சாதனை மனிதர் மனோஹர் தேவதாஸ்!

‘ஞாநி’யின் கேணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல மாதங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணம். இந்த மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்பவர் ஓவியர் மனோஹர் தேவதாஸ் என்றறிந்ததும், இம்முறை எப்படியாவது கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்குக் காரணம், மனோஹர் தேவதாஸ் வெறுமே ஓர் ஓவியர் என்பது மட்டுமல்ல; அதற்கும் பின்னால் இருக்கிற அவரது தன்னம்பிக்கை, மன உறுதி, மனித நேயம் மற்றும் அன்றில் பறவைகள் போன்ற ஆத்மார்த்த தாம்பத்திய வாழ்க்கை.

விகடன் பொக்கிஷம் பகுதி தயாரிப்புக்காக அந்தக் கால விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, இறையருள் ஓவியர் சில்பியின் கோட்டுச் சித்திரங்களைப் பார்த்துப் பிரமித்தேன். அதற்கும் வெகு காலம் முன்பே சில்பி பற்றியும், அவரது தெய்வீக ஓவியங்கள் பற்றியும் எனக்குத் தெரியும் என்றாலும், எனக்குக் காணக் கிடைத்தது அவருடைய ஒரு சில ஓவியங்களே! ஆனால், பழைய விகடன் இதழ்களைப் புரட்டப் புரட்ட, ‘தென்னாட்டுத் திருச்செல்வங்கள்’ என்னும் தொடருக்காக அவர் ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே உள்ள கோயில் கோபுரங்களையும், கடவுளர் சிலைகளையும் கோட்டுச் சித்திரங்களாக வடித்திருந்ததைப் பார்க்கப் பார்க்க, ‘இந்த அளவுக்கு நுணுக்கமாக ஒருவரால் வரைய முடியுமா!’ என்று பிரமிப்பாக இருந்தது. சக்தி விகடன் இதழுக்குப் பொறுப்பேற்றதும், சில்பியின் தெய்வீக ஓவியங்களை மீண்டும் தொடராக இதில் வெளியிடத் தொடங்கினேன். வாசகர்களிடம் அதற்கு அமோக வரவேற்பு!

‘என்ன... மனோஹர் தேவதாஸ் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டுச் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு ஓவியர் பற்றிச் சொல்லிக்கொண்டு போகிறீர்களே!’ என்று நினைக்கலாம். விஷயத்திற்கு வருகிறேன்.

ஓவியர் மனோஹர் தேவதாஸைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன். ஓவியர் சில்பியின் நுணுக்கமான கோட்டுச் சித்திரங்கள் போலவே மிக அற்புதமாக வரையக்கூடியவர் அவர் என்பதை அறிந்தேன். சில்பி தெய்வீக உருவங்களை அதிகம் வரைந்தார் என்றால், மனோஹர் தேவதாஸ் தான் வளர்ந்த மதுரை நகரை, அதன் தெருக்களை, வீடுகளின் அழகை, மீனாட்சியம்மன் ஆலயத்தை என ஒவ்வொன்றையும் மிக அற்புதமாக வரைந்திருக்கிறார்.

அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு, ‘அட!’ என்று வியந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு விஷயம் ‘அம்மாடி!’ என்று அவர் படைப்புகளைப் பற்றி மிக மிக ஆச்சரியப்பட வைத்துவிட்டது. பார்வைக் குறைபாடு உள்ளவர் அவர். அவரது இரு கண்களில் ஒன்றில் முழுப் பார்வையும் பறிபோய்விட்டது; மற்றொரு கண் மூலம் அவர் அதிக பட்சம் ஒரு ரூபாய் அளவிலான பகுதியையே பார்க்க முடியும். அதாவது, ஒரு முழு வெள்ளைத்தாளைக்கூட, ஏ4 ஷீட் என்று சொல்கிறோமோ, அதைக்கூட அவரால் முழுதாகப் பார்க்க முடியாது. பார்வையை வெள்ளைத் தாளில் பதித்து, ஸ்கேன் செய்வது போல் நகர்த்திக்கொண்டே வந்தால்தான், அந்தத் தாளில் எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று தெரியும். அதில் ஏதேனும் ஒரு படம் வரையப்பட்டு இருந்தால், அதை அவரால் முழுதாகப் பார்த்து ரசிக்க முடியாது. இன்ச் பை இன்ச்சாகத்தான் பார்த்து, ‘ஓஹோ! இந்தப் படம் இப்படி இருக்கிறதா!’ என்று மனசுக்குள் அதற்கு முழுதாக ஒரு வடிவம் கொடுத்துக் கொள்ள முடியும்.

