ஆண்டாள் அழகரில் அடிதடி!

டந்த புதன்கிழமை (17.11.10) இரவு ஒரு மணிக்கு என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. ‘இந்த நேரத்தில் யார்?’ என்று சற்றே அலுப்புடன் எழுந்து, ரிசீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டதும், அடிவயிற்றில் கத்தி சொருகியதுபோல் இருந்தது.

“மாமா... மாமா... அடிக்கிறாங்க மாமா! ஐயோ..! காப்பாத்துங்க, காப்பாத்துங்க..!”

யார், என்ன என்று விசாரிப்பதற்குள்ளாக லைன் கட்டானது. மீண்டும் சிறிது நேரத்தில் போன். பதற்றத்துடன் எடுத்தேன்.

“நான்தான் முரளி பேசறேன். அங்கே ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற என் பையனை சீனியர் பசங்க காட்டுத்தனமா அடிக்கிறாங்களாம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. எதுனா பண்ணு ரவி!” என்றார் என் தங்கையின் கணவர், கலவரக் குரலில்.

மாமண்டூரில் உள்ள விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் காலேஜில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான் என் தங்கை மகன். முதலில் அலறியது அவன்தான் என்று புரிந்தது. உடனடியாக என்ன செய்வது என்று எனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.அசோகனுக்கு அந்த ராத்திரியில் போன் போட்டு எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். தொடர்ந்து பலருக்கும் போன் மேல் போன் போட்டு, நிருபர் செந்தில் உதவியோடு காஞ்சிபுரம் பீட் போலீஸைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் உடனே பார்க்கிறேன் என்றார்கள்.

ஆனால், சிறிது நேரத்தில் அவர்கள் போன் செய்து, “சார்! அங்கே போய் விசாரிச்சோம். அப்படியெல்லாம் ஒண்ணும் கலாட்டா நடக்கலைன்னு அந்த காலேஜ் வார்டன் சொல்றாரே சார்!” என்றார். “உள்ளே போய்ப் பார்த்தீர்களா? நான் ஜூனியர் விகடன் சீஃப் எடிட்டர் பேசறேன்” என்றேன். “அப்படியெல்லாம் போக முடியாது சார்! விவகாரம் வேற மாதிரி ஆயிடும். பையனோட அப்பாவை ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்லுங்க” என்றார்.

மீண்டும் என் தங்கை கணவருக்கு போன் செய்து, பீட் போலீஸ் எண்ணைக் கொடுத்துப் பேசும்படி சொன்னேன்.

இதற்கிடையில் என் தங்கை பையனை செல்லில் தொடர்பு கொண்டேன். “இப்ப ஓரளவுக்கு அமைதியா இருக்கு மாமா! எல்லாரும் போயிட்டாங்க. பசங்களை ரூம்ல வெச்சுப் பூட்டிட்டுப் போயிட்டாங்க. இப்ப எங்க ரூம்ல நான் மட்டும்தான் தனியா இருக்கேன்” என்றான். “நான் வரட்டுமா?” என்று கேட்டேன். “வேண்டாம் மாமா! ஹாஸ்டல் இப்ப அமைதியாயிடுச்சு! காலையில முதல் பஸ்ஸுக்கு அப்பா வரேன்னிருக்காரு!” என்றான்.

அதன்பின் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. நாலு மணி வரையில் விழித்திருந்துவிட்டு, எப்போது தூங்கினேன் என்று ஞாபகம் இல்லை.

காலையில் ஆறரை மணிக்கு எழுந்ததும், மீண்டும் தங்கை மகனை செல்லில் தொடர்பு கொண்டேன். “அப்புறம் என்னப்பா ஆச்சு? தூங்கினியா?” என்றேன்.
“இல்லை மாமா! அந்த முரட்டுப் பசங்க விடியற்காலைல மூணரை மணிக்கு மறுபடியும் வந்து, வெளிக் கதவு பூட்டை உடைச்சுட்டு உள்ளே நுழைஞ்சு, தூங்கிட்டிருந்த என்னை எட்டி உதைச்சு எழுப்பினாங்க. பத்துப் பதினைஞ்சு பேரு சேர்ந்து என்னை அடிச்சு, உதைச்சாங்க. நாலரை மணி வரைக்கும் உதைச்சுட்டுப் போயிருக்காங்க. உடம்பெல்லாம் வலிக்குது மாமா!” என்று அழுதான்.

எனக்குக் கவலையாக இருந்தது. அவனது அப்பாவுக்கு செல்லில் தொடர்பு கொண்டேன். “பஸ்ஸில் வந்துகொண்டு இருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் காலேஜ் வாசலில் இறங்கிவிடுவேன். போய்ப் பார்த்துவிட்டு போன் செய்கிறேன்” என்றார்.

என்னதான் நடக்கிறது காலேஜில்?

ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சீனியர் (மூன்றாமாண்டு) மாணவர்கள் சிலருக்கு (சுமார் 30 பேர்) கிட்டத்தட்ட அடிமை போல எல்லாம் செய்து கொடுக்க வேண்டியது இரண்டாம் ஆண்டு, முதலாண்டு மாணவர்கள் கடமையாம். அவர்கள் சிகரெட் கேட்டால், தங்கள் காசில் ஓடிப் போய் வாங்கி வந்து கொடுக்க வேண்டுமாம்; செல்போன் ரீசார்ஜ் செய்து தரச் சொன்னால், தங்கள் செலவில் செய்து தரவேண்டுமாம்.

சில நாட்களுக்கு முன், தங்களுக்கு ட்ரிங்க் பார்ட்டி வைக்கவேண்டுமென்று சொல்லி, ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை தலா ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டார்களாம். ஒரு சிலர் கொடுத்தும் இருக்கிறார்கள். என் தங்கை மகன் உள்பட மற்றவர்கள் அதற்கு மறுத்து, கல்லூரி முதல்வரிடம் புகார் செய்திருக்கிறார்கள். அவர் “ஆகட்டும். நடவடிக்கை எடுக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த ரவுடிப் பிள்ளைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் கொடுத்த கோபத்தில்தான் இப்படி ஹாஸ்டல் அறைகளுக்குள் புகுந்து காட்டடி அடித்திருக்கிறார்கள் அந்த நாய்கள். இருபது முப்பது பேராகத் திரண்டு வந்து ஒவ்வொரு ரூமிலும் புகுந்து, அங்கு தங்கியிருக்கும் ஐந்தாரு பேரை அடித்து உதைக்க வேண்டியது. இப்படியே ஒவ்வொரு அறையாகச் சென்று விடிய விடிய அராஜகம் செய்திருக்கிறார்கள் அந்த ராஸ்கல்கள்.

இந்தப் பிரச்னை உச்ச கட்டத்துக்குச் சென்றதுதான் இப்போதே தவிர, இது ரவுடி ராஜ்ஜியம் பல மாதங்களாகவே நடந்து வருகிறதாம். அப்போதெல்லாம் யாராவது ஓரிரு பையன்கள் மட்டும் அந்த ரவுடிக் கும்பலிடம் மாட்டி உதைபடுவானாம். ஒரு பையனை பேண்ட்டைக் கழற்றிவிட்டு காலேஜ் வளாகத்தில் துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார்களாம். புகார் சொன்னால், பிரின்ஸிபாலும் அவர்கள் மீது எந்த ஆக்‌ஷனும் எடுக்கப்போவதென்னவோ இல்லை; தவிர, நமக்குப் படிப்புக் கெடுவதோடு, புகார் தந்த ஆத்திரத்தில் மறுபடியும் வந்து உதைப்பார்கள்; எனவே, இத்தோடு அவர்கள் வெறி அடங்கட்டும்; இனி, நம் வழியைப் பார்ப்போம் என்று பல பிள்ளைகள் பெற்றோரிடம்கூடச் சொல்லாமல் இந்த விஷயத்தை மறைத்திருக்கிறார்கள்.

போன மாதம் ஒரு பையன் இதே மாதிரி சீனியர் பிள்ளைகளின் சித்ரவதைக்குள்ளாகி, தன் தந்தையிடம் அதை மறைக்காமல் சொல்லிவிட்டான். அவர் கோபத்துடன் வந்து கல்லூரி முதல்வரிடம் புகார் செய்திருக்கிறார். அவர் அப்போதும் கூலாக, “பிள்ளைகளுக்குள்ள அடிதடி சண்டை வர்றது சகஜம்தாங்க. இதைப் பெரிசுபடுத்தாதீங்க. விடுங்க, இனிமே இதுபோல நடக்காம நான் பார்த்துக்கறேன்” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.

“இப்படித்தான் மாமா அவர் ஒவ்வொரு தடவையும் சொல்றார். ஆனா, அந்தப் பசங்களை எதுவும் பண்ண மாட்டார். சும்மா வார்ன் பண்ணி அனுப்பிடுவார். அவங்க மறுபடியும் வந்து ‘புகாராடா கொடுக்கறீங்க’ன்னு உதைச்சுட்டுப் போவாங்க” என்றான் என் தங்கை மகன்.

இந்த முறை, என் தங்கையின் கணவர் உள்பட அடிபட்ட பிள்ளைகளின் தகப்பனார்கள் யாவரும் வெளியூரிலிருந்து திரண்டு வந்து, கல்லூரி முதல்வரைச் சந்தித்து, மேற்படி ரவுடிப் பிள்ளைகளை, குறிப்பாக ஒரு எட்டுப் பேரை கல்லூரியை விட்டே நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவரும் ‘ஆகட்டும், செய்கிறேன்’ என்று சமாதானப்படுத்தினாராம். பின்னர், அப்பாக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை ஹாஸ்டலில் விடாமல் அவரவர் ஊருக்கு அழைத்துப் போய்விட்டார்கள்.

இன்றைக்கு செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக ஊரிலிருந்து வந்திருந்தான் என் தங்கை மகன். “மாமா! நான் சொன்னேன் பார்த்தீங்களா, பிரின்ஸிபால் அந்தப் பசங்களை எதுவும் பண்ண மாட்டார்னு. அதே போல ஆயிடுச்சு! அந்த எட்டுப் பேரையும் வெறுமே ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் பண்ணியிருக்காரு. அவ்வளவுதான். அவங்களுக்கு அது தண்டனையே இல்லே. லீவு விட்ட மாதிரி ஜாலியா வெளியே போய் சுத்திட்டு வந்து மறுபடியும் எங்களைப் புடிச்சு அடிக்கப் போறாங்க. அதான், நடக்கப் போகுது” என்றான்.

அன்றைக்கு ராத்திரி அந்த அடி, உதை அமர்க்களம் நடந்தது எதுவும் தனக்குத் தெரியாது; தனக்குக் காதில் விழவில்லை என்று சாதிக்கிறார் காலேஜ் வார்டன். பீட் போலீஸ் வந்து விசாரித்துவிட்டுப் போன பிறகுதான் கல்லூரித் தரப்பிலிருந்து சிலர் வந்து சமாதானப்படுத்தி அந்த ரவுடிப் பிள்ளைகளை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். அடிபட்ட மாணவர்களை அறைகளுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, ‘இனி ஒன்றும் பயமில்லை’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தப் பொறுக்கிப் பயலுகள் மீண்டும் விடியற்காலை மூணரை மணிக்குத் திரும்ப வந்து, பூட்டை உடைக்கிற சத்தம், அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் வரை கேட்டு, அங்கிருந்த பெண்கள் விழித்துக்கொண்டு தனக்குத் தெரிந்தவர்களுக்கு இது பற்றித் தகவல் சொல்லி விசாரித்திருக்கிறார்கள். ஆனால், தான் அசந்து தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், தன் காதில் எந்தச் சத்தமும் விழவில்லை என்றும் சாதிக்கிறார் காலேஜ் வார்டன்.

முன்பெல்லாம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், குடும்பத்தில் பெரியவர்கள் ஆகியோர்தான் பகை உணர்ச்சியை மனதில் கொண்டு அடிதடிகளில் ஈடுபடுவார்கள். படிக்க வேண்டிய வயதில், நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள் என்று நாமெல்லாம் கனவு கண்டுகொண்டு இருக்கும் கல்லூரி மாணவர்கள் இப்படி அடியாட்களாக மாறி மாமூல் விசாரிப்பதையும், அடிதடியில் இறங்குவதையும் என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியவில்லை.

ஊருக்கெல்லாம் நாட்டாமை சொல்லும் விஜயகாந்த் முதலில் தன் கல்லூரியை ஒழுங்காக நடத்திக் காட்டட்டும்!

***
எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனமும் இல்லை; அலட்சியமாக இருப்பது தைரியமும் இல்லை!

சாதனை மனிதர் மனோஹர் தேவதாஸ்!

‘ஞாநி’யின் கேணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல மாதங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணம். இந்த மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்பவர் ஓவியர் மனோஹர் தேவதாஸ் என்றறிந்ததும், இம்முறை எப்படியாவது கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்குக் காரணம், மனோஹர் தேவதாஸ் வெறுமே ஓர் ஓவியர் என்பது மட்டுமல்ல; அதற்கும் பின்னால் இருக்கிற அவரது தன்னம்பிக்கை, மன உறுதி, மனித நேயம் மற்றும் அன்றில் பறவைகள் போன்ற ஆத்மார்த்த தாம்பத்திய வாழ்க்கை.

விகடன் பொக்கிஷம் பகுதி தயாரிப்புக்காக அந்தக் கால விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, இறையருள் ஓவியர் சில்பியின் கோட்டுச் சித்திரங்களைப் பார்த்துப் பிரமித்தேன். அதற்கும் வெகு காலம் முன்பே சில்பி பற்றியும், அவரது தெய்வீக ஓவியங்கள் பற்றியும் எனக்குத் தெரியும் என்றாலும், எனக்குக் காணக் கிடைத்தது அவருடைய ஒரு சில ஓவியங்களே! ஆனால், பழைய விகடன் இதழ்களைப் புரட்டப் புரட்ட, ‘தென்னாட்டுத் திருச்செல்வங்கள்’ என்னும் தொடருக்காக அவர் ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே உள்ள கோயில் கோபுரங்களையும், கடவுளர் சிலைகளையும் கோட்டுச் சித்திரங்களாக வடித்திருந்ததைப் பார்க்கப் பார்க்க, ‘இந்த அளவுக்கு நுணுக்கமாக ஒருவரால் வரைய முடியுமா!’ என்று பிரமிப்பாக இருந்தது. சக்தி விகடன் இதழுக்குப் பொறுப்பேற்றதும், சில்பியின் தெய்வீக ஓவியங்களை மீண்டும் தொடராக இதில் வெளியிடத் தொடங்கினேன். வாசகர்களிடம் அதற்கு அமோக வரவேற்பு!

‘என்ன... மனோஹர் தேவதாஸ் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டுச் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு ஓவியர் பற்றிச் சொல்லிக்கொண்டு போகிறீர்களே!’ என்று நினைக்கலாம். விஷயத்திற்கு வருகிறேன்.

ஓவியர் மனோஹர் தேவதாஸைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன். ஓவியர் சில்பியின் நுணுக்கமான கோட்டுச் சித்திரங்கள் போலவே மிக அற்புதமாக வரையக்கூடியவர் அவர் என்பதை அறிந்தேன். சில்பி தெய்வீக உருவங்களை அதிகம் வரைந்தார் என்றால், மனோஹர் தேவதாஸ் தான் வளர்ந்த மதுரை நகரை, அதன் தெருக்களை, வீடுகளின் அழகை, மீனாட்சியம்மன் ஆலயத்தை என ஒவ்வொன்றையும் மிக அற்புதமாக வரைந்திருக்கிறார்.

அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு, ‘அட!’ என்று வியந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு விஷயம் ‘அம்மாடி!’ என்று அவர் படைப்புகளைப் பற்றி மிக மிக ஆச்சரியப்பட வைத்துவிட்டது. பார்வைக் குறைபாடு உள்ளவர் அவர். அவரது இரு கண்களில் ஒன்றில் முழுப் பார்வையும் பறிபோய்விட்டது; மற்றொரு கண் மூலம் அவர் அதிக பட்சம் ஒரு ரூபாய் அளவிலான பகுதியையே பார்க்க முடியும். அதாவது, ஒரு முழு வெள்ளைத்தாளைக்கூட, ஏ4 ஷீட் என்று சொல்கிறோமோ, அதைக்கூட அவரால் முழுதாகப் பார்க்க முடியாது. பார்வையை வெள்ளைத் தாளில் பதித்து, ஸ்கேன் செய்வது போல் நகர்த்திக்கொண்டே வந்தால்தான், அந்தத் தாளில் எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று தெரியும். அதில் ஏதேனும் ஒரு படம் வரையப்பட்டு இருந்தால், அதை அவரால் முழுதாகப் பார்த்து ரசிக்க முடியாது. இன்ச் பை இன்ச்சாகத்தான் பார்த்து, ‘ஓஹோ! இந்தப் படம் இப்படி இருக்கிறதா!’ என்று மனசுக்குள் அதற்கு முழுதாக ஒரு வடிவம் கொடுத்துக் கொள்ள முடியும்.

அந்தச் சாதனையாளரை நேரில் பார்க்க வேண்டும் என்னும் பெருவிருப்பம் காரணமாக, நேற்றைய ஞாயிறு எனக்கு இருந்த அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ப்ளஸ் ஒன் படிக்கும் என் மகனையும் அழைத்துக் கொண்டு போனேன். தம்பதி சமேதராக இருக்கும் அவருடைய அற்புதமான புகைப்படங்கள் இரண்டை ஏ3 சைஸில் கலர் பிரிண்ட் அவுட் எடுத்து, லேமினேட் செய்து, என் அன்புப் பரிசாக அவரிடம் கொடுத்தேன். அந்த மகா கலைஞனுக்கு ஏதோ என்னாலான எளிய காணிக்கை.

எங்களிடையே மிக இயல்பாக உரையாற்றினார் மனோஹர் தேவதாஸ். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருந்தபோதிலும், அதற்கான் அறிகுறிகள் இன்றி, மிக நகைச்சுவையோடு அவர் பேசிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அந்தக் காலத்தில் தன்னுடைய தோற்றம், மனைவி மஹிமாவை முதன்முதலில் சந்தித்தது, அவளை நேசித்தது, அவள் மனத்தில் இடம் பிடிப்பதற்காகத் தான் செய்த திருவிளையாடல்கள், அவளுக்காகவே வரைந்த ஓவியங்கள், திருமண வாழ்க்கை, இவருக்காக மஹிமா செய்த தியாகங்கள், ஆத்மார்த்த அன்பு என ஒவ்வொன்றையும் மெலிதான நகைச்சுவை இழையோட சுவாரஸ்யமாக வர்ணித்துக்கொண்டே வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்னால் தூக்கத்திலேயே மஹிமாவின் உயிர் பிரிந்ததைச் சொல்லும்போது, கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் மனசு பாரமாகிப் போனது. அவர் மனைவி இறந்துவிட்டார் என்பது இந்தக் கூட்டத்தில் இவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனவே, திடுக்கிட்டுப் போனேன்.

அவருடைய படங்களை லேப்-டாப்பில் பதிந்துகொண்டு வந்து, பெரிய திரையில் அவற்றை ஒளியிட்டுக் காட்டி, அதற்குப் பொருத்தமாக அவர் தனது வாழ்க்கையைத் தொடர்ந்து விவரித்துச் சொன்ன விதம் ரசனையாக இருந்தது. திருப்பரங்குன்றம் கோயில், பின்னணியில் மலை, புகைவிட்டுக்கொண்டு செல்லும் ரயில், தோப்புகள் என அவர் வரைந்திருந்த கோட்டுச் சித்திரத்தைப் பெரிய திரையில் பார்த்தபோது, ஏதோ சினிமாக் காட்சியைக் காண்கிற மாதிரி மிகத் தத்ரூபமாக இருந்தது.

உரை முடிந்து கேள்வி நேரத்தில், “எத்தனையோ இழப்புகளைக்கூடத் தாங்கிவிடலாம். ஆனால், உங்களின் ஒரு பாதியான மனைவி இறந்ததை எப்படித் தாங்கிக் கொண்டீர்கள்?” என்று கேட்டேன்.

“தாங்க முடியவில்லைதான். ரத்த அழுத்தம் எகிறிப் போனது. ஆனால், எத்தனை நாளைக்குத்தான் முடங்கியிருப்பது? எனவே, என்னை நானே சுதாரித்துக் கொண்டேன். அவள் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்தேன். ‘கொடுப்பதும் ஒரு கலை’ என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவள் அவள். எனவே, அவள் பெயரில் ட்ரஸ்ட் அமைத்து, என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வருகிறேன். தவிர, அவள் நினைவை மறக்க மேலும் மேலும் நிறையப் படங்களை வரைகிறேன். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், இது அவளுக்குப் பிடிக்குமே, இதை அவளுக்காகத்தானே செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு செய்வேன்” என்றார்.

மனசெல்லாம் ஈரமாகிப் போனது எனக்கு.

(மனோஹர் தேவதாஸ் - மஹிமா தம்பதி பற்றி இன்னும் விரிவாக அறிய விரும்புகிறவர்கள் எனது ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவுக்குச் செல்லுங்கள்.)

***
நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு; நாம் தருவதைக் கொண்டு நாம் அமைப்பது வாழ்வு!

நீங்கள் எப்படிப்பட்டவர்?

ஜோசியம், ராசிபலன், கைரேகை, நியூமராலஜி, நேமாலஜி, வாஸ்து, ராகு காலம், தெற்கு சூலை, வடக்கு சூலை போன்ற எதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதேபோல், ‘இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் எப்படி என்று சொல்கிறோம்’ என்று மார்க் போட்டுக் கணிக்கிற முறையும் எனக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்கும். என்றாலும், அவற்றை ஒரு நகைச்சுவைக் கட்டுரை படிக்கிற ஆர்வத்தோடு நான் படித்து ரசிப்பதுண்டு.

அப்படிச் சமீபத்தில் ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் பிறந்த நாள் பொதுப் பலன்கள் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். என்ன ஆச்சர்யம்..! அதில், என் பிறந்த நாளுக்குரிய பலன்கள் (ஏப்ரல் 13) எனக்குக் கச்சிதமாகப் பொருந்தின. (அதற்காக, ஜோசியம் இத்யாதிகளில் நம்பிக்கை வைக்கத் தொடங்கிவிட்டேன் என்று அர்த்தமல்ல!)

அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே கொடுத்திருக்கிறேன். உங்களுக்கும் உங்கள் பிறந்த நாளுக்குரிய பலன்கள் பொருத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தினால் ஆச்சர்யப்படுங்கள்; மற்றபடி, ராசி பலன் வகையறாக்களை நம்பத் தொடங்கிவிடாதீர்கள்!

உங்கள் பிறந்த நாளும், அதற்குரிய பலன்களும்..!

ஜனவரி 1 முதல் 9 வரை; ஏப்ரல் 1 முதல் 3 வரை; ஜூன் 15 முதல் 20 வரை; ஜூலை 10 முதல் 15 வரை; செப்டம்பர் 28 முதல் 30 வரை; டிசம்பர் 1 முதல் 16 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பறவை.

ஜனவரி 10 முதல் 24 வரை; மார்ச் 16 முதல் 23 வரை; ஏப்ரல் 15 முதல் 26 வரை; மே 1 முதல் 13 வரை; ஜூன் 1 முதல் 3 வரை; ஜூலை 1 முதல் 9 வ்ரை; ஆகஸ்ட் 16 முதல் 25 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - நத்தை.

ஜனவரி 25 முதல் 31 வரை; மார்ச் 13 முதல் 15 வரை; மே 22 முதல் 31 வரை; நவம்பர் 1 முதல் 16 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - கரப்பான் பூச்சி.

பிப்ரவரி 1 முதல் 5 வரை; மார்ச் 24 முதல் 31 வரை; ஜூன் 25 முதல் 30 வரை; ஜூலை 27 முதல் 31 வரை; செப்டம்பர் 15 முதல் 27 வரை; நவம்பர் 17 முதல் 30 வரை... இந்தத் தேதியில் பிறந்தவர்களின் சின்னம் - வௌவால்.

பிப்ரவரி 6 முதல் 14 வரை; மே 14 முதல் 21 வ்ரை; ஜூலை 16 முதல் 26 வரை; செப்டம்பர் 1 முதல் 14 வரை; டிசம்பர் 26 முதல் 31 வரை... இந்தத் தேதியில் பிறந்தவர்களின் சின்னம் - தவளை.

பிப்ரவரி 15 முதல் 21 வரை; ஏப்ரல் 27 முதல் 30 வரை; ஜூன் 4 முதல் 14 வரை; ஆகஸ்ட் 26 முதல் 31 வரை; அக்டோபர் 16 முதல் 27 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பல்லி.

பிப்ரவரி 22 முதல் 29 வரை; ஏப்ரல் 4 முதல் 14 வரை; அக்டோபர் 28 முதல் 31 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பாம்பு.

மார்ச் 1 முதல் 12 வரை; ஜூன் 21 முதல் 24 வரை; ஆகஸ்ட் 1 முதல் 15 வரை; அக்டோபர் 1 முதல் 15 வரை; டிசம்பர் 17 முதல் 25 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - வண்ணத்துப்பூச்சி.

இனி பலன்கள்:

பறவை: மிகவும் இனிமையானவர்; விசுவாசமானவர்; நட்புக்கு மரியாதை தருபவர்; தொழிலில் உண்மையானவர்; எளிமையானவர்; எதையும் லேசாக எடுத்துக் கொள்பவர்; குறைந்த அளவு நட்பு வட்டமே உங்களுக்கு இருக்கும். அவர்களும் மிகவும் பண்பாளர்களாகவே இருப்பார்கள்.

நத்தை: கொஞ்சம் குறும்புக்காரர் நீங்கள். அந்தக் குறும்புத்தனமே மற்றவர்களைக் கவரும். ஜாலியான பேர்வழி. உங்கள் தோழமையை மற்றவர்கள் விரும்புவார்கள். ஆனாலும், சின்ன விஷயத்துக்கெல்லாம் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுவது உங்களிடம் உள்ள சின்ன குறை. மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டியிருக்கும். இல்லையேல், கடவுள்தான் அவர்களை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

கரப்பான் பூச்சி: அமைதியை விரும்புகிறவர் நீங்கள். விட்டுக்கொடுத்தாவது சண்டை, சச்சரவைத் தவிர்க்கவே விரும்புவீர்கள். தலைமைக்குச் சரியான நபர் நீங்கள். மற்றவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வந்து, வேலை வாங்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் அலைவரிசையோடு ஒத்துப் போகிறவர்களுடன் நீங்கள் உண்மையான நட்போடு இருப்பீர்கள். மற்றவர்களுடன் மனதளவில் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

வௌவால்: மிக மிக நேசத்துக்குரியவர் நீங்கள். கூச்ச சுபாவம் நிரம்பியவர். உங்களின் அபிமானம் சின்ன நாய்க்குட்டி, கோழிக்குஞ்சு... ஏன், ஒரு சின்ன பூச்சியின்மீது கூட அழுத்தமாக விழும். பொதுவாக நீங்கள் அமைதியானவர்தான்; ஆனால், சரியான காரணம் இருந்தால் எரிமலையாக வெடித்துச் சிதறுவீர்கள். நாகரிகமாக இருக்க விரும்புவீர்கள். அடிப்படையில் மற்றவர்களோடு நன்றாகக் கலந்து பழகுவீர்கள் என்றாலும், புதியவர்களுடன் நீங்களாக அதிகம் பேச மாட்டீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள்.

பல்லி: எதையும் கச்சிதமாகச் செய்யக்கூடியவர். உள்ளத் தூய்மை உள்ளவர். உங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்ராயமே உங்களைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் பரவியிருக்கும். உங்களுக்குத் துன்பம் விளைவித்தவர்களைப் பழி வாங்க நினைக்க மாட்டீர்கள். ஒருவரின் முதுகுக்குப் பின்னால் புறங்கூற மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் மதிப்பதால் அவர்கள் உங்களைப் பெரிதும் நேசிக்கிறார்கள். பெருந்தன்மையானவர். பிறரை அவரின் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்பவர்.

தவளை: வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் உடையவர் நீங்கள். சுற்றிலும் என்ன நடந்தாலும், அதனால் துளியும் பாதிக்கப்படாதவர். உண்மையில், நீங்கள் செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சியை விதைத்துக்கொண்டே செல்கிறீர்கள். நண்பர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் கேட்காமலேயே உதவுகிறவர் நீங்கள். தன்னைப் பற்றியே உயர்வாக நினைத்துக் கொள்பவர்களை வெறுப்பீர்கள். அவர்களிடமிருந்து விலகியிருக்க விரும்புவீர்கள். உங்கள் வேலையில் ஒழுங்காகவும், பொறுப்பாகவும் இருப்பீர்கள். எந்தப் பிரச்னையும் உங்களை அத்தனை சுலபத்தில் அயர்ச்சியில் ஆழ்த்திவிடாது.

பாம்பு: புதிரானவர் நீங்கள். எப்போது இனிமையாகப் பழகுவீர்கள், எப்போது எரிந்து விழுவீர்கள் என்று எதிராளியால் கணிக்கவே முடியாது. எத்தகைய நெருக்கடியையும் எளிதாகக் கையாளத் தெரிந்தவர். எந்தச் சிக்கலான சூழ்நிலையையும் பதற்றமோ, கோபமோ இல்லாமல் சமாளிக்கத் தெரிந்தவர். எதிலும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கேற்பவே எதுவும் நடக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். அப்படி நடக்காமல் போனால், அது உங்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அதனால், சில சமயம் சில நட்புகளை நீங்கள் இழக்க வேண்டி வரலாம். பொதுவாக, நீங்கள் மற்றவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவே விரும்புவீர்கள். அப்படிச் செய்ய முடியாமல் போனால், அதற்காக அலட்டிக்கொள்ள மாட்டீர்கள்.\

வண்ணத்துப்பூச்சி: பொறுமை அற்றவர்; டென்ஷன் பார்ட்டி! உங்களுக்கு எதுவும் உடனடியாக நடந்துவிட வேண்டும். மனதளவில் நீங்கள் குழந்தை போன்றவர்; மிக எளிமையானவர். உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். சர்வ ஜாக்கிரதைப் பேர்வழி. ஏதாவது சர்ச்சையில் உங்கள் பெயர் அடிபட்டால், பதற்றமாகிவிடுவீர்கள். எனவே, எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் எப்போதும் உஷாராக இருப்பீர்கள். ஏதாவது ஏடாகூடமாக நடக்கப்போகிறது என்றால், உங்களின் ஆறாவது அறிவு உங்களை எச்சரித்து, அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிவிடும். பணத்தில் கொஞ்சம் குறியானவர்தான் நீங்கள்.

***
மூட நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது!

வைரமுத்து எழுதுகிறார்...

காக்கா-வடை-நரி கதையை எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பாதங்கதுரை, கண்ணதாசன் எனச் சிலர் அவர்கள் பாணியில் எழுதினால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து,14.11.1980 தேதியிட்ட தினமணி கதிர் இதழில், ‘இவர்கள் எழுதினால்...’ என்னும் தலைப்பில் எழுதியிருந்தேன். (அந்தக் கட்டுரையை ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவில் 2009 ஜூலையில் பதிவு செய்துள்ளேன்.)

சமீபத்தில், விகடன் பொக்கிஷம் பகுதிக்காக 1989-ஆம் ஆண்டு விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, அதே காக்கா-வடை-நரி கதையை கவிஞர் வைரமுத்து எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒருவர் கற்பனை செய்து, ‘ஹ்யூவேக்’ என்னும் புனைபெயரில் எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.

இதோ, அந்தக் கற்பனை:

அந்தக இரவில் கந்தக வடை!

புழுதி படிந்த ஒரு கிராமத்தில், யௌவனக் கிழவி ஒருத்தி, வடை சுட்டு விற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம் கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம்! ‘சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால், உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்’ எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால், பாட்டி பாராத சமயம், அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போல் பாய்ந்து, அந்தக் கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.

எங்கே சென்றது? அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம், பன்னீர்க் குடங்களின் சாரம்! ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம். அங்கே சென்றது காகம்!

விதைக்குள் இருந்து வந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம். அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்தச் சொப்பனக் காகம்!

அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து, நேரிய நயனத்தால் சுற்றுமுற்றும் பார்த்தது; கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முனைந்தது. அப்போது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி! அந்த நரி, நர்த்தக நரி! நாலடியார் நரி! நீதியறிந்து சேதி சொல்லும் போதிமரத்துச் சாதி!

நர்த்தக நரி கார்மேக காகத்தைப் பார்த்தது; உடல் வியர்த்தது. நரியின் மனத்தில் ஒரு வெறி வேர் விட்டது! அந்த ராஜ வடையை அபகரிக்க, அதன் நந்தவனத்து மூளை நாச வேலை செய்தது. நரி அதுவாகக் காகம் அருகே மெதுவாக... ஒரு இதுவாகச் சென்றது!

“ஓ, உலக அழகியே! உள்ளூர் மோனலிஸாவே! கறுப்பு முந்திரியே! கந்தர்வ சுந்தரியே! நீ பார்க்கவே எவ்வளவு அழகு! நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கும் விருது கிடைக்கும். சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்!” என்றது.

இந்த இடத்தில்தான் சரித்திரம் பிறக்கிறது; பூகோளம் புரள்கிறது. நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது. கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பின்வருமாறு பதிலிறுத்தது...

“நான் வைரமுத்துவின் வீட்டு வாசலில் வளர்ந்த காகம். மெட்டிருந்தால்தான் பாடுவேன்; இல்லையேல் இல்லை!” என்று சொல்லிப் பறந்தது; நரியின் சூது இறந்தது!

கதை முடிவில், பாரதிராஜாவின் குரலில் வைரமுத்துவின் வாசகங்கள்...

‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’

- ‘ஹ்யூவேக்’


***
மற்றவர்களைவிடச் சிறப்பாகச் செய்ய வேண்டியதில்லை; நீங்கள் உங்களைவிடச் சிறப்பாகச் செய்தாலே போதுமானது!

வாகனப் பிராப்திரஸ்து!

சைக்கிளைத் தவிர வேறு வாகனம் செலுத்தத் தெரியாதவன் நான். சொல்லிக் கொள்ளக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், உண்மை அதுதானே!

ஆனந்த விகடனில் சேர்ந்த புதிதில் எல்லாம் சக நண்பர்கள் என்னை, “ஏன் சார் பஸ்ல வந்துட்டிருக்கீங்க? ஒரு டூ வீலர் வாங்குறதுதானே?” என்று அக்கறையுடன் கேட்பார்கள். டூ வீலர் வைத்திருந்தால் பெட்ரோல் அலவன்ஸ் உண்டு. பஸ்ஸுக்குச் செலவழிக்கும் பைசா மிச்சமாகும் (மாசம் சுமார் 500 ரூபாய் வரை; இப்போது இன்னும் அதிகம் கூட மிச்சமாகலாம்!).

ஆனாலும், நான் எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது என்கிற உண்மையை வெளிக்காட்டாமல், கெத்தாக அவர்களிடம், “ஐயே! டூ வீலர் வெச்சிருந்தா பெரிய தலைவலி சார்! அன்னிக்குப் பார்க்கிறேன், ஜெமினி ஃப்ளை ஓவர் மேல டிராஃபிக் ஜாம். இருபது நிமிஷமா வண்டிகள் நகரலே. கார்த்தால பத்து மணிக்கு வெயில் அடி பொளக்குது. நான் சுகமா பஸ்ஸுக்குள்ளே உட்கார்ந்துக்கிட்டு, கூலா புஸ்தகம் படிச்சுக்கிட்டிருக்கேன். ஜன்னல் வழியா பார்த்தா ஆம்பிளைங்க, பொம்பிளைங்க, வயசானவங்க, காலேஜ் பொண்ணுங்கன்னு சுட்டுப் பொசுக்குற வெயில்ல தலையில கர்ச்சீப் கட்டிக்கிட்டு, துப்பட்டாவால போர்த்திக்கிட்டெல்லாம் பாவமா கருகிக்கிட்டு நிக்குறாங்க. வேணாம் சார் எனக்கு இந்த அவதி. வீட்டுக் கிட்டேயே பஸ் ஸ்டாண்ட். ஏறி, சௌகரியமா ஜன்னலோரம் இடம் பிடிச்சு உட்கார்ந்தேன்னா, நேரே ஆபீஸ் வாசல்ல வந்து இறங்கப் போறேன். எனக்கு எதுக்கு டூ வீலர்? அதெல்லாம் நாலு இடம் போய் வர்ற ரிப்போர்ட்டர்களுக்கும் காமிராமேன்களுக்கும் வேணா அவசியமா இருக்கலாம். எனக்குத் தேவையில்லை” என்று மிதப்பலாகப் பதில் சொல்வேன். அவர்களும் அதை நம்பிவிட்டார்கள் என்றுதான் தோன்றியது.

உண்மையில், சென்னை டிராஃபிக்கில் டூ வீலர் ஓட்ட எனக்குப் பயமான பயம். காரணம், பஸ்ஸில் போய் வரும்போது தினம் ஒரு முட்டல் மோதல் தகராறையும், வாரம் ஒரு ஆக்ஸிடெண்ட்டையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன்! தவிர, என்னைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் டிராப் செய்யும் சக நண்பர்கள் சிலரது டூ வீலரில் பின்னால் உட்கார்ந்திருக்கும்போது, இவர் நம்மை பத்திரமாகக் கொண்டு போய் வீட்டில் சேர்க்க வேண்டுமே என்று எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்தது, வண்டியை அவர்கள் செலுத்திய விதம்.

விகடனில் என்னோடு பணியாற்றிய மூவர், பைக் ஆக்ஸிடெண்ட்டில் மண்டை சிதறி இறந்ததும் ஒரு முக்கியக் காரணம், நான் டூ வீலர் வாங்க பயப்பட்டதற்கு!

சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், சைக்கிளில்தான் தினமும் அலுவலகம் போய் வருவேன். அங்கே மேனேஜராகப் பணியாற்றிய துரைக்கும், விளம்பர மேலாளராகப் பணியாற்றிய சீனிவாசகமணிக்கும் (இவர்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கோபுர தரிசனம்’ என்னும் ஆன்மிக இதழை நடத்தி வருகிறார்) அலுவலக உபயோகத்துக்காக யமஹா பைக் வாங்கித் தந்தார் சாவி சார். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாததால், நான் பைக் வேண்டாம் என்று மறுத்து, தொடர்ந்து சைக்கிளிலேயே போய் வந்துகொண்டு இருந்தேன். சாவி சார் என்ன நினைத்தாரோ, ‘மோஃபா’ என்றொரு வாகனத்தை வாங்கி, எனக்கே எனக்கென்று வைத்துக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தார்.

சைக்கிள் போன்ற சின்ன வாகனம் அது. பெட்ரோலில் ஓடுவது. டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. கியர் கிடையாது. ஸ்டார்ட் செய்து ஏறி உட்கார்ந்தால், அதிக பட்சம் 30 கி.மீ. வேகத்தில் தேமே என்று போய்க்கொண்டே இருக்கலாம். வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டாலும், கவலையில்லை. சைக்கிள் போல் சுலபமாக மிதித்து ஓட்டிக்கொண்டு போய்விடலாம். அப்போது அதன் விலை வெறும் 3,000 ரூபாய்தான்! (யமஹா பைக் விலை அப்போது ரூ.20,000-க்குள்!) அதில்தான் நான் சாவி அலுவலகத்துக்கு ஓரிரு ஆண்டுகள் போய் வந்தேன். எனக்கு ரொம்பச் சௌகரியமாக இருந்தது அந்த வாகனம். அப்புறம், சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு ஒருமுறை வேலையை விட்டு நின்றபோது, அந்த வாகனத்தை சாவி ஆபீஸிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். பின்னர் சில மாதங்கள் கழித்துப் போய்ச் சேர்ந்தபோது, அதை மகன் பாச்சாவிடம் பணியாற்றுபவருக்கோ அல்லது வேறு யாருக்கோ கொடுத்துவிட்டிருந்தார் சாவி சார். நானும் அதன்பின் டூ வீலர் பற்றிக் கேட்கவில்லை.

‘மோஃபா’ மாதிரியே அந்நாளில் ‘சன்னி’ என்றொரு வாகனம் வந்தது. இரண்டு சக்கரங்களும், மோட்டாரும் உள்ள மிக மிக சிம்பிளான வாகனம். இதற்கும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. இதன் விலையும் ரொம்பக் குறைவு. ஆனால், அதை வாங்கும் அளவுக்குக்கூட எனக்கு அப்போது பண வசதி இல்லை.

சரி, நான்தான் அப்படி இருந்தேன் என்றால், என் வாரிசுகளையும் அப்படியே வளர்ப்பதா? என் மகள் கல்லூரிக்குப் போகத் தொடங்கிவிட்டாள். மகனும் இரண்டொரு ஆண்டுகளில் கல்லூரி போகத் தொடங்கிவிடுவான். ‘என்னை மாதிரியே பஸ்ஸில் போய் வா’ என்று அவர்களைச் சொல்ல முடியுமா? பஸ்ஸில் போய் வருவது ஒன்றும் தப்பில்லை. ஆனால், காலத்துக்கேற்ப கிடைக்கும் சௌகரியங்களை அனுபவிப்பதில், கற்றுக் கொள்வதில் ஒன்றும் ஆட்சேபணையில்லையே?

எனவே, மூன்று மாதங்களுக்கு முன்பு, என் மகளுக்காக ஸ்கூட்டி ஸ்ட்ரீக் வண்டி ஒன்று வாங்கினேன். என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக வாங்கும் டூ வீலர். அவளுக்கு அதை ஓட்டப் பயிற்சியளித்து, இந்த ஆண்டு இல்லையென்றாலும், அடுத்த ஆண்டிலாவது அவளே அதை கல்லூரிக்கு ஓட்டிச் செல்லவேண்டும் என்பது என் நோக்கம். அதற்கு முன்பு, வண்டியை மிகச் சரளமாகக் கையாள அவள் பழக வேண்டும் என்பதற்காகவே, உடனே டூ வீலர் வாங்கிவிட்டேன்.

சரி, அவள் அதை ஓட்டக் கற்பது ஒருபுறம் இருக்கட்டும்; மற்ற நேரங்களில் வண்டி, வீட்டில் சும்மா இருப்பதா? நான் ஓட்டத் தொடங்கிவிட்டேன்.

வண்டியை டெலிவரி எடுக்கும்போது நண்பர் ராஜாவும் கூட வந்தார். “வண்டி ஓட்டுவீங்க இல்லே?” என்று சந்தேகத்தோடு கேட்டார். அப்போதும் உண்மையைச் சொல்லாமல், “ஓட்டுவேன். பழக்கம் விட்டுப் போச்சு. வேற ஒண்ணுமில்லே! இதை எப்படி ஓட்டணும்?” என்று அவரிடம் கேட்டேன். இங்கே சாவி போடணும், இப்படி ஸ்டார்ட் பண்ணணும், இப்படி ஆக்ஸிலரேட்டரை முறுக்கணும், இது பிரேக் என்று சொல்லிக் கொடுத்தார். ‘ப்பூ... இவ்வளவுதானே!’ என்று திருகியதுதான் தாமதம், வண்டி விலுக்கென்று முன்னால் பாய்ந்தது. திடுக்கிட்டுப் போனாலும், பிரேக் பிடித்துச் சமாளித்துவிட்டேன்.

“என்ன, பத்திரமா வீடு வரைக்கும் போய்ச் சேருவீங்களா?” என்றார் ராஜா, பயத்துடன். “அதெல்லாம் தாராளமா போயிடுவேன். என்ன, கொஞ்சம் டச் விட்டுப் போயிடுச்சு. அதான்...” என்று சமாளித்துவிட்டு, விடைபெற்று, வண்டியைச் செலுத்தத் தொடங்கினேன்.

என் வாழ்க்கையிலேயே முதன்முதலாக, இந்த 52 வயதில், டூ வீலரை நான் ஓட்டத் தொடங்கிய முதல் நாளிலேயே, இரவில் ஹெட் லைட் போட்டுக்கொண்டு, திருப்பங்களில் சிக்னல் விளக்குகளை எரியவிட்டு, அணைத்து, நல்ல டிராஃபிக்கில் செலுத்த நேர்ந்தது என் அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. பத்திரமாக வீடு வந்து சேருவதற்குள், மனசுக்குள் உதறலாகத்தான் இருந்தது.

அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் வண்டியை அலுவலகம் எடுத்துப் போய் வந்தேன். நாலாம் நாளிலிருந்து வண்டி ஓட்டுவது கொஞ்சம் பழகி, மன உதறல் நின்றுவிட்டது. இருந்தாலும், தெளிவாக ஓட்டுகிறேனா, கான்ஃபிடெண்ட்டாக ஓட்டுகிறேனா என்பது எனக்கே சந்தேகமாக இருந்தது. சிக்னலில் காலூன்றி நிற்கச் சிரமப்பட்டேன். கால் சரியாக ஊன்றாமல் சறுக்கியது. வேகமாக ஓட்டும்போதுகூடப் பரவாயில்லை; டிராஃபிக்கில் சிக்கி, மெதுவாக ஓட்டும்போதுதான் சிரமமாக இருந்தது.

எப்படியோ... இதோ, மூன்று மாதங்களாக நானும் டூ வீலர் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. முன்னிலும் திருத்தமாகவே ஓட்டுகிறேன். எனக்கே தைரியமும் தன்னம்பிக்கையும் வந்திருக்கிறது. சாலையில் சக டூ வீலர் பயணிகள் பலர் ஓட்டும் அழகைப் பார்க்கும்போது, நான் ரொம்பவே மேல் என்று தோன்றுகிறது. கொட்டும் மழையிலும், மேடு பள்ளங்களிலும், கடுமையான டிராஃபிக் நெரிசலிலும் தெளிவாகவே ஓட்டி வந்திருக்கிறேன். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக என் மகளை உட்கார வைத்து ஓட்டிச் சென்று கல்லூரியில் இறக்கிவிட்டு, அப்படியே என் அலுவலகம் சென்று, மாலையில் கல்லூரிக்குப் போய் அவளையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறேன்.

நான் வண்டி ஓட்டத் தொடங்கிய இந்த மூன்று மாதத்துக்குள்ளாக கோடம்பாக்கம் மேம்பாலத்தில், கே.கே.நகர் நூறடி ரோட்டில், ஜெமினி பிரிட்ஜில், மவுண்ட் ரோடில் எங்கள் அலுவலத்துக்கு அருகில் என ஏழெட்டு ஆக்ஸிடெண்ட்களைப் பார்த்துவிட்டேன். என்றாலும், நான் வண்டி ஓட்டத் தொடங்குவதற்கு முன்பாக எனக்குள் இருந்த பயம் இப்போது இல்லை.

