எங்கே என் பழைய நண்பன்?

‘கண்ணனிடமிருந்து ஒரு கடிதம்’ என்று ஒரு பதிவை எனது மற்றொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிக’னில் சமீபத்தில் பதிந்திருந்தேன். அதற்கு முன்னதாக ‘கண்ணன் எத்தனைக் கண்ணனடி’ என்று எழுதிய பதிவைப் படித்துவிட்டு, அதில் இடம்பெற்றிருந்த என் பழைய நண்பர் கண்ணன், சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு என்னை இ-மெயிலில் தொடர்பு கொண்டது பற்றிய பதிவு அது.

நேற்று ஞாயிறு மதியம்போல் இந்த வலைப்பூவில் ‘நண்பர்கள் தினம்’ பற்றி எழுதிக்கொண்டு இருக்கும்போதே, கண்ணன் என்னை ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று போன் செய்துவிட்டு வரும்படி எழுதியது நினைவுக்கு வர, நட்புக்கு நாமும் மரியாதை செய்தால் என்ன என்று திடீரென்று தோன்ற, அவரது செல்லுக்குத் தொடர்பு கொண்டேன். ‘வீட்டில்தான் இருக்கிறேன். அவசியம் வாருங்கள்’ என்றார். உடனே கிளம்பி, பெரம்பூர் போனேன்.

கண்ணன் என்கிற என் சங்கீதமங்கல நண்பர் விஜய்கிருஷ்ணனை நேரில் பார்த்தபோது, நான் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்தில் அவர் இல்லை. யாரோ ஒரு பெரியவரைப் பார்ப்பதுபோல் இருந்தது. தலை முழுக்க வழுக்கையாகி, இருந்த சொற்ப முடிகளும் வெளேரென்று நரைத்து, தொப்பையும் தொந்தியுமாய் சீனியர் ஹிந்தி நடிகர் போல இருந்தவரை ‘டேய்’ என்று ஒருமையில் அழைத்துப் பேசத் தயக்கமாக இருந்தது. அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கால மாற்றம் நண்பர்களின் அன்னியோன்னியத்தைச் சிதைத்திருந்தது.

நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் கண்ணன். அவரின் தந்தையார், கிராமத்தில் சொந்தமாகத் தறி வைத்திருந்தார். சாலை ஓரமாகச் சட்டங்கள் அமைத்து, நெசவு நூல்களை நீள நீளமாக விரித்து வைத்து, அதில் இழைகள் சீராக இருக்கிறதா, முண்டு முடிச்சு இருக்கிறதா என்று பார்த்து, கஞ்சி போடுவார்; காய வைப்பார். பின்பு நெசவு உருளையில் பக்குவமாகச் சுருட்டி எடுத்துப் போய் தறியில் பொருத்தி நெசவு செய்வார். பெரும்பாலும் லுங்கிகள்தான் அடிப்பார். அவர் மறைந்து 12 வருடம் ஆகிறதென்றார் கண்ணன்.

கண்ணனுக்கும் தறி அடிக்கத் தெரியும். ஒரு தடவை அவர் வீட்டுத் தறிக் குழியில் நான் இறங்கி, தறி அடித்துப் பார்த்திருக்கிறேன். நடுவே தொங்கும் குஞ்சலத்தை வாகாக ஒரு இழுப்பு இழுத்தால் இந்தப் பக்கத்திலிருந்து ராக்கெட் போன்ற ஒரு சிறு பொறி நூலை விட்டுக்கொண்டே அந்தப் பக்கத்திற்கு ஓடும். ஆனால், முழு விசை கொடுத்து எனக்கு அடிக்கத் தெரியாததால், ஓடிய உருளை பாதியிலேயே தேங்கி நின்றுவிட்டது. அதே போல், தையல் மெஷின் போல காலை மாற்றி கீழே உள்ள கட்டைகளை பெடலிங் செய்யவேண்டும். அப்போதுதான் நெடுக்கு நூல்கள் மேலும் கீழும் மாறி மாறி ஏறி இறங்க, ஊடாக இந்த உருளை ஓடி ஓடி நெய்யும். எனக்குப் பெடலிங்கும் சரியாக வரவில்லை. என்னவோ சிக்கல் செய்துவிட்டு எழுந்துவிட்டேன்.

இப்படிப் பழைய விஷயங்களை எல்லாம் ஞாபகப்படுத்தி இருவரும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அவர் மனைவி கோகுலவாணி தட்டை, சீடை போன்ற பலகாரங்களைக் கொண்டு வந்து உபசரித்தார். உறவுமுறையிலான திருமணம்தான் கண்ணனுடையது.

சங்கீதமங்கலம் கிராமத்தில், நோட்டக்காரர் என்று சொல்லக்கூடிய நிலச்சுவான்தார் ஒருவரின் விவசாய நிலத்தின் நடுவே பெரிய பாசனக் கிணறு ஒன்று உண்டு. தண்ணீர் ஸ்படிகம் மாதிரி, ஏதோ ஸ்டார் ஹோட்டல் ஸ்விம்மிங் பூல் மாதிரி இருக்கும். நாள் தவறாமல், எங்கள் தெரு நண்பர்களுடன் அங்கு சென்று குதித்துக் கும்மாளம் போடுவது என் வழக்கம். 20 அடி ஆழமாவது தண்ணீர் இருக்கும். கரையில் இருக்கிற பம்ப் செட் மீது ஏணி வழியாக ஏறி, அங்கிருந்து தலைகீழ் அம்பு போல் டைவடித்துக் கிணற்று நீரில் குதிப்பது எனக்குப் பிடித்தமான ஒரு விளையாட்டு. குறிப்பாக, மேலிருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை நீரில் விட்டெறிந்து, அது மெல்ல மெல்ல நீரில் மூழ்குவதைப் பார்த்துவிட்டுப் பின்னர் நீரில் டைவடித்து பாய்ந்து போய் அந்தக் காசைப் பிடித்துக்கொண்டு நீந்திக் கரையேற வேண்டும்.

கண்ணன்தான் எனக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அவர் இதில் கில்லாடி. ஒருமுறை கூடத் தவறாமல் காசைக் கைப்பற்றிவிடுவார்.

பிறகு, தண்ணீருக்குள்ளேயே ஒளிந்து விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவோம். கிணற்றுச் சுவரோரம் பொந்துகளில் தண்ணீர்ப் பாம்புகள் இருக்கும். கண்ணன் சும்மாயிராமல் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு போய் அவற்றைச் சீண்டி வெளியேற்றுவார். அது தண்ணீரிலும் தரைப் பாம்பு போலவே வளைந்து வளைந்துதான் செல்லும். எனக்குக் கை கால் உதறலெடுத்து சட்டென்று நீந்திக் கரையேறிவிடுவேன்.

கண்ணன் வேறு ஒரு தெருவில் இருந்ததால், அபூர்வமாகத்தான் எங்களின் ‘கேணி’ சந்திப்பு நிகழும். ஒரு முறை அவர் பம்பு செட்டிலிருந்து குதிக்கும்போது பேலன்ஸ் தவறிக் குதித்ததால், வயிற்றில் பலமாக அடிபட்டு, துடியாய்த் துடித்தார். சுற்றி இருந்த எங்களுக்கு பயமாய்ப் போய்விட்டது. அவரை அத்தனை பேருமாய்த் தூக்கிக்கொண்டு உள்ளூர் டாக்டரிடம் சென்றோம். அவர் வயிற்று வலிக்கு ஏதோ மருந்து கொடுத்தார். நல்லவேளையாய் எந்தப் பிரச்னையும் இல்லாமல் குணமாகிவிட்டார். கிணற்றில் லாகவம் தெரியாமல் குதித்தால் குடல் கிழியும் அபாயம் உண்டு.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டுக் கிளம்பியபோது மணி 8.

பழைய நண்பருடன் பேசிவிட்டு வந்தது ஓர் இனிய அனுபவம்தான். பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது ஒரு சந்தோஷமான விஷயம்தான். ஆனாலும், பழைய நட்பைப் புதுப்பித்துக்கொண்ட உணர்வு எனக்கு ஏற்படவில்லை. புதிய நட்பை உருவாக்கிக்கொண்ட மகிழ்ச்சி மட்டுமே உள்ளது!

1 comments:

butterfly Surya said...

பல வருடங்கள் கழித்து பழையவற்றை அசை போடும் அனுபவமே அலாதி தான். அதற்கு ஈடு இணையே இல்லை.

உங்கள் எழுத்துகளிலேயே மகிழ்ச்சி தெரிகிறது. போட்டோக்களெல்லாம் போட்டு அசத்துறீங்க.

பகிர்விற்கு நன்றி.