பது பேர் திரண்டு விட்டார்கள். படுப்பதற்காக மாடிக்கு வந்தபோது, மாடிக் கதவை வெளிப்புறம் நாங்கள் தாழிட்டுக் கொண்டதால், வந்த கூட்டம் மாடிப்படிகளில் நின்றபடி கதவைத் தட்டு தட்டென்று தட்டியது. எனக்கு எழுந்திருக்க பயம். அப்பாவோ அசரீரியுடன் போராடிக் கொண்டு இருக்கிறார்.

சற்று நேரத்தில், கூட்டம் கதவைத் தள்ளியதில் மர தாழ்ப்பாள் பெயர்ந்து விழுந்து, கதவு திறந்து கொண்டது. வந்தவர்களில் ஒரு பலசாலி, அப்பாவைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினார். அப்பா கீழே ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். கோயில் பூசாரி வந்து வேப்பிலை அடித்தார். விபூதியை அப்பா மீது இரைத்தார். கற்பூரம் ஏற்றிக் காட்டினார். தன் முன் கொழுந்துவிட்டு எரிந்த அந்தக் கற்பூரத்தை அப்படியே நெருப்போடு எடுத்து விழுங்கிவிட்டார் அப்பா. கோயில் பூசாரிக்கு வசவான வசவு! ‘நாயே! எங்கேடா வந்தே? போடா! போ! ஒரு அறை விட்டேன்னா ரத்தம் கக்கிச் செத்துப் போவே!’ என்றார். பூசாரி கொஞ்சமும் பயப்படாமல் அம்மன் பெயர்களை உச்சரித்துக் கொண்டே, வேப்பிலையால் அப்பாவை அடித்தார். ‘உன்ன மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேண்டி! ஓடிப் போயிருடி. உதை வாங்கிச் சாகாதே! போகலேன்னா உன்னைப் பிடிச்சு, புளிய மரத்துல ஆணி வெச்சு அடிச்சுடுவேன்!’ என்று அவரும் பதிலுக்கு என்னென்னவோ சொல்லி மிரட்டினார்.

ஒரு மணி நேரம் இந்தக் கூத்து நடந்தது. பின்பு அப்பா மயங்கினாற்போல் சரிந்து விழவும், அவரைத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, “இனி பயமில்லம்மா! தூங்கி எந்திரிச்சார்னா சரியாயிடும்! மொட்டை மாடில படுத்திருந்தார் இல்லியா! இன்னிக்கு அமாவாசை வேற. ராத்திரி 12 மணிக்கு மோகினிப் பேய்ங்க வானத்துல வரிசையாப் போகும். மொட்டை மாடியில படுத்தா குப்புறப் படுக்கணும். சார் மல்லாந்து படுத்திருப்பாரு. அதான், ஏதோ ஒரு மோகினிப் பேய் சட்டுனு சார் உடம்புல இறங்கிடுச்சு. விரட்டிட்டேன். இனி அதன் தொல்லை இருக்காது. நிம்மதியா படுங்க!” என்று சொல்லிவிட்டுப் போனார் பூசாரி.

அதுவரை பேய் நம்பிக்கை இல்லாதிருந்த எனக்கு முதன்முறையாக, நிஜமாகவே பேய் என்ற ஒன்று இருக்குமோ என்று பயம் வந்துவிட்டது. போதாக்குறைக்கு அந்த வீட்டு அம்மாள் ஒரு திடுக் செய்தியைச் சொல்லி என்னை மேலும் பயமுறுத்தி விட்டார். சில வருடங்களுக்கு முன்பு அங்கே மொட்டை மாடியில் அவரின் உறவுக்காரப் பெண் ஒருத்தி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாளாம். அவளின் ஆவியாகக்கூட இருக்கலாம் என்றார். அதன்பின் நான் மொட்டை மாடிக்குப் படுக்க வரமாட்டேன் என்று அப்பாவிடம் பிடிவாதம் பிடித்தேன்.

“சீ! பேயாவது, பிசாசாவது! எல்லாம் பிரமை. அன்னிக்கு எனக்கு ஏதோ நரம்புத் தளர்ச்சி. உடல் அசதி. தூக்கக் கலக்கம். ஏதோ கனவு கண்டு உளறியிருப்பேன். அதுக்காகப் பேய், அது இதுன்னு பயந்துடறதா? இன்னிக்கு என்கூட வந்து மொட்டை மாடியில படு. என்ன பேய் வருதுன்னு நானும் பார்க்கிறேன்” என்றார். கை கால்கள் நடுங்க மாடிக்குப் போனேன்.

நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் பெரிய ஏரி. மழைக்காலங்களில் மட்டும் அதில் நீர் இருக்கும். மற்ற நாட்களில் பாலைவனமாகக் காட்சியளிக்கும். ஏரிக்கரையின் அந்தப் பக்கத்தில் ஒரு சுடுகாடு. மாடியிலிருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியும். வீட்டுக்கார அம்மாள் பேய் நம்பிக்கை மிகுந்தவர். அவர் என் அப்பாவிடம், “மாடியில படுக்காதீங்கோ! பேய் உண்டு. கொள்ளி வாய்ப் பிசாசும் உண்டு. அங்கே சுடுகாடு இருக்கில்லையா, அங்கே கொள்ளி வாய்ப் பிசாசுகள் நடமாட்டம் தெரியும். அதுங்க வாயைத் திறந்தால் நெருப்பு வரும். நானே என் கண்ணால பல முறை பார்த்திருக்கேன். வம்பை விலை கொடுத்து வாங்காதீங்கோ. மாடியில படுக்க வேண்டாம்!” என்றார்.

அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “பேசாம இருங்க மாமி! பேய் அது இதுன்னு குழந்தையை அனாவசியமா பயமுறுத்தாதீங்க. டேய், நீ வாடா! பேயும் கிடையாது, ஒரு புண்ணாக்கும் கிடையாது!” என்று என்னை வம்படியாக அழைத்துக் கொண்டு மாடிக்குப் படுக்கப் போய்விட்டார்.

அன்றைக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே வரவில்லை. அப்பா தூங்கியதும் நைஸாக எழுந்து கீழே போய்விடலாமென்று நினைத்தேன். அப்பா தூங்க வெகு நேரமாகியது. நான் கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். சற்று தூரத்திலிருந்த ஒரு வீட்டிலிருந்து மணி 12 அடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்து, அப்பா தூங்குகிறாரா என்று பார்த்தேன். அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார். கீழே போகலாம் என்று மெல்லக் கிளம்புவதற்கு முன் யதேச்சையாக என் பார்வை அந்தச் சுடுகாட்டுப் பக்கம் சென்றது.

அங்கே... நெருப்பு பளிச்சென்று எரிவது தெரிந்தது. பின்பு சட்டென்று அணைந்தது. பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மீண்டும் நெருப்பின் சுவாலை. அடுத்த நிமிடம் இருள் கவ்வியது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. கால்கள் நகர முடியாமல் தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டன. குடல் தொண்டைக் குழிக்கு வந்தது.

அப்பா விழித்துக் கொண்டார். என் கையைப் பற்றி, “என்னடா, இன்னுமா தூங்கலே?” என்றார். “பா... பா... அப்... அப்...” என்றேன். ஆமாம், எனக்குப் பேச்சே வரவில்லை. “என்னடா சொல்றே?” என்றார் அப்பா. “பா... அப்... அப்...” என்றபடி கையை நீட்டிக் காண்பித்தேன்.

அங்கே, கொள்ளி வாய்ப் பிசாசுகள் வாயைத் திறந்து திறந்து மூடிக்கொண்டு இருந்தன. நெருப்பின் சுவாலை விட்டு விட்டுத் தெரிந்தது.

அடுத்து, அப்பா செய்த காரியம் மகா பயங்கரமானது!

அது, என் அடுத்த பதிவில்!

*****
நீங்கள் தூங்கவில்லை. ஆனால், விழிப்புடன் இருக்கிறீர்களா?

இன்று ஒரு தகவல்!

தென்கச்சியார் மறைந்துவிட்டார்.

‘இன்று ஒரு தகவல்’ என்னும் தலைப்பில் ரொம்ப காலம் வானொலியிலும், பின்னர் சன் டி.வி-யிலும் தகவல் சொல்லி வந்தவர். கிருபானந்த வாரியாருக்கு அடுத்து ஆன்மிகத்தில்... கொஞ்சம் பொறுங்கள் - மிமிக்ரி கலைஞர்களுக்கு வசதியான ஒரு கேரக்டராக இருந்தவர். சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பல ஆண்டுகள் எழுதி வந்தவர்.

இவரை தகவல் சொல்பவராகத்தான் நமக்குத் தெரியும். ஆனால், இவரின் சொந்த ஊரான தென்கச்சி மக்களிடையே இவர் ஒரு ஹீரோ! அந்த ஊரில் இவர் பிரெசிடெண்ட்டாக இருந்த சமயத்திலும், அதற்குப் பின்பும் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். இவரது குடும்பத்தார்தான் இன்றைக்கும் அங்கே பல நல்ல செயல்களுக்குத் தலைமை தாங்குபவர்களாக, முன் நிற்பவர்களாக, ஊர் மக்களிடையே செல்வாக்கோடு இருந்து வருகிறார்கள்.வானொலியில் இவர் ‘இன்று ஒரு தகவல்’ சொல்லி வந்த சமயத்தில், என் தந்தையார் அதை ஆவலோடு கேட்பார். ஒரு நாளும் மிஸ் பண்ணியதில்லை. அதே போல விகடன் சேர்மனும் (திரு.எஸ்.பாலசுப்ரமணியன்) இவரின் பெரிய ரசிகர். அவரும் ஒரு நாள் கூட தென்கச்சியாரின் ‘இன்று ஒரு தகவல்’ கேட்காமல் இருந்ததில்லை என்று சொல்லியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சேர்மன் தினமுமே காலையில் எட்டு எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துகொண்டு இருந்தார். (இப்போது வாரத்துக்கு ஒரு முறைதான்.) போர்ட்டிகோவில் அவர் கார் வந்து நின்றதுமே செக்யூரிட்டிகள் ஓடிப் போய் கார் கதவைத் திறந்துவிடுவார்கள். உதவியாளர் வந்து சேர்மனின் கைப்பையை வாங்கிக் கொள்வார். பின்பு மெதுவாக காரிலிருந்து இறங்குவார் சேர்மன்.

அன்றைக்கும் அப்படித்தான், சேர்மனின் கார் வந்து நின்றதும் செக்யூரிட்டிகள் ஓடிப் போய் கார் கதவைத் திறக்க முயன்றார்கள். சேர்மன் கை காட்டி அவர்களை நிறுத்தினார். கைப்பையை வாங்கிக்கொள்ள வந்த பி.ஏ-வும் மௌனமாக நின்றார். டிரைவரும் இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். கார் போர்டிகோவில் வந்து நின்று இரண்டு நிமிடங்கள் வரை அனைவருமே அமைதியாக இருந்தனர். பின்னர் மெதுவாகக் காரிலிருந்து இறங்கினார் சேர்மன்.

அன்றைய தினம் எடிட்டோரியல் மீட்டிங்கின்போது, அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டேன். சேர்மன் சிரித்துக்கொண்டே, “அதுவா... நான் தினமும் ‘இன்று ஒரு தகவல்’ கேட்டபடியே கார்ல வர்றது வழக்கம். என்னோட கார் இங்கே கேட்ல நுழையும்போது கரெக்டா அந்த நிகழ்ச்சி முடியும். இறங்கி வந்துடுவேன். ஆனா, இன்னிக்கு டிரைவர் கொஞ்சம் ஸ்பீடா வந்துட்டார் போலிருக்கு; நிகழ்ச்சி முடியலே. அதனால, காருக்குள்ளேயே உட்கார்ந்து அதை முழுக்கக் கேட்டுட்டு அப்புறம் இறங்கி வந்தேன்” என்றார். அந்த அளவுக்கு தென்கச்சியாரின் பரம ரசிகர் எங்கள் சேர்மன்.

என் அப்பாவுக்குப் பிடித்த, எங்கள் சேர்மனுக்குப் பிடித்த தென்கச்சியாரின் தகவல் நிகழ்ச்சி என்னை மட்டும் ஒரு நாளும் ஈர்த்ததில்லை. யதார்த்தமாகச் சொல்கிறேன் பேர்வழியென்று ஓர் அசதியான குரலில், அப்போதுதான் தூங்கி எழுந்தது போன்ற சோம்பலான குரலில் தென்கச்சியார் சொல்வது போலவே எனக்குப் படும். புத்துணர்வாக இருக்க விரும்பினாலும் விடாமல் நம்மையும் அசதிக்குள்ளாக்கிவிடும் போன்ற பாணி அவருடையது.

அந்த மீட்டிங்கில் தான் தென்கச்சியாரின் பரம ரசிகன் என்பதாக எங்கள் சேர்மன் சொல்லி முடித்ததுமே நான் சும்மாயிருக்காமல், என் வழக்கமான சுபாவப்படி, “என்ன சார், அதுல ரசிக்கிறதுக்கு அப்படி என்ன இருக்கு? கேட்க உற்சாகமாகவே இல்லையே! அவர் ஏதோ வேண்டாவெறுப்பா சொல்ற மாதிரியல்லவா சொல்றார்? எனக்கு அது கொஞ்சம்கூடப் பிடிக்கலை. இன்று ஒரு தகவல் வந்ததுமே நான் ஸ்டேஷனை மாத்திடுவேன்!” என்றேன்.

சேர்மன் ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டார். அந்த நிகழ்ச்சியை ரசிக்காதவரும் இருப்பார் என்பதையே அவர் நினைத்துக்கூடப் பார்த்திருந்திருக்க மாட்டார் போலும்! நான் நிஜமாகத்தான் சொல்கிறேனா, சும்மா வேடிக்கை பண்ணுகிறேனா என்று அவருக்கு ஒரு கணம் புரியவில்லை. “என்ன சொல்றீங்க... அதையா பிடிக்கலைன்னு சொல்றீங்க?” என்றார். திரும்பவும் நான், “தென்கச்சியார் குரலைக் கேட்டாலே எனக்கு அன்றைய பொழுது டல்லாயிடுது சார்!” என்றேன்.

சேர்மன் நம்பவே முடியாமல், மற்றவர்களைப் பார்த்து, “என்ன சார் இவர் இப்படிச் சொல்றாரு? எத்தனை அருமையான நிகழ்ச்சி! உங்க அபிப்ராயம் என்ன? இவர் கருத்தை எத்தனை பேர் ஏத்துக்கறீங்க?” என்று கேட்டார். யாருமே என் கருத்தோடு உடன்படவில்லை. “சார்! ரொம்பப் பிரமாதமான நிகழ்ச்சி சார் அது. பல புதிய விஷயங்களை அவர் இப்படி ரொம்ப யதார்த்தமா, நம்மோட பேசுற மாதிரி சொல்ற பாணியே புதுசு சார்! கேக்கவே அத்தனை சுவாரசியமா இருக்கு. இவருக்கு ஏன் பிடிக்கலைன்னு தெரியலை! டைட்டானிக் படத்தையே குப்பைன்னு சொன்னவர்தானே இவரு!” என்றார்கள்.

சரி, என் ரசனை அவ்வளவுதான்! அதற்கு நானென்ன செய்ய முடியும்? தென்கச்சியார் நிகழ்ச்சி எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் புகழ் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே!

*****
திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்பதன் பொருள், திறந்த வாயுடன் இருக்க வேண்டும் என்பதல்ல!

கஸல் ராணி!

சில மணி நேரத்துக்கு முன்பு, எனது மற்றொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிகனி’ல், எனக்குப் பிடித்த பாடகர்கள், பாடகிகள் பற்றிய பதிவைப் போட்டேன். இந்தப் பதிவை நான் எழுத நினைத்ததற்குக் காரணமே வேறு ஒரு பாடகி. தமிழ்ப் பாடகி அல்ல; இந்திப் பாடகி. ரொம்ப நாள் கழித்து, நேற்றைக்குதான் மீண்டும் அவரின் ‘கஸல்’ பாடல்களைக் கேட்டேன்.

பீனாஸ் மஸானி என்பது அவரின் பெயர்.

1989-ல்தான் நான் முதன்முதலாக டி.வி. வாங்கினேன். அப்போது சன் டி.வி-யெல்லாம் வரவில்லை. கேபிள் கனெக்‌ஷன் என்பதே கிடையாது. ஒவ்வொரு வீட்டு மாடியிலும் ஆன்ட்டெனா கம்பிகள் கோணலும் மாணலுமாக, வயல்வெளி நடுவே சட்டித் தலையும், வைக்கோல் உடம்பும், குச்சிக் கைகளுமாக நின்றுகொண்டு இருக்கும் சோளக்கொல்லை பொம்மை மாதிரி கண்ணுக்குத் தட்டுப்படும். டெல்லி தூர்தர்ஷன், சென்னைத் தொலைக்காட்சி நிலையம் மற்றும் பொதிகை மட்டும்தான். வெள்ளிக்கிழமை சாயந்திரம் சென்னைத் தொலைக்காட்சியில் ‘ஒளியும் ஒலியும்’, திங்கள்கிழமை இரவில் சென்னைத் தொலைக்காட்சி இரண்டாவது அலைவரிசையில் ‘படமும் பாடலும்’ என, வாரத்துக்கு இரண்டு நாட்கள் மட்டும்தான் தலா அரை மணி நேரத்துக்கு ஐந்தாறு தமிழ்ப் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகும். புதன்கிழமை இரவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழிப் பாடல்கள் ‘சித்ரஹார்’ என்ற பெயரில் கலவையாக ஒளிபரப்பாகும். இப்படிச் சிக்கனமாக இருந்தபோது, அவற்றைப் பார்த்து ரசிப்பது சுவாரசியமான ஒன்றாக இருந்தது. இப்போது எந்த சேனலைத் திருப்பினாலும் பாடல் காட்சிகள்தான். அலுத்துவிட்டது!

அந்தச் சமயத்தில் ஹிந்தி நிகழ்ச்சிகள், ஹிந்தி சீரியல்கள்தான் அதிகம். மொழி புரிகிறதோ இல்லையோ, பார்த்துவிடுவது வழக்கம். அப்படி ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான ஒரு ‘கஸல்’ ஆல்பத்தை, வேறு நிகழ்ச்சி எதுவும் இல்லாததால் நான் பார்க்க நேர்ந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி அத்தனை அற்புதமாக இருந்தது. அதில் தோன்றிப் பாடிய பாடகியின் குரல் வளம் தேன் போல என்னை ஈர்த்தது. இன்றைக்கு வரைக்கும் அதற்கு மிஞ்சிய அழகான குரலையும், அவரின் பாடல்களைவிட இனிமையான பாடல்களையும் நான் கேட்கவில்லை.

அவர்தான் பீனாஸ் மஸானி. அன்றைய தினத்திலிருந்து அவர் பாடிய கேஸட்டுகள் எங்கே கிடைத்தாலும் வாங்கிக் கேட்க ஆரம்பித்தேன். ஸ்பென்ஸர் பிளாஸாவிலுள்ள மியூஸிக் வேர்ல்டில் மாதம் ஒருமுறை, இருமுறை என விசிட் செய்து, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேக்குகளில் பீனாஸ் மஸானியின் கேஸட்டுகள் இருக்கிறதா என்று தேடுவேன். புதிதாக ஏதேனும் தட்டுப்பட்டால் உடனே வாங்கிவிடுவேன். இப்படி என்னிடம் 15 கேஸட்டுகள் வரை சேர்ந்திருந்தன. அவற்றை ஒவ்வொன்றையும் எத்தனை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்பதற்குக் கணக்கு வழக்கில்லை.

ஒரு கட்டத்தில், அத்தனைக் கேஸட்டுகளுமே தேய்ந்து, துருவேறி, பயன்படாமல் போய்விட்டன. இதனால் பீனாஸ் மஸானியின் பாடல்களைக் கேட்டு ரசிக்கவே முடியாமல் போனது என்னால். நெட் கனெக்‌ஷன் வந்ததும், அதில் அவரின் கஸல் பாடல்கள் இருக்குமாவெனத் தேடினேன். ஊஹும்!

ரொம்ப நாள் கழித்து இன்றைக்கு மியூஸிக் வேர்ல்ட் போய் மொத்தக் கடையையும் மூன்று நான்கு முறை சுற்றிச் சுற்றி வந்து, ஒரே ஒரு ஆல்பத்தை மட்டும் கண்டெடுத்தேன். அதில் பீனாஸ் மஸானியின் பாடல்கள் அடங்கிய சி.டி. ஒன்றும், பங்கஜ் உதாஸ், சல்மா ஆகா போன்று மற்றவர்கள் பாடிய கஸல்கள் நான்குமாக மொத்தம் ஐந்து சி.டி-க்கள் ஒரு பேக்கேஜாகக் கிடைத்தன. பீனாஸ் மஸானியை ஆவலோடு போட்டுப் பார்த்தேன். நான் முன்பு ரசித்த மிகச் சிறப்பான பாடல்கள் எதுவும் அதில் இல்லை. வேண்டுமென்றே மிகச் சுமாரான பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொடுத்தது போலிருந்தது.

‘மொஹப்பத் கி சாஹர்’ என்று தொடங்கும் பாடல் அத்தனை அருமையாக இருக்கும். ‘ஜப் மேரி ஆஜ் லஹாகி’, ‘யோன் உன்கி பஸோன் மெய்ன் காமோஷியோன்...’ என்கிற பாடல்களெல்லாம் (வரிகள் சரியா என்று தெரியவில்லை. எனக்கு இந்தி தெரியாது. காதில் விழுந்ததை ஞாபகத்தில் வைத்திருந்து எழுதுகிறேன்.) கேட்கக் கேட்கத் திகட்டாததாக இருக்கும். முன்பு நான் வாங்கி வைத்திருந்த கேஸட்டுகளில் ‘தி பெஸ்ட் ஆஃப் பீனாஸ் மஸானி’ என்று ஒரு கேஸட். அதன் கடைசி பாடல் - வரி ஞாபகமில்லை - அந்தப் பாடலில் பீனாஸ் தன் குரலை ஏற்றி இறக்கி, குழைத்து, பிழிந்து, படிப்படியாக உச்ச ஸ்தாயியிக்குச் சென்று, ஜால வித்தை காட்டுவார். இடையிடையே கரகோஷம் வேறு ஒலிக்கும். அது அந்தப் பாட்டுக்கு மேலும் கிக் ஏற்றுவதாக இருக்கும்.

பின்பொரு முறை, ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பீனாஸ் மஸானியின் பேட்டிக் கட்டுரை வந்திருந்தது. அதில் ஒரு பக்கம் முழுக்க பீனாஸின் வண்ணப் படம் வெளியிட்டிருந்தார்கள். அதைக் கட் செய்து என் அறைச் சுவரில் ஒட்டி வைத்திருந்தேன். அந்த அளவுக்கு பீனாஸ் மஸானியின் ரசிகனாக இருந்தேன். இப்போதும்தான். அந்தப் பழைய பாடல்களைக் கேட்கத்தான் கொடுத்து வைக்கவில்லை.

பீனாஸ் பாரம்பரியமான இந்துஸ்தானி பாடகர் குடும்பத்தில் வந்தவர். பார்சி குடும்பம். மதுராணி என்பவரிடம் கஸல் பயின்றார். சமீபத்தில் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இவரது குரலை முதன்முதலில் ராகேஷ்ரோஷன் ‘ஹமாரி பாஹு ஆல்கா’ என்ற படத்தில் பயன்படுத்தினார். ஆனால், பீனாஸுக்குத் திரைப்படத்தில் யாரோ ஒரு கதாநாயகிக்குப் பின்னணி பாடுவதைவிட, நேரடியாக மக்களோடு தொடர்பு கொள்ளும் கஸல் பாடல்களைப் பாடுவதில்தான் விருப்பம் என்பதால், படங்களில் பாடுவதைத் தவிர்த்துவிட்டார்.

