“மாமா... மாமா... அடிக்கிறாங்க மாமா! ஐயோ..! காப்பாத்துங்க, காப்பாத்துங்க..!”
யார், என்ன என்று விசாரிப்பதற்குள்ளாக லைன் கட்டானது. மீண்டும் சிறிது நேரத்தில் போன். பதற்றத்துடன் எடுத்தேன்.
“நான்தான் முரளி பேசறேன். அங்கே ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற என் பையனை சீனியர் பசங்க காட்டுத்தனமா அடிக்கிறாங்களாம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. எதுனா பண்ணு ரவி!” என்றார் என் தங்கையின் கணவர், கலவரக் குரலில்.
மாமண்டூரில் உள்ள விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் காலேஜில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான் என் தங்கை மகன். முதலில் அலறியது அவன்தான் என்று புரிந்தது. உடனடியாக என்ன செய்வது என்று எனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.அசோகனுக்கு அந்த ராத்திரியில் போன் போட்டு எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். தொடர்ந்து பலருக்கும் போன் மேல் போன் போட்டு, நிருபர் செந்தில் உதவியோடு காஞ்சிபுரம் பீட் போலீஸைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் உடனே பார்க்கிறேன் என்றார்கள்.
ஆனால், சிறிது நேரத்தில் அவர்கள் போன் செய்து, “சார்! அங்கே போய் விசாரிச்சோம். அப்படியெல்லாம் ஒண்ணும் கலாட்டா நடக்கலைன்னு அந்த காலேஜ் வார்டன் சொல்றாரே சார்!” என்றார். “உள்ளே போய்ப் பார்த்தீர்களா? நான் ஜூனியர் விகடன் சீஃப் எடிட்டர் பேசறேன்” என்றேன். “அப்படியெல்லாம் போக முடியாது சார்! விவகாரம் வேற மாதிரி ஆயிடும். பையனோட அப்பாவை ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்லுங்க” என்றார்.
மீண்டும் என் தங்கை கணவருக்கு போன் செய்து, பீட் போலீஸ் எண்ணைக் கொடுத்துப் பேசும்படி சொன்னேன்.
இதற்கிடையில் என் தங்கை பையனை செல்லில் தொடர்பு கொண்டேன். “இப்ப ஓரளவுக்கு அமைதியா இருக்கு மாமா! எல்லாரும் போயிட்டாங்க. பசங்களை ரூம்ல வெச்சுப் பூட்டிட்டுப் போயிட்டாங்க. இப்ப எங்க ரூம்ல நான் மட்டும்தான் தனியா இருக்கேன்” என்றான். “நான் வரட்டுமா?” என்று கேட்டேன். “வேண்டாம் மாமா! ஹாஸ்டல் இப்ப அமைதியாயிடுச்சு! காலையில முதல் பஸ்ஸுக்கு அப்பா வரேன்னிருக்காரு!” என்றான்.
அதன்பின் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. நாலு மணி வரையில் விழித்திருந்துவிட்டு, எப்போது தூங்கினேன் என்று ஞாபகம் இல்லை.
காலையில் ஆறரை மணிக்கு எழுந்ததும், மீண்டும் தங்கை மகனை செல்லில் தொடர்பு கொண்டேன். “அப்புறம் என்னப்பா ஆச்சு? தூங்கினியா?” என்றேன்.
“இல்லை மாமா! அந்த முரட்டுப் பசங்க விடியற்காலைல மூணரை மணிக்கு மறுபடியும் வந்து, வெளிக் கதவு பூட்டை உடைச்சுட்டு உள்ளே நுழைஞ்சு, தூங்கிட்டிருந்த என்னை எட்டி உதைச்சு எழுப்பினாங்க. பத்துப் பதினைஞ்சு பேரு சேர்ந்து என்னை அடிச்சு, உதைச்சாங்க. நாலரை மணி வரைக்கும் உதைச்சுட்டுப் போயிருக்காங்க. உடம்பெல்லாம் வலிக்குது மாமா!” என்று அழுதான்.
எனக்குக் கவலையாக இருந்தது. அவனது அப்பாவுக்கு செல்லில் தொடர்பு கொண்டேன். “பஸ்ஸில் வந்துகொண்டு இருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் காலேஜ் வாசலில் இறங்கிவிடுவேன். போய்ப் பார்த்துவிட்டு போன் செய்கிறேன்” என்றார்.
என்னதான் நடக்கிறது காலேஜில்?
ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சீனியர் (மூன்றாமாண்டு) மாணவர்கள் சிலருக்கு (சுமார் 30 பேர்) கிட்டத்தட்ட அடிமை போல எல்லாம் செய்து கொடுக்க வேண்டியது இரண்டாம் ஆண்டு, முதலாண்டு மாணவர்கள் கடமையாம். அவர்கள் சிகரெட் கேட்டால், தங்கள் காசில் ஓடிப் போய் வாங்கி வந்து கொடுக்க வேண்டுமாம்; செல்போன் ரீசார்ஜ் செய்து தரச் சொன்னால், தங்கள் செலவில் செய்து தரவேண்டுமாம்.
சில நாட்களுக்கு முன், தங்களுக்கு ட்ரிங்க் பார்ட்டி வைக்கவேண்டுமென்று சொல்லி, ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை தலா ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டார்களாம். ஒரு சிலர் கொடுத்தும் இருக்கிறார்கள். என் தங்கை மகன் உள்பட மற்றவர்கள் அதற்கு மறுத்து, கல்லூரி முதல்வரிடம் புகார் செய்திருக்கிறார்கள். அவர் “ஆகட்டும். நடவடிக்கை எடுக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த ரவுடிப் பிள்ளைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புகார் கொடுத்த கோபத்தில்தான் இப்படி ஹாஸ்டல் அறைகளுக்குள் புகுந்து காட்டடி அடித்திருக்கிறார்கள் அந்த நாய்கள். இருபது முப்பது பேராகத் திரண்டு வந்து ஒவ்வொரு ரூமிலும் புகுந்து, அங்கு தங்கியிருக்கும் ஐந்தாரு பேரை அடித்து உதைக்க வேண்டியது. இப்படியே ஒவ்வொரு அறையாகச் சென்று விடிய விடிய அராஜகம் செய்திருக்கிறார்கள் அந்த ராஸ்கல்கள்.
இந்தப் பிரச்னை உச்ச கட்டத்துக்குச் சென்றதுதான் இப்போதே தவிர, இது ரவுடி ராஜ்ஜியம் பல மாதங்களாகவே நடந்து வருகிறதாம். அப்போதெல்லாம் யாராவது ஓரிரு பையன்கள் மட்டும் அந்த ரவுடிக் கும்பலிடம் மாட்டி உதைபடுவானாம். ஒரு பையனை பேண்ட்டைக் கழற்றிவிட்டு காலேஜ் வளாகத்தில் துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார்களாம். புகார் சொன்னால், பிரின்ஸிபாலும் அவர்கள் மீது எந்த ஆக்ஷனும் எடுக்கப்போவதென்னவோ இல்லை; தவிர, நமக்குப் படிப்புக் கெடுவதோடு, புகார் தந்த ஆத்திரத்தில் மறுபடியும் வந்து உதைப்பார்கள்; எனவே, இத்தோடு அவர்கள் வெறி அடங்கட்டும்; இனி, நம் வழியைப் பார்ப்போம் என்று பல பிள்ளைகள் பெற்றோரிடம்கூடச் சொல்லாமல் இந்த விஷயத்தை மறைத்திருக்கிறார்கள்.
போன மாதம் ஒரு பையன் இதே மாதிரி சீனியர் பிள்ளைகளின் சித்ரவதைக்குள்ளாகி, தன் தந்தையிடம் அதை மறைக்காமல் சொல்லிவிட்டான். அவர் கோபத்துடன் வந்து கல்லூரி முதல்வரிடம் புகார் செய்திருக்கிறார். அவர் அப்போதும் கூலாக, “பிள்ளைகளுக்குள்ள அடிதடி சண்டை வர்றது சகஜம்தாங்க. இதைப் பெரிசுபடுத்தாதீங்க. விடுங்க, இனிமே இதுபோல நடக்காம நான் பார்த்துக்கறேன்” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
“இப்படித்தான் மாமா அவர் ஒவ்வொரு தடவையும் சொல்றார். ஆனா, அந்தப் பசங்களை எதுவும் பண்ண மாட்டார். சும்மா வார்ன் பண்ணி அனுப்பிடுவார். அவங்க மறுபடியும் வந்து ‘புகாராடா கொடுக்கறீங்க’ன்னு உதைச்சுட்டுப் போவாங்க” என்றான் என் தங்கை மகன்.
இந்த முறை, என் தங்கையின் கணவர் உள்பட அடிபட்ட பிள்ளைகளின் தகப்பனார்கள் யாவரும் வெளியூரிலிருந்து திரண்டு வந்து, கல்லூரி முதல்வரைச் சந்தித்து, மேற்படி ரவுடிப் பிள்ளைகளை, குறிப்பாக ஒரு எட்டுப் பேரை கல்லூரியை விட்டே நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவரும் ‘ஆகட்டும், செய்கிறேன்’ என்று சமாதானப்படுத்தினாராம். பின்னர், அப்பாக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை ஹாஸ்டலில் விடாமல் அவரவர் ஊருக்கு அழைத்துப் போய்விட்டார்கள்.
இன்றைக்கு செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக ஊரிலிருந்து வந்திருந்தான் என் தங்கை மகன். “மாமா! நான் சொன்னேன் பார்த்தீங்களா, பிரின்ஸிபால் அந்தப் பசங்களை எதுவும் பண்ண மாட்டார்னு. அதே போல ஆயிடுச்சு! அந்த எட்டுப் பேரையும் வெறுமே ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் பண்ணியிருக்காரு. அவ்வளவுதான். அவங்களுக்கு அது தண்டனையே இல்லே. லீவு விட்ட மாதிரி ஜாலியா வெளியே போய் சுத்திட்டு வந்து மறுபடியும் எங்களைப் புடிச்சு அடிக்கப் போறாங்க. அதான், நடக்கப் போகுது” என்றான்.
அன்றைக்கு ராத்திரி அந்த அடி, உதை அமர்க்களம் நடந்தது எதுவும் தனக்குத் தெரியாது; தனக்குக் காதில் விழவில்லை என்று சாதிக்கிறார் காலேஜ் வார்டன். பீட் போலீஸ் வந்து விசாரித்துவிட்டுப் போன பிறகுதான் கல்லூரித் தரப்பிலிருந்து சிலர் வந்து சமாதானப்படுத்தி அந்த ரவுடிப் பிள்ளைகளை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். அடிபட்ட மாணவர்களை அறைகளுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, ‘இனி ஒன்றும் பயமில்லை’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தப் பொறுக்கிப் பயலுகள் மீண்டும் விடியற்காலை மூணரை மணிக்குத் திரும்ப வந்து, பூட்டை உடைக்கிற சத்தம், அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் வரை கேட்டு, அங்கிருந்த பெண்கள் விழித்துக்கொண்டு தனக்குத் தெரிந்தவர்களுக்கு இது பற்றித் தகவல் சொல்லி விசாரித்திருக்கிறார்கள். ஆனால், தான் அசந்து தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், தன் காதில் எந்தச் சத்தமும் விழவில்லை என்றும் சாதிக்கிறார் காலேஜ் வார்டன்.
முன்பெல்லாம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், குடும்பத்தில் பெரியவர்கள் ஆகியோர்தான் பகை உணர்ச்சியை மனதில் கொண்டு அடிதடிகளில் ஈடுபடுவார்கள். படிக்க வேண்டிய வயதில், நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள் என்று நாமெல்லாம் கனவு கண்டுகொண்டு இருக்கும் கல்லூரி மாணவர்கள் இப்படி அடியாட்களாக மாறி மாமூல் விசாரிப்பதையும், அடிதடியில் இறங்குவதையும் என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியவில்லை.
ஊருக்கெல்லாம் நாட்டாமை சொல்லும் விஜயகாந்த் முதலில் தன் கல்லூரியை ஒழுங்காக நடத்திக் காட்டட்டும்!
***
எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனமும் இல்லை; அலட்சியமாக இருப்பது தைரியமும் இல்லை!
எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனமும் இல்லை; அலட்சியமாக இருப்பது தைரியமும் இல்லை!
11 comments:
vijayakant idarkku
enna badil solla pokirar
balu vellore
ஜூனியர் விகடனில் சற்று முன்புதான் இது பற்றிப் படித்தேன். தங்கள் கட்டுரை இன்னும் விரிவாக இருந்தது. தவறு செய்த மாணவர்களை மன்னிக்காமல் தண்டனை அளிக்க வேண்டும். இல்லையென்றால், ‘தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு’ என்கிற விஜயகாந்தின் பஞ்ச் டயலாக் கேலிக்குரியதாகத்தான் இருக்கும்.
மோசமான செய்தி. இப்போதெல்லாம் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளாலும், பெரும் புள்ளிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களும் இப்படித்தான் அடாவடித் தனங்களை செய்து வருகின்றனர். எங்கே போய்க் கொண்டு இருக்கின்றது இந்த இளைய சமுதாயம்?
/நான் ஜூனியர் விகடன் சீஃப் எடிட்டர் பேசறேன்” என்றேன். /
இப்படிப் பத்திரிக்கைகளுக்குக் கூட அஞ்சாதவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்க மாட்டார்களே....இதை ஜூனியர் விகடனில் எழுதினீர்களா?.
அடடா..என்ன ஒரு அராஜகம்?
இந்த செய்தி உண்மையெனில்...'ரமணா' விஜயகாந்த் சினிமாடிக் ஹீரோ மட்டுமே...
நீங்கள் உங்கள் பத்திரிகை தொடர்பை வைத்து ஏதாவது செய்யலாமே ?
அடேங்கப்பா..மனதுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது...படிக்கும் போதே..வன்முறையும்..போக்கிரித் தனமும் நெருங்கி வந்து கொண்டே இருக்கிறது. நமக்கு.. நம்முள் ஒருவருக்கு என்றவுடன், வாழ்கின்ற வாழ்க்கையே, கொஞ்சம் பயமாய்..
பேப்பரில் படிக்கும் நிகழ்வுகள் என்பது ரொம்ப தூரத்தில் இல்லை.. நமக்கு வெகு அருகிலேயே என்று எண்ணும் போது, படபடப்பாய் தான் இருக்கிறது ..
எங்கேயோ மேகசீனில்... நியூஸ் பேப்பரில் படித்தது..இவ்வளவு அருகில்
வந்து விட்டதே!
முழுக்க முழுக்க கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கல்வியை வியாபாரமாக்கியவர்களிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது...
குறிப்பிட்ட மாதிரி வி.காந்த் கல்லூரியை முதலில் நேர்மைக்கு கொண்டு வரட்டும்...
அச்சச்சோ! உங்க தங்கச்சி பையன் இப்ப எப்படி இருக்குறாரு? மேற்கொண்டு பிரச்னை ஒண்ணும் இல்லியே?
Post a Comment