வியப்பதற்கு ஒன்றுமில்லை!

சமீபமாக நான் பிளாக் எழுதத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவிலிருந்து நண்பர் சத்யராஜ்குமார் http://www.sathyarajkumar.com அடிக்கடி என்னை இ-மெயிலில் தொடர்பு கொள்கிறார். அங்கே சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகிறார்.

நல்ல எழுத்தாளர். சாவியில் இவரது கதைகளை நான் பிரசுரித்திருக்கிறேன். குறிப்பாக ஒரு சிறுகதையும், தவிர சாவியின் சகோதர பத்திரிகையான மோனா மாத இதழில் இவரது ஒரு நாவலையும் பிரசுரித்த ஞாபகம் உண்டு. அந்த நாவலின் தலைப்பு என்ன என்று இரண்டு நாட்களாக மண்டையைப் போட்டு உருட்டிக்கொண்டு இருந்தேன். நினைவுக்கு வந்துவிட்டது. உடனே சந்தோஷமாக அதைக் குறிப்பிட்டு அவருக்கு இ-மெயில் அனுப்பினேன். உடனே பரவசமாகி பதில் அனுப்பியிருந்தார். அது கீழே...

‘வாவ்! இன்னும் இந்தக் கதைகளை நீங்கள் நினைவில் வைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது. எவ்வளவு ஈடுபாட்டுடன் பணியாற்றி இருப்பீர்கள் என்பதும் புரிகிறது. அந்த நாவலின் தலைப்பு 'நகராதே நட்சத்திரா' என்பது சரியே! அதன் அட்டைப்படம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது உங்கள் உழைப்புதான் என்பதில் சந்தேகமில்லை. அது தவிர 'அறுபது கிலோ மீட்டர் அதிர்ச்சி' என்ற கார் ரேஸ் பின்னணி கொண்ட நாவலையும் வெளியிட்டீர்கள். டாபிகல் சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் நான் முதலில் அனுப்பிய 'அதிரடி ஐம்பது' என்ற கதையை நீங்கள் வெளியிட்டு ஊக்குவித்ததால், அதே பாணியில் தொடர்ந்து பல சிறுகதைகள் அனுப்பினேன். அதில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தத் தண்ணீர் சிறுகதை. பின்னர் மாலைமதியிலும் அது போன்ற சில கதைகள் எழுதினேன்.
சற்றே புதுமையான கதைகளை நீங்கள் விரும்பி வெளியிடுவதாலேயே என் போன்ற எழுத்தாளர்கள் மேலும் பட்டை தீட்டப்படுகிறார்கள்...’

இயக்குநர் சிம்புதேவன் வியந்ததை முன்பு எழுதியிருந்தேன். இப்போது சத்யராஜ்குமார்.

ஆனந்த விகடனின் சகோதர பத்திரிகையான ஆன்மிக இதழ் சக்தி விகடனின் பொறுப்பாசிரியர் திரு.பி.சுவாமிநாதன். விகடனில் நான் சேர்ந்த அன்றைய தினம் எம்.டி. (ஆசிரியர் திரு.பாலன்), திரு.மதன், திரு.ராவ், திரு.வீயெஸ்வி, திரு.கே.அசோகன் இவர்களுக்கு அடுத்து எனக்கு அறிமுகமானவர் பி.சுவாமிநாதன்தான்.

அவர் ஒருமுறை சொன்னார்... “சாவியில கூட நீங்க என் சிறுகதையை வெளியிட்டிருக்கீங்க!”

“அப்படியா? சுவாமிநாதன் என்கிற பேர்லேயே எழுதினீங்களா?” என்றேன்.

“இல்லை. சின்னக் குயிலு என்கிற புனைபெயரில் எழுதினேன்.”

“ஆமாம். ஞாபகம் வருது. ஒரு மாதிரி நியூஸ்பிரிண்ட் தாள்ல சின்னக்குயிலு என்கிற புனைபெயரை மட்டும் பச்சை ஸ்கெட்ச்ல எழுதி அனுப்புவீங்க. சரியா?”

“வாவ்! எப்படி ரவி இவ்ளோ ஞாபகம் வெச்சிருக்கீங்க?” என்று ஆச்சரியப்பட்டார்.

