பன்றிக்கு நன்றி சொல்லி...

ன்னி வளர்த்தவன் பணக்காரன்; கோழி வளர்த்தவன் கோடீஸ்வரன்’ என்றொரு சொலவடை கிராமப்புறங்களில் உண்டு.

பன்றிக்கு நன்றி சொல்லிக் குன்றின் மேல் ஏறி நின்றால், வென்றிடலாம் குலசேகரனை. அவன் யார்?’ என்று இம்சை அரசன் படத்தில் வடிவேலு கேட்டு, வயிறெல்லாம் புண்ணாக்குவார்.

சேமிப்பைக் குறிக்கும் சின்னம் பன்றி. அதனால்தான் உண்டியலின் வடிவத்தைப் பன்றி உருவமாக அமைத்திருக்கிறார்கள்.

ஆனால், பன்றிகளுக்கு இருந்த இந்த நல்ல பெயரெல்லாம் சமீபத்திய பன்றிக் காய்ச்சலால் பறிபோய்விட்டது. உண்மையில், பன்றிதான் இந்தக் காய்ச்சலுக்குக் காரணமா என்றே எனக்குச் சந்தேகமாக உள்ளது. பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம் என்பது போல், எங்கோ பன்றிப் பண்ணை ஒன்றில் வேலை செய்தவர்களிடமிருந்து இந்தக் காய்ச்சல் புறப்பட்டதால், பழி பன்றி தலையில் விழுந்ததோ என்று நினைக்கிறேன்.

Swine என்ற சொல்லுக்கு ‘விரும்பத்தகாத’, ‘வெறுக்கத்தக்க’ என்ற பொருள்களும்கூட உண்டு. விரும்பத்தகாத அல்லது அடையாளம் காணப்படாத ஒரு காய்ச்சல் என்ற அர்த்தத்தில் Swine Fever என்று குறிப்பிடப்போக, அது Swine என்பதன் மற்றொரு அர்த்தமான பன்றியைக் குறித்ததாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

பன்றிக் காய்ச்சல் ஒன்றும் புதுசு இல்லை. முதன்முதலில் 1918-ம் ஆண்டு இந்த வகையான காய்ச்சல் ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள். 1968-ம் ஆண்டு ஹாங்காங்கில் இந்தக் காய்ச்சல் பரவி, பின்னர் உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள். இதெல்லாம் வலைத் தகவல்கள்.

நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே, ஒவ்வொரு சீஸனுக்கும் ஒரு நோய் விசுவரூபமெடுத்து உயிர்களைப் பலி வாங்கி வந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் ஆடுகளிடையே நீல நாக்கு நோய் வெகுவாகப் பரவியது. மாடுகளிடையே கோமாரி நோய். சில ஆண்டுகளுக்கு முன் ‘ஆந்த்ராக்ஸ்’ நோய் மாடுகளால் பரவியது தெரியும். யானைகள்கூடப் பாதிக்கப்பட்டதாகக் கேள்வி. சூலை நோய் ஒரு சமயம் வாட்டியெடுத்தது. எலிகளால் பிளேக் நோய் பரவியது. கொசுக்களால் டெங்கு ஜுரம், சிக்குன் குனியா என்ற நோய்கள். அப்புறம் பறவைக் காய்ச்சல் வந்தது. இருக்கிற அப்பாவிக் கோழிகளையெல்லாம் பிடித்துக் கொன்று குவித்தார்கள். இப்போது பன்றிகள்!

‘ஒளிவிளக்கு’ படத்தில், ஊருக்குள் விஷ ஜுரம் பரவி, ஊரையே காலி செய்துகொண்டு போவதாகக் காட்சி வரும். நிஜத்திலேயே அப்படி நடந்து நான் பார்த்திருக்கிறேன். காலரா பரவிப் பலர் மாண்டதை என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். பெரியம்மை நோயும் வெகு காலம் தீர்க்கப்படாத ஒரு நோயாகவே இருந்து மனிதனுக்குச் சவால் விட்டுக்கொண்டு இருந்தது. அதற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து, பின்னர் அந்த நோயை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டு, அந்தச் சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக ‘பெரியம்மையா? கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ரூ.1,000 அன்பளிப்பு!’ என்று ஸ்டென்சில்-கட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதையும் பார்த்திருக்கிறேன்.

