மூழ்கிய பஸ்ஸுக்குள் நான்!

ன்று அலுவலகத்திலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பும்போது, நல்ல மழை! துரைசாமி சப்-வேயில் தண்ணீர் தேங்கியிருக்கிறது என்று வாகனங்களை வடக்கு உஸ்மான் சாலைப் பக்கம் திருப்பி விட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், அங்கேயும் வாகன நெரிசல். எனவே, எங்கள் 11-G பஸ் பனகல் பார்க்கை பிரதட்சணமாகச் சுற்றிக்கொண்டு, ஜி.என்.செட்டி சாலைக்கு வந்து, கண்ணதாசன் சிலை அருகில் இடப்பக்கம் திரும்பி, வெள்ள நீரில் ஊர்ந்து, சந்து பொந்துகளில் நுழைந்து, நேரே கோடம்பாக்கம் பாலம் வழியாக 17-D போகிற வழியில் லிபர்ட்டி, பவர் ஹவுஸ் என அசோக் பில்லருக்கு வந்து சேர்ந்தது.

மழை, வெள்ளம், சப்-வேயில் தண்ணீர் என்றதும், பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் அப்படித்தான் ஒரு மழை நாளில் சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்-வேயில் பஸ்ஸினுள் மாட்டிக் கொண்ட பகீர் சம்பவம் நினைவுக்கு வந்தது.

அன்றைக்கும் (1996) இப்படித்தான் சென்னை வெள்ளக் காடாக மாறியிருந்தது. வழக்கமாக டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் 11-G பஸ்ஸில்தான் ஏறுவேன். ஆனால், அன்றைக்கு கே.கே.நகர் செல்லும் பஸ்கள் வரவேயில்லை. அபூர்வமாக ஒன்றிரண்டு வந்தாலும், அத்தனையிலும் கூட்டம். எனவே, மேற்கு சைதாப்பேட்டை செல்லும் 18-K பஸ்ஸில் சென்று, சீனிவாசா தியேட்டருக்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் (மேட்டுப்பாளையம்) இறங்கிக் கொண்டு, அசோக் நகருக்குப் பொடி நடையாக நடந்து போய்விடலாம் என்று கணக்குப் போட்டேன். அப்போது இரவு மணி 7 இருக்கும்.

அதன்படியே, அடுத்து கொஞ்சம் கூட்டம் குறைவாக வந்த 18-K பஸ்ஸில் ஏறினேன். தியாகி அரங்கநாதன் பாலம் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அதைத் தாண்டினால் சீனிவாசா தியேட்டர் வந்துவிடும். சப்-வேயை நெருங்கும்போதே பாலத்தின் அடியில் மழைத் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பது தெரிந்தது. பஸ் அந்தக் குளத்தை நீந்திக் கடக்குமா என்று சந்தேகமாக இருந்தது.

“டிரைவரு கொஞ்சம் துடியா இருந்தா பஸ்ஸு சல்லுனு போயிருங்க. இதுக்கு முந்தி வந்த பஸ்ஸு போயிருச்சே!”

தெருவில் நின்ற யாரோ யாரிடமோ பேசியது எங்கள் பஸ் டிரைவரின் காதுகளிலும் விழுந்து உசுப்பேற்றியிருக்க வேண்டும். தயங்கி, ஊர்ந்துகொண்டு இருந்த பஸ்ஸை சட்டென்று கியர் மாற்றி, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்கிற துடிப்போடு, விசையுடன் செலுத்தத் தொடங்கினார்.

சுற்றிலும் இருந்த பயணிகளின் முகத்தைப் பார்த்தேன். ஒருவர் முகத்திலாவது கவலை ரேகை தெரிய வேண்டுமே? ம்ஹூம்! ஒரு சாதனை செய்யப் போகும் மகிழ்சசிதான் தெரிந்தது.

பஸ் தண்ணீருக்குள் இறங்க இறங்க, ‘ஹோ’வென்ற உற்சாகக் குரல்கள் எழுந்தன. பஸ் படிக்கட்டைத் தண்ணீர் தொட, பஸ்ஸின் வேகம் குறையத் தொடங்கியது. முக்கி, முனகி முன்னேறிற்று.

“யப்பா... போவாது! ரிவர்ஸ் எடு!” என்று அனுபவஸ்தர்கள் சிலர் குரல் கொடுக்க, “அட, நீ வேற! இம்மாந்தூரம் வந்துட்டோம். டிரைவர் சார், ஒரு தம் புடிச்சுக் கிளப்புங்க. போயிரலாம்!” என்று வேறு சிலர் உற்சாகமூட்டினர்.

பஸ் மேலும் முன்னேறியது. இப்போது பஸ்ஸுக்குள்ளேயே தண்ணீர் வந்து பயணிகளின் பாதங்களை நனைத்தது. அத்தனை பேரும் ‘ஹோவ்’ என்று குஷியாகக் கிறீச்சிட்டுக் கத்தினார்களே தவிர, நடக்கப் போகும் பயங்கரம் பற்றி அவர்கள் உணரவேயில்லை.

பாலத்தின் நேர் கீழாக வந்து நின்ற பஸ் மேலே நகர மறுத்துச் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. டிரைவர் தன்னால் ஆன வரை முயன்றார். அடிபட்ட புலி மாதிரி உர்ர்... உர்ர்... என்று உறுமியதே தவிர, பஸ் கொஞ்சமும் அசையக் காணோம்.

வெளியே நல்ல மழை. பஸ்ஸுக்குள் தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் அனைவரும் இப்போது ஸீட்டுகளில் ஏறி நின்றுகொண்டு இருந்தோம். சிலர் சூரத்தனமாக ஜன்னல் வழியாக வெளியேறி, பஸ்ஸின் டாப்பில் ஏறிக் கொண்டனர். பொது நல விரும்பிகள் சிலர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, பஸ்ஸைத் தள்ள முயன்றனர். நடக்கவில்லை. அவர்கள் பாதி நடையும் பாதி நீச்சலுமாகப் போய்விட்டார்கள்.

எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். அவர்களைப் போலவே நானும் குதித்து நீந்திப் போய்விடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். ‘சரி, என்னதான் ஆகிறது, பார்ப்போமே!’ என்று கொஞ்சம் பொறுமையாக இருந்தேன்.

வெள்ள நீர் மட்டம் உயர உயர, பஸ் பிடிப்பில்லாமல் மெதுவாக சாய்வது போல் இருந்தது. உள்ளே இருந்தவர்களுக்கு முதன்முறையாக மரண பயம் ஏற்பட்டது. இதற்குள் மேலும் சிலர் தண்ணீரில் இறங்கி நீந்திப் போகத் தொடங்கியிருந்தார்கள்.

“என்னாங்க டிரைவர்! ஆம்பளைங்கல்லாம் ஒவ்வொருத்தரா குதிச்சு, நீஞ்சிப் போயிக்கிட்டே இருக்காங்க. நாங்க என்ன பண்றது? இப்படியே ஜல சமாதி ஆயிட வேண்டியதுதானா?” என்று பெண்கள் கூட்டம் கத்தியது.

“பொறும்மா! ஃபயர் சர்வீஸுக்கு ஆள் போயிருக்கு. இப்ப வந்துடுவாங்க. ஒண்ணும் ஆகாது. பயப்படாதீங்க!” என்று தைரியம் சொன்னார் கண்டக்டர். இதற்கிடையில் வேறு சில ஆண்கள், பெண்களின் கையிலிருந்த குழந்தைகளையும், சிறுவர்களையும் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு நீந்திக் கரையில் கொண்டு சேர்த்தவண்ணம் இருந்தார்கள். நானும் ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு - அல்ல; கிட்டத்தட்ட தண்ணீரில் ஒரு மிதவை போல் அவனை இழுத்துக்கொண்டு கரையில் கொண்டு சேர்த்தேன். என் கைப்பையை அந்தப் பையனிடம் கொடுத்துவிட்டுத் திரும்ப பஸ்ஸுக்கு வந்தேன் - இன்னும் யாரையாவது கரைக்கு அழைத்துப் போக முடியுமா என்று பார்க்க.

இதற்குள் பஸ்ஸுக்குள் தண்ணீர் மட்டும் மேலும் உயர்ந்திருந்தது. அத்தனை பேர் முகங்களிலும் மரண பீதி. பெரும்பாலும் உள்ளே இருந்தவர்கள் பெண்களும், முதியவர்களும்தான்.

இதற்குள் ஃபயர் சர்வீஸ் வந்து சேர்ந்தது. ரயில் பாலத்தின் மீதேறி, அங்கிருந்து ஏணியை இறக்கி, பஸ்ஸின் டாப் மீது நிற்பவர்களை மீட்க முடியுமா என்று யோசித்தார்கள். அது வேலைக்காகவில்லை. காரணம், பாலத்தின் தண்டவாளப் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு, ஷாக் அடித்தது. எனவே, ஏணியின் ஒரு முனையை பஸ்ஸின் ஜன்னலிலும் மறுமுனையை பக்கவாட்டிலிருந்த நடைபாதையிலும் வைத்து, பயணிகளை ஜன்னல் வழியாக வெளியேறி ஏணி வழியே தவழ்ந்தும் ஊர்ந்தும் வரச் சொன்னார்கள். பெண்கள் உள்படப் பலர் அந்த வழியாக வெளியேறினர். முதியவர்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டமாகிவிட்டது.

எப்படியோ... வெளியேறிய அத்தனை பேர் முகத்திலும் ‘கிளிஃப் ஹேங்கர்’ சாதனையைத் தானும் செய்துவிட்ட பரவசமும் சந்தோஷமும் கொப்பளித்தது!

நானும் சொட்டச் சொட்ட நனைந்த குருவி போல ஈரமும் நடுக்கமுமாக ராத்திரி 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

எல்லாம் சரி..! மறு நாள் செய்தித் தாளில் அந்தச் செய்தியைப் பார்த்தபோதுதான், தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

‘நேற்று இரவு சைதாப்பேட்டை அரங்கநாதன் பாலத்தின் அடியில் சிக்கியிருந்த 18-K பஸ்ஸை தீயணைப்புக் குழுவினர் வந்து மீட்டனர். அதில் உட்கார்ந்த நிலையில் ஒரு பெரியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் யார், என்ன என்கிற...’

***
எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனமும் இல்லை; அலட்சியமாக இருப்பது தைரியமும் இல்லை!

10 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

பதிவை பயத்துடன் படித்து முடித்தேன். நீங்கள் நீச்சல் கற்று வைத்திருந்ததால் தப்பித்தீர்கள். காப்பற்றி இருக்கிறீர்கள். மீன்துறையில் பணி புரிந்த நான் நீச்சல் கற்றுக்கொள்ளமாலே இருந்துவிட்டதை நினைத்து வருத்தப்பட்டேன். நல்ல பதிவு.

ரேகா ராகவன்.

பொன்னியின் செல்வன் said...

ஒரு த்ரில் அனுபவம் ....

/அதில் உட்கார்ந்த நிலையில் ஒரு பெரியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் யார், என்ன என்கிற.../

பேருந்தில் இதைப் பார்த்து கொண்டிருந்த போது, அந்த ட்ரைவருக்கு எப்படி இருந்திருக்கும் !

அல்லது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையா ?

butterfly Surya said...

திகில் பதிவு..

பிரபாகர் said...

ரொம்ப த்ரில்லிங்காவும் கடைசியா சோகமாவும் இருந்துச்சிங்க... நீங்க சொன்ன விதம் மிக அருமை.

பிரபாகர்.

வி. நா. வெங்கடராமன். said...

உங்களது "திகில்" அனுபவத்தினை பயத்துடன் படித்தேன். சென்னை போலவே, தில்லியிலும் ஒரு மணி நேர மழையிலேயே இரண்டு, மூன்று ரெயில்வே பாலங்களுக்கு அடியில் வாகனங்கள் மாட்டும் நிலை வருகின்றது. பெயர் தான் தலைநகர் தில்லி.