அந்தச் சாதனையாளரை நேரில் பார்க்க வேண்டும் என்னும் பெருவிருப்பம் காரணமாக, நேற்றைய ஞாயிறு எனக்கு இருந்த அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ப்ளஸ் ஒன் படிக்கும் என் மகனையும் அழைத்துக் கொண்டு போனேன். தம்பதி சமேதராக இருக்கும் அவருடைய அற்புதமான புகைப்படங்கள் இரண்டை ஏ3 சைஸில் கலர் பிரிண்ட் அவுட் எடுத்து, லேமினேட் செய்து, என் அன்புப் பரிசாக அவரிடம் கொடுத்தேன். அந்த மகா கலைஞனுக்கு ஏதோ என்னாலான எளிய காணிக்கை.

எங்களிடையே மிக இயல்பாக உரையாற்றினார் மனோஹர் தேவதாஸ். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருந்தபோதிலும், அதற்கான் அறிகுறிகள் இன்றி, மிக நகைச்சுவையோடு அவர் பேசிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அந்தக் காலத்தில் தன்னுடைய தோற்றம், மனைவி மஹிமாவை முதன்முதலில் சந்தித்தது, அவளை நேசித்தது, அவள் மனத்தில் இடம் பிடிப்பதற்காகத் தான் செய்த திருவிளையாடல்கள், அவளுக்காகவே வரைந்த ஓவியங்கள், திருமண வாழ்க்கை, இவருக்காக மஹிமா செய்த தியாகங்கள், ஆத்மார்த்த அன்பு என ஒவ்வொன்றையும் மெலிதான நகைச்சுவை இழையோட சுவாரஸ்யமாக வர்ணித்துக்கொண்டே வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்னால் தூக்கத்திலேயே மஹிமாவின் உயிர் பிரிந்ததைச் சொல்லும்போது, கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் மனசு பாரமாகிப் போனது. அவர் மனைவி இறந்துவிட்டார் என்பது இந்தக் கூட்டத்தில் இவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனவே, திடுக்கிட்டுப் போனேன்.

அவருடைய படங்களை லேப்-டாப்பில் பதிந்துகொண்டு வந்து, பெரிய திரையில் அவற்றை ஒளியிட்டுக் காட்டி, அதற்குப் பொருத்தமாக அவர் தனது வாழ்க்கையைத் தொடர்ந்து விவரித்துச் சொன்ன விதம் ரசனையாக இருந்தது. திருப்பரங்குன்றம் கோயில், பின்னணியில் மலை, புகைவிட்டுக்கொண்டு செல்லும் ரயில், தோப்புகள் என அவர் வரைந்திருந்த கோட்டுச் சித்திரத்தைப் பெரிய திரையில் பார்த்தபோது, ஏதோ சினிமாக் காட்சியைக் காண்கிற மாதிரி மிகத் தத்ரூபமாக இருந்தது.

உரை முடிந்து கேள்வி நேரத்தில், “எத்தனையோ இழப்புகளைக்கூடத் தாங்கிவிடலாம். ஆனால், உங்களின் ஒரு பாதியான மனைவி இறந்ததை எப்படித் தாங்கிக் கொண்டீர்கள்?” என்று கேட்டேன்.

“தாங்க முடியவில்லைதான். ரத்த அழுத்தம் எகிறிப் போனது. ஆனால், எத்தனை நாளைக்குத்தான் முடங்கியிருப்பது? எனவே, என்னை நானே சுதாரித்துக் கொண்டேன். அவள் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்தேன். ‘கொடுப்பதும் ஒரு கலை’ என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவள் அவள். எனவே, அவள் பெயரில் ட்ரஸ்ட் அமைத்து, என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வருகிறேன். தவிர, அவள் நினைவை மறக்க மேலும் மேலும் நிறையப் படங்களை வரைகிறேன். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், இது அவளுக்குப் பிடிக்குமே, இதை அவளுக்காகத்தானே செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு செய்வேன்” என்றார்.

மனசெல்லாம் ஈரமாகிப் போனது எனக்கு.

(மனோஹர் தேவதாஸ் - மஹிமா தம்பதி பற்றி இன்னும் விரிவாக அறிய விரும்புகிறவர்கள் எனது ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவுக்குச் செல்லுங்கள்.)

