தேள் வந்து பாயுது காதினிலே..!

“மூட்டைப் பூச்சி கடித்ததற்கே இத்தனை அருமையான பதிவா? பாராட்டுக்கள். உங்களை அடுத்தடுத்து தேள், பாம்பு ஆகியவை கடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று எனது ‘ஒரு நூறு கொலை’ பதிவுக்குப் பின்னூட்டம் இட்டிருந்தார் தோழி கிருபாநந்தினி.

நான் ஏழாம் வகுப்பு முடிக்கும் வரையில் கிராமத்தில் வசித்ததால் தேள், பாம்பு ஆகியவற்றுடன் பரிச்சயம் உண்டு. நாகப் பாம்பு, கட்டுவிரியன், பச்சைப் பாம்புகளை வயல்வெளிகளிலும், தண்ணீர்ப் பாம்புகளைக் கிணறுகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால், அவற்றிடம் ஒருபோதும் கடிபட்டதில்லை.

ஒருமுறை சங்கீதமங்கலம் கிராமத்தில் நடு ரோட்டில் ஒரு தவளையைக் கொம்பேறிமூக்கன் பாம்பு துரத்திக்கொண்டே ரொம்ப தூரம் சென்றதை, வெற்றி தோல்வி அறிய அவற்றின் பின்னாலேயே ஓடிப் போய்ப் பார்த்திருக்கிறேன். ஓரமாக மரம் செடி கொடிகளுக்கிடையில் ஓடித் தப்பித்துக் கொள்ளாமல், சீரியல் கதாநாயகி மாதிரி அந்தத் தவளை நடு ரோட்டிலேயே தாவித் தாவிச் சென்றுகொண்டு இருக்க, தரையில் பெரும்பான்மை உடல் படாமல் மிதக்கிற மாதிரி அந்தக் கொம்பேறிமூக்கன் பாம்பு சர்... சர்ரென்று துரத்திச் சென்ற காட்சி படு த்ரில்லாக இருந்தது. கிட்டத்தட்ட அரை பர்லாங் தூரம் துரத்திச் சென்று தவளையை லபக்கிவிட்டது அந்தப் பாம்பு.

பச்சைப் பாம்பு வகையைச் சேர்ந்தது கொம்பேறிமூக்கன். அது கடும் விஷமுள்ள பாம்பா, விஷமற்ற வகையைச் சேர்ந்ததா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், கொம்பேறி மூக்கனைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அது யாரையாவது கொத்திவிட்டுக் கிடுகிடுவென்று ஏதாவது ஒரு மரத்தின் உச்சியில் ஏறிக் கொள்ளுமாம். அங்கிருந்து சுடுகாடு இருக்கும் திசையை நோக்கிப் பார்க்குமாம் - தான் கொத்திய ஆளைக் கொண்டு வந்து எரிக்கிறார்களா என்று!

நாங்கள் குடியிருந்த வீடுகளுக்குள் பலமுறை பாம்புகள் வந்திருக்கின்றன. எங்கள் வீட்டு வாசலிலேயே எங்களின் வளர்ப்பு நாய் போல் எந்நேரமும் படுத்திருக்கும் தெரு நாய் ஒன்று, எங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்ட பாம்பை மிக சாமர்த்தியமாக ஒரு மணி நேரம் வேட்டையாடிக் கொன்ற காட்சி படு த்ரில்லானது. இன்றைய வசதி போல் அந்நாளில் டிஜிட்டல் வீடியோ கேமரா இருந்திருந்தால் அதைப் படமாக்கி யூ-டியூபில் சேர்த்திருப்பேன்.

நாங்கள் குடியிருந்த கிராமத்து வீடுகள் எல்லாவற்றிலுமே தேள் அனுபவம் கிடைத்திருக்கிறது.

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், பத்துப் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில், மெயின் ரோட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவு உள்ளடங்கி இருக்கும் அதனூர் என்கிற கிராமத்தில் நாங்கள் வசித்த குடிசை வீட்டில் தினம் தினம் தேள் வரும். ஒன்று இரண்டல்ல... எப்படியும் ஏழெட்டாவது தேறும்! படுத்திருக்கும்போது சுவரில் தேள் நகர்வது தெரியும்; கூரையில் தொற்றியிருப்பது தெரியும். சுவர் ஓரமாக ஓடுவது தெரியும். இப்போது நினைத்தால் திகிலாக இருக்கிறது; ஆனால், அந்நாளில் எப்படி நாங்கள் பயமில்லாமல் இருந்தோம் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒருமுறை, அம்மா காலையில் காபி போடுவதற்காக ஃபில்டரில் வழக்கம்போல் காபி பொடி போட்டு வெந்நீர் ஊற்றிவிட்டுச் சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோதும், டிகாக்‌ஷன் இறங்கவேயில்லை. பழைய பொடி கெட்டித்துப் போனால் அப்படியாவது வழக்கம்தான். அதற்கு ஒரு ட்ரிக் உண்டு. குடை போடுவது என்பார்கள். அதாவது ஃபில்டரில் சல்லடை மாதிரி இருக்கும் ஒரு உபகரணத்தைப் போட்டுவிட்டு, பின்பு அதற்கு மேலே காபிப் பொடியைக் கொட்டி, வெந்நீர் ஊற்ற வேண்டும். மின் வசதி கிடையாது. சிம்னி விளக்கில் ‘குடை’யைத் தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. எனவே, ஃபில்டரின் விளிம்பில் தட்டித் தட்டி டிகாக்‌ஷனை மெதுமெதுவாக இறங்கச் செய்தார்.

நாங்கள் விழித்துக்கொண்டு, பல் தேய்த்து ரெடியாவதற்குள் எல்லோருக்கும் காபி தயாராக இருந்தது. அப்பாவும், உடன்பிறந்தோர் நாங்கள் நால்வரும் ஆளுக்கொரு டம்ளர் காபி குடித்தோம். சுவையே இல்லை. “பழைய பொடி. சரியா டிகாக்‌ஷனே இறங்கலை. நாளைக்குப் புதுப் பொடி வாங்கிக் காபி போட்டுத் தரேன்” என்று சமாதானம் செய்தார் அம்மா.

பின்பு, காலை பத்து மணியளவில் பாத்திரங்களையெல்லாம் தேய்ப்பதற்காக ஃபில்டரைக் கொண்டு போய்த் தோட்டத்தில் உதறியபோது, காபிப் பொடியுடன் சேர்ந்து வந்து விழுந்தது வெந்நீரில் வெந்து போன ஒரு தேளின் உடம்பு.

உவ்வேக்! நாங்கள் குடித்த காபியெல்லாம் வெளியே வந்துவிடும்போல் வயிற்றைப் புரட்டியது. உடம்புக்கு ஏதாவது கெடுதி பண்ணுமோ என்று அப்பா அவசரமாக உள்ளூர் வைத்தியர் ஒருவரிடம் எங்களை அழைத்துச் சென்றார். “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது! தேள் கொட்டினாத்தான் விஷம். தைரியமா போங்க” என்றார் வைத்தியர்.

தேள் என்றதும், எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தைக்குச் சரியாகத் தட்டாமல், உதறாமல் ஒரு ஷூவை மாட்டிப் பள்ளிக்கு அனுப்பி, அந்த ஷூவினுள் தேள் இருந்து, அது கொட்டிக் குழந்தை பரிதாபமாக இறந்து போன செய்திதான். இப்போது நினைத்தாலும் மனதில் வேதனை வரவழைக்கும் சம்பவம் அது.

ஒரு தேளை வீட்டுச் சுவரில், அல்லது கொல்லைப்புறத்தில் எங்கோ ஓரிடத்தில் பார்க்கிறோம் என்றால், அதை அங்கேயே துடைப்பக் கட்டையால் சட்னி செய்து போட்டாலும், மறுநாள் அதே நேரம், அதே இடத்தில் இன்னொரு புதிய தேள் இருப்பதைப் பார்க்கலாம். இது நியதியா என்று தெரியவில்லை. நாங்கள் அப்படிப் பலமுறை பார்த்திருக்கிறோம்.

தேளில் இன்னொரு பெரிய வகை உண்டு. நட்டுவாக்கிலி என்பார்கள். தேள் குட்டியாக, தேன் நிறத்தில் இருக்கும். நட்டுவாக்கிலி கறுப்பாக, கம்ப்யூட்டர் மவுஸ் சைஸுக்கு இருக்கும். அதுவும் எங்கள் வீட்டில் அடிக்கடி வந்திருக்கிறது. தேள் கொட்டினால் ஏற்படும் வலியைவிட, நட்டுவாக்கிலி கடித்தால் உண்டாகும் வலி நூறு மடங்கு! ஆனால், தேளைவிட நட்டுவாக்கிலியிடம் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். ஏனென்றால், தேள் மிக சுறுசுறுப்பு. நட்டுவாக்கிலி ரொம்பவே மந்தம்.

தேள் கொட்டிய கையோடு, நாம் வலியை உணர்வதற்குள் விறுவிறுவென்று ஓடி ஒளிந்துவிடும். கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நட்டுவாக்கிலி மெதுவாகத்தான் நகரும். இடுக்கி போன்ற தன் முன்னங் கைகளால் நம் காலை வாகாகப் பற்றிக் கொண்டு, கொட்டுவதற்கு ரொம்பவே நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்குள் நம் காலில் ஏதோ ஊர்வது தெரிந்து, உதறிவிடலாம்; அதை சம்ஹாரம் செய்து விடலாம்.

சற்றுப் பெரிய தேள்களைக் கொன்று, மண்ணில் குழி வெட்டிப் புதைப்பார்கள். சில நாட்களுக்குப் பின்பு அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தால், தேளின் உடல் மண்ணோடு மண்ணாகியிருக்க, தேளின் வால் பகுதியில் உள்ள கணுக்கள் மட்டும் வளையம் வளையமாக விழுந்து கிடப்பது தெரியும். அதை எடுத்துக் கோத்து, குழந்தை கழுத்தில் மாலையாகப் போட்டால், குழந்தையை தேள், பாம்பு எதுவும் அண்டாது என்று கிராமங்களில் ஒரு நம்பிக்கை உண்டு.

‘...தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க...’ என்று கந்த சஷ்டி கவசம் சொல்வதுதான் அந்தக் காலத்தில் தேள், பாம்பு பயம் அகல எங்களுக்கு ஒரே வழி!

இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. தேள், நண்டு, பூரான் எல்லாவற்றையும் பாடம் பண்ணி, கண்ணாடிக்குள் பதித்து, நெக்லஸ் மாதிரி பெண்கள் போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்களாமே! அப்படி ஒரு நெக்லஸ் படம்தான் மேலே இருப்பது.

வாழ்க நாகரிகம்! வாழ்க பெண்கள்! வாழ்க தேள்!

***
தைரியம் என்பது வேறில்லை; தன் பயத்தை எதிராளிக்குத் தெரியாமல் மறைப்பது!

12 comments:

SRK said...

//இடுக்கி போன்ற தன் முன்னங் கைகளால் நம் காலை வாகாகப் பற்றிக் கொண்டு, கொட்டுவதற்கு ரொம்பவே நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்குள் நம் காலில் ஏதோ ஊர்வது தெரிந்து, உதறிவிடலாம்;//

படிக்கிற போதே திகில்.

பொன்னியின் செல்வன் said...

சார்... நன்றாய் காபி குடித்'தேள்' போங்கள் !!!

தவளை, தேள், பாம்பு, நாய், நட்டுவாக்கிலி -- அட ! ஒரு மினி 'நேஷனல் ஜியாக்ரபிக்' !!

// தேள் குட்டியாக, தேன் நிறத்தில் இருக்கும் // :-)

Rekha raghavan said...

எங்கே வந்து கொட்டிடுமோ என்ற பயத்துடன் தேள் பற்றிய பதிவை படித்து முடித்தேன்!

ரேகா ராகவன்.

Anonymous said...

படிக்குறப்போ காலில் தேள் ஊருவது மாதிரி இருந்தது.

கே. பி. ஜனா... said...

//இன்றைக்குக் காலம் மாறிவிட்டது.// அப்படியெல்லாம் சொல்லா'தேள்', தேளை விட ஸ்ட்ராங்கா கொட்டறவா நிறைய பேர் இருக்கா.
-- கே.பி.ஜனா

ஆர்வா said...

தேளைப்பத்தி எத்தனையோ விஷயங்கள் படிச்சிருக்கேன். ஆனா உங்க அனுபவம் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். உங்க கதைகளை
நான் இன்னமும் பத்திரப்படுத்தி எடுத்து வெச்சிருக்கேன்.எந்த அளவுக்கு உங்க கதைகள் பிடிக்கும்'னனா, உங்களுக்கு வர்ற வாசகர் கடிதங்களை கூட
உன்னிப்பா படிக்கிற அளவுக்கு.

நரி முகத்தில் முழித்தவன் கதை வெளியானதுக்கு அப்புறம், அடுத்த வார இதழ்ல ஒரு வாசகர் எழுதி இருந்தார், கதையில் மட்டும் இல்லை. கதை எழுதியவரின் பெயரிலும் உயிரெழுத்து
இல்லைன்னு சொல்லி இருந்தாரு.

உங்களை சந்திக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைபட்டிருக்கேன்.சார் எனக்கு இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா.. உங்க வயசுதான். தில்ரூபாவுக்கு ஒரு சேலை கதையில டேய் பூரிஷ் பையான்னு ஒரு வார்த்தை சொல்றமாதிரி எழுதி இருப்பீங்க. அந்த வார்த்தை ரொம்ப அழகா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்ச வரி அது. இதையெல்லாம் வெச்சி பார்க்கும் போது நீங்க ரொம்ப சின்னப்பையனா
இருப்பீங்கன்னு நினைச்சேன்.