இவையெல்லாம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலி வாங்கும் நோய்கள் என்பதால் இவற்றைக் கொள்ளை நோய் என்றார்கள். அதே போல், இப்போது இந்தப் பன்றிக் காய்ச்சலையும் கொள்ளை நோய் என்று அறிவித்திருக்கிறார்கள்.

எனக்கென்னவோ, இம்மாதிரி கொள்ளை நோய்கள் பரவ பறவைகளோ, மிருகங்களோ, வேறு உயிரினங்களோ காரணமாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது. மனிதன்தான் காரணம். அவன் செய்கிற அட்டூழியங்கள்தான் இவற்றுக்கெல்லாம் ஆதி காரணம். இயற்கையை அவன் சீண்டிப் பார்க்கப் பார்க்க, அதுவும் இவனைச் சீண்டுகிறது.

நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் பூகம்ப அதிர்வுகள் தென்பட்டதாகப் பலர் சொன்னார்கள். மனிதனின் ஒழுக்கமின்மை, பொறுப்பற்ற செயல்களால் எரிச்சலுறும் இயற்கை பதிலுக்குத் தன் சீற்றத்தைச் சுனாமியாக, பூகம்பமாக, புயலாக வெளிப்படுத்துகிறது. இம்மாதிரி கொள்ளை நோய்கள் உண்டாகவும் இயற்கையின் எரிச்சல்தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

மனிதன் ஒவ்வொன்றுக்கும் மருந்தும் தடுப்பூசியும் கண்டுபிடித்து, ‘ஆகா, ஒழித்துவிட்டேன், வென்றுவிட்டேன்’ என்று மமதையோடு குதிக்கக் குதிக்க, இயற்கையும் வேறு ஒரு ரூபத்தில் குடைச்சல் கொடுத்து, ‘இப்ப என்ன பண்ணுவே? இப்ப என்ன பண்ணுவே?’ என்று நையாண்டி செய்கிறது; ‘நாயகன்’ கமல் சொல்வதுபோல், ‘முதல்ல அவனை நிறுத்தச் சொல், நான் நிறுத்தறேன்’ என்கிறது.

நிறுத்துவானா மனிதன்?

*****
காற்று கெட்டிருக்கிறதா? அது வளர்ந்த நாடு!
தண்ணீர் கெட்டிருக்கிறதா? அது வளரும் நாடு!
பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க பெரியோர்களே!...>

3 comments:

butterfly Surya said...

ரவிசார், இவ்வளவு நேரம் இதையே செய்திகளை தான் என் தந்தையும் மிகவும் வருத்தப்பட்டு கூறி கொண்டிருந்தார்.

வந்து பார்த்தால் சொல்லி வைத்தது போல் நீங்களும் இதையே எழுதியிருக்கிறீர்கள்.

இன்னும் திருப்பதி கோவிலில் சில அசம்பாவிதங்கள் நடந்தாதகவும் அதனால் அதீத விளைவுகள் ஏற்பட போவதாகவும் சில தெலுங்கு பத்திரிக்கைகள் சில வாரங்கள் முன்பு எழுதியதையும் சொன்னார்.

அந்த ஏழுமலையான் தான் காப்பாற்ற வேணும்..

கிருபாநந்தினி said...

ஆடுகளிடையே நீல நாக்கு நோய் வந்ததாக எழுதியுள்ளீர்கள். மாடுகளிடையே கோமாரி வந்ததாகக் குறிப்பிட்டுளீர்கள். இதற்கெல்லாம்கூட மனிதன்தான் காரணமா?

ungalrasigan.blogspot.com said...

விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியாரே!
*****
இதற்குப் பதில் ஆமாவா என் இருக்கக்கூடாது? பாவம் அதுங்க தனியா இருந்தவரைக்கும் அதுங்களை எந்த நோயும் தாக்கலே! மனுஷனோட சேர்ந்ததுக்கு அப்புறம்தான் அதுங்களுக்கும் புதுசு புதுசான வியாதிகள் தொத்திக்கிச்சு! காட்டுல இருக்கிற எந்த சிங்கம், புலி, சிறுத்தைக்காவது வியாதி வந்திருக்கா?