எதைப் பார்த்தாலும் அலுப்பு; எப்போதும் ஒரு சோர்வு. அத்தனையையும் உதறிவிட்டு சுறுசுறுப்பாகத் துள்ளி எழ, உற்சாகமாகச் சுற்றிச் சுழல சில எளிய வழிமுறைகளை ஓர் உளவியல் புத்தகத்தில் படித்தேன். அதில் என்னைக் கவர்ந்த ஒரு சில வழிகளை மட்டும் சுருக்கமாக இங்கே தருகிறேன்.
1. ஆள் பாதி; ஆடை பாதி!
நல்ல உடை நம் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது. எனவே, விலை அதிகம் உள்ள உயர்தர ஆடையாக இல்லையெனினும், பளிச்சென்ற நிறத்தில் சுத்தமான ஆடையாக உடுத்துங்கள்.
2. இன்று புதிதாய்...
தினமும் ஏதேனும் ஒரு புதிய விஷயம் தெரிந்துகொள்வது என்பதை வழக்கத்தில் கொண்டு வாருங்கள். ஒரு வி.ஐ.பி. பற்றியோ, ஒரு ஊரைப் பற்றியோ... ஏதோ ஒரு புது விஷயம் தெரிந்துகொண்டே தீருவது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கோ உங்கள் தொழிலுக்கோ முக்கியமான விஷயமாக இல்லையென்றாலும் பரவாயில்லை; நாளடைவில் இந்தப் பழக்கம் உங்களை ஒரு முக்கியமான மனிதராக மாற்றிவிடும்.
3. அ'லட்சியம்'
உங்களை மட்டம் தட்டி, உங்கள் தன்னம்பிக்கையைச் சிதைக்கிற மாதிரி பேசுகிறவர், நடந்துகொள்கிறவர் யாராக இருந்தாலும், அவரை லட்சியம் செய்யாதீர்கள். அவர் பேச்சுக்குக் கொஞ்சம் கூட மதிப்புக் கொடுக்காதீர்கள்.
4. குறையொன்றுமில்லை...
உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காதது என்ன? சிகரெட் பழக்கமா? உடனே நிறுத்துங்கள். உடல் எடையா? உடற்பயிற்சி செய்து எடையைக் குறைக்க முயலுங்கள். மற்றபடி, உங்களால் மாற்றமுடியாத விஷயம் உண்டா? உதாரணமாக, உங்கள் நிறம். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். இயற்கையின் படைப்பில் எதுவுமே குறையில்லை என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
5. எது உங்க ஸ்பெஷல்?
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்குமே ஒரு சிறப்பம்சம் இருக்கும்போது, மனிதராகப் பிறந்த நமக்கு ஒரு தனித் திறமை இருக்காதா? அது என்ன என்று கண்டுபிடிப்பதுதான் உங்கள் சாமர்த்தியம். கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அதை அவ்வப்போது வெளிப்படுத்தவும் வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு பாடகராக இல்லாவிட்டாலும், உங்களுக்கு நல்ல குரல் இருக்கலாம்; எனவே ஏதேனும் ஒரு சினிமா பாடலை ஹம் செய்யுங்கள். சிலர் பிறரை இமிடேட் செய்வதில், மிமிக்ரி செய்வதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் ஜாலியாக பேச்சுக்கு நடுநடுவே அதைச் செய்யலாம்.
6. எல்லாம் ஒன்று!
நீங்கள் மட்டும்தான் ஏதோ தன்னம்பிக்கை குறைந்தவர், சுற்றி இருப்பவர்களெல்லாம் தன்னம்பிக்கை நிறைந்தவர் போல ஒரு மாயத் தோற்றம் உங்களுக்குத் தென்படும். அதை நம்பி ஏமாந்து, உங்களை நீங்களே மேலும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். எல்லோரும் சராசரி மனிதர்கள்தான்.
7. சிறப்பே சிறப்பு
அற்ப விஷயமாக இருந்தாலும், எடுத்த காரியத்தை எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்யுங்கள்.
குறைந்தபட்சம் ஒரு மாத காலத்துக்கு இவற்றைச் செய்து பாருங்கள். அப்புறம் நீங்கள் 'சோர்வா? அலுப்பா? அப்படிஎன்றால் என்ன?' என்று எனக்கே பின்னோட்டம் இடுவீர்கள்.
*****
வாழ்க்கை உங்கள் மீது ஆப்பிள்களை எறிந்தால், ஜூஸ் செய்து குடியுங்கள்; கற்களை எறிந்தால், வீடு கட்டிக் கொள்ளுகள்!
0 comments:
Post a Comment