நான் அறிந்த ‘பாலே’!

பாலேவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது; பரத நாட்டியத்தைப் பற்றியும் தெரியாது! இரண்டையும் தொலைக்காட்சியிலும் சினிமாக்களிலும் பார்த்ததுதான்! இரண்டிலும் எனக்கு அதிகம் பிடித்தது பரதம்தான். அதைத்தான் முந்தைய பதிவில் குறிப்பிட்டேன்.

ஒரு சினிமாப் பாடலை ரசிக்கிறேன்; மற்றொரு பாடல் எனக்குப் பிடிக்கவில்லை என்றால் இந்தப் பாடலின் பல்லவி எந்த ராகத்தில் உள்ளது, சரணங்களில் என்னென்ன ராகங்கள் கலந்திருக்கின்றன, ஆரோகணத்தில் அமைந்துள்ளதா, அவரோகணத்தில் அமைந்துள்ளதா, என்ன தாளக் கட்டு, அட தாளமா, ஆதி தாளமா என்றெல்லாம் எனக்குத் தெரியும் என்று அர்த்தமல்ல.

சொல்லப்போனால் மற்றொரு பாடலை அந்தப் பாடகர் ராகம் வழுவாது பாடியிருக்கக்கூடும்; எனினும் அது எனக்குப் பிடிக்காமல் போகலாம். இந்தப் பாடலை அதைப் பாடியவரின் குரலுக்காகவேகூட நான் ரசிக்கக்கூடும். அதே போல, பரத நாட்டியத்தில் அந்த உடையலங்காரம்கூட பாலேவை விட என்னை அதிகம் ஈர்த்திருக்கலாம். ஈஸ்வரி தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல பாலேவை நானும் ஒரு சர்க்கஸைப் போலத்தான் பார்த்து பிரமித்திருக்கிறேனே தவிர, அதை ஒரு நடனமாக என்னால் பாவிக்க முடியவில்லை. முன்பு, சொர்ணமுகியின் பரத நாட்டியமேகூட ஒரு சர்க்கஸ் என்பது போலத்தான் விமர்சனத்துக்குள்ளாகியது நினைவிருக்கிறதா?

சரி, பாலேவுக்கு வருவோம்.

பாலே என்பது ஒரு பிரெஞ்சு சொல். இதற்கு பாணி அல்லது நடனம் மூலம் கதை சொல்லும் ஒரு மேடைத் தயாரிப்பு என்பது பொருள். அதாவது, பாலே பார்க்கிறோம் என்றால், நடனம் மூலம் கதை சொல்லும் பாணியிலான ஒரு மேடை நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் என்று பொருள்.

பாலேவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பிரெஞ்சு பாலே; மற்றொன்று சோவியத் பாலே! ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் பாலே நடனத்தின் தாய் இத்தாலிதான். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய இத்தாலிய மன்னர்களின் அரசவையில் ஆண்களும் பெண்களும் நடனமாடி, அரசரையும் அரச குடும்பத்தினரையும் மகிழ்வித்தனர். அந்த நடன முறைதான் பாலேயாக வடிவெடுத்தது.

கொலம்பஸ் காலத்துக்கும் முற்பட்டது இந்த நடன வகை. ஆரம்பத்தில் எல்லாம் கிரேக்க, ரோமானியப் புராணக் கதைகள்தான் இந்த நடனத்தில் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய நடனங்களின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாலி நாட்டு இளவரசி கேத்ரின், பிரான்ஸ் மன்னரை மணந்து, பிரான்ஸுக்கு வந்தாள். அவள் பாலே நடனத்தில் மிகத் திறமைசாலி. அவள் பிரான்ஸுக்கு வரும்போது தன்னோடு பாலே நடனத்தில் சிறந்த நடனக் கலைஞர்களையும் அழைத்து வந்தாள். அதன்பின்னர்தான் பிரான்ஸில் பாலே நடனம் பரவத் தொடங்கியது.

ராணி கேத்ரினே ஒரு பாலே நடன நிகழ்ச்சியை வடிவமைத்து, 1581-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி அரங்கேற்றினாள். ‘பாலே காமிக்கே டி லா ரைன்’ என்று பெயர் சூட்டப்பட்ட அதுதான் உலகின் முதல் பாலே நடன நிகழ்ச்சி என்கிறது வரலாறு. அதை இயக்கியவர் இத்தாலிய வம்சாவளியில் வந்த பியூஜாயல் என்பவர். அவர்தான் ‘பாலேயின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

இன்றும் பாலே நடனத்தின் துவக்கத்தில் நடனமாடுபவர்கள் உடலை வளைத்து, முன்னால் குனிந்து வணங்கி எழுவது, அந்நாளில் ராணி கேத்ரினின் கணவரான மன்னர் 14-ம் லூயியின் முன் நடனக் கலைஞர்கள் வணங்கியதன் தொடர்ச்சியான பழக்கம்தான்.

பரதம் ஆடுபவர்களின் பாதம் முழுக்கப் பூமியில் படியும். ஆனால், பாலே நடனமாடுபவர்களின் பாதங்களைக் கவனித்தால், கட்டைவிரல் மட்டுமே பூமியில் பதிவது தெரியும். இந்த விதமான வழக்கம் 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வந்திருக்கிறது.

1661-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் லூயி மன்னரால் பாலே நடனப் பள்ளி ஒன்று துவக்கப்பட்டது. ‘ராயல் டான்ஸ் அகாடமி’ என்கிற அதுதான் முதலாவது பாலே நடனப் பள்ளி.

பாலே நடனம் பின்னர் திரைப்படங்களிலும் இடம்பெற்றது. 'The dumb girl of Portici' என்கிற ஹாலிவுட் படத்தில்தான் பிரபல பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவின் ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ போன்ற பல புகழ்பெற்ற பாலே நடனங்கள் இடம்பெற்றன. நம் நாட்டு உதயசங்கரும் அன்னா பாவ்லோவாவும் இணைந்து நமது பாரம்பரிய நடன அசைவுகளையும் பாலே அசைவுகளையும் கலந்து ‘ராதாகிருஷ்ணா’, ‘இந்தியத் திருமணங்கள்’ போன்ற நடன நாடகங்களை நடத்தியிருக்கிறார்கள்.

இசைக்கேற்ப தண்ணீருக்கடியில் நீந்தியபடி நடனமாடும் பாலே நடன வகை கூட உண்டு. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆரும் லதாவும் ஆடும் ‘அவளொரு நவரச நாடகம்...’ பாடல் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அது கிட்டத்தட்ட தண்ணீர் பாலேவை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டதுதான்.

பாலேவின் சில அசைவுகள் பின்னர் சர்க்கஸ் விளையாட்டுகளிலும், ஒலிம்பிக்ஸ் ‘ஜிம்னாஸ்டிக்ஸ்’ ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ‘டேனிஷ் ஜர்னல்’ என்கிற பத்திரிகைக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆக, அங்கே இங்கே சுத்திக் கடைசியில் பாலேவும் ஒரு சர்க்கஸ்தான் என்று முடித்துவிட்டேனா?!

*****
எதிர்க்காற்று இருந்தால்தான் காற்றாடி உயரே எழும்பும்!

0 comments: