இனிய நண்பர் இயக்குநர் விஜய்ராஜ்!

ரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, விகடன் அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார் இயக்குநர் விஜய்ராஜ்.

விஜய்ராஜைப் பற்றி இங்கே பெருமையாகச் சொல்லியாகவேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. என் மனம் கவர்ந்த, என்னைப் போன்ற கோடானுகோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த பாட்டுத் தலைவன் டி.எம்.சௌந்தரராஜன் பற்றிய ஒரு மெகா டாக்குமெண்ட்டரி சீரியலை கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, கடுமையான போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கொஞ்சமும் தளர்ச்சியோ சோர்வோ அடையாமல், விடாமுயற்சியோடு ஒரு தவம் போல் எடுத்து வருகிறார் விஜய்ராஜ்.

என் இனிய நண்பரும் ஆன்மிகச் செம்மலுமான பி.என்.பரசுராமன், டி.எம்.எஸ். அவர்களின் இல்லத்தில் வைத்து நண்பர் விஜய்ராஜை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். விஜய்ராஜின் வயது அதிகபட்சம் 35-க்குள்தான் இருக்கும். இத்தனை இளம் வயதில் டி.எம்.எஸ். மீது இவருக்கு இத்தனை ஈடுபாடா என்கிற வியப்பும் மகிழ்ச்சியும்தான் அவர் மீது எனக்கு அதிக பிடிப்பை ஏற்படுத்திற்று. நானும் ஓர் டி.எம்.எஸ். வெறியன் என்கிற எண்ணம்தான் அவருக்கும் என் மீது ஆழ்ந்த நட்பை உருவாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் சந்தித்தபோதெல்லாம் டி.எம்.எஸ். குரல் வளத்தைத் தவிர, எங்களுக்குப் பேச வேறு விஷயமே இருக்காது. இருந்தாலும், பேசத் தோன்றாது.

‘இமயத்துடன்’ என்ற தலைப்பில் தான் எடுத்திருந்த டி.எம்.எஸ். பற்றிய, எடிட் செய்யப்படாத காட்சிகளைப் பார்க்க வருமாறு சென்ற வருடத்தில் ஒரு நாள் என்னை விஜய்ராஜ் அழைத்திருந்தார். போயிருந்தேன். இரவு 8 மணி முதல் நடு இரவு 2 மணி வரை, அவரும் சளைக்காமல் ஒவ்வொன்றாகப் போட்டுக் காண்பித்தார்; நானும் சோர்வுறாமல் அத்தனையும் பார்த்துக் களித்தேன். சோர்வுற்று இருப்பவனையும் சுறுசுறுப்பாக்கிடும் குரல் அல்லவா டி.எம்.எஸ்-ஸின் குரல்!

விஜய்ராஜ் எடுத்திருந்த காட்சிகளைப் பார்க்கப் பார்க்க, அவரின் கடுமையான உழைப்பு, தேடல், தான் மேற்கொண்டுள்ள அந்தக் காரியத்தில் அவருக்கு உள்ள ஆத்மார்த்தமான ஈடுபாடு அத்தனையும் துல்லியமாகப் புரிந்தது. பிரமித்துப் போனேன்.

அதன்பின், அந்த சீரியல் தொடர்பாக தனது அடுத்தடுத்த கட்ட முயற்சிகளையும் ஆர்வத்தோடு என்னிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வார் விஜய்ராஜ். பிரபல இந்திப் பாடகி லதா மங்கேஷ்கரின் சந்திப்புக்காக விரைவில் மும்பை செல்லவிருக்கிறார். அந்த பேட்டியும் வெற்றிகரமாக முடிந்தால் (நிச்சயம் முடித்துவிடுவார் விஜய்ராஜ்) கிட்டத்தட்ட இந்த ‘இமயத்துடன்’ டாகுமெண்ட்டரி பூர்த்தியானது மாதிரிதான். விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிடும்.

டி.எம்.எஸ். என்கிற மாபெரும் கலைஞனுக்கு உரிய மதிப்பையும், அவரின் கம்பீரக் குரலுக்கும் கலைத்திறமைக்கும் உரிய மரியாதையையும் கௌரவத்தையும் இங்கே தமிழகத்தில் போதிய அளவுக்கு அளித்திருக்கிறோமா என்றால், இல்லை என்பதே வருத்தமான பதிலாக இருக்கிறது. அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான்கு தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். 90 வயது முதியவரிலிருந்து 9 வயது சிறுவர் வரை அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் தனித்தனியாக, மனதில் ஆதங்கம் சுமந்துகொண்டு இருக்கிறார்கள்.

விஜய்ராஜ் மேற்கொண்டு இருக்கிற இந்தத் தவத்தின் விளைவாக டி.எம்.எஸ். மட்டுமல்ல; அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களும் ஆனந்தத்தில் திளைக்கப் போகிறார்கள். இது மாபெரும் காரியம்; இதைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.

சமீபத்தில் விஜய்ராஜ் என்னை வந்து சந்தித்தபோது, தான் தேடிக் கண்டுபிடித்துச் சேகரித்த டி.எம்.எஸ்ஸின் சில அபூர்வ பாடல்களையும் காட்சிகளையும் டிவிடி-யில் பதிந்துகொண்டு வந்து, நான் கேட்டும் பார்த்தும் மகிழ்வதற்காக எனக்குத் தந்தார். சன் டி.வி-யெல்லாம் வருவதற்கு முன்பு, சென்னைத் தொலைக்காட்சியில் ‘நள தமயந்தி’ என்றொரு சீரியலில் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். தவிர, பழைய தெலுங்கு நடிகர் பத்மனாபாவுக்கு அட்டகாசமான ஒரு தெலுங்குப் பாட்டு பாடியிருக்கிறார். அதே போல், ‘அன்னக்கிளி’ படத்துக்குச் சில வருடங்களுக்கு முன்பாகவே ‘தீபம்’ என்றொரு படத்துக்கு இளையராஜா இசையமைத்து, பின்னர் அந்தப் படம் வெளிவரவே இல்லை. (பாலாஜி தயாரிப்பில் பின்னர் வெளிவந்த சிவாஜி நடித்த ‘தீபம்’ வேறு!) அந்தப் படத்தில் கங்கை அமரன் எழுதிய ‘சித்தங்கள் தெளிவடைய’ என்ற பாடலை உருக்கமாகப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

இப்படி, தான் சேகரித்தவற்றையெல்லாம் எனக்கு அன்போடு கொண்டு வந்து தந்தார் விஜய்ராஜ். அவரின் இந்த முயற்சி, வரலாற்றில் அவரை நிலைநிறுத்தக்கூடிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.

விரைவில் அது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, தமிழ் நெஞ்சங்களை மகிழ்விப்பதோடு, நண்பர் விஜய்ராஜுக்கும் ஓர் உயர்ந்த இடத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என மனதார விரும்புகிறேன்.

வாழ்க விஜய்ராஜ்! வெல்க அவரது தவம்!

*****
அடுத்தடுத்துத் தடைகள் வந்துகொண்டே இருக்கிறதே என்று சோர்ந்து போகாதீர்கள்; நீங்கள் வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்!

5 comments:

butterfly Surya said...

விஜய்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். அருமையான பகிர்விற்கு நன்றி.

வி.ராஜேஷ் said...

அருமையான பதிவு. நானும் டி.எம்.எஸ்.ரசிகன்தான். இயக்குநர் விஜயராஜ் டி.எம்.எஸ். பற்றிய இந்த சீரியலை எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே ஜெயா டி.வி-க்காகத் தயாரித்து, அதில் ஒரு பகுதி ஒளிபரப்பும் ஆயிற்று என்று ஞாபகம். 'இமயத்துடன்' தொடர் கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்பாகும் நாளை நானும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

கிருபாநந்தினி said...

பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் படங்களில் நடித்திருப்பது தெரியும். அவர் ஒரு தொலைக்காட்சி சீரியலில் நடித்திருக்கிறார் என்பது புது நியூஸ்!

ungalrasigan.blogspot.com said...

* நன்றி பட்டர்ஃப்ளை!

* ராஜேஷ்! நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் சில பதிவுக் காட்சிகள் ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாயின. இப்போது ஏறத்தாழ 90 சதவிகிதம் வேலைகள் முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார் டைரக்டர் விஜய். விரைவில், இந்த மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த மாதம் 15 தேதிக்குள்ளாகவோ அது கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்பப்படும் என்றார். ஆவலோடு நானும் காத்திருக்கிறேன்.

* கிருபாநந்தினி! முடிந்தால், இதே பதிவில் ‘நள தமயந்தி’ ஸ்டில்லையும் பிறகு அப்லோட் செய்கிறேன். பாருங்கள்.

கே. பி. ஜனா... said...

சந்தோஷமான சேதி. டி.எம்.எஸ். இணையற்ற பாடகர். வித்தியாசமான பாடகரும் கூட. குரலைக் கேட்டே சொல்லி விடலாம் அந்தப் பாட்டை அவர் எம்.ஜி.ஆருக்காகப் பாடினாரா இல்லை சிவாஜிக்கா என்று. கம்பீரமும் இனிமையும் கலந்த குரல். மெல்ல மெல்ல அருகில் வந்து.. ('சாரதா') முத்து நகையே.. ('என் தம்பி') நினைத்த போது நீ வரவேண்டும்.. (பக்திப் பாடல்) எனக்குப் பிடித்தவற்றில் மூன்று. --கே.பி.ஜனா.