கல்யாண்ஜி வீட்டுக் கல்யாணம்!

சைக்களில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்

நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை!

***

தினசரி வழக்கமாகிவிட்டது

தபால்பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு

வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே

எந்தக் கடிதமும் இல்லாத ஏமாற்றம்.

இன்று எப்படியோ என்று பார்க்கையில்

அசைவற்று இருந்தது

ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்

எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

- கல்யாண்ஜி

***
மூக அக்கறையும், இயற்கை மீதான ஈரக் கசிவும், மனித உறவுகளில் மாறாத பிரியமும் கொண்டு நம் மனத்தை நெகிழ்த்திவிடும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் என்கிற திரு.கல்யாணசுந்தரம் அவர்கள்.

அவரது மகன் நடராஜ சுப்ரமணியனின் திருமண வரவேற்பு விழா இன்று மாலை ஆறரை மணியளவில், அசோக் நகர் உதயம் கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்தது. அன்புடன் அழைப்பு அனுப்பியிருந்தார் திரு.வண்ணதாசன். போயிருந்தேன்.

திரு. வண்ணதாசன் எழுத்துக்கள் கவித்துமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, ஓராண்டுக்கு முன் வரை அதிகம் அவரது எழுத்துக்களை வாசித்ததில்லை. எப்போதேனும் அவரது கவிதை வரிகளைச் சிலாகித்து சுஜாதா தமது ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் குறிப்பிடுவார்.

ஓராண்டுக்கு முன்பு, திரு. வண்ணதாசன் ஆனந்த விகடனில் ‘அகம் புறம்’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவற்றைப் படிக்கப் படிக்க, அந்த எழுத்தின் வசீகரத்தில் ஆழ்ந்தேன். இத்தனை நாட்களாக இவரது எழுத்துக்களைப் படிக்காமல் விட்டிருக்கிறேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். சக மனிதர்கள் மீதான அக்கறையை, அன்பைப் போதித்த கட்டுரைகள் அவை. படிக்கப் படிக்கக் கண்கள் கசிந்தன; இதயம் இளகியது.

அவருக்கு உடனே ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். அவரது எழுத்துக்களை இதற்கு முன் வாசித்ததில்லை என்பதை நேர்மையாகச் சொல்லி வருத்தப்பட்டு, குறிப்பிட்ட கட்டுரை ஒன்றைப் பற்றிய என் அனுபவத்தையும் எழுதியிருந்தேன். உடனடியாக பதில் எழுதியிருந்தார். அவர் சாதாரணமாக எழுதுகிற கடிதம் கூட மனதை இறகால் வருடுகிற மாதிரியான வரிகளோடுதான் இருந்தது.

திருமண வரவேற்புக்குச் சென்றதன் முக்கிய நோக்கமே அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்கிற பெருவிருப்பம்தான். கையோடு எடுத்துப் போயிருந்த என் மூன்று புத்தகங்களையும் அவரிடம் மகிழ்ச்சியோடு தந்துவிட்டு, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அத்தனைப் பரபரப்பிலும், கூட்ட நெருக்கடியிலும்கூட அவர் தன் அருகில் இருந்தவரிடம் என்னைச் சுட்டிக் காட்டி, ‘இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் பாருங்க, அருமையான கடிதம்!’ என்று சிலாகித்து, ஒரு விநாடி நேரத்துக்கு என் கால்கள் தரையில் பாவாமல் செய்துவிட்டார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் சிங்கம் போல் வந்தார். மாலன், ஞாநி என எண்ணற்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்ட விழா அது.

ஞாநியுடன் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். நடுவில் இரண்டு மாத காலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகச் சொன்னார். ‘இண்டஸ்டைன் டி.பி’ என்று கொஞ்சம் லேட்டாகக் கண்டறிந்து, மருந்து சாப்பிட்டு வருவதாகவும், இன்னும் ஆறு மாத காலத்துக்குத் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்றும் சொன்னார். ஏற்கெனவே ஊர் பூரா சிக்கன்குனியா வந்து வாட்டியபோது, இவரையும் சில காலம் வாட்டியெடுத்தது. ஷுகர் உண்டு. அதற்கும் மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அத்தனைக்கும் அசராத ஆத்மா. வில் பவர் அதிகம் உள்ள எழுத்தாளர். அவருடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தால், கொஞ்ச நேரத்தில் நமக்கும் தோள்கள் தினவெடுப்பது போலிருக்கும்.

கே.கே.நகரில் உள்ள தன் வீட்டிலேயே பிரதி மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ‘கேணி’ என்ற தலைப்பில் இலக்கியக் கூட்டம் ஒன்றை நடத்தி வருவதாகச் சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டு, தாங்கள் ரசித்த சிறுகதைகள் பற்றிப் பேசுவதாகச் சொன்னார். வருகிற ஞாயிற்றுக்கிழமை ‘கேணி’ கூட்டத்துக்கு அவசியம் வந்துவிடு என்று எனக்கு அன்பு அழைப்பு விடுத்தார்.

திருமண வரவேற்பில், கரோகி முறையில் பாடல்களைப் பாடினார்கள். அதாவது, ஏற்கெனவே பதிவான ஒரிஜினல் மியூஸிக் டிராக்கில் பாடகர்களின் குரலை மட்டும் ம்யூட் செய்துவிட்டு, இந்த மேடைப் பாடகர்கள் குரல் கொடுத்துப் பாடுகிற முறை. அருமையாகவே பாடினார்கள்.

மொத்தத்தில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ப்ளஸ் இலக்கியக் கூட்டம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக அமைந்தது திரு. வண்ணதாசனின் மகனின் திருமண வரவேற்பு விழா!

*****
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஓர் ஆசிரியர்!

1 comments:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

உங்கள் ஒவ்வொரு பதிவின் கடைசியில் உள்ள வாக்கியகங்களே எனக்கு ஒரு ஆசிரியர் போலத்தான் உள்ளது.