வாகனப் பிராப்திரஸ்து!

சைக்கிளைத் தவிர வேறு வாகனம் செலுத்தத் தெரியாதவன் நான். சொல்லிக் கொள்ளக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், உண்மை அதுதானே!

ஆனந்த விகடனில் சேர்ந்த புதிதில் எல்லாம் சக நண்பர்கள் என்னை, “ஏன் சார் பஸ்ல வந்துட்டிருக்கீங்க? ஒரு டூ வீலர் வாங்குறதுதானே?” என்று அக்கறையுடன் கேட்பார்கள். டூ வீலர் வைத்திருந்தால் பெட்ரோல் அலவன்ஸ் உண்டு. பஸ்ஸுக்குச் செலவழிக்கும் பைசா மிச்சமாகும் (மாசம் சுமார் 500 ரூபாய் வரை; இப்போது இன்னும் அதிகம் கூட மிச்சமாகலாம்!).

ஆனாலும், நான் எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது என்கிற உண்மையை வெளிக்காட்டாமல், கெத்தாக அவர்களிடம், “ஐயே! டூ வீலர் வெச்சிருந்தா பெரிய தலைவலி சார்! அன்னிக்குப் பார்க்கிறேன், ஜெமினி ஃப்ளை ஓவர் மேல டிராஃபிக் ஜாம். இருபது நிமிஷமா வண்டிகள் நகரலே. கார்த்தால பத்து மணிக்கு வெயில் அடி பொளக்குது. நான் சுகமா பஸ்ஸுக்குள்ளே உட்கார்ந்துக்கிட்டு, கூலா புஸ்தகம் படிச்சுக்கிட்டிருக்கேன். ஜன்னல் வழியா பார்த்தா ஆம்பிளைங்க, பொம்பிளைங்க, வயசானவங்க, காலேஜ் பொண்ணுங்கன்னு சுட்டுப் பொசுக்குற வெயில்ல தலையில கர்ச்சீப் கட்டிக்கிட்டு, துப்பட்டாவால போர்த்திக்கிட்டெல்லாம் பாவமா கருகிக்கிட்டு நிக்குறாங்க. வேணாம் சார் எனக்கு இந்த அவதி. வீட்டுக் கிட்டேயே பஸ் ஸ்டாண்ட். ஏறி, சௌகரியமா ஜன்னலோரம் இடம் பிடிச்சு உட்கார்ந்தேன்னா, நேரே ஆபீஸ் வாசல்ல வந்து இறங்கப் போறேன். எனக்கு எதுக்கு டூ வீலர்? அதெல்லாம் நாலு இடம் போய் வர்ற ரிப்போர்ட்டர்களுக்கும் காமிராமேன்களுக்கும் வேணா அவசியமா இருக்கலாம். எனக்குத் தேவையில்லை” என்று மிதப்பலாகப் பதில் சொல்வேன். அவர்களும் அதை நம்பிவிட்டார்கள் என்றுதான் தோன்றியது.

உண்மையில், சென்னை டிராஃபிக்கில் டூ வீலர் ஓட்ட எனக்குப் பயமான பயம். காரணம், பஸ்ஸில் போய் வரும்போது தினம் ஒரு முட்டல் மோதல் தகராறையும், வாரம் ஒரு ஆக்ஸிடெண்ட்டையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன்! தவிர, என்னைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் டிராப் செய்யும் சக நண்பர்கள் சிலரது டூ வீலரில் பின்னால் உட்கார்ந்திருக்கும்போது, இவர் நம்மை பத்திரமாகக் கொண்டு போய் வீட்டில் சேர்க்க வேண்டுமே என்று எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்தது, வண்டியை அவர்கள் செலுத்திய விதம்.

விகடனில் என்னோடு பணியாற்றிய மூவர், பைக் ஆக்ஸிடெண்ட்டில் மண்டை சிதறி இறந்ததும் ஒரு முக்கியக் காரணம், நான் டூ வீலர் வாங்க பயப்பட்டதற்கு!

சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், சைக்கிளில்தான் தினமும் அலுவலகம் போய் வருவேன். அங்கே மேனேஜராகப் பணியாற்றிய துரைக்கும், விளம்பர மேலாளராகப் பணியாற்றிய சீனிவாசகமணிக்கும் (இவர்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கோபுர தரிசனம்’ என்னும் ஆன்மிக இதழை நடத்தி வருகிறார்) அலுவலக உபயோகத்துக்காக யமஹா பைக் வாங்கித் தந்தார் சாவி சார். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாததால், நான் பைக் வேண்டாம் என்று மறுத்து, தொடர்ந்து சைக்கிளிலேயே போய் வந்துகொண்டு இருந்தேன். சாவி சார் என்ன நினைத்தாரோ, ‘மோஃபா’ என்றொரு வாகனத்தை வாங்கி, எனக்கே எனக்கென்று வைத்துக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தார்.

சைக்கிள் போன்ற சின்ன வாகனம் அது. பெட்ரோலில் ஓடுவது. டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. கியர் கிடையாது. ஸ்டார்ட் செய்து ஏறி உட்கார்ந்தால், அதிக பட்சம் 30 கி.மீ. வேகத்தில் தேமே என்று போய்க்கொண்டே இருக்கலாம். வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டாலும், கவலையில்லை. சைக்கிள் போல் சுலபமாக மிதித்து ஓட்டிக்கொண்டு போய்விடலாம். அப்போது அதன் விலை வெறும் 3,000 ரூபாய்தான்! (யமஹா பைக் விலை அப்போது ரூ.20,000-க்குள்!) அதில்தான் நான் சாவி அலுவலகத்துக்கு ஓரிரு ஆண்டுகள் போய் வந்தேன். எனக்கு ரொம்பச் சௌகரியமாக இருந்தது அந்த வாகனம். அப்புறம், சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு ஒருமுறை வேலையை விட்டு நின்றபோது, அந்த வாகனத்தை சாவி ஆபீஸிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். பின்னர் சில மாதங்கள் கழித்துப் போய்ச் சேர்ந்தபோது, அதை மகன் பாச்சாவிடம் பணியாற்றுபவருக்கோ அல்லது வேறு யாருக்கோ கொடுத்துவிட்டிருந்தார் சாவி சார். நானும் அதன்பின் டூ வீலர் பற்றிக் கேட்கவில்லை.

‘மோஃபா’ மாதிரியே அந்நாளில் ‘சன்னி’ என்றொரு வாகனம் வந்தது. இரண்டு சக்கரங்களும், மோட்டாரும் உள்ள மிக மிக சிம்பிளான வாகனம். இதற்கும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. இதன் விலையும் ரொம்பக் குறைவு. ஆனால், அதை வாங்கும் அளவுக்குக்கூட எனக்கு அப்போது பண வசதி இல்லை.

சரி, நான்தான் அப்படி இருந்தேன் என்றால், என் வாரிசுகளையும் அப்படியே வளர்ப்பதா? என் மகள் கல்லூரிக்குப் போகத் தொடங்கிவிட்டாள். மகனும் இரண்டொரு ஆண்டுகளில் கல்லூரி போகத் தொடங்கிவிடுவான். ‘என்னை மாதிரியே பஸ்ஸில் போய் வா’ என்று அவர்களைச் சொல்ல முடியுமா? பஸ்ஸில் போய் வருவது ஒன்றும் தப்பில்லை. ஆனால், காலத்துக்கேற்ப கிடைக்கும் சௌகரியங்களை அனுபவிப்பதில், கற்றுக் கொள்வதில் ஒன்றும் ஆட்சேபணையில்லையே?

எனவே, மூன்று மாதங்களுக்கு முன்பு, என் மகளுக்காக ஸ்கூட்டி ஸ்ட்ரீக் வண்டி ஒன்று வாங்கினேன். என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக வாங்கும் டூ வீலர். அவளுக்கு அதை ஓட்டப் பயிற்சியளித்து, இந்த ஆண்டு இல்லையென்றாலும், அடுத்த ஆண்டிலாவது அவளே அதை கல்லூரிக்கு ஓட்டிச் செல்லவேண்டும் என்பது என் நோக்கம். அதற்கு முன்பு, வண்டியை மிகச் சரளமாகக் கையாள அவள் பழக வேண்டும் என்பதற்காகவே, உடனே டூ வீலர் வாங்கிவிட்டேன்.

சரி, அவள் அதை ஓட்டக் கற்பது ஒருபுறம் இருக்கட்டும்; மற்ற நேரங்களில் வண்டி, வீட்டில் சும்மா இருப்பதா? நான் ஓட்டத் தொடங்கிவிட்டேன்.

வண்டியை டெலிவரி எடுக்கும்போது நண்பர் ராஜாவும் கூட வந்தார். “வண்டி ஓட்டுவீங்க இல்லே?” என்று சந்தேகத்தோடு கேட்டார். அப்போதும் உண்மையைச் சொல்லாமல், “ஓட்டுவேன். பழக்கம் விட்டுப் போச்சு. வேற ஒண்ணுமில்லே! இதை எப்படி ஓட்டணும்?” என்று அவரிடம் கேட்டேன். இங்கே சாவி போடணும், இப்படி ஸ்டார்ட் பண்ணணும், இப்படி ஆக்ஸிலரேட்டரை முறுக்கணும், இது பிரேக் என்று சொல்லிக் கொடுத்தார். ‘ப்பூ... இவ்வளவுதானே!’ என்று திருகியதுதான் தாமதம், வண்டி விலுக்கென்று முன்னால் பாய்ந்தது. திடுக்கிட்டுப் போனாலும், பிரேக் பிடித்துச் சமாளித்துவிட்டேன்.

“என்ன, பத்திரமா வீடு வரைக்கும் போய்ச் சேருவீங்களா?” என்றார் ராஜா, பயத்துடன். “அதெல்லாம் தாராளமா போயிடுவேன். என்ன, கொஞ்சம் டச் விட்டுப் போயிடுச்சு. அதான்...” என்று சமாளித்துவிட்டு, விடைபெற்று, வண்டியைச் செலுத்தத் தொடங்கினேன்.

என் வாழ்க்கையிலேயே முதன்முதலாக, இந்த 52 வயதில், டூ வீலரை நான் ஓட்டத் தொடங்கிய முதல் நாளிலேயே, இரவில் ஹெட் லைட் போட்டுக்கொண்டு, திருப்பங்களில் சிக்னல் விளக்குகளை எரியவிட்டு, அணைத்து, நல்ல டிராஃபிக்கில் செலுத்த நேர்ந்தது என் அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. பத்திரமாக வீடு வந்து சேருவதற்குள், மனசுக்குள் உதறலாகத்தான் இருந்தது.

அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் வண்டியை அலுவலகம் எடுத்துப் போய் வந்தேன். நாலாம் நாளிலிருந்து வண்டி ஓட்டுவது கொஞ்சம் பழகி, மன உதறல் நின்றுவிட்டது. இருந்தாலும், தெளிவாக ஓட்டுகிறேனா, கான்ஃபிடெண்ட்டாக ஓட்டுகிறேனா என்பது எனக்கே சந்தேகமாக இருந்தது. சிக்னலில் காலூன்றி நிற்கச் சிரமப்பட்டேன். கால் சரியாக ஊன்றாமல் சறுக்கியது. வேகமாக ஓட்டும்போதுகூடப் பரவாயில்லை; டிராஃபிக்கில் சிக்கி, மெதுவாக ஓட்டும்போதுதான் சிரமமாக இருந்தது.

எப்படியோ... இதோ, மூன்று மாதங்களாக நானும் டூ வீலர் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. முன்னிலும் திருத்தமாகவே ஓட்டுகிறேன். எனக்கே தைரியமும் தன்னம்பிக்கையும் வந்திருக்கிறது. சாலையில் சக டூ வீலர் பயணிகள் பலர் ஓட்டும் அழகைப் பார்க்கும்போது, நான் ரொம்பவே மேல் என்று தோன்றுகிறது. கொட்டும் மழையிலும், மேடு பள்ளங்களிலும், கடுமையான டிராஃபிக் நெரிசலிலும் தெளிவாகவே ஓட்டி வந்திருக்கிறேன். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக என் மகளை உட்கார வைத்து ஓட்டிச் சென்று கல்லூரியில் இறக்கிவிட்டு, அப்படியே என் அலுவலகம் சென்று, மாலையில் கல்லூரிக்குப் போய் அவளையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறேன்.

நான் வண்டி ஓட்டத் தொடங்கிய இந்த மூன்று மாதத்துக்குள்ளாக கோடம்பாக்கம் மேம்பாலத்தில், கே.கே.நகர் நூறடி ரோட்டில், ஜெமினி பிரிட்ஜில், மவுண்ட் ரோடில் எங்கள் அலுவலத்துக்கு அருகில் என ஏழெட்டு ஆக்ஸிடெண்ட்களைப் பார்த்துவிட்டேன். என்றாலும், நான் வண்டி ஓட்டத் தொடங்குவதற்கு முன்பாக எனக்குள் இருந்த பயம் இப்போது இல்லை.

ஏற்கெனவே சைக்கிள் ஓட்டிய அனுபவம் இருப்பதால், டூ வீலர், அதிலும் ஸ்கூட்டி போன்ற சுலபமான வாகனம் ஓட்டுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. ஆனால், வாகன ஓட்டிகள் சில விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதால்தான் விபத்துக்கள் நேர்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது எனக்கு, இந்த மூன்று மாத அனுபவத்தில்.

டூ வீலரை சைக்கிள் ஞாபகத்தில் சாய்ந்து காலூன்றி நிறுத்தக்கூடாது. சைக்கிளின் எடை குறைவு. டூ வீலரின் எடையை (95 கிலோ) நம் கால்கள் தாங்காது. அதிலும் ஓட்டி வந்த அதே வேகத்தில் நின்று, காலூன்றி நிற்பது சிரமம். நிற்க வேண்டிய இடத்துக்கு முன்பே வேகத்தைக் குறைத்து மெதுவாக ஓட்டிப் போய், எந்தப் பக்கமும் சாயாமல் இரண்டு பக்கமும் கால்களைத் தரையில் ஊன்றினால், நிற்பது மிகச் சுலபமாக இருக்கிறது.

மெதுவாக ஓட்டுவது பாதுகாப்பு என்று, டூ வீலரில் சைக்கிள் வேகத்தில் போகக்கூடாது. அதுவும் விபத்துக்கு வழிவகுக்கும். அந்தந்த வாகனத்துக்கென்று ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான வேகம் இருக்கிறது. அந்த வேகத்துக்கும், நமது இயல்புக்குத் தோதான ஒரு வேகத்துக்குமான சராசரி வேகத்தை நம் அனுபவத்தில் கண்டுணர்ந்து, அந்த வேகத்தில் சீராகச் செல்வதே சரியானது.

சில குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட இடங்களில் சற்றுக் கூடுதலான வேகத்தில் செல்லவேண்டியிருந்தாலும் தப்பில்லை. ஆனால், தொடர்ந்து அதே வேகத்தில் செல்லாமல், மீண்டும் நமது பழைய சீரான வேகத்துக்குத் திரும்பிவிடுவதே நல்லது.

இடம், வலம் திரும்பும்போது, மறக்காமல் சிக்னல் விளக்கை எரியவிட்டுத் திரும்புவதே நல்லது. பின்னால் வருபவர்கள் அதற்கேற்ப தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, நமக்கு வழிவிடுவார்கள்; நம்மைக் கடந்து போவார்கள். நான் சாலையில் காணும் பலர் சிக்னல் விளக்கை எரியவிடாமல் திரும்புவதால்தான், பின்னால் வரும் வாகனங்கள் அவர்களின் மேல் மோதுவது போல் கிட்டே வந்து சுதாரிப்பதை நான் தினமும் காண்கிறேன். அதே போல், திரும்புவதற்குச் சற்று முன்னதாக சிக்னல் விளக்கை எரியவிடுவதே சரி; நாலாவது தெருவில் திரும்புவதற்கு முதல் தெருத் திருப்பத்திலேயே சிக்னல் விளக்கை எரியவிட்டால், பின்னால் வருபவர்களுக்குக் குழப்பம் வரும்.

சரி, போதும்! நிறுத்திக் கொள்கிறேன். மூன்றே மாதங்கள் டூ வீலர் ஓட்டிவிட்டு, இத்தனை உபதேசம் செய்யக்கூடாது!

***
தைரியம் என்பது பயமின்றி இருப்பதல்ல; பயந்த பின், அந்த நிகழ்வை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது!

நன்னனானேன் நான்!

Eசல், ஊC, Oட்டகம், Aறும்பு, Iவர், Oணான், Vநாயகர்... இப்படியெல்லாம் ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதுவது சின்ன வயதில் எனக்கொரு விளையாட்டு. அதற்காக ஆசிரியரிடம் அடி கூட வாங்கியிருக்கிறேன். ஆனால், பள்ளி வயதிலிருந்தே என்னால் தமிழில் தப்பில்லாமல் எழுத முடியும். இலக்கணப் பிழை, வாக்கியப் பிழைகள் இல்லாமல் எழுத முடியும்.

வீட்டுப் பாடம் எழுதி வரும்போது, அதில் தேவையில்லாத ஒரு வாக்கியத்தை எழுதிவிட்டால், அந்த வாக்கியம் என்னவென்றே தெரியாத அளவுக்குப் பேனாவால் பட்டை அடித்து மறைத்தால், எங்கள் தமிழய்யாவுக்குக் கோபம் வந்துவிடும். சிவப்பு மையால் மெல்லியதாக ஒரு கோடு போட்டு அந்த வாக்கியத்தை அடிக்க வேண்டும் என்பார். தேவையில்லாத வாக்கியம்தானே என்று அதைக் கண்டுகொள்ளாமலும் விடமாட்டார். அதைப் படித்துப் பார்த்து, அதில் எழுத்துப் பிழைகள் இருந்தால், அருகே அழைத்துத் தலையில் குட்டுவார். எனவே, தேவையில்லாமல் எழுதிவிட்ட வாக்கியமாக இருந்தாலும், அதில் எழுத்துப் பிழைகள் ஏற்படாதவாறு எழுதிப் பழகியதாலேயே எனக்குத் தமிழில் பிழையின்றி எழுதவும், பேசவும் முடிந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் பேச்சைக் கேட்கும்போது, என் காதுகள் இரண்டும் கருகிப் போகின்றன. பார்த்துக்கொள்ளுங்கள் என்பதை பார்த்துக் கொல்லுங்கள் என்றும், இந்த நாள் என்பதை இந்த நால் என்றும், ஒன்னே ஒன்னு கன்னே கன்னு என்றும் இவர்கள் லகர ளகர, னகர ணகர வித்தியாசமின்றி உச்சரிப்பதைக் கேட்கும்போது, தமிழை ஏன் இத்தனைச் சித்ரவதைப்படுத்துகிறார்கள் என்று வேதனையாக இருக்கும் (சுஜாதா விகடனில் எழுதிய ஒரு தொடர்கதையில், ‘னகர நகர வித்தியாசமின்றிப் பேசும் தொகுப்பாளிகள்’ என்று எழுத, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் அதைச் சுட்டிக்காட்டி, ‘னகரத்துக்கும் நகரத்துக்கும் எழுத்தில்தான் வித்தியாசமே தவிர, உச்சரிப்பில் என்ன வித்தியாசம் இருக்கிறது?’ என்று கேட்டு, பின்பு அதை ‘னகர ணகர’ என்று பிழை திருத்தியது ஞாபகம் வருகிறது.).

இளங் காலை என்றால், அதிகாலை நேரம்; அதுவே இளங் காளை என்றால், இளம் காளை மாட்டையோ அல்லது இளைஞனையோ குறிக்கும். தமிழில் உச்சரிப்புச் சுத்தம் மிகவும் முக்கியம்.

‘கத்தியை எடுத்துக் கொள்’ என்று சொன்னால், எதிராளி கத்தியை எடுத்துக்கொள்வான். ‘கத்தியை எடுத்துக் கொல்’ என்றால், கத்தியை எடுத்துச் சொன்னவன் வயிற்றிலேயே குத்திக் கொன்றுவிட்டுப் போய்விடுவான்.

‘வே’ என்ற எழுத்து வரவேண்டிய இடங்களில் எல்லாம் ‘சே’ என்று தவறாக அச்சானதால் ஏற்பட்ட குளறுபடியை மையமாக வைத்து, முன்பு நான் ஓர் ஏடாகூடக் கதை ஒன்று எழுதியிருந்தேன். ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் மிகவும் ரசித்துப் பாராட்டிய கதை அது.

தமிழ்ப் பத்திரிகைக்குத் தப்பில்லாத தமிழ் ரொம்ப முக்கியம். எழுத்துப் பிழைகள், வார்த்தைப் பிழைகள் அறவே இருக்கக்கூடாது. அர்த்தம் அனர்த்தமாகிவிடக் கூடாது. மாணவப் பத்திரிகையாளர்களுக்கு விகடன் கற்றுக் கொடுக்கும் அரிச்சுவடி, பிழைகளற்ற தமிழ்தான்.

இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவப் பத்திரிகையாளர்களுக்கான கூட்டம், தியாகராய நகரில் சிவாஜிகணேசன் வீட்டுக்கு எதிரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில், சென்ற மாதம் நடந்தது. பல ஆண்டுகளாகவே இதே மண்டபத்தில்தான் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது.

எழுத்தில் இயல்பாக ஏற்படும் பிழைகள், வாக்கிய அமைப்பில் ஏற்படும் குளறுபடிகள், அவற்றைத் தவிர்த்து எழுதும் முறை பற்றியெல்லாம் மாணவப் பத்திரிகையாளர்களுக்கு அந்தக் கூட்டத்தில் நான் விளக்கிச் சொன்னேன். ஒரு மணி நேரப் பேச்சில் முழுமையாக எல்லாவற்றையும் புரிய வைத்துவிட முடியாது. எழுத எழுதத்தான் மொழி நம் வசமாகும். இருந்தாலும், இப்படியெல்லாம் தவறுகள் வரலாம் என்று நாம் அடிக்கடி சந்திக்கும் வாக்கிய, எழுத்துப் பிழைகள் பற்றி மாணவர்களுக்கு அன்று நான் கோடி காட்டினேன்.

அவற்றில் சிலவற்றை இங்கே சொன்னால், உங்களுக்கும் அது உபயோகமாகவும், படிக்க சுவாரசியமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

அவைகள் என்று பலரும் எழுதுகிறார்கள். அவை என்பதே பன்மைதான். அதற்கு மேலும் ஒரு கள் விகுதி தேவையில்லை. சுயேச்சைதான்; சுயேட்சை அல்ல! அருகில் என்பதன் எதிர்ப்பதம்தான் அருகாமையில். அதாவது, அருகாமையில் என்றால், தொலைவில் என்றே பொருள். ஆனால் காலப்போக்கில், அருகில் என்பதைக் குறிப்பிட அருகாமையில் என்ற சொல்லையே பலரும் பயன்படுத்தி, அதுவே சரியானது போன்று வழக்கத்தில் வந்துவிட்டது. என்றாலும், தெரிந்தே அந்தத் தவற்றைச் செய்யாமல், நாம் அருகில் என்றே குறிப்பிடுவோமே!

மேல் வரியில் தவற்றை என்று எழுதியிருக்கிறேன். இதுவே சரி. ‘தவறைச் செய்யாமல்’ என்று பலரும் எழுதி, தவற்றைச் செய்கிறார்கள். மெய்ஞ்ஞானம் என்பதே சரி. மெய்ஞானம் அல்ல. அதேபோல், மனச்சாட்சிதான்; மனசாட்சி அல்ல!

ரஜினியின் ‘அருணாச்சலம்’ படம் வந்ததிலிருந்து பலரும் அருணாச்சலம் என்றே எழுத ஆரம்பித்துவிட்டனர். சினிமா சென்டிமென்ட்டுக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். ஆனால், அருணாசலம் என்பதே சரி. அசலம் என்றால் குன்று; மலை என்று பொருள். அருணா+அசலம்= அருணாசலம்; அதாவது, நெருப்பு மலை. வேங்கடாசலபதியையும் பலர் வெங்கடாஜலபதி என்று எழுதுகிறார்கள்.

