சுட்டிகள் விழா!

குழந்தைகளை, சிறுவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள் செய்கிற சுட்டித்தனங்கள் பிடிக்கும். பெரியவர்களுக்கே தோன்றாத வித்தியாசமான சில கோணங்களில் சுட்டிகள் மனதில் எண்ணங்கள் உதிப்பது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

எனக்கு அப்போது 13 வயது. என் தம்பிக்கு 10 வயது. ஒரு சமயம், கிராமத்தில் எங்கள் தந்தையோடு நாங்கள் இருவரும் நடந்துபோய்க்கொண்டு இருந்தபோது, ஒரு வீட்டு வாசலில் இருந்த ஒரு பசு மாட்டைச் சுட்டிக் காட்டி, “அப்பா! அங்கே பாருப்பா, அந்த மாடு ஓட்டை!” என்று குழந்தையாக இருந்த என் தம்பி கத்தியது இன்னமும் எனக்குத் தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது. ‘என்னது! மாடு ஓட்டையா?!’ என்று நாங்கள் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தபோது, பக்கென்று சிரித்துவிட்டோம். தம்பி அப்படிச் சொன்னதற்குக் காரணம் வேறொன்றுமில்லை... அந்தப் பசுமாடு தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டே சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தது.

பெரியவர்கள் ‘எல்லாம் தெரிந்தவர்களாக’ இருப்பதால், வழக்கமான தடத்திலேயே அவர்களின் சிந்தனை ஓடுகிறது. குழந்தைகள் எதையுமே புதுசாகப் பார்ப்பதால் அவர்களின் சிந்தனையும் புதுமையாக இருக்கிறது. அந்த விதத்தில் குழந்தைகளை குரு ஸ்தானத்தில் வைத்தே நான் மதிக்கிறேன்.

எனவேதான், சுட்டி விகடனின் தலைமைப் பொறுப்பாசிரியர் திரு. உபைதுர் ரஹ்மான், திருச்சியில் நடைபெறவிருக்கும் சுட்டி விகடன் விழாவில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டபோது, மறுப்பு சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டேன். ‘உனக்குள் இருக்கு ஒரு கதை’ என்கிற தலைப்பில், சுட்டிகளுக்குப் புரியும் விதத்தில் மிக எளிமையாக, சிறுகதை எழுதும் முறையை விளக்கிப் பேச வேண்டும் என்பது, அந்த விழாவில் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு.

திருச்சி, நேஷனல் ஹைஸ்கூலில், 25.7.2009 அன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5:30 மணி வரையில் மிகக் கலகலப்பாகவும், குதூகலமாகவும், கடைசி வரையில் உற்சாகம் ஒரு சிறிதும் குறையாமலும் மிகச் சிறப்பாக நடந்தேறியது அந்த விழா. வழக்கமான அலுவல்களையெல்லாம் மறந்து, ஒருநாள் முழுக்கச் சுட்டிகளோடு இருந்த அந்த அனுபவம் எனக்குள் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி இருந்தது.

இன்றைய குழந்தைகள் மகா புத்திசாலிகள் என்று ஏற்கெனவே தெரியும். ஆனால், பலப் பல குழந்தைகளிடம் நேரடியாகப் பேசிப் பழகி அதைக் கண்கூடாக அனுபவித்தபோது, நிஜமாகவே பிரமிப்பில் ஆழ்ந்து போனேன். ஒவ்வொரு குழந்தையிடமும் எத்தனை விதமான திறமைகள்... சிந்தனைகள்!

எனது பேச்சின் நடுவே, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட பார்வை வேண்டும் என்பதற்கு உதாரணமாக, ‘மேக ஒட்டடை அடிக்கும் மரங்கள்’ என, சிறுகதை ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா வர்ணித்திருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னேன். உடனே, ஒரு சிறுமி எழுந்து, சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில், கோவலன் கைது செய்யப்பட்டுச் சிரச் சேதம் செய்யப்படப் போகிறான் என்பதை அறிந்து கொடி மரங்கள் சோகத்தோடு அவனை வராதே என்று சைகை செய்வது போல் ஆடின என்கிற உதாரணத்தைச் சட்டென்று சொன்னாள். அடேங்கப்பா!

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை... இங்கே சென்னையில் சுட்டிகள் விழா. இங்கேயும் சிறுகதை எழுதுவது பற்றிக் குழந்தைகளிடம் நான் பேசினேன். ஒரு சிறுகதையை முடிக்கும்போது, படிப்பவரின் மனதில் அந்த முடிவு ஆச்சரியத்தையோ அல்லது ஒரு பாதிப்பையோ ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி, உதாரணமாக எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய ‘எலி’ சிறுகதையை விவரித்துச் சொன்னேன்.

தொல்லை தரும் எலியை அப்புறப்படுத்துவதற்காக, எலிப்பொறியில் மணக்கும் ஒரு மசால்வடையை வாங்கி வைக்கிறான் ஒருவன். வடையைத் தின்ன வரும் எலி மாட்டிக் கொள்கிறது. எலிப்பொறியைக் கொண்டு போய் ஒரு பரந்த வெளியில் திறந்துவிடும்போது, எலி தப்பித்து ஓடுகிறது. ஆனால், ஒரு காகம் அதை அலகால் குத்திக் கதறக் கதற அந்த எலியைக் கொத்திச் செல்கிறது. இதைக் கண்ட இவன் மனம் அந்த எலிக்காகப் பரிதாபப்படுகிறது.

இந்த இடத்தில், அவன் எலிப்பொறியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான் என்று கதையை முடிக்காமல், ‘அவன் அந்த எலிப்பொறியைப் பார்த்தான். உடனே, அவனது துக்கம் பன்மடங்கு பெரிதாகிவிட்டது’ என்று குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். ‘ஏன்?’ என்று சுட்டிகளிடம் கேட்டேன்.

சட்டென்று ஒரு சிறுவன் எழுந்து, “ஏனென்றால், அவன் எலிக்காக வைத்த வடையை அந்த எலி கொஞ்சம் கூடத் தின்னாமல் இருந்திருக்கும். வடை முழுசாக இருக்கும்” என்று மிகச் சரியாக, அசோகமித்திரன் எழுதிய கடைசி வரியைச் சொல்லி அசத்தினான்.

குழந்தைகள் அறிவாளிகள்; அன்பானவர்கள்; புத்திசாலிகள். அவர்களைத் திருத்தி வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு பெரியவர்களாகிய நாம்தான் அவர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொண்டு இருக்கிறோம்.

*****
குழந்தை செய்யும் சேட்டைகளைத் தாங்கினாலும் தாங்கிவிடலாம்; குழந்தையின் சேட்டைகளே இல்லாத வெறுமையைத் தாங்க முடியாது!

1 comments:

வண்ணத்துபூச்சியார் said...

குழந்தையின் சேட்டைகளே இல்லாத வெறுமையைத் தாங்க முடியாது//

உண்மையே.

நீண்ட இடை வெளி விட்டு டைரி எழுதினாலும் தாங்க முடியாது.

வாரத்திற்கு இரண்டு முறையாவது எழுத வேண்டும்.