படித்தேன்... பார்த்தேன்..!

‘அடுத்த மாதம் ஏழாம் தேதி, நான்கு மணி சுமாருக்கு ஓர் அதிசயம் நடக்கப் போகிறது. மிஸ் செய்துவிடாதீர்கள். கொண்டாடுங்கள். இனி இப்படி ஒரு அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழவே நிகழாது!’ என்ற குறிப்போடு, எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. அப்படி என்னதான் அதிசயம் என்று படித்துப் பார்த்தேன்.

அதாவது, அடுத்த மாதம் ஏழாம் தேதி, காலை நான்கு மணி, ஐந்து நிமிடம், ஆறு விநாடி ஆகும்போது பார்த்தால், 04:05:06:07:08:09 என்று வரிசையாக வருமாம்.

உக்காந்து யோசிப்பாய்ங்களோ?!

ன்னொரு மெயில்... முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு ஒரு கார்டு வரும் பார்த்திருக்கிறீர்களா... அதில், ‘கோயிலுக்குள் ஒரு பாம்பு புகுந்தது. அது பின்னர் ஒரு பிராமண வடிவம் தாங்கி, மூலவரை மூன்று சுற்றுச் சுற்றிவிட்டு...’ என்று இஷ்டத்துக்கு அளந்துவிட்டு, ‘இந்த கார்டில் உள்ள வாசகங்களை அப்படியே பிரதியெடுத்து ஒரு பத்து பேருக்கு அனுப்பவும். அப்படிச் செய்த இன்னார் பதவி உயர்வு பெற்றார்; இன்னாருக்கு லாட்டரியில் பத்தாயிரம் ரூபாய் பரிசு விழுந்தது. மாறாக, இதை அலட்சியம் செய்த இன்னார் ரத்த வாந்தி எடுத்துச் செத்துப் போனார். இன்னார் தொழில் நஷ்டம் அடைந்து, குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது’ என்று பயமுறுத்தி எழுதப்பட்டிருக்கும். அதையும் நம்பி, மாங்கு மாங்கென்று கடிதங்கள் எழுதித் தள்ளிய பல பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த இன்டர்நெட் யுகத்தில் அத்தகைய கடிதங்கள் ஒழியவில்லை. இ-மெயிலில் அப்படியான கடிதங்கள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கின்றன. சீன ஜோசியம் என்ற ஒன்று எனக்கு அப்படித்தான் வந்தது. இன்ன நம்பருக்கு இவர் என்று உங்களுக்கு அறிமுகமான ஒருவர் வீதம் ஒரு ஏழெட்டு நம்பர்களுக்கு மனதுக்குள் நினைத்துக்கொள்ளச் சொல்லிற்று அந்த மெயில். இதில், ‘ஒரு முறை நினைத்த நபரை மாற்றக்கூடாது; முதலில் என்ன தோன்றுகிறதோ, அவரையேதான் அந்தக் குறிப்பிட்ட எண்ணுக்கு உரியவராக வைத்துக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் ஜோஸியம் பலிக்காது’ என்று ஏகப்பட்ட பில்டப்கள் வேறு!

சரி, சும்மா விளையாடித்தான் பார்ப்போமே என்று முயற்சி செய்ததில், சீன ஜோஸியம் சொன்ன ஒரு பலனும் எனக்குப் பொருந்தவில்லை. ஆனால், இறுதியில் அந்த மெயில், ‘என்ன, எப்படி இத்தனைப் பொருத்தமாகப் பலன்கள் அமைந்தது என்று வியக்கிறீர்களா? அதுதான் இந்த சீன மேஜிக்கின் மகிமை! உடனே இந்த மெயிலை உங்களுக்குத் தெரிந்த பன்னிரண்டு பேருக்கு ஃபார்வேர்ட் செய்யவும். அப்படிச் செய்தவர்களுக்கு அவர்களின் வேண்டுதல் அடுத்த பத்தே நிமிடத்தில் பலிதமாகும். அலட்சியம் செய்தவர்களுக்கு இது நேர்மாறாகத் திரும்பி, கெடுதி உண்டாகும். ஜாக்கிரதை!’ என்று மிரட்டியது.

‘என்னிய வெச்சுக் காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே!’ என்று நினைத்தபடி, அதைக் கிடப்பில் போட்டுவிட்டேன். அது ஆயிற்று ஒரு மாதம்! அந்த மெயில் மிரட்டிய மாதிரியே எனக்கு ஒரு கெடுதி நடந்துவிட்டது. செருப்பு அறுந்துபோய்விட்டது. புதுசு வாங்க இருநூறு ரூபாய் தண்டச் செலவு. சொல்லுங்க, இது கெடுதிதானே?

சில நாட்களுக்கு முன்னால், அதாவது மே 28-ம் தேதி, ‘ஞாநி தந்த ஞானம்’ என்ற தலைப்பில் எழுதிய பதிவில், ஒரு பஸ் டிரைவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவரது ஓட்டும் திறமையை நான் பாராட்டப் போக, அதற்கு அவரின் எதிர் விளைவு நன்றி தெரிவிப்பதற்குப் பதிலாக, ‘என்ன, நக்கல் பண்றீங்களா?’ என்று கோபமும் வருத்தமாக இருந்தது என்று வியப்புடன் எழுதியிருந்தேன். அவரை மீண்டும் சந்தித்தால், இது பற்றி அவரிடம் நிதானமாகப் பேசி விவரம் கேட்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அவரை இத்தனை நாட்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் சந்தித்தேன். பழைய விஷயத்தை அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு, “அன்றைக்கு ஏன் அப்படி ரியாக்ட் செய்தீர்கள்?” என்று கேட்டேன்.

“அப்படியா! ஸாரி, ஏதோ ஒரு மூடில் இருந்திருப்பேன்” என்றார். “ஆனா, நான் உங்களை அன்னிக்குப் பாராட்டத்தானே செய்தேன்? அதற்கே கோபப்பட்டீர்களே, அதுதான் எனக்குப் புரியவில்லை” என்றேன்.

“சாக்கடை அள்ளுறவன்கிட்டே போய், ‘நீ சூப்பரா சாக்கடை அள்ளுறடா’ன்னு பாராட்டினா, அவன் கோபப்படுவானா, மாட்டானா?” என்று திருப்பிக் கேட்டார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. பின்பு நிதானமாக, “யோசித்துப் பார்த்தால், எந்தத் தொழிலும் கேவலம் இல்லைதான். ஆனால், அவரவர் மன நிலையிலிருந்துதான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், டிரைவர் வேலை என்பது ஒன்றும் கீழானதோ, கண்ணியக் குறைவானதோ இல்லையே?” என்றேன்.

“எனக்குப் பிடிக்கலை” என்றார். “வயித்துப்பாட்டுக்காகத்தான் நான் இந்த டிரைவர் வேலைல இருக்கேன். இதை விட்டா எனக்கு வேறு எதுவும் தெரியாது!”

மெல்லப் பேச்சுக்கொடுத்தேன். அவர் பெயர் ராதாகிருஷ்ணன். மதுரைப் பக்கம் ஏதோ கிராமமாம் அவரின் சொந்த ஊர். சினிமா ஆசையில் கிளம்பி வந்தவர், இங்கே சில இயக்குநர்களுக்குக் கார் டிரைவராகவும் இருந்திருக்கிறாராம். சினிமா வாய்ப்பு தேடி அவர் அலையாத அலைச்சலில்லை. நடிகனாகவேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவே இல்லையாம். ‘சும்மா கதாநாயகனோடு சேர்ந்து பத்தோடு பதினொன்றாக நிற்கிற வாய்ப்புக்கூடக் கிடைக்கவில்லை’ என்று வருத்தப்பட்டுச் சொன்னார்.

“கையில் எடுத்து வந்த பணமெல்லாம் தொலைஞ்சுது. நடிகனாகிட்டுதான் ஊருக்குத் திரும்புவேன்னு எல்லார்கிட்டயும் சபதம் போட்டுட்டு வந்தேன். நான் தோத்துட்டேன். ஊருக்குத் திரும்பிப் போக அவமானமா இருந்துது. அதான், இங்கேயே தங்கிட்டேன். ஹெவி வெகிக்கிள் லைசென்ஸ் எடுத்து வெச்சிருந்தேன். பஸ் டிரைவர் வேலைக்கு அப்ளை பண்ணி, வாங்கிட்டேன். ஏதோ காலம் ஓடிக்கிட்டிருக்கு!” என்றார்.

“நீங்கள் நம்பி வந்த சினிமா உங்களைக் கைவிட்டுவிட்டது. டிரைவர் தொழில்தான் உங்களை இப்போது வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் என்னடாவென்றால், கைவிட்ட காதலியையே மனதில் நினைத்துக் கொண்டு, உடன் இருக்கும் அன்பு மனைவியை உதாசீனப்படுத்துகிற கணவன் மாதிரி நடந்துகொள்கிறீர்களே, நியாயமா?” என்று கேட்டேன்.

சிரித்துவிட்டார்.

பிடிக்காத வேலையையே இத்தனைச் சிறப்பாகச் செய்தால், அதே வேலையை அவர் பிடித்துச் செய்தால் இன்னும் எத்தனை அருமையாகச் செய்வார் என்று நினைத்துப் பார்த்தேன்!

‘வசந்த மாளிகை’ படத்தில் ஒரு வசனம் வரும்... ‘நீ விரும்புகிற பெண்ணை விட உன்னை விரும்புகிற பெண்ணை மணந்துகொள்வதுதான் உனக்கு நல்லது!’ என்று. அதைப் போல, ‘நீ விரும்புகிற வேலை கிடைக்காவிட்டால், உனக்குக் கிடைத்த வேலையை விரும்பு’ என்றொரு வாசகம் மனதில் தோன்றியது. சொன்னேன்.

“அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன், சார்! சினிமாவே வேணாம் நமக்குன்னு ஒதுங்கி நாலஞ்சு வருஷமாவுது. நடுவுல ஊருக்கும் ஒருமுறை போய் வந்தேன். கல்யாணம் கட்டிக்கிட்டேன். முறைப்பொண்ணுதான். ஒரு பொண் குழந்தை. எல்.கே.ஜி. படிக்குது. நல்லபடியா போயிட்டிருக்குது வாழ்க்கை. அன்னிக்கு நீங்க கேட்டதும், என்னவோ தெரியல, பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து, ஒரு மாதிரி சுர்ருனு ஆயிருச்சு. பட்டுனு பேசிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க!” என்றார்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

*****
பேச்சுக் கலை என்பது சரியான நபருக்கு சரியான விஷயத்தை விளக்கிச் சொல்வது மாத்திரமல்ல; தவறான நபரிடம் தவறான விஷயத்தைப் பேசாதிருப்பதும் ஆகும்!

0 comments: