ஞாநியின் கேணி!

ஞாநி சமீபத்தில் குடியேறியிருக்கும் கே.கே.நகர் வீட்டின் பின்னால் ஒரு கேணி உண்டு. அதைச் சுற்றிக் கொஞ்சம் இடமும், தென்னை, வாழை, நாரத்தை மரங்களும் (நாரத்தைதானா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இலையைப் பிய்த்துக் கசக்கி முகர்ந்து சோதிக்கவில்லை.) உள்ளன. சென்னையில் இப்படித் தென்னையும் கேணியும் உள்ள வீடா என்று காணி நிலம் கேட்ட பாரதி போன்று குதூகலித்து, அங்கே அந்தக் கேணியை மையமாகக் கொண்டு ஓர் இலக்கிய அமைப்பு தொடங்கலாமே என்று யோசித்து, ‘கேணி’ என்ற பெயரிலேயே தொடங்கியும் விட்டார் நண்பர் ஞாநி.

கேணி இல்லாவிட்டாலும்கூட ஞாநி ஏதேனும் இப்படி ஓர் இலக்கிய அமைப்பு தொடங்கியிருப்பார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ‘இலக்கியத் தோட்டம்’ என்று தொடங்கியிருக்கலாம். என் வீட்டில் இந்தத் தோட்டம் என்ற பேச்சுக்கே வழியில்லை. வீட்டினுள்ளும் வரவேற்பறை, கூடம், படுக்கையறை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், எல்லாம் சம அளவிலான எட்டுக்கு எட்டு கொண்ட அறைகள். ஞாநி வீட்டுக்கு வருவோம். கூடம் என்று கூட அவர் இலக்கிய அமைப்பு தொடங்கியிருக்கலாம். இலக்கியவாதிகள் கூடும் இடம் என்று பொருத்தமாக இருக்கும்தானே? முற்றம் என்றும் வைத்திருக்கலாம். சமையலறை என்று வைத்திருந்தாலும் பொருத்தமாகவே இருந்திருக்கும். சமைப்பது என்றாலே படைப்பதுதானே? சரி, கேணி ஒரு சாக்கு! எனக்கும் இந்தப் பதிவுக்கு எதுகை மோனையோடு ஒரு தலைப்பு கிடைத்தது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறன்று மாலை 4:30-க்கு ஞாநி வீட்டில் கேணிக் கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் வண்ணதாசன் இல்லத் திருமண வரவேற்பில் ஞாநியைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தபோதுதான், அவர் இந்தத் தகவலைச் சொல்லி, ‘முடிந்தால் வாருங்கள்’ என்றார். இது இரண்டாவது கூட்டம். முதல் கூட்டத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, தான் ரசித்த சிறுகதைகள் பற்றி உரையாடிவிட்டுச் சென்றிருந்தார். இந்த இரண்டாவது கூட்டத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்துகொள்ளவிருப்பதாகச் சொன்னார் ஞாநி.

இலக்கியவாதிகள் என்றாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி! குறுந்தாடியும், ஜோல்னாப் பையும், வெற்றிலை போட்டுக் குதப்பிய உதடுகளும் மட்டும்தான் இன்றைய இலக்கியவாதிகளிடம் மிஸ்ஸிங்! மற்றபடி, ‘தோல்ஸ்தோவெய்ஸ்கி ஒரு இடத்துல என்ன சொல்லியிருக்கான்னா...’ என்று ஆரம்பித்து பிளேடு போடுகிற ஆசாமிகள் என்பது என் அபிப்ராயம். நான் சினிமாவை ரசிப்பேன்; சினிமாக்காரர்களை அல்ல! அதே போல் படைப்புகளை ரசிப்பேன்; படைப்பாளிகளோடு அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ள நான் விரும்புவதில்லை.

நான் சாமானியன். நான் இலக்கியவாதி கிடையாது. பத்திரிகையில் பணியாற்றுவதால், நானும் இலக்கியவாதியாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனாலும், நான் அந்தக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், அங்கே என்னதான் நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க! இதுவே ஞாநி அந்த இலக்கியக் கூட்டத்தை ஒரு ஸ்டார் ஹோட்டலில், அல்லது ஒரு பொது மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தால், இந்தப் பதிவை இப்போது நான் எழுதிக்கொண்டு இருக்கமாட்டேன்.

அங்கே வந்திருந்தவர்களில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எஸ்.சங்கரநாராயணன் (சாவி காலத்து நண்பர்), ஏ.ஏ.ஏ. (மூணு ‘ஏ’தானே?)ஹெச்.கே.கோரி. க.சீ.சிவகுமார், பிரதம விருந்தினர் பிரபஞ்சன் இவர்களைத் தவிர, வேறு யாரையும் எனக்குத் தெரியவில்லை. நான்தான் இலக்கியவாதி இல்லையே!

பிரபஞ்சனின் ‘கனவுகளைத் தின்போம்’ தொடர்கதை ஆனந்த விகடனில் வெளியாவதற்கு முன்னதாக, அதற்கு எந்த ஓவியரிடம் படம் வாங்கலாம் என்று திரு.வீயெஸ்வி என்னிடம் கலந்தாலோசித்தார். அது இலக்கியப் பெண்மணி ஒருத்தியைப் பற்றிய, அவளுக்கும் பேராசிரியருக்கும் உள்ள உறவு பற்றிய கதை என்று ஞாபகம். சரியாக நினைவில்லை. கோபுலு போட்டால் சரியாக இருக்கும் என்று நான் கருத்து சொன்னேன். ஆனால், விகடனுக்கும் கோபுலுவுக்கும் உள்ள தொடர்பு விட்டுப் பல காலம் ஆகியிருந்தது. அவர் போட்டால் நன்றாக இருக்கும்; ஆனால், போடுவாரா என்று ஓர் ஐயம் இருந்தது. ‘கேட்டுப் பார்க்கிறேனே! இல்லாவிட்டால், மாற்று யோசிப்போம்’ என்றேன்.

ஓவியர் கோபுலுவிடம் பேசினேன். அவர் அந்தத் தொடருக்குப் படம் வரைய ஒப்புக்கொண்டு, அற்புதமாக வரைந்துகொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் மீண்டும் விகடனுக்கும் கோபுலுவுக்கும் உள்ள தொடர்பு உயிர்பெற்று, நீடித்து வருகிறது.

நேர்மையாகச் சொல்வதானால், பிரபஞ்சனின் சிறுகதைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஒன்றிரண்டு படித்திருக்கலாம். ஆனால், நான் அவரது எழுத்தை அதிகம் வாசித்து வியந்தது, ‘வானம் வசப்படும்’ நாவலில். பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டியூப்ளெக்ஸ் துரை, அவரது மனைவி ழான், அவர்களிடம் துபாஷாக வேலை பார்த்த ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் வாயிலாக பாண்டிச்சேரியின் கதையை அன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான தமிழ் நடையில் எழுதியிருப்பார். படிக்கவே ரசனையாக இருக்கும்.

மாதிரிக்கு அதிலிருந்து சில வரிகள்...

ழான், ஆவி பறந்த சீனப் பீங்கான் பாத்திரத்தை வெள்ளைத் துணி கொண்டு போர்த்தி, வெகு நாகரிகமாகவே குவர்னருக்குக் கபேவைப் பெய்தாள்.

“ழான்... இன்னிக்குக் காலமே, நம்முடைய ஆப்தரும், சினேகிதருமான சந்தா சாகிப்பின் பாரியாளைச் சந்திக்க வேணும் என்பதாகச் சொன்னாயே... உனக்குப் புறப்பாட்டுக்கு நேரமாகவில்லையா?”

“இருக்கட்டும். ராஜாவாகிவிட்ட என் ழோசேப் இனி அடிக்கடி காணவும், கேழ்க்கவும், பேசவும் அருமையாகிவிடுவார், அல்லவா? ஆதலினால் கிடைக்கும் நேரத்தை அருகில் இருந்து சுகப்பட வேணும் என்று ஆசை.”

எடுத்தால் கீழே வைக்க மனம் வராதபடிக்கு விறுவிறுப்பாகப் போகும் கதை. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல் இது.

திறமையான எழுத்தாளர்கள் பலர் திறமையான பேச்சாளர்களாக இருப்பதில்லை. ஆனால், பிரபஞ்சனின் பேச்சு வெகு ரசனையாக இருந்தது. ஜோக்கைக் கூடக் கடுகடுவென்று படித்துத் தேர்ந்தெடுப்பவன் என்று எங்கள் அலுவலகத்தில் எனக்கொரு ‘நல்ல பெயர்’ உண்டு. என்னையே பகீர் பகீரென்று பல இடங்களில் சிரிக்க வைத்தது பிரபஞ்சனின் பேச்சுப் பாணி. ஒரு கதையை விவரிக்கும்போது, அது யாரோ எழுதியதாக இருந்தாலும், அதைத் தான் எழுதியிருந்தால் எப்படி அதில் தோய்ந்து அனுபவித்து ஏற்ற இறக்கங்களுடன், தேவையான இடங்களில் சற்று இடைவெளி கொடுத்துச் சொல்வாரோ, அப்படி விவரித்தார். சங்க இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், ரஷ்ய இலக்கியம், நவீன இலக்கியம் என சங்கிலித் தொடர்ச்சி போன்று இயல்பாகத் தொட்டுத் தொடர்ந்தது அவரது உரையாடல்.

நிஜமாகவே ஒரு நல்ல, பயனுள்ள பொழுதாகக் கழிந்தது அன்றைய மாலை! கோயிலுக்குப் போவதே புண்ணியம். அங்கே பிரசாதமாக சுவையான சுண்டல் வேறு கிடைத்தால், அது கூடுதல் பயன் அல்லவா? கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்குச் சுண்டல், டீ பிரசாதங்களும் கிடைத்தன.

இதை வாசிப்பவர்கள், இதையே அழைப்பாகக் கொண்டு, அடுத்த மாதம் இரண்டாவது ஞாயிறன்று மாலை நடக்கவிருக்கும் ‘ஞாநியின் கேணி’ கூட்டத்துக்கு அவசியம் வரவேண்டும் என இதன்மூலம் அழைக்கிறேன். இடம்: 39 அழகிரிசாமி சாலை, கே.கே.நகர், சென்னை-78.

ஞாநியைக் கலந்தாலோசிக்காமல் நானாகவே விடுத்த இந்த அழைப்புக்கு ஞாநி கோபிக்க மாட்டார் என நம்புகிறேன்.

*****
ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு ஏற்ற மிக நல்ல நாள் நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் இருக்கிறது.

1 comments:

butterfly Surya said...

போன சனிக்கிழமை வேறு ஒரு கூட்டத்தில் திரு.பிரபஞ்சனின் அற்புத பேச்சை கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. நகைச்சுவையுடன் எத்தனை அரிய தகவல்கள்.. அருமையான எளிமையான மனிதர்.


ஞாயிறும் வரவேண்டும் என்று தான் எண்ணினேன்.

ஆனால் இயலவில்லை.


பதிவிற்கு நன்றி..