ஞானவாபி - II

வாவி என்றால் குளம். வாவிதான் சம்ஸ்கிருதத்தில் ‘வாபி’ என்றாகியதோ? எனில், ஞானவாபி என்றால் ஞானக் குளம். அறிவுக் குளம்.

தி.நகரில் உள்ள ‘ஞானவாபி’க்குள் நுழைந்ததும், ஒரு பெரிய நகருக்குள் இருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில், பெரியதொரு கோயிலை ஒட்டிய சற்று விசாலமான மண்டபத்தில் இருப்பதான பிரமையே ஏற்பட்டது. சின்னச் சின்னதாக ஏராளமான அறைகள்; வசதியான குளியல் அறைகள்; கர்மாக்களைச் செய்வதற்கென பிரத்யேக இடங்கள்; உட்காருவதற்குத் தோதான மணைப் பலகைகள்; அக்னி வளர்த்து ஹோமம் செய்வதற்கான சிறு சிறு சதுர சிமெண்ட் தொட்டிகள்; அகன்ற கிணறு; ஓர் அறையில் ஹோமத்துக்குத் தேவையான வறட்டிகள், தர்ப்பைகள், சமித்துகள், தொன்னைகள்.

இரண்டு அழகான காளைக் கன்றுகளும் அங்கே இருந்தன.

ஒருவர் இறந்த ஒன்பதாம் நாளிலிருந்து அவருக்கான கர்மாக்களைச் செய்யத் தொடங்க வேண்டும் என்பது ஐதிகம். அடுத்த நாள் ‘பத்து’ எனப்படும். அதையடுத்து சோதகும்பம், சபிண்டீகரணம். அவை முடிந்து, அந்த ஆத்மா பிரிந்த அந்த இல்லத்தில் வைத்து கிரேக்கியம் என்கிற சடங்கைச் செய்யவேண்டும்.

ஒன்பதாம் நாளில் பிண்டம் வைப்பதில் தொடங்குகிறது கர்மா. சாதத்தை ஒன்பது சிறிய உருண்டைகள், ஒன்பது பெரிய உருண்டைகளாகப் பிடித்து வைத்து, மறைந்த ஆத்மாவுக்குப் படைப்பது. சோதகும்பம் என்கிற காரியம் செய்கிற சமயத்தில் ஞானவாபியிலேயே குளித்து, அங்கேயே டிபன், சாப்பாடு எல்லாம் முடித்துக் கொள்வதற்கு வசதியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம், காளைக் கன்றுக்கு ஒரு பூஜை நடந்தது. மறைந்த ஆத்மாவை ருத்ர பூமிக்கு அனுப்பி, சிவபெருமானிடத்தில் ஒப்படைப்பதாக ஐதிகம். அப்படி அனுப்புவதற்குரிய வாகனமான ரிஷபத்தை (காளை) மகிழ்வித்து, தாஜா செய்து, இந்த ஆத்மாவைப் பத்திரமாக எடுத்துச் சென்று சிவனிடத்திலே ஒப்படைத்துவிடு என்று கேட்டுக் கொள்கிற பூஜை அது.

மறுநாள், சபிண்டீகரணம் என்பதும் ஒரு முக்கியமான கர்மா. அன்றைய தினம் குத்துவிளக்கு, குடம், குடை, செருப்பு, வேட்டி, தலையணை என நம்மால் முடிந்த பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.

மறுநாள் கிரேக்கியம். அப்படித்தான் சொல்லிப் பழக்கம். அதன் உண்மையான உச்சரிப்பை, பொருளை, இந்தக் காரியங்களை நடத்தி வைத்த வாசன் சாஸ்திரிகள் விளக்கமாகச் சொன்னார். பொதுவாகவே, ஒவ்வொரு நாளுமே அந்தக் கர்மா எதற்காகச் செய்யப்படுகிறது, சொல்கிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை முக்கியமான இடங்களில் விளக்கியபடியேதான் நடத்தி வைத்தார் அவர்.

நவகிரஹ யக்யம் என்பதுதான் பின்னர் கிரஹ யக்யம் என்று சுருங்கி, கிரேக்கியம் என்று மருவிவிட்டது என்று விளக்கினார். நேற்றைக்குத்தான் இந்த நவகிரக பூஜையும் ஹோமமும் வீட்டில் நடந்தது.

ஒரு கல்யாணத்துக்கு ஆகிற செலவு இந்தக் காரியங்களுக்கும் ஆகியது. ஆனால், இதை இப்படித்தான், இவ்வளவு விமரிசையாகத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நம் வசதிக்கேற்றபடி சிக்கனமாகவும் செய்யலாம். கல்யாணத்தைக்கூட ஒரு கோயிலில் வைத்து மஞ்சள் முடிந்த தாலியைக் கட்டிச் சிக்கனமாகச் செய்வதில்லையா? எதுவுமே கட்டாயம் இல்லை. எதை எந்த அளவில் செய்தாலும், அதில் நமக்குப் பரிபூரண மனத் திருப்தி கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும், கடனே என்று செய்யக் கூடாது. ஒரு வேலையில் இருந்தால், மாதா மாதம் சம்பளம் வாங்குகிறோமே என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு செய்யக் கூடாது. அப்படிச் செய்கிற செயலில் முழுமை இருக்காது.

கர்மாக்களும் அப்படித்தான்! சிலருக்கு இதில் நம்பிக்கை இருக்கலாம்; பலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்; ‘செத்துப் போன ஆத்மாவைக் குளிரப் பண்ணுகிறதாவது! எல்லாம் பேத்தல்!’ என்று நினைக்கலாம். சிலர், இத்தனைச் செலவு பண்ண வேண்டிய அவசியமில்லை; செய்ய வேண்டியதுதான். ஆனால், சிக்கனமாகச் செய்தால் போதும் என்று எண்ணலாம்.

எங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டுமென்று தோன்றியது; செய்தோம். மறைந்த ஆத்மா நல்ல கதியை அடையும் என்கிற ஆத்ம திருப்தி உண்டாகியிருக்கிறது.

மனித வாழ்க்கையில் இறுதியில் எஞ்சி நிற்பது அதுதானே!

***
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இரண்டு முக்கியமான நாட்கள் உண்டு. ஒன்று, அவன் பிறந்த நாள்; மற்றொன்று, எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்த நாள்!

5 comments:

கே. பி. ஜனா... said...

ஞான வாபி பற்றிய விவரங்கள் புதிது.

கிருபாநந்தினி said...

உங்கள் மாமியாரின் ஆன்மா நிச்சயம் சந்தோஷப்பட்டிருக்கும்! முக்தி பெறும்! நெகிழ்வுடன்...

ரிஷபன் said...

மறைந்த ஆத்மா நல்ல கதியை அடையும் என்கிற ஆத்ம திருப்தி உண்டாகியிருக்கிறது. நிஜம்தான்.. உலகில் ஒவ்வொருவருக்கும் இருப்பவரிடமிருந்து இன்னொருவருக்கு செல்வம் நகரும் வித்தை அது..

Paleo God said...

//எங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டுமென்று தோன்றியது; செய்தோம். மறைந்த ஆத்மா நல்ல கதியை அடையும் என்கிற ஆத்ம திருப்தி உண்டாகியிருக்கிறது.
மனித வாழ்க்கையில் இறுதியில் எஞ்சி நிற்பது அதுதானே!//

ரொம்ப சிம்பிள்..
வேறென்ன சொல்ல.

சென்னை போன்ற நகரத்தில் இது போன்ற சடங்குகளுக்கு ஞானவாபி போன்ற இடம் இருப்பது மிக பெரிய விஷயம்.

Kannan said...

மிக சிறப்பான பதிவு. அதென்னமோ தெரியவில்லை, மரணம் சம்மந்தப்பட்ட பதிவுகளுக்கு நான் அவசியம் பின்னூட்டம் இடுகிறேன். சிவனை அதிகம் விரும்புவதாலோ (அ) அவன் இந்த துறைக்கு head of the department ஆக இருப்பதாலோ என்னவோ. என்னுடைய அனுபவம் கூட காரணமாக இருக்கலாம்.

ஒரு ஆறு மாதம் முன்னர், என் தந்தை மிகவும் கவலை கிடமாக இருந்தார். சென்னையிலிருந்து விரைந்து மதுரை வந்தேன். மூச்சு விட ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

என் சகோதரி வந்தார் "அப்பா , அன்னையை நினைச்சுகொங்கோ, எல்லாம் சரியாய் போய்டும்.".

"போடி பைத்தியகாரி, நான் அருணாச்சலசிவா சொல்லிண்டு இருக்கேன்"

சம்மந்தம் இல்லாமல் "அருணாச்சல புராணம்" நினைவிற்கு வந்தது. "ஒரு முறை அருணாச்சல சிவ என்று சொல்வதும் மூன்று கோடி முறை நமச்சிவாய சொல்வதும் ஒன்று"
அப்பாவிற்கு ரொம்ப இழுத்தது. 'ventilator' வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்பாக சொன்னார்கள்.

பெரிய மாப்பிள்ளை வந்தார். "நான் சொல்றேன் கண்ணா, அப்பாவிற்கு இந்த திங்கற்கிழமை எல்லாம் சரியாயிடும்.". "எனக்கு கொஞ்சம் பெருமாள் அருள் உண்டு" என்றார். என் உள் மனது அதற்க்கு முந்தைய நாளில் குறியாக இருந்தது.

ஸ்ரீதர், ஜக்கி வாசுதேவின், "மரணம் அப்புறம்?" என்ற புத்தகம் கொண்டு வந்து என் அம்மாவிடம் கொடுத்தார். ஸ்ரீதர் தான், நான் சென்னையில் இருந்த போது, என் தந்தையை மருத்துவ மனையில் சேர்த்து, நான் வரும் வரையில், நானாக இருந்தவர். அம்மா அதை படிக்க அரம்பிததிலிருந்தே கொஞ்சம் தெளிவாக தைரியமாக இருக்க ஆரம்பித்தார். சில நேரங்களில் கடவுளே அனுப்பி வைத்தது போல சில விஷயங்கள் நடப்பதுண்டு. இதுவும் அது போலவே என்று என் உள்மனம் கூறியது.

"அம்மா, நான் போய் பெரிய டாக்டர பார்த்துட்டு வரேன்"
"எங்கடா போற திருவண்ணாமலைக்கா
"ஆமாம்"

திருவண்ணாமலை சென்றடைந்தேன். நெற்றி நிலம் பட விழுந்தேன்

"அருணாச்சலா, குடுத்தா உடனே குடு. எடுத்தா உடனே எடு. சும்மா தொல்ல பண்ணாத. நான் கோவில விட்டு போறதுக்குள்ள நீ முடிவு எடுக்கணும்". ரொம்ப கண்டிப்பா சொன்னேன்.

எனக்கும் அவனுக்கும் ஆன உறவு ரொம்ப ரொம்ப நெருக்கம். அது எனக்கு மட்டுமே புரியும். விளங்க வைப்பது கடினம்.

கோவில விட்டு வெளியே வந்தேன். சென்னைக்கு பஸ் பிடித்தேன். வரும் வழியில், ஸ்ரீதர் போன் செய்தான். "எல்லாம் முடிஞ்சு போச்சு மாப்ள".

மனத்திற்கு ஒரு நிம்மதி கிடைத்தது. வாழும் போதுகூட சொல்லாத, "அருணாச்சல சிவ" அவர் சாகும் தறுவாயில் நிறைய சொன்னது.

இந்த முறை எனக்கு அந்த அனுபவம் கிட்டும் என்று தோன்றியது.

சில மாதங்களுக்கு முன் என் மச்சினர் 'dubai' யில் ஒரு விபத்தில் சிக்கி இறந்தார். விசா கிடைக்கவில்லை, என் மனைவிதான், முன்னே சென்று எல்லா வேலைகளையும் முடித்தார். பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருப்பதில் ஒரு சௌகரியம்.

ஒரு 5 நாட்கள், எனக்கு ஒரு பேரனுபவம் கிட்டியது. பார்ப்பது, பார்க்கப்படுவது எல்லாம் ஒன்றே என்ற ஒருவித அனுபவம் இருந்தது. நாம் வாழ போவது மிக குறைந்த நாட்களே என்று ரொம்ப தெளிவாக தோன்றியது. அதிக பட்சம் ஒரு 35,000 நாட்கள் மட்டுமே ஒரு மனிதன் இருப்பான் என்று தெளிவாக புரிந்தது. இதில் தூங்குவது, குழந்தை பருவம் எல்லாம் கழித்தால், அதிக பட்சம் ஒரு 10,000 மட்டுமே. இதில் கவலை படுவதற்கு நேரம் ஏது? எதற்காக கோபங்களும் தாபங்களும்?

5 நாட்கள் சென்ற பிறகு, அந்த மனோ பாவம் அல்லது state of mind என்னை விட்டு வெளியேறியது. அதற்காக நான் ஏங்க ஆரம்பித்தேன். என் தந்தையின் மரணம் அதை மீட்டு தரும் என்று நம்பினேன்.

ஒன்றும் நடக்கவில்லை. ஸ்ரீதர் மட்டும் ஸ்ரீ ரமண மகாரிஷியின் 'அக்ஷரமணமலை' சொல்லி கொண்டு வந்தான். உடலை எரித்தோம் அல்லது என் தந்தையை எரித்தோம். எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை.

என் சகோதரிகள் கேட்டார்கள் ' ஏன்டா நீ மட்டும் அழல'
'அப்பா சேர்த்து வைக்கிற, அந்த "ஹாஜி மூசா" அட்டை டப்பா இருக்கா"
"ஆமாம் இருக்கு, அதுகென்ன இப்போ"
"அந்த டப்பா வயசு கூட, நமக்கு இல்ல, புரியுதா"

ஆஸ்பத்திரி செலவாக சகோதரிகள் என்னிடம் கணக்கு சொல்லி பணம் பெற்று சென்றார்கள். அம்மா, தான் எதை எதையெல்லாம் பெரிதாக நினைத்தார்களோ அதையெல்லாம் பிரித்து கொடுத்தார்கள்.