(அசோக)மித்திரனின் மித்திரன் நான்!

ண்பர் முகில் கொடுத்திருந்த லிங்க் மூலம் பாலுசத்யா பிளாகில் போடப்பட்டிருந்த, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் அசோகமித்திரனின் நேர்காணலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அவருடனான பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டது.

அசோகமித்திரனின் பல சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அவரது சிறுகதை ஒன்றில் மகாத்மா காந்தியை ஒருவர் கடுமையாக விமர்சிப்பார்; மற்றவர் அதை மறுத்து ஆதரவாகப் பேசுவார். ரொம்ப காலத்துக்கு முன் படித்தது. கதைத் தலைப்பு ஞாபகமில்லை. ஆனால், ரொம்பத் துணிச்சலாக எழுதப்பட்ட கதை அது.

‘எலி’ என்று ஒரு சிறுகதை. மிகவும் ரசனையாக எழுதப்பட்ட கதை அது. ஓர் எலியைக் கொல்வதற்காக ஒருவன், சூடாக அப்போதுதான் போடப்பட்டுக்கொண்டு இருக்கும் மசால் வடை ஒன்றை வாங்கிக்கொண்டு வருவான். ‘இதை நான் தின்பதற்காக வாங்குகிறேன் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஓர் எலியைக் கொல்வதற்காக வாங்கிப் போகிறேன் என்று தெரிந்தால் வருத்தப்படுவானோ?’ என்று அவன் மனசுக்குள் நினைத்துக் கொள்வான். எலிப்பொறியில் வடையைப் பொருத்தி வைத்துவிடுவான். மறுநாள் காலை எலி கழுத்து நசுக்குண்டு இறந்திருக்கும். அதன்பின் அசோகமித்திரன் கடைசி வரியாக எழுதியிருந்ததுதான் ரொம்ப டச்சிங்! ‘அந்த வடை துளியும் தின்னப்படாமல் முழுசாக இருந்தது கண்டு அவன் மனம் கலங்கியது’ என்று எழுதியிருப்பார். சாகிற எலி கடைசி நேரத்தில் அந்த வடையைச் சுவைத்துவிட்டாவது சாகக் கூடாதோ! பாவம், அதற்குக் கொடுப்பினை அவ்வளவுதான்!

30 ஆண்டுகளுக்கு முன், நான் சென்னைக்கு வந்து சில மாத காலம் தங்கியிருந்த சமயத்தில், கே.கே.நகர் பள்ளியின் (இப்போது சரவணபவன் எதிரில் உள்ள பள்ளி) வெளியே ஒரு கரும்பலகையில் ‘இன்று காலை 10 மணிக்கு எழுத்தாளர் அசோகமித்திரன் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றுகிறார்’ என்று சாக்பீஸால் எழுதியிருந்ததைக் கண்டேன். அப்போது சரியாக மணி 10. உடனே ஓர் உந்துதலில் பள்ளியின் உள்ளே சென்றேன். வாட்ச்மேன் தடுத்து நிறுத்திவிட்டார். ‘யார்?’ என்று விசாரித்தார். ‘நானொரு வழிப்போக்கன். அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கவேண்டும். என்னை உள்ளே அனுமதியுங்கள்’ என்றேன். மறுத்துவிட்டார். அப்போதைய என் தோற்றம் அத்துணை மதிப்புக்குரியதாய் இல்லை போலும்! ‘இங்கேயே நின்றுகொண்டு கேள்’ என்றார். அப்படியே காம்பௌண்ட் கேட் அருகில் நின்று கேட்டேன். ஸ்பீக்கர் ஒலி ஒரே இரைச்சலாக இருந்தது. வார்த்தைகள் எதுவும் தெளிவாகக் காதில் விழவில்லை. எனவே, கிளம்பிப் போய்விட்டேன்.

அதன்பின்பு, திரு. அசோகமித்திரன் அவர்களை எனக்கு சாவி நாட்களிலிருந்து பழக்கம். ‘சாவி’யில் நான் முழுப் பொறுப்பு ஏற்றிருக்கும்போதுதான் அவர் அதில் ‘மானஸரோவர்’ தொடரை எழுதத் தொடங்கினார். வாராவாரம் தம் மகன் மூலம் அந்த வார அத்தியாயத்தைக் கொடுத்து அனுப்புவார். மற்றபடி அப்போது நேரில் பார்த்ததில்லை.

நான் அப்போது மேற்கு மாம்பலத்தில் என் தங்கை குடும்பத்தோடு ஒரு சிறு குடித்தனத்தில் தங்கியிருந்தேன். ஒரே ஒரு சின்ன அறைதான். ஒருவர் நிற்பதற்கு மட்டுமேயான கிச்சன். அங்கே இருந்த எல்லாக் குடித்தனங்களும் அப்படித்தான் மிகச் சிறியவை. மொத்தம் பத்து குடித்தனங்கள் இருக்கும். அங்கே இருந்த ஆணகள் எல்லோரும் இரவில் மொட்டை மாடியில்தான் அரட்டை அடித்தபடி படுத்து உறங்குவோம்.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை, காலை 12 மணியளவில் நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு பெரியவர் வந்தார். வெளியே நின்றபடியே, “ரவிபிரகாஷ் இருக்காரா?” என்று கேட்டார். “வாங்க உள்ளே” என்று அழைத்தேன். ஒரு ஸ்டீல் நாற்காலியை எடுத்துப் போட்டேன். “இருக்கட்டும், பரவாயில்லை. இதைக் கொடுத்துட்டுப் போகத்தான் வந்தேன்” என்று ஒரு கவரை நீட்டினார். மேலே மானஸரோவர் என்று எழுதியிருந்தது.
“அசோகமித்திரன் கொடுத்துட்டு வரச் சொன்னாரா? வழக்கமா அவர் பையன் வந்து தருவார். இன்னும் வரலையேன்னு பார்த்தேன்” என்றேன். “ஆமாம். அவர் பையன் பம்பாய் போயிருக்கான். அதான், நீயே போய்க் கொடுத்துட்டு வந்துடுன்னு என்கிட்டே கொடுத்தனுப்பினார். சரி, நான் வரேன்” என்றார். வெயிலில் நடந்து வந்திருந்ததில் அவர் முகம் பூராவும் வேர்த்திருந்தது. “மோர் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டேன். “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஒரு டம்ளர் தண்ணி மட்டும் கொடுங்க, போதும்” என்று வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினார். “நீங்க யாரு?” என்றேன். அவர் என் கண்களை ஆழமாகப் பார்த்து, “அசோகமித்திரன்” என்று சொல்லிவிட்டு, “வரேன்” என்று விறுவிறுவென்று கிளம்பிப் போனார்.

