அவரும் ஒரு தாயார்!

பெற்ற தாயைத் தவிர ஒரு மனிதனுக்கு வேறு சில தாயார்களும் உண்டு. குருவின் பத்தினியும் ஒரு தாய்தான்; அண்ணனின் மனைவியும் ஒரு தாய்தான்; மனைவியின் தாயாரும் (மாமியார்) இவனுக்கும் தாய்தான்.

அவனுக்கும் ‘he’, அவருக்கும் ‘he’ என பெரியவர், சிறியவர் வித்தியாசமில்லாத, மரியாதை தெரியாத பாஷை ஆங்கிலம் என்று சொல்வதுண்டு. ஆனால், அந்த மொழியில்தான் மனைவி வழி உறவுகளும் கணவனுக்கும் சட்டப்படியான அதே உறவுகள்தான் என்கிறவிதமாக in-laws என்கிற இணைப்பைக் கொடுத்து, ஃபாதர்-இன்-லா, மதர்-இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லா என்று சிறப்பிக்கிறது.

என் மாமனார் திரு.சுந்தரம் ஒரு வயலின் கலைஞர். மைசூர் சௌடய்யாவிடம் பயின்று, அவரின் அன்புக்குப் பாத்திரமானவர். திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். அவருக்கு மூன்றும் பெண்கள். மகள்களின் திருமண வைபவங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்காமல், 1982-ல், திருவையாறு உற்சவத்தில் கலந்துகொண்டு திரும்பிய கையோடு ஹார்ட் அட்டாக் வந்து, சட்டென்று மரணித்துவிட்டார். அவரின் மூத்த மகள் விஜயா ‘பெல்’ நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவர்தான் தன் கணவரின் பரிபூரண ஒத்துழைப்போடு, தன் தங்கைகள் இருவருக்கும் விமரிசையாகத் திருமணம் செய்து வைத்தார்.

அவரின் அடுத்த தங்கை உஷாவைத்தான் 17 ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணம் முடிந்ததும், திருச்சியில் என் மாமியாரும் கடைசி பெண் ராதிகாவும் மட்டும் தனியாக இருக்க வேண்டாம் என்று, அவர்களையும் அடுத்த ஓராண்டுக்குள் சென்னைக்கு வரவழைத்து, எங்களோடு வைத்துக் கொண்டோம். சீக்கிரமே கடைசி பெண்ணுக்கும் ஒரு நல்ல வரன் பார்த்துத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார் அக்கா.

அக்காவின் குடும்பமும் சரி, தங்கை ராதிகா வாழ்க்கைப்பட்ட இடமும் சரி... பெரிய கூட்டுக் குடும்பம். அங்கேயெல்லாம் மாமியால் அதிக பட்சமாக ஒரு வாரம்கூடத் தங்க முடியாது. கடைசி பெண் திருமணம் முடிந்த கையோடு, தன்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு அக்காவை அவர் நச்சரித்துக் கொண்டு இருந்தார். “மாமி! உங்களைச் சென்னைக்கு அழைத்து வந்தது நான்தான். நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். என்னுடனேயே இருங்கள். உங்களுக்கு இதில் எந்தத் தயக்கமும் வேண்டாம். மகன் இல்லையே என்கிற குறையே வேண்டாம். நான் உங்களுக்கு ஒரு மகன் மாதிரிதான்!” என்று அவரைச் சமாதானப்படுத்தி எங்களுடனேயே தங்க வைத்துக் கொண்டோம்.

என் இரு குழந்தைகள் பிறந்தபோதும் அவர்தான் கூட இருந்து கவனித்துக் கொண்டார். வளர்த்து ஆளாக்கினார். பதினேழு வருடம் எங்களுடனேயே இருந்தார்.

நேற்று (நவம்பர் 17) அரவிந்த அன்னையின் சமாதித் திருநாள். அன்னையின் தீவிர பக்தையாகத் திகழ்ந்த, என் இன்னொரு தாயாரான மாமியார் எஸ்.ஞானாம்பாள், அன்னை முக்தியடைந்த தினத்திலேயே அன்னையுடன் ஐக்கியமாகிவிட்டார். தள்ளாமையின் காரணமாக அவரது உடல் நிலை சில ஆண்டுகளாகவே படுத்திக் கொண்டு இருந்தாலும், அவரின் மரணம் ஒரு தூக்கம் போல் நேற்று மதியம் ஒரு மணியளவில் அமைதியாக நிகழ்ந்தது.

தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தையும் விடாமல் பார்ப்பார். அது கதைச் சம்பவம் என்பதை மறந்து, அந்தக் கதாபாத்திரங்களோடு ஐக்கியமாகி, அதில் யாராவது கஷ்டப்பட்டால், அடி உதை வாங்கினால், ‘ஐயோ! பாவம்டீ...’ என்று மாலை மாலையாகக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிடுவார். அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் என் மனைவிக்குப் போதும் போதும் என்றாகிவிடும். சில சமயம் ஒரு படி மேலே போய், ‘அந்தக் குழந்தைக்கு உடம்பு குணமாகணும் பிள்ளையாரப்பா! உனக்கு சூறைத் தேங்காய் உடைக்கிறேன்’ என்றெல்லாம் தீவிரமாக வேண்டிக் கொள்வார். அடுத்தடுத்த எபிஸோடுகளில் குழந்தை குணமானதும், ‘பகவானுக்கு வேண்டிக்கிட்டிருக்கேன். பகவானை ஏமாத்தக் கூடாது. எனக்காக ஒரு தேங்காய் வாங்கி உடைச்சுடுடீ’ என்று என் மனைவியை நச்சரிப்பார். “சரிம்மா! உடைக்கிறேன். ஆனா, இதெல்லாம் கற்பனைக் கதை. சும்மா சும்மா இப்படியெல்லாம் வேண்டிக்கிட்டு என்னைப் படுத்தாதே!” என்று என் மனைவி கடுப்படித்தாலும், அப்போதைக்குச் சமாதானமாவாரே தவிர, மீண்டும் சீரியல் பார்த்தால், அதில் யாராவது கஷ்டப்பட்டால் கலங்கிப் போவார். சீரியல் பார்க்காதே என்றாலும் கேட்க மாட்டார். “சரிம்மா! வேண்டிக்கிட்டாலும் பெரிசா வேண்டிக்காதே. சிம்பிளா கற்பூரம் ஏத்தறேன்னு வேண்டிக்கோ போதும்” என்பாள் என் மனைவி. இவர்களின் போராட்டங்கள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் மகா வேடிக்கையாக இருக்கும்.

நேற்று மாலை ஆறு மணியளவில் சம்பிரதாய சடங்குகள் நிறைவேறின. காரியங்கள் நடந்தன. மாமியாரின் உடலை ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போரூர் மின்மயானத்துக்குக் கொண்டு சென்றோம்.

முதன்முறையாக மின்மயானத்தைப் பார்க்கிறேன். பெரிய கல்யாண மண்டபம் போல இருந்தது. மொசைக் தரைகள். சுவர்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. சுத்தமாக இருந்தது. விரக்தியிலும் பயத்திலும் நம் மனத்தை ஆழ்த்தும் சாவின் அடையாளங்கள் ஏதுமின்றி, தெளிவாக இருந்தது. ‘மயான அமைதி’ என்கிற வார்த்தையே என்னை பயமுறுத்தும். அதுகூட இங்கே அர்த்தம் இழந்திருந்தது. சீருடை அணிந்த ஊழியர்கள் கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

மருத்துவரின் சான்றிதழைக் காட்டியதும் மளமளவென்று வேலைகள் நடந்தன. படிகளில் ஏறி, மேலே ஒரு ஹாலுக்கு மாமியின் உடலை எடுத்துப் போனோம். கிரில் கதவுக்கு அப்பால், பெரிய ஹால் நடுவே அலுமினிய கன செவ்வகக் கூடாரம் ஒன்று பெரிதாக இருந்தது. பெரிய புகைபோக்கி வானை நோக்கி உயர்ந்திருந்தது. ஹால் ஓரமாக கீழே இறங்கிச் செல்லவும் படிகள் இருந்தன. ஏதோ கரும்பாலைக்கு வந்த உணர்வு ஏற்பட்டது. அலுமினிய கூடாரத்துக்கு முன்புறத்தில் கறுப்புக் கதவு மூடியிருந்தது. அதன் முன்னே இருபதடி நீளத்துக்குத் தண்டவாளம் நீண்டிருந்தது. முனையில் ஒரு லீவர்.

கொண்டு போன மாமியின் உடலை அந்தத் தண்டவாளத்தின் மையத்தில் படுக்க வைத்தோம். ஊழியர் ஒருவர் லீவரைப் பிடித்து இழுக்க, தண்டவாளம் மேல் நோக்கி உயர்ந்தது. மற்றொரு ஊழியர் ஒரு ஸ்விட்சை இயக்க, கறுப்புக் கதவு உயரே நகர்ந்து, வழி விட்டது. அனல் வெளியே வரை அடிக்க, உள்ளே பார்த்தேன். நெருப்பின் வெறியாட்டம். தலையை ஸ்கேன் எடுக்க, நகரும் பலகையில் படுக்க வைத்து, எம்.டி. ஸ்கேன் இயந்திரத் துவாரத்துக்குள் செலுத்தப்படுவது போன்று, மாமியின் உடல் உள்ளே செலுத்தப்படும்போதே தீப்பிடித்துக் கொண்டது தெரிந்தது. கறுப்புக் கதவு இறங்கி மூடிக் கொண்டது. உயர்ந்த தண்டவாளம் தாழ்ந்து, நெருப்புப் படுக்கையில் மாமியின் உடலைக் கிடத்திவிட்டுச் சமர்த்தாக வெளியே வந்து, தன்னிடத்தில் பொருந்திக் கொண்டது.

அரை மணி நேரம்தான். ஒரு தகர டிரேயில் நெருப்பாகக் கொதிக்கும் எலும்புச் சில்லுகளும் சாம்பலுமாகக் கொண்டு வந்து நீட்டினார் ஊழியர். சாதாரண முறை தகனத்தில் மறுநாள்தான் சுடுகாட்டுக்குச் சென்று, ஒரு மண் சட்டியில் எலும்புகளைப் பொறுக்கிப் போட்டு, பால் ஊற்றி, ‘சஞ்சயனம்’ என்கிற சடங்கை நிகழ்த்த வேண்டியிருக்கும். மின்மயானத்தில் உடனடி தகனம். எனவே, கையோடே அந்தச் சடங்கையும் நிகழ்த்தி (சயனம் என்றால் உறக்கம்; சஞ்சயனம் என்றால், நிரந்தர உறக்கம் என்று பொருள்படும் என நினைக்கிறேன். ஜீவி என்றால் உயிரோடு இருப்பவன்; சஞ்சீவி என்றால், என்றும் அழியாமல் வாழ்ந்திருப்பவன்!) கடலில் அஸ்தியைக் கரைத்துவிட்டு, இரவு 9 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம்.

‘ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்
சூரியங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தாரே!’ என்கிறார் திருமூலர்.

நினைப்பொழிய இன்னும் சில மாதங்களாவது ஆகும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு என் மனைவி மீதும், என் மீதும், என் குழந்தைகள் மீதும் பாசம் கொண்டிருந்தவர் என் மாமியார்.

அவர் வழக்கமாகப் படுத்திருக்கும் அறை மட்டுமல்ல; அனைவரின் இதயங்களும் வெறிச்சோடியிருக்கிறது.

சடுதியில் சாம்பலாகி, விநாடியில் கரைந்துவிட்டார் மாமியார். அவரின் நினைவுகள் அத்தனை எளிதில் சாம்பலாகிக் கரையும் என்று தோன்றவில்லை.

*****
இனிமையான உறவுகள் அமைவது, மற்றவர்களை நாம் சரியாகப் புரிந்து கொள்கிறோமா என்பதில் இல்லை; தவறாகப் புரிந்து கொள்வதை எப்படித் தவிர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது!

13 comments:

Kirubanandhini said...

தங்கள் பதிவைப் படித்ததும், என் தாயின் மரணம் நினைவுக்கு வர, தாங்க முடியாமல் அழுதுவிட்டேன். ‘தாய்மை என்ற சொல் அர்த்தமிழந்துவிட்டது’ என்று உங்களின் இன்னொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிகன்’ பதிவு ஒன்றில் எழுதியிருந்ததைப் படித்துக் கோபம் கொண்டேன். அதை இந்தப் பதிவு சமன் செய்துவிட்டது. தாய்மை என்ற சொல் என்றைக்கும் அர்த்தம் இழக்காது. உங்களின் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு சிலர் அதற்குத் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். அவ்வளவே! தாய்மை என்பது ஓர் உணர்வு. ஆண்களிலும் தாய்மை உணர்வு கொண்டவர்கள் உண்டு. நெகிழ வைத்த இந்தப் பதிவு இட்டமைக்கு மீண்டும் என் நன்றி!

KALYANARAMAN RAGHAVAN said...

உங்கள் மாமியாரும் என் அம்மாவும் சம காலத்து மனுஷிங்க போலிருக்கு. என் அம்மாவும் டி.வி.சீரியல்களை உண்மை என்று நம்பி அவ்வப்போது கமெண்ட் கொடுத்து பார்ப்பார்கள். டி.வி.வருவதற்கு முன் நான் எப்போதோ நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்த புஷ் ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோவில் கர்நாடக இசை, நாடகம் என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் மறைந்த பின்னர் அவருடைய உடலை பெசன்ட்நகர் மயானத்தில் மின்சார அடுப்பில் தகனம் செய்தோம். உங்கள்
பதிவை படிததபோது அந்த நினைவுகள் வந்து என்னை நெகிழச் செய்துவிட்டது.மறைந்த உங்கள் மாமியாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த பதிவை வெளியிட்டு உங்களின் மாமியாரை நீங்கள் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்ததை நிரூபித்துவிட்டீர்கள்.

ரேகா ராகவன்.

வானம்பாடிகள் said...

மிக நெகிழ்வான இடுகை. தாய்மையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது.

K.B.JANARTHANAN said...

அத்தனை மெல்லிய மனம் கொண்ட தங்கள் மாமியாரைப் பற்றிய உங்கள் பதிவு மனதை நெகிழ வைத்தது.

A-kay said...

Anna, your post made me think of amma - it was a really touching post! Sorry for your, manni & your family's loss!

பொன்னியின் செல்வன் said...

ஆழ்ந்த வருத்தங்கள் ஐயா.

அவர்கள், என் பாட்டியை நினைவுக்கு கொண்டு வருகிறார்கள். http://ponniyinselvan-katturai.blogspot.com/2009/05/blog-post_29.html

மற்றபடி, வழக்கம் போல் பின்னூட்டத்திற்கு பதில் சொல்வது போல், இந்த (மற்றும் எந்த) பின்னூட்டத்திற்கும் பதில் சொல்ல சிரமப்படத் தேவை இல்லை ஐயா.

♠ ராஜு ♠ said...

ஆழ்ந்த அணுதாபங்கள்...!

K.V.Krishnaswamy said...

Very very excellent write-up on your mother-in-law's death. I am also a carnatic musician and I know very well Mr.Sundaram and his family on those days. Mrs.Gnanambal Sundaram has lived a life as the fullest. May her soul rest in peace. Please convey my deep condolences to all of your family members.
Regards.
K.V.Krishnaswamy, Mumbai.

வி. நா. வெங்கடராமன். said...

தங்களது பதிவு மனதை தொடும் விதத்தில் இருந்தது. கல்யாணம் ஆன பெண்களுக்கு மாமியாரும் ஒரு தாய் தான் என்று சொல்வது போல ஏனோ ஆண்களுக்கு சொல்வதில்லை! உங்களது இன்னொரு தாயாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

சத்யராஜ்குமார் said...

நெகிழ வைத்த கட்டுரை. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
[சத்யராஜ்குமார்]

ரவிபிரகாஷ் said...

கிருபாநந்தினி, கல்யாணராமன் ராகவன், வானம்பாடிகள், கே.பி.ஜனார்த்தனன், ஏ-கே, பொன்னியின் செல்வன், ராஜு, கே.வி.கிருஷ்ணஸ்வாமி, வி.நா.வெங்கடராமன், சத்யராஜ்குமார் ஆகிய அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றி!

ரவிபிரகாஷ் said...

இந்தப் பதிவுக்குத் தமிழிஷ்-ஷில் ஓட்டளித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்த கே.பி.ஜனா, கிருபாநந்தினி, அனுபகவான், மொஹம்மதுஃபெரோஸ், பாமரன், யூ.ஆர்.விவேக், ஈஸிலைஃப், ஸ்வாசம், கொசு, இன்பதுரை, சி.எஸ்.கிருஷ்ணா, வெங்கட்நாகராஜ் ஆகியோருக்கு என் இதயங்கனிந்த நன்றி!

அநன்யா மஹாதேவன் said...

தங்கள் பதிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பேன்.
btw, சஞ்சயனம் = சத்+சயனம் ஆக இருக்கலாம். சத்=நல்ல. அதாவது நல்ல நித்திரை, இறைவனடி சேரும் நித்திரை என்று கொள்ளலாம். சத்+ஜீவி = சன்ஜீவி , சத்+மார்க்கம்=சன்மார்க்கம், சத்+மதி=சன்மதி
btw, immortality என்னும் சொல்லை குறிக்கும் வார்த்தை சிரஞ்சீவி அல்லவோ? your post has left me pondering.. இதைப்பற்றி சுவாமி ஓம்காரை கேட்கவேண்டும்.