ஏற்கெனவே சைக்கிள் ஓட்டிய அனுபவம் இருப்பதால், டூ வீலர், அதிலும் ஸ்கூட்டி போன்ற சுலபமான வாகனம் ஓட்டுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. ஆனால், வாகன ஓட்டிகள் சில விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதால்தான் விபத்துக்கள் நேர்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது எனக்கு, இந்த மூன்று மாத அனுபவத்தில்.

டூ வீலரை சைக்கிள் ஞாபகத்தில் சாய்ந்து காலூன்றி நிறுத்தக்கூடாது. சைக்கிளின் எடை குறைவு. டூ வீலரின் எடையை (95 கிலோ) நம் கால்கள் தாங்காது. அதிலும் ஓட்டி வந்த அதே வேகத்தில் நின்று, காலூன்றி நிற்பது சிரமம். நிற்க வேண்டிய இடத்துக்கு முன்பே வேகத்தைக் குறைத்து மெதுவாக ஓட்டிப் போய், எந்தப் பக்கமும் சாயாமல் இரண்டு பக்கமும் கால்களைத் தரையில் ஊன்றினால், நிற்பது மிகச் சுலபமாக இருக்கிறது.

மெதுவாக ஓட்டுவது பாதுகாப்பு என்று, டூ வீலரில் சைக்கிள் வேகத்தில் போகக்கூடாது. அதுவும் விபத்துக்கு வழிவகுக்கும். அந்தந்த வாகனத்துக்கென்று ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான வேகம் இருக்கிறது. அந்த வேகத்துக்கும், நமது இயல்புக்குத் தோதான ஒரு வேகத்துக்குமான சராசரி வேகத்தை நம் அனுபவத்தில் கண்டுணர்ந்து, அந்த வேகத்தில் சீராகச் செல்வதே சரியானது.

சில குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட இடங்களில் சற்றுக் கூடுதலான வேகத்தில் செல்லவேண்டியிருந்தாலும் தப்பில்லை. ஆனால், தொடர்ந்து அதே வேகத்தில் செல்லாமல், மீண்டும் நமது பழைய சீரான வேகத்துக்குத் திரும்பிவிடுவதே நல்லது.

இடம், வலம் திரும்பும்போது, மறக்காமல் சிக்னல் விளக்கை எரியவிட்டுத் திரும்புவதே நல்லது. பின்னால் வருபவர்கள் அதற்கேற்ப தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, நமக்கு வழிவிடுவார்கள்; நம்மைக் கடந்து போவார்கள். நான் சாலையில் காணும் பலர் சிக்னல் விளக்கை எரியவிடாமல் திரும்புவதால்தான், பின்னால் வரும் வாகனங்கள் அவர்களின் மேல் மோதுவது போல் கிட்டே வந்து சுதாரிப்பதை நான் தினமும் காண்கிறேன். அதே போல், திரும்புவதற்குச் சற்று முன்னதாக சிக்னல் விளக்கை எரியவிடுவதே சரி; நாலாவது தெருவில் திரும்புவதற்கு முதல் தெருத் திருப்பத்திலேயே சிக்னல் விளக்கை எரியவிட்டால், பின்னால் வருபவர்களுக்குக் குழப்பம் வரும்.

சரி, போதும்! நிறுத்திக் கொள்கிறேன். மூன்றே மாதங்கள் டூ வீலர் ஓட்டிவிட்டு, இத்தனை உபதேசம் செய்யக்கூடாது!

***
தைரியம் என்பது பயமின்றி இருப்பதல்ல; பயந்த பின், அந்த நிகழ்வை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது!

நன்னனானேன் நான்!

Eசல், ஊC, Oட்டகம், Aறும்பு, Iவர், Oணான், Vநாயகர்... இப்படியெல்லாம் ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதுவது சின்ன வயதில் எனக்கொரு விளையாட்டு. அதற்காக ஆசிரியரிடம் அடி கூட வாங்கியிருக்கிறேன். ஆனால், பள்ளி வயதிலிருந்தே என்னால் தமிழில் தப்பில்லாமல் எழுத முடியும். இலக்கணப் பிழை, வாக்கியப் பிழைகள் இல்லாமல் எழுத முடியும்.

வீட்டுப் பாடம் எழுதி வரும்போது, அதில் தேவையில்லாத ஒரு வாக்கியத்தை எழுதிவிட்டால், அந்த வாக்கியம் என்னவென்றே தெரியாத அளவுக்குப் பேனாவால் பட்டை அடித்து மறைத்தால், எங்கள் தமிழய்யாவுக்குக் கோபம் வந்துவிடும். சிவப்பு மையால் மெல்லியதாக ஒரு கோடு போட்டு அந்த வாக்கியத்தை அடிக்க வேண்டும் என்பார். தேவையில்லாத வாக்கியம்தானே என்று அதைக் கண்டுகொள்ளாமலும் விடமாட்டார். அதைப் படித்துப் பார்த்து, அதில் எழுத்துப் பிழைகள் இருந்தால், அருகே அழைத்துத் தலையில் குட்டுவார். எனவே, தேவையில்லாமல் எழுதிவிட்ட வாக்கியமாக இருந்தாலும், அதில் எழுத்துப் பிழைகள் ஏற்படாதவாறு எழுதிப் பழகியதாலேயே எனக்குத் தமிழில் பிழையின்றி எழுதவும், பேசவும் முடிந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் பேச்சைக் கேட்கும்போது, என் காதுகள் இரண்டும் கருகிப் போகின்றன. பார்த்துக்கொள்ளுங்கள் என்பதை பார்த்துக் கொல்லுங்கள் என்றும், இந்த நாள் என்பதை இந்த நால் என்றும், ஒன்னே ஒன்னு கன்னே கன்னு என்றும் இவர்கள் லகர ளகர, னகர ணகர வித்தியாசமின்றி உச்சரிப்பதைக் கேட்கும்போது, தமிழை ஏன் இத்தனைச் சித்ரவதைப்படுத்துகிறார்கள் என்று வேதனையாக இருக்கும் (சுஜாதா விகடனில் எழுதிய ஒரு தொடர்கதையில், ‘னகர நகர வித்தியாசமின்றிப் பேசும் தொகுப்பாளிகள்’ என்று எழுத, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் அதைச் சுட்டிக்காட்டி, ‘னகரத்துக்கும் நகரத்துக்கும் எழுத்தில்தான் வித்தியாசமே தவிர, உச்சரிப்பில் என்ன வித்தியாசம் இருக்கிறது?’ என்று கேட்டு, பின்பு அதை ‘னகர ணகர’ என்று பிழை திருத்தியது ஞாபகம் வருகிறது.).

இளங் காலை என்றால், அதிகாலை நேரம்; அதுவே இளங் காளை என்றால், இளம் காளை மாட்டையோ அல்லது இளைஞனையோ குறிக்கும். தமிழில் உச்சரிப்புச் சுத்தம் மிகவும் முக்கியம்.

‘கத்தியை எடுத்துக் கொள்’ என்று சொன்னால், எதிராளி கத்தியை எடுத்துக்கொள்வான். ‘கத்தியை எடுத்துக் கொல்’ என்றால், கத்தியை எடுத்துச் சொன்னவன் வயிற்றிலேயே குத்திக் கொன்றுவிட்டுப் போய்விடுவான்.

‘வே’ என்ற எழுத்து வரவேண்டிய இடங்களில் எல்லாம் ‘சே’ என்று தவறாக அச்சானதால் ஏற்பட்ட குளறுபடியை மையமாக வைத்து, முன்பு நான் ஓர் ஏடாகூடக் கதை ஒன்று எழுதியிருந்தேன். ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் மிகவும் ரசித்துப் பாராட்டிய கதை அது.

தமிழ்ப் பத்திரிகைக்குத் தப்பில்லாத தமிழ் ரொம்ப முக்கியம். எழுத்துப் பிழைகள், வார்த்தைப் பிழைகள் அறவே இருக்கக்கூடாது. அர்த்தம் அனர்த்தமாகிவிடக் கூடாது. மாணவப் பத்திரிகையாளர்களுக்கு விகடன் கற்றுக் கொடுக்கும் அரிச்சுவடி, பிழைகளற்ற தமிழ்தான்.

இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவப் பத்திரிகையாளர்களுக்கான கூட்டம், தியாகராய நகரில் சிவாஜிகணேசன் வீட்டுக்கு எதிரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில், சென்ற மாதம் நடந்தது. பல ஆண்டுகளாகவே இதே மண்டபத்தில்தான் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது.

எழுத்தில் இயல்பாக ஏற்படும் பிழைகள், வாக்கிய அமைப்பில் ஏற்படும் குளறுபடிகள், அவற்றைத் தவிர்த்து எழுதும் முறை பற்றியெல்லாம் மாணவப் பத்திரிகையாளர்களுக்கு அந்தக் கூட்டத்தில் நான் விளக்கிச் சொன்னேன். ஒரு மணி நேரப் பேச்சில் முழுமையாக எல்லாவற்றையும் புரிய வைத்துவிட முடியாது. எழுத எழுதத்தான் மொழி நம் வசமாகும். இருந்தாலும், இப்படியெல்லாம் தவறுகள் வரலாம் என்று நாம் அடிக்கடி சந்திக்கும் வாக்கிய, எழுத்துப் பிழைகள் பற்றி மாணவர்களுக்கு அன்று நான் கோடி காட்டினேன்.

அவற்றில் சிலவற்றை இங்கே சொன்னால், உங்களுக்கும் அது உபயோகமாகவும், படிக்க சுவாரசியமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

அவைகள் என்று பலரும் எழுதுகிறார்கள். அவை என்பதே பன்மைதான். அதற்கு மேலும் ஒரு கள் விகுதி தேவையில்லை. சுயேச்சைதான்; சுயேட்சை அல்ல! அருகில் என்பதன் எதிர்ப்பதம்தான் அருகாமையில். அதாவது, அருகாமையில் என்றால், தொலைவில் என்றே பொருள். ஆனால் காலப்போக்கில், அருகில் என்பதைக் குறிப்பிட அருகாமையில் என்ற சொல்லையே பலரும் பயன்படுத்தி, அதுவே சரியானது போன்று வழக்கத்தில் வந்துவிட்டது. என்றாலும், தெரிந்தே அந்தத் தவற்றைச் செய்யாமல், நாம் அருகில் என்றே குறிப்பிடுவோமே!

மேல் வரியில் தவற்றை என்று எழுதியிருக்கிறேன். இதுவே சரி. ‘தவறைச் செய்யாமல்’ என்று பலரும் எழுதி, தவற்றைச் செய்கிறார்கள். மெய்ஞ்ஞானம் என்பதே சரி. மெய்ஞானம் அல்ல. அதேபோல், மனச்சாட்சிதான்; மனசாட்சி அல்ல!

ரஜினியின் ‘அருணாச்சலம்’ படம் வந்ததிலிருந்து பலரும் அருணாச்சலம் என்றே எழுத ஆரம்பித்துவிட்டனர். சினிமா சென்டிமென்ட்டுக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். ஆனால், அருணாசலம் என்பதே சரி. அசலம் என்றால் குன்று; மலை என்று பொருள். அருணா+அசலம்= அருணாசலம்; அதாவது, நெருப்பு மலை. வேங்கடாசலபதியையும் பலர் வெங்கடாஜலபதி என்று எழுதுகிறார்கள்.

கீழ்க்கண்ட பாராவைப் படியுங்கள்.

‘சகாரா நிறுவன அதிபர் சுப்ரதோ ராய் வீட்டு விழாக்கள் எதுவும் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் நடக்காது. தன் மனைவியோடு வந்து ஆஜராவார் டெண்டுல்கர். அதேபோல்தான் கபில்தேவும்! குடியரசு தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடுவார் இவர். அதில் வந்து கலந்துகொண்டு டான்ஸ் ஆடுவார் அமிதாப் பச்சன். இப்படி உலகையே ஆட்டுவித்தவரின் ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது?!’

இதில் இரண்டு முக்கியமான தவறுகள் உள்ளன. கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள். விடையைக் கடைசியில் சொல்கிறேன்.

2. ‘நாதா மல்லிக் என்பவருக்கு வயது 82. பரம்பரையாகத் தூக்கு போடும் தொழில். மூன்று வாரங்களில் தனஞ்செய் என்பவருக்கான தூக்குத் தண்டனையை அவர் நிறைவேற்ற வேண்டும். இதுவரை மல்லிக் மொத்தம் 24 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளார். ஆக, தனஞ்செய் அவருக்கு இருபத்தைந்தாவது இரை!’

3. ‘வெடி அதிர்ச்சியில் வீட்டின் கூரை அப்படியே சரிந்து விழ, உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த வீட்டின் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக இறந்துபோனார்கள். உடல்களில் சிறு காயம்கூட இல்லாமல் நான்கு சடலங்களும் மீட்கப்பட்டபோது, சோகம் நெஞ்சை அடைத்தது.’

4. இளைஞன் பரத் என்ன ஆனான், எங்கு போனான் என்று யாருக்குமே தெரியவில்லை. பதினைந்து நாட்களுக்குப் பிறகு, யாரோ ஒருவர் கொடுத்த தகவலை நம்பி, திருவண்ணாமலை சென்று, அங்கே ஒரு சத்திரத்தின் வாசல் திண்ணையில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பரத்தை கண்டுபிடித்தோம்.’

இவை போன்று இன்னும் பலப் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். சரி, மேலே உள்ள பாராக்களில் என்ன தவறு என்று பார்க்கலாமா?

நகைச்சுவையாக ஒன்று சொல்வார்கள்... ஓர் அலுவலகத்தில் பாபு, கோபு என்கிற சக நண்பர்கள் தங்கள் மனைவிமார்களுடன் உல்லாசப் பயணம் செல்வதெனத் தீர்மானித்தார்கள். சாயந்திரம் பாபு, கோபு இருவரும் பாபுவின் வீட்டுக்குச் சென்றார்கள். பாபுவின் மனைவியைப் பார்த்து, உல்லாசப் பயணம் போகவிருக்கும் தகவலைச் சொன்னான் கோபு. ‘யார் யார் போகிறீர்கள்?’ என்று பாபுவின் மனைவி கேட்க, ‘நீ என் மனைவி, நான் உன் கணவன்’ என்று சொன்னானாம் கோபு. அதிர்ந்துவிட்டாள் பாபுவின் மனைவி. ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்று அவள் பதற, கோபு நிதானமாக, ‘உல்லாசப் பயணம் போகப்போவது யார் யார் என்று கேட்டியே தங்கச்சி! அதான்... நீ, என் மனைவி, நான், உன் கணவன் ஆகிய நாலு பேரும் போகப் போகிறோம் என்றேன்’ என்று சொன்னானாம் சிரித்துக்கொண்டே.

நகைச்சுவைக்கு இது சரி. ஆனால், கேட்பவர் சரியாகப் புரிந்துகொள்ளும்படி சொல்ல வேண்டும், படிப்பவர்கள் சரியாக அர்த்தப்படுத்திக்கொள்ளும்படி எழுத வேண்டும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

இன்னொரு ஜோக்கும் உண்டு. ஒரு பையன் சொன்னானாம், ‘எங்கப்பா போலவே எனக்கும் படிச்சுப் பெரிய டாக்டர் ஆகணும்னு ஆசை!’ ‘அட, உங்கப்பா பெரிய டாக்டரா?!’ என்று நண்பன் கேட்க, இந்தப் பையன் சொன்னான்: ‘இல்லடா! எங்கப்பாவும் படிச்சுப் பெரிய டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டவர்!’

சரி, முதல் பாராவுக்கு வருவோம். ‘குடியரசு தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடுவார் இவர்’ என்பதில், இவர் என்பது யாரைக் குறிக்கிறது? கபில்தேவைச் சொல்லிவிட்டு, அடுத்த வரியிலேயே இவர் என்றால், அது கபில்தேவைத்தான் குறிக்கும். ஆனால், கட்டுரையாளர் சொல்ல வருவது சுப்ரதோ ராயைத்தான். எனவே, அங்கே அவர் என்பதற்குப் பதிலாக அவர் பெயரையே போட்டுவிடுவதுதான் உத்தமம்.

