அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள். தவிர, வீடுகளில் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாட்களை ஒரு குறிப்பிட்ட வயசு வரையில் பெற்றோர்கள் ஆசை ஆசையாகக் கொண்டாடுவார்கள். மற்றபடி குப்பனும் சுப்பனும் பிறந்த நாள் கொண்டாடியதாகத் தெரியவில்லை.
தொழிலதிபர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதன் காரணம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் ஓர் உத்தி அது! பிசினஸ். சினிமா நட்சத்திரங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதன் காரணம் விளம்பரம் மற்றும் சினிமா வாய்ப்புத் தேடும் ஒரு வலை. பப்ளிசிட்டி. அரசியல்வாதிகள் பிறந்த நாள் கொண்டாடுவதில் நிதி திரட்டுவது, கறுப்பை வெள்ளையாக்குவது, விளம்பரம் தேடுவது எனப் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.
சமீபத்தில் கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சென்னை, எல்.ஐ.சி. அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஹோர்டிங்கில், ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்ற பாடல் வரிகள் இருந்ததைப் பார்த்துச் சிரித்தேன். அது கலைஞரை எதிர்த்து காட்சிக்குக் காட்சி இரட்டை இலைகளைக் காட்டி, எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படப் பாடல். அதைக் கூச்ச நாச்சமில்லாமல் கலைஞரின் பிறந்த நாள் வாழ்த்தாக உபயோகித்துக்கொள்ள எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.
சினிமாக்காரர்களின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ, ரசிகர்கள் ஆர்வமாகக் கொண்டாடுகிறார்கள். என்னதான் ரஜினி தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரசிகர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி, வருடம் தவறாமல் ரிஷிகேஷ் போய்க்கொண்டிருந்தாலும், அவர்களின் ரசிகர்கள் தோரணம் கட்டி, பெரிய ஸ்பீக்கர்கள் வைத்து, பாட்சா, படையப்பா பாடல்களை ஓடவிட்டு, அன்னதானம் செய்து கலக்கத் தவறுவதில்லை. கமல்ஹாசனின் ரசிகர்கள் தங்கள் நட்சத்திர அபிமானத்தை, கமல் பிறந்த நாளன்று ரத்த தானம் கொடுத்துக் காட்டிக் கொள்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் இன்றைக்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் எம்.ஜி.ஆர். பாடல்கள் தெருவுக்குத் தெரு, முக்குக்கு முக்கு அலறும். அத்தனையும் டி.எம்.எஸ். பாடிய பாடல்கள். மறந்தும் எஸ்.பி.பி., சீர்காழி, பி.பி.எஸ் பாடிய பாடல்கள் ஒலிபரப்பப்படா! காரணம், அவை எம்.ஜி.ஆரை நினைவூட்டுவதில்லை. ஒவ்வொரு தெருவிலும் ஒரு சின்ன பந்தல் போட்டு, ஒரு ஸ்டீல் நாற்காலியில் எம்.ஜி.ஆரின் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டு, பக்கத்தில் நீர்மோர் பானையோ, குடிநீர் பானையோ வைக்கப்பட்டு இருக்கும்.
சிவாஜி பிறந்த நாள் அத்தனை படாடோபமாகக் கொண்டாடப்படுவதில்லை. ஏதேனும் சினிமா விழாக்களில், இசை நிகழ்ச்சிகளில், எஃப்.எம் ஒலிபரப்புகளில் அவரது பாடல்கள் ஒலிபரப்பப்படுவதோடு சரி!
ஜனவரி 17 - எம்.ஜி.ஆர். பிறந்த நாள், அக்டோபர் 1 - சிவாஜி பிறந்த நாள், ஜூன் 3 - கலைஞர் பிறந்த நாள், நவம்பர் 7 - கமல்ஹாசன் பிறந்த நாள், டிசம்பர் 12 - ரஜினிகாந்த் பிறந்த நாள் என்று நினைவு வைத்துக் கொண்டாடி மகிழும் சாமான்ய ஜனங்களுக்கு அவர்களின் அப்பா, அம்மா பிறந்த நாள்கள் நினைவிருக்குமா, அவற்றைக் கொண்டாடி மகிழ்வார்களா என்பது சந்தேகம்தான்.
அவ்வளவு ஏன், எனக்கே என் பெற்றோரின் பிறந்த தேதிகள் தெரியவில்லை. எத்தனைக் கேவலமான விஷயம் இது!
என் குழந்தைகளின் பிறந்த நாள்கள் மட்டுமே எனக்குத் தெரியும். அவற்றை மட்டுமே சென்ற வருடம் வரையில் நான் கொண்டாடி வந்திருக்கிறேன். இருவரும் ப்ளஸ் டூ முடித்து காலேஜ் போய்விட்டால், கொண்டாட்டங்கள் நின்றுபோகும். போன வருடமே அவர்கள் அதில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. அன்றைய தினம் பள்ளியில் அவர்கள் சீருடை அணிந்து செல்லத் தேவையில்லை, பிறந்த நாள் உடை உடுத்திச் செல்லலாம் என்பது அவர்களின் பிறந்த நாள் சலுகை. இறைவணக்கத்தின்போதும் பிறந்த நாள் கொண்டாடும் மாணவரின் பெயரை மைக்கில் சொல்லி, ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடுவார்கள்.
என் மனைவியின் பிறந்த நாளும், என் பிறந்த நாளும் கடந்து போய் சில நாட்களுக்குப் பிறகே நினைவுக்கு வரும். பெரும்பாலும் நட்சத்திரப்படி கோயிலில் சிறு அர்ச்சனை என்ற அளவில் எங்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கமுக்கமாக முடிந்துவிடும். பிறந்த நாள் ஞாபகம் இருந்தால், சம்பிரதாயத்துக்குக் கொஞ்சம் பாயசம் செய்வார் என் மனைவி.
சாவியில் நான் பணியாற்றியபோது, அவரது பிறந்த நாளன்று காலையில் அவரது மகன்களும் மகள்களும் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துச் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம், ‘என்ன சார், ஒவ்வொரு வயசு ஏறும்போதும் கவலையாக இல்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? எனக்கு மட்டுமா வயது ஏறுகிறது? உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும்தான் வயது ஏறுகிறது. சொல்லப்போனால் வயது ஏற ஏற, நான் ஒரு வருடம் கூடுதலாக இந்த உலகில் வாழ்ந்துவிட்டேன் என்ற சந்தோஷம்தான் ஏற்படுகிறது’ என்றார்.
தனியார் நிறுவனங்களில் தங்கள் ஊழியர்களின் பிறந்த நாளை நினைவில் வைத்திருந்து, வாழ்த்து அட்டை தருவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. ஆனந்த விகடனிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு வழக்கம் இருந்தது.
கொண்டாடுகிறோமோ இல்லையோ, நம் பிறந்த நாளை யாராவது ஞாபகம் வைத்திருந்து வாழ்த்தினால், உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் உண்டாவது நிஜம். நம் மீதும் அக்கறைப்பட ஒருவர் இருக்கிறாரே என்ற சந்தோஷம்.
இன்று காலையில் எனக்கு HDFC வங்கியிலிருந்து ஒரு SMS வந்தது. என்னவென்று பார்த்தேன்.
Happy birthday! On your special day, we wish that peace, prosperity and happiness be with you, right through.
அட, ஆமாம்! இன்றெனக்குப் பிறந்த நாள்! ஆஹா... என் மீது அக்கறைப்பட ஒரு வங்கியே இருக்கிறது!
*****
வயது எப்போதுமே அனுபவம், பக்குவம் இவற்றோடு வரும் என்று சொல்ல முடியாது; பல சமயம் அது சிங்கம் மாதிரி சிங்கிளாகவும் வரும்!
வயது எப்போதுமே அனுபவம், பக்குவம் இவற்றோடு வரும் என்று சொல்ல முடியாது; பல சமயம் அது சிங்கம் மாதிரி சிங்கிளாகவும் வரும்!
6 comments:
//அவ்வளவு ஏன், எனக்கே என் பெற்றோரின் பிறந்த தேதிகள் தெரியவில்லை. எத்தனைக் கேவலமான விஷயம் இது!//
i can't see whats there to feel ashamed for this!
ஆஹா... வாழ்த்துகள்..
எல்லா வளமும் பெற்று குடும்பத்துடன் நலமுடன் வாழ அன்னையை பிரார்த்திக்கிறேன்.
வயது எப்போதுமே அனுபவம், பக்குவம் இவற்றோடு வரும் என்று சொல்ல முடியாது; பல சமயம் அது சிங்கம் மாதிரி சிங்கிளாகவும் வரும்!
////
அவசரத்துல இதை கவனிக்கவில்லை. சூப்பர்
நிறைய பேருக்கு சிங்கிளாதான் வருது...
Dear Raviprakash,
Just read your blog post. Many more happy returns of the day!
[sathyarajkumar]
http://inru.wordpress.com
அன்புள்ள திரு. ரவிபிரகாஷ்,
நலம். நாடலும் அதுவே.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூர்.
* என்னங்க ஸ்பைடி, யாரார் பிறந்த நாளையோ தெரிஞ்சு வெச்சிருக்கிற நாம நம்மைப் பெத்தவங்க பிறந்த நாளைத் தெரிஞ்சுக்காம இருக்கிறது கேவலமில்லையா?
* பிறந்த நாள் வாழ்த்து சொன்ன வண்ணத்துப்பூச்சியார், சத்யராஜ்குமார், சொக்கன் மூவருக்கும் மனமார்ந்த நன்றி! ஆனா, 'என் பிறந்த நாளைக் கொண்டாடாதீங்க' என்று அறிக்கை விட்டுத் தனக்குப் பிறந்த நாள் வருவதை ஞாபகமூட்டும் அரசியல்வாதிகள் மாதிரி, 'அன்பளிப்புகளைத் தவிர்க்கவும்'னு போட்டு அதை ஞாபகப்படுததற திருமண அழைப்பிதழ்கள் மாதிரி ஆயிடுச்சோ நான் எழுதிய டயரின்னு கொஞ்சம் குறுகுறுப்பாஇருக்குது.
Post a Comment