மகரம் என்னும் மாமனிதர்!

சிலரின் அருமை, பெருமைகள் அவரோடு நாம் நெருங்கிப் பழகிக்கொண்டு இருக்கும் காலத்திலோ, அவர் உயிரோடு இருக்கும்போதோ நமக்குத் தெரிவதில்லை. அவரின் மறைவுக்குப் பின்பே தெரிய வருகின்றன. அப்படிச் சமீபத்தில் என் மதிப்பில் மிக உயர்ந்தவர் பழம்பெரும் எழுத்தாளர் ‘மகரம்’ அவர்கள்.

இவர் வேறு யாருமல்ல; என் மதிப்புக்குரிய நண்பர் மார்க்கபந்து அவர்களின் தந்தையார்தான்.

மார்க்கபந்துவுடன் நட்பு ஏற்பட்டுப் பழகத் தொடங்கிய பின்னர், பலப்பல முறை அவர்களின் இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன். அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தியிருக்கிறேன். எனக்குப் பெண் பார்க்கச் சென்றபோது, எங்களோடு மார்க்கபந்துவையும் அவரின் தாயாரையும்கூட அழைத்துச் சென்றிருந்தோம். எங்கள் சார்பாகப் பெண் வீட்டாருக்கு என் சம்மதத்தைச் சொன்னவர் மார்க்கபந்துவின் தாயார்தான்.

நான் மார்க்கபந்துவின் வீட்டுக்குச் சென்றபோதெல்லாம் அதிகம் பேசியது அவரின் தகப்பனார் ‘மகரம்’ அவர்களுடன்தான். தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் கூடப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். அவரும் சலிப்பில்லாமல் பழைய கதைகளையெல்லாம் சொல்வார். அந்தக் காலத்தில் சென்னை எப்படியிருந்தது (‘டவுட்டன் என்று சொல்வது சரியில்லை; டஃப்ட்டன் என்பதுதான் சரியான உச்சரிப்பு!’) என்பதிலிருந்து, ஏஜிஎஸ் ஆபீசில் வேலை செய்த அனுபவங்கள், எழுத்தாளர்கள் ஒவ்வொருவரின் குணங்கள், ராஜாஜியைச் சந்தித்த அனுபவம் எனப் பலவற்றைச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே இருப்பார்; நான் கேட்டுக் கொண்டே இருப்பேன்.

அவர் பேசும்போது ஒரு விஷயத்தை நான் வேடிக்கையாகக் கவனிப்பது உண்டு. அதாவது, ஒரு விஷயத்தை ஆரம்பித்தார் என்றால், அதைத் தொட்டுத் தொட்டு வெவ்வேறு லின்க் பிடித்து, தாவித் தாவிச் சென்று, சொல்ல வந்த விஷயத்திலிருந்து திசை மாறி, ரொம்ப தூரம் தள்ளிப் போய்விடுவார். கடைசியில், “சரி, இப்போ இதை எதற்காகச் சொல்ல வந்தேன்?” என்று கேட்பார். சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டே இருப்பேனே தவிர, எனக்கும் எதற்காக அதைச் சொன்னார் என்று பேச்சின் ஆரம்ப நுனி தெரியாது. உதாரணமாக, ஒரு எழுத்தாளரைப் பற்றிய ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார் என்றால், அவரை எந்தத் தெருவில் முதன்முதலில் தாம் பார்த்தோம் என்பதை விவரித்து, ‘அப்போ அவர் வால்டாக்ஸ் ரோடில்தான் குடியிருந்தார்... வால்டாக்ஸ் ரோடுன்னு அதுக்கு ஏன் பேர் வந்தது தெரியுமா? அது ரொம்ப சுவாரசியமான கதை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல...’ என்று மாறி மாறிப் போய்க்கொண்டே இருப்பார். அவர் சொல்கிற விஷயங்கள் எல்லாமே சுவாரசியமாக இருக்கும் என்பதால், நானும் குறுக்கிடாமல் அவர் சொல்வதையெல்லாம் கேட்பேன்.

அவரோடு அத்தனை பழகியும், அவர் தன் எழுத்தைப் பற்றி என்னிடம் கடைசி வரையில் ஒரு வார்த்தை சொன்னதில்லை. ‘அப்பா அந்தக் காலத்தில் நிறைய எழுதியிருக்கார்’ என்று மார்க்கபந்து எப்போதோ ஒருமுறை சொன்னதோடு சரி. நான் மகரத்தைச் சந்தித்த சமயத்தில், அவர் குமுதம் பத்திரிகையின் பரிசீலனைக்கு வரும் சிறுகதைகளைப் படித்துப் பரிசீலித்துக் கொடுத்துக்கொண்டு இருந்தார். தவிர, மலேசியாவிலிருந்து வெளியாகும் செய்தித் தாள் (தமிழ்நேசன் என்று நினைக்கிறேன்) ஒன்றுக்குத் தமிழ்நாட்டுச் செய்திகளைத் தொகுத்து எழுதி அனுப்பிக்கொண்டு இருந்தார்.

சமீபத்தில் ஆனந்த விகடன் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக 1944-ம் ஆண்டு இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, ‘மகரம்’ எழுதிய பல நகைச்சுவைக் கட்டுரைகளைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். “ஐம்பதுகளில் அப்பா ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்” என்று மார்க்கபந்து சொல்லியிருக்கிறாரே தவிர, அப்பாவின் படைப்புகள் எதையும் இன்னின்ன தேதியில், இந்த இந்த இதழ்களில் வெளியானது என்று குறித்து வைத்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் கல்கி பத்திரிகையில் எழுதத் தொடங்கியவர் ‘மகரம்’. பின்புதான் விகடனிலும் எழுதத் தொடங்கினார். இவரது இயற்பெயர் கே.ஆர்.கல்யாணராமன். இவருக்கு ‘மகரம்’ என்று புனைபெயர் வைத்தவர் தேவன். மகரம் என்பது கே.ஆர்.கல்யாணராமனின் லக்னம்.

லா.ச.ரா., ரஸவாதி, தீபம் நா.பார்த்தசாரதி, எல்லார்வி, அநுத்தமா, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் போன்ற பல எழுத்தாளர்களோடு நெருங்கிய நட்பு கொண்டவர் மகரம். தான் பெரிய படைப்பாளியாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மற்ற பல எழுத்தாளர்களிடமிருந்து கதைகளைக் கேட்டு வாங்கிப் பல புத்தகத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். புகழ்பெற்ற 101 எழுத்தாளர்களிடமிருந்து சிறுகதைகள் கேட்டு வாங்கித் தொகுத்து, வானதி பதிப்பகத்தின் மூலம் நான்கு தொகுதிகளாக அவற்றை வெளியிட்டார்.

காந்திஜியின் கொள்கைகளை மையப்படுத்தி, கல்கி, ராஜாஜி, புதுமைப்பித்தன், அகிலன் என 50 எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து இவர் வெளியிட்ட ‘காந்தி வழிக் கதைகள்’ புத்தகத்துக்கு அந்தக் காலத்தில் பெரிய வரவேற்பு. அது சம்பந்தமாக ‘மகரம்’ முன்பு சொன்ன சுவாரசியமான சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது.

‘காந்தி வழிக் கதைகள்’ புத்தகம் தயாரானதும், முதல் பிரதியை எடுத்துக்கொண்டு ராஜாஜியைப் பார்க்கச் சென்றிருந்தாராம் மகரம். ராஜாஜியிடம் புத்தகத்தைக் கொடுத்ததும், அவர் வாங்கி முதல் கதை யாருடையது என்று பார்த்திருக்கிறார். ‘கல்கி’யின் கதை. ‘சந்தோஷம்’ என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். “ஐயா! உங்கள் கதையும் இதில் இடம்பெற்றிருக்கிறதே, பார்க்கவில்லையா?” என்று கேட்டாராம் மகரம். “அப்படியா! பார்த்தேனே... இல்லையே? கல்கி எழுதிய கதைதானே வந்திருக்கிறது!” என்றாராம் ராஜாஜி. அதாவது, முதல் கதையாக தன் கதை இடம்பெறவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் அவர்.

மகரம் ‘காந்தி வழிக் கதைகளை’த் தொகுத்தபோது, அமரர் ஆனவர்களின் கதைகளை ஆரம்பத்தில் போட்டுவிட்டு, அதன்பின்னர் உயிரோடு உள்ளவர்களின் கதைகளை சீனியாரிட்டிப்படி தொகுத்திருக்கிறார். இதை ராஜாஜியிடம் விளக்கும் விதமாக, “ஐயா! அமரர் ஆனவர்களின் கதைகளை முதலில் வெளியிட்டுவிட்டேன். அடுத்ததாக உங்கள் கதையைத்தான் முதலாவதாக வெளியிட்டிருக்கிறேன்” என்றாராம். ராஜாஜி அர்த்தபுஷ்டியுடன் பார்க்க, மகரத்துக்குத் தான் சொன்னதில் உள்ள தவறு புரிந்ததாம். பெரியவர்களுடன் பேசும்போது நாம் எத்தனைக் கவனமாகப் பேச வேண்டும் என்பதை விளக்க மகரம் சொன்ன சம்பவம் இது.

தனக்கு அநாயாச மரணமே சம்பவிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருவார் மகரம். அநாயாச மரணம் என்றால், நோய், படுக்கை என்று இழுத்துப் பறித்துக்கொண்டு இராமல் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதமாக சட்டென்று ஆயுள் முடிந்துவிடுவது.

கேட்டவரம்பாளையம் என்று ஒரு ஊர். (இந்த ஊரை மையமாக வைத்து ‘கேட்டவரம்’ என்னும் தலைப்பிலேயே ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ‘அநுத்தமா’.) அங்கே ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமியை ஒட்டி நடைபெறும் சம்பிரதாய பஜனைக் கூட்டம் பிரசித்தி பெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, 2001-ம் ஆண்டு, தமது மனைவியோடு காரில் புறப்பட்டுச் சென்றார் மகரம். போகிற வழியில் காரிலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, திடீர் மரணம். மகரம் ‘கேட்ட வரம்’ கிடைத்துவிட்டது!

*****
யார் தன்னோடு இருக்கும்போது நம்மையும் பெரிய மனிதர் என்று உணரச் செய்கிறாரோ, அவரே பெரிய மனிதர்!

12 comments:

கே. பி. ஜனா... said...

பண்பில் சிகரமாகவும் எளிமையில் அகரமாகவும் விளங்கிய மகரம் பற்றி எத்தனை அழுத்தமான, சுவாரசியமான பதிவு! அவர் சொன்ன பிற நல்ல தகவல்களையும் மற்றுமொரு முறை பதிவிடுங்கள்... -- கே.பி.ஜனா

vasu balaji said...

நானும் படித்திருக்கிறேன். ஆனாலும் அறிமுகம் அருமை. நன்றி ரவிபிரகாஷ்.

Anonymous said...

காந்தி வழிக் கதைகள் - ராஜாஜி சம்பவம் மிகச் சுவாரஸ்யமானது - Communication பாடம் என்றே சொல்லிவிடலாம். சுவையான கட்டுரைக்கு நன்றி சார்!

- என். சொக்கன்,
பெங்களூரு.

கிருபாநந்தினி said...

மகரம் பற்றி என் தந்தையார் சொல்லியிருக்கிறார். நான் அவரைப் பார்த்ததில்லை. தங்கள் கட்டுரை மூலம் விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது. அவரின் புகைப்படத்தையும் இந்தப் பதிவில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Rekha raghavan said...

மகரம் பற்றிய பதிவு அருமை. அவர் சொன்ன பிற தகவல்களையும் நண்பர் கே.பி.ஜே.சொன்ன மாதிரி ஒரு புதிய பதிவில் தங்களின் சுவையான டச்சுடன் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

ரேகா ராகவன்.

பொன்னியின் செல்வன் said...