“இன்னும் கேளுங்க சொல்றேன்... சாவியில நீங்க எழுதின ஒரு கதை... மாடியில ஒரு ரூம்ல ஒரு பேச்சுலர் தங்கியிருப்பான். வீட்டுக்காரர் பொண்ணு கீழேர்ந்து அவனுக்கு ஒரு டம்ளர்ல பாயசமோ, பாலோ எடுத்துட்டுப் போய் அவனுக்குக் கொடுக்கும். அது அவனைக் காதலிக்கும்னு கதை போகும். சரியா நினைவில்லே... அந்தக் கதைக்கான பட ஐடியாவை நான் ஓவியர் ஜெயராஜுக்கு போன்லயே சொல்லிப் படம் வாங்கினேன். ஒரு டேபிள் முன் அமர்ந்து அந்த இளைஞன் எழுதிட்டிருப்பான். இந்தப் பொண்ணு பாவாடை, தாவணி அணிந்து கையில் ஒரு சொம்பு டம்ளரோடு அங்கே வரும். அவர் உங்க கதைக்குப் போட்டிருந்த படம் இதுதான். சரியா?”

பிரமித்து நின்றுவிட்டார் பி.சுவாமிநாதன்.

எனக்கே அது ஆச்சரியம்தான். காரணம், நான் பெருமறதிக்காரன். பத்திரிகைத் தொழிலில் இத்தனை நாள் நான் குப்பை கொட்டுவது எனக்கே பேரதிசயம்.

பின்னே... சட்டென்று எப்படி அவர்கள் எழுதிய கதைகளை நினைவுகூர என்னால் முடிந்தது என்று கேட்கிறீர்களா? அது மூளையின் விசித்திரம்தான். என் மூளை எதை நினைவு வைத்துக்கொள்கிறது, எதை மறக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. ஒரு வித போட்டோ மெமரி எனக்கு இருக்கும் என்று தோன்றுகிறது.

ஹில்கூ என்கிற விசித்திரமான பெயர், அவர் எழுதிய கதைக்கு ஜெயராஜ் வரைந்த படம், அது கிளறிய கதைச் சம்பவம்... சத்யராஜ்குமார் என்கிற பெயரும் எப்படியோ தனித்துவமாக என் மனதில் பதிந்துபோயிருக்கிறது. சின்னக்குயிலு என்ற பெயரும் ஒரு வித்தியாசமான பெயர்தான். அந்தப் பெயரைச் சொன்னதுமே, அது பச்சை நிறத்தில்தான் என் கண்ணில் தோன்றியது.

மற்றபடி, பிரமிக்க என்னிடம் எதுவுமில்லை திரு.சத்யராஜ்குமார்! நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘அறுபது கிலோ மீட்டர் அதிர்ச்சி’ நாவல் பற்றி எனக்கு ஞாபகமே வரவில்லையே!
*****
உண்மையில் நாம் வளர்ந்திருக்கிறோமா? இல்லை. மற்றவர்களிடத்தில் நம்மை எப்படிச் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கற்றிருக்கிறோம். அவ்வளவே!

5 comments:

A-kay said...

It is really nice to read your blog post, although I don't comment often, I read your blogs regularly. It is nice to keep in touch with the Tamil magazine through you :)

சத்யராஜ்குமார் said...

சின்னக் குயிலி கதை எனக்கும் ஞாபகம் இருக்கிறது. கதையின் தலைப்பு 'சொட்டு சொட்டாய் ஒரு காதல்' தானே? (என்று அவரிடம் கேட்டு சரி பாருங்கள்)

- சத்யராஜ்குமார்

Anonymous said...

அன்புள்ள ரவிப்ரகாஷ்,

வியப்பதற்கு ஒன்றுமில்லை! - ல் என்னைக் குறிப்பிட்டு எழுதியதற்கு நன்றி. இதற்கு முன்னால் எழுதிய பதிவில் அப்பாஸ் மந்திரி, அனுராதா சேகர், தமயந்தி, சியாமா ஆகியோர் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்த போது பழைய classmates பற்றி ரொம்ப நாள் கழித்து அறிய நேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. முடிந்தால் என் பெயர் வரும் இடங்களில் http://www.sathyarajkumar.com -க்கு ஒரு லிங்க் தாருங்கள். யாரும் விரும்பினால் என் கதைகளை படிக்க உதவும்.
:-)
[சத்யராஜ்குமார்]

ungalrasigan.blogspot.com said...

கண்டிப்பாக சத்யா! இதோ...

ungalrasigan.blogspot.com said...
This comment has been removed by the author.