அந்த பாராவில் இன்னொரு முக்கியமான தப்பும் இருக்கிறது. ‘ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது?!’ என்று எழுதக்கூடாது. சுப்ரதோ ராய் ஏதோ பிரச்னையில் சிக்கிச் சில நாட்களாக அமைதியாக இருப்பதைத்தான் (இது சமீபத்திய செய்தி அல்ல; ஓர் உதாரணத்துக்காகவே தரப்பட்டுள்ளது.) கட்டுரையாளர் குறிப்பிட விரும்புகிறார். ஆட்டம் அடங்கிவிட்டது என்றால், அமரராகிவிட்டார் என்று பொருள் தரும். எனவே, ‘ஆட்டம் ஏன் அடங்கியிருக்கிறது?!’ என்று எழுதலாம்.

2. மல்லிக்குக்கு தூக்குப் போடுவது தொழில்தான். அதை ‘இரை’ என்று வர்ணித்து எழுதுவது அபாண்டம்!

3. படுகாயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தால் சோகம் நெஞ்சை அடைத்திருக்காது என்பது போன்று அர்த்தம் கொடுக்கிறது கடைசி வரி. ஒரே வாக்கியமாக இல்லாமல், ‘உடல்களில் சிறு காயம்கூட இல்லாமல் சடலங்கள் மீட்கப்பட்டன. நான்கு உடல்களையும் பார்த்தபோது நெஞ்சை சோகம் கவ்வியது’ என்று பிரித்து எழுதினால் சரியாக இருக்கும்.

4. சில வார்த்தைகளோடு விகுதிகள் சேரும்போது, அது தனி வார்த்தை போல் ஆகி, அனர்த்தம் விளையும். ஒரு பையனுக்கு ‘ச’ எழுத்தைச் சரியாக எழுதத் தெரியாது. இதை ஒரு ஆசிரியர் அந்தப் பையனின் பெற்றோரிடம், ‘உங்க பையனுக்கு சாவே வரலைங்க’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அது போன்ற ஒரு தப்புதான் நாலாவது பாராவில் உள்ளது. பரத்தை என்பது விலைமகளைக் குறிக்கும் சொல். தவிர்க்க வேண்டும். வாசல் திண்ணையில் பரத் தூங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டோம் என்று எழுதினால் நல்லது.

***
அனுபவம் இருந்தால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்; ஆனால், தவறான முடிவுகளை எடுக்கும்போதுதானே அனுபவமே கிடைக்கிறது?!
.

கலைஞரும் நானும்!

யதாகிவிட்டதற்கான அடையாளங்களில் முக்கியமான ஒன்று... சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருப்பது. நம் வயதுக்கு மரியாதை கொடுத்து, எதிராளி பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். நம் தலை மறைந்ததும், பக்கத்தில் உள்ள நண்பரிடம், “இப்ப இவ்வளவு நேரம் சொன்னாரே, இதை நூத்துப் பதினஞ்சாவது தடவையா என் கிட்டே சொல்றார். யப்பா... சரியான பிளேடு!” என்று கேலி செய்வார்.

சாவி சார் அப்படிப் பல முறை, சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்லி என்னைப் போரடித்திருக்கிறார். அவரின் அனுபவம் மற்றும் வயதை மனதில் கொண்டு, ஒவ்வொரு முறையும் புதிதாக அதை அப்போதுதான் கேட்பது போல், பிரயத்தனப்பட்டு முகத்தையும் குரலையும் சுவாரசியமாக்கிக் கொண்டு கேட்பேன்.

சமீப காலமாக நானும் அப்படி மற்றவர்களிடம் சொன்னதையே சொல்லி அறுக்கிறேனோ, வயது தன் வேலையை என்னிடமும் காட்டத் தொடங்கிவிட்டதோ என்று... ஊஹூம், நான் அதற்குக் கவலைப்படவில்லை; மரியாதை கருதி, மற்றவர்கள் என் அறுவையைத் தாங்கிக்கொண்டு இருக்கிறார்களோ என்றுதான் கவலைப்படுகிறேன்.

நேற்று ஏதோ பழங்குப்பையைக் கிளறிக்கொண்டு இருந்தபோது, யதேச்சையாக மேலே கொடுத்திருக்கும் போட்டோ கிடைத்தது. (கலைஞருக்கு இடப் பக்கத்தில் சாவி சார், வலப் பக்கத்தில் பின்னால் நான்; என் அருகில் கறுப்புப் பேன்ட்டும் சிவப்புச் சட்டையும் அணிந்திருப்பவர் மோகன் - சாவியில் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்; ஓவியர் ஜெயராஜின் சகோதரி மகன்; அவருக்கு அருகில் இருப்பவர் பெயர் ரமேஷ் - சாவி சாரின் மகன் பாச்சா என்கிற பாலசந்திரனின் வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்தவர்; இப்போதும் இங்கேதான் எங்கேயோ அருகில் இருக்கிறார். அடிக்கடி அவரை வழியில் சந்திக்கும்போது, ஒரு புன்சிரிப்போடு குட்மார்னிங் சொல்லிவிட்டுப் போவார். அவர் அருகில் இருக்கும் சிறுவன், சாவி சாரின் பேரன்; சாவி சாரின் இடப் பக்கத்தில் இருப்பவர் பெயர் துரை - சாவி இதழின் மேனேஜராக இருந்தார். துரைக்கு அருகில், சாவி வீட்டு வாட்ச்மேனாகப் பணியாற்றிய சித்திரை, அவருக்கு அருகில் சாவியில் அட்டெண்டராக இருந்த ஃபிரான்சிஸ் - எங்களோடு நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டுவிட்டுக் கிளம்பிய கலைஞர், அப்போதுதான் ஓடி வந்த ஃபிரான்சிஸுக்கு ஏமாற்றம் தர விரும்பாமல், மீண்டும் ஒருமுறை படியேறி வந்து அவரையும் நிற்கச் சொல்லிப் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெருந்தன்மை பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம் ) உடனே, கலைஞர் கருணாநிதியுடனான என் அனுபவங்களையும் எழுதலாமே என்று தோன்றிவிட்டது. இவற்றை முன்பே என் வலைப்பூக்களில் எழுதிவிட்டேனா, இல்லையா என்று ஞாபகம் இல்லை. ஒவ்வொன்றாகத் தேடிப் பார்க்கவும் பொறுமை இல்லை. எனவே, இங்கே அவற்றை எழுத விழைகிறேன்.

சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆர்-தான் முதல்வர். அவரது மறைவுக்குப் பின்பு, அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்ததில், இடையில் சொற்ப காலம் கலைஞருக்கு முதல்வராகும் வாய்ப்பை அளித்தார்கள் மக்கள்.

அப்போது சாவியில் வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்திருந்தோம். ‘அடுத்த முதல்வர் யார்? கலைஞரா, ஜானகியா, ஜெயலலிதாவா? சரியாக ஊகிப்பவர்களில் குலுக்கல் முறையில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்துப் புதிய முதல்வர் கையால் மாலை அணிவிக்கப்படும்’ என்பதே அந்தப் போட்டி!

தேர்தல் முடிவு தெரிவதற்குள்ளாகவே, கழுத்தில் பெரிய மாலை அணிந்த கலைஞர் படத்தை வெளியிட்டு, பொதுஜனம் அந்த மாலையை அணிவித்ததுபோல் அட்டையிலேயே ஒரு கார்ட்டூன் படத்தையும் சேர்த்து, முதல்வர் ஆனதற்குப் பாராட்டுத் தலையங்கம் எழுதி, சனிக்கிழமையன்றே அச்சுக்கு அனுப்பிவிட்டோம். சாவி சாருக்கு மகா தைரியம்; அசாத்திய தன்னம்பிக்கை.

திங்கள்கிழமை மாலையில் புத்தகம் ரெடியாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை காலையில் தேர்தல் முடிவு வெளியாகிற வரையில் எனக்குத்தான் பக்... பக் என்றிருந்தது. ஆனால், சாவியோ சற்றும் தளராமல், “சந்தேகமே இல்லாமல் கலைஞர்தான் இந்த முறை முதல்வர். நீ ஏன் வீணா பயந்து சாகறே?” என்று புன்னகையோடு சொன்னார்.

“ஒருவேளை ஜெயலலிதா முதல்வர் ஆகிட்டா, அவங்க எப்படி சார் பத்து வாசகர்களுக்கு மாலை அணிவிக்க ஒப்புக்குவாங்க?” என்று கேட்டேன்.

“கலைஞர்தான் முதல்வர். அவர் ஒப்புக்குவார். நீ பயப்படறது போல ஜெயலலிதா முதல்வர் ஆகிட்டா, அவங்க கிட்டே இந்தப் போட்டி விஷயத்தைச் சொல்லுவோம். அவங்க ஒப்புக்கிட்டா சரி; ஆனா, அவங்க கண்டிப்பா ஒப்புக்கமாட்டாங்க. நாம பத்திரிகையிலே எழுதிடுவோம்... முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தப் போட்டி பற்றிச் சொன்னோம்; அவங்க ஒப்புக்க மறுத்துட்டாங்க. ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவங்க கொடுக்குற மரியாதை இவ்வளவுதான்னு எழுதி, நம்ம வருத்தத்தை வாசகர்கள் கிட்டேயே பகிர்ந்துக்குவோம்!” என்றார்.

ஆனால், சாவி சார் நம்பியபடியேதான் நடந்தது. கலைஞரே முதல்வர் ஆனார். அடுத்து நாரத கான சபாவில் நடந்த ஒரு பெரிய விழாவில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வாசகர்களுக்குக் கலைஞர் மாலை அணிவித்துக் கௌரவித்தார்.

சில வருடங்களுக்குப் பின்பு ஜெயலலிதா முதல்வராக ஆனார். அவரது ஆட்சியில்தான், சாவி அட்டைப்படத்தில் ஒரு ஜோக் வெளியிட்டதற்காக, படமும் ஜோக்கும் ஆபாசமாக இருந்தது என்று மகளிர் அமைப்புகள் புகார் கொடுத்ததன்பேரில், சாவி சார், நான், பிரஸ் மணி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டோம். இந்தச் சம்பவத்தை விரிவாக முன்பு எழுதிய ஞாபகம்.

அந்தச் சந்தர்ப்பத்தில்தான், அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில்தான் கலைஞருடன் நெருக்கமாகச் சற்று நேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, “என்ன தம்பி, கைதுன்னதும் பயந்துட்டீங்களா? பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜம். ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க அய்யாவும் (சாவி) நீங்களும் எந்தப் பிரச்னையும் இல்லாம வெளியே வரலாம். நான் பார்த்துக்கறேன்!” என்றார் கலைஞர், என் தோளில் கைவைத்து ஆறுதல் படுத்தும் விதமாக.

பின்பு, சூழ்நிலையைக் கலகலப்பாக்கும்பொருட்டு, அந்த ஜோக்கை அட்டைப் படத்தில் போட்டது குறித்துப் பேசினார். முதலிரவு அறையில் கணவன் அமர்ந்திருக்க, அவனுக்கு ஒரு சொம்பில் பால் எடுத்து வருகிறாள் மனைவி. அவள் முழு நிர்வாணமாக இருக்கிறாள். அதிர்ச்சியாகிற கணவனைப் பார்த்து, “உங்களுக்கு ஆடையில்லாத பால்தான் பிடிக்கும்னு அம்மா சொன்னாங்க” என்கிறாள். அதுதான் ஜோக்! படத்தில், பெண்ணின் முதுகுப்புறத்தைதான் வரைந்திருந்தார் ஓவியர் ஜெயராஜ்.

ஆசிரியர் சாவி வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், சாவி அட்டைப் படத்தில் நான் வெளியிட்ட ஜோக் இது. மூன்று மாத காலம் அமெரிக்காவில் இருந்துவிட்டு, மேற்படி சாவி இதழ் வெளியான இரண்டாவது நாள், சனிக்கிழமையன்று சென்னைக்கு வந்துவிட்டார் சாவி. அன்றைய தினமே சாயந்திரம் நாங்கள் கைது.

“எனக்குத் தெரியாது. நான் இந்த அட்டைப்படத்திற்குப் பொறுப்பில்லை. என் கவனம் இல்லாமல், நான் ஊரில் இல்லாதபோது சாவி பொறுப்பாசிரியர் செய்த வேலை இது” என்று என்னைக் கழற்றிவிடவில்லை சாவி சார். சாயந்திரம் சாவி சார் வீட்டின் முன் வந்து சாவி இதழ்களைக் கிழித்துப் போட்டு, சாவி சாரை ஏக வசனத்தில் கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்த மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்களை உள்ளே அழைத்து, மன்னிப்புக் கேட்டார் சாவி.

“அதெல்லாம் முடியாது! வெளியே வந்து அத்தனை பேரிடமும் மன்னிப்புக் கேள்” என்று வெளியே இருந்தவர்கள் கோஷம் இட்டார்கள். அதன்படி சாவி சார் வெளியே வந்து, “அது ஒரு சாதாரண ஜோக்தான். அதில் எந்த ஆபாசமும் எனக்குத் தெரியவில்லை. வெகுளித்தனமாக உள்ள மனைவியைப் பற்றிய ஜோக் அது. அதில் உள்ள நகைச்சுவைதான் எனக்குப் பட்டது. ஆனால், உங்களுக்கு அது ஆபாசமாகத் தெரிந்தால், உங்கள் மனதை அது புண்படுத்தியிருந்தால், உங்கள் அத்தனை பேரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கைகூப்பி மன்னிப்புக் கேட்டார் சாவி.

பிறகு அவர்கள் கலைந்து சென்றார்கள். இது நடந்தது மாலை 4 மணிக்கு. எங்களைக் கைது செய்து அழைத்துப் போனது 5:30 மணிக்கு. கலைஞர் எங்களை வந்து பார்த்தது இரவு 12:30 மணிக்கு.

முதல்வராக இருந்த சமயத்திலும் சரி, கட்சித் தலைவராக மட்டுமே இருந்த சமயத்திலும் சரி, பலமுறை சாவி சார் வீட்டுக்கு வந்திருக்கிறார் கலைஞர். போனிலும் பலமுறை என்னோடு பேசியிருக்கிறார். சாவி சாரைக் கேட்டு போன் செய்வார். சாவி சார் வந்து பேசும் வரையில், அந்த வார இதழில் உள்ள சிறப்புக்கள், லே-அவுட், தலைப்பை வேறு விதமாக வைத்திருக்கலாம், படத்தை இன்னும் சற்றுச் சின்னதாகப் பிரசுரித்திருக்கலாம் போன்ற ஆலோசனைகளை தன்னுடைய அபிப்ராயமாக என்னிடம் சொல்வார். அத்தனையும் சரியாகவே இருக்கும். இத்தனைப் பணிகளுக்கு நடுவிலும் எப்படி இவரால் ஒரு பத்திரிகையை முழுமையாகப் படித்துக் கருத்துச் சொல்ல முடிகிறது என்று எனக்கு வியப்பாக இருக்கும்.

‘சின்னச் சின்ன சந்தோஷங்கள்’ என்னும் தலைப்பில், வாசகர்களின் விருப்பங்களைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்து சாவியில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். அப்போது பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீப்ரியாவைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஒரு வாசகர் கேட்டார். கவிஞர் வைரமுத்துவுடன் உரையாடி, ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினார். அந்த வகையில் கலைஞர் கருணாநிதியுடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு வாசகர் விரும்பினார். அவர் மாம்பலம் ஸ்டேஷன் ரோடில் படக் கடை வைத்திருந்தார். தீவிர தி.மு.க. தொண்டர்.

