நான் முன்பு பணியாற்றிய ‘சாவி’ பத்திரிகையின் ஆசிரியர் சாவி, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஹாய் மதன், பத்திரிகையாளர் ஞாநி ஆகியோரும் பூணூல் அணியாதவர்கள்தான் என்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டேன். அவர்கள் என்ன காரணங்களுக்காகப் பூணூல் அணிவதைத் தவிர்த்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.
என்னைப் பொறுத்தவரை, நான் ஒன்றும் கடவுள் பக்தி இல்லாத நாஸ்திகன் அல்ல. சமயச் சடங்குகளை வெறுப்பவனும் அல்ல. என் நண்பர்களான பகுத்தறிவுவாதிகள் சிலர் கேலி செய்வார்களே என்பதோ, மதச் சின்னத்தை அணியலாகாது என்கிற புரட்சி(!)யான எண்ணமோகூட நான் பூணூல் அணியாததற்குக் காரணமல்ல.
எழுதத் தெரியாதவனுக்கு பேனா எதற்கு? பூணூல் அணிந்தவன் முறையாக அதற்கான நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். திரிகால சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஐந்து வேளைத் தொழுகையையும் தவறாமல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். கிறிஸ்துவர்கள் ஞாயிறு தவறாமல் கோயிலுக்குச் செல்கின்றனர். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், நமது இந்து மதத்துக்கென உள்ள சம்பிரதாயங்களை ஓரளவுக்காவது கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடிக்காதவனுக்குப் பூணூல் வெறும் நூல்தான்.
மற்ற மதங்களைப் போன்று இந்து மதம் கெடுபிடியான மதம் அல்ல. சுதந்திரம் கொடுக்கும் மதம். இந்து மதத்தில் இருப்பவன் தன் சொந்த மதத்தைக் கேலி செய்யலாம்; இழித்துப் பேசலாம்; பழிக்கலாம். இந்து மதம் அவனைக் கேள்வி கேட்காது. நாஸ்திகனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் மதம் இந்து மதம். எனவேதான், நாள் கிழமைகளில்கூட கோயிலுக்குச் சென்று வழிபடுவதோ, விபூதி அணிவதோ எனக்குப் பழக்கமாக ஆகவே இல்லை. அது அவ்வளவு அவசியம் என்று தோன்றவும் இல்லை.
சமீபத்தில் ஒரு நாள், நான் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி அணிந்திருந்ததைப் பார்த்து என் மகள் கேட்டாள்: “என்னப்பா, தலைவலியா?” ஆம். உண்மைதான்! தலைக்குக் குளித்தால், எத்தனைத் துவட்டினாலும் தலையில் நீர் சேர்ந்துகொண்டு மிகப் பயங்கரமாக வலிக்கும். எத்தனை சாரிடான்கள் போட்டாலும் தீராது. விபூதியை வெந்நீரில் குழைத்துப் பூசிக்கொண்டு படுத்தால், ஒரு மணி நேரத்தில் தலைவலி பட்டென்று விட்டுவிடும். இது எங்கள் குடும்பத்தில் கை கண்ட வைத்தியம்.
சடங்கு, சம்பிரதாயங்களில் எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை என்று சொன்னேன். அவை முட்டாள்தனமானவை என்கிற பகுத்தறிவு(!) எண்ணமும் எனக்குக் கிடையாது. தினம் தினம் எத்தனையோ முட்டாள்தனங்களைச் செய்துகொண்டு இருக்கிறோம். இவன் வந்தால் நாட்டுக்கு நல்லது செய்வான், இவன் கை சுத்தமானவன், யோக்கியன் என்று நம்பி தேர்தலுக்குத் தேர்தல் யாருக்காவது ஓட்டுப் போட்டுக்கொண்டு இருக்கிறோமே, அந்த முட்டாள்தனத்தை விடவா? எனவே, நமது மனத் திருப்திக்காகச் சடங்குகளைச் செய்வதில் தப்பொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், முழு மனத் திருப்தியோடு செய்யும் சடங்குகள் நம் எண்ணங்களுக்கு வலுவூட்டி, குடும்பத்தில் நன்மையைக் கொண்டு வருகிறது என்பதுதான் உளவியல்ரீதியான உண்மை.
பித்ருக்களுக்குச் செய்யும் கர்மாக்களும் இத்தகைய நலனை அளிக்க வல்லவைதான். குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒழுங்காகச் சோறு போடாமல், வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுக்காமல், அவர்களை ஒரு பாரமாக எண்ணி உதாசீனப்படுத்திவிட்டு, அலட்சியமாக நடத்திவிட்டு, அவர்கள் மனம் புண்படப் பேசிவிட்டு, அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கான கர்மாக்களை ஒழுங்காகச் செய்கிறேன் என்று ஒருவன் கிளம்பினால், அவனைவிடக் கேடு கெட்டவன் எவனும் இருக்க முடியாது. அவன் உண்மையில் தன் மனத் திருப்திக்காக அவற்றைச் செய்ய மாட்டான். ஊர் மெச்சுவதற்காகவே செய்வான். அவனை இந்து மதக் கடவுள் மட்டுமல்ல; எந்த மதக் கடவுளும் மன்னிக்க மாட்டார்!
சமீபத்தில் இறைவனடி சேர்ந்த எங்கள் மாமியார் உயிரோடு இருந்தவரையில், உடல் உபாதைகள் தவிர, உள்ளத்தால் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருந்தார். அவரின் மற்ற இரு பெண்களும்கூட தங்கள் தாயார் மீது அத்தனைப் பாசம் வைத்திருந்தார்கள். பெண்கள் தங்கள் தாயாரின் மீது பிரியம் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை; என் மாமியாருக்கு வாய்த்த மாப்பிள்ளைகளும் அவரை அவ்வளவு அனுசரணையாகக் கவனித்துக் கொண்டார்கள் என்பதுதான் விசேஷம். உயிரோடு இருந்தவரையில் அவரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள்.
2000-வது ஆண்டில், திடீரென்று ஒரு நாள் என் மாமியார் சுய நினைவற்றுக் கீழே விழுந்துவிட்டார். நான் பதறிப்போய் என் சகலைகள் இருவருக்கும் போன் செய்தேன். உடனே அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு, அடுத்த அரை மணிக்குள் ஓடி வந்தார்கள். டாக்ஸி வரவழைக்கப்பட்டது. அப்போது நாங்கள் குடியிருந்த வீடு, ஒற்றையடிப் பாதை மாதிரியான ஒரு நீள சந்தின் இறுதியில் இருந்தது. அங்கிருந்து என் மாமியாரை ஆஸ்பத்திரிக்கு எப்படி எடுத்துச் செல்வது என்று நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, சிறிய மாப்பிள்ளை விழுந்து கிடந்த என் மாமியாரை அலாக்காகத் தன் இரு கைகளில் தூக்கினார். என் மாமியார் தெம்பும் திடனுமாக இருந்த சமயம் அது. நல்ல உயரமும், அதற்கேற்ற பருமனும் எடையுமாய் இருந்த என் மாமியாரை சின்ன மாப்பிள்ளை தனியொரு ஆளாகவே சுமந்து சென்று, டாக்ஸியில் படுக்க வைத்தார். எந்த ஒரு தயக்கமும் இன்றி, ஒரு தாய்க்குச் செய்வதைப் போன்ற ஈடுபாட்டுடன் அவர் அன்று நடந்துகொண்ட விதம் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
அதன்பின்னர் விஜயா ஹாஸ்பிட்டலில் மாமியாரைச் சேர்த்து, கோமாவிலிருந்து அவர் மீண்டு, உடம்பு குணமானாலும் பேச்சு குழறிப் போய், ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் தேறி வந்து, பேச்சும் கொஞ்சம் தெளிவடைந்து, பழைய அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்குத் தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு முன்னேறினார். மீண்டும் அடுத்த கண்டம். தடுமாறிக் கீழே விழுந்ததில், தொடை எலும்பு முறிந்துவிட்டது. பிளேட் வைத்து ஆபரேஷன் செய்யப்பட்டு, அவர் மீண்டும் எழுந்து நடக்க மூன்று மாதமாகியது.
அதன்பின்னர் தொட்டுத் தொட்டு அவரை ஏதாவது உடம்பு படுத்திக்கொண்டே இருந்தது. இருமல், முதுகு வலி, கால் வலி, தொண்டையில் சாப்பிட முடியாமல் எரிச்சல் என ஒன்று சரியானால், மற்றொன்று ஆஜராகிவிடும். என் குழந்தைகளைக் கொஞ்சுவதும், டி.வி. சீரியல்கள் பார்ப்பதும், ஒரு பத்திரிகை விடாமல் படிப்பதும்தான் அவரின் பொழுதுபோக்கு.
