நண்பர்களிடம் கேட்டேன். தெரிந்தவர்களிடம் கேட்டேன். யாருக்கும் சட்டென்று அடுத்த வரிகளைச் சொல்லத் தெரியவில்லை. சிலர், ‘வைத்த கல்விதொரு மனப்பழக்கம்’ என்று அடுத்த வரியைச் சொன்னார்களே தவிர, முழுப்பாடலும் யாருக்கும் தெரியவில்லை. சொற்பொழிவுகளில் உதாரணம் கொடுத்துப் பேசுபவர்களும் இந்த இரண்டு வரிகளோடு அடுத்த விஷயத்துக்குத் தாவிவிடுவதால், மற்ற வரிகள் பற்றி அவர்கள் கவலைப்படவேண்டியிருக்கவில்லை. நானும் அப்படித் தாவிவிடலாம்தான். ஆனால், பெரியவர்கள் மாதிரி எனக்கென்ன என்று போகிறவர்கள் இல்லை சுட்டிகள். சட்டென்று எழுந்து ‘அடுத்த வரி என்ன அங்கிள்?’ என்று யாராவது ஒரு சுட்டி தடாலென்று கேட்டுவிட்டால், நான் அங்கே திருதிருவென்று முழிக்கக்கூடாதே! எனவே, நெட்டில் தேடி, அதன் மற்ற வரிகளைக் கண்டுபிடித்தேன். (இணையம் இருப்பது எத்தனை வசதி!)
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்த கல்விதொரு மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் - நட்பும்
தயையும் கொடையும் பிறவிக் குணம்.
இதுதான் அந்தப் பாடல்.
தமிழிலேயே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது எத்தனையோ இருக்கிறது. வேற்று மொழி இலக்கியங்களில் மாதிரிக்கு ஒன்றிரண்டைப் படித்துக்கொண்டுவிட்டு, தமிழில் மொத்தத்தையும் கரைத்துக் குடித்துவிட்ட மாதிரி, பேச்சினிடையே ‘கீட்ஸ்’ என்றும், ‘காஃப்கா’ என்றும் வித விதமான பெயர்களைச் சொல்லி அசத்த நினைக்கும் ஒரு சில கத்துக்குட்டி இலக்கியவாதிகளைக் கண்டால் எனக்கு உள்ளூற கடுப்பாக இருக்கிறது.
‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்கிற வரியும் அதுபோல்தான்; ஈழத் தமிழர் பிரச்னையின்போது பரவலாகப் பலரது வாயில் புரண்ட வரி அதுதான். அந்தப் பாடலின் அடுத்தடுத்த வரிகள் யாருக்காவது தெரியுமா என்றால், சத்தியமாகத் தெரியாது. தமிழருவி மணியன் போன்று தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களுக்குத் தெரிந்திருக்கலாம். மற்றபடி, அந்த வரியைத் தன் ஆவேசப் பேச்சினிடையில் பயன்படுத்தியவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்குமா என்றால், நிச்சயம் தெரிந்திருக்காது. சரி, அதை யார் எழுதியது என்றாவது கேட்டுப் பாருங்கள். முழிப்பார்கள்.
நாமக்கல் வே.ராமலிங்கம் பிள்ளையவர்கள் எழுதிய கவிதை வரி அது. ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்கிற பிரபல வரியும் அவர் எழுதியதுதான் என்று நினைக்கிறேன். அல்லது, பாரதிதாசனா? (இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் இந்த நேரம் வரை, எனக்கும் முழுப்பாடலும் தெரியாது. கட்டாயம் நாளைக்குள் தெரிந்துகொண்டுவிடுவேன்.)
‘தமிழன்’ என்கிற சொல்லை முதன்முதல் கையாண்டவர்கள் மகாகவி பாரதியார், நாமக்கல் கவிஞர் இவர்களாகத்தான் இருக்கும் என்றுதான் நான் இதுவரையில் நினைத்துக்கொண்டு இருந்தேன். ‘இல்லை. அவர்களுக்கு வெகு காலம் முன்பே தமிழன் என்ற சொல் பிறந்துவிட்டது’ என்று சொல்லி என்னை அசத்தினார் 80 வயதான ஒரு சீனியர் சிட்டிசன். திருச்சி சுட்டி விழாவுக்குப் போயிருந்தபோது, அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர் அவர்.
இளங்கோவடிகள்கூட தமிழரைத் தமிழர் என்று குறிப்பிடவில்லை. ‘காவாநாவின் கனகனும் விசயனும்... அருந்தமிழாற்றல் அறிந்திலர் ஆங்கென... தென் தமிழாற்றல் காண்குதும் யாமென... வாய்வாள் ஆண்மையின் வண்தமிழ் இகழ்ந்த... தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்...’ என்று இப்படியெல்லாம் சிலப்பதிகாரம் முழுக்க ஆங்காங்கே தமிழ், தமிழ் என்றுதான் குறிப்பிடுகிறாரே தவிர, தமிழர் என்று ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை.
தொல்காப்பியத்திலும் தமிழன், தமிழர் என்ற சொற்கள் இல்லை. ‘தமிழம்’ இருக்கிறது.
‘சரி, தமிழனைத் தமிழன் என்று முதலில் குறிப்பிட்டது யார்?’ என்று அந்தப் பெரியவர் துரைசாமி அய்யா அவர்களை ஆவல் தாளாமல் விசாரித்தேன்.
‘யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே
இருந்த தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது’
இந்தப் பாடலைச் சொல்லிவிட்டு, ‘இதை எழுதியது யார் தெரியுமா?’ என்று என்னை அந்தப் பெரியவர் கேட்டார். ‘தெரியவில்லை’ என்றேன்.
“முதல் ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் எழுதிய பாடல் இது. இரண்டாம் திருவந்தாதியில், 74-வது பாசுரம் இது. இவர் தவிர, ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உரை எம் அண்ணல் கண்டாய்’ என்று அப்பர் சுவாமிகளும் தமிழன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். திருத்தாண்டகம், திருமறைக்காடு பகுதியில் 5-வது பாடலாக இது உள்ளது. பூதத்தாழ்வாரும், அப்பர் சுவாமிகளும் கி.பி.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ் மொழிக்கு ஆற்றிய ஒப்பற்ற பணிகள் ஏராளம். அவர்களுக்குத் தமிழர்களாகிய நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என்றார் பெரியவர் துரைசாமி.
“உண்மைதான் அய்யா! கூடவே, இது போன்ற அருமையான விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு ஆர்வத்தோடு எடுத்துச் சொல்லும் உம் போன்ற பெரியவர்களுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்றேன். சரிதானே?
*****
உங்களுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்று தெரிந்திருப்பது நல்லதுதான். ஆனால், என்னவெல்லாம் தெரியாமல் இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது நல்லதல்ல!
உங்களுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்று தெரிந்திருப்பது நல்லதுதான். ஆனால், என்னவெல்லாம் தெரியாமல் இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது நல்லதல்ல!
6 comments:
முதலாவது: புது சட்டைக்கு வாழ்த்துகள். அருமை. ஆடி தள்ளுபடியில் அள்ளி விட்டீர்களா.?
இரண்டாவது: போன பதிவின் பின்னூட்டத்திற்கு மதிப்பளித்து இடை வெளி இன்றி பதிவு.
மூன்று: இந்த பதிவை படித்து மூன்று விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
நன்றி..
வண்ணத்துப்பூச்சியாருக்கு நன்றி!
1. புது சட்டை எடுத்துக் கொடுத்தது என் மகள்! உங்கள் பாராட்டுக்கள் அவளுக்குத்தான்!
2. நடுவில் நாலைந்து நாட்கள் ஊரில் இல்லாததால் பதிவிட முடியவில்லை. தொடர்ந்து எழுத முயல்கிறேன். ஊக்குவிப்புக்கு ஸ்பெஷல் நன்றி!
3.இரண்டு என்னென்ன என்று புரிகிறது. மூன்றாவது என்ன என்று புரியவில்லை.
மீண்டும்
முதலாவது: உங்கள் மகளுக்கு எனது வாழ்த்தும் ஆசியும்.
இரண்டாவது: தங்களுக்கு நன்றி.
மூன்றாவது: திருக்குறள் எண் 416
http://en.wikipedia.org/wiki/Dravida
இதையும் கவணிக்கவும்.
நல்ல பதிவு!
மிக நன்று
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
சிறிய திருத்தங்கள் அந்தப்பாடலில்.
தி.இரத்தினவேலு
Post a Comment