கிருபாநந்தினி said...

தமாஷாகச் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, அதற்கும் ஒரு பதிவை அருமையாகப் போட்டுவிட்டீர்கள்! பாராட்டுக்கள்!

பின்னோக்கி said...

//சீரியல் கதாநாயகி மாதிரி அந்தத் தவளை

:}

தேள்னா ரொம்ப பயம். பயந்துகிட்டே தான் இதைப் படித்தேன். நல்லாயிருக்கு

பின்னோக்கி said...

//பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தைக்குச் சரியாகத் தட்டாமல்,

தினமும் ஷூ எடுக்கும் போது இது எனக்கு நினைவில் வரும். நீங்களும் அந்த நிகழ்வை நியாபகம் வைத்திருப்பது ஆச்சர்யம்.

ungalrasigan.blogspot.com said...

எஸ்.ஆர்.கே.:
உண்மையில் நட்டுவாக்கிலியைப் பார்க்கிறபோதுதான் திகிலாக இருக்கும்; ஆனால், அது தேளைவிட அபாயமற்றது. நமக்கு சுதாரித்துக்கொள்ள டயம் கொடுக்கும். கருணையுள்ள வில்லன்! தங்கள் கருத்துக்கு நன்றி!

பொன்னியின் செல்வன்:
தங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியில் உள்ள குறும்பை ரசித்தேள்... ஸாரி, ரசித்தேன்!

கல்யாணராமன் ராகவன்:
எப்படியோ, படித்து முடித்‘தேள்’ இல்லையா? (நன்றி: பொ-செ.)

ஜீவன்பென்னி:
தங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி! ‘ஊருவது’ என்ற வார்த்தையைப் பெரும்பாலோர் ‘ஊறுவது’ என்றுதான் தவறாக எழுதுவார்கள். தாங்கள் அதைச் சரியாக எழுதியிருப்பது கண்டு வியப்பும் மகிழ்வும் அடைந்தேன்.

கே.பி.ஜனார்த்தனன்:
அப்படியா சொல்றீங்க?!

கவிதைக் காதலன்:
அழகான புனைபெயர்! விரிவான தங்களின் பின்னூட்டம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ‘நரி முகத்தில் விழித்தவன்’ கதைக்கு வெளியான அந்த வாசகர் கடிதத்தை நானே மறந்துவிட்டேன். அன்புக்கு நன்றி! ‘பூரிஷ்’ என்பதற்கு அர்த்தம் - கொஞ்சம்கூட ரசனையே இல்லாத, சகிக்க முடியாத, முரட்டுத்தனமான. கதையில் செல்லமாகச் சொல்வாளாக இருக்கும்!

கிருபாநந்தினி:
இந்தப் பாராட்டு தமாஷ் இல்லையே?!

பின்னோக்கி:
* பாராட்டுக்கு நன்றி!
* அந்த நிகழ்வு இன்னமும் என் ஞாபகத்தில் இருப்பதற்குக் காரணம், அந்தக் குழந்தையின் பெற்றோர்களின் அலட்சியம் மற்றும் கவனக் குறைவின் மீது அப்போது எனக்கு எழுந்த கோபம்!

ungalrasigan.blogspot.com said...

கே.வடிவேலன், அசோக்92, ஸ்வாசம், சி.எஸ்.கிருஷ்ணா, அனுபகவான், தருண், சுபம், கே.பி.ஜனா, வெங்கட்நாகராஜ், அடியார், கொசு, யூ.ஆர்.விவேக், கிருபாநந்தினி, பின்னோக்கி ஆகியோர் இந்தப் பதிவுக்குத் தங்கள் ஆதரவை தமிழிஷ்-ஷில் ஓட்டளித்துத் தெரியப்படுத்தியிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

Chithran Raghunath said...

போனவாரம் என் அக்கா பையனை ஒரு பல்லி கடித்து, என்ன வைத்தியம் செய்வது என்று டாக்டர்கள் குழம்பி, ஒரு வழியாய் தீர்மானித்து ஒரு ஊசி போட்டு அனுப்பினார்கள். பல்லிக் கடியால் எதுவும் ஆகாது என்று பின்னர் தெரிந்து கொண்டோம்.

பாம்புகள் பற்றி ரொம்ம்ம்ம்பநாள் முன்னர் நான் எழுதின பதிவு:
http://chithran.blogspot.com/2004/12/blog-post.html