பெயர் விநோதங்கள்!

ண்பர் மார்க்கபந்து என் மதிப்புக்குரிய நண்பர். கடந்த 30 வருடங்களாக அவரை எனக்குத் தெரியும். (அவரைப் பற்றிய நீண்ட கட்டுரையை என் இன்னொரு பிளாகில் வெளியிட்டுள்ளேன்.) இங்கே அசோக் நகரில்தான் இருக்கிறார். நடந்து போகக்கூடிய தொலைவு!

நேற்றைக்குத் தன் வீட்டில் ஏதோ விசேஷம் என்று அவரும் அவர் மனைவியுமாக வந்து என் அப்பாவையும் அம்மாவையும் தங்கள் காரில் அழைத்துச் சென்றார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன், ஆனந்த விகடனில் வெளியான என் முதல் சிறுகதையைப் பாராட்டி அவர் அப்போது எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கதையின் தலைப்பு ‘விளக்கில் விழுந்த விட்டில்’.

கதை அருமையாக இருக்கிறது என்று தாராளமாகப் பாராட்டிவிட்டு, ‘அந்தக் கதையில் கதாபாத்திரங்கள் யாருக்குமே பெயர் இல்லை. இது எனக்கு ஒரு புதுமையாக இருந்தது. திட்டமிட்டு அப்படி எழுதினீர்களா?’ என்று கேட்டு எழுதியிருந்தார். அதை நானே அதன் பிறகுதான் கவனித்தேன்.

திட்டமிட்டெல்லாம் அப்படி எழுதவில்லை. யதேச்சையாக அமைந்த விஷயம் அது.

நண்பர் மார்க்கபந்து தன் கடிதத்தில், அந்தக் கதையில் இருந்த இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லையே தவிர, போகிற போக்கில் மூன்று பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன். கதாநாயகியை ‘சுந்தர், சுரேஷ், மகேஷ் என வரிசையாகப் பலர் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள்’ என்று எழுதியிருந்தேன். அந்த மூன்று பெயர்களைத் தவிர, கதை மாந்தர்கள் யாருக்கும் பெயர் இல்லை.

‘ரவிபிரகாஷ், ஒரு வேடிக்கை தெரியுமா? என் பெரிய பையன் பேர் சுந்தர்; அடுத்த மகன் பேர் சுரேஷ்; மூன்றாவது மகன் பெயர் மகேஷ். எனக்கு மூன்று மகன்கள். மிகச் சரியாக எப்படி அந்த மூன்று பெயர்களையும் நீங்கள் வரிசைப்படி எழுதினீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் மார்க்கபந்து.

இதுவும் யதேச்சையாக அமைந்த விஷயம்தான்! இப்படியான பெயர் விசித்திரங்கள் எனக்கு அடிக்கடி நிகழ்ந்திருக்கின்றன. ரொம்ப போரடிக்காமல், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்.

எனக்குத் திருமணமான புதிது. சாவி வார இதழில் இருந்த சக நண்பர்கள் எங்களுக்கு விருந்தளித்து மகிழ தங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று, ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று விருந்துண்டு மகிழ்ந்தோம்.

சாவியில் விளம்பரப் பிரிவு மேலாளராக இருந்தவர் சீனிவாசகமணி என்பவர். இப்போது ‘கோபுர தரிசனம்’ என்னும் ஆன்மிக மாத இதழை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரின் அழைப்பின் பேரில் ஒரு ஞாயிற்றுக் கிழமை, நானும் என் மனைவியுமாக திருவான்மியூரில் இருந்த அவர் வீட்டுக்குப் பஸ்ஸில் சென்றோம்.

திருவான்மியூரில் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பில் இறங்கும்போது, ஒரு பெரிய விபத்தில் சிக்கி, என் மனைவியின் முகத்தில் பலத்த அடிபட்டு, மயங்கி விழுந்துவிட்டார். முகம் முழுக்க ரத்தமாகிவிட்டது. நான் பதறி, அவரைத் தூக்கிக்கொண்டு, நடக்கிற தொலைவில் இருந்த பி.ஆர்.ஹாஸ்பிட்டலுக்குச் சென்று அட்மிட் செய்தேன். முகத்தில் தையல் போட்டு, மதியத்துக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

இதற்கிடையில், நடந்த விஷயத்தை நான் சீனிவாசக மணிக்குத் தொலைபேசியில் சொல்லி, எதிர்பாராத மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது என்று கேட்டேன். அப்போது 600, 700 ரூபாய் ஆகியது என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. பதறிப்போய் உடனே பணத்துடன் வந்தார்.

தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும் மகிழ்ச்சியான சூழலில் இப்படி ஆகிவிட்டது குறித்துப் பெரிதும் வருந்தினார். பிறகு முதல் தேதியன்று நான் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோதும் பிடிவாதமாக வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.

மதியம் வரை என்னோடு கூடவே ஆஸ்பத்திரியில் இருந்தார். டிஸ்சார்ஜ் செய்ததும், ஒரு ஆட்டோவில் அருகில் இருந்த அவரின் வீட்டுக்குப் போனோம். என் மனைவியால் சாப்பிட முடியாத நிலை. சீனிவாசக மணியின் மனைவி ரசம் சாதத்தைக் குழைவாகக் கரைத்துக் கஞ்சி போல் ஆக்கிப் பொறுமையாக என் மனைவிக்கு ஸ்பூனால் ஊட்டினார். நான் மட்டும் விருந்துண்டேன்.

பின்னர், அவர்களிடம் விடைபெற்று ஆட்டோவில் புறப்பட்டோம். கொஞ்ச நாளைக்கு என் மனைவியால் தனியாகக் காரியம் எதுவும் செய்ய முடியாது என்பதால், நேரே என் வீட்டுக்குப் போகாமல், மாம்பலத்தில் இருந்த என் தங்கை வீட்டுக்குப் போனோம். என் மனைவியின் உடல் நிலை பூரண குணமாகும் வரை அங்கேயேதான் இருந்தோம்.

சரி, இதில் என்ன பெயர் விசித்திரம் என்றால்...

என் மனைவியின் பெயர் உஷா. எங்களை விருந்துக்கு அழைத்த நண்பர் சீனிவாசக மணியின் மனைவி பெயரும் உஷா. பி.ஆர். ஹாஸ்பிட்டலில் என் மனைவிக்குச் சிகிச்சை அளித்த டாக்டரின் பெயரும் உஷா. நாங்கள் வீடு திரும்பிய ஆட்டோவிலும் உஷா என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. என் வீட்டுக்குப் போகாமல் என் தங்கை வீட்டுக்கு வந்ததாகச் சொன்னேனல்லவா, என் தங்கையின் பெயரும் உஷா.

இப்படி ஒரே நிகழ்வில் அடுத்தடுத்து ஐந்து உஷாக்கள் இருந்தது விசித்திரம்தானே?

*****
யாருடன் சேர்ந்து சிரித்தீர்களோ, அவரை ஒருவேளை நீங்கள் மறந்துவிடலாம். ஆனால், யாருடன் சேர்ந்து அழுதீர்களோ, அவரை உங்களால் மறக்க முடியாது!

4 comments:

SPIDEY said...

sir hospitalla suthuna fan perum usha apadinu solla maranthuteengaley)))).

butterfly Surya said...

விபத்தின் சோகத்தை கூட விசித்திர நிகழ்வுகளாக சொல்வது அருமை.

ungalrasigan.blogspot.com said...

ஹாய் ஸ்பைடி! உண்மையிலேயே அப்படியும் இருந்திருக்கக்கூடும்; அப்புறம், அந்த நண்பர் சீனிவாசக மணியின் வீட்டில் ஒரு தையல் மிஷின் இருந்தது. அதுவும் உஷா தையல் மிஷினாக இருந்திருக்கலாமோ என்னவோ, யார் கண்டது? எப்படியோ, இந்த ராத்திரி வேளையில் உடனுக்குடன் படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி!

ungalrasigan.blogspot.com said...

பட்டர்ஃப்ளை சார்! காலங்களைக் கடந்து வந்துவிட்டதால் யாருக்கோ நடந்ததுப்போல் வர்ணித்துச் சொல்ல முடிகிறதென்று நினைக்கிறேன். உண்மையில், அன்றைக்கு என் மனைவியின் முகம் பழையபடிக்குத் திரும்புமாவென பதைபதைத்துக்கொண்டு இருந்தேன்.