பாதிச் சாப்பாட்டில் எனக்குப் புரைக்கேறிவிட்டது. எச்சில் கையோடு எழுந்து வெளியே ஓடினேன். அவர் குடித்தனத்தின் குறுகலான சந்தைக் கடந்து தெருவில் இறங்கி மறைந்துவிட்டார்.

ஒரு கணம் என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ கனவு மாதிரி இருந்தது. அத்தனைப் பெரிய எழுத்தாளரா என் வீட்டுக்கு வந்து அருகில் அமர்ந்து என்னோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்! 30 வருடத்துக்கு முந்தைய நிகழ்வு ஞாபகத்துக்கு வந்தது.

அதன்பின், அந்த வாரத்திலேயே ஒருநாள் நானே அவரைத் தேடிச் சென்றேன். அவர் அப்போது தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில், கிருஷ்ணவேணி தியேட்டரை ஒட்டிய ஒரு தெருவில் இருந்தார். வீட்டைக் கண்டுபிடித்துப் போனேன். “இங்கே எழுத்தாளர் அசோகமித்திரன்னு...” என்று குரல் கொடுத்தேன். “எழுத்தாளர் கிழுத்தாளர் யாரும் இங்கே இல்லை. நான் தியாகராஜன்தான் இருக்கேன். உள்ளே வாங்க” என்றார். போனேன். குறுக்கே இரண்டு மூன்று பெஞ்சுகள் போட்டு, அவற்றின் மீது ஏகப்பட்ட புத்தகங்களைக் குவித்து வைத்து, நடுவே நின்று ஏதோ தேடிக்கொண்டு இருந்தார்.

“சார், திடீர்னு இப்படி நீங்களே கிளம்பி என் வீட்டுக்கு வருவீங்கன்னு நான் நினைக்கலே!” என்றேன்.

“ஏன், அதனால என்ன?” என்றார்.

“உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்? போன் பண்ணிச் சொல்லியிருந்தா நானே வந்து வாங்கிட்டுப் போயிருப்பேனே!” என்றேன். “வர ஞாயிற்றுக் கிழமை நானே வந்து சேப்ட்டரை வாங்கிட்டுப் போறேன்.”

“சரி” என்றார்.

அதன்படியே, அடுத்தடுத்து நாலைந்து வாரங்கள் தொடர்ந்து அவர் வீட்டுக்குப் போய் மானஸரோவர் அத்தியாயங்களை வாங்கிக் கொண்டு வந்தேன்.

அதன்பின் ஒருநாள் அவரிடமிருந்து போன் வந்தது. “இனிமே நீங்க வர வேணாம். என் பையன் வந்துட்டான். நான் அவன்கிட்டேயே கொடுத்தனுப்பறேன். அதுதான் முறை!” என்றார்.

சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டு, நான் ஆனந்த விகடனில் சேர்ந்திருந்த புதிது. அசோகமித்திரனுக்கு சாவி பத்திரிகை நின்றது தெரியும். நான் விகடனில் சேர்ந்தது தெரியாது. அப்போது அவரிடமிருந்து என் வீட்டு முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ஒரே ஒரு வரி மட்டுமே எழுதியிருந்தார்...

“ரவி, இப்போது எங்கே இருக்கிறீர்கள்?”

*****
ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் எப்போதும் மூடிய கதவையே பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!

4 comments:

SPIDEY said...

//“நீங்க யாரு?” என்றேன். அவர் என் கண்களை ஆழமாகப் பார்த்து, “அசோகமித்திரன்” என்று சொல்லிவிட்டு, “வரேன்” என்று விறுவிறுவென்று கிளம்பிப் போனார்.//

stupendous! by the way mithiran means what?

butterfly Surya said...

பழைய நினைவுகள் என்றுமே அலாதி தான்.

ungalrasigan.blogspot.com said...

ஹாய் ஸ்பைடி! மித்திரன் என்றால் நண்பன் என்று பொருள். ‘பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய்’ என்று ஒரு பாடல் கேள்விப்பட்டதுண்டா? பை தி வே, ஸ்பைடி என்றால் என்ன?

SPIDEY said...

sir thank u for the info.இந்த பாட்ட இப்ப தான் சார் கேள்விப் படுறேன், wife of the enemy of raman's friend வரைக்கும் கண்டுப்பிடிச்சிட்டேன் அதுக்கு மேல ஒன்னும் புரியல! will be very happy if u explain it)) spidey-->short name of my rolemodel spiderman, sir