/ சிலரின் அருமை, பெருமைகள் அவரோடு நாம் நெருங்கிப் பழகிக்கொண்டு இருக்கும் காலத்திலோ, அவர் உயிரோடு இருக்கும்போதோ நமக்குத் தெரிவதில்லை. /
உண்மை சார்..

மகரம் அவர்களின் தன்னடக்கம் பிரமிக்க வைக்கிறது !

/“ஐயா! அமரர் ஆனவர்களின் கதைகளை முதலில் வெளியிட்டுவிட்டேன். அடுத்ததாக உங்கள் கதையைத்தான் முதலாவதாக வெளியிட்டிருக்கிறேன்” என்றாராம். / :-) :-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நானும் மகரம் ஸாரின் எழுத்துக்களைப் படித்து இருக்கிறேன். உங்களுடையதைப் படித்த உடன் எனக்கு என்ன உணர்வு தோன்றுகிறது தெரியுமா?

எழுத்தாளர்கள் தான் அவ்வப்போது
மறைகிறார்கள். தரமான...
எழுத்துகள் என்றும்
மறைவதில்லை !

ungalrasigan.blogspot.com said...

+ பாராட்டுக்கு நன்றி கே.பி.ஜனார்த்தனன்! அவசியம் தாங்கள் சொன்னது போல் பதிவிடுகிறேன்!

+ பாராட்டுக்கு நன்றி ‘வானம்பாடிகள்’!

+ பாராட்டுக்கு நன்றி சொக்கன்! மகரம் சொன்ன ராஜாஜி விஷயம் ஒரு சின்ன சம்பவமாக இருந்தால் கூட பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது எனக்கு.

+ பாராட்டுக்கு நன்றி கிருபாநந்தினி! தாங்கள் சொன்னது போலவே மகரம் புகைப்படத்தையும் வெளியிட்டுவிட்டேன். பார்த்தீர்களா?

+ பாராட்டுக்கு நன்றி ரேகா ராகவன்.

+ பாராட்டுக்கு நன்றி பொன்னியின் செல்வன்! உங்கள் பதிவுகளில் மட்டுமின்றி, பின்னூட்டங்களில்கூட உங்களின் உயர்ந்த ரசனை வெளிப்படுவதைக் கண்டு பிரமிக்கிறேன்!

+ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி! \\எழுத்தாளர்கள்தான் அவ்வப்போது
மறைகிறார்கள். தரமான...
எழுத்துகள் என்றும்
மறைவதில்லை!// சரியாகச் சொன்னீர்கள்!

ungalrasigan.blogspot.com said...

அசோக்92, ஐடிஎன்.கார்த்திக், ஜே.என்.டியூப், கே.கிருபாநந்தினி, கே.பி.ஜனா, மொஹமத் ஃபெரோஸ், கிருபன், மலர், சி.எஸ்.கிருஷ்ணா, சுதிர்1974, அரசு08, செந்தழல்ரவி ஆகியோர் இந்தப் பதிவுக்குத் தமிழிஷ்-ஷில் தங்கள் ஓட்டுகளைச் செலுத்தி ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

ரிஷபன் said...

'மகரம்' பற்றி படிக்கும்போது கிடைக்கிற ஆனந்தம் நல்ல எழுத்துக்களுக்கு கிடைக்கிற நிஜமான வோட் பேங்க்

ungalrasigan.blogspot.com said...

+ நன்றி ரிஷபன்!

ungalrasigan.blogspot.com said...

முகம் தெரியா நண்பர் சி.எஸ்.கிருஷ்ணா என் பழைய பதிவுகள் சிலவற்றை எடுத்து இப்போது தமிழிஷ்-ஷில் இணைப்புக் கொடுத்துள்ளார். அவற்றைப் படித்துவிட்டும் உடனடியாக எனக்குப் பல பின்னூட்டங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இதன்மூலம் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் பரந்த நோக்கில், தான் படித்து ரசித்த என் பதிவுகளைத் தானே முன்வந்து தமிழிஷ்ஷில் பதிவிட்டு, இதுவரை அவற்றைப் படிக்காதவர்களையும் படிக்கச் செய்த திரு.சி.எஸ்.கிருஷ்ணாவுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.