ஜெயிக்கப்போவது யாரு?

‘ரசிகன்’ தொடருக்கு ஒரு ரசிகனாக நான் அறிவித்திருந்த போட்டிக்கு வந்திருந்த பின்னூட்ட பதில்களை எல்லாம் இதோ, பதிவிட்டுவிட்டேன். (இனி வரும் பதில்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட மாட்டாது.) இவற்றிலிருந்து சரியான பதில்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எழுதியவர்களுக்குரிய புத்தகங்களை அனுப்புவது ஒன்றே இனி என் பணி!

நான் என் போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டிருந்ததுபோல் ஒருவரே தங்களின் பதில்களை இரண்டு, மூன்று பின்னூட்டங்களின் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் குறைந்த எண்ணிக்கையில் சரியான விடையைக் கொண்டிருக்கும் பின்னூட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுத்துப் புத்தகம் அனுப்புவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் போட்டிக்கான வலைப் பதிவைப் படித்துவிட்டு, ‘ரசிகன்’ தொடரின் இயக்குநர் மணிவண்ணன் மிகுந்த சந்தோஷமும் உற்சாகமுமாக எனக்கு போன் செய்திருந்தார். அந்தப் பதிவில், ‘ஒருவேளை மேற்படி நிகழ்ச்சி அடுத்த வாரம் தள்ளிப் போனாலும், பின்னூட்ட பதில்களுக்கான இறுதித் தேதி மாற்றியமைக்கப்பட மாட்டாது’ என்கிற வரியைக் குறிப்பிட்டுவிட்டு, “சார், உண்மையிலேயே அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 7-ம் தேதி ஞாயிறன்று காலையில் மணியம்செல்வன் ஓவியங்கள் தொடர்பான நிகழ்ச்சி இடம்பெறும். இந்தத் தகவலை முடிந்தால் உங்கள் வலைப்பூ நேயர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார்.

குறிப்பிட்ட இந்த ‘ரசிகன்’ நிகழ்ச்சி பற்றி தினத்தந்தி நாளேட்டிலும், வேறொரு வார இதழிலும் பெரிய அளவில் வெளியாகவிருப்பதாலேயே இந்தத் தேதி மாற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, போட்டிக்கான விடைகளை அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் ‘என் டயரி’ வலைப்பூ நேயர்களைத் தவிர்க்க முடியாமல் மேலும் ஒரு வாரம் காத்திருக்க வைக்க வேண்டியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரியான விடைகள் (நான்கு படங்களுக்குமான பாடல்கள்) எனக்குத் தெரியும் என்றாலும், அவற்றை இங்கே சொல்லிப் பரிசு பெற்றோர் விவரத்தை வெளியிடுவது முறையாகாது. அது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் குலைத்துவிடக்கூடும் என்பதால், பரிசு விவரப் பதிவை நானும் அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளி வைக்கிறேன்.

எனினும், ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். பின்னூட்டமாக வந்த பதில்களில் பெரும்பாலானவை சரியான விடைகளைக் கொண்டிருந்தன. ஒருவர் நான்கு விடைகள் எழுதியிருந்தால், அவற்றில் நிச்சயம் ஒரு விடையாவது சரியாகவே இருப்பதைக் கண்டேன். எனவே, அடுத்த வாரம் வரை காத்திருக்காமல், ‘ரசிகன்’ போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே உடனடியாக தங்கள் அஞ்சல் முகவரிகளை (பின்கோடு உள்பட முழுமையாக) என் இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தால், மேற்படி நிகழ்ச்சி ஒளிபரப்பான கையோடு புத்தகப் பரிசுகளை அனுப்பி வைக்க எனக்கு உதவியாக இருக்கும்.

போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஓரிருவர் மட்டும் தவறான விடைகளைத் தந்திருப்பதால், அவர்கள் புத்தகப் பரிசு பெறாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனினும், சோர்ந்துவிட வேண்டாம். முன்பே சொன்னதுபோல், இந்த ஆண்டு முழுக்கவே அவ்வப்போது நான் இப்படியான போட்டிகளை அறிவித்துப் புத்தகப் பரிசளிக்க இருக்கிறேன்.

மற்றபடி ‘ரசிகன்’ போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெற்றி பெறப் போகிறவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

ரண்டு செய்திகள்:

1. ‘புதுமொழி 500’ புத்தகம் அட்டை உள்பட அனைத்தும் அச்சாகி, பைண்டிங் நிலையில் உள்ளது. இத்தனை நேரம் தயாராகி இருக்க வேண்டும். எனினும், வேறு சில வேலைகள், புத்தகத் தயாரிப்புகள் (உதாரணமாக, துணை முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிப் பத்திரிகையாளர் சோலை எழுதிய புத்தகம்) காரணமாக, இந்த பைண்டிங் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மற்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அநேகமாக அடுத்த வாரம் ‘புதுமொழி 500’ புத்தகம் தயாராகிவிடும். தயாரானதும்தான், ஆனந்த விகடன் அறிவிப்புகள் மூலமாக உங்களுக்கே தெரிய வருமே! முன்பே சொன்னபடி, மேற்படி புத்தகம் கைக்கு வந்ததும், உரியவர்களுக்கு அவற்றை உடனடியாக அனுப்பி வைக்கிறேன்.

2. நான் தற்சமயம் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இல்லை. (விகடனில் பலராலும் விரும்பி ரசிக்கப்படும் ‘பொக்கிஷம்’ பகுதியை மட்டும் வழக்கம்போல் தொகுத்துத் தருகிறேன்.) அதற்குப் பதிலாக ‘சக்தி விகடன்’ ஆன்மிகப் பத்திரிகைப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கடந்த சில நாட்களாகவே ஒரு மாற்றத்தை என் மனம் மானசீகமாகத் தேடிக்கொண்டு இருந்தது. அதற்கெனப் பிரத்யேகமாக நான் வேண்டிக்கொள்ளாதபோதும், மகாஸ்ரீ அன்னை அந்த மாற்றத்தை நான் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே சிறப்பாக எனக்குத் தேடித் தந்துவிட்டார் என்றே கருதுகிறேன்.

***

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது!

ஒரு போட்டி - நாலு பரிசுகள்!

தினேழு நாள் அஞ்ஞாத வாசம் முடிந்து, பிளாக் பக்கம் தலைகாட்டியிருக்கிறேன்.

மனைவிக்கான ஹெர்னியா அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து, இன்று கடைசித் தையல் பிரித்து, பூரண நலம் என்று அருள்வாக்கு சொன்னார் டாக்டர் ஆர்.செல்வமணி.