கலைஞர் தினமும் காலையில் அறிவாலயத்தில் வாக்கிங் செல்வதை அப்போது வழக்கமாக வைத்திருந்தார். சாவி போட்டோகிராபர் ராதாகிருஷ்ணனோடு (ராகி) அந்த வாசகரை அனுப்பி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, கலைஞர் வாக் போகும்போது பார்த்துப் பேசி, அவரோடு அந்த வாசகரை நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்து வந்துவிடும்படி சொன்னேன். சாவி என்றால் கலைஞர் மறுக்காமல் ஒப்புக் கொள்வார் என்று நம்பினேன். அப்படியே கலைஞர் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொள்ள, அவர் பக்கத்தில் அந்த வாசகரை நிற்க வைத்து வெற்றிகரமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் ராதாகிருஷ்ணன். அந்தப் படம் சாவி பத்திரிகையிலும் பிரசுரமாகியது.

சில மாதங்களுக்கு முன், கட்டுரையாசிரியர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது) என்னைத் தொடர்பு கொண்டு, தான் சில கைது நடவடிக்கைகள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டு இருப்பதாகவும், சாவி கைது பற்றியும், அன்றைய தினம் என்ன நடந்தது என்றும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே சொன்னேன். பின்பு, “என்னைக் கேட்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது? என் மொபைல் நம்பர் எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டேன்.

“தலைவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தேன். அன்றைக்கு அவர் வந்து, ஸ்டேஷனில் சாவி சாரைப் பார்த்துப் பேசியது பற்றியெல்லாம் சொன்னார். பின்பு, ‘இன்னும் விரிவாக இது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட ரவிபிரகாஷ் இப்போது ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டால் மேலும் விவரம் கிடைக்கலாம்’ என்று சொன்னார். அதன்படி விகடனைத் தொடர்புகொண்டு உங்கள் மொபைல் எண்ணைப் பெற்றேன்” என்றார் அவர்.

எனக்கு இது மிக மிக ஆச்சரியமாக இருந்தது. மிகச் சாதாரணனான என் பெயரை நினைவு வைத்துக்கொண்டு கலைஞர் இப்படிச் சொல்லியிருப்பாரா என்று என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. என்றாலும், உடனேயே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு கலைஞரைச் சென்று சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், சந்திக்கவில்லை.

எனக்கு அப்பாயின்ட்மென்ட் தருவாரோ, மாட்டாரோ என்கிற ஐயமில்லை. பழைய நிகழ்ச்சிகளை ஞாபகமூட்டிக் கடிதம் அனுப்பினால், கண்டிப்பாக என்னை அழைத்துப் பேசுவார் கலைஞர். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த முதிய வயதிலும் சோர்விலாது, சுறுசுறுப்புடன் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அவருடன் செலவிடும் சில நிமிடங்கள் எனக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜியைக் கொடுத்து, இந்த ஜென்மம் முழுக்க நான் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

ஆனால், எந்த முக்கியக் காரணமும் இன்றி, சும்மா போய்ச் சந்தித்து, அவரது பொன்னான நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

“கலைஞர் என்றதும் உங்களுக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வருவது என்ன?” என்று ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு சாவி சொன்ன பதில்:

‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது’ என்னும் திருக்குறள்.

சத்தியமான வார்த்தை!

***
உண்மை பேசுவதில் ஒரு சௌகரியம் என்னவென்றால், எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

பாராட்டுகிறார் பாக்கியம் ராமசாமி!

திப்புக்குரிய நகைச்சுவை எழுத்தாளர், பத்திரிகையாளர், நண்பர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்களிடமிருந்து வந்துள்ள கடிதம்...

ன்பார்ந்த நண்பர் திரு.ரவிபிரகாஷுக்கு,

ஆசிகள்.
அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு பிரமுகருக்கு விருது அளித்து கௌரவித்து வருவது உங்களுக்குத் தெரியும். இந்த ஆண்டு, கூடுதலாக ஐந்து நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு ஒரு சிறு அன்புப் பரிசு வழங்குவதென்று தீர்மானித்தோம்.

சென்ற ஆண்டு பத்திரிகைகளில் அதிகம் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதிய ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா ரூ.
250 பரிசு வழங்குவதென்று முடிவு செய்தோம். ஆனால், இப்படி ஐந்து பேரைத் தேர்ந்தெடுக்கும் பணி மலைப்புக்குரியதாகி, எங்கள் வலைத் தளம் கவலைத் தளமாக ஆகிவிட்டது. தக்க சமயத்தில் தங்கள் வலைப்பூ வாசகர்கள் மூலம் எங்கள் அறக்கட்டளையின் பிரச்னையை அறவே தீர்த்து வைத்தீர்கள்.

போட்டிக்குரிய
30 நகைச்சுவைத் துணுக்குகளை உங்கள் ‘என் டயரி’ வலைப்பூவில் பிரசுரித்தீர்கள். அவற்றைப் படித்து ஆராய்ந்து, சிறந்த ஐந்தை உங்கள் வலைப்பூ வாசகர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர். இந்த நகைச்சுவைப் பணிக்காக உங்களின் ‘என் டயரி’ வலைப்பூ வாசகர்களுக்கு எங்கள் அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை மகிழ்ச்சியையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

வெற்றி பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்களுக்குரிய பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த ஆண்டு, ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி, நகைச்சுவை விருது அளிப்பதென்று அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் அனுப்பியுள்ளேன். நீங்களும், உங்கள் வலைப்பூ வாசகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,

பாக்கியம் ராமசாமி,
அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை.

மேற்படி விழாவில் பரிசு பெறும் ஐந்து நகைச்சுவை எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் கலந்துகொண்டு, தங்கள் ரசனைக்கேற்ப முதல் ஐந்து பேரை வரிசைப்படுத்திப் பின்னூட்டம் அனுப்பிய வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி விழா அழைப்பிதழை இங்கே பதிவிட்டுள்ளேன். என் வலைப்பூ வாசகர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன்.

இந்தப் போட்டியில், முதல் ஐந்து பேரை அதிகமான எண்ணிக்கையில் சரியாகக் குறிப்பிட்டு, முதலாவதாகப் பின்னூட்டம் அனுப்பியவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வி.ராஜசேகரன். அவர் உடனே என்னை இ-மெயிலில் தொடர்பு கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து, புகைப்படமும் முகவரியும் அனுப்பியிருந்தார். அவருக்கான புத்தகப் பரிசு (முயற்சி திருவினையாக்கும்) அப்போதே, உடனேயே அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.ராஜசேகரனின் விருப்பத்தின் பேரில் அவரது புகைப்படத்தையும் இங்கே பதிவிட்டுள்ளேன்.

அதேபோல், சமீபத்தில் நடத்திய போட்டி, ‘ஏ.எம்.ரவிவர்மா’ என்ற பெயரில் உள்ள சிறப்பு என்ன என்பதாகும். ஆங்கிலத்தில் அந்தப் பெயரை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் படித்தால் பெயர் மாறாமல் இருக்கும் பாலிண்ட்ரோம் வகையைச் சேர்ந்த பெயர் அது என்பதே அதன் சிறப்பு. இதைச் சரியாகவும் முதலாவதாகவும் எழுதிய ‘அன்புடன் அருணா’விடமிருந்து நேற்றைய சனிக்கிழமையன்று அவரது முகவரியைத் தெரிவித்து இ-மெயில் கிடைத்தது. அவருக்குரிய புத்தகப் பரிசான ‘ஏடாகூடக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பதிவை முடிக்கும் முன், ஒரு புதிர்...

ஒரு அடுக்கில் பத்து பொற்காசுகள் வீதம், வரிசையாக பத்து அடுக்குகள் உள்ளன. மொத்தம் 100 பொற்காசுகள்.

ஒரே ஒரு அடுக்கைத் தவிர, மற்ற ஒன்பது அடுக்குகளில் உள்ள எல்லா பொற்காசுகளுமே தலா 10 கிராம் எடை கொண்டவை. அந்த ஒரே ஒரு அடுக்கில் உள்ள பத்து பொற்காசுகள் மட்டும் தலா 11 கிராம் எடை கொண்டவை.

நீங்கள் தராசை உபயோகித்து ஒரே ஒரு முறைதான் எடை போட்டுப் பார்க்க வேண்டும். அதிகமான எடை கொண்ட பொற்காசுகள் உள்ள அடுக்கு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சவாலுக்குத் தயாரா?

உடனே உங்கள் விடைகளைப் பின்னூட்டமாக அனுப்புங்கள். முதலில் வரும் சரியான விடைக்கு எனது ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

***
உன்னிப்பாகக் கவனியுங்கள்... வாய்ப்பு எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும்!

அசகாய சுட்டிகள்!

புத்தகப் பரிசு வழங்கி ரொம்ப நாளாகிறது.

‘கிழிஞ்சுது கிருஷ்ணகிரி! பதிவு எழுதியே ரொம்ப நாளாகுது!’ என்கிறீர்களா? அதுவும் சர்த்தான்! அலுவலக வேலைப் பளு, நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம் போன்ற விசேஷங்களுக்காக அடிக்கடி வெளியூர் போகவேண்டி வந்தது போன்ற காரணங்களால் பதிவு எழுத முடியவில்லை. மற்றவர்களின் பதிவுகளையும் பார்க்க முடியவில்லை.

திருமண நிகழ்ச்சிகளுக்காக மட்டுமின்றி, சில நாட்களுக்கு முன்னால் ‘சுட்டி விகடன்’ நிகழ்ச்சிக்காகவும் ஒருமுறை திருச்சி சென்று வந்தேன். சுட்டி விகடனில் மாணவ நிருபர்களாகத் தேர்வானவர்களுக்குச் சிறுகதை எழுதும் சூட்சுமம் பற்றி அந்த விழாவில் நான் பேசினேன். ஆண்டுக்கு ஒருமுறை சென்னையிலும் திருச்சியிலுமாக நடைபெறும் இந்த சுட்டி விழாவில் நான் கலந்துகொண்டு பேசுவது இது மூன்றாவது முறை.

முந்தின இரண்டு ஆண்டுகளைவிட, இந்த முறை சுட்டிகள் என்னை ரொம்பவே மிரட்டிவிட்டார்கள். அடேங்கப்பா..! எத்தனைப் புத்திசாலித்தனம்... எவ்வளவு கற்பனை... எத்தனை ஆற்றல்! இளம் தலைமுறையினரை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு நாம் எதுவும் புதிதாகக் கற்றுத் தரவேண்டிய அவசியமில்லை. உண்மையில், அவர்களின் வேகத்துக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது என்பதே உண்மை. அவர்களின் போக்கில் குறுக்கிடாமல், அவர்களின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடாமல், சரியான பாதையில் அவர்களைத் திசை திருப்பிவிடுவதே நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய உபகாரம். சுட்டி விழாவில் நான் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மை இது!

ஓர் உதாரணம் சொல்கிறேன். “நம்மைச் சுற்றி நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும், அதைக்கொண்டு ஒரு சிறுகதை எழுதிவிடலாம். உதாரணமாக, வீட்டில் நம் அம்மா காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு, பால் கவர் வாங்கி வந்து காபி போட்டு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பி... என நாள் முழுக்க அம்மா செய்கிற காரியங்களை வரிசையாக எழுதிவிட்டு, அன்றைக்குக் காலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி வந்து வீட்டில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் அப்பாவிடம் விசாரிக்கும்போது, ‘உங்க வொய்ஃப் வேலைக்குப் போறாங்களா?’ என்று கேட்கையில், ‘இல்ல... வேலை செய்யல! சும்மாதான் இருக்கா. ஹவுஸ் வொய்ஃப்!’ என்று சொல்வதாகக் கதையை முடிக்கலாம்” என்று பேசியபோது, அதில் உள்ள மெஸேஜைப் புரிந்துகொண்டு பலமாகக் கையொலி எழுப்பிக் குதூகலித்தார்கள் குழந்தைகள்.

இன்னொன்று... நம் பாடங்களில் படித்ததைக் கொண்டும் சிறுகதை எழுதமுடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு கதை சொன்னேன். ஒரு நிறுவனத்தில் நடக்கும் இன்டர்வியூவில் கலந்துகொள்ளும் ஒருவன், அவர்கள் கேட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கெல்லாம் டாண் டாணென்று பதில் சொல்லி அசத்துகிறான். அவன் வீட்டில் இருக்கும்போது, ஒரு கூரியர் ஆசாமி வந்து, அந்த ஃப்ளாட்டில் உள்ள ஒருவரைப் பற்றி விசாரிக்க, தெரியவில்லை என விழிக்கிறான் என்பதாக ஒரு கதை எழுதலாம் என்று சொன்னேன். உடனே ஒரு மாணவன் எழுந்து, “அதாவது சார், ஊர் உலக விஷயமெல்லாம் தெரிஞ்சிருக்கிற ஒருத்தனுக்குத் தன்னைச் சுற்றி நடக்குறது தெரியலே என்கிற மெசேஜ் இதுல இருக்கு, இல்லியா சார்?” என்று கேட்டான். “பக்கத்து ஃப்ளாட்டுல இருக்கிறவங்களைக்கூட தெரிஞ்சுக்க முடியாம, அடுத்தவங்களைப் பத்தின அக்கறையோ அனுசரணையோ இல்லாம, ஒவ்வொரு மனிதனும் தனித் தனித் தீவாயிட்டான்கிற கருத்து இதுல இருக்கு சார்!” என்றான் இன்னொரு மாணவன்.

இதையெல்லாம்விட என்னை அசத்தியது அவர்களின் கல்வியறிவு. மேற்படி கதையில், இன்டர்வியூவில் கேள்விகள் கேட்கிற இடத்தில் நானே சில கேள்விகளை எழுப்பினேன். ‘ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் யார்?’, ‘முதல் உலகப் போரின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் யார்?’ என்று இன்டர்வியூவில் கேள்விகள் கேட்கப்படுவதாகக் கதை சொன்னபோதே, அந்தக் குறிப்பிட்ட கேள்விகளுக்குச் சுட்டிகள் டாண் டாணென்று சரியான பதில்களைச் சொல்லி அசத்திவிட்டார்கள். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீன் மூன்; முதல் உலகப் போரின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன். சுட்டிகளிடம் பேசுவதற்காக நான் இந்தக் கேள்வி பதில்களைத் தயார் செய்துகொண்டு போயிருந்தேன். ஆனால், நான் கேட்ட அத்தனைப் பொது அறிவுக் கேள்விகளுக்கும் அந்தக் குழந்தைகள் சரியான பதில்களைச் சொன்னதும் நான் ஆடிப் போனேன். பிரமிப்பின் உச்சியைத் தொட்டேன்.

இன்றைய குழந்தைகள் மகா புத்திசாலிகள்! அவர்களைச் சரியான முறையில் வழிநடத்துவது மட்டும்தான் நம் வேலை!

பொதுவாகவே, ஏதேனும் வித்தியாசமாக ஒரு விஷயத்தைப் பார்த்தால், உடனே அதில் உள்ள சிறப்பம்சம் என்ன தெரியுமா என்று என் குழந்தைகளிடம் கேட்டு, அவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டுவது என் வழக்கம்.

சமீபத்தில், என் பெயருக்கு ‘முதன்மைப் பொறுப்பாசிரியர், சக்திவிகடன்’ என முகவரியிட்டு ஒரு கவர் வந்தது. வேறொன்றுமில்லை; அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் இருந்து வந்திருந்த விபூதி, குங்குமப் பிரசாதம்தான் அது! அந்த உள்ளடக்கப் பொருளையும் கவரையும் பார்த்ததும், எனக்கு அதன் முரண்பாடு சுவாரசியமூட்டியது. அந்த கவரை வீட்டுக்குக் கொண்டு வந்து, என் குழந்தைகளிடம் காட்டி (காலேஜ் போகிற என் மகளும், ப்ளஸ் ஒன் படிக்கிற என் மகனும் இன்னும் எனக்குக் குழந்தைகளாகவே தெரிகிறார்கள். என்ன செய்ய?) “இதைப் பார்த்ததும் சட்டுனு உங்களுக்கு என்ன தோணுது?” என்று கேட்டேன். சற்றே யோசித்துவிட்டுப் பின்பு புரிந்துகொண்டு சிரித்தார்கள். வேறொன்றுமில்லை. கவரின் மேல் ஒட்டப்பட்டிருந்தது பெரியார் ஸ்டாம்ப்.