ரொம்ப காலத்துக்கு முன்பு ஷரான் பிரபாகர், பார்வதி கான் ஆகியோரின் பாப் ஆல்பங்களைக் கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். பின்னர் ஸ்வேதா ஷெட்டியின் அதிரடி பாப்களைக் கேட்டு லயித்திருக்கிறேன். தொடர்ந்து அலீஷாவின் ‘மேட் இன் இண்டியா’ ஹிட் பாடல்! வேறு சில பாடல்கள். அனைடா, அனாமிகா எனப் பலப்பல கேட்டிருந்தாலும், எல்லாமே ரசிக்கும்படி இருந்தாலும், பீனாஸின் குரல் என்னை ஈர்த்த அளவுக்கு வேறு எதுவும் ஈர்க்கவில்லை.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போதே, நெட்டில் பீனாஸ் பாடல்களைத் தேடினேன். ஆச்சரியம்... சில பாடல்கள் கிடைத்தன. ஆனால், முன்னே நான் ரசித்த அந்த அட்டகாசமான பாடல்கள் எதுவும் சிக்கவில்லை.

பீனாஸிடம் எனக்குப் பிடித்த ஒரு விஷயம்... என்னைப் போலவே அவருக்கும் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கொஞ்சம் கூடப் பிடிக்காது!

*****
எதை நீ இழந்தாலும், உடனே அதன் மதிப்பு இரண்டு மடங்காக, நான்கு மடங்காக ஆகிவிடுகிறது!
.

பயப்பட எதுவுமில்லை!

ன் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய நண்பரும், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு.பாக்கியம் ராமசாமி அவர்களுடன் சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வியைக் கீழே தந்திருக்கிறேன். அதற்கான பதிலை ரொம்ப நேரம் யோசிக்காமல் சட்டென்று உங்களால் சொல்ல முடிகிறதா என்று பாருங்கள். என்னால் முடியவில்லை.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கிருபானந்த வாரியார், சிலுக்கு ஸ்மிதா, வி.வி.கிரி, ஆட்டோ சங்கர், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், புலவர் கீரன், கிரிதாரி பிரசாத், சாவி, சுஜாதா, எஸ்.ஏ.பி., தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், புனிதன், சு.சமுத்திரம், கே.பி.சுந்தராம்பாள், சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஹரிதாஸ்கிரி, ராஜாஜி, ஈ.வெ.ரா., எஸ்.எஸ்.வாசன், ஏவி.எம்., ஏ.எம்.ராஜா, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, டி.கே.பட்டம்மாள், பத்மினி, கண்ணதாசன், மதுரை சோமு, என்.வி.என்.சோமு, ஏவி.எம்.ராஜன், வி.கே.ராமசாமி, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சந்தன வீரப்பன், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜெமினி கணேசன், சஞ்சய் காந்தி, ஸ்ரீதர், அன்னை தெரசா, ஆதிமூலம், ஆலடி அருணா, ஜெய்சங்கர், ஜெய்கணேஷ், சதாம் உசேன், ஸ்ரீவித்யா, ஆர்.வெங்கட்ராமன், ஏ.பி.நாகராஜன், க.ராசாராம், வி.கோபால கிருஷ்ணன், ஆர்.எஸ்.மனோகர், பி.எஸ்.வீரப்பா, அசோகன், எம்.என்.நம்பியார், சொர்ணமுகி, ஏ.கருணாநிதி, முரசொலி மாறன், பி.பானுமதி, தேவிகா, படாபட் ஜெயலட்சுமி, ஜெயவர்த்தனே, பிரபாகரன், சதாசிவம், பகீரதன், காமராஜர், அண்ணா, ராம்சுரத் குமார், டயானா, மைக்கேல் ஜாக்சன்... பெயர்களா சொல்லிக்கிட்டே போறேனே... சட்டுனு உன் மனசுல என்ன தோணுது ரவி?

திரு.பாக்கியம் ராமசாமி என்னிடம் கேட்ட கேள்வி இதுதான். எழுத்தில் பார்க்கும்போது பதில் சுலபமாகத் தெரிகிறது. செவி வழியாகக் கேட்கும்போது எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நீங்கள் யூகித்து வையுங்கள். விடையை இறுதியில் சொல்கிறேன்.

*****

குமுதம் குழுமப் பத்திரிகையான பக்தி ஸ்பெஷலில் ஜோசியப் பகுதி எழுதும் பிரபல ஜோசியர் ஏ.ஆர்.ராஜகோபாலனின் மகன் திடீரென்று ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்; ராஜகோபாலன் அந்தச் சமயம் அமெரிக்காவில் இருந்திருக்கிறார். எண்பது வயது கடந்தவர். அங்கேயே அவருக்கு இந்த அதிர்ச்சியான தகவலைச் சொல்லிக் கலவரப்படுத்தவேண்டாம் என்று அவரை சென்னைக்கு அழைத்து வந்தபின்புதான் தகவலைச் சொன்னார்களாம். நேற்று இந்த விஷயத்தைச் சொன்ன ஓவிய நண்பர் ராஜா, அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.

அந்த மகனுக்கு ஏறத்தாழ 40 வயதுதான் இருக்குமாம். முதிய வயதில் பிள்ளையைப் பறிகொடுப்பது என்பது துயரங்களிலேயே துயரமான ஒன்று!

