சில இடங்கள்... சில ஞாபகங்கள்..!

ஞாயிற்றுக் கிழமை சற்று காலாற நடந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். அசோக் பில்லர் வரை சென்றேன். அங்கேயே சற்று நேரம் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று, டீஸல் புகை கக்கியபடி போகும் வரும் வாகனங்களைப் பார்வையிட்டுக்கொண்டு இருந்தேன். ‘பாங்... பாங்...’ என்று வாகன அலறல்கள்! சிக்னல் எப்போது மாறும் என்று துடித்துக்கொண்டு, பச்சை விழுந்த அடுத்த விநாடி சீறிக் கிளம்பும் பைக்குகள், பஸ்கள், கார்கள்..! தெருவைக் கடக்க ஐந்து நிமிடத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கே வந்த நினைவு எழுந்தது. இந்த அசோக் நகர் பகுதிக்கு வந்து நிரந்தரமாக இங்கேதான் குடியிருக்கப்போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியாது.

1979-ல், கிராமத்திலிருந்து நான் மட்டும் தனியாகக் கிளம்பி, மண்ணடியில் இருந்த என் அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தேன். அத்தை குடியிருந்தது பல குடித்தனங்கள் கொண்ட ஒரு பழைய குடியிருப்பில். சிறிய இடம்தான். பக்கத்துக் குடித்தனத்தில் இருந்தவர்கள், ஏன், அந்தக் குடியிருப்பில் இருந்த அனைவரின் முகமும் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் மறந்துவிட்டது. பக்கத்துக் குடியிருப்பில் இருந்தவர்களில் ஒரே ஒரு பெண்ணின் பெயர் மட்டும் ஞாபகத்தில் உள்ளது. காரணம், அது என் அம்மாவின் பெயர். சீதா. எனவே, நான் அந்தப் பெண்ணை கீதா என்றுதான் அழைப்பேன். ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். கீதா படபடவென்று பேசுகிற பெண். நான் நேர்மாறாக சங்கோஜி!

பக்கத்து வீட்டில் குடியிருந்த சுபாஷிணி என்ற பெண், இந்த கீதாவின் சிநேகிதி என்பதால் அடிக்கடி இங்கே வரும். அப்போது என் சிறுகதைகள் கல்கியிலும், குங்குமம் பத்திரிகையிலும் வெளியாகியிருந்தன. அவற்றை என் அத்தை அந்தப் பெண்களிடம் பெருமையோடு காட்ட, அவர்களும் என்னைப் பாராட்டிப் பேச, புளகாங்கிதம் அடைந்தேன்.

கீதாவின் சிநேகிதி சுபாஷிணி அப்போது கல்லூரியில் சேர்ந்திருந்ததாக ஞாபகம். கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியதாகச் சொல்லும். திறமைசாலியான பெண். அதுவும் கீதா போலவே படபடவென்று பேசும். கலகலப்பாகப் பழகும். கிராமத்திலிருந்து வந்ததால், எனக்குத்தான் அவர்களுடன் பழகுவதில் சற்றுத் தயக்கம் இருந்தது. (அந்த சுபாஷிணி யார் என்பதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன்.)

சரி... விஷயத்தை எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய்விட்டேன். அத்தை வீட்டில் நான் இருந்த சமயத்தில், மாம்பலத்தில் என் அம்மாவின் சித்தி வீடு இருந்தது. (இப்போதும் இருக்கிறது.) அங்கே வந்து சித்தியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பிராட்வேயில் பஸ் பிடித்தேன். கையில் அதிகம் பணம் இல்லை. அயோத்தியா மண்டபம் என்று கேட்டு டிக்கெட் வாங்கினேன்.

எனக்கு மெட்ராஸ் அப்போது அத்தனைப் பரிச்சயமில்லை. என்றாலும், அயோத்தியா மண்டபம் ஸ்டாப்பிங் தெரியாமல் போய்விடப் போகிறதா என்ன என்று யாரையும் நான் கேட்கவும் இல்லை. தவிர, பிறரை வழி கேட்பது என்பதே என்னை ஒரு அசடாகக் காட்டிவிடுமோ என்றும் நான் அப்போது அசட்டுத்தனமாக எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில், நான் அந்த ஸ்டாப்பிங்கைத் தவறவிட்டதுதான் மிச்சம்!

பஸ்ஸில் கூட்டம் இல்லை. தெருவிலும் அத்தனை நெரிசல்கள் இல்லை. அப்போதெல்லாம் பஸ்ஸில் யாரும் நின்றபடி பயணம் செய்து நான் பார்த்தது இல்லை. பஸ் யாருமற்ற வனாந்தரமான பகுதியில் ஓடிக்கொண்டிருக்கவும்தான், நான் என் ஸ்டாப்பிங்கைத் தவற விட்டது புரிய, தயங்கித் தயங்கிப் பக்கத்தில் இருந்தவரைக் கேட்டேன். “இப்போதானே தம்பி போச்சு! அடுத்தது அசோக் பில்லர் வரும். இறங்கிக்க. நடக்கிற தூரம்தான்!” என்றார்.

பில்லர் வந்தது. இறங்கினேன். பில்லர் மட்டும்தான் இருந்தது. சுற்றிலும் வேறு கடைகள், கட்டடங்கள் எதுவும்... ஆமாம், எதுவுமே இல்லை! செம்மண் காடாக இருந்தது. கப்பிக்கல் பதித்த செம்மண் சாலை. நான் வந்த பஸ் கிளம்பிப் போனதும், நான் ஏதோ தீவில் மாட்டிக்கொண்ட ஒற்றை மனிதன் போலானேன்.

ஒரு சின்னஞ்சிறிய கட்டடம் மட்டும் இருந்தது. அது போஸ்ட் ஆபீஸ். ஞாயிறு என்பதால் விடுமுறை. பக்கத்தில் சற்றுத் தொலைவில் ஒரு பெரிய கட்டடம் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. (அங்கு சினிமா தியேட்டர் வரப்போகிறது என்று பின்னர் என் சித்தி பையன் மூலம் அறிந்தேன். அதுதான் உதயம் காம்ப்ளெக்ஸ்.)

மாம்பலத்துக்கு வழி விசாரிக்கவும் யாரும் கண்ணில் தென்படாததால், நான் எனக்குத் தோன்றிய திசையில், ஒரு யூகத்தில் குத்துமதிப்பாக நடந்தேன்... நடந்தேன்... நடந்துகொண்டே இருந்தேன். நீள நெடுக செம்மண் சாலைதான். ஒரு ஈ, காக்கா கண்ணில் படவில்லை. கடை கண்ணி எதுவும் இல்லை. பதினைந்து, இருபது நிமிடம் நடந்திருப்பேன். நல்ல வெயில். உச்சி வேளையாக இருந்ததால், மரங்களின் அடியிலும் நிழல்கள் இல்லை.

ரொம்ப நேரம் நடந்தபின், கொஞ்சம் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது. இளநீர் வண்டிக்காரர் ஒருவர் தென்பட்டார். அவரிடம் போய், அயோத்தியா மண்டபத்துக்கு வழி கேட்டேன். “அது ரொம்ப தொலைவு ஆச்சுங்களே! இது வட பழனி. இடது கைப் பக்கமா போனீங்கன்னா பஸ் ஸ்டாண்டு வரும். இந்நேரத்துக்கு ஏதாச்சும் பஸ் இருக்கும். அதுல போங்க” என்றார்.

எனக்குப் பக்கென்றது. கையில் மிச்சமிருந்த காசுக்கு இளநீர் வாங்கிக் குடித்துவிட்டேன். பஸ் டிக்கெட்டுக்கு எவ்வளவு தேவைப்படுமோ! (அப்போதெல்லாம் மினிமம் 25 காசுதான் டிக்கெட்!) இருந்தாலும் இத்தனை தூரம் வந்தது வந்துவிட்டோம், வட பழனி பஸ் ஸ்டேண்டைப் பார்த்துவிட்டே போய்விடுவோம் என்று நடந்தேன். ராம் தியேட்டர், கமலா தியேட்டர் எல்லாம் வந்தன. ஒரு கோயில் தெரிந்தது. (வடபழனி முருகன் கோயில்). உள்ளே போய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ‘மாம்பலத்துக்கு நல்ல வழி காட்டப்பா முருகா’ என்று வேண்டிக்கொண்டுவிட்டு, அங்கிருந்தோரிடம் மாம்பலத்துக்கு வழி விசாரித்துக்கொண்டு மறுபடி நடந்தே சித்தி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

சித்தியிடம் விஷயத்தைச் சொன்னதும், “அடப்பாவி! இதோ இருக்கு பில்லர். அடுத்த ஸ்டாப்பிங்தான். ரெண்டே நிமிஷத்துல ஓடி வந்துடலாம். நீ வடபழனிக்கு எங்கே போனே?” என்று சிரித்தார்.

அந்த அசோக் பில்லரா இது? பாலைவனம் மாதிரி இருந்த இடமா இத்தனை ஜன நெரிசலோடு பிதுங்கிக்கொண்டு இருக்கிறது! பிரமிப்பாக இருக்கிறது.

அது இருக்கட்டும்... இடையில் கீதாவின் சிநேகிதி சுபாஷிணி பற்றி ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என்று சொன்னேனே... பலப் பல வருடங்களுக்குப் பிறகு, 1995-ல் ஆனந்த விகடனில் வேலை கிடைத்து நான் உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தபோது, அங்கே பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த சுபாதான் அது!

இந்த விஷயத்தை நானாக இதுவரை சுபாவிடம் சொன்னதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுக்குத் தன் கணவரோடு வந்த அந்த கீதா (இன்றைக்கும் சுபாவோடு அதே நட்போடு பழகி வருகிறார்) ஒருவேளை சொல்லியிருக்கக்கூடும். ஆனால், அதன்பின் அந்த கீதாவையும் நான் இதுவரை சந்திக்கவேயில்லை.

*****
ஒவ்வொரு நண்பரும் எப்போதோ ஒரு சமயம் அந்நியராக இருந்தவர்தான்; ஒவ்வொரு அந்நியரும் எப்போதோ ஒரு சமயம் நண்பராக இருந்தவர்தான்!

3 comments:

முகில் said...

நான் இன்றைய அசோக்நகர்வாசி (கடந்த நான்கு வருடங்களாக). பழைய அசோக்நகரைக் கண்டுமுன் கொண்டு வந்துவிட்டீர்கள்.

butterfly Surya said...

அருமையான பதிவு. எளிமையான எழுத்து நடை.

கண்டிப்பாக உங்க கதைகளை புத்தகமாக போடலாம்.

அல்லது இங்கேயாவது போடவும்.

ungalrasigan.blogspot.com said...

* முகிலுக்கு அன்பான வரவேற்பு! நீங்கள் கொடுத்த லிங்க் மூலம் பாலுசத்யா பிளாகுக்குப் போய், என் அன்புக்குரிய எழுத்தாளர் அசோகமித்திரனின் நேர்காணலைப் படிக்க முடிந்தது. நன்றி! ஆமாம், அசோக் நகரில் எங்கே இருக்கிறீர்கள்?