அறுவைச் சிகிச்சைக்கு ஆன மொத்த மருத்துவச் செலவு ரூ.53,000. இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தமான படிவங்களைப் பூர்த்தி செய்து டாக்டரிடம் கையெழுத்துக் கேட்டபோது, கையெழுத்திட்டுவிட்டு, “இன்ஷ்யூரன்ஸ் பணம் கிடைக்க வழியில்லை. ஏற்கெனவே உங்கள் மனைவிக்கு சிசேரியன் செய்திருப்பதால், இந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட வாய்ப்பு இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். பிறகு உங்கள் அதிர்ஷ்டம்!” என்றார்.

மற்றபடி, எனது முந்தின பதிவைப் பார்த்துவிட்டு உடனடியாக எனக்கு போன் செய்து மனைவியின் உடல்நலம் பற்றி அக்கறையோடு விசாரித்த நட்பு வட்டம் அனைத்திற்கும் இந்தச் சமயத்தில் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனைவி பூரண குணம் பெற வாழ்த்திப் பின்னூட்டம் இட்டிருக்கும் நல்லிதயங்கள் அனைத்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

***

இனி, போட்டி!

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9:30-க்கு ஒளிபரப்பாகும் ‘ரசிகன்’ தொடர் பற்றி முன்பே எழுதியிருந்தேன். அதில் கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி மட்டும் தொடர்ந்து 9 வாரங்களுக்கு ஒளிபரப்பாகும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அது தொடர்பாக இங்கே ஒரு போட்டியை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

கண்ணதாசன் பற்றிய ஒன்பது வார நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக, அந்தத் தொடரின் இயக்குநர் மணிவண்ணன், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு புதுமையைச் செய்யவிருக்கிறார். கண்ணதாசனின் திரைப் பாடல்களிலிருந்து நான்கு பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றை ஓவியர் மணியம்செல்வனிடம் கொடுத்து, ஒவ்வொரு பாடலைப் படித்ததும் அவர் மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கேற்ப ஒவ்வொரு படம் வரைந்து தரும்படி கேட்டிருந்தார். மணியம்செல்வனும் அதன்படி நான்கு படங்களை வரைந்து கொடுத்துள்ளார்.

அவை, வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று ’ரசிகன்’ தொடரில் காண்பிக்கப்பட்டு, அங்கே கூடியிருக்கும் ரசிகர்களிடம் அந்தப் படங்களுக்கான பாடல்கள் என்ன என்று கேட்கப்படும். சின்ன க்ளூவும் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

அநேகமாக, அந்த நிகழ்ச்சியின் இறுதியிலேயே அந்தப் படங்கள் எந்தெந்தப் பாடல்களைக் குறிக்கின்றன என்கிற விடையும் அறிவிக்கப்பட்டுவிடும்.

இங்கே, ‘என் டயரி’ வலைப்பூ நேயர்களுக்கு நானே முன்னதாக அந்தப் போட்டியை அறிவிக்க விரும்புகிறேன்.

மணியம்செல்வன் வரைந்து கொடுத்த அந்த நான்கு படங்களையும் கீழே கொடுத்துள்ளேன். கூடவே, ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறு க்ளூவும் கொடுத்துள்ளேன். படங்களைக் கவனமாகப் பாருங்கள். கண்ணதாசனின் எந்தத் திரைப்பாடலை அந்தப் படம் குறிக்கிறது என்று கண்டுபிடியுங்கள். பாடல்களின் முதல் வரியை மட்டும் எனக்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்யுங்கள்.

ஞாயிற்றுக்கிழமையன்று மேற்படி புதிருக்கான விடைகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிடும் என்பதால், வருகிற சனிக்கிழமைக்குள் வருகிற பின்னூட்டங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலும்.

இதோ, அந்த நான்கு படங்கள்:

1. புயலுக்குப் பெரிய பெரிய தென்னை மரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் விழுந்துவிடும்; ஆனால், நாணல் புற்கள் விழாது. அது போல, அனுசரித்துப் போகும் பக்குவப்பட்ட மனதுடையவர்கள் ஒருநாளும் வீழ்ந்துபோக மாட்டார்கள் என்கிற கருத்தை உள்ளடக்கிய பாடலுக்கான படம் இது.

2. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய மிக உருக்கமான வாழ்க்கைத் தத்துவப் பாடல் இது.

3. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் கே.ஜே.ஜேசுதாஸும் எஸ்.ஜானகியும் பாடிய பாடல் இது. இன்னொரு முக்கியக் குறிப்பு: படத்தின் ஹீரோ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

4. மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரண காதல் பாட்டுதான். ஆனால், கவலையின்றி வாழ்வது எப்படி என்கிற ரகசியத்தை இந்தப் பாடலில் ஆறே வரிகளுக்குள் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் கண்ணதாசன்.

யார் யார் எத்தனைப் பாடல்களைக் கண்டுபிடித்து எழுதுகிறார்களோ அத்தனைப் புத்தகங்களை (விகடன் பிரசுரம்) அவர்களுக்கு என் அன்புப் பரிசாக உடன் அனுப்பி வைக்கிறேன். ஒரே ஒரு பாடலைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது என்றாலும், உடனே உங்கள் விடையைப் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். உங்கள் பதில் சரியாக இருந்தது என்றால், கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புத்தகம் என் அன்பளிப்பாகக் கிடைக்கும்.

உங்கள் விடைகளைப் பின்னூட்டமாக இடுவதில் சில முக்கிய நிபந்தனைகள்:

1. நீங்கள் கண்டுபிடித்த பாடலின் முதல் வரியை (மூன்று, நான்கு வார்த்தைகள்) முழுதாக எழுத வேண்டும்.

2. நீங்கள் நான்கு பாடல்களையுமே கண்டுபிடித்துவிட்டாலும் சரி, அல்லது ஒரே ஒரு பாடலைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது என்றாலும் சரி; உங்கள் விடைகளை ஒரே ஒரு பின்னூட்டம் மூலமாகத்தான் எனக்குத் தெரியப்படுத்த வேண்டும். முதல் பாடலுக்கான விடையை ஒரு பின்னூட்டத்திலும், இரண்டாம் பாடலுக்கான விடையை அடுத்த பின்னூட்டத்திலும் எனத் தனித்தனியாக அனுப்பக்கூடாது. அப்படி ஒருவரிடமிருந்தே இரண்டு மூன்று பின்னூட்டங்கள் வந்தால், அவற்றில் எந்தப் பின்னூட்டத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் சரியான விடைகளைச் சொல்லியிருக்கிறாரோ அத்தனைப் புத்தகங்கள் மட்டுமே அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும். எனவே, உங்கள் விடைகளை நன்கு யோசித்து ஒரே ஒரு பின்னூட்டம் மூலமாகப் பதிவிடுங்கள்.

3 விகடன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்களுக்கும், ஓவியர் மணியம்செல்வன் மற்றும் ‘ரசிகன்’ இயக்குநர் மணிவண்ணனோடு தொடர்பு உள்ளவர்களுக்கும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதியில்லை.

4. வருகிற சனிக்கிழமை இரவுக்குள் (27-2-10) உங்கள் பின்னூட்டங்களைப் பதிவிட வேண்டியது அவசியம். ஒருக்கால், எதிர்பாராதவிதமாக ‘ரசிகன்’ தொடரில் மேற்படி ஓவிய நிகழ்ச்சி அடுத்த வாரத்துக்கு ஒத்திப்போடப்பட்டாலும்கூட, இதன் பின்னூட்டங்களுக்கான இறுதித் தேதி மாற்றியமைக்கப்பட மாட்டாது.

5. பின்னூட்டத்தில் விடைகளை அனுப்பும்போது உங்கள் முகவரியைத் தெரிவிக்க வேண்டாம். கலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும், இந்தப் படங்களுக்குரிய சரியான திரைப்பாடல்கள் உங்களுக்குத் தெரிந்துவிடும். அப்போது, நீங்கள் சரியான விடையைத்தான் எனக்குப் பதிவிட்டிருக்கிறீர்கள் என்று அறிந்தால், உடனே உங்கள் முழுமையான அஞ்சல் முகவரியை nraviprakash@gmail.com என்கிற எனது இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அன்பளிப்புப் புத்தகம் சடுதியில் உங்கள் வீடு தேடி வரும்.

முக்கியக் குறிப்புகள்:

1. நான் அறிவிக்கும் இந்தப் போட்டிக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதேபோல, ‘ரசிகன்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், விகடன் நிறுவனத்துக்கும்கூட இதோடு எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க என் சந்தோஷத்துக்காக, நானும் ஒரு கண்ணதாச ரசிகன் என்கிற முறையில் அறிவிக்கிற போட்டி. இதற்கான முழுப் பொறுப்பும் என்னைச் சேர்ந்தது.

2. எந்த லாப நோக்கோடும் இந்தப் போட்டியை நான் நடத்தவில்லை. வெற்றி பெறுகிறவர்களுக்கு என் சொந்தச் செலவில் புத்தகங்களை வாங்கி, என் அன்பளிப்பாக அனுப்பவிருக்கிறேன்.

3. குலுக்கல் முறை ஏதும் இல்லை. சரியான விடை எழுதும் அத்தனை பேருக்குமே புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

4. சில சமயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சிலர் அனுப்பிய பின்னூட்டங்கள் எனக்கு வந்து சேரவில்லை என்பதைப் பிற்பாடு அவர்கள் அனுப்பிய இரண்டாவது பின்னூட்டம் மூலமும் இ-மெயில் மூலமும் அறிய நேர்ந்திருக்கிறது. ஆகவே, இப்படியான எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு நான் பொறுப்பாளியாக முடியாது. எனவே, இந்த விஷயத்தில் என் மனச்சாட்சியின் தீர்ப்பே இறுதியானது.

ALL THE BEST!

***
பெறுகிற பொருளைவிட, அதைப் பெறுவதிலும் கொடுப்பதிலும் கிடைக்கும் சந்தோஷமே நிஜமான பரிசு!

ஸாரி... ஸாரி... ஸாரி..!

கந்தை கூடாது; ஆணவம் கூடாது. இவை இரண்டும் ஆளை அழிக்கும் கருவிகள். தெரியும். எனக்கு அகந்தையோ, ஆணவமோ இருக்கிறதா என்று அவ்வப்போது என் செயல்களை நானே அலசிப் பார்ப்பது உண்டு. எங்கேனும் துளி அகந்தை இருப்பதாகத் தோன்றினாலும், உடனே அதை அகற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடுவேன்.

சாவி வார இதழில், சாவி சாரின் நேரடிப் பார்வையின்கீழ் அந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக சுமார் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிவிட்டு விகடனில் வந்து சேர்ந்தபோது, சேர்மன் எஸ்.பாலசுப்பிரமணியன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: “ஒரு பத்திரிகையில் எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்து, கிட்டத்தட்ட தனி ராஜாவாகவே இத்தனை வருட காலம் செயல்பட்டு வந்திருக்கும் உங்களால் இங்குள்ள சீனியர்களோடு அட்ஜஸ்ட் செய்து போக முடியுமா? ஈகோ, தாழ்வு மனப்பான்மை போன்றவை உங்கள் வேலைக்கு இடைஞ்சல் செய்யாதா?”

“காரில் ஒரு பிரமுகர் பயணிக்கிறார்; எதிரே வருபவர்கள் சல்யூட் அடிக்கிறார்கள் என்றால், அந்த மரியாதை அந்தப் பிரமுகருக்குத்தானே தவிர, காரைச் செலுத்தும் டிரைவருக்கு அல்ல. சாவி வார இதழில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் சுஜாதா இவர்களோடு நான் மிகச் சுலபமாக நேரடித் தொடர்பு கொண்டு கதை, கட்டுரைகளைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாவி சாரின் மீது வைத்திருக்கும் மதிப்புதான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனவே, ஈகோவுக்கு இங்கே இடமில்லை. அதே போல் எனக்குத் தாழ்வு மனப்பான்மையும் இல்லை. என் பலம் என்ன, ஒரு பத்திரிகைக்கு என்னால் என்ன பணி ஆற்ற முடியும் என்று எனக்குத் தெளிவாகத் தெரியும். சாவியில் இருந்தபோது நான் செய்த பணிகளை இங்குள்ள வசதி வாய்ப்புகளுக்கு இன்னும் சிறப்பாகவே என்னால் செய்ய முடியும். எனவே, தாழ்வு மனப்பான்மை என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று அவருக்கு பதில் சொன்னேன் நான்.

இன்றைக்கு விகடனின் பொறுப்பாசிரியர் என்கிற உயர்ந்த பதவியில் இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் விகடன் நிர்வாகம் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதானே தவிர, ஏதோ பெரிசாக சாதித்துக் கிழித்து விட்டோம், அதற்குக் கிடைத்த வெகுமதி இந்தப் பதவி என்று ஒருபோதும் நான் நினைத்துக் கொள்வது கிடையாது. ஒரு காற்றடித்தால் சின்னச் சருகுகூட கோபுரத்தின் கலசத்தில் போய் உட்காரும்; மறு காற்றடித்தால் அதுவே சாக்கடைக்குள் வந்து விழும். காற்று நமக்குச் சாதகமாக அடிக்கிறதா என்பது நம் கையில் இல்லை. நம் கடமையை நாம் ஒழுங்காகச் செய்கிறோமா என்பதே முக்கியம்.

அந்த வகையில் என் கடமையை நான் ஒழுங்காகச் செய்கிறேன் என்கிற ‘அகந்தை’ எனக்கு உண்டு. இதை அகந்தை என்று குறிப்பிடலாமா என்றால், சந்தேகமில்லாமல் இதுவும் ஒரு வித அகந்தைதான். எனக்கு எல்லாம் தெரியும் என்பது வித்யா கர்வம். அதே போல், ‘பிறருக்கு வாரி வழங்குவதில் நான் கர்ணனுக்குச் சமம் என்று எண்ணிக் கொள்வதும்’ ஒரு கர்வம்தான் - உண்மையிலேயே அப்படி அள்ளி வழங்கும் வள்ளலாக இருந்தாலும்கூட!

‘நான் கெட்டிக்காரன்’ என்று நாமே தீர்மானித்துக் கொள்வது எப்படி அகந்தையின் கீழ் வருமோ, அது போல ‘நான் நல்லவன்’ என்று நாமே முடிவு கட்டிக் கொள்வதும் அகந்தையின் கீழ்தான் வரும்.

என்னுள் இன்னும் சில ‘அகந்தை’களும்கூட உண்டு. ‘நேரம் தவறாதவன்’ என்கிற அகந்தை. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்தால் இருப்பேனே தவிர, நேரம் தவறிப் போக மாட்டேன். 8:30-க்கு ஒரு மீட்டிங் அல்லது முகூர்த்தம் என்றால், 8:25-க்குள் கண்டிப்பாக அங்கே இருப்பேன். அதே போல் ‘சொன்னால் சொன்ன வாக்கைக் காப்பாற்றுபவன் நான்’ என்கிற அகந்தை கூட என்னுள் உண்டு. முதன்முறையாக எனது அந்த அகந்தை மீது ஓர் அடி விழுந்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் நான் எழுதிய பதிவில், ‘வருகிற புதன்கிழமையன்று என் வலைப்பூ நேயர்களுக்கு ‘ரசிகன்’ டி.வி. நிகழ்ச்சி தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான போட்டி வைத்துப் புத்தகப் பரிசளிப்பதாக’ அத்தனை அழுத்தமாகச் சொல்லியிருந்தேன். அதற்குத்தான் வந்தது வினை!

குறிப்பிட்டபடி ‘வருகிற புதன்கிழமையன்று’ அந்தப் போட்டியை அறிவிக்க இயலாத நெருக்கடி ஒன்று எனக்கு ஏற்பட்டுவிட்டது. கவனிக்கவும், எப்படியும் அந்தப் போட்டியை அறிவிக்கத்தான் போகிறேன். ஆனால், சொன்னபடி நாளை புதன்கிழமை அறிவிக்க இயலவில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவின் தலைப்பு - ஸாரி... ஸாரி... ஸாரி..!

அப்படி என்ன நெருக்கடி?

நேற்று அதிகாலை என் மனைவிக்கு உடல் நிலை சீரியஸாகி, மயக்கமுற்று விழுந்துவிட்டாள். உடம்பு சில்லிட்டுவிட்டது. பதறிப்போய் ஆட்டோ தேடி, அவளை அள்ளிப் போட்டுக்கொண்டு அருகில் உள்ள பல்லவா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தேன். உடனடியாக அவளின் வயிற்று வலிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் அவள் கண் விழித்தாள். வலியும் குறைந்திருந்தது. எனினும், நிலைமை சிக்கலாக இருப்பதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள் மருத்துவர்கள்.

பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. குடலிறக்கம் என்று சொல்லக்கூடிய ‘ஹெர்னியா’ பிரச்னைதான். குடல் தன் இடத்தைவிட்டு ரொம்ப தூரம் இறங்கி வேறு எங்கோ போய் இசகுபிசகாகச் சிக்கிக்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லேசாக காங்கிரின் ஃபார்ம் ஆகியிருப்பதாகவும் சொன்னார்கள். பி.பி., தைராய்டு டெஸ்ட், ஷுகர் டெஸ்ட் எனப் பலப் பல டெஸ்ட்டுகளை முடித்து, நாளை மதியம் அறுவைச் சிகிச்சைக்கு முகூர்த்தம் குறித்திருக்கிறார்கள். ஆபரேஷன் முடிந்து, அதன்பின் ஒரு வார காலம் வரையில் மருத்துவமனையில் உடன் இருக்க வேண்டிய கட்டாயம்.

45 முதல் 55 ஆயிரம் வரையில் செலவாகும் என்பது உத்தேசக் கணக்கு. மெடிக்ளைம் பாலிசி இருக்கிறது. ஆனால், அது தொடங்கி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்; அப்படியும் சிற்சில நோய்களுக்குத்தான் அது செல்லும்; ‘எதிர்பார்க்கக்கூடிய பிரச்னை’யான இம்மாதிரி குடலிறக்கம் போன்ற உபாதைகளுக்கு அது உதவுமா போன்ற சிக்கல்கள் எல்லாம் இருக்கின்றன. பார்க்கலாம்!

விஷயத்திற்கு வருகிறேன். எனவே, ‘ரசிகன் - கண்ணதாசன்’ போட்டியைத் தவிர்க்க முடியாமல் அடுத்த புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கிறேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“போட்டிக்கான விடைகள் அடுத்த வார ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் ‘ரசிகன்’ தொடரில் வெளியாகிவிடும்; எனவே, இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் விடைகளை சனிக்கிழமை இரவுக்குள் பின்னூட்டமாக இடவேண்டியது அவசியம் என்று கொடுத்திருந்தீர்களே?” என்று முக்கியமான கேள்வி எழும்.

போன பதிவைப் படித்த இயக்குநர் மணிவண்ணன் உற்சாகமாகி இன்று காலை எனக்கு போன் செய்திருந்தார். அவரிடம் நிலைமையைச் சொன்னேன். “அதனாலென்ன, கண்ணதாசன் பற்றிய இந்த நிகழ்ச்சி எப்படியும் ஒன்பது வாரங்களுக்கு வரப்போகிறது. எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை வேறு சிலவற்றை ஒளிபரப்பில் ஏற்றிவிட்டு, குறிப்பிட்ட எபிசோடை அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளி வைத்துக் கொள்கிறேன்” என்றார். சொன்ன வாக்கு ஒரேயடியாகத் தவறிவிடாமல் காப்பாற்றிக் கொடுத்த அவருக்கு என் நன்றி!

கண்டிப்பாக அடுத்த புதன்கிழமை (17.2.10) போட்டியை அறிவிக்கிறேன். கலர்ஃபுல் போட்டி! இதில் கலந்துகொள்பவர்களுக்கு, முன்பே சொன்னது மாதிரி, அவரவர் திறமைக்கேற்ப ஒரு புத்தகத்திலிருந்து நான்கு புத்தகங்கள் வரை வெல்லும் வாய்ப்பு உண்டு! விகடன் பிரசுரத்திலிருந்து ‘புதுமொழி 500’ போன்று இனிமேல் தயாராக வேண்டிய புத்தகமாக இல்லாமல் ஏற்கெனவே விற்பனையில் உள்ள புத்தகங்களையே பரிசளிக்கவிருப்பதால், வென்றவர்களுக்கு ஒரு சில நாட்களிலேயே புத்தகப் பரிசு கையில் கிடைத்துவிடும்!

தவிர்க்க முடியாத தாமதத்துக்கு வருந்தும்,

‘உங்கள் ரசிகன்’
ரவிபிரகாஷ்.

***

தாமதம் என்றால் தாமதம்தான்; அதில் சிறிய தாமதம், பெரிய தாமதம் என்று வித்தியாசம் எதுவும் இல்லை.

ரசிகனின் ரசிகன் நான்!

‘ரசிகன்’ என்றொரு நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் காலையில் 9:30 மணியிலிருந்து 10:30 வரை வெளியாகிறது. திரையுலக பிரபலங்களை அழைத்து, ரசிகர்களோடு அவரை உரையாட வைத்து நடத்துகிற ஒரு சுவையான நிகழ்ச்சி அது.

நான் டி.வி. அதிகம் பார்ப்பதில்லை. காலையில் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் கலைஞர், ஜெயா மற்றும் மெகா டி.வி-க்களில் ஒளிபரப்பாகும் பழைய பாடல் காட்சிகளை ஆர்வத்தோடு பார்ப்பேன். சனி, ஞாயிறு இரவுகளில் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புதான் போன்ற காமெடி ஷோக்களைப் பார்ப்பேன். (இப்போதெல்லாம் விஜய் டி.வி-யிலும், கலைஞர் தொலைக்காட்சியிலும் ‘கலக்கப் போவது யாரு’, ‘எல்லாமே சிரிப்புதான்’ ஆகிய நிகழ்ச்சிகள் வருவதில்லை.) சமீபமாக, கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகும் ‘விசாரணை’ தொடரை விடாமல் பார்த்து, ரசித்து வருகிறேன். டி.வி-யோடு என் உறவு அவ்வளவுதான்!

சிபாரிசு என்பதே கெட்ட வார்த்தை அல்ல. இன்றைய போட்டி உலகில், உண்மையிலேயே தரமானவைகளோடு குப்பைகளும் மலிந்திருக்கும் கால கட்டத்தில், சில நல்லவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு, தகுதியான நிகழ்ச்சிகளுக்கும் சிபாரிசு தேவைப்படுகிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்று கேட்டது அந்தக் காலம். மற்ற சாக்கடைகளின் விளம்பர நெடியில் பூக்கடைக்கும் கட்டாயம் விளம்பரம் தேவைப்படுவது இந்தக் காலம்.

‘ரசிகன்’ சீரியல் பற்றிச் சொல்லி, ‘நீங்கள் அதைப் பார்ப்பதுண்டா சார்?’ என்று என்னை முதன்முதலில் கேட்டவர் இயக்குநர் விஜய்ராஜ் (டி.எம்.எஸ். பற்றிய ‘இமயத்துடன்’ என்கிற சீரியலை இயக்கியிருப்பவர்). எனக்கு அதுவரை ‘ரசிகன்’ பற்றித் தெரியவில்லை. பொதுவாக எனக்கு டி.வி. நிகழ்ச்சிகளில் ஆர்வம் இருப்பதில்லை. ‘எம்.எஸ்.வி. பற்றிக்கூட மெகா டி.வி-யில் சுவாரஸ்ய நிகழ்ச்சி வந்துகொண்டு இருக்கிறது. கட்டாயம் பாருங்கள்’ என்று நண்பர் ஆர்ட்டிஸ்ட் ராஜா (விகடனில் சக ஊழியர்) அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். எந்த சீரியல் எப்போது வருகிறது என்கிற நேரக் கணக்கு எனக்குப் பிடிபடுவதே இல்லை. தவிர, மறதியும் அதிகம் உண்டு. (வயதானதால் ஏற்படுகிற மறதி அல்ல இது. சின்ன வயதிலிருந்தே நான் ரொம்ப மறதிக்காரன். பத்திரிகை உலகில் எப்படி 25 வருடங்களாகக் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியம்!)

ராஜேஷ்குமாரின் ‘விசாரணை’ சீரியலின் ஒருங்கிணைப்பாளராக மணிவண்ணன் எனக்குத் தொலைபேசியில் அறிமுகம் ஆனார். அது சம்பந்தமாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, ஒருநாள் அவர் ‘ரசிகன்’ நிகழ்ச்சி பற்றிச் சொல்லி, “அதை நான்தான் சார் இயக்குகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா?” என்று கேட்டார். “இல்லையே! இந்த வாரம் அவசியம் பார்க்கிறேன்” என்றேன். ஆனால், வழக்கம்போல் மறந்துவிட்டேன். திரும்ப அவர் அதுபற்றிக் கேட்ட பின்புதான், ‘ரசிகன்’ சீரியல் பற்றிய விஷயம் ஞாபகத்துக்கே வந்தது.

அதற்கு அடுத்த வாரமும் பார்க்க முடியவில்லை. பத்திரிகைப் பணி காரணமாக அலுவலகம் சென்றுவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஞாயிற்றுக் கிழமை காலையில் சீரியல் குறித்து மணிவண்ணன் SMS பண்ணியிருந்தார். அது நல்லதாகப் போயிற்று. உடனே, வேறு ஏதோ ஓடிக்கொண்டு இருந்த சேனலை கலைஞருக்கு மாற்றி, ரசிகன் சீரியலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசிக்கொண்டு இருந்தார். இடையிடையே அவரின் பாடல் காட்சிகள் வந்து போயின. கவிஞரின் பேச்சுக்குக் கேட்கவே வேண்டாம்; சரளமான தமிழ் அருவி அது. பாடல்கள் யாவும் இளையராஜாவின் இசை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதிகள். கண்ணுக்கும் காதுக்கும் அற்புதமான விருந்தாக இருந்தது அந்த நிகழ்ச்சி. இயலும் இசையும் கைகோத்திருந்த அருமையான நிகழ்ச்சி. உண்மையில் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அதைப் பார்த்த பின்பு, ‘அடடா! இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே! ஒரு நல்ல நிகழ்ச்சியை மிஸ் பண்ணிவிட்டோமே!’ என்று ரொம்பவும் வருத்தப்பட்டேன்.

மிக அருமையாகத் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி அது. பேச்சு, பாடல் காட்சிகள் இரண்டும் அழகான காதலர்கள் போல் கைகோத்துப் பின்னிப் பிணைந்து சென்ற விதம் ரசனையாக இருந்தது. அடிப்படையில் ரசனையான மனம் இருந்தால்தான் இத்தனை அற்புதமாக இது போன்ற ஒரு நிகழ்ச்சியை இயக்க முடியும். அந்த ரசனை மனம் மணிவண்ணனிடம் தாராளமாக இருக்கிறது.

இரண்டு வாரம் கவிப்பேரரசு பற்றிய நிகழ்ச்சி. அது முடிந்து, இன்றைக்குக் காலையில் கவியரசு கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி ‘ரசிகன்’ தொடரில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீதின் குரலே அத்தனை வசீகரம். குரல்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன், ஏழிசை மன்னர் டி.எம்.சௌந்தர்ராஜன், இசைக் குயில் பி.சுசீலா இவர்களுக்கு அடுத்தபடியாக நல்ல தமிழை நான் அதிகம் ரசிப்பது வைரமுத்து, சரோஜ் நாராயணசாமி மற்றும் அப்துல் ஹமீது இவர்களின் குரல்களில்தான்.

கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சியில், மூன்று பாடலாசிரியர்களின் தலைமையில் மூன்று குழுக்களும் மற்றும் ரசிகர் கூட்டமும் கலந்துகொண்டன. ஒவ்வொரு பாடலாசிரியரும் கண்ணதாசனைப் பற்றி நினைவுகூர்ந்த விதம் சிறப்பாக இருந்தது. கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசனும் இதில் கலந்துகொண்டு, தன் அப்பா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். (கண்ணனுக்குத் தாசன் என்கிற அர்த்தத்தில் அவர் கண்ணதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொள்ளவில்லை; ‘அழகான கண்களைப் பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் எனக்கு ஆசை அதிகம். அதனால்தான் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்று கண்ணதாசனே விளக்கம் அளித்திருப்பதாக விகடனுக்காக ‘கண்ணதாசன் 25’ குறிப்புகளைத் திருமாவேலன் எழுதிக் கொடுத்தபோதுதான் நானே அறிந்துகொண்டேன்.) வழக்கம்போல் பேச்சின் இடையிடையில் ஒளிபரப்பான கண்ணதாசன் பாடல் காட்சிகள் (டி.எம்.எஸ். குரலில்! ஆனந்த வெள்ளத்துக்குக் கேட்க வேண்டுமா?) ‘அட, அதற்குள் ஒரு மணி நேரம் ஓடிப் போய்விட்டதா?!’ என்கிற ஏக்கத்தையே ஏற்படுத்தின.

கண்ணதாசனைப் பற்றிய நிகழ்ச்சி அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கிறது. கட்டாயம் பாருங்கள்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே, இந்த க்ஷணத்தில் இயக்குநர் மணிவண்ணனிடமிருந்து போன்கால், ‘நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா சார்?’ என்று. பத்து நிமிடம் பேசியதில், இந்த வலைப்பதிவில் நான் எழுதியிருக்கும் அத்தனை எண்ணங்களையும் அவரிடம் கொட்டிவிட்டேன். நியாயமாக, காலையில் நிகழ்ச்சி பார்த்து முடிந்ததுமே நானே அவருக்குப் போன் செய்து பாராட்டியிருக்க வேண்டும். அதுதான் நியாயமும்கூட! நியாயம் மட்டுமல்ல; அதுதான் என் வழக்கமும்கூட. ஆனால், மணிவண்ணனுக்கு நான் போன் செய்யவில்லை. காரணம், நிகழ்ச்சி பார்த்து முடித்ததுமே இன்றைக்கு ‘என் டயரி’யில் இது பற்றி எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதுதான். இந்த வலைப்பூவை மணிவண்ணன் தினமும் பார்க்கிறார், படிக்கிறார் என்று அவர் முன்பே எனக்குச் சொல்லியிருந்ததால், அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே என்று என் பாராட்டுக்களை முன்கூட்டிச் சொல்லாமல் தவிர்த்தேன்.

கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி ஒன்பது வாரங்களுக்குத் தொடரும் என்று தெரிவித்தார் மணிவண்ணன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட இசை மேதைகள், பிரபலங்கள் கண்ணதாசன் பற்றிப் பேச இருக்கிறார்களாம். ‘கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது...’ என்கிற மாதிரியான தலைப்பில் சுவாரசியமான பட்டிமன்றம் ஒன்று நடக்க இருக்கிறதாம். ஆர்வத்தோடு தன் கலைப் பணிகளை என்னோடு பகிர்ந்துகொண்டார் மணிவண்ணன்.

‘ரசிகன்’ தொடரில் ஆரம்பித்துள்ள கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி தொடர்பான ஒரு சுவாரஸ்யமான போட்டியை நான் என் வலைப்பூ நேயர்களுக்கு (இதே ‘என் டயரி’யிலோ அல்லது மற்றொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிக’னிலோ) அறிவிக்க எண்ணியுள்ளேன். அதில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு புத்தகத்திலிருந்து நான்கு புத்தகங்கள் வரை (ஒரே புத்தகத்தின் பிரதிகள் அல்ல; நான்கு வெவ்வேறு புத்தகங்கள்!) பரிசாக வெல்லக்கூடிய வாய்ப்பு உண்டு.

போட்டிக்கான விடைகள் அடுத்த வார ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் ‘ரசிகன்’ தொடரில் வெளியாகிவிடும். எனவே, இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் விடைகளை சனிக்கிழமை இரவுக்குள் பின்னூட்டமாக இடவேண்டியது அவசியம்.

‘அதெல்லாம் சரி! போட்டி என்னன்னு சொல்லுய்யா!’ என்று டென்ஷன் ஆகிறீர்களா? கூல்... கூல்..!

வருகிற புதன்கிழமையன்று உங்கள் சிந்தனைத் திறனுக்குச் சவால் விடும் அந்தப் போட்டியை அறிவிக்கிறேன். நீங்கள் ஒரு கண்ணதாசன் ரசிகராக, கவியரசரின் பாடல்களை அதிகம் கேட்டு ரசிப்பவராக இருந்தால், நீங்கள் சுலபமாக அந்தப் போட்டியில் வெல்லலாம்.

அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுவது ‘உங்கள் ரசிகன்’ ரவிபிரகாஷ்.

***
எந்த ஒரு வேலையையும் அதைச் செய்வதில் உள்ள சந்தோஷத்துக்காகச் செய்யுங்கள். பணம் பிறகு ஒரு நாள் தானாக வரும்!

சக பதிவரின் கடிதமும், எனது பதிலும்!

சென்ற பதிவுக்குப் பின்பு, என் ஜி-மெயில் முகவரிக்கு சக பதிவர் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நான் அறிவித்திருந்த புத்தகப் பரிசு தொடர்பான தனது கருத்துக்களையும், விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் அதில் சொல்லியிருந்தார் அவர். ‘இது தங்கள் பதிவுக்கான பின்னூட்டமல்ல; தங்களின் தனிப்பட்ட கவனிப்புக்காக மட்டுமே’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் அவர். நக்கலும் நையாண்டியுமாக இருந்த அந்தக் கடிதம் சில யோசனைகளையும் கொண்டிருந்தது. எனவே, சற்றே நீண்ட, சுவாரசியமான அந்தக் கடித வரிகளையும், அதற்கான என் பதில்களையும் மற்றவர்களும் தெரிந்துகொள்ளும்பொருட்டு, அவரின் பெயரைத் தெரிவிக்காமல் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

‘என்ன சார்! உங்கள் வலைப்பூ ஈயாடுதா? கமென்ட்ஸ்கள் கம்மியா வந்து விழுதா? அதான், தடால்னு இப்படிப் புத்தகப் பரிசுன்னு இறங்கிட்டீங்க போல! சரி, இதனால எல்லாம் உங்கள் வலைப்பூக்களை அதிகம் பேர் படிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?’

புத்தகப் பரிசு அறிவித்துப் பதிவிடும்போது எனக்குள்ளும் இப்படி ஓர் எண்ணம் தோன்றியது உண்மை. அதாவது, இந்தப் பரிசு அறிவிப்பை என் வலைப்பூ வாசகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள், வலைப்பூவை வாசிக்கச் செய்யும் உத்தியாக நினைத்துவிடுவார்களா என்று நினைத்தேன். என்றாலும், புத்தகப் பரிசை அறிவித்தேன். ஏன்?

நான் வலைப்பூக்களை எழுதத் தொடங்கியது பொழுதுபோக்குக்காக; ஒரு ஜாலிக்காக! எத்தனை பேர் படிப்பார்கள், எத்தனை ஃபாலோயர்ஸ் சேருவார்கள், எத்தனை ஹிட்ஸ் கிடைக்கும், விளம்பரத்துக்கு இடம் ஒதுக்கிக் காசு பார்க்கலாமா என்கிற யோசனையெல்லாம் இல்லை. நான் ஏற்கெனவே என் பதிவு ஒன்றில் சொல்லியிருப்பதுபோல, சில ஆண்டுகளுக்கு முன்பே ‘ஏடாகூடம்’ என்று வலைப்பூ தொடங்கி, சில பதிவுகளும் வெளியிட்ட பின்பு, எனக்கே என் பதிவுகள் போரடித்ததாலும், பதிவு எழுத நேரமின்மையாலும், சோம்பல் காரணமாகவும் அந்த வலைப்பூவையே நீக்கிவிட்டேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு வேலை மிச்சம் என்கிற வகையில் ரொம்ப சந்தோஷம்தான்! பின்னர் என் குழந்தைகள் ஆவலோடு வற்புறுத்தியதன்பேரில், அவர்கள் வடிவமைத்துக் கொடுக்க, அவர்களின் சந்தோஷத்துக்காக மீண்டும் எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து நாலைந்து நாள் எதுவும் எழுதவில்லையென்றால், ‘என்னப்பா, ரொம்ப நாளா எதுவுமே எழுதலை போலிருக்கே?’ என்று என்னைத் தொடர்ந்து ஊக்கிக்கொண்டு இருப்பவர்கள் அவர்கள்தான். ‘உங்கள் ரசிகன்’ மட்டுமல்லாது, ‘என் டயரி’ என்று இன்னொரு வலைப்பூவையும் ஆரம்பித்துக் கொடுத்து, என் வேலையை இரண்டு மடங்காக்கிவிட்டார்கள். எனவே, புத்தகப் பரிசு அறிவித்ததில் என் வலைப்பூக்களை அதிகம் பேர் வாசிக்கச் செய்ய வேண்டும் என்கிற ‘விற்பனை உத்தி’ எதுவும் இல்லை. அப்படி இதனால் அதிகம் பேர் வாசிக்கத் தொடங்கினால், அதில் சந்தோஷம்தான்!

மற்றபடி, நான் புத்தகப் பரிசு அறிவித்தது முகம் அறியா நண்பர்கள் பலரை நெருக்கமாக்கிக் கொள்கிற சந்தோஷத்துக்காக!

‘தொடர்ந்து சில முறை உங்கள் போட்டிகளில் கலந்துகொண்டும் புத்தகப் பரிசு கிடைக்காதவர்கள் வெறுத்துப்போய் உங்கள் பதிவுகளைப் படிப்பதை நிறுத்திவிடும் அபாயம் உண்டு!’

இல்லை. அப்படி நான் நினைக்கவில்லை. பதிவுகளைப் படிப்பவர்கள் புத்தகப் பரிசுக்காகப் படிப்பதில்லை. பதிவின் சுவாரசியத்துக்காகவே படிக்கிறார்கள். சொல்லப்போனால், பதிவைப் படிப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே பின்னூட்டம் இடுகிறார்கள்; அதிலும் மிகச் சிலர் மட்டுமே போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். லட்சக்கணக்காக விற்பனையாகும் ஆனந்த விகடன் பத்திரிகையில் நாங்கள் அறிவிக்கும் சிறு சிறு போட்டிகளில் நூற்றுக் கணக்கில்தான் வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள். (மெகா பரிசுப் போட்டிகளான தேர்தல் போட்டி போன்றவற்றில் 35,000 பேர் வரைக்கும்கூட கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது வேறு!) அதே போல அஞ்சலட்டை, இ-மெயில், வாய்ஸ் ஸ்னாப் போன்று பலவித ரூபங்களில் வந்து சேரும் கடிதங்களும் அதிகபட்சம் ஐந்நூறுக்குள் அடங்கிவிடும். பரிசு என்பது கூடுதல் கவர்ச்சி. அதற்காக யாரும் புத்தகம் வாங்கிவிடுவதில்லை; படிப்பதுமில்லை. புத்தகத்தின் உள்ளடக்கமே அதன் வெற்றிக்குக் காரணம். அதுபோல, என் பதிவைப் படிக்கிறவர்கள் படிக்கப் போகிறார்கள்; போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் கலந்துகொள்வார்கள்; பரிசு கிடைத்தால் மகிழ்ச்சி; இல்லையேல், ஓ.கே! இதில் வெற்றி, தோல்வி என எதுவும் இல்லையென்பதால், வருத்தத்துக்கோ வெறுப்புக்கோ இடமில்லை.

‘விகடன் பிரசுர புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உங்களாலான ஓர் அணில் முயற்சியா இது?’

இதைவிட அபத்தமான ஒரு கேள்வியை இவராலேயே கேட்க முடியாது என்று நினைக்கிறேன். விகடன் பிரசுரம்தான் இன்றைக்குப் பதிப்பகங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை வெளியிட்டும், விற்பனை செய்தும் வருகிறது. எனக்குத் தெரிந்து கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தகச் சந்தையில் அதிக எண்ணிக்கையில், அதிக தொகைக்குப் புத்தகம் விற்றிருப்பதும் விகடன் பிரசுரம்தான். நான் விகடன் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன் என்பதால், விகடன் பிரசுர புத்தகங்களைப் பரிசாகத் தர எண்ணியுள்ளேன். (ஆனால், என் பதிவில் வெறுமே புத்தகங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர, விகடன் பிரசுர புத்தகங்கள் என்று குறிப்பிடவில்லை.) ஏன் என்றால், வெளி பிரசுர புத்தகங்களை நான் முழு விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். விகடன் பிரசுர புத்தகங்கள் என்றால், கணிசமான சலுகை விலையில் எனக்குக் கொடுப்பார்கள். இது முக்கியக் காரணம். தவிர, விகடன் பிரசுரம் வெளியிடாத சப்ஜெக்டே இல்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வகையில் சுவாரசியமானது. குறிப்பாக, விகடன் பிரசுரம் வெளியிட்டு வரும் கையடக்கமான மினி சைஸ் புத்தகங்கள் பார்க்கவே அத்தனை அழகு! நண்பர்களின் பிறந்த நாளுக்கு, நன்றாகப் படிக்கும் சிறுவருக்கு என யாருக்கும் பரிசளித்து மகிழ ஏற்றது.

அந்நாளில் ‘லிப்கோ’ நிறுவனத்தில்தான் இம்மாதிரியான குட்டியூண்டு புத்தகங்கள் வெளியாகும். பழுப்பு அட்டையில், தேச பக்தர்கள், சாதனை செய்த பெரியவர்கள், உலகின் மிகச் சிறந்த கதைகள், தமிழ்க் காப்பியச் சுருக்கங்கள் என பல வித சப்ஜெக்டில் வெளியான கையடக்கப் பதிப்புகள் பலவற்றை ரொம்ப காலத்துக்கு முன்பு நான் ஆவலோடு படித்து ரசித்திருக்கிறேன். விகடன் பிரசுரம் இப்போது அப்படிப் பல சுவாரசியமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அவற்றைத்தான் என் சந்தோஷத்துக்காக என் சொந்தச் செலவில் வாங்கி என் வலைப்பூ நேயர்களுக்குப் பரிசளிக்க எண்ணியுள்ளேன்.

‘நீங்கள் எழுதின புத்தகங்கள் இரண்டோ மூன்றோதான். அதையே திரும்பத் திரும்பப் பரிசாக அனுப்பினால் அலுப்பாக இருக்காதா?’

திரும்பத் திரும்ப ஒருவருக்கேவா நான் புத்தகப் பரிசுகளை அனுப்பிக்கொண்டு இருக்கப் போகிறேன்? வெவ்வேறு நபர்களுக்குத்தானே புத்தகங்கள் போய்ச் சேரப் போகின்றன? பின்பு எப்படி அலுப்பாக இருக்கும் என்று புரியவில்லை. தவிர, நான் எழுதிய புத்தகங்களைத்தான் பரிசாக அனுப்பப் போகிறேன் என்று நான் எங்கே சொன்னேன்? ‘புதுமொழி 500’ புத்தகத்துக்குத் தலைப்பு வைத்ததற்காக நன்றியோடு அந்தப் புத்தகத்தை அனுப்பி வைப்பதாகச் சொன்னேன். அடுத்தடுத்து அனுப்ப உத்தேசித்திருப்பது அதே போன்ற கையடக்க விகடன் பிரசுரங்களைத்தானே தவிர, என் புத்தகங்களை அல்ல! அவை கையடக்கப் பதிப்புகள் அல்ல.

‘புத்தகப் பரிசு அளிப்பதாக இருந்தால், அவற்றை சக பதிவர்களுக்கு மட்டுமே அளித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். அதாவது, தாங்கள் அறிவிக்கும் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற வேண்டுமெனில், அவர் அவசியம் வலைப்பூ எழுதுபவராக இருக்க வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையையும் சேர்த்துவிடுங்கள். பின்னூட்டம் இடுகிறவர்கள் அனைவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டால் அதில் ஒரு சுவாரசியம் இல்லாது போய்விடும்.’

மன்னிக்கவும். என் வலைப்பூ வாசகர்களுக்காகத்தான் இந்தப் புத்தகப் பரிசுகளை அறிவித்துள்ளேனே தவிர, சக வலைப் பதிவர்களுக்காக அல்ல. பின்னூட்டம் இடுபவர்கள் அனைவரும் வலைப்பூ வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு பத்திரிகை தன் வாசகர்களுக்காகத்தான் பரிசுப் போட்டிகளை அறிவிக்குமே தவிர, சக பத்திரிகையாளர்களுக்கு அல்ல!

‘அதிக அளவில் பின்னூட்டம் இடுகிறவர்களுக்கும் புத்தகப் பரிசுகள் தரலாமே?’

இவர் தன் கடிதத்தின் ஆரம்பத்தில் சொன்ன ‘வலைப்பூ வாசிக்கச் செய்யும் உத்தி’ இதுதான். மேலும், வாசிக்காமலே கூட ‘வெரி நைஸ்’ என்று பின்னூட்டம் இட்டுச் செல்லும் அபாயம் இருக்கிறது. மன்னிக்கவும், அதை ஊக்குவிக்க நான் தயாராக இல்லை. என் பதிவுகளை வாசித்துதான் தீர வேண்டும் என்று நான் யாரையும் நேரடியாகவோ, இப்படிப் பரிசுகள் கொடுத்து மறைமுகமாகவோ நிர்பந்திக்க முடியாது. படிப்பதும் படிக்காததும் அவரவர் விருப்பம்.

‘ஒரு வருடத்துக்கு வெறும் 15 புத்தகங்கள்தான் பரிசாகத் தருவீர்கள் என்பது ரொம்பவும் அல்பத்தனமாகத் தெரிகிறதே? ஒரு பத்திரிகையாளரான நீங்கள் குறைந்தபட்சம் 50 புத்தகங்களாவது பரிசளித்தால்தானே ஒரு மரியாதை?’

ஐயா, சாமி! நான் போட்டியே நடத்தவில்லை; புத்தகமும் பரிசளிக்கவில்லை. ஆளை விடுங்க! :)

சும்மா சொன்னேன். பரிசளிப்பு என்பது என் சந்தோஷத்துக்கு. நான் இடும் பதிவுகளில் புத்தகம் பரிசளிக்க வாய்ப்பு இருந்தால், கண்டிப்பாக அதற்குத் தகுந்த போட்டிகளை அதில் அறிவிப்பேன்.

உதாரணமாக, இந்தப் பதிவையே எடுத்துக் கொள்ளுங்கள். கடிதம் எழுதிய சக பதிவர் (ம்ஹூம், அவர் யார் என்று கேட்டுப் போட்டி வைக்கப் போவதில்லை.) புத்தகப் பரிசளிக்க சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார். அவற்றில் எதையுமே என்னால் ஏற்க முடியவில்லை. உங்கள் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். நான் சிறப்பாகக் கருதும் (கடைப்பிடிக்க விரும்பும்) ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கு, ‘புதுமொழி 500’ புத்தகம் தயாரானதும் தலா ஒரு பிரதியை என் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

நினைவூட்டல்: கிருபாநந்தினி, ரோஸ்விக், பின்னோக்கி ஆகியோருக்குப் புத்தகப் பரிசு அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டு, அவர்களின் முழு அஞ்சல் முகவரியைக் கேட்டிருந்தேன். ரோஸ்விக் மட்டுமே தன் முகவரியைத் தந்துள்ளார். மற்ற இருவரும் தங்கள் முகவரிகளை இன்னும் அனுப்பி வைக்கவில்லை.

***
பிறருக்குப் பயன்படுங்கள்; பிறரால் பயன்படுத்தப்படாதீர்கள்!