***
நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு; நாம் தருவதைக் கொண்டு நாம் அமைப்பது வாழ்வு!

13 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

//மனசெல்லாம் ஈரமாகிப் போனது எனக்கு//

படித்த எனக்கும். நெகிழ வைத்த பதிவு. நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் பதிவைக் கண்டதும் மகிழ்ச்சி.

ரேகா ராகவன்.

பின்னோக்கி said...

அருமையான ஓவியம் மற்றும் மனிதர்

வெங்கட் நாகராஜ் said...

ஒரு அற்புதமான கலைஞனை இல்லை, மனிதரைப் பற்றிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சார். நீண்ட நாட்களாக பதிவிடவில்லையே, அவ்வப்போது இது போன்ற பதிவுகளைத் தாருங்கள் சார்.

கோவை2தில்லி said...

ஒரு உதாரண புருஷரை அடையாளம் காட்டியுள்ளீர்கள். உணர்ச்சிப்பூர்வமான பதிவு. நன்றி.

மோகன் குமார் said...

Excellent article. Thanks for sharing.

அன்புடன் அருணா said...

/மனசெல்லாம் ஈரமாகிப் போனது எனக்கு./
எனக்கும்தான்.

கணேஷ் ராஜா said...

உங்கள் என் டயரி வலைப்பூவில் ஒவ்வொரு முறையும் நீங்கள் பதிவிடும்போதும், இறுதியில் என்ன பொன்மொழி பதிகிறீர்கள் என்று பார்த்து, உங்கள் பதிவுக்கும் அந்தப் பொன்மொழிக்கும் உள்ள தொடர்பை அறிந்து ரசிப்பேன். இந்த முறையும் சாதனையாளர் மனோஹர் தேவதாஸின் நெகிழ வைக்கும் கதையைப் படித்ததும், கீழே நீங்கள் கொடுத்திருந்த பொன்மொழியைப் படித்து ரசித்தேன். என்ன வேலையாக இருந்தாலும், எங்களை ஏமாற்றாமல் வாரம் ஒருமுறையாவது இது போன்ற நல்ல பதிவுகளை இடுமாறு உரிமையுடன் கோருகிறேன்.

கே. பி. ஜனா... said...

மகத்தான மனிதர்! வியப்பும் மரியாதையும் போட்டி போட்டுக்கொண்டு
மேலெழுகின்றன. பல நாட்களுக்குப் பின் உங்கள் பதிவைப் பார்த்து மகிழ்ச்சி!

BalHanuman said...

அருமையான பதிவு. ஒரு நல்ல மனிதரைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.

கவிதை காதலன் said...

எவ்வளவு அற்புதமான மனிதர்.. அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு இருந்தால் தெரிவியுங்களேன்.. ப்ளீஸ்

கவிதை காதலன் said...

அடிக்கடி பதிவிடுங்கள் சார்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்ன ஒரு அற்புதமான மனிதர் அவர்!
அங்கு படித்து விட்டுத் தான் இங்கு வந்தேன். இருந்தாலும்..இது தான் மனதை கனக்க் வைக்கிரது!

ரவிபிரகாஷ் said...

நன்றி திரு.ராகவன்!

நன்றி திரு.பின்னோக்கி!

நன்றி திரு.வெங்கட் நாகராஜ்!

நன்றி கோவை2தில்லி!

Heartful thanks Mr.Mohankumar!

அன்புடன் அருணா! அன்புடன் நன்றி!

நன்றி திரு.கணேஷ் ராஜா! அவசியம் வாரம் ஒருமுறையாவது பதிவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். என் சோம்பல்தனமும் அசுவாரசியமும் சேர்ந்துகொண்டு ‘வேலைப் பளு’ என்று பொய் சொல்லத் தூண்டுகிறது! :)

நன்றி திரு.கே.பி.ஜனா!

நன்றி திரு.பால ஹனுமான்!

நன்றி திரு.கவிதைக்காதலன்! நான் அவரை வீட்டில் சென்று சந்தித்ததில்லை. ஞாநியின் ‘கேணி’ கூட்டத்தில்தான் சந்தித்தேன். ஆனால், மதுரையில் அவர் வீட்டைக் கண்டுபிடிப்பதோ, அவரைச் சந்திப்பதோ ஒன்றும் கடினமான காரியம் அல்ல என்றுதான் நினைக்கிறேன். எளிமையாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர் திரு.மனோகர் தேவதாஸ்!

நன்றி திரு.ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி!