பாப்பரசி ஸ்வேதா ஷெட்டி!

சில மாதங்களுக்கு முன்னால் என் அபிமான கஸல் பாடகி பீனாஸ் மஸானி பற்றி எழுதியிருந்தேன். அவரின் குரல் மிகவும் மதுரமான குரல். குழைவும் நெகிழ்வும் மிக்க குரல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரல். இரவுகளில் பெரும்பாலும் நான் படுக்கையில் சாய்ந்த பின்பு கேட்பது என் அபிமான பாடகர் டி.எம்.எஸ்ஸின் முருகன் பாடல்களாகத்தான் இருக்கும். இல்லையெனில், பீனாஸ் மஸானியின் கஸல்களாக இருக்கும்.

எனினும், குழைவும் நெகிழ்வுமான குரல்கள் மட்டுமேதான் எனக்குப் பிடிக்கும் என்பதில்லை. நேர்மாறாக, அதிரடியான குரல்களும், ஆர்ப்பாட்டமான பாடல்களும்கூடப் பிடிக்கும். உஷா உதூப்பின் குரல் கனமான குரல்தான். எனக்கு அவரின் பாடல்கள் பிடிக்கும். அதே போல், இந்தியில் இலா அருண் என்றொரு பாடகி உண்டு. அவரின் குரல் முரட்டுத்தனமாக இருக்கும். ஆனாலும், அந்தக் குரலில் எனக்கு அப்படியொரு ஈர்ப்பு உண்டு. இலா அருண் கேஸட்டுகளாக நிறைய வாங்கி அடுக்கினேன் ஒரு காலத்தில். சிடி கலாசாரத்துக்கு மாறிய பிறகு, அவரின் பாடல்கள் மட்டுமல்ல; ஏனோ தெரியவில்லை, பொதுவாகவே பாடல்கள் கேட்பது குறைந்துபோய்விட்டது. (இலா அருண் பற்றித் தெரியாதவர்களுக்காக: ‘கல்நாயக்’ படத்தில் ‘சோளி கே பீச்சே க்யா ஹை’ பாடல் பிரபலமானது. அந்தக் காட்சியில் மாதுரி தீட்சித்தும் நீனா குப்தாவும் ஆடுவார்கள். மாதுரி தீட்சித்துக்கு அல்கா யாக்னிக் பின்னணி பாட, நீனா குப்தாவுக்குப் பாடுபவர் இலா அருண். இவரைப் பற்றி ஒரு தனி பதிவே போடலாம்.)

நான் சாவி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில், தூர்தர்ஷனில் அடிக்கடி பாப் ஆல்பங்களை ஒளிபரப்புவார்கள். ஷரான் பிரபாகர், பார்வதி கான் ஆகியோரின் பாப் பாடல்களை அப்போது அதிகம் கேட்டு ரசித்திருக்கிறேன். பின்னர்தான் பீனாஸ் மஸானியின் குரல் அறிமுகம்.

அதற்குச் சில ஆண்டுகள் கழித்து, அலீஷாவின் ‘மேட் இன் இண்டியா’ என்னை வசீகரப்படுத்தியது. அலீஷாவின் கேஸட்டுகளையும் தேடித் தேடி வாங்கினேன். அந்தச் சமயத்தில் பத்தோடு பதினொன்றாக நான் வாங்கிய கேஸட் ‘தீவானே தோ தீவானே ஹைன்’. ஆம்பிளைத்தனமான அந்தக் குரல் என்னை மிகவும் ஈர்த்தது. திரும்பத் திரும்ப அந்தப் பாடல்களைப் பலப்பல முறை கேட்டு ரசித்தேன். பின்பு அந்தக் குரலுக்காகவே அவரின் கேஸட்டுகளையும் தேடித் தேடி வாங்கினேன். அவர் - ஸ்வேதா ஷெட்டி.

ஏக் லடுகா, குட் லக் முண்டயா, கேல் கிலாடி கேல், தில்லாலே தில்லாலே, வா(ஹ்) பை வா(ஹ்), தக் தக் தட்கே, பண்டா படா குடு லகுதா என அவரின் ஒவ்வொரு பாட்டுமே என் ரசனைக்கேற்ப இருந்தது. இன்றைக்கும் எனது யுஎஸ்பி எம்பி3-யில் அவரின் ஏழெட்டு பாடல்கள் உள்ளன.

17 வயதில் மாடலாகக் களம் இறங்கியவர் ஸ்வேதா ஷெட்டி. அதைத் தொடர்ந்து விளம்பரத் துண்டுப் படங்களுக்குக் குரல் கொடுத்தார். பின்னர்தான் முழு நீளப் பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரின் முதல் ஆல்பமான ‘ஜானி ஜோக்கர்’ 1993-ல் வெளியாகி, அவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. பின்னர் எம்.டி.வி. நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். பின்னாளில் அவரின் ஆல்பம் ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தபோது வியப்பாக இருந்தது. அத்தனை ஒட்டி உலர்ந்த தேகம். கிள்ளியெடுக்கத் துளி சதை கிடையாது. இத்தனை வற்றலும் தொற்றலுமான உடம்புக்குள்ளிருந்தா அத்தனைக் கிறங்கடிக்கும் குரல் கிளம்புகிறது என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். அதே சமயம், குரலின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக அவரின் ஒடிசலான தேகமும் ஒட்டிய கன்னமும்கூட அழகாக இருப்பதாகவே பட்டது எனக்கு.

திறமையும் தகுதியும் நிரம்பிய இவருக்குக் குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது ஒரு சோகம். இவரது போக்கும், இவர் எடுத்துக்கொண்ட துறையும் பிடிக்காமல், அப்பா இவருக்குப் பண உதவி உள்பட எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார். அது மட்டுமல்ல, அவரோடு முகம் கொடுத்துப் பேசுவதையும்கூட நிறுத்திவிட்டார்.

ஸ்வேதா பின்பு சாரா பிரைட்மேன், கிரிகோரியன் போன்ற தன் நண்பர்களோடு இணைந்து பாப் பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தார். 1997-ல் கிறிஸ்டியன் பிராண்ட் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கணவரின் ஒத்துழைப்போடு 1998-ல் ‘தீவானே தோ தீவானே’ ஆல்பத்தை வெளியிட்டார். அது ஒன்றரை லட்சம் கேஸட்டுகளுக்கு மேல் விற்றுச் சாதனை படைத்தது. ஸ்வேதா வெளியிட்ட அடுத்த ஆல்பமும் (சஜ்னா - 2003-ல்) சூப்பர்டூப்பர் ஹிட்! ‘ரங்கீலா’ போன்ற சில திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார் ஸ்வேதா ஷெட்டி.

சமீப காலமாக அவரை அதிகம் காண முடியவில்லை. மியூசிக் வேர்ல்டில் சமீபத்தில் போய்க் கேட்டபோது அவரின் புதிய சிடி-க்கள் எதுவும் வரவில்லை என்று சொன்னார்கள். 40 வயதாகும் ஸ்வேதா இப்போதெல்லாம் பாடுவதைக் குறைத்துக் கொண்டு, தன் கணவரோடு ‘ஹாம்பர்க்’ நகரில் செட்டில் ஆகிவிட்டதாகக் கேள்வி.

அவருக்குள்ள திறமைக்கு கிராமி விருதுகள் பெற்று, இன்னும் புகழின் உச்சிக்குச் சென்றிருக்க வேண்டியவர். இப்போதெல்லாம் அவரின் குரலைக் கேட்க முடியாததில் எனக்கு ரொம்ப வருத்தம்தான்!

***
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் மட்டும் சிறந்த பெற்றோர் ஆகிவிட முடியாது. வீட்டில் பியானோ இருந்துவிட்டால் பியானோ கலைஞராகிவிட முடியுமா?

7 comments:

Chitra said...

//திறமையும் தகுதியும் நிரம்பிய இவருக்குக் குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது ஒரு சோகம்.//
............நிறைய சாதிக்க வேண்டிய பெண்களுக்கு இதுதான் தடையாகி விடுகிறது.
ஏதோ பாட்டை கேட்டேன், இருந்தேன் னு இல்லாமல், இவ்வளவு தூரம் பாடல்களில் ஒன்றி பாடுகிறவர்களின் உண்மை ரசிகனாய் இருப்பது எல்லோருக்கும் வராது.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

K.B.JANARTHANAN said...

ரங்கீலா பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஸ்வேதா ஷெட்டியின் குரலைக் கவனித்ததில்லை. இனி கவனித்து கேட்க வேண்டும். ஆவல் அதிகரிக்கிற அளவுக்கு நிறைய விவரம் தந்திருக்கிறீர்கள். பதிவுக்கு நன்றி.
-- கே. பி. ஜனா

கிருபாநந்தினி said...

ஸ்வேதா ஷெட்டியின் குரல் எனக்கும்கூடப் பிடிக்கும். உள்ளுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தும் மின்சாரக் குரல் அது! அருமையான பதிவு!

ரவிபிரகாஷ் said...

திரு.சித்ரா, கருத்துக்கு நன்றி!

திரு.சூர்யா, பின்னூட்டத்துக்கு நன்றி!

திரு.கே.பி.ஜனா, நன்றி!

திருமதி கிருபாநந்தினி, நன்றி!

அநன்யா மஹாதேவன் said...

தீவானா... ஜானி ஜானி ஜோக்கர்... மஸ்தானா... ஜானி ஜானி ஜோக்கர்...
இன்னும் என் காதில் ஒலிக்கும் பாடல். மாங்தா ஹைக்யா ஹே போலோ என்று அதிரடியாக ரெஹ்மானுடன் பாடி அசத்திய ஷ்வேதா ஷெட்டியைப்பற்றி இவ்வளவு விஷயங்களா? சூப்பர் சார்.

அநன்யா மஹாதேவன் said...

indi pop பற்றிய எனது பழைய பதிவு http://ananyathinks.blogspot.com/2009/10/8.html, நேரம் கிடைக்கும்போது வாருங்களேன்.