என்றென்றும் அன்புடன்
வெங்கட், புது தில்லி

கவிதை காதலன் said...

பஸ்சுக்குள் நடந்த அந்த சம்பவத்தை நீங்கள் விளக்கி இருந்த விதம் ஒரு சினிமா பார்க்குற மாதிரியே இருந்தது. நைஸ்...

K.B.JANARTHANAN said...

படித்தேன். உறைந்தேன். பாவம் அந்த முதியவர்!

Kirubanandhini said...

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்ததை எப்படி ஒரு வரி பிசகாமல் எழுத முடியும்? நடந்த சம்பவம் ரியலா? ரீலா?

ரவிபிரகாஷ் said...

# திரு.ராகவன், பாராட்டுக்கு நன்றி! தெரிந்தோ தெரியாமலோ மின்துறை மீன்துறையாகிவிட்டது! மீனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன?!

# திரு.பொன்னியின் செல்வன், வெச்சீங்களே கடைசியிலே ஒரு ஆப்பு! \\அல்லது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையா?// சத்தியமா நடந்த சம்பவம்க இது.

# திரு.சூர்யா, பாராட்டுக்கு நன்றி!

# திரு.பிரபாகர், உண்மையிலேயே சோகம்தான். எல்லாரும் ஒரு கண்டத்திலிருந்து தப்பி, மூழ்கிய பஸ்சிலிருந்து வெளியேறிவிட்டோம் என்று முழு நம்பிக்கையோடு சந்தோஷமாக அன்று வீடு திரும்பினேன். மறுநாள் பேப்பர் செய்தி என்னைத் திடுக்கிட வைத்து, பெரும் சோகத்திலும் ஆழ்த்திவிட்டது!

# திரு.வி.நா.வெங்கடராமன், கருத்துக்கு நன்றி! உங்கள் ஊர் தில்லியிலும் மழை வந்தால் இப்படித்தானா? எனில், அது தில்லி அல்ல; திகில்லி!

# திரு.கவிதைக் காதலன், சினிமாத் துறையில கால் வெச்சிருக்கீங்க இல்லே... அப்படித்தான் தெரியும்! :-)

# திரு.கே.பி.ஜனார்த்தனன், உண்மையிலேயே அந்த முதியவர் பாவம்தான்! நீரில் மூழ்கி இறந்தாரா, அல்லது அதற்கு முன்பே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டாரா, அவரோடு யாரும் பயணிக்கவில்லையா... எதுவுமே தெரியவில்லை.

# திருமதி கிருபாநந்தினி, பொன்னியின் செல்வன் மாதிரியே நீங்களும் இப்படிக் கேட்டுட்டீங்களே! 13-6-1996 அன்று இது எனக்கு உண்மையாக நடந்த சம்பவம்தான். 14-6-1996 தினத்தந்தி அல்லது தினமலர் பேப்பர்ல தேடிப் பார்க்கவும். 18K பஸ் அரங்கநாதன் பாலத்துக்கடியில் மாட்டி, ஒரு முதியவர் இறந்த செய்தி கிடைக்கும். என் டயரியில் (இது என் இன்னொரு வலைப்பூவைக் குறிக்கவில்லை. என் நிஜ டயரி) அன்று பதிந்து வைத்திருந்ததைக் கொண்டுதான் வரி பிசகாமல் எழுத முடிந்தது.

ரவிபிரகாஷ் said...

வெங்கட் நாகராஜ், விளம்பி, இன்பதுரை, சி.எஸ்.கிருஷ்ணா, கே.பி.ஜனா, கே.வடிவேலன், அம்புலி, அனுபகவான், அசோக் 92, இடுகைமேன், கே.கிருபாநந்தினி ஆகியோர் இந்தப் பதிவுக்குத் தமிழிஷ்-ல் தங்கள் ஓட்டை அளித்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!