கீழ்க்கண்ட பாராவைப் படியுங்கள்.

‘சகாரா நிறுவன அதிபர் சுப்ரதோ ராய் வீட்டு விழாக்கள் எதுவும் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் நடக்காது. தன் மனைவியோடு வந்து ஆஜராவார் டெண்டுல்கர். அதேபோல்தான் கபில்தேவும்! குடியரசு தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடுவார் இவர். அதில் வந்து கலந்துகொண்டு டான்ஸ் ஆடுவார் அமிதாப் பச்சன். இப்படி உலகையே ஆட்டுவித்தவரின் ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது?!’

இதில் இரண்டு முக்கியமான தவறுகள் உள்ளன. கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள். விடையைக் கடைசியில் சொல்கிறேன்.

2. ‘நாதா மல்லிக் என்பவருக்கு வயது 82. பரம்பரையாகத் தூக்கு போடும் தொழில். மூன்று வாரங்களில் தனஞ்செய் என்பவருக்கான தூக்குத் தண்டனையை அவர் நிறைவேற்ற வேண்டும். இதுவரை மல்லிக் மொத்தம் 24 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளார். ஆக, தனஞ்செய் அவருக்கு இருபத்தைந்தாவது இரை!’

3. ‘வெடி அதிர்ச்சியில் வீட்டின் கூரை அப்படியே சரிந்து விழ, உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த வீட்டின் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக இறந்துபோனார்கள். உடல்களில் சிறு காயம்கூட இல்லாமல் நான்கு சடலங்களும் மீட்கப்பட்டபோது, சோகம் நெஞ்சை அடைத்தது.’

4. இளைஞன் பரத் என்ன ஆனான், எங்கு போனான் என்று யாருக்குமே தெரியவில்லை. பதினைந்து நாட்களுக்குப் பிறகு, யாரோ ஒருவர் கொடுத்த தகவலை நம்பி, திருவண்ணாமலை சென்று, அங்கே ஒரு சத்திரத்தின் வாசல் திண்ணையில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பரத்தை கண்டுபிடித்தோம்.’

இவை போன்று இன்னும் பலப் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். சரி, மேலே உள்ள பாராக்களில் என்ன தவறு என்று பார்க்கலாமா?

நகைச்சுவையாக ஒன்று சொல்வார்கள்... ஓர் அலுவலகத்தில் பாபு, கோபு என்கிற சக நண்பர்கள் தங்கள் மனைவிமார்களுடன் உல்லாசப் பயணம் செல்வதெனத் தீர்மானித்தார்கள். சாயந்திரம் பாபு, கோபு இருவரும் பாபுவின் வீட்டுக்குச் சென்றார்கள். பாபுவின் மனைவியைப் பார்த்து, உல்லாசப் பயணம் போகவிருக்கும் தகவலைச் சொன்னான் கோபு. ‘யார் யார் போகிறீர்கள்?’ என்று பாபுவின் மனைவி கேட்க, ‘நீ என் மனைவி, நான் உன் கணவன்’ என்று சொன்னானாம் கோபு. அதிர்ந்துவிட்டாள் பாபுவின் மனைவி. ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்று அவள் பதற, கோபு நிதானமாக, ‘உல்லாசப் பயணம் போகப்போவது யார் யார் என்று கேட்டியே தங்கச்சி! அதான்... நீ, என் மனைவி, நான், உன் கணவன் ஆகிய நாலு பேரும் போகப் போகிறோம் என்றேன்’ என்று சொன்னானாம் சிரித்துக்கொண்டே.

நகைச்சுவைக்கு இது சரி. ஆனால், கேட்பவர் சரியாகப் புரிந்துகொள்ளும்படி சொல்ல வேண்டும், படிப்பவர்கள் சரியாக அர்த்தப்படுத்திக்கொள்ளும்படி எழுத வேண்டும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

இன்னொரு ஜோக்கும் உண்டு. ஒரு பையன் சொன்னானாம், ‘எங்கப்பா போலவே எனக்கும் படிச்சுப் பெரிய டாக்டர் ஆகணும்னு ஆசை!’ ‘அட, உங்கப்பா பெரிய டாக்டரா?!’ என்று நண்பன் கேட்க, இந்தப் பையன் சொன்னான்: ‘இல்லடா! எங்கப்பாவும் படிச்சுப் பெரிய டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டவர்!’

சரி, முதல் பாராவுக்கு வருவோம். ‘குடியரசு தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடுவார் இவர்’ என்பதில், இவர் என்பது யாரைக் குறிக்கிறது? கபில்தேவைச் சொல்லிவிட்டு, அடுத்த வரியிலேயே இவர் என்றால், அது கபில்தேவைத்தான் குறிக்கும். ஆனால், கட்டுரையாளர் சொல்ல வருவது சுப்ரதோ ராயைத்தான். எனவே, அங்கே அவர் என்பதற்குப் பதிலாக அவர் பெயரையே போட்டுவிடுவதுதான் உத்தமம்.

அந்த பாராவில் இன்னொரு முக்கியமான தப்பும் இருக்கிறது. ‘ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது?!’ என்று எழுதக்கூடாது. சுப்ரதோ ராய் ஏதோ பிரச்னையில் சிக்கிச் சில நாட்களாக அமைதியாக இருப்பதைத்தான் (இது சமீபத்திய செய்தி அல்ல; ஓர் உதாரணத்துக்காகவே தரப்பட்டுள்ளது.) கட்டுரையாளர் குறிப்பிட விரும்புகிறார். ஆட்டம் அடங்கிவிட்டது என்றால், அமரராகிவிட்டார் என்று பொருள் தரும். எனவே, ‘ஆட்டம் ஏன் அடங்கியிருக்கிறது?!’ என்று எழுதலாம்.

2. மல்லிக்குக்கு தூக்குப் போடுவது தொழில்தான். அதை ‘இரை’ என்று வர்ணித்து எழுதுவது அபாண்டம்!

3. படுகாயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தால் சோகம் நெஞ்சை அடைத்திருக்காது என்பது போன்று அர்த்தம் கொடுக்கிறது கடைசி வரி. ஒரே வாக்கியமாக இல்லாமல், ‘உடல்களில் சிறு காயம்கூட இல்லாமல் சடலங்கள் மீட்கப்பட்டன. நான்கு உடல்களையும் பார்த்தபோது நெஞ்சை சோகம் கவ்வியது’ என்று பிரித்து எழுதினால் சரியாக இருக்கும்.

4. சில வார்த்தைகளோடு விகுதிகள் சேரும்போது, அது தனி வார்த்தை போல் ஆகி, அனர்த்தம் விளையும். ஒரு பையனுக்கு ‘ச’ எழுத்தைச் சரியாக எழுதத் தெரியாது. இதை ஒரு ஆசிரியர் அந்தப் பையனின் பெற்றோரிடம், ‘உங்க பையனுக்கு சாவே வரலைங்க’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அது போன்ற ஒரு தப்புதான் நாலாவது பாராவில் உள்ளது. பரத்தை என்பது விலைமகளைக் குறிக்கும் சொல். தவிர்க்க வேண்டும். வாசல் திண்ணையில் பரத் தூங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டோம் என்று எழுதினால் நல்லது.

***
அனுபவம் இருந்தால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்; ஆனால், தவறான முடிவுகளை எடுக்கும்போதுதானே அனுபவமே கிடைக்கிறது?!
.

கலைஞரும் நானும்!

யதாகிவிட்டதற்கான அடையாளங்களில் முக்கியமான ஒன்று... சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருப்பது. நம் வயதுக்கு மரியாதை கொடுத்து, எதிராளி பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். நம் தலை மறைந்ததும், பக்கத்தில் உள்ள நண்பரிடம், “இப்ப இவ்வளவு நேரம் சொன்னாரே, இதை நூத்துப் பதினஞ்சாவது தடவையா என் கிட்டே சொல்றார். யப்பா... சரியான பிளேடு!” என்று கேலி செய்வார்.

சாவி சார் அப்படிப் பல முறை, சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்லி என்னைப் போரடித்திருக்கிறார். அவரின் அனுபவம் மற்றும் வயதை மனதில் கொண்டு, ஒவ்வொரு முறையும் புதிதாக அதை அப்போதுதான் கேட்பது போல், பிரயத்தனப்பட்டு முகத்தையும் குரலையும் சுவாரசியமாக்கிக் கொண்டு கேட்பேன்.

சமீப காலமாக நானும் அப்படி மற்றவர்களிடம் சொன்னதையே சொல்லி அறுக்கிறேனோ, வயது தன் வேலையை என்னிடமும் காட்டத் தொடங்கிவிட்டதோ என்று... ஊஹூம், நான் அதற்குக் கவலைப்படவில்லை; மரியாதை கருதி, மற்றவர்கள் என் அறுவையைத் தாங்கிக்கொண்டு இருக்கிறார்களோ என்றுதான் கவலைப்படுகிறேன்.

நேற்று ஏதோ பழங்குப்பையைக் கிளறிக்கொண்டு இருந்தபோது, யதேச்சையாக மேலே கொடுத்திருக்கும் போட்டோ கிடைத்தது. (கலைஞருக்கு இடப் பக்கத்தில் சாவி சார், வலப் பக்கத்தில் பின்னால் நான்; என் அருகில் கறுப்புப் பேன்ட்டும் சிவப்புச் சட்டையும் அணிந்திருப்பவர் மோகன் - சாவியில் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்; ஓவியர் ஜெயராஜின் சகோதரி மகன்; அவருக்கு அருகில் இருப்பவர் பெயர் ரமேஷ் - சாவி சாரின் மகன் பாச்சா என்கிற பாலசந்திரனின் வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்தவர்; இப்போதும் இங்கேதான் எங்கேயோ அருகில் இருக்கிறார். அடிக்கடி அவரை வழியில் சந்திக்கும்போது, ஒரு புன்சிரிப்போடு குட்மார்னிங் சொல்லிவிட்டுப் போவார். அவர் அருகில் இருக்கும் சிறுவன், சாவி சாரின் பேரன்; சாவி சாரின் இடப் பக்கத்தில் இருப்பவர் பெயர் துரை - சாவி இதழின் மேனேஜராக இருந்தார். துரைக்கு அருகில், சாவி வீட்டு வாட்ச்மேனாகப் பணியாற்றிய சித்திரை, அவருக்கு அருகில் சாவியில் அட்டெண்டராக இருந்த ஃபிரான்சிஸ் - எங்களோடு நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டுவிட்டுக் கிளம்பிய கலைஞர், அப்போதுதான் ஓடி வந்த ஃபிரான்சிஸுக்கு ஏமாற்றம் தர விரும்பாமல், மீண்டும் ஒருமுறை படியேறி வந்து அவரையும் நிற்கச் சொல்லிப் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெருந்தன்மை பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம் ) உடனே, கலைஞர் கருணாநிதியுடனான என் அனுபவங்களையும் எழுதலாமே என்று தோன்றிவிட்டது. இவற்றை முன்பே என் வலைப்பூக்களில் எழுதிவிட்டேனா, இல்லையா என்று ஞாபகம் இல்லை. ஒவ்வொன்றாகத் தேடிப் பார்க்கவும் பொறுமை இல்லை. எனவே, இங்கே அவற்றை எழுத விழைகிறேன்.

சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆர்-தான் முதல்வர். அவரது மறைவுக்குப் பின்பு, அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்ததில், இடையில் சொற்ப காலம் கலைஞருக்கு முதல்வராகும் வாய்ப்பை அளித்தார்கள் மக்கள்.

அப்போது சாவியில் வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்திருந்தோம். ‘அடுத்த முதல்வர் யார்? கலைஞரா, ஜானகியா, ஜெயலலிதாவா? சரியாக ஊகிப்பவர்களில் குலுக்கல் முறையில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்துப் புதிய முதல்வர் கையால் மாலை அணிவிக்கப்படும்’ என்பதே அந்தப் போட்டி!

தேர்தல் முடிவு தெரிவதற்குள்ளாகவே, கழுத்தில் பெரிய மாலை அணிந்த கலைஞர் படத்தை வெளியிட்டு, பொதுஜனம் அந்த மாலையை அணிவித்ததுபோல் அட்டையிலேயே ஒரு கார்ட்டூன் படத்தையும் சேர்த்து, முதல்வர் ஆனதற்குப் பாராட்டுத் தலையங்கம் எழுதி, சனிக்கிழமையன்றே அச்சுக்கு அனுப்பிவிட்டோம். சாவி சாருக்கு மகா தைரியம்; அசாத்திய தன்னம்பிக்கை.

திங்கள்கிழமை மாலையில் புத்தகம் ரெடியாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை காலையில் தேர்தல் முடிவு வெளியாகிற வரையில் எனக்குத்தான் பக்... பக் என்றிருந்தது. ஆனால், சாவியோ சற்றும் தளராமல், “சந்தேகமே இல்லாமல் கலைஞர்தான் இந்த முறை முதல்வர். நீ ஏன் வீணா பயந்து சாகறே?” என்று புன்னகையோடு சொன்னார்.

“ஒருவேளை ஜெயலலிதா முதல்வர் ஆகிட்டா, அவங்க எப்படி சார் பத்து வாசகர்களுக்கு மாலை அணிவிக்க ஒப்புக்குவாங்க?” என்று கேட்டேன்.

“கலைஞர்தான் முதல்வர். அவர் ஒப்புக்குவார். நீ பயப்படறது போல ஜெயலலிதா முதல்வர் ஆகிட்டா, அவங்க கிட்டே இந்தப் போட்டி விஷயத்தைச் சொல்லுவோம். அவங்க ஒப்புக்கிட்டா சரி; ஆனா, அவங்க கண்டிப்பா ஒப்புக்கமாட்டாங்க. நாம பத்திரிகையிலே எழுதிடுவோம்... முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தப் போட்டி பற்றிச் சொன்னோம்; அவங்க ஒப்புக்க மறுத்துட்டாங்க. ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவங்க கொடுக்குற மரியாதை இவ்வளவுதான்னு எழுதி, நம்ம வருத்தத்தை வாசகர்கள் கிட்டேயே பகிர்ந்துக்குவோம்!” என்றார்.

ஆனால், சாவி சார் நம்பியபடியேதான் நடந்தது. கலைஞரே முதல்வர் ஆனார். அடுத்து நாரத கான சபாவில் நடந்த ஒரு பெரிய விழாவில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வாசகர்களுக்குக் கலைஞர் மாலை அணிவித்துக் கௌரவித்தார்.

சில வருடங்களுக்குப் பின்பு ஜெயலலிதா முதல்வராக ஆனார். அவரது ஆட்சியில்தான், சாவி அட்டைப்படத்தில் ஒரு ஜோக் வெளியிட்டதற்காக, படமும் ஜோக்கும் ஆபாசமாக இருந்தது என்று மகளிர் அமைப்புகள் புகார் கொடுத்ததன்பேரில், சாவி சார், நான், பிரஸ் மணி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டோம். இந்தச் சம்பவத்தை விரிவாக முன்பு எழுதிய ஞாபகம்.

அந்தச் சந்தர்ப்பத்தில்தான், அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில்தான் கலைஞருடன் நெருக்கமாகச் சற்று நேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, “என்ன தம்பி, கைதுன்னதும் பயந்துட்டீங்களா? பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜம். ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க அய்யாவும் (சாவி) நீங்களும் எந்தப் பிரச்னையும் இல்லாம வெளியே வரலாம். நான் பார்த்துக்கறேன்!” என்றார் கலைஞர், என் தோளில் கைவைத்து ஆறுதல் படுத்தும் விதமாக.

பின்பு, சூழ்நிலையைக் கலகலப்பாக்கும்பொருட்டு, அந்த ஜோக்கை அட்டைப் படத்தில் போட்டது குறித்துப் பேசினார். முதலிரவு அறையில் கணவன் அமர்ந்திருக்க, அவனுக்கு ஒரு சொம்பில் பால் எடுத்து வருகிறாள் மனைவி. அவள் முழு நிர்வாணமாக இருக்கிறாள். அதிர்ச்சியாகிற கணவனைப் பார்த்து, “உங்களுக்கு ஆடையில்லாத பால்தான் பிடிக்கும்னு அம்மா சொன்னாங்க” என்கிறாள். அதுதான் ஜோக்! படத்தில், பெண்ணின் முதுகுப்புறத்தைதான் வரைந்திருந்தார் ஓவியர் ஜெயராஜ்.

ஆசிரியர் சாவி வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், சாவி அட்டைப் படத்தில் நான் வெளியிட்ட ஜோக் இது. மூன்று மாத காலம் அமெரிக்காவில் இருந்துவிட்டு, மேற்படி சாவி இதழ் வெளியான இரண்டாவது நாள், சனிக்கிழமையன்று சென்னைக்கு வந்துவிட்டார் சாவி. அன்றைய தினமே சாயந்திரம் நாங்கள் கைது.

“எனக்குத் தெரியாது. நான் இந்த அட்டைப்படத்திற்குப் பொறுப்பில்லை. என் கவனம் இல்லாமல், நான் ஊரில் இல்லாதபோது சாவி பொறுப்பாசிரியர் செய்த வேலை இது” என்று என்னைக் கழற்றிவிடவில்லை சாவி சார். சாயந்திரம் சாவி சார் வீட்டின் முன் வந்து சாவி இதழ்களைக் கிழித்துப் போட்டு, சாவி சாரை ஏக வசனத்தில் கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்த மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்களை உள்ளே அழைத்து, மன்னிப்புக் கேட்டார் சாவி.

“அதெல்லாம் முடியாது! வெளியே வந்து அத்தனை பேரிடமும் மன்னிப்புக் கேள்” என்று வெளியே இருந்தவர்கள் கோஷம் இட்டார்கள். அதன்படி சாவி சார் வெளியே வந்து, “அது ஒரு சாதாரண ஜோக்தான். அதில் எந்த ஆபாசமும் எனக்குத் தெரியவில்லை. வெகுளித்தனமாக உள்ள மனைவியைப் பற்றிய ஜோக் அது. அதில் உள்ள நகைச்சுவைதான் எனக்குப் பட்டது. ஆனால், உங்களுக்கு அது ஆபாசமாகத் தெரிந்தால், உங்கள் மனதை அது புண்படுத்தியிருந்தால், உங்கள் அத்தனை பேரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கைகூப்பி மன்னிப்புக் கேட்டார் சாவி.

பிறகு அவர்கள் கலைந்து சென்றார்கள். இது நடந்தது மாலை 4 மணிக்கு. எங்களைக் கைது செய்து அழைத்துப் போனது 5:30 மணிக்கு. கலைஞர் எங்களை வந்து பார்த்தது இரவு 12:30 மணிக்கு.

முதல்வராக இருந்த சமயத்திலும் சரி, கட்சித் தலைவராக மட்டுமே இருந்த சமயத்திலும் சரி, பலமுறை சாவி சார் வீட்டுக்கு வந்திருக்கிறார் கலைஞர். போனிலும் பலமுறை என்னோடு பேசியிருக்கிறார். சாவி சாரைக் கேட்டு போன் செய்வார். சாவி சார் வந்து பேசும் வரையில், அந்த வார இதழில் உள்ள சிறப்புக்கள், லே-அவுட், தலைப்பை வேறு விதமாக வைத்திருக்கலாம், படத்தை இன்னும் சற்றுச் சின்னதாகப் பிரசுரித்திருக்கலாம் போன்ற ஆலோசனைகளை தன்னுடைய அபிப்ராயமாக என்னிடம் சொல்வார். அத்தனையும் சரியாகவே இருக்கும். இத்தனைப் பணிகளுக்கு நடுவிலும் எப்படி இவரால் ஒரு பத்திரிகையை முழுமையாகப் படித்துக் கருத்துச் சொல்ல முடிகிறது என்று எனக்கு வியப்பாக இருக்கும்.

‘சின்னச் சின்ன சந்தோஷங்கள்’ என்னும் தலைப்பில், வாசகர்களின் விருப்பங்களைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்து சாவியில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். அப்போது பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீப்ரியாவைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஒரு வாசகர் கேட்டார். கவிஞர் வைரமுத்துவுடன் உரையாடி, ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினார். அந்த வகையில் கலைஞர் கருணாநிதியுடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு வாசகர் விரும்பினார். அவர் மாம்பலம் ஸ்டேஷன் ரோடில் படக் கடை வைத்திருந்தார். தீவிர தி.மு.க. தொண்டர்.

கலைஞர் தினமும் காலையில் அறிவாலயத்தில் வாக்கிங் செல்வதை அப்போது வழக்கமாக வைத்திருந்தார். சாவி போட்டோகிராபர் ராதாகிருஷ்ணனோடு (ராகி) அந்த வாசகரை அனுப்பி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, கலைஞர் வாக் போகும்போது பார்த்துப் பேசி, அவரோடு அந்த வாசகரை நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்து வந்துவிடும்படி சொன்னேன். சாவி என்றால் கலைஞர் மறுக்காமல் ஒப்புக் கொள்வார் என்று நம்பினேன். அப்படியே கலைஞர் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொள்ள, அவர் பக்கத்தில் அந்த வாசகரை நிற்க வைத்து வெற்றிகரமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் ராதாகிருஷ்ணன். அந்தப் படம் சாவி பத்திரிகையிலும் பிரசுரமாகியது.

சில மாதங்களுக்கு முன், கட்டுரையாசிரியர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது) என்னைத் தொடர்பு கொண்டு, தான் சில கைது நடவடிக்கைகள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டு இருப்பதாகவும், சாவி கைது பற்றியும், அன்றைய தினம் என்ன நடந்தது என்றும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே சொன்னேன். பின்பு, “என்னைக் கேட்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது? என் மொபைல் நம்பர் எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டேன்.

“தலைவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தேன். அன்றைக்கு அவர் வந்து, ஸ்டேஷனில் சாவி சாரைப் பார்த்துப் பேசியது பற்றியெல்லாம் சொன்னார். பின்பு, ‘இன்னும் விரிவாக இது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட ரவிபிரகாஷ் இப்போது ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டால் மேலும் விவரம் கிடைக்கலாம்’ என்று சொன்னார். அதன்படி விகடனைத் தொடர்புகொண்டு உங்கள் மொபைல் எண்ணைப் பெற்றேன்” என்றார் அவர்.

எனக்கு இது மிக மிக ஆச்சரியமாக இருந்தது. மிகச் சாதாரணனான என் பெயரை நினைவு வைத்துக்கொண்டு கலைஞர் இப்படிச் சொல்லியிருப்பாரா என்று என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. என்றாலும், உடனேயே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு கலைஞரைச் சென்று சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், சந்திக்கவில்லை.

எனக்கு அப்பாயின்ட்மென்ட் தருவாரோ, மாட்டாரோ என்கிற ஐயமில்லை. பழைய நிகழ்ச்சிகளை ஞாபகமூட்டிக் கடிதம் அனுப்பினால், கண்டிப்பாக என்னை அழைத்துப் பேசுவார் கலைஞர். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த முதிய வயதிலும் சோர்விலாது, சுறுசுறுப்புடன் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அவருடன் செலவிடும் சில நிமிடங்கள் எனக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜியைக் கொடுத்து, இந்த ஜென்மம் முழுக்க நான் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

ஆனால், எந்த முக்கியக் காரணமும் இன்றி, சும்மா போய்ச் சந்தித்து, அவரது பொன்னான நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

“கலைஞர் என்றதும் உங்களுக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வருவது என்ன?” என்று ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு சாவி சொன்ன பதில்:

‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது’ என்னும் திருக்குறள்.

சத்தியமான வார்த்தை!

***
உண்மை பேசுவதில் ஒரு சௌகரியம் என்னவென்றால், எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டாம்.