ஹேப்பி பர்த்டே டு யூ, கலைஞர்!

86 வயது கொண்டாடும் கலைஞர் மு.கருணாநிதிக்கு என் இதயம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்’ என்கிற பம்மாத்துகளின்றி, அப் பெருமகனாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் மீது எனக்கு அரசியல்ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அவரின் வழிமுறைகள் சிலவற்றின் மீது ஒரு வாக்காளனாக எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அவர் ஒரு சாதனையாளர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

சாவி வார இதழில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, அவர் நாலைந்து முறை சாவியின் இல்லத்துக்கு வருகை தந்திருக்கிறார். பலமுறை அவரே தொலைபேசியில் தொடர்புகொண்டு, “ஆசிரியர் சாவி இருக்காரா?” என்று கரகரத்த தன் பிரத்யேக கம்பீரக் குரலில் கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் நான்தான் எடுத்து அவருக்கு பதில் சொல்லியிருக்கிறேன். சாவியில் வந்த சிறுகதை, லே-அவுட் எல்லாவற்றையும் அவர் ஆசிரியர் சாவியிடம் விமர்சனம் செய்வார். அப்படி ஒருமுறை சாவியிடம் அவர் பேசிக்கொண்டு இருந்தபோது, என்னை வைத்துக்கொண்டே சாவி பெருந்தன்மையாகச் சொன்னார்... “உங்க பாராட்டுக்களெல்லாம் ரவிக்குதான் போய்ச் சேரணும். ரவிதான் என்னோட அசிஸ்டெண்ட். இதில் வர நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் அவன்தான் பொறுப்பு. நான் சும்மா மேற்பார்வை பார்க்கிறதோட சரி!”

கலைஞர் பிறந்த நாள் வருகிறபோதெல்லாம், அந்த வார சாவி அட்டையைக் கலைஞர்தான் அலங்கரிப்பார்.

சாவி ஒருமுறை அமெரிக்கா போயிருந்தபோது, சாவி இதழ் அட்டையில் நான் வெளியிட்ட ஒரு நகைச்சுவைத் துணுக்கு பெரிய புயலைக் கிளப்பிவிட்டது. மாதர் சங்கங்கள் கொதித்தெழுந்தன. கேஸ் பதிவாகி, ஆசிரியர் சாவி ஊர் திரும்பியதும் திரும்பாததுமாக அவரையும், அவரோடு என்னை, அச்சிட்ட மணியை மூவரையும் கைது செய்தது போலீஸ். அப்போது கலைஞர் எதிர்க் கட்சித் தலைவர். உடனடியாக ஓடோடி வந்து, எங்களை ஜாமீன் எடுக்க உதவினார். அந்த விவரங்களை விரிவாக என் இன்னொரு பிளாகில் (ungalrasigan.blogspot.com) பதிய இருக்கிறேன்.

அதற்கு முன், கலைஞரின் பெருந்தன்மை பற்றிய ஒரு சிறு தகவல்...

சாவி இல்லத்துக்குக் கலைஞர் வந்திருந்த சமயம்... ஆசிரியரோடும், அவர்தம் குடும்பத்தாரோடும், எங்களோடும் அவர் கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு உபசரிக்க ஆசிரியர் சாவி அட்டெண்டர் ஃபிரான்சிஸ் என்பவரை அனுப்பி, குளிர்பானம் வாங்கி வரச் சொல்லியிருந்தார். ஃபிரான்சிஸ் அதற்காக வெளியே போயிருந்த நேரத்தில், கலைஞர், சாவி இவர்களோடு நாங்களும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். புகைப்படம் எடுத்தவர் சாவியின் மூத்த மகன் பாச்சா என்கிற பாலசந்திரன்.

குளிர்பானம் வருவதற்குள் தனக்கு நேரமாகிறது என்று அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டுவிட்டார் கலைஞர். சாவியின் வீடு மாடியில்; கீழே அலுவலகம். கலைஞர் கிளம்புகிற சமயம், ஓடி வந்தார் ஃபிரான்சிஸ், குளிர்பான பாட்டில்களோடு. கொஞ்சம் ஏமாற்றமாகத் தலையைச் சொறிந்தபடி, அசட்டுச் சிரிப்பு சிரித்தார். என்னவோ சொல்லத் தயங்கினார்.

“என்ன?” என்று கேட்டார் சாவி. “அது வந்துங்க... அது... ஐயா கிளம்பிட்டாருங்களா?” என்றார் ஃபிரான்சிஸ் தயக்கத்துடன். “கிளம்பிட்டாரு. உனக்கு என்ன வேணும், அதைச் சொல்லு!” என்றார் சாவி. அவர் காதருகில் சென்று ஏதோ கிசுகிசுத்தார் ஃபிரான்சிஸ்.

“என்னவாம்?” என்று கேட்டார் கலைஞர் திரும்பி.

“உங்களோடு எல்லோரும் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கணும்னு முடிவு பண்ணியிருந்தோம். அதுல இவனும் நிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கான். கடைக்குப் போயிட்டதுல முடியாம போச்சேன்னு வருத்தப்படறான்” என்றார் சாவி.

“இவ்வளவுதானே! இது ஒரு பெரிய விஷயமா?” என்ற கலைஞர், ஏழெட்டு படிகள் இறங்கியிருந்தவர் மீண்டும் படியேறி மாடிக்கு வந்தார். மீண்டும் ஒருமுறை எல்லோரும் அவரோடு சேர்ந்து நின்றோம் - ஃபிரான்சிஸ் உள்பட! மீண்டும் படம் எடுத்தார் பாச்சா. “என்னப்பா... இப்ப திருப்தியா?” என்று ஃபிரான்சிஸிடம் திரும்பிக் கேட்டார் கலைஞர். நெகிழ்ந்து நெக்குருகிப் போய்விட்டார் ஃபிரான்சிஸ்.

மற்றவரின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கும் பண்பு கலைஞருக்கு இல்லை என்று யார் சொன்னது? என்ன... அரசியல்ரீதியாக சிலவற்றை அவர் விரும்பியோ விரும்பாமலோ பேச வேண்டியிருக்கிறது; செய்ய வேண்டியிருக்கிறது.

அதை விமர்சனம் செய்ய நமக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இலக்கியகர்த்தா, திரைக்கதை வசனகர்த்தா, கதாசிரியர், பத்திரிகையாளர், நகைச்சுவையாளர், கவிஞர், சொற்பொழிவாளர், அரசியல் தலைவர் எனப் பலவிதங்களிலும் அவரது கடின உழைப்பு அசாதாரணமானது. அதைப் போற்றுவோம்; முடிந்தால், அதில் ஒரு சிறு துளியேனும் நமக்குக் கிடைக்குமா எனப் பாடுபடுவோம்!

வாழ்க கலைஞர்!
*****
உண்மையான நண்பர்கள் உள்ள எவனும் தோற்றுப் போவதில்லை!

1 comments:

வண்ணத்துபூச்சியார் said...

ரவி சார். உங்களை போன்றவர்கள் கண்டிப்பாக பிளாக் எழுத வேண்டும். எத்தனை விதமான மனிதர்களின் சந்திப்புகள்ள்.. எவ்வளவு அனுபவங்கள்...

உங்களால் தான் நிறையவும் நேர்மையாகவும் சொல்ல முடியும்.

மிகுந்த ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன்.

உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

நிறை / குறை கூறவும்.

நன்றி..

வாழ்த்துகள்

சூர்யா