மரணம் எப்போது, எப்படி வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டுகிறது என்பது தெரிவதே இல்லை. அப்படித் தெரியாமல் இருப்பதால்தான் கொஞ்சமாவது தைரியமாக இருக்க முடிகிறதோ என்னவோ! எல்லோருக்கும் பிறக்கும்போதே, ‘உனக்கு 35 வயசு; உனக்கு 72; இந்தாப்பா உனக்கு 68-தான். வர்ற நவம்பர் 17-ம் தேதியோட உன் பூலோகக் கணக்கு முடியுது. மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டுப் புறப்படத் தயாரா இரு!’ என்பது மாதிரி ஆளாளுக்கு இயற்கை நிர்ணயம் செய்து அனுப்பியிருந்தால், அவனவனுக்கும் நடுக்கமாக இருக்குமல்லவா? மருந்து, மாத்திரை, ஸ்கேன் வகையறாக்களுக்கெல்லாம் எவனும் பணத்தைச் செலவழிக்க மாட்டான். இன்ஷூரன்ஸ் என்கிற ஒரு கான்செப்டே இருக்காது. நான் பெரியவன், நீ பெரியவன் என்கிற போட்டி, பொறாமை இருக்காது.

சொல்ல முடியாது; ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் குளிர் விட்டுப் போனாலும் போகும். தான் கிளம்பப் போகிற தேதியை மறைத்து, ஏகப்பட்ட கடன் வாங்கி நாமத்தைப் போட்டாலும் போடுவான். ஆனால், யாரும் யாரையும் நம்பிக் கடன் கொடுப்பார்களா என்பது சந்தேகம்!

மரணத் தேதி நமக்குத் தெரியாமல் இருப்பது இயற்கை நமக்களித்த வரம் என்றுதான் நான் நினைக்கிறேன். நாளை என்ற ஒன்று இருக்கிறது என்கிற நம்பிக்கையில்தான் இன்று நாம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறோம்; உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று, மாம்பலத்தில் இருந்த நீலா சித்தி வீட்டுக்கு (என் அம்மாவின் சித்தி) அம்மாவும் நானும் போயிருந்தோம். ‘சித்தி ரொம்பவும் உடம்பு முடியாமல் இருக்கிறார்; தள்ளாமை அதிகமாகிவிட்டது. ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும்’ என்று அம்மா ரொம்ப நாளாகவே சொல்லிக்கொண்டு இருந்தார். நீலா சித்திக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. மூன்று பெண்கள்; இரண்டு பையன்கள். பெரிய பெண் பெயர் லலிதா.

அவர்கள் இருந்தது பெரிய இடம்; ஆனால், மிகப் பழைய வீடு. அதை முற்றாக இடித்துவிட்டு, ஃப்ளாட்ஸ் கட்டவேண்டும் என்பது லலிதா சித்தியின் திட்டம். அதற்காக பில்டர்ஸிடம் பேசி, ஒப்பந்தம் செய்திருந்தார்.

நாங்கள் பெரிய சித்தியிடம் ஆசிபெறச் சென்ற அன்று (ஜனவரி 1) யதேச்சையாக மகன், மகள், மருமகள் என சித்தி குடும்பத்தார் அனைவருமே வந்திருந்தார்கள். லலிதா சித்தி எங்களுக்கு ஸ்வீட் கொடுத்து, ஹேப்பி நியூ இயர் சொல்லி சந்தோஷப்பட்டார். பில்டர்ஸும் வந்து, வீட்டை இடிப்பது தொடர்பாக லலிதா சித்தியிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் அங்கே ஒரு மணி நேரம் போல் இருந்துவிட்டு வந்துவிட்டோம்.

மதியம் 3 மணிக்கு போன் வந்தது - சித்தி காலமாகிவிட்டார் என்று. ‘ரொம்பவும் வயதானவர்; எதிர்பார்த்ததுதான்’ என்று நினைத்தபடி மீண்டும் நானும் அம்மாவும் அவர் வீட்டுக்குப் போனதும்தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. இறந்தது நீலா சித்தியின் மகள் லலிதா. இந்த மரணத்தை ஜீரணிக்கவே முடியவில்லை எங்களால். ஒரு நோய் நொடி இல்லை; ஒன்றும் இல்லை. ஹக்கென்று ஒரு விக்கல். தண்ணீர் கேட்டாராம். கொண்டு வருவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது என்றார்கள்.

இன்னொரு மரணம் சற்று வேடிக்கையானது. ஆச்சரியமானதும்கூட! வெங்கட்ராமன் என்பவர் என் அத்தை கணவரின் தம்பி. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் சொந்த ஊரான கல்பட்டு என்னும் கிராமத்துக்குச் சென்றிருந்தார், குலதெய்வத்தை வழிபட்டு வர. விழுப்புரம் வந்து, சென்னைக்கு பஸ் பிடிக்க வேண்டும்.

விழுப்புரம் வந்தவருக்கு மனதில் ஏதோ தோன்றியிருக்கிறது. நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார். அங்கே ரைட்டரிடம் ஒரு பேப்பர், பேனா வாங்கி மளமளவென்று தன் சென்னை முகவரியை எழுதி, அவர்களிடம் கொடுத்தார். “சார்! நான் இங்கே குலதெய்வத்தைக் கும்பிட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். ஆனா, எனக்கு என்னவோ இன்னும் கொஞ்ச நேரத்துல என் உயிர் போயிடும்னு தோணுது. கூட உதவிக்கும் யாரும் இல்லை. நான் இங்கே அநாதையா சாக விரும்பலை. நான் இறந்துட்டா என் உடம்பை பத்திரமா இந்த முகவரிக்கு அனுப்பி வெச்சுடுங்க” என்று சொல்லிவிட்டு, அங்கேயே நாற்காலியில் உட்கார்ந்தவாக்கில் இறந்துவிட்டார்.

போலீஸே அவர் உடம்பை ஒரு டாக்ஸியில் ஏற்றி, காவலர் ஒருவர் துணையோடு, பைசா செலவில்லாமல் சென்னை முகவரிக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் போனது. அவர் மட்டும் தன் முடிவை யூகித்து அப்படிச் செய்திருக்கவில்லை என்றால்..? யோசிக்கவே முடியவில்லை.

மரணம் மர்மமானது; புதிரானது; சுவாரசியமானது. அதில் பயப்பட எதுவும் இல்லை. இந்த உலகில் வாழ்வதுதான் பயமாக இருக்கிறது!

