பல நேரங்களில் பல மனிதர்கள்!

லகம் ரொம்பப் பெரியது என்று முன்பெல்லாம் நினைத்துக்கொண்டு இருந்தேன். வாகன வசதிகள் வளர வளர, உலகம் சுருங்கிக்கொண்டே வந்தது. தகவல் தொழில்நுட்பம் வளர வளர, அது எலுமிச்சம்பழம் அளவு சுருங்கிவிட்டதாகத் தோன்றுகிறது.

என்றைக்கோ பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் பல வருடங்களுக்குப் பின்பு வேறு எவர் மூலமாகவோ ஒரு தொடர்பில் வருவது எனக்கு அடிக்கடி நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. எப்போதோ நான் பார்த்த ஒரு டீன் ஏஜ் பெண்ணைப் பல வருடங்களுக்குப் பின்னர் ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியராகச் சந்திப்பேன் என்று நினைத்திருப்பேனா, அது போல்தான்!

சமீபத்தில் இன்னும் இரண்டு உதாரணங்கள்.

நண்பர் மார்க்கபந்துவின் வீட்டு விசேஷம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றார்கள் அல்லவா, என் பெற்றோர்! அங்கே சமையல் செய்தவர் எழுபது வயதைக் கடந்த ஒரு மாது! சமீபத்தில்தான் அவர்களிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்ந்திருந்தார் அவர்.

விசேஷத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் மார்க்கபந்து குடும்பத்துப் பெண்டிரும் அந்த மாதுவும் சாப்பாடு பரிமாறினார்கள். அப்பாவும் மார்க்கபந்துவும் அருகருகே அமர்ந்து பல விஷயங்களைப் பேசியபடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். பேச்சினிடையே, நாங்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த கிராமமான சங்கீதமங்கலம் பற்றிப் பேசியிருக்கிறார் அப்பா. அந்த ஊர் பெயரைக் கேட்டதும், அந்த சமையல்கார மாது, “நீங்கள் சங்கீதமங்கலமா? அங்கே நோட்டக்காரர் ஜெயராமன் என்பவரைத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

“அட, நல்லாத் தெரியுமே! அவர் வீட்டுக்கு எதிர் வீட்டுலதானே நான் இருந்தேன்” என்று அப்பா சொல்ல, “அவருடைய மச்சினிதான் நான்” என்று சொல்லியிருக்கிறார் அந்த மாது.

“வறுமை காரணமாக என்னுடைய பிள்ளையை என்னால் வளர்த்துப் படிக்க வைக்க முடியவில்லை. அவர் நல்ல பணக்காரர். அதனால், என் மகனை சங்கீதமங்கலத்தில் என் அக்கா வீட்டில்தான் விட்டிருந்தேன். வருஷத்துக்கு ஒரு முறை வந்து என் பிள்ளையைப் பார்த்துவிட்டுப் போவேன்” என்று சொன்னார் அந்தப் பெண்மணி.

அவர் சொன்ன அந்தப் பிள்ளையை எனக்கே தெரியும். ரொம்பவும் ஏழ்மையோடு ஒட்டிய வயிறும், கருமை படர்ந்த கண்களுமாக, ஒல்லியாக இருப்பான். அவன் தன் பெரியம்மா வீட்டில் இருப்பதுபோல் உரிமையாக வளரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வேலைக்காரச் சிறுவன் போலத்தான் வளர்ந்தான். மற்றவர்களோடு சுவாதீனமாகப் பழகுவதற்கே தயங்கி, ஒதுங்கி ஒதுங்கிப் போகும் அவனைப் பார்த்து நான் பரிதாபப்பட்டிருக்கிறேன்.

எத்தனை வருடத்துக்குப் பின், எதிர்பார்க்காத ஓரிடத்தில் அவனது அம்மாவைச் சந்திக்க நேரிட்டிருக்கிறது!