அவர் மறைந்த பின்னர், அவருக்குச் செய்யவேண்டிய பித்ரு கர்மாக்களை ஒன்பதாம் நாளில் தொடங்கி, வீட்டில் செய்யவேண்டிய கிரேக்கியம் வரையில் எங்கள் மனசுக்குத் திருப்தியாய், முழுமையாய், ஒன்றுகூட விடாமல் பரிபூர்ணமாய்ச் செய்தோம்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளில் இவற்றைச் செய்வது என்பது முடியாத காரியம். எனவே, இதற்கென்றே தி.நகரில் ‘ஞானவாபி’ என்றொரு இடம் உள்ளது. காஞ்சி முனிவர் அருளாசியோடு, ஸ்ரீராம் சமாஜத்தினர் இதை நடத்துகிறார்கள். குறைந்த வாடகையில் நிறைய சௌகரியங்கள்.
பதிவு நீள்வதால் இங்கே நிறுத்திக்கொண்டு, ‘ஞானவாபி’ பற்றி என் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
***
கடவுள் இன்றி நீங்கள் செயல்பட முடியாது; நீங்கள் இன்றி கடவுள் செயல்பட மாட்டார்!
கடவுள் இன்றி நீங்கள் செயல்பட முடியாது; நீங்கள் இன்றி கடவுள் செயல்பட மாட்டார்!
6 comments:
நல்ல ஒரு பதிவு.
தங்கள் மாமியார் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் உணர முடிகிறது. நெகிழ்ச்சியான பதிவு.
\\எழுதத் தெரியாதவனுக்கு பேனா எதற்கு?// பூணூல் அணியாததற்கு இதைவிடச் சிறந்த காரணம் சொல்ல முடியாது!
மன மாசறுக்கும் மந்திர வாவியே இந்து மதமாகும். அதில் மூழ்குபவன், மூழ்கதவனைப் பற்றி அதற்குக் கவலையில்லை,
மூழ்குபவனுக்கு முத்துக் கிடைக்கின்றது. மீட்சியடைகின்றான்,
நல்ல பதிவு. தொடரவும்,
இத்தனை நாளும் உங்கள் வலைப்பக்கம் வராமலிருந்து விட்டேனே என்று என்னையே நான் குறை பட்டுகொள்கிறேன். மனதில் நான் எப்போதோ எழுதி வைத்த என் எண்ண பதிவினை எங்கோ தொலைத்து விட்டு திடீரென உங்கள் பதிவில் கண்ட சுகம் எனக்கு.. அப்படியே நான் யோசித்ததை நீங்கள் பதிவாகி இருகிறீர்கள்..நன்றி.
///பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒழுங்காகச் சோறு போடாமல், வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுக்காமல், அவர்களை ஒரு பாரமாக எண்ணி உதாசீனப்படுத்திவிட்டு, அலட்சியமாக நடத்திவிட்டு, அவர்கள் மனம் புண்படப் பேசிவிட்டு, அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கான கர்மாக்களை ஒழுங்காகச் செய்கிறேன் என்று ஒருவன் கிளம்பினால், அவனைவிடக் கேடு கெட்டவன் எவனும் இருக்க முடியாது. //
எவ்வளவு சத்தியம் இந்த வார்த்தைகள்... இதனை நான் நேரில் கண்டதுண்டு... உரிரோடிருகும்போது ஒரு வாய் காபி நன்றாக போட்டு மகிழ்ச்சி தராதவர்கள்.. அவர் இறந்ததும் ஏகப்பட்ட பதார்த்தங்களுடன் திதி செய்து உண்பது போல ஒரு கயமை உண்டோ?? அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
உங்கள் வலைப்பூவை படிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது! இந்தப் பதிவையும் படித்தபோது எனக்கிருக்கும் மன நிலையை சற்றேறக்குறைய காட்டியது போல இருக்கிறது!
உங்களுக்கு ஒரு கேள்வி! நீங்கள் உங்கள் மகனுக்கு உபநயனம் செய்வீர்களா அல்லது செய்தீர்களா? ஏன் என்று கேட்கலாமா? Or is it too personal?
Post a Comment