*****

ரம்பக் கேள்விக்கு விடை: சட்டென்று உங்கள் மனதில் உறைத்ததா, அத்தனை பேரும் இறந்துபோய்விட்டவர்கள் என்பது?

“சும்மா மனசுல தோணினதைக் கடகடன்னு சொன்னேன் ரவி! யோசிச்சு எழுதினா இந்தப் பட்டியல் இன்னும் நீண்டுக்கிட்டே போகும். இத்தனை பேரையும் நாம் நம் கண்ணெதிரேயே பறிகொடுத்திருக்கோம். வாழ்க்கை எத்தனை அநித்தியமானது பார்த்தியா ரவி!” என்றார் பாக்கியம் ராமசாமி.

உண்மைதான்!
***
‘யார் யார் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டால், அத்தனை பேரும் கை தூக்குவார்கள். ‘யார் யார் சாக விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டுப் பாருங்கள்; ஒரு கையும் உயராது!
.

பொய்யிலே பிறந்து...

‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே...’ என்று ஒரு பழைய சினிமா பாட்டு உண்டு. ‘பொய் சொல்லப் போறேன், பொய் சொல்லப் போறேன், நீ ரொம்ப அழகியடி!’ என்பது லேட்டஸ்ட் சினிமா பாட்டு. இடையில் கவிப்பேரரசு வைரமுத்து ‘கவிதைக்குப் பொய் அழகு’ என்று ஒரு பாடலில் சொன்னார்.

பொய் அழகா, அழகில்லையா என்பது இருக்கட்டும். வாழ்க்கைக்குப் பொய் அத்தியாவசியம் என்பது என் கருத்து. பொய் இருப்பதால்தான் வாழ்க்கை அதிக சண்டை சச்சரவுகள் இல்லாமல் சுமுகமாக ஓடுகிறது.

“இன்றைக்கு நீ வைத்த சாம்பார் ஏ கிளாஸ்!” என்று காலையில் மனைவியிடம் பொய் சொன்னால்தான், ராத்திரிக்குச் சோறு கிடைக்கும். “உங்க ஐடியா பிரமாதம் சார்! எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் வித்தியாசமா சிந்திக்கத் தோணுது!” என்று மேலதிகாரியிடம் பொய் சொன்னால்தான் பிரமோஷன், இன்க்ரிமெண்ட் எல்லாம் கிடைக்கும். ஆனால், இங்கே ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொய்யைப் பொய் மாதிரியே சொல்லிவிடக் கூடாது. உண்மை போல் சொல்ல வேண்டும். எதிராளிக்கு நாம் சொல்வது பொய் என்று தெரிந்திருந்தாலும், நாம் அதை மகா உண்மை போலவே சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல வேண்டும். குரலிலும் நக்கல், நையாண்டி, எடக்கு, மடக்கு இதெல்லாம் இல்லாமல் சொல்ல வேண்டும்.

உண்மையில், பொய் சொல்வது என்பது ஒரு பெரிய கலை! நீங்கள் பொய் சொல்கிறீர்களா இல்லையா என்பதைக் கொஞ்சம் அனுபவஸ்தர்கள் உங்கள் கண்களைப் பார்த்துக் கண்டுபிடித்து விடுவார்கள். டெலிபோனில் பேசினாலும், உங்கள் குரலை வைத்து நீங்கள் சொல்வது பொய்யா, மெய்யா என்று கண்டுபிடித்துவிடும் ஜீனியஸ்களும் இருக்கிறார்கள்.

சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில் ஜெயபால் என்று எனக்கொரு உதவியாளர் இருந்தார். ரொம்ப மும்முரமாக நான் பத்திரிகை வேலையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஓர் அறுவை கிராக்கியிடமிருந்து போன். அனுபவத்தில், ரிங் வரும்போதே எனக்குத் தெரியும், அந்தச் சமயத்தில் யார் போன் செய்வார்கள் என்று. எனவே ஜெயபாலிடம், போனை எடுத்து யார் என்று கேட்டு, அவர் என்னைக் கேட்டால், நான் ஆபீசுக்கே வரவில்லை என்று சொல்லிவிடும்படி சொன்னேன். ஜெயபாலும் போனை எடுத்தார். எதிர்முனையில் நான் யூகித்த அதே ஆசாமிதான். அவர் என்னைக் கேட்டார். “ரவி சார் இன்னிக்கு ஆபீசுக்கே வரலீங்களே!” என்றார் ஜெயபால். எதிர்முனையில் அவர் உடனே, “அட, ஏம்ப்பா பொய் சொல்றே! அங்கே உன் பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கார். கூப்பிடு அவரை!” என்றார் அதட்டலாக. ஜெயபாலுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! ரிசீவரின் வாயைக்கூடப் பொத்தாமல், தன் இடத்தில் இருந்தபடியே, “ரவி சார்! நீங்க பக்கத்துலதான் இருக்கீங்கன்னு சொல்றாரு சார் அவரு! நீங்க ஆபீசுக்கே வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்குறாரு சார்! நீங்க இங்கே இருக்குறதை எப்படியோ கண்டுபிடிச்சுட்டாரு சார்!” என்றார் கத்தலாக. அப்புறம் எதிர்முனை நண்பரிடம் நான் அசடு வழிந்து சமாளித்தது தனிக் கதை.

எனவே எல்லாரும் பொய் சொல்ல முடியாது. குரல், கண்கள், உடல் மொழி அனைத்தையும் தன் விருப்பத்துக்கேற்ப இயக்கும் திறமை உள்ள ஒருவர்தான் நல்ல பொய்யராகத் திகழ முடியும்.

எல் போர்டு பொய்யர்களுக்குப் பெரிதும் கைகொடுத்து உதவிடும் வகையில் இன்றைய நவீன வகை செல்போன்களில் வசதிகள் இருப்பதாக அறிகிறேன். (என்னிடம் இருப்பது வெறுமே பேசுவதற்கு மட்டுமேயானது. அதை நான் வீட்டுக்கு வெளியே எடுத்துச் சென்று பேசினால் தங்கள் இமேஜ் ஸ்பாயில் ஆவதாக என் பிள்ளைகள் சொல்கிறார்கள்.) செல்லில் பேசும்போது, தான் வசதியாக ஏ.சி. அறையில் உட்கார்ந்திருந்தாலும், ஏதோ கசகசவென்ற டிராஃபிக்கில் இருப்பதுபோல் எதிராளிக்குப் பின்னணி இசையோடு தன் குரலைக் கொடுக்கும்; ஒரு தியேட்டரில் அமர்ந்திருப்பது போன்ற எக்கோவுடன்; ஒரு
மீட்டிங் ஹாலில் உட்கார்ந்திருப்பது போன்ற பலப்பல பேச்சுக் குரல்களுடன்; கொட்டும் மழையில் இருப்பது போன்ற இரைச்சலுடன்; ஒரு கல்யாண மண்டபத்தில் இருப்பது போன்ற சந்தடிகளுடன் எல்லாம் எதிராளிக்கு நம்மைப் பொய்யாய்க் காட்டும். அவரும் பாவம், நாம் பேசுவது காதில் விழாமல் ‘அப்புறம் பேசுகிறேன்’ என்று சொல்லி வைத்துவிடுவார்.

இது பரவாயில்லை; என் நண்பர் ஒருவர் வைத்திருந்த மொபைல் இன்னும் சூப்பர். நம் குரலை எதிர் முனையில் உள்ளவர்களுக்குக் குழந்தைக் குரலாக மாற்றி அனுப்புகிறது. நாம் மிமிக்ரி செய்ய ரொம்ப மெனக்கிட வேண்டாம். நாம் நம் சொந்தக் குரலிலேயே, “அப்பா வெளியே போயிருக்கார் அங்கிள்” என்று சொன்னால் போதும்; எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அது ஏழெட்டு வயதுச் சிறுமியின் குரலாக ஒலிக்கும். இன்னும் ஜுரத்தில் கிடப்பவனின் களைத்த குரலாக, தொண்டை கட்டிப்போய் பேசவே முடியாமல் இருப்பவனின் கரகர குரலாகவெல்லாம் தேவையான ‘மோடு’க்கு மாற்றியமைத்துக் கொண்டு பேசலாம்.

வாழ்க்கையில் நாம் தினசரி எத்தனை எத்தனைப் பொய்களைச் சந்திக்கின்றோம்? சும்மா ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்தேன்.

1. உங்க வீட்டுக் காபி மாதிரி நான் வேற எங்கேயுமே சாப்பிட்டது கிடையாது சார்!

2. இப்பத்தான் உங்களைப் பத்தி நினைச்சேன்; இதோ, நீங்களே வந்துட்டீங்க. உங்களுக்கு ஆயுசு நூறு!

3. அடடா! கொஞ்சம் முன்னே வந்து கேட்டிருக்கக்கூடாதா சார்... கையில் இருந்தா செலவழிஞ்சுடப் போகுதேன்னு சொல்லி இப்பத்தான் கொண்டு போய் எல்.ஐ.சி. பிரீமியம் கட்டிட்டு வரேன்.

4. ஸாரி சார்! என் பசங்க சும்மா இல்லாம செல்லை சைலண்ட் மோடுல மாத்தி வெச்சிருக்காங்க போலிருக்கு. ரிங்கே வரலை. அதான் எடுக்கலை!

5. சேஞ்ச் இல்லை. ஐம்பது பைசா இருந்தா கொடுங்க, ஒரு ரூபாயா தரேன்!

6. ஆபீசுல டைட் வொர்க் சார்! லீவே கிடைக்கலை. அதான், உங்க கல்யாணத்துக்கு வர முடியலை.

7. படிச்சேன் சார். ரொம்பப் பிரமாதம். சமீபத்துல, இந்த ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள இப்படி ஒரு அற்புதமான கதையைப் படிச்சதா ஞாபகம் இல்லை.

8. பாவம், நல்ல மனுஷன். எப்போ மெட்ராஸ் வந்தாலும் என்னைப் பார்க்காம போக மாட்டார். கலகலன்னு சிரிச்ச மூஞ்சியா இருப்பார். போய்ட்டார்!

9. அவங்க எனக்கு மாமியார் இல்லே; அம்மா!

10. அவளை என் மருமகளா நினைக்கிறதில்லே, மகளாத்தான் நினைக்கிறேன்.

11. அசினின் சிவப்பழகை நீங்களும் பெற வேண்டுமா? இதோ...

12. சின்ன வயசுல கஷ்டப்பட்டதுக்கு, நம்ம குரூப்ல நீ ஒருத்தனாவது இன்னிக்கு கார், பங்களான்னு வசதியா இருக்கிறதைப் பார்த்து எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்குடா!

13. இந்தப் பட்டுப்புடவையில உங்களைப் பார்க்குறப்போ அப்படியே மகாலக்ஷ்மியே எதிர்ல நிக்கறது மாதிரி இருக்கு மாமி!

14. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மைதான்!

15. இந்த மாதிரி ஒரு டாப் லெவலுக்கு நீ வருவேன்னு எனக்கு அன்னிக்கே தெரியும். சின்ன வயசுலேயே அதுக்கான அடையாளங்கள் உன் கிட்டே தெரிஞ்சுது!

16. பணத்தை நான் பொருட்படுத்தறதே இல்லை சார்! பணமா சார் வாழ்க்கை?

17. ஒரு வேலையில நான் மூழ்கிட்டேன்னா எனக்கு டயம் போறதே தெரியாது!

18. தமிழே இன்னொரு தமிழை வாழ்த்துகிறது!

19. ஆமாம் சாமி போடறவனை, ஜால்ரா அடிக்கிறவனை, சொன்னதுக்கெல்லாம் தலையாட்டுறவனை, உங்களை மாதிரி இல்லையாக்கும் ஆகா ஓகோன்னு மூஞ்சிக்கு நேரே புகழ்றவனையெல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது.

20. தங்கள் சிறுகதையைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்!

*****
பொய்களில் மூன்று வகை உண்டு. 1. பொய், 2.பச்சைப் பொய், 3. புள்ளிவிவரம்.