அதேபோல, நேற்றைக்கு என் வீட்டு வாசலில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் முகபடாமில் (முகபடாம் என்பது யானையின் நெற்றியில் படர்ந்திருக்கும் அலங்காரப் பட்டை. திருச்சூர் ஆடிப்பூர விழாவில் கலந்துகொள்ளும் யானைகளுக்கு முகபடாம் இருப்பதைப் பார்த்திருக்கலாம். சில பைக்குகளுக்கும் ஹெட்லைட்டுக்கு மேலே முகபடாம் இருப்பதுண்டு.) அந்த வண்டிக்குச் சொந்தக்காரனான இளைஞனின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ஏ.எம்.ரவிவர்மா என்கிற அந்தப் பெயரைப் பார்த்ததுமே, அதில் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் இருப்பதாக என் மனசுக்குத் தோன்றியது. கொஞ்சம் உன்னித்து அதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ‘அட!’ என்று வியந்துபோனேன்.

உடனே, என் மகளை அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்து அதைக் காண்பித்து, “அந்தப் பெயரில் உள்ள சிறப்பம்சம் என்னவென்று தெரிகிறதா?” என்று கேட்டேன். சில நிமிடங்கள் அதைப் பார்த்து யோசித்தவள், ‘அட! ஆமா..!’ என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டாள். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

‘அதெல்லாம் சரி! புத்தகப் பரிசு வழங்கி ரொம்ப நாளாகிறது என்று ஆரம்பித்த ஜோரைப் பார்த்தால், புதிதாக ஏதாவது போட்டி வைத்துப் பரிசு கொடுக்கப் போகிறீர்களோ என்று நினைத்தோம். அதைப் பற்றிப் பேச்சே எடுக்காமல், எங்கோ போய்விட்டீர்களே?’ என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது.

இதோ போட்டி... பைக்கில் எழுதப்பட்டிருந்த ஏ.எம்.ரவிவர்மா என்ற பெயரில் அப்படி என்ன சிறப்பு? உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? உடனே உங்கள் பதில்களை எனக்குப் பின்னூட்டம் இடுங்கள். முதலில் வரும் சரியான பதிலுக்கு எனது ‘ஏடாகூடக் கதைகள்’ சிறுகதைத் தொகுதியைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன். உங்கள் பின்னூட்டங்களை வருகிற திங்கள் கிழமை 12-ம் தேதியன்று இரவில்தான் பதிவிடப்போகிறேன் என்பதால், அதுவரை உங்கள் விடைகளை அனுப்பிக்கொண்டு இருக்கலாம்.

செவ்வாய்க்கிழமை காலையில் பின்னூட்டங்களைப் பார்த்து, சரியான விடையை முதலில் எழுதியவர் யாரோ, அவர் தன் இந்திய அஞ்சல் முகவரியை உடனடியாக என் இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) அனுப்பிவைத்தால், அடுத்த இரண்டே நாளில் ‘ஏடாகூடக் கதைகள்’ புத்தகம் அவர் கைக்குக் கிடைக்கும்.

***

ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை; ஒவ்வொரு மேதையும் ஒரு குழந்தை!

ஈன்றபொழுதின்...

ன் முதல் குழந்தை ஷைலஜா பிறந்தபோதும், அடுத்ததாக மகன் ரஜ்னீஷ் பிறந்தபோதும் எனக்கு உண்டான சந்தோஷத்துக்கு ஈடான சந்தோஷம் வேறில்லை என்றுதான் நான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன், அதே அளவிலான சந்தோஷ மனநிலை எனக்கு வாய்த்தது.

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாயி’ன் மன நிலை அது.

எத்திராஜ் கல்லூரியில், விஸ்காம் படிப்பில் மகளைச் சேர்த்த தினம் அது.

ஒரு வாரத்துக்கு முன் நுழைவுத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டாள் என் மகள். மறுநாள் நோட்டீஸ் போர்டில், தேர்வானவர்கள் பட்டியலில் அவள் பெயரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் கல்லூரிக்குச் சென்று பணம் கட்டிவிட்டு வந்தபோது, மிக மிகச் சந்தோஷமாக இருந்தது.

நேற்றுத்தான் பிறந்த மாதிரி இருக்கிறது; அதற்குள் கல்லூரியைத் தொட்டுவிட்டாள் என் மகள்.

அவள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு முன்பாக, ஆனந்தவிகடனில் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக 1973-ம் வருடத்திய இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, எத்திராஜ் கல்லூரி பற்றிய குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது. ‘எத்திராஜ் கல்லூரி பற்றி உனக்கு என்ன தெரியும்?’ என்று ஒருக்கால் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டால், இந்தக் குறிப்பைச் சொல்லி அவர்களை அசர வைக்கும்படி என் மகளிடம் சொல்லியிருந்தேன். அப்படி எதுவும் கேள்வி வரவில்லை என்றாள்.

சரி, அப்படி என்ன குறிப்பு அது?

1973-ம் ஆண்டுதான் எத்திராஜ் கல்லூரி வெள்ளிவிழா கொண்டாடியது. அதாவது, 1948-ல் தொடங்கப்பட்ட கல்லூரி அது. வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டவர் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி.

அந்த விழா மேடையில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு கவரை இந்திரா காந்தியிடம் தந்திருக்கிறார். இந்திரா அதை வாங்கி, எதிரே இருந்த டீபாய் மீது வைக்க, ஃபேன் காற்றில் அது அங்கிருந்து பறந்துபோய் எங்கோ விழுந்துவிட்டது. பதறிப்போன இந்திரா, அது எங்கே என்று சுற்றுமுற்றும் தேட, அது கண்ணிலேயே படவில்லை. யாராவது அதை எடுத்துத் தருவார்களா என்று இந்திராவின் கண்கள் அலைபாய்ந்திருக்கின்றன. ஆனால், இந்த நிகழ்வை வேறு யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை. முன் வரிசையில் இருந்த புகைப்படக்காரர்களும் மும்முரமாகப் படம் பிடிப்பதில் ஈடுபட்டிருந்தார்களே தவிர, கவர் பறந்து போனதை ஒருவருமே பார்க்கவில்லை. ‘சரி, போகட்டும். என்ன கவரோ...’ என்று விட்டுவிட்டார் இந்திரா.

அடுத்துப் பேச எழுந்த அருட்செல்வர் மகாலிங்கம், “... இப்போது ரூ.10,000 நன்கொடையை நமது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வழங்குவார்...” என்று பேச்சினூடே மைக்கில் அறிவித்தபோதுதான், அவர் தன்னிடம் கொடுத்தது அந்த 10,000 ரூபாய்க்கான செக்தான் என்று புரிந்தது இந்திராவுக்கு.

பிறகு, பரபரப்பாக மேடையில் தேடி, அந்த கவரைக் கண்டுபிடித்து எடுத்து வந்து இந்திராவிடம் கொடுக்க, அவர் வாங்கி எத்திராஜ் கல்லூரிக்கு வழங்கினார்.

இந்த விஷயம்தான் சிறு குறிப்பாக விகடனில் வெளியாகியிருந்தது.

தவிர, எத்திராஜ் கல்லூரி தொடர்பாக வேறு ஒரு சுவாரஸ்ய தகவலையும் கேள்விப்பட்டேன்.

ந்தக் கால சூப்பர்ஸ்டார் ஏழிசை வேந்தன் எம்.கே.டி. பாகவதரைப் பற்றியும், மக்களிடம் அவருக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்கு பற்றியும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அவர் கைதானது பற்றியும், அவரோடு சேர்த்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைதானது பற்றியும், பின்னர் இருவரும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றது பற்றியும் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

இருவரும் சிறைத் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே அந்த வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களுக்காக வாதாடினார் ஒரு வழக்கறிஞர். தம்முடைய சாதுர்யமான வாதத் திறமையால், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்தார். இரண்டு ஆண்டு சிறைவாசம் முடிந்த நிலையில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தமக்காகத் திறமையாக வாதாடி விடுதலை வாங்கித் தந்த நன்றிக் கடனுக்காக, அந்த வழக்கறிஞரின் வீடு தேடிச் சென்று, ஒரு தங்கத் தட்டு நிறைய தங்கக் காசுகளை வைத்து, அவரிடம் நீட்டி, அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார் எம்.கே.டி. பாகவதர். ஆனால், வாங்க மறுத்துவிட்டார் அந்த வழக்கறிஞர். “உங்கள்மீது உள்ள அபிமானத்தால்தான் வாதாடினேனே தவிர, பொற்காசுகளுக்காக இல்லை” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அந்த வழக்கறிஞர்தான், எத்திராஜ் கல்லூரியை நிறுவிய எத்திராஜ முதலியார்.

சென்னையில் பல கல்லூரிகள் விஸ்காம் படிப்பு சொல்லித் தருகின்றன. டாப்-10 கல்லூரிகள் பற்றிய செய்திக் குறிப்பை ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ வெளியிட்டிருந்தது. அதில், விஸ்காம் படிப்பைப் போதிப்பதில் முதல் இடம் பிடித்திருந்த கல்லூரியாக எத்திராஜ் கல்லூரியைத்தான் சிறந்த கல்லூரியாக அது குறிப்பிட்டிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது.

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை
நற்கல்லூரியில் சேர்த்த தந்தை’யானேன்!

***
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் மட்டும் சிறந்த பெற்றோர் ஆகிவிட முடியாது. வீட்டில் பியானோ இருந்தால், பியானோ கலைஞராகிவிட முடியுமா?

அனும்மா

னுராதா ரமணன் மறைந்துவிட்டார் என்று கேள்விப் பட்டபோது நம்பவே முடியவில்லை. மலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களுக்கும் மேலாக இருந்திருக்கிறார். வேறு யாராவதாக இருந்தால், 'அடடா! இறந்துவிட்டாரா... பாவம், நல்ல மனிதர்!' என்று மாளாத வருத்தத்தோடு, அவரது மரணத்தை அங்கீகரித்திருப்போம். ஆனால், மருத்துவமனைக்குப் போய் வருவதையே ஏதோ உல்லாசப் பயணம் சென்று வருவதைப்போல உற்சாகமும் மகிழ்ச்சியுமாகப் பகிர்ந்துகொள்கிறவர் ஆயிற்றே அனுராதா ரமணன்!

எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் எழுதிப் புகழ்பெற்று இருந்தாலும், தன்னை மிகப் பரவலான அளவில் வெளிச்சமிட்டுக் காட்டியது, ஆனந்த விகடனில் வெளியான 'சிறை' சிறுகதைதான் என்று நன்றியோடு நினைவுகூர்வார் அனுராதா ரமணன். அது பின்னர் திரைப்படமாகவும் வெளியாகி, வெற்றிகரமாக ஓடியது.

கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு; இரு வாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் என ஏராளமான நாவல்களை எழுதியுள்ளவர் அனுராதா ரமணன். இவற்றில் பல திரைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன. பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் என இவரது கதைகள் மெகா சீரியல்களாகவும் வெளியாகியுள்ளன. 'ஒக பார்ய கதா' என்கிற இவரது தெலுங்குத் திரைப்படம், ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றது. 'நாவல்களின் ராணி' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருந்தபோதிலும், தான் பெரிய எழுத்தாளர் என்கிற கர்வமோ, பந்தாவோ அவரின் பேச்சில் துளியும் தொனிக்காது. நட்பு வட்டாரத்துக்கு அவர் எப்போதும் 'அனும்மா'.

ஓவியத்தில் நாட்டமும், நல்ல தேர்ச்சியும் உள்ளவர் அனுராதா ரமணன். சமீபத்தில் அவர் வரைந்த பெருமாள் படம், அவர் வீட்டுச் சுவரில் தரிசனம் தருகிறது. சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்து திறம்பட நடத்தியுள்ளார். சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. டிசம்பர் சீஸனின்போது, காமேஸ்வரி அய்யர் என்கிற பெயரில், விகடனில் சங்கீத விமர்சனக் கட்டுரைகள் எழுதியதும் இவர்தான்.

மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் பலர் இவரைத் தேடி வந்து, தங்கள் மனக் குறைகளைச் சொல்லி அழுவார்கள். அவர்களைத் தேற்றி, தைரியம் கொடுத்து, உற்சாகப்படுத்தி அனுப்பும் பணியையும் செய்துவந்தார். பலரின் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வழிகாட்டி உதவிய அனுராதா ரமணனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. அதில் பல வேதனைகளைச் சந்தித்தார். உடல் உபாதைகளும் ஏராளம். இதய நோய், சிறுநீரக நோய், ரத்த அழுத்தம், டயாபடீஸ், பக்கவாதம் என இவரைத் தாக்காத நோய்களே இல்லை. ஆனால், அத்தனைக்கும் ஈடுகொடுத்து, எழுத்துப் பணியையும் தொடர்ந்துகொண்டு, கடைசி வரையில் கலகலவென்று சிரித்துப் பேசிக்கொண்டு, நர்ஸ்களிடம் ஜோக் அடித்துச் சிரித்துக்கொண்டு இருந்த பெண்மணி. கலங்கிய தன் மூத்த மகளைத் தட்டிக்கொடுத்துப் புன்னகைத்தபடியே அனுராதா ரமணன் பேசிய கடைசி வார்த்தைகள்... ''தைரியமா இரு! பி பாஸிட்டிவ்!''

தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வந்த அவர், இறந்த பிறகும் தன் கண்களைத் தானமாக வழங்கி, இருவருக்கு ஒளியூட்டியிருக்கிறார். தன் மருத்துவமனை அனுபவத்தைச் சிரிக்கச் சிரிக்க எழுதிய அனும்மாவின் ஆன்மா, இந்தக் கடைசி அனுபவத்தையும் எப்படி நகைச்சுவையோடு எழுதலாம் என்றுதான் இப்போது யோசித்துக்கொண்டு இருக்கும்!

(ஆனந்த விகடன் 26.5.10 இதழில் வெளியான கட்டுரை.)

அனும்மாவிடம் ஒரு கேள்வி!

ன் பெரியப்பாவின் மரணத்துக்காக பெங்களூர் சென்றுவிட்டுச் சென்னை திரும்புவதற்காக பெங்களூர் கன்டோன்மென்ட் ஸ்டேஷனில் காத்திருந்த சமயத்தில், நண்பர் ராஜாவிடமிருந்து வந்த தொலைபேசிச் செய்தி என்னைத் தூக்கிவாரிப் போடச் செய்தது.

“அனுராதா ரமணன் இறந்துவிட்டார்..!”

என்னால் நம்ப முடியவில்லை. அவர் மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று தெரியும். ஆனால், மருத்துவமனைகளுக்குப் போய் வருவது அவருக்கு ஊட்டி, கொடைக்கானல் போய் வருவது மாதிரிதானே! எனவே, அதை ஒரு பெரிய விஷயமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒவ்வொரு முறையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குணமாகி வீடு திரும்பியதும் எனக்குப் போன் செய்வார். தமது உடல் உபாதைகளையும், எடுத்துக்கொண்ட சிகிச்சைகளையும், மருத்துவமனை அனுபவங்களையும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்வார். கேட்கும்போதே பகீர் என்றிருக்கும். அதே சமயம், அதைப் பற்றிய அனுராதா ரமணனின் வர்ணிப்பு என்னைச் சிரிக்கத் தூண்டும். சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில், “என்னங்க... கேட்கவே பயங்கரமா இருக்கே! இதை இப்படித் தமாஷா சொல்றீங்களே?” என்றால், அதற்கும் கலகலவென்று சிரிப்பார் அனுராதா ரமணன். “அவ்ளோதான் ரவி, வாழ்க்கை! பயந்து உட்கார்ந்துட்டிருந்தா மட்டும் சனியன் நம்மை விட்டுப் போயிடுமா சொல்லுங்க?” என்பார்.