இன்னொரு சம்பவம்... நாலைந்து நாட்களுக்கு முன்பு சக பதிவர் பட்டாம்பூச்சி சூர்யா என்னை வந்து விகடன் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பொதுவாகவே எனக்குப் புதிய புதிய முகங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது என்பது பிடித்தமான விஷயம். ஆனால், முகங்களை நினைவு வைத்துக்கொள்வது மட்டும் எனக்குச் சவாலான விஷயமாகவே இருக்கிறது. நான் பழகிய பலர் ஒரே மாதிரி முகத்தோற்றத்துடன் இருப்பதாக எனக்குப் படும். இதனால், மறுமுறை ஒருவரைப் பார்க்கிறபோது இவரா, அவரா என்று குழப்பம் வந்துவிடும். அல்லது, எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று தோன்றும். சில சமயம், முன்பின் பழக்கமில்லாதவரையும் எங்கோ பார்த்த மாதிரி தோன்றும். இதனால் முகங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவது சின்ன வயதிலிருந்தே சாத்தியமானதாக இல்லை எனக்கு. இதனால் என் நெருங்கிய நண்பர்கள்கூட, அவர்களை நான் அலட்சியம் செய்துவிட்டதாகக் கோபித்துக்கொண்டு என்னுடனான நட்பை முறித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பட்டாம்பூச்சி சூர்யாவுக்கு வருவோம். அவர் முகம்கூட எங்கள் அலுவலகத்திலேயே வேலை செய்கிற சக ஊழியர் ஒருவரின் முகத்தை ஒத்திருக்கிற மாதிரிதான் தோன்றுகிறது.

சூர்யா மிகக் கலகலப்பான நபராக இருந்தார். புதியவர் போல இல்லாமல் நெடுநாள் பழகியவர் போலப் பேசிப் பழகினார். உலக சினிமா பற்றியெல்லாம் பேசினார்.

பேச்சினிடையே, நான் விழுப்புரம் மகாத்மா காந்தி பள்ளியில் படித்தவன் என்பதைச் சொன்னேன். “அப்படியானால் உங்களுக்கு சங்கரநாராயணன் ஆசிரியரைத் தெரிந்திருக்குமே?” என்றார். “தெரியாமல் என்ன... நான் விழுப்புரத்தில் எங்கள் மாமா வீட்டில்தான் தங்கிப் படித்தேன். அந்த வீட்டின் ஒரு போர்ஷனில்தான் சங்கரநாராயணன் சார் குடியிருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள்; ஒரு பெண். பிள்ளைகளை அவர் அம்பி, குந்தம்பி என்றுதான் கூப்பிடுவார். பெண்ணை அங்கச்சி என்று அழைப்பார். அவரின் மூத்த மகன் கணேசன் என் கிளாஸ்மேட்!” என்றேன்.

“மூன்றாவது மகன் இங்கே சென்னையில் ஜெயின் காலேஜில் படித்தார். அவர் என் கிளாஸ்மேட்” என்றார் பட்டாம்பூச்சி சூர்யா.

சங்கரநாராயணன் சார் பார்ப்பதற்கு எழுத்தாளர் அசோகமித்திரனின் சாயலில் இருப்பார். நான் அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சியான 11-ம் வகுப்பை முடித்துவிட்டு அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறிய பின்பு, அந்த ஆசிரியருக்கும் எனக்குமான தொடர்பு விட்டுப் போயிற்று. அவருடைய மகன் கணேசன் படிப்பில் சுட்டி. எப்போதும் வகுப்பில் அவன்தான் முதல் மாணவனாக வருவான். இப்போது அவன்... மன்னிக்கவும், அவர் வாஷிங்டன் யூனிவர்சிடியில் மிக உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பதாகவும், மகனுக்குத் திருமணம் செய்து வைத்துத் தாத்தா ஆகிவிட்டதாகவும் சொன்னார் பட்டாம்பூச்சி சூர்யா.

சங்கரநாராயணன் சார் இங்கேதான் சென்னையில், டிரஸ்ட்புரத்தில் இருக்கிறாராம். சூர்யாவின் குடும்ப நண்பராம். இவர் அடிக்கடி சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவாராம்.

ஒருநாள் சூர்யாவின் துணையோடு, என் பழைய ஆசிரியரைச் சென்று சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

உலகம்தான் எத்தனைச் சுருங்கி வந்துவிட்டது!

*****
சக மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருக்காதீர்கள். பிறகு அவர்களை நேசிக்க நேரமில்லாமல் போய்விடும்!

1 comments:

SPIDEY said...

//உலகம்தான் எத்தனைச் சுருங்கி வந்துவிட்டது!//

உலகம் சுருங்கினாலும் சில மனித மனம் இன்னும் விசாலமாக இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

//ஒருநாள் சூர்யாவின் துணையோடு, என் பழைய ஆசிரியரைச் சென்று சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.//

so a visit to your teacher பத்தி ஒரு post எதிர்பாக்கலாம்னு சொல்லுங்க)). eagerly waiting for that