ரத்தக்கண்ணீர்


நம்மவர்களுக்கு நம்மவர்களை மதிக்கத் தெரியாது.

எந்தத் துறையிலும் சிறப்பானவர்களைப் பற்றிக் கேட்டால், யாராவது ஒரு வெளிநாட்டுக்காரரைப் பற்றித்தான் சொல்வார்களே தவிர, இங்கே இருக்கிறவர்களைப் பற்றி வாயே திறக்கமாட்டார்கள். 'அற்புதமான சினிமா எது?' என்று கேட்டுப் பாருங்கள்; 'பை சைக்கிள் தீவ்ஸ்', 'பென்ஹர்' என்று தாங்கள் பார்த்திராத, ஆனால் கேள்விப்பட்டிருக்கிற பெயர்களைச் சொல்லுவார்கள். 'சிறப்பான டைரக்டர் யார்?' என்று கேளுங்கள்; சட்டென்று 'அகிரா குரோசோவா' என்பான். அவர் மூஞ்சி எப்படியிருக்கும் என்று கூடத் தெரியாது இவனுக்கு.

நம்ம சிவாஜிக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. நமது இசை ஜாம்பவான்களான கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி., இளையராஜாவெல்லாம் இசை மாமேதைகள். நம்மிடையே இருந்த, இன்னும் இருக்கிற பல இயக்குனர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால், அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் கொடுத்திருக்கிறோமா? உரிய முறையில் உயரிய விருதுகள் கொடுத்து கவுரவித்திருக்கிரோமா? மறைந்த நகைச்சுவை மாமேதை நாகேஷுக்கு ஒரு பத்ம விருது கிடையாது; வாழும் கலைஞர் எம்.எஸ்.வி-க்கு உரிய விருதுகள் இன்னமும் வழங்கப்படவில்லை.

நேற்றைய ஞாயிற்றுக் கிழமையன்று 'ரத்தக்கண்ணீர்' சிடி வாங்கி வந்து வீட்டில் போட்டுப் பார்த்தேன். 1954-ல் வெளியான படம். அடேங்கப்பா..! 55 வருடங்களாகியும் இன்றைக்குப் பார்த்தாலும் கொஞ்சமும் சலிப்பின்றி, விறுவிறு சுறுசுறுவென்று இருந்தது படம்.

எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்கு எந்த உலக நடிகனும் கிட்டே வரமுடியாது என்று சொல்வேன். ஆரம்பத்தில் அந்தப் பணக்காரத் திமிர், பின்னர் குஷ்டம் வந்தபோதும் இம்மியளவும் குறையாத நையாண்டி எனப் பின்னிஎடுத்திருக்கிறார் மனுஷன். இடி, மழை, புயலில் அவரை எம்.என்.ராஜம் வீட்டை விட்டுத் துரத்தும் காட்சியை அவ்வளவு த்ரில்லாகப் படமாக்கியிருப்பார்கள் கிருஷ்ணன்-பஞ்சு.

'குற்றம் புரிந்தவன்' பாடலைப் படமாக்கியிருக்கும் விதமும், பாடலின் இடையிடையே எம்.ஆர்.ராதாவின் குரலும் அபாரம். பாட்டு முடிந்து, அவர் கடற்கரைச் சாலையில் நீள நெடுக கையை வீசிக்கொண்டு நடந்து வரும் காட்சி மிகவும் அற்புதம்!

இதன் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு. கலக்கியிருக்கிறார். 'நாய்க்கு என்னடா போட்டே?' 'சோறு போட்டேன்.' 'சோறு போட்டே ஃபூல்! சோறு தின்கிற நாய் இந்திய நாய். இது அமெரிக்க நாய். அவிழ்த்துவிடு, இஷ்டப்பட்டதைத் திங்கட்டும்' என்கிற பணத் திமிராகட்டும்... 'ஜீவகாருண்ய கட்சியைச் சேர்ந்தவங்களா? அப்படின்னா என்னப்பா அர்த்தம்?' 'நாங்க உயிர்களைக் கொல்லமாட்டோம்.' 'ஓஹோ.. ராத்திரில மூட்டைப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?' என்று கேட்கிற நக்கலாகட்டும்...

இன்றைக்கும் உலக அளவில் பேசப்படவேண்டியவர் திருவாரூர் தங்கராசு. ஆனால், என்ன ஆனார்? ரத்தக்கண்ணீர் படத்துக்குப் பிறகு வேறு எதற்காவது வசனம் எழுதினாரா? எனக்குத் தெரியவில்லை.

அதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே... நம்மவர்களுக்கு நம்மவர்களை மதிக்கத் தெரியாது!
*****
ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு ஏற்ற மிக நல்ல நாள் நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் இருக்கிறது.

0 comments: