
இன்றைக்கு சன் டி.வி-யில் ‘அறை எண் 305-ல் கடவுள்’ திரைப்படம் போட்டார்கள். என் அன்புக்குரிய நண்பர் சிம்பு என்கிற - சிம்புதேவன் என்கிற - செந்தில்குமார் இயக்கிய படம் அது.
தனது முதல் படமான ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’யிலேயே தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர் சிம்பு. அடுத்து அவர் இயக்கிய ‘அறை எண் 305-ல் கடவுள்’ படமும் மிக அருமையான படம். மூன்றாவதாக இயக்கிக்கொண்டு இருக்கும் ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ படமும் மிக வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. அவர் அந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வார் என்று என் மனசுக்குள் ஒரு பிம்பம் இருக்கிறது. அவரோடு அதிகம் பழகியிருப்பதால், அவரின் சிந்தனைப் போக்கு எனக்கு ஓரளவு தெரியும்.
விகடனில் அவர் என்னோடு பணியாற்றியபோது, ஒரு முறை அவர் என்னிடம், “சார், சாவியில நீங்கதான் என்னோட முதல் சிறுகதையைப் பிரசுரிச்சு ஊக்குவிச்சீங்க” என்றார். நான் ஆச்சரியமாக, “அப்படியா! சிம்பு என்ற பேர்ல யார் கதையையும் நான் பிரசுரிச்ச ஞாபகமே இல்லையே?” என்றேன். “இல்லை. நான் ஹில்கூ என்கிற புனைபெயரில் எழுதி அனுப்பியிருந்தேன்” என்றார். அதென்ன ’ஹில்கூ’ என்று கேட்டேன். “Senthilkumar என்கிற என் பெயரின் நடு ஐந்து எழுத்தை எடுத்து உருவாக்கிய பெயர் அது” என்றார்.
“ஹில்கூங்கிற பேரைக் கேட்டதும், இப்போ ஓரளவுக்கு ஞாபகம் வருது. ஒரு மனோதத்துவ டாக்டர் கிட்டே ஒருவரைப் பைத்தியம்னு அழைச்சுக்கிட்டுப் போவாங்க. கடைசியில், அழைச்சுக்கிட்டு வரப்பட்டவர் பைத்தியம் இல்லை, அவரை அழைச்சுட்டு வந்தவர்தான் பைத்தியம் என்பது மாதிரி அந்தக் கதை இருக்கும். படம் கூட ஜெயராஜ்தான் போட்டிருப்பார். சரியா?” என்றேன்.
“வாவ்! எப்படி சார் இவ்ளோ ஞாபகம் வெச்சுட்டிருக்கீங்க? என்னால நம்பவே முடியலை!” என்று அலறியேவிட்டார்.
ஒருநாள், இயக்குநர் சேரனிடம் உதவியாளராகச் சேர வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், “போய்ச் சேரட்டுமா, உங்க அட்வைஸ் என்ன?” என்று கேட்டார். “உடனே போய்ச் சேருங்க. நீங்க இளைஞர். இன்னும் பெரிய அளவுல வரவேண்டியவர். வாய்ப்பு கிடைக்கும்போது நல்ல முறையில் பயன்படுத்திக்குங்க. உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு. பெஸ்ட் ஆஃப் லக்!” என்றேன்.
அன்றிலிருந்து தான் அசிஸ்டெண்ட் டைரக்டராகப் பணிபுரிந்த ஒவ்வொரு படத்துக்கும், எனக்குச் சௌகரியமாக முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்று பார்க்கிற மாதிரி நான்கு சினிமா டிக்கெட்டுகளை மறக்காமல் அன்போடு தந்து வந்தார். இம்சை அரசனுக்கும் அப்படி டிக்கெட்டுகள் கொடுத்தபோது ஒன்று சொன்னார்... “சார், விகடன்ல ரெட்டைவால் ரெங்குடு, முன்ஜாக்கிரதை முத்தண்ணான்னு ஏற்கெனவே மதன் சார் போட்ட மாதிரி கேரக்டர் ஜோக்ஸ் போடச் சொல்லி எம்.டி. (ஆசிரியர் பாலசுப்ரமணியன்) சொன்னாரு. அதன்படி நான் ரெண்டு செட் ஜோக் தயார் பண்ணி உங்க கிட்டே கொடுத்தேன். ஒண்ணு, சயின்ஸ்ஃபிக்ஷன் ஜோக். ஏலியன்களெல்லாம் வரும். மற்றது அசட்டு அரசன் ஜோக்ஸ். நீங்க ரெண்டாவதுதான் நல்லாயிருக்குன்னு ஓ.கே. பண்ணி எம்.டி-க்கு அனுப்பினீங்க. அதைத்தான் இப்போ முழு திரைப்படமாக்கியிருக்கேன்.”
திறமையான டைரக்டர் எனப் புகழ்பெற்றபோதிலும், எப்படித்தான் கொஞ்சம் கூட பந்தா என்பதே இல்லாமல் இத்தனை எளிமையாக இன்னமும் அவரால் பழக முடிகிறது என்பது நிஜமாகவே எனக்கு ஆச்சரியாமாக இருக்கிறது. இந்த எளிமையே அவரை இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
வாழ்க நண்பர் சிம்பு என்கிற சிம்புதேவன் என்கிற செந்தில்குமார்.
*****
பிறருக்குத் தருவதற்கு மிக மிக மலிவான, அதே சமயம் மிக மிகச் சிறந்த பரிசுப் பொருள் ஒன்று உண்டு. அதன் பெயர் - அன்பு!
பிறருக்குத் தருவதற்கு மிக மிக மலிவான, அதே சமயம் மிக மிகச் சிறந்த பரிசுப் பொருள் ஒன்று உண்டு. அதன் பெயர் - அன்பு!