நீரும் நெருப்பும்

பிரபல எழுத்தாளரும் வீணை வித்வானுமான திருமதி கீதா பென்னட், என் பிளாக்குகளைத் தொடர்ந்து படித்துப் பாராட்டி வருபவர். அவர் சமீபத்தில் எனக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலுக்கான பதிலை இன்றுதான் அவருக்கு அனுப்பினேன். அதுவே இன்றைய ‘என் டயரி’யின் பிளாக் விஷயமாகிவிட்டது.

இதோ...

ன்புள்ள திருமதி கீதாபென்னட் அவர்களுக்கு,

வணக்கம். தங்களுக்கும் ‘நீரும் நெருப்பும்’ படம் பிடிக்கும் என்று ஒரு தகவலாகத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். எனக்கு அந்தப் படம் பிடித்ததற்கான காரணத்தை அறிய இத்தனை ஆவலாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை.

பொதுவாக எனக்கு எம்.ஜி.ஆர். படங்களே பிடிக்காது. அடிப்படையில் நான் ஒரு சிவாஜி ரசிகன். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர். படம் ’குமரிக்கோட்டம்’. அது ரிலீசான சமயத்தில் நான் எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் படம் எனக்குச் சற்றும் பிடிக்கவேயில்லை. அது ஜீரணமாகவேண்டும் என்பதற்காக அடுத்த காட்சியிலேயே சிவாஜியின் ’தங்கைக்காக’ பார்த்தவன் நான்.

என்றாலும், ’குமரிக்கோட்டம்’ படப் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ‘எங்கே அவள்... என்றே மனம்... தேடுதே ஆவலாய்...’, ‘நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...’ இரண்டும் எனக்கு அத்தனைப் பிடிக்கும். பாடகர்களில் நான் பெரிதும் டி.எம்.எஸ். ரசிகன். சின்ன வயதிலிருந்தே அவரது பாடல்களைக் கேட்டு, உண்டு, சுவாசித்து வளர்ந்தவன். எனக்கு நினைவு தெரிந்து, ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி...’, ‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்...’ போன்ற எம்.ஜி.ஆர். படப் பாடல்களையும், அவை டி.எம்.எஸ். பாடியவை என்பதால் ரசித்திருக்கிறேன்.

அந்த வகையில் ’குமரிக்கோட்டம்’ படப் பாடல்களும் இனிமையாக இருக்கவே, அதன்பின் எம்.ஜி.ஆர். படங்களையும் பார்க்கத் தொடங்கினேன். பல படங்கள் பார்த்திருக்கிறேன். அவற்றில் எனக்குப் பிடித்தவை நீரும் நெருப்பும், நல்ல நேரம், மலைக்கள்ளன் ஆகியவை. ’பல்லாண்டு வாழ்க’ படத்தையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

’பல்லாண்டு வாழ்க’ படத்தில் பல அபத்தங்கள் இருந்தாலும், கதை மனதுக்கு இதமாக இருந்தது. அதில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் மென்மையாக இருந்தது. எனவே, அந்தப் படம் பிடித்தது.

மலைக்கள்ளனில் நிஜமாகவே எம்.ஜி.ஆர். நடிப்பு அருமையாக இருந்தது.

’நல்ல நேரம்’ யானைகளுக்காக ரசித்துப் பார்த்த படம்.

’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.

நான் ரசித்துப் பார்த்து என்ன..? அந்தப் படம் ஃப்ளாப்! அது பெரும்பாலானோருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஒரு படத்தில் ஏதாவது ஒரு அம்சம் நன்றாக இருந்துவிட்டாலும் போதும், என்னால் அதை ரசிக்க முடியும். ரசிப்பேனே தவிர, அது சிறந்த படமா, இல்லையா என்பது வேறு விஷயம்! நன்றாக ஓடிய எத்தனையோ படங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கென்ன செய்வது?

அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார். பொதுவாக எம்.ஜி.ஆர். படம் எதுவும் அதிகம் ஃப்ளாப் ஆனதில்லை. ‘நீரும் நெருப்பும்’ ஏன் ஓடவில்லை என்று எனக்குப் புரியவில்லை.

இந்தப் படம் மட்டுமல்ல, நான் ரசித்துப் பார்த்த பல படங்கள் ஃப்ளாப் ஆகியிருக்கின்றன. ஸ்ரீதர் இயக்கிய ‘ஓ மஞ்சு’ படமும் அவற்றில் ஒன்று.

கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை, ரத்தக்கண்ணீர் தவிர, பொதுவாக அன்றைக்கு நான் ரொம்ப ரசித்துப் பார்த்த பல படங்களை இன்றைக்குப் பார்க்கிறபோது அத்தனை ரசனையாகத் தெரியவில்லை. காரணம், கால மாற்றம். ’பாலும் பழமும்’ படத்தை அத்தனை ரசித்துப் பார்த்திருக்கிறேன். அதே போல் ‘பாச மலர்’. அவற்றைச் சமீபத்தில் பார்த்தபோது, போரடித்தன.

நீரும் நெருப்பும், ஓ மஞ்சு உள்ளிட்ட படங்களும்கூட இன்றைக்குப் பார்த்தால், ஒருவேளை போரடிக்குமோ என்னவோ! ஆனால், அவற்றை மீண்டும் ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.

*****

வாழ்க்கை ஒரு விருந்து. அதை ரசியுங்கள். மெனுவைப் படித்தே நேரத்தைப் போக்காதீர்கள்!

2 comments:

வண்ணத்துபூச்சியார் said...

திரைக்காதலன் ஸ்ரீதர் என் மனம் கவர்ந்த இயக்குநர். அவரை பற்றி தகவல்கள் இருந்தால் பதிவிடுங்கள்.

ரவிபிரகாஷ் said...

என்ன வண்ணத்துப்பூச்சியாரே... தூங்கவே மாட்டீர்களா? உடனுக்குடன் படித்து உங்கள் கருத்தை வெளியிடுவது எனக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. நன்றி!