தான் பெரிய எழுத்தாளர் என்கிற பந்தாவோ, கர்வமோ சிறிதும் இல்லாதவர் அனு. திடீரென்று போன் செய்வார். “பிஸியா இருக்கீங்களா ரவி? ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்லை. சும்மா பண்ணணும்னு தோணித்து. வேணா அப்புறமா போன் பண்றேன்” என்பார். “ஒரு பிஸியும் இல்லை. சொல்லுங்க” என்பேன். அதற்கடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல், தன் மகள்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தது பற்றியோ, தன் பேரக் குழந்தைகளின் சுட்டித்தனங்களைப் பற்றியோ, தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்ற அனுபவம் பற்றியோ, ஜெயேந்திரர் பற்றியோ, வீட்டில் அடை செய்தது பற்றியோ, தஞ்சாவூரில் ரங்கோலிக் கோலப் போட்டியைப் பார்வையிடச் சென்றிருந்தது பற்றியோ, ஷாப்பிங் போய் புடவைகள் வாங்கிய அனுபவம் பற்றியோ, சுற்றுலாப் பொருட்காட்சிக்குப் போய் வந்தது பற்றியோ, ஒரே நாளில் நாலைந்து கச்சேரிகளை அட்டெண்ட் செய்த சாமர்த்தியம் பற்றியோ, கவுன்சலிங்குக்கு வந்த ஒரு பெண் சொன்ன உருக்கமான கதை பற்றியோ, தன் தாத்தா பற்றியோ, (அனுராதா ரமணனின் தாத்தா ஆர்.பாலசுப்பிரமணியன் அந்தக் காலத் திரைப் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். பெரிய மீசையும், ஆகிருதியான உடம்புமாக பீமசேனன் போல இருப்பார் என்று அனுராதா அவரைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்), வீட்டில் மணித்தக்காளி வத்தக் குழம்பு செய்தது பற்றியோ, தனது சின்ன வயது அனுபவங்கள் பற்றியோ... சகலமான விஷயங்களைப் பற்றியும் கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். ரொம்ப வெகுளியான மனுஷி. இன்னாரிடம் இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்பதே தெரியாமல் சகலத்தையும் ஓட்டை வாயாக இப்படிக் கொட்டிவிடுகிறாரே என்று நான் நினைப்பதுண்டு. ஒருவேளை, தன் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் மட்டும் அவர் பேசும் விதமே இப்படித்தானோ என்னவோ!

என் தந்தையாரும், தாயாரும் அனுராதா ரமணனின் எழுத்துக்குப் பரம ரசிகர்கள். இதை அனுராதாவிடம் ஒரு முறை பேச்சுவாக்கில் சொன்னபோது, மற்ற பெரிய எழுத்தாளர்கள் போன்று கெத்தாக, ‘அப்படியா! நைஸ்!’ என்றெல்லாம் பந்தாவாகச் சொல்லாமல், தன் மகிழ்ச்சியை வெள்ளந்தியாக வெளிப்படுத்தினார். அவரது சிறுகதைகள் அனைத்தும் மூன்று கனமான தொகுதிகளாக வந்திருந்தன. அந்த மூன்று புத்தகங்களையும் என் பெற்றோருக்குப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். அவை வந்த ஓரிரு மாதங்களுக்குள், அவற்றில் இருந்த மொத்தச் சிறுகதைகளையும் படித்துவிட்டார்கள் என் பெற்றோர்.

போன வருட நவம்பரில், ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருந்த ’நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு’ வரிசையில் வெளியிடுவதற்காக இவரிடம் ஒரு கதை கேட்டேன். அப்போது, இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகச் சிறந்த எழுத்தாளர், ‘நாவல்களின் ராணி’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்தவர், (இவரது பல நாவல்கள் திரைப்படமாகியுள்ளன; பல கதைகள் தொலைக்காட்சி மெகா சீரியல்கள் ஆகியுள்ளன). ஆனாலும், அந்தக் கர்வம் சிறிதும் தலைக்கு ஏறாமல், இப்போதுதான் அறிமுகமான புதிய எழுத்தாளர் போல மகிழ்ந்து, “அப்படியா! என் சிறுகதையா! நீங்க கேட்டதே எனக்குச் சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா எழுதித் தரேன், ரவி” என்றார். அடுத்த மூன்றே நாட்களில் அற்புதமான ஒரு சிறுகதையை எழுதித் தந்தார். அது ’இரவல் தொட்டில்’ என்னும் தலைப்பில், 18.11.09 தேதியிட்ட விகடன் இதழில் வெளியாயிற்று.

நேற்று எழுதத் தொடங்கிய புது எழுத்தாளருக்கும், தன் கதையைப் பத்திரிகையாளர்கள் சுருக்கினால், மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். சிலர், “எவ்வளவு குறைக்கணும்னு சொல்லுங்க. நானே குறைச்சுத் தரேன்” என்பார்கள். அது எழுத்தாளரின் உரிமை என்கின்ற போதிலும், ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்கு இது கடுப்பாக இருக்கும். “இங்கே வேலை செய்யறவங்க எல்லாம் என்ன சும்பனா? எங்கே எடிட் பண்ணிக் குறைக்கணும்னு கூடத் தெரியாமயா வந்து வேலை செய்துட்டிருக்கோம்?” என்று மனசில் வெறுப்பு மூளும். அனுராதா ரமணனைப் பொறுத்தமட்டில், அவரது கதையை எத்தனைச் சுருக்கினாலும் கோபப்படவே மாட்டார். சொல்லப்போனால், “நானே புதுசா ஒரு வாசகியா படிக்கிறப்போ, க்ரிஸ்ப்பா இருந்துது ரவி! எனக்கு வாய் மட்டுமில்லே, கையும் கொஞ்சம் நீளம். வளவளன்னு எழுதிக்கிட்டே போயிடுவேன். எழுத்துக்கு லகான் போடத் தெரியாது. நீங்க கரெக்டா எடிட் பண்ணி, வேண்டாத குப்பையெல்லாம் தூக்கியிருந்தீங்க. தேங்க்ஸ்!” என்று பாராட்டவும் செய்வார். “நானே ஒரு சில பத்திரிகைகளுக்கு ஆசிரியரா இருந்திருக்கேன்கிறதால, ஒரு பத்திரிகை ஆசிரியருடைய பொறுப்பு பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” என்பார்.

என் வலைப்பூக்களைத் தொடர்ந்து படித்துத் தன் அபிப்ராயங்களைச் சொல்வார். சில மாதங்களுக்கு முன் சில நல்ல வலைப்பூக்களைத் தனக்கு அறிமுகப் படுத்தும்படி கேட்டிருந்தார். நான் அதிகம் படிக்கும் ஏழெட்டு வலைப்பூக்களின் லின்க்கை அவருக்கு இ-மெயிலில் அனுப்பியிருந்தேன். கூடவே, “நீங்களே ஒரு பிளாக் தொடங்கி எழுதலாமே?” என்றேன். உடனே, பிளாக் ஆரம்பிப்பது எப்படி, அதற்கு ஏதாவது பணம் கட்ட வேண்டுமா என்று எல்லாவற்றையும் விசாரித்தார். “உங்க பிளாக் டிஸைன் நல்லாருக்கு ரவி” என்றார். “எனக்கு எதுவும் தெரியாது மேடம்! எல்லாம் என் பசங்க பண்ற வேலை. நான் வெறுமனே கம்போஸ் பண்ணி, போஸ்ட் பண்றதோட சரி! என் பையனையும் பெண்ணையும் உங்க வீட்டுக்கு ஒரு நாள் அழைச்சுட்டு வரேன். உங்க விருப்பப்படியே ஒரு பிளாக் ஆரம்பிச்சுக் கொடுக்கச் சொல்றேன்” என்றேன். “முதல்ல எழுத்துக்களைக் கம்போஸ் பண்ணி, எப்படி ஸேவ் பண்றதுன்னு கத்துக்கறேன். அப்புறம் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க” என்றார்.

சென்ற ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, என் மாமியார் இறந்த சில மணி நேரத்துக்குள், அனுராதா ரமணன் வழக்கம்போல் எனக்கு போன் செய்திருந்தார். கலகலப்பாக ஏதோ பேசத் தொடங்கிய அவர் பேச்சில் குறுக்கிட விரும்பாமல், மாமியார் இறந்த செய்தியைக் கடைசியில் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போல் பேசியிருப்பார். முடிக்கப்போகிற நேரத்தில் என் செல்போனில் சார்ஜ் தீர்ந்துபோய் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதை அத்தோடு மறந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து, மீண்டும் அனுராதா ரமணனிடமிருந்து போன். “என்ன ரவி, உங்க மாமியார் இறந்துட்டாங்களா? உங்க பிளாகைப் படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் அன்னிக்குப் பார்த்து வளவளன்னு என் சுய புராணத்தை அத்தனை நேரம் சொல்லிட்டிருந்தேனே... நீங்களாவது குறுக்கிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கக்கூடாதா? எனக்கு ரொம்ப கில்ட்டியா இருந்துது” என்று ஆதங்கப்பட்டார். “இல்லை மேடம்! நீங்க பேசும்போது எனக்குக் குறுக்கிடத் தோணலை. முடிக்கும்போது சொல்லிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள கட்டாயிடுச்சு!” என்றேன். அதன்பிறகு அவர் என் மனைவியிடம் செல்போனைக் கொடுக்கச் சொல்லி, ஒரு தாய் போன்று அத்தனைக் கரிசனமாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக்கொண்டு இருந்தார்.

சமையல் செய்வதில் அனுராதா ரமணன் எக்ஸ்பர்ட்! தனக்கு நெருக்கமான நண்பர்களையெல்லாம் ஒரு கெட்-டு-கெதர் போல அடிக்கடி தன் வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்குத் தன் கையால் சமைத்து, உணவு பரிமாறி மகிழ்வதில் அத்தனை ஆனந்தம் அவருக்கு. நவராத்திரி, புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் என்னைக் குடும்பத்தோடு தன் வீட்டுக்கு விருந்துண்ண வரும்படி அன்போடு அழைப்பார். “ஒருநாள் கண்டிப்பாக வருகிறேன், மேடம்!” என்று நானும் சொல்லிக்கொண்டு இருந்தேன். போன மாதமும் அவர் அப்படி அழைத்தார்.

சாவி சாரும் இப்படித்தான் எங்களை விருந்துக்கு அழைத்துக்கொண்டே இருந்தார். நானும் வரேன் சார், வரேன் சார் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது சார், “ஒரு நாள் போகலாம், ஒரு நாள் போகலாம்னு நினைச்சுக்கிட்டிருந்தா ஒருநாளும் போக முடியாது ரவி. என்னிக்குன்னு ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அப்பத்தான் உனக்குப் போகணும்னு தோணும்” என்று சொல்லி, சாவி சாரே ஒரு தேதியைக் குறிப்பிட்டு, ”அன்னிக்கு வரியா?” என்று கேட்டார். “சரி சார்” என்று ஒப்புக்கொண்டு, அன்றைக்குக் குடும்பத்தோடு அவர் வீட்டுக்குப் போனேன். எங்களை அழைத்துக்கொண்டு ஒரு ஸ்டார் ஓட்டலுக்குச் சென்றார். பலமான விருந்து அளித்தார். பின்னர் அவர் காரிலேயே அவர் வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர் என் குழந்தைகளுக்கு நிறைய ஃபாரின் சாக்லெட்டுகளையும், விளையாட்டுப் பொருள்களையும் பரிசளித்தார். தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைக் கழற்றி “என் ஞாபகார்த்தமா வெச்சுக்கோ” என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். நாங்கள் பேசிக்கொண்டு இருக்க, என் குழந்தைகள் அவர் வீட்டு கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தன. மாலை 3 மணியளவில் அவர் காரிலேயே பீச்சுக்குப் போனோம். ஒரு மணி நேரம் போல் அங்கிருந்துவிட்டுப் பின்னர் அவர் வீட்டுக்கு வந்தோம். பின்பு எங்களைத் தன் காரிலேயே எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதை அனுராதா ரமணனிடம் சொல்லி, “அது போல் நாம ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணிப்போம் மேடம்! அப்பத்தான் எனக்கும் வரத் தோணும்” என்றேன். அதற்குள் என் மனைவிக்கு அறுவைச் சிகிச்சை அது இது என்று நாட்கள் ஓடிவிட்டன. கடைசி வரைக்கும் அனுராதா ரமணன் கையால் அன்போடு பரிமாறி, சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை எங்களுக்கு.

எப்போதும் முழு மேக்கப்பில் காணப்படுவார் அனுராதா ரமணன். நாம் உற்சாகமாக இருக்கிறோம் என்பதைப் பிறருக்கு வெளிப்படுத்துவது மட்டுமின்றி, எதிராளியையும் உற்சாகப்படுத்துகிற மந்திரம் இந்த மேக்கப்தான் என்பது அவரது நம்பிக்கை. இறந்த பின்னரும் அதே போல அழுத்தமான உதட்டுச் சாயம், கண் மை, நெற்றித் திலகம், வகிட்டுக் குங்குமம் என முழுமையான மேக்கப்பில், கண்ணாடிப் பெட்டிக்குள் அனுராதா ரமணன் படுத்திருந்ததைப் பார்த்தபோது, சும்மா கண் மூடிப் படுத்து ஓய்வு எடுக்கிறவர் போன்றுதான் இருந்ததே தவிர, அவர் இப்போது நம்மிடையே இல்லை என்றே நம்ப முடியவில்லை.

தன் உடலைக் கண்டு யாரும் முகம் சுளிக்கக்கூடாது என்பதற்காகவே அனுராதா ரமணன், தான் இறந்த பின்பு தன் முகத்துக்கு மேக்கப் போடவேண்டும் என்பதைத் தனது கடைசி விருப்பமாகச் சொல்லியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

மறைந்த அனுராதா ரமணன் பற்றி விகடனுக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தார் இணையாசிரியர் திரு.கண்ணன். கனத்த நெஞ்சோடு எழுதித் தந்துள்ளேன். மேலே சொன்ன பர்சனல் சம்பவங்கள் எதுவும் அற்ற, நினைவாஞ்சலி அது!

மேற்படி விகடன் இதழ் வெளியான பிறகு, ‘அனும்மா’ என்ற தலைப்பில் நான் எழுதித் தந்த அந்த நினைவுக் கட்டுரையை இதே வலைப்பூவில் பதிவிடுகிறேன்.

அதிருக்கட்டும்... அனும்மாவிடம் ஒரு கேள்வி!

அனும்மா! போனை எடுத்தா சளைக்காம எல்லாத்தையும் வெளிப்படையா, நேரம் போறது தெரியாம கலகலப்பா பேசிட்டே இருப்பீங்களே அனும்மா! நீங்க பிரியா விடை பெறப் போறீங்கன்றதை மட்டும் சஸ்பென்ஸா வெச்சிருந்து, ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலே போயிட்டீங்களே, ஏன் அனும்மா? சாப்பிட வரேன், சாப்பிட வரேன்னு சொல்லிக் கடைசி வரைக்கும் உங்க வீட்டுக்கு வராமலே இருந்துட்டேனே, அந்தக் கோபமா அனும்மா?

***

உங்கள் வார்த்தை, உங்கள் வேலை, உங்கள் நண்பர் - மூவரிடமும் உண்மையாக இருங்கள்!